இமயமலை புனிதத் தலங்கள்,: உத்தரகண்ட்! – 2 (Post.14,601)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,601

Date uploaded in London – –7 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

31-5-2025 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது 

இமயமலையில் எழில்காட்சிகள்புனிதத் தலங்கள்காட்சியகங்கள் : உத்தரகண்ட்! – 2 

ச. நாகராஜன் 

ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான ஹரித்வார் மாயாபுரி என்று ரிஷிகேசத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. ஹரித்வார் என்றால் மோட்சத்தின் வாயில் என்று பொருள். 

இது தான் தட்சன் யாகம் செய்த இடம். மாயையின் வசமாகி அவன் அகம்பாவம் தலைக்கேறி சிவபிரானை அவமதித்தான். இதனால் கோபமுற்ற தாக்ஷாயணி தேவி அங்கேயே உயிரை மாய்த்துக் கொண்டாள்.

இதனால் கோபமுற்ற சிவபிரான் தட்சனை மாய்த்து தாக்ஷாயணியைக் கையில் தூக்கிக் கொண்டு தாண்டவமாடினார். இப்படி தாக்ஷாயணி உயிர் நீத்த இடமாதலால் தேவிக்கு இங்கு ஒரு கோவில் உண்டு. அது கனகல் கோவில் என்று புகழ் பெற்று விளங்குகிறது. 

கங்கா மாதாவிற்கென உள்ள கோவில்,பிரம்ம குண்டத்தைச் சுற்றி இராமர் கோவில், விநாயகர் கோவில், ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. 

பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்ததாக வரலாறு உண்டு. ஆகவே அவர்களுக்கும் திரௌபதிக்கும் இங்கு கோவில்கள் உண்டு. இங்குள்ள குளத்தில் பீமன் தன் காலை ஊன்ற உடனே அதிலிருந்து நீர் சுரந்ததாக வரலாறு கூறுகிறது.

 ஹரித்வாரிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கங்கை ஏழு பிரிவுகளாகப் பிரிகிறது. இது சாத் சரோவர் என்று சொல்லப்படுகிறது.

  கேதார்நாத் கோவில்

11755 அடி உயரத்தில் இமயமலைத் தொடரில் உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் தலம் டேராடூனிலிருந்து 254 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

கே என்றால் தலை; தாரம் என்றால் தரிப்பது. ஆக கேதாரம் என்றால் சிவபிரான் கங்கையைத் தலையில் தரித்து அருள் புரிந்த தலம் கேதாரமாகும்.

 இன்னொரு பொருள் : கே என்றால் இந்திரியம்; தாரம் என்றால் அவைகளை அடக்கி வெல்வது. பொறி புலன்களை வெல்லும் தலம் கேதாரம். இன்னொரு பொருள்: கே என்றால் பிரமரந்திரம் தாரம் என்றால் அதிலிருந்து வடியும் அமிர்த தாரை.

கேதார்நாதர் கோவில். தெற்குப் பார்த்த கோவில். எதிரில் பெரிய நந்தி. இரு புறமும் துவாரபாலகர்கள்.

இறைவன் திரு நாமம் :கேதார நாதர்

இறைவி : கேதார கௌரி.

 கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் குந்தி தேவி, தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, கிருஷ்ணர் ஆகியோருடைய சிலாவுருவங்கள் உள்ளன.

பாண்டவர்கள் கடைசியில் மகாபிரஸ்தானம் என்ற விரதத்தை மேற்கொண்டு இங்கு வந்தார்கள். கேதார்நாதரை வழிபட்டு வடகீழ் திசையில் உள்ள ஒரு மலையின் வழியாக சொர்க்கம் புகுந்தார்கள். அந்த மலையை இங்கிருந்தே தரிசிக்கலாம்..

 புராண வரலாற்றின் படி கேதார்நாத்தை அடுத்துள்ள பத்ரிநாத்தில் நரனுடன் தவம் புரிய விரும்பிய விஷ்ணு தன் விருப்பத்தை சிவபிரானிடம் தெரிவிக்கவே, அவர் அதற்கு இசைந்து கேதார்நாத் சென்றார். இதனால் மனம் மிக மகிழ்ந்த விஷ்ணு யாரெல்லாம் தன்னை பத்ரிநாத்தில் தரிசிக்க விரும்புகிறார்களோ அவர்கள் முதலில் கேதார்நாத் சென்று கேதாரநாதரைத் தரிசித்த பின்னரே தன்னை தரிசிக்க வரவேண்டும் என்ற நியமத்தை ஏற்படுத்தினார்.

 இங்கு க்ஷீ ர கங்கை, மது கங்கை, மந்தாகினி, சொர்க்கதுவார கங்கை, சரஸ்வதி என பஞ்ச கங்கை எனப்படும் ஐந்து நதிகள் ஐந்து புறங்களில் மகாமலைகளில் இருந்து கீழே வந்து ஒன்று படுகின்றன.

கேதார்நாதரின் கோவில் தீபாவளியன்று மூடப்படும். பின்னர் வைகாசி பூர்வபட்சம் திருதியை அன்று திறக்கப்படும். குளிர்காலம் என்பதால் பனிக்கட்டியால் கோவில் மூடி இருக்கும். அதை ஆறு மாதம் கழித்து பனிக்கட்டிகளை அகற்றி, திறக்கும் போது, பெருமானுக்குச் சாத்திய மலர் வாடாமலும், ஏற்றி வைத்த தீபம் அணையாமலும் இருக்கும்.

 இங்கு தான் ஆதிசங்கரர் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அவரது சமாதி, கோயிலுக்கு மேற்கே சிறிது தூரத்தில் உள்ளது.

 ஒரு புறம் பொங்கிப் பிரவாகித்துத் துள்ளிக் குதித்து ஓடும் மந்தாகினி நதி, மறுபுறம் நெடிதுயர்ந்த மலைகள் இவற்றின் நடுவே செல்வது புனித யாத்திரை மேற்கொண்டோரை பரவசப்படுத்துகிறது. 

 கௌரிகுண்டம் என்னும் இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரம், சிறிய பாதை வழியே நடந்தே சென்று கேதாரநாதர் கோவிலை அடைய வேண்டும். நெடிதுயர்ந்த தேவதாரு மரங்கள், நூற்றுக் கணக்கான அருவிகள், பாய்ந்து ஓடும் மந்தாகினி நதி ஆகியவை, இயற்கை வளத்தின் சிகரமாகத் திகழும் இமயமலைப் பகுதி, இறைவனின் உறைவிடமே தான் என்பதைக் கணம் தோறும் சொல்லிக் கொண்டே இருக்கும்.

 நைனிடால்

டேராடூனிலிருந்து 264 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நைனிடால்.

நைனி ஏரியை நடுவில் கொண்டு சுற்றிவர அழகிய மலைகளையும் இயற்கைக் காட்சிகளையும் கொண்டுள்ள நைனிடாலின் அழகை வர்ணிக்கவே முடியாது. அனைவரும் மலைவாசஸ்தலமாக இது அமைகிறது. சக்தி தேவதையான நைனா தேவி ஆலயத்தில் சென்று வழிபாட்டையும் முடித்துக் கொள்ளலாம்.பனிப்பொழிவைப் பார்க்க வேண்டுமா, நைனிடால் தான் அதற்கு உகந்த இடம். 11 முதல் 12 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணநிலையில் இமயமலையின் குளிரை அனுபவித்து ஆனந்திக்கலாம். டெல்லியிலிருந்து இது 290 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ரயிலிலும் சென்று இதை அடையலாம்.

 பத்ரிநாத் கோவில்

 உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்தத் தலம் ரிஷிகேசத்திலிருந்து 295 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10170 அடி உயரத்தில் இது உள்ளது.

 நரனும் நாராயணரும் பல்லாண்டுகள் தவம் புரிந்த க்ஷேத்திரமே பத்ரிகாஸ்ரமம்.

 பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். பத்ரிகாஸ்ரமம் ஒரு இலந்தை வனம். அலக்நந்தா நதிக் கரையில் அமைந்துள்ளது இது. அருகில் ரிஷிகங்கா அலக்நந்தா நதியுடன் கூடுகிறது. இந்தத் தலம் நீலகண்ட மலைச் சிகரத்தின் கீழே அமைந்து கண்கொள்ளாக் காட்சியைத் தருகிறது.

 பத்ரிநாதரின் பாதத் தடங்கள் இங்குள்ள ஒரு பாறையில் பதிந்துள்ளதை இன்றும் தரிசிக்கலாம். இங்குள்ள கோயில் கிழக்கு நோக்கியது. தெற்கில் அலக்நந்தா ஓடுகிறது. கோவில் ஆறு மாதம் மட்டுமே – வைகாசி முதல் ஐப்பசி முடிய – திறந்திருக்கும்.

இறைவர் :பத்ரி நாராயணர்

தாயார்: மஹாலக்ஷ்மி.

 பத்ரிநாத்தின் தென்மேற்காக 10 கிலோமீட்டர் சென்று  மலையைப் பார்த்தால் அது அப்படியே இந்திய வரைபடத்தைக் காட்டும் காட்சி அதிசயத்திலும் அதிசயமான ஒரு காட்சியாகும்.

 புனிதத் தலங்கள், அருங்காட்சியகங்கள், நீர்வீழ்ச்சிகள், மலைவாசஸ்தலம் என பல்வேறு இடங்களைக் கொண்டிருப்பதால்

உத்தரகண்ட் பயணத்தை மேற்கொள்வோர் முதலிலேயே பயணத்திட்டத்தை வகுத்துக் கொண்டு செல்லக் கூடிய பகுதிகளின் காலநிலையையும் அறிந்து கொண்டு அதற்குத் தக முன்னேற்பாடுகளைச் செய்தல் அவசியம். உத்தரகண்ட் வரைபடத்தைக் கையில் வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

***

Leave a comment

Leave a comment