ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதர் (Post No.13,874)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.874

Date uploaded in London – –11 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதர்

10-11-24 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் ஆற்றிய உரை

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! ஶ்ரீ கல்யாண்ஜி அவர்களே! லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே, பெரியோர்களே

சந்தானம் நாகராஜன் அன்பு கனிந்த வணக்கம். நமஸ்காரம்.

தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான கால கட்டத்தில் அரசை வழிநடத்தி, கலை,இலக்கியம், இசை,, ஆன்மீகம் ஆகிய அனைத்தையும் உயரத்தில் கொண்டு சென்ற ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்களைப் பற்றி இன்று பார்க்கப் போகிறோம்.

வள்ளுவன் வாழ்ந்த தமிழ் நாட்டில் ஒரு நல்ல அமைச்சன் ஒரு அரசனுக்கு அமைந்தால் அரசு நல்ல முறையில் இயங்கும் என்பது நம்பிக்கை.

இந்த வகையில் பதினாறாவது நூற்றாண்டில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர் முதலான மூன்று மன்னர்களின் காலங்களில் சிறந்த அமைச்சராகவும், கீர்த்தி பெற்ற ராஜதந்திரியாகவும் சுமார் 70 ஆண்டுகள் கோவிந்த தீக்ஷிதர் சேவை செய்து வந்தார். இவரது காலத்தில் பல துறைகளிலும் தமிழகம் மேம்பாடு அடைந்து பெருமையுற்றிருந்தது. அவர் அரசியலில் ஈடுபட்டிருந்த காலம்  1575-1634 முடிய என்று தெரிய வருகிறது.

கோவிந்த தீக்ஷிதர் ஒரு பேரறிஞர், தத்துவ விற்பன்னர், இராஜ தந்திரி, இசைப் பேரறிஞர்.

கலை, கல்வி, நீதி நெறி அவர் காலத்தில் ஓங்கியது. விவசாயம் அமோகமாகப் பெருகியது.

அவர் கன்னடம் பேசும் கன்னட அந்தணர். ஹொய்சாள கன்னட அந்தண வகுப்பைச் சேர்ந்தவர்.

பட்டீஸ்வரத்தில் அரண்மனை போன்ற வீட்டில் அவர் வசித்தார். பாவநாசத்திற்கு அருகில் உள்ள திருப்பலாய்துறையிலும் அவர் வசித்ததாகச் சொல்லப்படுகிறது.

சாஸ்திர விதிப்படி அக்னிஹோத்ரம், யாகங்கள் இவற்றை செய்து கொண்டு இராஜ காரியங்களையும் நெறி பிறழாமல் அவர் நடத்தி வந்தார். போக வஸ்துக்களின் மத்தியில் வசித்து வந்தாலும் தன்னலமற்றவராக பொது ஜன சேவையையே தியாகத்துடன் செய்து வந்தார்,

சாஸ்திர விதிப்படி பாடசாலைகள், கோவில்கள், குளங்கள், படித்துறைகள், ஏரிகள்,,  கால்வாய்கள் ஆங்காங்கே சோழ தேசம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டன.

பட்டீஸ்வரத்தில் உள்ள கோவிலில் உள்ள லிங்கம் கோவிந்த தீக்ஷித லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள் கோவிந்தபுரம்அய்யம்பேட்டை என்று பெயரிடப்பட்டுள்ளன.

உன்னதபுரீஸ்வரர் ஆலயத்தை புனருத்தாரணம் செய்து அதை விரிவாக்கி ஒரு குளத்தை முன்னால் இவர் அமைத்தார். பல அக்ரஹாரங்களையும் உருவாக்கினார். இந்தக் கோவில் குளம் அய்யன் குளம் என்று அழைக்கப்படுகிறது.

மஹாமகக் குளத்தின் வடகரையில் உள்ள மண்டபத்தில் ஶ்ரீ தீக்ஷிதர் அவர்களை ஓர் தராசில் வைத்து அவருடைய எடைக்கு எடை தங்க துலாபாரத்தை அரசன் அளித்தான். இதை கல் சித்திரத்தின் மூலமாக இன்றும் காணலாம்.

தஞ்சாவூர், கும்பகோணம், திருவிடைமருதூர், மாயவரம், திருவண்ணாமலை முதலிய இடங்களில் இவருடைய பெயரும் விளங்கும்படி சின்னங்களும் ஏற்படுத்தப்பட்டன. அரசனுடைய கீர்த்தி விளங்கும்படி கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன.

இவரை ஜனங்கள் அன்புடன் அய்யன் என்றே அழைப்ப்ர். ஆகவே அய்யன் ஏரி, அய்யன் தெரு, அய்யன் கடை உள்ளிட்டவை இன்றும் விளங்குகின்றன.

இவர் கும்பேஸ்வரர் கோவில், பட்டீசுரம், திருவையாறு,, திருவண்ணாமலை உள்ளிட்ட கோவில்களில் திருப்பணி செய்துள்ளார்.

அரசருடைய சிலையுடன் இவரது சிலையும் இவர் மனைவி சிலையும் கற்றூண்களில் காணப்படுகின்ற்ன.

மந்த்ர பீடேஸ்வரி என்ற மங்களாம்பிகை அகத்தியரால் பூஜிக்கப்பட்ட தலம்.இங்குள்ள ஸ்வயம்புலிங்கம் கோவிந்த தீக்ஷிதரால் திருப்பணி செய்யப்பட்டது.

மங்களாம்பாள் சந்நிதியின் எதிரில் தம்பதிகளின் சிலைகள் உள்ளன.

பல சாஸ்திரங்க:ளில் அவர் நிபுணர். ஶ்ரீ ராஜ சூடாமணி தீக்ஷிதர் அவரை அத்வைத வித்யாசாரியார் என்று கூறிப் புகழ்கிறார்.

