வடக்கில் அடங்கிய வையகம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 32 (Post No.13,407)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,407

Date uploaded in London – 4 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 32

ஒரு அதிசயத்தை நீங்களே காணலாம். தேசப்பட வரைபடத்தை எடுங்கள் ‘ அதை உற்று நோக்குங்கள். எல்லா கண்டங்களும் கீழே செல்லச் செல்ல குறுகிக் கொண்டே போகும். தலை கீழ் முக்கோண வடிவில் செல்லும். மேலே, அதாவது வடபகுதி முழுதும், நிலப்பரப்பும் தென் பகுதி முழுதும் கடலும் இருக்கும்! ஏன் ? எந்த என்சைக்ளோபீடியாவிலும் பதில் இராது .

காம்பஸ் என்னும் திசை அறியும் கருவியை எடுங்கள். அதன் முள் எப்போதும் வடதிசையையே காட்டிக்கொண்டு இருக்கும். ஏன் கிழக்கு திசையைக்  காட்டக்கூடாது ? அதுவல்லவோ சூரியன் உதிக்கும் முக்கிய திசை?

தொல்காப்பியம் புஸ்தகத்தை எடுங்கள் . தமிழ்நாட்டின் எல்லையைச் சொல்லவந்த பாயிரம் வட வேங்கடம் முதல் தென் குமரி ……………………………. என்கிறது. ஏன் தென் குமரி முதல் வட வேங்கடம் என்று சொல்லவில்லை.?

புறநானூற்றை எடுங்கள்.  வடக்கிலுள்ள இமயம் முதல் குமரி வரையே பாடுகின்றனர் . ஏன் தெற்கேயுள்ள குமரி முதல் இமயம் வரை என்று சொல்லவில்லை ? இந்தக் கேள்வியை எழுப்பி அதற்குப் பதிலையும் கொடுத்து இருக்கிறார்கள் பழைய உரைகாரர்கள்

வீட்டில் அம்மாவும் பாட்டியும் வடக்கே தலை வைத்துப்  படுக்காதே என்று குழந்தைகளைத் திட்டுவது ஏன்?

மாடுகள் மேயும் போது வட தென் திசையாக மட்டும் நின்று மேய்வது ஏன் ?

கடைசி கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது மாடுகளின் தலையில் காந்தம்  இருப்பதால் அதுவும் காம்பஸ் போல இயங்குகிறது  (இது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை விஞ்ஞானப் பத்திரிக்கையிலிருந்து எடுத்து இங்கு வெளியிட்டேன்)

எல்லா வற்றுக்கும் சுருக்கமான பதில் : வட திசையில்  உள்ள காந்த சக்தியே . அது சரி. கண்டங்கள் பிரிந்தது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர். அவை ஏன் வடக்குப் பக்கம் அதிகம் சென்று தெற்குப்பக்கத்தைக் கடலுக்கு ஒதுக்கியது ? யாருக்கும் விடை தெரியாது

இதெல்லாம் திருமூலருக்கு தெரிந்திருக்கிறது. அவர் அலுத்துக் கொள்கிறார் :

ஏனப்பா ! எப்போது பார்த்தாலும் வடக்கு வடக்கு ; அதுதான் புண்ணிய திசை என்று கதைக்கிறீர்கள் ? இறைவனை நாடுவோனுக்கு எல்லா திசையும் ஒன்றுதான். இறைவன் இல்லாத இடம் ஏது? என்ற தொனியில் பாடுகிறார்.

இதில் நான் கவனித்த முக்கிய விஷயம் வடக்கில் அடங்கிய வையகம்  என்ற வரிதான்.

வடக்கிலுள்ள புனித  இமய மலை , வடக்கிலுள்ள கேதார்நாத், கைலாஷ், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி  என்றெல்லாம் சொல்லாமல் வையகம் என்று சொல்கிறார். அதாவது நிலப்பரப்பு அங்கே அதிகம் என்பதை உணர்ந்து, கண்ணால் பார்த்து, வையகம்= பூமி என்ற சொல்லைப் போட்டுப் பாடி இருக்கிறார்.

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!

வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!

ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே

சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! — சம்பந்தர்   1

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு இது. சம்பந்தர் பாடிய இந்த தேவார பாடலில் வையகம் வருகிறது; அதாவது இந்த பூமியில் உள்ள எல்லோரும் சுகமாக வாழவேண்டும்.. வையகம் என்பது பெரு நிலப்பரப்பு மற்றும் அதில் வாழும் மக்களி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,க் குறிக்கும்

திருமூலர் எப்படி தேச வரைபடத்தை — உலக அட்லஸை WORLD ATLAS  பார்த்தார்? எப்படி அவருக்கு நிலப்பரப்பு வடக்கில் அதிகம் இருப்பது தெரிந்தது? 1200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கையில் உலக வரைபடம் ATLAS  இருந்ததா?

இருந்தது ; அதுவெள்ளைக்காரர்களுக்குத் தெரியாததால் அவன் கண்டுபிடித்தான், இவன் கண்டு பிடித்தான் என்று எழுதிவிட்டு 1600 ஆம் ஆண்டு படத்தை மட்டும் போடுகிறார்கள். திருமூலரோ நமக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் .!

எது எப்படியாகிலும் போகட்டும்.. வடக்கு நோக்கி நிலப்பரப்பு சென்ற  ஏன் என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை


வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானம் இல்லாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

தென்னாட்டிலுள்ள சிறப்புகள் பலவும் நிறைய மக்களுக்குத் தெரிவதில்லை .இத்தகையோரே சிவஞானமில்லாதவராவர். வடக்கின்கண் அடங்கிய உலகமெல்லாம் அகத்தின்கண் அடங்கும். அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என்னும் முறைமை பற்றி யாகும். அம் முறைமை திருவடியுணர்வுடையார்க்கே தெரியும். கயிலைக் காட்சியினைத் திருவையாற்றில் கண்டு திருநாவுக்கரையர் பாடியருளினர்  

சிவன்- உமை  திருமணத்தை அகத்தியர் தென்னாட்டிலேயே காண சிவன் அருள்புரிந்தார். அவருக்காக கேபிள் இல்லாத டெலிவிஷனை லைவ் LIVE TELECAST FOR AGASTYA THROUGH SATELLITE TVஆக சிவன் ஏற்பாடு செய்தார்!

 

2070 Acquire True Jnana

“North, North” they say;

Nothing there in the north is;

Northward they walk,

Of Jnana bereft;

All the world in the north,

Is in their heart contained,

For those that knowledge truly possess.

தமிழ் மன்னர்கள் வடக்கு நோக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததும் அதில் பிசிராந்தையார் முதலிய  புலவர்கள் கலந்துகொண்டு உயிர்த் தியாகம் செய்ததும் புற நானூற்றில் பாடப்பட்டுள்ளது . பாண்டவர்கள் வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக கீழே விழுந்து இறந்த செய்தியும் யுதிஷ்டிரன் மட்டும் ஒரு நாயை அழைத்துக்கொண்டு சொர்க்கத்துக்குச் சென்ற செய்தியும் மஹாபாரதத்தில் உள்ளது. அதை திருமூலரும் பாடியதை மேலே காணலாம்

xxxx

என்னுடைய பழைய கட்டுரைகள்

வடக்கே தலை வைக்காதே!

வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று இந்து மத சாத்திர நூல்கள் கூறுகின்றன. சதாசாரம் என்னும் நூல் நாம் அன்றாடம் பின்பற்றவேண்டிய பழக்க வழக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மற்ற திசைகளில் தலை வைத்துப் படுக்கலாம். இந்த சாத்திர விதிக்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உண்டா என்று கேட்டால் “உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவியை நாம் அறிவோம். அதன் ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும்

புல் மேயப் போகும் மாடுகளும் காட்டில் திரியும் மான்களும் ஒரே திசையை நோக்கி நின்றுகொண்டு புல் மேய்வதைக் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியப் பட்டார்கள். அவை ஏன் இப்படி நின்று புல் மேய்கின்றன என்பது நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. இப்போழுது கூகுள் விண்கல புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த மாட்டு மந்தையோ மான்கள் கூட்டமோ உயர் அழுத்த மின்சாரம் (High Voltage Pwer lines) செல்லும் கம்பிகளுக்குக் கீழாக வந்தால் இப்படி ஒரே திசையில் நிற்காமல் வெவ்வேறு திசையை நோக்கி நிற்பதும் கூகுள் படங்கள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலும் அவை வடக்கு தெற்கு அச்சுக்கு அணுசரனையாகவே நிற்கும். ஆனால் மின்சார கம்பிகளுக்கு 30 மீட்டருக்குக் கீழாக வந்தால் இது மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்?

