
Post No. 11,830
Date uploaded in London – – 23 MARCH 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத …… மருள்வாயே- திருப்புகழ்
தமிழில் பொருள்படைத்த , நகைச் சுவை மிக்க சமயச் செற்பொழிவுகளை நமக்கு வழங்கிச் சென்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் . அவர் ஆற்றிய சொற்பொழிவில் கேட்ட ஒரு கதை இதோ:–
( எனது சொற்களில் வடிக்கிறேன் ; பிழை இருப்பின் எமதே )
இந்த பூமியில் எவ்வளவோ உயிரினங்கள் இருக்கின்றன. காக்கைக்கு மயிர் நரைத்து வெள்ளைக் காக்கை ஆனதுண்டா? பன்றிக்கு மயிர் நரைத்து வெள்ளைப் பன்றி ஆகிறதா? ஆனால் மனிதனுக்கு மட்டும் நரை வருகிறதே ஏன் ?

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது .
என்னுடைய ஊர் காங்கேய நல்லூர்; அங்கிருந்து ஒரு வயதானவர் என்னைப் பார்க்க வந்தார். ஏன் மறுமணம் செய்யவில்லை என்றேன்? பையன்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்
அவருக்கு நரை வந்தும் ஆசை விடவில்லை (மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது ).
யாருக்கு ஆசை விட்டது? நரையை மறைக்க கருப்பு டை Dye (சாயம் வேறு).
மிருகங்கள் உண்ணவும் உறங்கவும் வாழ்கின்றன
மனிதர்கள் எண்ணவும் (பிறருக்காக) இரங்கவும் வாழ்கின்றனர் .
ஏன் இறைவன் மனிதனுக்கு நரையைக் கொடுத்தான் ?
அதுதான் இறைவன் அனுப்பும் First Notice முதல் நோட்டீஸ் . உனது காலம் விரைவில் முடியப் போகிறது. இப்போதாவது இறைவனை நினை; நாலு பேருக்கு உதவி செய் .
கொஞ்சம் நாளுக்குப் பின்னர் கண்ணாடி தேவைப்படுகிறது .
அது கடவுள் அனுப்பும் Second Notice இரண்டாவது நோட்டீஸ்.
பின்னர் பற்கள் ஆட்டம் காணும். அது Third Notice from God மூன்றாவது நோட்டீஸ் .
அதற்கு அடுத்துவரும் நோட்டீஸ் Last Notice from God – மரணம் .
நரை வந்த பின்னரும் இறை – வனை நினையாவிட்டால் அது நமது பிழை.
வயதான மனிதனுக்குத் தள்ளாதவன் என்று ஏன் தெரியுமா பெயர் ?
அவன் எதையும் வேண்டாம் என்று தள்ளாதவன்!!
ஆசையை ஒதுக்கித் தள்ளாதவன்!!!
(தள்ளாத வயதில் பொல்லாத ஆசைகள்)
புதுமணத் தம்பதிகள் ரயில் பெட்டியில் உட்கார்ந்து இருக்கினறனர்; இவனோ தள்ளாதவன். அந்தப் பெண்ணை வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!

Xxxxx
கிழவி கதை
ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள் ; பொல்லாத கிழவி. எதையும் எடுத்துக்கொண்டு விடுவாள்; எதையும் யாருக்கும் கொடுத்ததில்லை ; தானம் கொடுத்ததில்லை ; அவளும் இறந்தாள் ; நரகத்துக்குச் சென்றாள் ; கடும் துயரம் . அந்தப் பக்கம் வந்த தேவ தூதரிடம் அப்பா , கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை இங்கிருந்து வெளியே எடு– என்றாள்
அவன் கேட்டான் – நீ எப்போதாவது தானம் தருமம் செய்து இருக்கிறாயா ? யாருக்காவது காசு போட்டு தருமம் செய்து இருக்கிறாயா?
பரிசாகத் தருவது தானம் ; இல்லாதவருக்குக் கொடுப்பது தருமம் ; தருமம் போட்டாயா ?
பாட்டி சொன்னாள் : ஒரு குருடன் தட்டில் காலணா காசு போட்டேன் ; ஆனால் அவன் பார்க்க முடியாததால் அவன் தட்டிலிருந்து நாலணா எடுத்துக் கொண்டேன் .
அடிப் பாவி !!
தேவதூதன்: வேறு என்ன நல்லது செய்தாய்?
என்னிடம் ஒரு அணா இருந்தது; அந்தக் காலத்தில் அதற்கு 12 தம்பிடிகள். 12 வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டேன். அப்போது ஒருவர் வந்து வயிறு பசிக்கிறது என்றார் . நான் எதையும் கொடுக்கவில்லை. கடைசி வாழைப்பழம் பாதி அழுகி இருந்ததால் அதைத் தூக்கி எறிந்தேன். அவர் பாதி வாழைப்பழத்தைச் சாப்பிட்டுச் சென்றார் – என்றாள்.
அடக்கிழவி ! வா உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றான் தேவதூதன்.
நரகத்தில் ஒளியே கிடையாது; கும் மிருட்டு; இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த 4 பாவிகள் , நைஸாக கிழவியின் காலை பிடித்துக்கொண்டார்கள் ; சொர்க்கத்துக்கு வந்த கிழவி பெரிய ஒளியை, வெளிச்சத்தைப்பார்த்து மகிழ்ந்தாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. ஒருவர் பின் ஒருவராக நாலு பேர் அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு மேலே வருவது.
டேய் ! யாரடாவன்? எனது அரை வாழைப்பழத்துக்கு நான் சொர்க்கம் செல்கிறேன். நீங்கள் எப்படியடா வர முடியும்? என்றாள்
அவள் மீண்டும் நரகத்துக்குள் விழுந்தாள் யாரோ ஒருவனுக்கு கொடுத்த அரை வாழைப்பழத்தை எனது என்று சொல்லி சொந்தம் கொண்டாடினாள் .
இதனால்தான் அருணகிரி நாதர் யான் , எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை கேட்டு திருப்புகழ் பாடினார்.
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக …… வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத …… மருள்வாயே
என்கிறார் அருணகிரிநாதர்
((எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் … நமனையும்
தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை
எளிது சால மேலாக உரையாடும் … மிகவும் எளிதான வகையில்
மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற
எனது யானும் வேறாகி … எனது என்ற மமகாரமும், நான் என்ற
அகங்காரமும் நீங்கி,
எவரும் யாதும் யான் ஆகும் … பிற பொருள்கள் யாவும் நானே
ஆகக்கூடிய
இதய பாவன அதீதம் அருள்வாயே … மனோ பாவத்திற்கு எட்டாத
பெரு நிலையைத் தந்து அருள்வாயாக.(தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்;kaumaram.com)
யான், எனது என்ற எண்ணம் அகல வேண்டும்; எல்லோருக்கும் உதவ வேண்டும்.
Xxxx

