WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.178
Date uploaded in London – — 26 APRIL 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 17-4-2024 இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.
சர் சி.வி.ராமன் தோல்வி மனப்பான்மையை உதறுங்கள்! – 1
ச.நாகராஜன்
நோபல் பரிசை வென்ற முதல் வெள்ளையர் அல்லாத இந்திய விஞ்ஞானி
தமிழ்நாட்டில் திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள திருவானைக்காவலில் ஒரு எளிய பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசைப் பெற்ற பெரும் விஞ்ஞானி யார்?, பாரத் ரத்னா பட்டதைப் பெற்றவர் யார் என்று கேட்டால் அனைவரும் மன மகிழ்ச்சியோடுக் கூறும் பெயர் சர் சி. வி.ராமன். அனைத்து இளைஞர்களையும் அறிவியலில் ஈடுபடுத்தப் பாடுபட்டு அவர்களுக்கென இடைவிடாது உழைத்த விஞ்ஞானி இவர்.
பிறப்பும் இளமையும்
சந்திரசேகர் ராமநாதன் ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் பிறந்த எட்டு பேரில் இரண்டாவது மகனாக 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி அந்தணர் குலத்தில் தோன்றியவர் சி.வி,ராமன்.
தந்தையார் உள்ளூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர். சுமாரான வருமானம். பின்னால் சி. வி. ராமன் தனது தந்தையாரின் வருமானம் மாதம் பத்து ரூபாய் தான் என்று குறிப்பிட்டார்.
தந்தையாருக்கு ஆந்திர பிரதேசத்தில் நரசிம்மராவ் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் வேலை பார்க்க அழைப்பு வந்தது. அவருடன் சென்ற ராமன் விசாகப்பட்டினத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார். 13 வயதில் இண்டர்மீடியட்டில் தேறினார். பின்னர் பட்டம் பெற்றதும் அரசுப் பணியில் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.
அப்போதே அறிவியலில் மிக்க ஆர்வம் கொண்டு தனிப்பட்ட முறையில் பல சோதனைகளைச் செய்ய ஆரம்பித்தார்.
கல்காத்தாவில் 1917-ல்,; புதிதாக ஏற்படுத்தப்பட்ட பாலித் பீட இயற்பியல் பிரிவில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
1926-ல் இயற்பியல் ஆய்விதழ் ஒன்றை நிறுவி அதன் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.
கண்டுபிடிப்புகள்
இங்கிலாந்திற்கு முதல் தடவையாக மத்தியதரைக் கடலில் கப்பலில் அவர் சென்ற போது கடல் நீர் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது. சிதறிய ஒளியாலேயே நீல நிறமாக அது தோன்றுகிறது என்று அப்போது கூறப்பட்ட காரணம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை ஒள ஊருவிச் செல்லும் ஊடகம் திடப்பொருளாகவோ திரவப் பொருளாகவோ அல்லது வாயுப் பொருளாகவோ எதாக இருந்தாலும் சரி, அதில் ஒளி செல்லும் போது ஒளியின் மூலக்கூறு சிதறல் ஏற்படுகிறது என்பதைத் தன் ஆய்வுகளின் மூலமாக அவர் கண்டறிந்தார். இதை ஸ்பெக்டோகிராப் என்ற கருவியைப் பயன்படுத்தி அவர் கண்டார்.
இந்த ஸ்பெக்டோகிராப் வாழ்நாள் முழுவதும் தேவையான போதெல்லாம் அவர் கையில் வைத்துக் கொள்வது அவரது பழக்கமானது.
அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு ராமன் எஃபெக்ட் – ராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது.
1928-ம் ஆண்டு புதிய கதிர்வீச்சு என்னும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டார். இது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.
1930-ம் ஆண்டு உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசு வெள்ளையரல்லாத ஒரு இந்தியரான இவருக்கு அளிக்கப்பட்டது. இதை அறிவியலில் பெற்ற முதல் இந்தியர் இவரே. (ரவீந்திரநாத் தாகூர்1913-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார்.)
இசைக் கருவிகள் மீது தீரா ஆர்வம் கொண்ட ராமன், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசைக் கருவிகள் பற்றியும் அதில் எழுப்பும் அதிர்வலைகள் ஏற்படுத்தும் ஒலியின் நுட்பத்தையும் நுண்மையாக ஆராயலானார்.