மாடுகள், மான்கள் மற்றும் வௌவால் போன்ற பல பிராணிகளின் உடலிலும் பறவைகளின் மூக்கிலும் காந்தம் (magnetite) இருப்பது தெரிகிறது. இந்த காந்த துருவங்கள் மின்சாரக் கம்பிகள் வெளிவிடும் அலைகள் மூலமாக extremely low-frequency magnetic fields” (ELFMFs) திசை மாறும் என்பது தெரிந்ததே.

பூமி என்பது மிகப் பெரிய காந்தம். இப்போது நாம் மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். நம் உடம்பிலும் காந்தம் இருக்கிறது. நாம் தூங்கும் போது நம்முடைய தலையை வடக்கே வைத்தால் அது நம்மை பாதிக்கும். எப்படி என்றால் தலையை காந்தத்தின் வடதுருவம் என்று வைத்துக் கொண்டால் கால்கள் தென் துருவம் ஆகும்.

இயற்பியல் படித்தவர்களுக்குத் தெரியும் “ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று தள்ளிவிடும், மாற்று துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்/கவரும்”.. (Like poles repel each other, unlike poles attract) ஆக நம் உடல் என்னும் காந்தம் வடக்கைத் தவிர எந்தப் பக்கத்தில் தலை வைத்தாலும் பாதிக்காது.

கண்டங்கள் உருவானது எப்படி?

இந்த பூமியானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனித்தனி கண்டமாக இல்லாமல் ஒரே நிலப் (Pangaea) பகுதியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக (Continental Drift) விலகி இப்போதைய நிலக்கு வந்துள்ளன. இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் பார்த்தால் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ஆகிய கண்டங்கள் இப்போதைய நிலையில் இருக்காது. ஆனால் உலகப் படத்தைப் பார்த்தீர்களானால் ஒரு வியப்பான விஷயத்தைக் கவனிக்கலாம். ஒரே நிலப் பரப்பு விலகி விலகி சென்றபோது ஏன் வடக்கே மட்டும் அதிக நிலப்பரப்பு (land mass) போயின? தெற்கே ஏன் அதிகம் கடற்பரப்பு (oceans) வந்தன? ஏன் எல்லா கண்டங்களும் கீழே குறுகியும் மேலே பருத்தும் இருக்கின்றன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நிலப் பரப்பைப் பாருங்கள். வடக்கில் பெரிய நிலப் பரப்பும் தெற்கில் சுருங்கி தீபகற்பமாகவும் (peninsular) இருக்கும். ஏன் இப்படி வந்தது என்றால் இதுவரை யாரும் விடை சொல்ல முடியவில்லை.

பூமியில் வடக்கில் காந்த சக்தி அதிகம் இருந்ததால் கண்டங்களை இப்படி மேல் நோக்கி இழுத்தனவா? அல்லது தன்னிச்சையாக வடக்கில் நிலப் பரப்பு கூடியதாலங்கே காந்த சக்தி அதிகரித்ததா? இதற்கு விடை கிடைத்தாலும் விடை கிடைக்காவிட்டாலும் வடக்கில் நிலப் பரப்பு குவிந்திருப்பதை யாரும் காணலாம்.

ஆக பூமி என்னும் காந்த உருண்டைக்கு மதிப்பு கொடுத்து அதனுடன் மோதாமல் இருக்க வேண்டுமானால் வடக்கைத் தவிர வேறு திசையில் தலை வைத்தும் உறங்கலாம். கிழக்கு திசையிலோ தெற்கு திசையிலோ தலைவைத்துப் படுப்பது உத்தமம்.

புனித திசை வடக்கு

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,
    …. பிணையொடு வதியும்
    வடதிசை யதுவே வான்தோய் இமயம்-            (புற: 132)

இந்துக்களுக்கு வட திசை மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். கையிலாயமும் மேருவும் இருக்கும் புனித திசை அது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க விரும்புவோர் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் விடுவர். சங்க இலக்கிய நூல்கள் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் உண்ணாநோன்பு இருந்ததை வடக்கிருத்தல் என்றே அழைப்பர். மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் வட திசைப் பயணம் நோக்கிப் பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர்விட்டதையும் படித்திருப்பீர்கள். இதை மஹா பிரஸ்தானம் என்று அழைப்பர்.

நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க என்று வேதம் கூறுகிறது (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்). தீர்க்காயுஷ்மான் பவ:

தொல்காப்பியத்தில் வட திசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?–1 (Post.8760)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8760

Date uploaded in London – –1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியம் என்னும்  பழந்தமிழ் நூலுக்கு — முதல் தமிழ் நூலுக்கு– பாயிரம் எழுதியவர் பனம்பாரனார் .

“வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுல   கத்து

வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்

…………………………”

இந்தப் பாயிரம் நமக்கு அரிய பெரிய செய்திகளை வழங்குகிறது.

முதல் செய்தி —

தமிழனுக்கும் சிந்து-ஸரஸ்வதி  நதி தீர நாகரீகத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஏனெனில் தமிழ் பேசிய பகுதிகள் தென்  குமரி முதல் வடவேங்கடம் வரைதான். திருப்பதிக்கு அப்பால் வேறு மொழிகள் வழங்கின. இதைப் பனம்பாரனார் மட்டும் சொல்லவில்லை; தொல்காப்பியத்துக்குப் பின்னர் 2000 ஆண்டுகளாக வந்த அத்தனை உரைகாரர்களும் சொல்கின்றனர் . அதுமட்டுமல்ல. 30,000 வரிகளைக் கொண்ட சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலும் கங்கை, இமயம், அருந்ததி, சப்த ரிஷிக்கள் முதலிய குறிப்புகள் உள . ஆனால் சிந்து நதி , சமவெளி பற்றிய குறிப்பே இல்லை. சிலர் இந்தியாவின் வடமேற்கில் வசித்த யவனர் பற்ரிய குறிப்புள்ளதே எனலாம். யவனர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆயினும் இஃது ரோமானியர்களையே குறிக்கிறது என்பதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

இரண்டாவது செய்தி

வடதிசை புனிதமானது !

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலியோர் வட திசை நோக்கி அமர்ந்து, உண்ணா விரதம் இருந்து, உயிர் துறந்ததை புறநாநூறு செப்பும்.

பாண்டவர் ஐவரும்  வட திசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறந்ததை மஹாபாரதம்  செப்பும்.

வடதிசை கயிலை நோக்கி சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சென்றதை பெரிய புராணம் செப்பும்.

பனம்பாரனாரும் ‘வட’வேங்கடம் என்ற சொல்லை முதலில் வைத்ததற்கு அதன் புனிதத் தன்மையே காரணம் என்று உரைகாரர்கள் புகல்வது படித்து இன்புறத்த தக்கது. அதில் இந்தியாவை அரச இலையின் வடிவத்துக்கு ஒப்பிடுவதும் இமயம் முதல் குமரி வரை புனித நிலப்பரப்பு என்று நவில்வதையும் படிக்கையில் ஆனந்தம் பொங்கும். வெள்ளைக்காரன் வந்து இந்திய ஒருமைப்பாட்டினை நமக்குக் கற்பித்தான் என்று உளறும் அரை வேக்காடுகளின் தலையின் பாறை இடி கொடுக்கும்.

இதோ உரைகாரர்களின் விளக்கம். சிவஞான முனிவரின் ‘தொல்காப்பிய விருத்தி’ நூலுக்கு திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது —

1

தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும்  உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . அகத்தியனார்க்குத் தமிழைச் செவி அறிவுறுத்த செந்தமிழ் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது . தெற்கட்  குமரியாறாகலின் , அதுவே எல்லையாயிற்று . கிழக்கு, மேற்கு கடல் எல்லையாகலின் , வேறெல்லை கூறா ராயினர் .

“வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்

தென்திசை யுள்ளிட்  டெஞ்சிய மூன்றும்

வரைமருள் புணரியொடு பொருதுகிடந்த

நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்

யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே”

என்று சிறுகாக்கைப்பாடினியார் தெற்குங் கடலெல்லை கூறியது , குமரியாறு கடல்கொண்ட பிற்காலத்துச் செய்ததென அறிக

ஈண்டு வடக்கை முற் கூறியதற்கும் , வேங்கட முதலிய இடங்களைக் குறித்தமைக்கும் ஆசிரியர்களால் காரணங்கள் தனித்தனியே  கூறப் பெறுகின்றன–

சிவஞான முனிவர் —

வேங்கடம் வடக்கின் கண்ணுள்ளது என்பதும்  குமரி தெற்கின்  கண்ணுள்ளது என்பதும் உலகறிந்ததொன்று . அவற்றைத் திசையுடன் சேர்த்து வடவேங்கடம் தென் குமரி என்றதற்குக்  காரணம் திசை கூறி எல்லை கூறுதலே முறைமையாதலின் என்க.

