மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர்- 2 (Post.13,275)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.275

Date uploaded in London – 26 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 2

ச. நாகராஜன் 

நினைவாற்றல்

 நினைவாற்றல் ஆய்வில் இறங்கிய ப்ரெண்டா, இருவகை நினைவாற்றல் நமக்கு இருப்பதைக் கண்டுபிடித்தார். ஒன்று நிகழ்வு நினைவாற்றல் இன்னொன்று செய்முறை நினைவு.

 தகவல்களை ஒழுங்கு படுத்துவதில் மூளையின் முன் மடல்களுக்கும் (Frontal lobes) நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை அவர் கண்டுபிடித்தார். இப்படி அவர் கண்டுபிடித்த தகவல்கள் மூளை கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட தீவிரமான வியாதிகளைத் தீர்க்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க உதவியது.

‘வாடா’ (WADA) என்ற ஒரு சோதனை மூலம் இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவில் முன்னிலைப் பங்கு வகிக்கிறது என்பதை அவர் நிரூபித்தார்.

சாதனையான சோதனை

ஒரு முறை ஹார்ட்ஃபோர்ட் என்ற இடத்திற்கு ஒரு நோயாளியைப் பார்க்க உடனே வருமாறு ப்ரெண்டாவிற்கு அழைப்பு வந்தது. அங்கு விரைந்த அவர் ஹென்றி மொலைஸன் (ஹெச் எம் என்று பின்னால் அனைவராலும் குறிப்பிடப்பட்டார் இவர்) என்பவரைக் கண்டார்.

அவருக்கு தான் அன்றாடம் செய்யும் செயல்களே நினவில் இல்லை. இதைப் பார்த்து அதிர்ந்து போன ப்ரெண்டா இரு சோதனைகளை அவரிடம் மேற்கொண்டார். 1955, ஏப்ரல் 26-ம் தேதி நடந்த சோதனை பற்றியும் 1957-ல் ஹெச். எம் மீது நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையும் 1957-ல் உலகிற்குத் தெரிய வந்தது. சுமார் 2500 ஆய்வுப் பேப்பர்களில் இந்த சோதனை மேற்கோளாகக் காட்டப்படும் அளவு இது வரலாற்று பிரசித்தி பெற்ற சோதனையாக ஆனது.

இதில் தான் ஹிப்போகாம்பஸ் என்ற மூளையின் பின் மேடு, இதுவரை நினைவாற்றல் பற்றிய எந்த விஷயத்திலும் அறிஞர்களால் பார்க்கப்படாமல் இருந்ததையும் அதன் முக்கியத்துவத்தையும் ப்ரெண்டா சுட்டிக் காட்டினார்.

ஒரு சுவையான விஷயம் ஹெச். எம். மீதான அவரது தொடர் சோதனை ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்தன.

குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் ஆகியவை பற்றிய பல புதிய உண்மைகள் உலகிற்குத் தெரிய வந்தன.

வலிப்பினால் அவதிப்பட்ட ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தனது பழைய காலம் பற்றிய அனைத்தையும் மறந்தார். ஆனால் அவரால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் மனித மூளையில் நினவாற்றலைக் கொள்ளும் பல்வேறு அடுக்குகள் உள்ளன என்பதை ப்ரெண்டா தன் ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்தார். மூளையின் பல்வேறு பகுதிகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்க இவரது ஆராய்ச்சிகள் பெரிதும் உதவின.

விருதுகள்

ஏராளமான விருதுகள் இவருக்கு வந்து குவிந்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவரை கௌரவித்தன.

2020-ல் மில்னெர் 25 கௌரவ பட்டங்களைப் பெற்றிருந்தார்.

நன்கொடை

அவருக்கு வந்த பரிசுத் தொகை ஏராளமாகக் குவிந்தது. ஆகவே பத்து லட்சம் டாலர்களை அவர் மாண்ட்ரீல் நியூராலஜிகல் இண்ஸ்டிடியூட்டுக்கு நன்கொடையாக அளித்தார்.

