தீபாவளித் திருநாள்: இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே! – 2 (Post.12,703)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,703

Date uploaded in London –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxxx 

மாலைமலர் தீபாவளித் திருநாள் சிறப்புக் கட்டுரை. 10-11-23 அன்று வெளியான கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!

(இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

வாரணாசியிலோ (காசி) கங்கா ஆரத்தி என்ற பெயரில் கங்கை நீரில் தீப வழிபாடு நடக்கிறது. ஆயிரக்கணக்கில் தீபங்கள் கங்கா நதியில் ஜொலிக்க தூய்மையான கங்கை நீர் அனைவருக்கும் வளத்தையும் நலத்தையும் தூய்மையையும் அளிக்கிறது.

சிந்தி சமூகத்தினரோ சோடீ தீபாவளி என்ற பெயரில் தீபாவளிக்கு முதல் நாளே அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்கின்றனர்.

ஒரிஸாவில் கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் சிவ-பார்வதி வழிபாடு நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் ‘மோக்ரா மாதா சேவா’ என்ற பெயரில் மல்லிகை மலர்மாலைகள் தேவிக்குச் சூட்டப்படுகின்றன.

கோவாவில் நரகாசுர ராத்ரி என்ற பெயரில் நரகாசுரனின் பெரிய அளவு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு மறம் அழிந்து அறம் ஓங்க மகிழ்ச்சி பொங்குவதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்குத் திலகமிட்டு ஆரத்தி எடுத்து தங்கள் நலத்தையும் பாதுகாப்பையும் கோரும் விழாவாக இது அமைகிறது.

வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு காளி வழிபாடு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

பல நாடுகளிலும் தீபாவளி

இந்திய நாகரிகத்தின் உச்ச கட்ட பண்டிகையாக அமையும் இது, பல நாடுகளிலும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுவது, தீபாவளியின் இன்னொரு சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது.

நேபாளத்தில் திஹார் என்ற பெயரில் இது கொண்டாடப்படுவதோடு, பசுக்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கு மற்றும் பறவைகளை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் நேபாள மக்கள்.

இந்தியாவில் இது தேசிய விடுமுறை தினம் என்பது போல டிரினிடா & டுபாகோ, மயன்மார், மரிஷியஸ், கயானா, சுரிநாம், நேபாளம், மலாசியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா, பிஜி உள்ளிட்ட 12 நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அமைகிறது. மக்கள் உற்சாகமாக தீபாவளியை இங்கு கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானிலோ இது விருப்பத் தேர்வு விடுமுறை தினம்!

இங்கிலாந்து பிரதமர் இங்கிலாந்திலும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவிலும் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியதும் மேற்கத்திய லீசெஸ்டர் நகரம் வண்ண விளக்குமயமாக தீபாவளி அலங்காரம் செய்யப்படுவதும் உலகளாவிய பண்டிகை இது என்பதற்கான சான்றுகளாகும்.

சிவகாசியின் சிறப்பு

தீபாவளி அன்று வெடி வெடித்து மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெடியைத் தயாரிக்க  ஏற்படும் அதிகத் தயாரிப்புச் செலவினால் செல்வந்தர்கள், பிரபுக்கள், அரசர்கள் ஆகியோரால் மட்டுமே வெடி வெடிக்க முடிந்தது. ஆனால் இதை அனைவரும் கொண்டாட வழி வகை செய்ய முன்வந்தது தமிழகத்தில் உள்ள சிவகாசி.  விதவிதமான பட்டாஸ் வகைகள் மிக மலிவான விலையில் அளிக்கப்படவே உலகெங்குமுள்ள மக்கள் சிவகாசி வெடிகளை வாங்கி வெடித்து வருகின்றனர். இன்று நமது நாட்டில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான அளவில் அனைவரது எதிர்பார்ப்பையும் தேவையையும் பூர்த்தி செய்கிறது சிவகாசி என்பதால் தமிழகம் தீபாவளி வணிகத்தில் தனி இடத்தைப் பெறுகிறது.

இசைக் கலைஞர்கள் புது வித மெட்டுகளில் இசைப் பாடல்களை வெளியிட தீபாவளி ரிலீஸ் என்று மிகுந்த எதிர்பார்ப்பைத் தரும் சிறந்த கலைஞர்களின் திரைப்படங்கள் தியேட்டர்களை அலங்கரிக்க ரசிகர்கள் அங்கு முற்றுகை இடும் நாளாகவும் இது அமைகிறது. ஓவியர்கள் தீபாவளியை மையப்படுத்தி ஏராளமான ஓவியங்களை வெளியிடும் நாளும் இதுவே தான்.

பத்திரிகைகளோ தீபாவளி மலர்களை வெளியிட்டு வாசகர்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன!

பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான உற்சாகப் பண்டிகை இது. ரங்கோலி கோலங்கள் வண்ண மயமாக வீடுதோறும் திகழ, புதிய பட்டாடைகள், விதவிதமான டிஸைன் துணிகள் என குழந்தைகளை அலங்கரிக்க இனிப்பு வகைகள் ஏராளமாக விதவிதமாகக் கிடைக்க இதுபோல் ஒரு பண்டிகை இன்னொன்று இல்லை என்ற பெயரைப் பெற்று முதலிடத்தை வகிக்கிறது தீபாவளி.

பாரதியாரின் தேசபக்தியூட்டும் தீபாவளிக் கட்டுரை

பாரதியார் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகையில், 1906-இல் அக்டோபர் 20-ஆம் தேதி இதழில் தலையங்கமாக தீபாவளி நன்னாள் பற்றி மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார் இப்படி;-

“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.
சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்

தற்காலத்திலே இந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.

நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.
பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை
கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.

நாமெல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து, நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.

ஆனால் சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையினது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்ய வேண்டும்.”

இதைத் தொடர்ந்து “தீபாவளி தினத்திலே கூட அந்நியத் துணிகளை வாங்கும் ஈஸ்வர துரோகிகளை” கண்டித்து தேசபக்தியை ஊட்டி ‘வந்தேமாதரம்’ என்று முடிக்கிறார் அவர் தனது தீபாவளி தலையங்கத்தை!

வாழ்த்துக்கள்

இந்த நன்னாளில் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம், மன திருப்தி, குடும்ப ஒற்றுமை, தைரியம், வீரம், மறத்தை ஒழித்து அறத்தை வெல்லச் செய்யும் வலிமை,உற்சாகம், சமுதாய மேன்மை ஆகியவற்றைப் பெறச் செய்யும் தீபாவளி நன்னாளில் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற மாலைமலருடன் இணைந்து அனைவரையும் வாழ்த்துகிறேன்.

தீபாவளி வாழ்த்துக்கள்!

***

Leave a comment

Leave a comment