நச்சினார்க்கினியர் —

மங்கல மரபிற் காரியஞ் செய்வார்  வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசை முற் கூறப்பட்டது என்பர் .

(இங்கே நமக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது; சுப காரியங்களை முடிவு செய்கையில் நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்ய வேண்டும்.)

அரசஞ்சண்முகனார் —

வடக்கு எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையையும் உணர்த்தற்குத் தானே காரணமாய்நிற்கும் மங்கலத் திசையாகலின்  தம்பாயிரமும் நூலும் நின்று நிலவுதல் வேண்டி முற்கூறப்பட்டது . மற்றும் என்றும் மாறாத துருவ நட்சத்திரத்தை அடையாளமாகக் கொண்டு அறியப்படுத்தலானும் இற்றைய விஞ்ஞான திசையறி கருவி எ ஞஞான்றும் வடக்கையே காட்டலானும் கூறினார்  எனவும் உரைப்பர் .

உலக வழக்கில் தென்வடல் , கீழ்மேல் எனவே எல்லை கூறும் வழி ஆடசியுண்மையானும் யாண்டும் வடக்குத்தெற்கு -மேல் கீழ் என்ற வழக்காறிண்மையானும்

“இரு திசை புணரின் ஏயிடைவருமே “

என்னும் சூத்திரத்தினும் ‘தெற்கே வடக்கு கிழக்கே மேற்கு’ என்ற வழக்குண்மையே எடுத்துக் காட்டப் பெறுதலானும் , இக்கூறிய இவைகளேயன்றிப் பிற காரணங்களும் உளவாதல் வேண்டும். . அவை – திசைகளுள்  வடக்கும் தெற்கும் பெருந்திசைகளாக, இமயம் முதல்  குமரி வரையுள்ள  நிலப்பரப்பைக் கொண்டு உணரப்பெற்று வந்தன .

‘திரிபு வேறு கிளப்பின் ‘ என்னுஞ் சூத்திரத்துக்குப் பெருந்திசைகளோடு கோணத்  திசைகள் புணரின்  என்று உரையெழுதப்பெறுவதும்  ‘பெருந்திசை’ என்ற வழக்குண்மையை வலியுறுக்கும் .

அரச இலை = இந்தியா !

இமயமுதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பு ஓரரசிலைபோல்வது .அதன் அடிப்பகுதி வடக்கு; அகன்று பரந்து கிடப்பது. அதன் நுனி போல நீண்டு ஒடி வளைந்த பகுதி தெற்கு. ஆதலால் அகன்று பரந்த வடபகுதியை முற்கூறி , நீண்டு பரந்த தென் பகுதியைப் பிற்  கூறினார் எனலுமாம். . காந்த மலையும் வடவைத் தீயும் இருத்தலிற் கூறினார் என்றலுமாம் .

புறநானுற்றில்  இமயம் !

இங்ஙனமே புறத்தினும்

‘வடா அது பனி படு நெடுவரை வடக்கும் – தெனாஅது  உருகெழு குமரியின் தெற்கும்’  எனவும், சிகண்டியார்

‘வேங்கடங்குமரி   தீம்புனற் பவ்வமன்று – இந்நான் கெல்லை  தமிழது வழக்கே ‘ எனவும் , காக்கைபாடினியார்

‘வடக்குந் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமரி கீழ் புனற் பவ்வமமென் – றன் நான்கெல்லை  யகவயிற் கிடந்த நூல் ‘ எனவும் வழங்குதலான் உணர்க.

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,
    …. பிணையொடு வதியும்
    வடதிசை யதுவே வான்தோய் இமயம்-            (புற: 132)

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் நச்சி. சொல்லும் ஒரு அரிய செய்தி எகிப்திய நாகரீகத்திலும் உள்ளதைக் காண்போம்.

–subham– 

tags– வட திசை, வடவேங்கடம், தென்குமரி, மாடுகள், வடக்கே, தலை வைக்காதே, புனித திசை , வையகம், ஆராய்ச்சிக் கட்டுரை 32, திருமந்திரம், திருமூலர் 

Leave a comment

Leave a comment