ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 10-11-2024 (Post No.13,873)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,873

Date uploaded in London – 10 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx    

உலக இந்து செய்தி மடல் நவம்பர் 10 2024

 COLLECTED  FROM TAMIL NEWSPAPERS AND EDITED

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 10-11-2024

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

வணக்கம் இன்றைய நாள் நவம்பர் 10, 2024 ஞாயிற்றுக்கிழமை

****

திருச்செந்தூரில்  சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கான  பக்தர்கள் தரிசனம்

நவம்பர் ஏழாம் தேதி தமிழ் நாட்டிலுள்ள எல்லா முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி வெகு விமரிச கையாகக் கொண்டாடப்பட்டது இதே போல மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீ லங்கா, மொரீஷியஸ் , சீஷெல்ஸ் தீவுகள் ஆகிய நாடுகளிலும் கந்த சஷ்டி விழா நடந்தது .

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள எல்லா கோவில்களிலும் முருகப் பெருமானை வணங்க பக்தர்கள் கூட்டம் திரண்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழா ஆகும்

.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலையில்  நடந்தது . முன்னதாக அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது. சஷ்டி மண்டபத்தில், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மதியம் 2:30 மணிக்கு சிவன் கோவிலில் இருந்து, சூரபத்மன், படை, பரிவாரங்களோடு, கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். மாலை, 4:40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து, கடற்கரைக்கு வந்தான்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க, முதலில் கஜமுகசூரன், சுவாமியுடன் போர் புரிந்தான். தொடர்ந்து, பல்வேறு அவதாரங்கள் எடுத்து, போரிட்டு வீழ்ந்தான். முடிவில், சூரபத்மனாக முருகப்பெருமானிடம் போரிட்டான். ஆணவத்தை அழித்து, அவதார மகிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், செந்திலாண்டவர் வேலால் சூரபத்மனை வீழ்த்தினார். அவன், சேவலாகவும், மாமரமாகவும் மாறி, முருகனிடம் தஞ்சம் அடைந்தான். சூரனின் தலையை முருகன் கொய்ததும், விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, விரதத்தை நிறைவு செய்தனர்

.****

அடுத்ததாக ஒரு மடச் செய்தி

பெண் பக்தையை திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோயில் ஆதீனம்; பக்தர்கள் அதிர்ச்சி

கும்பகோணம் சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி மகாலிங்க சுவாமி பெண் பக்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

தமிழகத்தில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயில் நவக்கிரங்களில் ஒன்றான பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமிகள் இருக்கிறார்.  மகாலிங்க சுவாமி கர்நாடகாவில் ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார்

 ஹேமா ஸ்ரீ என்ற பெண் பக்தை அடிக்கடி மடாதிபதி மகாலிங்க சுவாமியை சந்தித்து ஆசி வாங்கியுள்ளார். இந்த பழக்கம் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

இதையடுத்து மகாலிங்க சுவாமி – ஹேமா ஸ்ரீ ஆகியோர் பெங்களூர் சென்று அங்கு வைத்து பதிவு திருமணம் செய்துள்ளனர். இவர்களின் பதிவு திருமணம் என்பது அக்டோபர் மாதம் 10ம் தேதி நடந்துள்ளது. 

திருமணம் செய்து கொண்டது தொடர்பாக மகாலிங்க சுவாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘திருமணம் ஆனவர்களும் ஆதீன மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ, மடத்துக்கு பக்தராக வந்து சென்றவர் ஆவார். இனியும் அவர் மடத்திற்குப் பக்தராக மட்டுமே வந்து செல்வார்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கர்நாடகா மாநிலத்தில் சைவ மடம் அமைக்க ஹேமா ஸ்ரீ  இடம் அளித்ததாகவும் அவரை அந்த மடத்தின் செயலாளராக நியமித்திருப்பதாகவும், பதிவு திருமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு சில ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீன கர்த்தர்களாக இருப்பதாகவும் சூரியனார் கோவில் ஆதீனம் தெரிவித்தார். சூரியனார் கோவில் ஆதினம் மடாதிபதியாக தான் நீடிப்பதாகவும். கர்நாடக மாநிலத்தில் சைவ மடத்தின் செயலாளராக தனது மனைவி இருப்பார் எனவும் தெரிவித்தார்.

****

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலையில் தினமும் 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் பத்தனம்திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சசபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள். மேலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.