குடும்பம்

1941-ல் ப்ரெண்டாவிற்கான நிதி உதவி தீர்ந்து விடவே அவர் பிரிட்டனின் சப்ளை அமைச்சகத்தில் சேர வேண்டி நேர்ந்தது. அங்கு ராடாரை இயக்கும் ஆபரேட்டர்களில்  எந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அங்கு தான் அவர்  பீட்டர் மில்னெர் என்ற ஆய்வாளரைச் சந்தித்தார். ராடார் ஆய்வில் ஈடுபட்டிருந்த இருவரும் 1944-ல் மணம் புரிந்து கொண்டனர். கணவருடன் கனடா சென்று அங்கு குடியேறினார் ப்ரெண்டா.

ஆனால் 1970-ல் தனது கணவரை விவாகரத்து செய்தார் ப்ரெண்டா.

நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம்

2018-ம் ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை ப்ரெண்டா கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில், ‘தான் இன்னும் பல பிறந்த நாள்களைப் பார்க்க வழி கோலப் போவதாகச்’ சொன்னார்.

நூறாவது வயதிலும் அவர் தனது வேலையை விடவில்லை. ஆராய்ச்சிகளையும் விடவில்லை.

101 வயதிலும் கூட மாண்ட்ரீலில் உள்ள மக்-கில் பல்கலைக் கழகத்தில் ப்ரெண்டா பணியாற்றி வந்தார் என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது உண்மை!

இளைஞர்களுக்கு ப்ரெண்டாவின் அறிவுரைகள்

 பொருள் பொதிந்த வழிகாட்டுகின்ற அறிவுரைகளை ப்ரெண்டா அனைத்து இளைஞர்களுக்கும் தருகிறார். அவற்றில் மிக முக்கியமான ஒன்று இது:

தப்பான ஒரு பணிக்களத்தில் அல்லது வேலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் அதை உடனே மாற்றத் தயங்காதீர்கள். (நான் மட்டும் என் பணியை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால்) சாதாரண ஒரு பள்ளிக்கூடத்தில் நான் ஒரு கணித ஆசிரியையாகவே இருந்திருப்பேன்”

மிகத் துணிச்சலுடன் தனக்கு ஒவ்வாத ஒரு தொழிலில் தான் இருப்பதை உணர்ந்து கொண்ட ப்ரெண்டா உடனே நரம்பியலில் தன் பணியைத் தொடங்கி அதிலேயே ஆய்வு செய்து முன்னேறினார்.

ஆகவே நீங்கள் விரும்பும் ஈடுபாடுடன் கூடிய வேலையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள் என்பதே இவரது முக்கியமான அறிவுரை!

இப்போது இவருக்கு வயது 105.

மூப்பின் முதிர்ச்சியில் இருப்பதாகக் கூறும் இவர் தொடர்ந்து தன் ஆய்வுப் பணியைத் தொடர்கிறார்!

மூளை இயலில் புது வழி காட்டிய இவரை சாமான்யன் முதல் மேதை வரை (மூளை உள்ள அனைவரும்) மறக்க முடியுமா என்ன?

***

 6-6-2024 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழ் இன்று முதல் 25-5-2024 நியூஸ் ஸ்டாண்டுகளில் கிடைக்கிறது. 

இதில் சா.நாகராஜன் எழுதிய இமயமும் இராமாயணமும் கட்டுரை இணைப்புப் புத்தகமாக தரப்படுகிறது. 

இமயமும் இராமாயணமும் – இமயமலையில் இராமாயணம் சம்பந்தப்பட்ட கோயில்கள், குகைகள், இடங்கள், புராண வரலாறுகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

வசிஷ்ட குகை, அனுமார் பெயர்த்தெடுத்து வந்த சஞ்சீவனி மலை, ஊர்மிளாவின் விரதம். லக்ஷ்மணனின் தவம், ஶ்ரீ நகரில் இராமர் புஜை செய்த சிவஸ்தலம், இராவணன் பெயர்த்தெடுக்க முயன்ற கைலாயம் உள்ளிட்ட சுவையான விவரங்கள் இந்தக்  கட்டுரையில் உள்ளன.

படித்து மகிழுங்கள்! 

 —subham—

Leave a comment

Leave a comment