தொல்காப்பியத்தில் வட திசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?–1 (Post.8760)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8760

Date uploaded in London – –1 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியம் என்னும்  பழந்தமிழ் நூலுக்கு — முதல் தமிழ் நூலுக்கு– பாயிரம் எழுதியவர் பனம்பாரனார் .

“வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுல   கத்து

வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்

…………………………”

இந்தப் பாயிரம் நமக்கு அரிய பெரிய செய்திகளை வழங்குகிறது.

முதல் செய்தி —

தமிழனுக்கும் சிந்து-ஸரஸ்வதி  நதி தீர நாகரீகத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஏனெனில் தமிழ் பேசிய பகுதிகள் தென்  குமரி முதல் வடவேங்கடம் வரைதான். திருப்பதிக்கு அப்பால் வேறு மொழிகள் வழங்கின. இதைப் பனம்பாரனார் மட்டும் சொல்லவில்லை; தொல்காப்பியத்துக்குப் பின்னர் 2000 ஆண்டுகளாக வந்த அத்தனை உரைகாரர்களும் சொல்கின்றனர் . அதுமட்டுமல்ல. 30,000 வரிகளைக் கொண்ட சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலும் கங்கை, இமயம், அருந்ததி, சப்த ரிஷிக்கள் முதலிய குறிப்புகள் உள . ஆனால் சிந்து நதி , சமவெளி பற்றிய குறிப்பே இல்லை. சிலர் இந்தியாவின் வடமேற்கில் வசித்த யவனர் பற்ரிய குறிப்புள்ளதே எனலாம். யவனர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆயினும் இஃது ரோமானியர்களையே குறிக்கிறது என்பதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

இரண்டாவது செய்தி

வடதிசை புனிதமானது !

கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலியோர் வட திசை நோக்கி அமர்ந்து, உண்ணா விரதம் இருந்து, உயிர் துறந்ததை புறநாநூறு செப்பும்.

பாண்டவர் ஐவரும்  வட திசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறந்ததை மஹாபாரதம்  செப்பும்.

வடதிசை கயிலை நோக்கி சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சென்றதை பெரிய புராணம் செப்பும்.

பனம்பாரனாரும் ‘வட’வேங்கடம் என்ற சொல்லை முதலில் வைத்ததற்கு அதன் புனிதத் தன்மையே காரணம் என்று உரைகாரர்கள் புகல்வது படித்து இன்புறத்த தக்கது. அதில் இந்தியாவை அரச இலையின் வடிவத்துக்கு ஒப்பிடுவதும் இமயம் முதல் குமரி வரை புனித நிலப்பரப்பு என்று நவில்வதையும் படிக்கையில் ஆனந்தம் பொங்கும். வெள்ளைக்காரன் வந்து இந்திய ஒருமைப்பாட்டினை நமக்குக் கற்பித்தான் என்று உளறும் அரை வேக்காடுகளின் தலையின் பாறை இடி கொடுக்கும்.

இதோ உரைகாரர்களின் விளக்கம். சிவஞான முனிவரின் ‘தொல்காப்பிய விருத்தி’ நூலுக்கு திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது —

1

தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும்  உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . அகத்தியனார்க்குத் தமிழைச் செவி அறிவுறுத்த செந்தமிழ் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது . தெற்கட்  குமரியாறாகலின் , அதுவே எல்லையாயிற்று . கிழக்கு, மேற்கு கடல் எல்லையாகலின் , வேறெல்லை கூறா ராயினர் .

“வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்

தென்திசை யுள்ளிட்  டெஞ்சிய மூன்றும்

வரைமருள் புணரியொடு பொருதுகிடந்த

நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்

யாப்பின திலக்கணம் அறைகுவன் முறையே”

என்று சிறுகாக்கைப்பாடினியார் தெற்குங் கடலெல்லை கூறியது , குமரியாறு கடல்கொண்ட பிற்காலத்துச் செய்ததென அறிக

ஈண்டு வடக்கை முற் கூறியதற்கும் , வேங்கட முதலிய இடங்களைக் குறித்தமைக்கும் ஆசிரியர்களால் காரணங்கள் தனித்தனியே  கூறப் பெறுகின்றன–

சிவஞான முனிவர் —

வேங்கடம் வடக்கின் கண்ணுள்ளது என்பதும்  குமரி தெற்கின்  கண்ணுள்ளது என்பதும் உலகறிந்ததொன்று . அவற்றைத் திசையுடன் சேர்த்து வடவேங்கடம் தென் குமரி என்றதற்குக்  காரணம் திசை கூறி எல்லை கூறுதலே முறைமையாதலின் என்க.

