அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பாதுகாக்க வணிக நிறுவனம் தந்தவர்! – 1 (Post No.13,197)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.197

Date uploaded in London – — 2 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-4-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 1 

ச. நாகராஜன்

என்ன வீட்டை பத்திரமா பூட்டியாச்சா? 

வீட்டை விட்டு வெளியூர் செல்லும் போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உறுதி செய்தி கொள்வது “வீட்டை நல்லா பூட்டியாச்சா?”, கோத்ரெஜ் பூட்டு தானே? என்பது தான்! 

பாடுபட்டு உழைத்து நகைகளை வாங்கி திருமணம் நடத்தத் தயாராக இருக்கும் குடும்பத்தினர், “நகையெல்லாம் பத்திரமா ?”, கோத்ரெஜ் லாக்கரில் தானே வச்சிருக்கே?” என்று கேட்கும் போது, பெருமையுடன் பதில் இப்படி வரும்: “கவலையே பட வேண்டாம். கோத்ரெஜ் லாக்கர் தான், சுவரோடு பதிக்கப்பட்டது, யாரும் தூக்கிக் கொண்டு போக மூடியாது. டிஜிடல் லாக் கொண்டது” என்று பதில் வரும்.

 ஆம். நமது சொத்துக்களையும் பத்திரங்களையும் விலை உயர்ந்ததாக நாம் கருதுபவையையும் பத்திரமாகப் பாதுகாப்பது கோத்ரெஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

இதை நிறுவியவர் வணிக நிறுவனத்தில் உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயரிய கோட்ப்பாட்டைக் கொண்ட சிறந்த தேசபக்தி கொண்ட தேசபக்தரான அர்தேஷிர் கோத்ரெஜ் ஆவார்.

பிறப்பும் இளமையும்

 பாரம்பரியம் மிக்க பார்ஸி குடும்பத்தில் 1868-ம் ஆண்டு புரியோர்ஜிக்கும் தோஷிபாய் கூத்தராஜிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார் அர்தேஷிர் கோத்ரெஜ். அவரது தந்தையார் வீடு, நில உடைமைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

1871-ல் அவர் குடும்பப் பெயரை கோத்ரெஜ் என்று மாற்றிக் கொண்டார்.

 திருமணமும் பேரிழப்பும்

1890-ல் பதினெட்டே வயதான ஆர்தேஷிருக்கும் பச்சுபாய் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து ஒரு பெரிய சோக நிகழ்வு அவர் வாழ்வில் நடைபெற்றது.

 1891, ஏப்ரல் மாதம் 25-ம் நாள் பச்சுபாயும் அவரது நெருங்கிய உறவினரான பிரோஜ்பாய் ஷொராப்ஜி கம்டினும் ராஜாபாய் கோபுரத்தில் ஏறிப் பார்ப்பது என்று தீர்மானித்தனர். அந்த கோபுரம் 279 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம். அதில் இருவரும் ஏறி உச்சிக்குச் சென்ற போது இரண்டு பொல்லாத போக்கிரிகள் அழகிகளான அவர்களை அணுகி தவறாக நடக்க முயற்சித்தனர்.

உடனே இருவரும் அந்த கோபுரத்திலிருந்து கீழே குதித்தனர். மரணமடைந்தனர்.

இது பெரிய அதிர்ச்சியையும் இழப்பையும் அர்தேஷிர் கோத்ரெஜுக்குத் தந்தது.

தன் வாழ்நாள் முழுவதும் அவர் மறுமணம் செய்து கொள்ளவே இல்லை.

 வக்கீல் படிப்பு

1894-ல் வக்கீல் படிப்பை முடித்த அவருக்கு நல்ல கேஸ்கள் வந்தன. ஜான்ஜிபாரில் ஒருவருக்கு வக்காலத்து வாங்க ஒத்துக்கொண்ட கோத்ரெஜ் அந்த கேஸில் உண்மைக்கு அல்லாதவற்றைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார். இது அவருக்குப் பிடிக்கவில்லை. தனது மனசாட்சியின் படி நடந்து கொள்ளத் தீர்மானித்த அவர் கேஸிலிருந்து விலகினார். “கேஸில் எனது பக்கத்தை மட்டும் நான் பார்க்கவில்லை, இரண்டு பக்க உண்மைகளையும் பார்த்தேன், விலகினேன்” என்று பின்னால் அவர் கூறினார்.