இந்தக் கண்டுபிடிப்புகளும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
பார்க்கின்ற எதையும் அறிவியல் கண் கொண்டு பார்ப்பதே அவரது பழக்கமாக ஆனது.
அறிவியலில் அனைவரும் ஈடுபட வேண்டும், இந்தியா அறிவியல் நாடாகத் திகழ வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
முதன்முதலில் இந்தியன் ஸயின்ஸ் அகாடமியை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சையில் அவர் இறங்கவில்லை. காணாததை நம்ப முடியாத அக்னாஸ்டிக்காக – உலோகயதாவாதியாக அவர் கடைசிவரை திகழ்ந்தார். ஆனால் மற்றவர்கள் சடங்குகளில் ஈடுபடும்போது அதை அவர் தடுக்கவில்லை.
இவரது வாழ்க்கையில் நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஒவ்வொரு சம்பவமும் இவரது அரிய குணநலன்களை வெளிப்படுத்துபவையாக அமைந்தவையாகும்.
எடுத்துக்காட்டிற்குச் சில சம்பவங்கள் இதோ:
பத்து கிலோவாட் மூளை!
ஒரு முறை அவரது இந்தியன் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் வேலை பார்த்து வந்த விஞ்ஞானியான பிஷரொடி என்பவர் மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்தார். அவர் சோர்ந்திருப்பதைப் பார்த்த ராமன் காரணம் என்ன என்று கேட்டார்.
“இதே போன்று சோதனையை பிரிட்டனில் செய்து வரும் விஞ்ஞானி ஐந்து கிலோவாட் எக்ஸ்-ரே டியூபை வைத்திருக்கிறார். நானோ ஒரு கிலோவாட் எக்ஸ்-ரே டியூபை வைத்திருக்கிறேன்” என்று அவர் தனது சோர்விற்கான காரணத்தைக் கூறினார்.
“ஓ! இந்தப் பிரச்சினையை சுலபமாகச் சமாளித்து விடலாமே! இந்த சோதனைக்கு புத்து கிலோவாட் மூளையைப் பயன்படுத்து!” என்று சிரித்தவாறே பதில் கூறினார் ராமன்.
இப்படி பத்து கிலோவாட் மூளை உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.
ஹோமி ஜே.பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோரின் திறனைக் கண்டு அவர்களைப் பாராட்டினார் ராமன். இந்த இருவருமே பின்னால் இந்திய விண்வெளி விஞ்ஞானத்தில் பெரும் சாதனையைத் திகழக் காரணமாக அமைந்தனர்.
திறனுடைய இளம் விஞ்ஞானிகளை, ஆணானாலும் பெண்ணானாலும் இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தவர் அவர்.
வைரம் செய்வது எப்படி?
1967-ம் ஆண்டு உஸ்மேனியா பல்கலைக்கழக கோல்டன் ஜூபிளி கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக ராமன் அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
அந்தச் சமயம் அவர் அதனது லாபரட்டரியில் வைரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
வைரங்களைப் பற்றித் தனது சிறப்புரையில் அனைத்து விவரங்களையும் தந்து அனைவரையும் அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
உரை முடிந்த பின்னர் ஒரு மாணவர் எழுந்திருந்து, “ சார்! நீங்கள் வைரங்களைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் விளக்கி விட்டீர்கள். ஆனால் வைரங்களை எப்படிச் செய்வது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லையே” என்று கேட்டார்.
இடக்கான இந்தக் கேள்வி அங்கிருந்தோரை துணுக்குற வைத்தது.
ஆனால் விஞ்ஞானி ராமனோ ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை.
“அது ரொம்ப சுலபம். நீங்கள் ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். பூமிக்கடியில் ஆயிரம் அடி தோண்டி அதைப் புதைத்து விடுங்கள். ஆயிரம் ஆண்டு காத்திருங்கள். மீண்டும் தோண்டுங்கள். உங்களுக்கு வைரம் கிடைத்து விடும்” என்றார்/
அரங்கம் அனைவரின் கரவொலியால் அதிர்ந்து போனது! அவரது பதிலை அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர் – கேள்வி கேட்டவர் உடபட!
உடனடியாக பதில் கூறுவதில் வல்லவர் அவர்.
***