வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5 (Post No.14,065)

Written by London Swaminathan

Post No. 14,065

Date uploaded in Sydney, Australia – 8 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 5

வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள்

****

தெய்வமணிமாலை பாடல் 27

27. பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ

பெய்சிறையில் இன்னும்ஒருகால்

பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்

பெறுந்துயர் மறந்துவிடுமோ

இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்

இறப்பிக்க எண்ணம்உறுமோ

எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்

இருந்தவடு எண்ணுறானோ

கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு

காசுக்கும் மதியேன்எலாம்

கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்

கலந்திடப் பெற்றுநின்றேன்

தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

இந்தப்பாடலில் மூன்று புராணக்கதைகளை அருட் பிரகாச வள்ளலார் எடுத்துரைக்கிறார்

1 .முருகப்பெருமானை சிறுவன் என்று மதியாது சென்ற பிரம்மாவை அவர் சிறையில் அடைத்தார்

2. .ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு பொருள் கூற முடியாததால் முருகப்பெருமான் அவர் தலையில் குட்டு வைத்தார்.

அப்படிப்பட்ட பிரம்மா இனிமேல் தன்னைப் பிறப்பிக்க வல்லவர் இல்லை; ஏனெனில் நான், முருக பக்தன் என்கிறார் வள்ளலார். பழைய கதைகளை மறந்து பிரம்மா தன்னைப் பிறப்பிக்க முயன்றால் மீண்டும் சிறைப்படுவான் என்பது வள்ளலார் வாதம் .

3.மூன்றாவது கதை மார்க்கண்டேயன் கதை ; பதினாறு வயதானபோது மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த யமனை சிவபெருமான் காலால் எட்டி உதைத்து கருமை நிற எமன் மீது தழும்பினை உண்டாக்கினார்; மார்க்கனேடேயனுக்கு வயது என்றும் பதினாறு என்று இயம்பினார் சிவன். அப்படி அடிபட்ட இயமன் தன்  உயிரைக் கவர வல்லவன் அன்று என்பது வள்ளலார் வாதம் .

இந்தப் பாடலில் இனிமேல் தனக்கு ஜனன மரண சுழல் இல்லை ; ஏனெனில் முருக பக்தன் என்கிறார் .

முதல் இரண்டு கதைகள் கந்த புராணத்தில்  உள.

****

கந்த புராணத்தில் பிரம்மா  கதை

பிரம்மன் குட்டுப்பட்ட கதை

கைலாயத்தில் சிவபெருமானைக் காணச் சென்ற பிரம்மதேவன் அங்கிருந்த முருகப்பெருமானை  சிறுவன் என்று எண்ணி கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தார். முருகன் அவரை நிறுத்தி நீவீர் யார்? என்று வினவ , பிரம்மா  தனது பெருமைகளைச்  சொன்னார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்திலிருந்து  படைப்பு  துவங்கியதால் , முருன் பிரணவத்தின் பொருளைக் கேட்டார் ; பிரமனுக்கு சரியாகப் பதில் சொல்லத்  தெரியவில்லை; உடனே மாணவர் தரையில் வாத்தியார் குட்டுவது போல பிரம்மன் தரையில் குட்டு வைத்து சிறையில் அடைத்தார் . பின்னர் பிரம்மன்,  சிவ பெருமானை வேண்டி விடுதலை பெற்றார்.

****

கந்த புராணத்தில் பிரமன்

அயன்= பிரமன்= பிரம்மா

16. அயனைச் சிறைபுரி படலம் (1205 – 1223)

1205 மேடமூர்தி யாகவுய்த்து விண்ணுமண்ணும் முருகவேள்
ஆடல்செய் துலாவிவௌ¢ளி யசலமீதில் அமர்தரும்
நீடுநாளில் ஒருபகற்கண் நெறிகொள்வேதன் முதலினோர்
நாடியீசன் அடிவணங்க அவ்வரைக்கண் நண்ணினார். 1

(ஒரு நாள் சிவ பெருமானைத் தரிசிக்க பிரம்மா வந்தார்)


1206 நவையில்சீர் முனிவர் தேவர் நயப்பநா ரதனென் றுள்ளோன்
எனாதியா னெனுஞ்செருக் கிகந்துதன் னுணர்ந்துளார்
மனாதிகொண்ட செய்கை தாங்கி மரபின்முத்தி வழிதரும்
அனாதியீசன் அடிவணங்கி அருளடைந்து மற்றவன்
தனாதுமன்றம் நீங்கிவாயில் சாருகின்ற வேலையில். 2


1207 ஒன்பதோடி லக்கமான அனிகவீரர் உள்மகிழ்ந்
தன்பினோடு சூழ்ந்துபோற்ற அமலன் அம்பொ னாலய
முன்புநீடு கோபுரத்துள் முழுமணித் தலத்தின்மேல்
இன்பொடாடி வைகினான் இராறுதோள் படைத்துளான். 3


1208 அங்கண்வைகும் முருகன்நம்பன் அடிவணங்கி வந்திடும்
புங்கவர்க்குள் ஆதியாய போதினானை நோக்குறா
இங்குநம்முன் வருதியா லெனாவிளிப்ப ஏகியே
பங்கயாச னத்தினோன் பணின்திடாது தொழுதலும். 4

(முருகப்பெருமானைக் கவனியாது அலட்சியம் செய்தான்)