 மருந்து தயாரிப்புகள்

அடுத்து என்ன செய்வது?

மெர்வான்ஜி முன்செஞ்சர்ஜி என்பவர் ஒரு சிறந்த வணிகர். அவரிடம் சென்ற கோத்ரெஜ்  தொழில் தொடங்க 3000ரூபாய் கடனாகக் கேட்டார். இதனால் வியந்து போன அவர் எதற்காக என்று கேட்டார். சர்ஜிகல் கருவிகள் செய்வதற்காக என்று பதில் வந்தது.

“இதை உங்கள் தந்தையாரே சந்தோஷமாகத் தருவாரே, என்னிடம் எதற்கு வர வேண்டும்” என்று வியப்புடன் அவர் கேட்டார்.

 “என் தந்தையாரிடம் நான் கேட்டால் அவர் அதை இனாமாகத் தந்து விடுவார். எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படியான கடன் தான் வேண்டும்” என்றார் கோத்ரெஜ்..

மனம் மகிழ்ந்த மெர்வான்ஜி 3000 ரூபாயைக் கொடுத்தார். மருத்துவக் கருவிகளைத் தயாரிக்க ஆரம்பித்தார் கோத்ரெஜ். தயாரிப்புகள் தரத்துடன் பிரமாதமாக அமைந்தன. அவர் தான் வேலை பார்த்த கம்பெனி உரிமையாளரிடம் அவற்றைக் காட்டவே அவர் பிரமித்தார். ஆனால் அவர், “இதை ‘மேட் இன் இண்டியா’ என்று போடக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.

இதை உடனே மறுத்த தேசபக்தரான கோத்ரெஜ் இந்தத் தொழிலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்.

 அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் அவர் ஆழ்ந்தார்.

போலீஸ் கமிஷனரின் அறிவிப்பு

 அப்போது பம்பாய் போலீஸ் கமிஷனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  ஏராளமான வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டுப் போகின்றன. நல்ல பாதுகாப்பை அளிக்க அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் அறிவிப்பு.

சிந்தனையில் ஆழ்ந்தார் கோத்ரெஜ்.

 நேராக மெர்வான்ஜியிடம் சென்றார். தனக்கு நல்ல பாதுகாப்பான பூட்டைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதாகக் கூறினார்.

‘இதற்கு முன்னர் யாருமே பூட்டு செய்யவில்லையா என்ன?’ என்று கேட்டார் மெர்வான்ஜி.

அதற்கு பதிலாக, “நான் சிறந்த நல்ல பூட்டைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

உடனே தேவையான பண உதவியைச் செய்தார் மெர்வான்ஜி.

215 சதுர அடியே கொண்ட ஒரு சிறிய ஷெட்டில் தன் தொழிற்சாலையை ஆரம்பித்தார் கோத்ரெஜ்.

\மிகுந்த உழைப்பின் பேரில் தினசரி ஆராய்ச்சி செய்து யாரும் திறக்க முடியாத நான்கு லீவர் கொண்ட பூட்டு ஒன்றை அவர் தயாரித்தார்.

சந்தையில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. உடனே அடுத்தபடியாக இரண்டு சாவிகள் கொண்ட ஒரு பூட்டைத் தயாரித்த அவர் இரண்டாவது சாவி தேவையான மாற்றங்களை பூட்டின் உள்ளே செய்யக் கூடிய வகையில் புதுமையாக வடிவமைப்பைச் செய்தார்.

 இதைத் தொடர்ந்து யாருமே எளிதில் திறக்க முடியாத பாதுகாப்பைக் கொண்ட பல வடிவமைப்புகளைக் கொண்ட பூட்டுகளை அவர் தயாரிக்க ஆரம்பித்தார்,

ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு சிறப்பான பெயர் சூட்டப்பட்டது. ஒன்றின் பெயர் கார்டியன் லாக். இன்னொன்றின் பெயர் டிடெக்டர் லாக்.

 நிறுவனம் படிப்படியாக உயர்ந்தது. பலர் வேலையில் அமர்த்தப்பட்டனர்

to be continued…………………………………..

Leave a comment

Leave a comment