கவிழ்த்த பானையும் ; விரியாத பாய் மரமும்
மழையே பெய்யாத ராயல சீமையில் ஒரு நாள் மழை கொட்டித்தீர்த்தது . எல்லோரும் வீட்டிலுள்ள அண்டா , குண்டா, பானை, சட்டி எல்லாவற்றையும், ஓட்டிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் வைத்து நிரப்பிக்கொண்டு இருந்தனர் ; ஒரு கிழவி இருந்தாள் ; உடலை நகர்த்த முடியாத அளவு பலவீனம்;பேத்தியை அழைத்தாள் :
அடியே வீட்டிலுள்ள பானைகளை அந்த ஓட்டுத் தண்ணீர் விழும் இடத்தில் வையடி ; தண்ணீர் எல்லாம் வீணாக்கப் போகிறதே என்றாள் .
அந்தச் சிறுமி ‘கேரம் போர்டு’ carrom board விளையாடிக்கொண்டிருந்தாள் ; வேண்டா வெறுப்பாக நாலு பானைகளை நாலு இடங்களில் வைத்தாள்
மழையும் நின்றது ; பாட்டி ஆர்வத்தோடு மெல்ல நகர்ந்து வந்து பார்த்தாள் ; பானையில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் இல்லை. ஏன் ?
அந்த அறியாத சிறுமி பானைகளைத் தலைகீழாக கவிழ்த்து வைத்திருந்தாள்
நாமும் அது போலத்தான் இருக்கிறோம். இறைவன் அருள் மழை பொ ழிகிறான் ; நாம் கவிழ்த்த பானைகளாக இருக்கிறோம் ; திறந்த மனது இருக்க வேண்டும் ; மனது அகன்று விசாலமாக இருக்க வேண்டும் .
xxx
நாகப்பட்டினத்தில் 12 பாய் மரக்கப்பல்கள் இருந்தன.
துறை முகத்தில் கடலில் அந்த மரக்கப்பல்கள் நின்றன ;
நல்ல காற்று அடித்தது ; நாலு கப்பல்கள் அழகாகச் சென்றன .
நகராத 8 கப்பல்கள் காற்று ஒழிக ; காற்று ஒழிக ;என்று கோஷம் போட்டன .
அது காற்றின் பிழை அன்று; நான்கு கப்பல்களின் பாய் மரம் விரிந்து இருந்தன ; அவை காற்றின் சக்தியால் அழகாக மிதந்து சென்றன; மீதி எட்டுக் கப்பல்களின் பாய் மரம் ஒடுங்கி இருந்தன .
நாமும் அப்படித்தான் இருக்கிறோம்; இறைவனின் அருள் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது ; அதை ஏந்துவதற்கு நமக்கு விரிந்த மனம், திறந்த மனம் வேண்டும்
(கடவுள் ஒழிக என்று கோஷமிட்டுப் பலன் இல்லை).
நாம் எல்லோரும் இறைவனின் அருள் மழையையும் , அருள் காற்றையும் பெற வேண்டும் .
எல்லாம் எல்லோருக்கும் சொந்தம் . அருணகிரிநாதர் வேண்டியது போல யான், எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை பெறவேண்டும்
(வாரியார் சொற்பொழிவில் கேட்டதில் நினைவில் நின்றதை எழுதியுள்ளேன் ).
அனைவரும் யூ டியூபிலும் , ஒலித் தட்டு , ஒலி நாடாக்களில் கேட்டு மகிழ்க.
–subham—
Tags- கிருபானந்த வாரியார் , யான், எனது, கிழவி கதை, கவிழ்ந்த பானை , பாய்மரக் கப்பல் , தள்ளாதவன், நரை , ஏன்



