1209 ஆதிதேவன் அருளுமைந்தன் அவனுளத்தை நோக்கியே
போதனே இருக்கெனாப் புகன்றிருத்தி வைகலும்
ஏதுநீ புரிந்திடும் இயற்கையென்ன நான்முகன்
நாதனாணை யால்அனைத்தும் நான்படைப்பன் என்றனன். 5


1210 வேறு
முருக வேளது கேட்டலும் முறுவல்செய் தருளித்
தரணி வானுயிர் முழுவதுந் தருதியே என்னில்
சுருதி யாவையும் போகுமோ மொழிகெனத் தொல்சீர்ப்
பிரமன் என்பவன் இத்திறம் பேசுதல் உற்றான். 6

(நீர் யார் உமது பணி என்ன?  என்று வினவினான் முருகன்)

1211 ஐய கேள்எனை யாதிகா லந்தனில் அளித்த
மையு லாவரு களத்தினன் அளப்பிலா மறைகள்
செய்ய ஆகமம் பற்பல புரிந்ததிற் சிலயான்
உய்யு மாறருள் செய்தனன் அவையுணர்ந் துடையேன். 7


1212 என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம்
ஒன்று நீவிளம் புதியென முருகவேள் உரைப்ப
நன்றெ னாமறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்ற தோர்தனி மொழியைமுன் ஓதினன் நெறியால். 8

(ஒம் என்ற எழுத்தால் படைப்புத் தொழிலைச் செய்பவன் நான் என்றான் அயன்= பிரமன்)


1213 தாம ரைத்தலை யிருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாம றைத்தலை யெடுத்தனன் பகர்தலும் வரம்பில்
காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றிமுன் கழறும்
ஓமெ னப்படும் மொழிப்பொருள் இயம்புகென் றுரைத்தான். 9

(அப்படியாஓம் என்ற எழுத்தின் பொருள் என்னஇயம்புக என்றான் முருகன்)


1214 முகத்தி லொன்றதா அவ்வெழுத் துடையதோர் முருகன்
நகைத்து முன்னெழுத் தினுக்குரை பொருளென நவில
மிகைத்த கண்களை விழித்தனன் வௌ¢கினன் விக்கித்
திகைத்தி ருந்தனன் கண்டிலன் அப்பொருட் டிறனே. 10


1215 ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான். 11


1216 தெருள தாகிய குடிலையைச் செப்புதல் அன்றிப்
பொருள றிந்திலன் என்செய்வான் கண்ணுதற் புனிதன்
அருளி னாலது முன்னரே பெற்றிலன் அதனால்
மருளு கின்றனன் யாரதன் பொருளினை வகுப்பார். 12

(பொருள் தெரியாமல் விழித்தனன் பிரம்மா)


1217 தூம றைக்கெலாம் ஆதியு மந்தமுஞ் சொல்லும்
ஓமெ னப்படும் ஓரெழுத் துண்மையை யுணரான்
மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால்
நாமி னிச்சில அறிந்தனம் என்பது நகையே. 13

(சொல்வது மட்டுமே தெரியும்பொருள் தெரியாதென்றனன்)


1218 எட்டொ ணாதவக் குடிலையிற் பயன்இனைத் தென்றே
கட்டு ரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய்
சிட்டி செய்வதித் தன்மைய தோவெனாச் செவ்வேள்
குட்டி னான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க. 14

(அயன் தலை குலுங்குமாறு ஓங்கிக் குட்டினான் முருகன்).


1219 மறைபு ரிந்திடுஞ் சிவனருண் மதலைமா மலர்மேல்
உறைபு ரிந்தவன் வீழ்தரப் பதத்தினா லுதைத்து
நிறைபு ரிந்திடு பரிசன ரைக்கொடே நிகளச்
சிறைபு ரிந்திடு வித்தனன் கந்தமாஞ் சிலம்பில். 15


1220 அல்லி மாமலர்ப பண்ணவன் றனையருஞ் சிறையில்
வல்லி பூட்டுவித் தியவையும் புரிதர வல்லோன்
எல்லை தீர்தரு கந்தமால் வரைதனில் ஏகிப்
பல்லு யிர்த்தொகை படைப்பது நினைந்தனன் பரிவால். 16

……………………

(அயனை / பிரமனை சிறையில் அடைத்தான்.)


1223 தண்ணென் அம்புயத் தவிசினோன் சிறைபுகத் தானே
எண்ணி லாவுயிர்த் தொகையளித் தறுமுகன் இருந்தான்
அண்ண லந்திசை முகனொடு வந்துசூழ் அமரர்
உண்ண டுங்கியே தொழுதுதம் பதங்களி லுற்றார். 19

*****

கச்சியப்ப சிவாச்சாரியார் பின்னர் சிறை நீக்கு படலத்தில் அயனை சிவபெருமான் விடுதலை செய்ததைப்   பாடுகிறார்

ஆகத் திருவிருத்தம் – 1223
17. அயனைச் சிறை நீக்கு படலம் (1224 – 1265)……………..

கந்த புராணத்தை நன்றாகப் பயின்ற வள்ளலார் இந்தக் கதையை ஓரிரு வரிகளில் வடித்தது அவரது சொல்லாற்றலைக் காட்டுகிறது.

அடுத்த கட்டுரையில் வள்ளலார் பாடலில் பகவத்கீதையின் தாக்கத்தைக் காண்போம்

—SUBHAM—

TAGS- வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 5, வள்ளலார் பாடல், கந்த புராணக் கதை, பிரமன் , குட்டுப்பட்டது , சிறை புகுதல்

Leave a comment

Leave a comment