இதற்காக பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார் சத்ரம் ஆகிய இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

நடப்பு மண்டல சீசனையொட்டி தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது, தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

சன்னிதானம்-பம்பை இடையேயான ரோப் கார் இணைப்பு திட்ட பணிகளை நடப்பு சீசனிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

****

அடுத்ததாக ‘அமெரிக்க தேர்தல் பற்றிய செய்தி

உஷா வான்ஸ் கிராமத்தில் கொண்டாட்டம்

அமெரிக்க துணை அதிபரின் மனைவி சொந்த ஊரான ஆந்திராவில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

‘அமெரிக்க அதிபர் தேர்தலில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றார்.

வெற்றி உறுதியான பின்னர் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றினார். அப்போது மேடையில் நின்றிருந்த ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி இனி நான் உங்களை துணை அதிபர் என்று அழைக்கலாம் என்று பெருமிதமாக கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் முன்னர் அறிவிக்கப்பட்டபோது அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா இந்தியர்களின் கவனத்தைப்  பெற்றார். உஷா வான்ஸ் தெலுஙகு பிராமண சாஸ்திரிகள் குடும்பத்தில் பிறந்தார் ; ஆனால் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில்தான்.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மனைவி உஷா சிலுக்குரி பிறந்த ஆந்திர மாநிலத்தின் வட்லூருவில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

****

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற இந்தியர்கள்

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா, கிழக்கு கடற்கரையில் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் ஆவார்.

இதே போல், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா,பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய 5 பேரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்..

****

அடுத்ததாக கனடா பற்றிய செய்தி

கனடா கோயில் மீது தாக்குதல்: ‘கோழைத்தனம்’ – மோடி கடும் கண்டனம்

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.

கையில் காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தூதர்களை அச்சுறுத்துவதற்கு கோழைத்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவின், ப்ராம்ப்டன் பகுதியில் அமைந்துள்ள சபா மந்திர் இந்து கோயிலுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது, காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்து கோயில் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துவதற்காக கோழைத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார் .

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவின் பங்களிப்பு இருந்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனால், கனடா மற்றும் இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், முதன்முறையாக பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

*****

அடுத்த மாதம் கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது .

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்டதாகும். அருணாசலேஸ்வரர் தேர் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது.


அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவில் டிசம்பர்  4-ந்தேதியன்று கொடியேற்றமும், 10-ந்தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 13-ந்தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

****

ஆந்திரா உள்துறை இலாகாவையும் எடுத்து கொள்வேன்:  பவன் கல்யாண் அதிரடியால் பரபரப்பு

ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் அனிதா சரியாக செயல்படாவிட்டால், அந்த பொறுப்பை நானே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். கூட்டணி கட்சியையே அவர் விமர்சித்து உள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக வகித்து வருகிறார். கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சியின் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார். தற்போது உள்துறை அமைச்சரையே விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சென்ற வாரம்  3 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தனது தொகுதியான பிதாபுரம் பகுதியில் நடந்த கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது: ஆந்திராவில் அமைதியும், பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது. உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் கையாள்வதுபோல், இங்கும் சட்டம் ஒழுங்கை கையாள வேண்டும்.

யோகி ஆதித்யநாத் போல் உள்துறை அமைச்சர் அனிதா செயல்பட வேண்டும். இல்லை என்றால் குற்றவாளிகள் மாற மாட்டார்கள். எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள். இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.

யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தில் 130 ரவுடிகளை போலீஸ் என்கவுண்டரில் தீர்த்துக்கட்டி அம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டியதை எல்லோரும் புகழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்; இதையே அமைச்சர் குறிப்பிட்டார் போலும்.

****

கடைசியாக, ஒரு வருந்தத்தக்க செய்தி

கடந்த சில ஆண்டுகளில் நமது ஞானமயம் நிகழ்ச்சியில் பக்திப் பாடல்களை பாடி நம்மை மகிழ்வித்த, லண்டன் மாநகர திருமதி  அன்னபூரணி பஞ்சநதம் அவர்கள்,  வாரத் துவக்கத்தில் இறைவடிவனடி  சேர்ந்தார். சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்த அவரது தகனக் கிரியையில் ஞானமயம் நேயர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது ஓம் சாந்தி.

****

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு நவம்பர் 17-ம்  தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும்.

வணக்கம்

subham

tags-ஞானமயம்,உலக இந்து செய்திமடல் 10-11-2024 ,

Leave a comment

Leave a comment