Post No. 13.207
Date uploaded in London – — 5 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவபிரானின் ஊர், வஸ்திரம், வாகனம் அடங்கிய ஒரு பாட்டு!
ச.நாகராஜன்
ஒரு முறை சிவப்பிரகாச சுவாமிகள் தர்மபுர மடத்திற்குச் சென்றார்.
அங்கு இருந்த வெள்ளியம்பலத் தம்பிரான் சிவப்பிரகாச சுவாமிகளின் புலமைத் திறத்தை அறிய ஆவல் கொண்டார்.
ஆகவே அவரிடம் சிவபெருமானின் ஊர், அவர் அணியும் வஸ்திரம், வாகனம் ஆகிய இந்த மூன்றையும் ஒரு பாடலில் அமைத்துப் பாடல் பாட வேண்டும் என்று கூறினார்.
இதில் இன்னொரு நிபந்தனையையும் அவர் விதித்தார். பாடுவது வெண்பாவாக இருத்தல் வேண்டும் அதில் முதலிலும் இறுதியிலும் “டுகரம்’ வரும்படி வெண்பாவை அமைக்க வேண்டும்.
இதைக் கேட்ட சிவப்பிரகாச சுவாமிகள் உடனே ஒரு வெண்பாவை இயற்றினார்.
அதில் முதலிலும் இறுதியிலும் ‘டுகரம்’ வந்தது. சிவபெருமானின் ஊர், அவரது வஸ்திரம், அவரது வாகனம் ஆகிய மூன்றும் இறுதியில் வந்தது.
அப்படிப்பட்ட பாடலைப் பாடிய அவரை அனைவரும் போற்றினர்.
பாடல் இதோ:
குடக்கோ வானெயிறு கொண்டார்க்குக் கேழன்
முடக்கோடு முன்னமணி வார்க்கு – வடக்கோடு
தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதேன் மேற்கொள்ளல்
ஊருடையா னென்று முலகு
பாடலின் பொருள் :
குடக்கு ஓடுவாம் எயிறு கொண்டார்க்கு – மேலைத் திசையை நோக்கிப் போகின்றவனாகிய சூரியனது பற்களைத் தகர்த்தவருக்கு
கேழல் முடக்கோடு முன்னம் அணிவார்க்கு – பன்றியின் வளைவான கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு
வடக்கு ஓடு தேர் உடையான் தெவ்வுக்கு – வட திசையை நோக்கிப் போகின்ற தென்றலாகிய தேரை உடையவனாகிய மன்மதனது பகைவர்க்கு
தில்லை ஊர் – தில்லை நகரம் ஊராகும்
தோல் உடை – யானைத் தோல், புலித் தோல்கள் வஸ்திரமாகும்
மேற்கொள்ளல் ஆன் – ஊர்தல் இடபமாகும்
என்னும் உலகு – என்று உலகத்தார் சொல்வர்
சூரியனின் பற்களை சிவபிரான் தகர்த்தது தக்கன் யாகத்தின் போது – அதை இங்கு குறிப்பிடுகிறார் சுவாமிகள். அடுத்து கேழல் முழக்கோடு அணிந்தது திருமால் எடுத்த வராகம் அழித்த போது.
**
சிவப்பிரகாச சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திப் பாடிய பாடல் இது.
சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுடனேயரவப்
பாய்கொண்டா னும்பணியும் பட்டீச்சு ரத்தானே
நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே
பாடலின் பொருள் :
சேய் கொண்டு ஆரும் – செந்நிறத்தைக் கொண்டிருக்கின்றா
கமலம் – தாமரை மலரில் வீற்றிருக்கும்
செம்மலுடனே – பெரியோனாகிய பிரம்மனுடன்
அரவப்பாய் கொண்டானும் – சர்ப்ப சயனத்தைக் கொண்டவனாகிய திருமாலும்
பணியும் – வணங்குகின்ற
பட்டீச்சுரத்தானே – பட்டிச்சுரம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ளவனே
நோய் கொண்டாலும் கொளலாம் – நோய்வாய்ப்பட்டாலும் படலாம்
நூறு பிராயம் வரையிலும் பேய் பிடிக்கப் பெற்றாலும் பெறலாம் – நூறு வயது வரை பேய் பிடிக்கப் பெற்றாலும் பெறலாம்
ஆயின்
பெண் கொள்ளல் ஆகாது – ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளல் ஆகாது.
பேய் பிடித்தாலும் பிடிக்கட்டும் நோய் வந்தாலும் வரட்டும், ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாதே என்பது அவரது அறிவுரை.
**