கும்பகோணம் ராமசாமி ஆலயத்தை  தீக்ஷிதர் கட்டினார்.கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்தை விரிவாக்கினார். 1542ல் ராஜ வேத காவியபாடசாலை என்ற பாடசாலையை அவர் கும்பகோணத்தில் நிறுவினார். அது இன்றும் ஒரு கல்வி நிலையமாகத் திகழ்கிறது

தீக்ஷிதர் பெரும் இசைப் பேரறிஞர். ராமாமாத்யா, சோமநாதா, கோவிந்த தீக்ஷிதர் ஆகிய மூவரும் சமீப காலத்திய இசைப் பேரறிஞர்கள்.

நாயக்க மன்னர்கள் இசையை வளர்க்க 500 அந்தணக் குடும்பங்களுக்கு ஒரு கிராமத்தையே தானமாக அளித்தனர். இன்னும் பல கிராமங்கள் தெலுங்கு குடும்பங்களுக்கு இசை வளர்க்க அளிக்கப்பட்டன. மூவாநல்லூர், தெப்பருமணலூர், சூலமங்கலம், ஊத்துக்காடு மற்றும் சாலிய மங்கலம் போன்ற கிராமங்களைக் குறிப்பிட்டு  சொல்லமாம்

தீக்ஷிதரின் இரு புதல்வர்களான யக்ஞ நாராயண தீக்ஷிதர் மற்றும் வேங்கட மகி தீக்ஷிதர் அவரைப் போலவே இசை மேதைகளாக விளங்கினர். அவரது மனைவியின் பெயர் நாகாம்பாள்.

வேங்கடமகி சதுர்தண்டப்ரகாசிகா என்ற நூலை இயற்றினார்.. இந்த நூலே மேளகர்த்தா அமைப்பை கர்நாடக சங்கீதத்தில் அமைக்க உதவுகிறது.

ஒருமுறை தீக்ஷிதர் தனது சீடர்களுடன் மத்யார்ஜுனம் நோக்கிப் பயணப்பட்டு கொண்டிருந்தார். அமலாந்தரின் கல்பதருவை போதிக்க ஆரம்பித்தார். அதில் சிக்கலான பல இடங்கள் உண்டு. தற்செயலாக அந்த வழியாக வந்த அப்பய்ய தீக்ஷிதர் அதை எளிமையாக அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

இதைப் பார்த்து நெகிழ்ந்து போன கோவிந்த தீக்ஷிதர், “மதிப்புக்குரிய அப்பய்ய தீக்ஷிதர் அவர்களே, உங்கள் பெருந்தன்மையை எங்ஙனம் போற்றுவேன்.கல்பதரு கூட அர்த்தமுள்ளதாக ஆக உங்களின் வார்த்தையைக் கேட்க வேண்டியது தான்” என்றார்.

“அர்த்த சித்தி” என்ற அவரது வார்த்தை பணத்தைப் பெறுதல் மற்றும் அர்த்தத்தைப் பெறுதல் ஆகிய அர்த்தங்ளை சிலேடையாகத் தந்தது.

இதனால் மகிழ்ந்த அப்பய்ய தீக்ஷிதர் தானே கல்பதருவிற்கு ஒரு வியாக்யானத்தை எழுதினார். இதன் பெயர் பரிமளம்.

 அரிவம்ச சாராசரித்ரம், சங்கீத சுதா நிதா ஆகியவை அவர் இயற்றிய நூல்களாகும்.

கோவிந்த தீக்ஷிதரின் இசை பற்றிய மேதா விலாசம் அவர் இயற்றிய சங்கீத சுதா என்ற நூலில் வெளிப்படுகிறது. 1614-ம் ஆண்டில் அவர் இதை எழுதினார். நூலில் 7 அத்தியாயங்கள் உள்ளன. ஸ்வரம்,. ராகம்.ப்ரகீர்ணா ப்ரபந்தம், தாளம் வாத்யம் நர்த்தனம் ஆகிய ஏழு அத்தியாயங்களில் நமக்கு இன்று கிடைத்திருப்பவை முதல் நான்கு அத்தியாயங்களே.

தமிழ் மீது தீவிரப் பற்று கொண்டவர் தீக்ஷிதர்.

இவர் வடமொழியில் இருந்த பஞ்சநதீசுவர புராணத்தைத் –

திருவையாறு புராணத்தை தமிழில் கி.பி.1605இல் மொழிபெயர்த்ததை எடுத்துக்காட்டாகக் கூறலாம். 

“மலிபுனல் சூழ் சோணாடு தஞ்சையிற் காத்திடுமரசர்

மதியமைச்ச னேனாலிமறைதேர் கோவிந்த தீக்ஷிதராயன்

திருவாக்குடைமையாலே கலியுகத்துச் சகராண்டு

மூவைஞ்ஞூற்றிருபதின் மேல் காணுமேழாய் பொலி

வருடத்தையாற்றுப் புராண வடமொழி தமிழாற் புகலலுற்றேம்” 

என்ற செய்யுளால் இது விளங்குகிறது.

தஞ்சாவூர் ஆந்திரராஜலு சரிதமு என்ற புத்தகத்தில் அவரது மேதாவிலாசம் புகழப்படுகிறது.

 கடைசி காலத்தில் அவர் அமைதியாகவும் சிற்ந்த  தியாகியாகவும்  கும்பகோணத்தில் ஶ்ரீ மங்களாம்பிகா சந்நிதியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து உடலைத் துறந்தார்.

ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதர் நாமம் வாழ்க!

நன்றி! வணக்கம்!!

***

Leave a comment

Leave a comment