நச்சினார்க்கினியர் —

மங்கல மரபிற் காரியஞ் செய்வார்  வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந்தித்தும் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசை முற் கூறப்பட்டது என்பர் .

(இங்கே நமக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது; சுப காரியங்களை முடிவு செய்கையில் நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்ய வேண்டும்.)

அரசஞ்சண்முகனார் —

வடக்கு எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையையும் உணர்த்தற்குத் தானே காரணமாய்நிற்கும் மங்கலத் திசையாகலின்  தம்பாயிரமும் நூலும் நின்று நிலவுதல் வேண்டி முற்கூறப்பட்டது . மற்றும் என்றும் மாறாத துருவ நட்சத்திரத்தை அடையாளமாகக் கொண்டு அறியப்படுத்தலானும் இற்றைய விஞ்ஞான திசையறி கருவி எ ஞஞான்றும் வடக்கையே காட்டலானும் கூறினார்  எனவும் உரைப்பர் .

உலக வழக்கில் தென்வடல் , கீழ்மேல் எனவே எல்லை கூறும் வழி ஆடசியுண்மையானும் யாண்டும் வடக்குத்தெற்கு -மேல் கீழ் என்ற வழக்காறிண்மையானும்

“இரு திசை புணரின் ஏயிடைவருமே “

என்னும் சூத்திரத்தினும் ‘தெற்கே வடக்கு கிழக்கே மேற்கு’ என்ற வழக்குண்மையே எடுத்துக் காட்டப் பெறுதலானும் , இக்கூறிய இவைகளேயன்றிப் பிற காரணங்களும் உளவாதல் வேண்டும். . அவை – திசைகளுள்  வடக்கும் தெற்கும் பெருந்திசைகளாக, இமயம் முதல்  குமரி வரையுள்ள  நிலப்பரப்பைக் கொண்டு உணரப்பெற்று வந்தன .

‘திரிபு வேறு கிளப்பின் ‘ என்னுஞ் சூத்திரத்துக்குப் பெருந்திசைகளோடு கோணத்  திசைகள் புணரின்  என்று உரையெழுதப்பெறுவதும்  ‘பெருந்திசை’ என்ற வழக்குண்மையை வலியுறுக்கும் .

அரச இலை = இந்தியா !

இமயமுதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பு ஓரரசிலைபோல்வது .அதன் அடிப்பகுதி வடக்கு; அகன்று பரந்து கிடப்பது. அதன் நுனி போல நீண்டு ஒடி வளைந்த பகுதி தெற்கு. ஆதலால் அகன்று பந்த வடபகுதியை முற்கூறி , நீண்டு பரந்த தென் பகுதியைப் பிற்  கூறினார் எனலுமாம். . காந்த மலையும் வடவைத் தீயும் இருத்தலிற் கூறினார் என்றலுமாம் .

புறநானுற்றில்  இமயம் !

இங்ஙனமே புறத்தினும்

‘வடா அது பனி படு நெடுவரை வடக்கும் – தெனாஅது  உருகெழு குமரியின் தெற்கும்’  எனவும், சிகண்டியார்

‘வேங்கடங்குமரி   தீம்புனற் பவ்வமன்று – இந்நான் கெல்லை  தமிழது வழக்கே ‘ எனவும் , காக்கைபாடினியார்

‘வடக்குந் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடங் குமரி கீழ் புனற் பவ்வமமென் – றன் நான்கெல்லை  யகவயிற் கிடந்த நூல் ‘ எனவும் வழங்குதலான் உணர்க.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் நச்சி. சொல்லும் ஒரு அரிய செய்தி எகிப்திய நாகரீகத்திலும் உள்ளதைக் காண்போம்.

To be continued…………………………………

tags– வட திசை, வடவேங்கடந் தென்குமரி,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: