
Hanuman Sculptures in Indonesia.
Post No. 15,067
Date uploaded in London – 8 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||
மனத்தின் வேகமுடையவர் ; காற்றுக்கு இணையாக வேகம் கொண்டவர் ; புலன்களை வென்றவர்;புத்திமான்களில் மிகச் சிறந்தவர்; வாயுவின் மகன்; வானர சேனைகளின் முக்கியத் தலைவன்; ஸ்ரீ ராம தூதனான அவனை தலையால் வணங்குகிறேன்.
ஐன்ஸ்டைன் சொன்ன ஒளியின் வேகத்தை விட வேகமாகச் செல்லக்கூ டியது மனம்; மனத்தின் சக்தியை அறியாத வெள்ளைக்காரர்களுக்கு இது புரிய இன்னும் கொஞ்ச காலம் ஆகும் .நாரதர் போல பிரபஞ்சம் சுற்றும் பயணிகளை அவர்கள் அறியவில்லை!
ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
இதன் பொருள்:-
அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு
அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்
****
Vali- Sugriva fighting; Rama shooting with an arrow from behind the tree
யார் கொலோ சொல்லின் செல்வன் !!
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதை சுவையாக வருணிக்கிறான் கம்பன்.
“அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு” –
(அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்).
இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து “கருணையின் கடல் அனையர்” என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-
“சதமன் அஞ்சுறு நிலையர்
தருமன் அஞ்சுறு சரிதர்
மதனன் அஞ்சுறு வடிவர்
மறலி அஞ்சுறு விறலர்”
பொருள்:–
இந்திரனும் (சதமன்) அஞ்சும் தோற்றத்தை உடையவர்,
தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர்,
மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள்,
யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள்.
என்ன அழகான வருணனை!
அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான்’ என்ற அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை ” தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன் .
Vaanara Sena acceptedd Rama only after testing his strength; Rama was asked to pierce throuh seven strongest trees in Kishkinda (Now Hampi in Karnataka)
ராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அநுமன்
“வெல்கம் டு கிஷ்கிந்தா” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு” (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்.
இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..
உடனே அனுமன்,
“யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.
உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ
இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),
இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு வனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?
வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?
இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!
***
அனுமனின் சொல்லாற்றல்

அனுமனின் சொல்லாற்றலால் அவனை ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவார் கவிச் சக்ரவர்த்தி கம்பர்.
ராமனின் குண நலன்களை வருணிக்கும் வால்மீகியோ, ராமனை
மித பாஷி= (குறைவாகப் பேசுபவன்);
ஹித பாதி= ( மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவதை சொல்பவன்);
ஸ்ருத பாஷி= (உண்மையே பேசுபவன்);
பூர்வ பாஷி (தலைக் கனம் கொஞ்சமும் இல்லாமல் நதானே போய் முதலில் பேசுபவன்);
என்று நான்கு அடைமொழிகளால் வருணிப்பார். இந்த நான்கு குணங்களும் இருந்தால் அவனை யார் வெல்ல முடியும்?
அனுமனின் சொல்லாற்றலுக்கு எடுத்துக் காட்டு, சீதையைக் கண்டு பேசிவிட்டு, முதல் முதலில் ராமனைச் சந்தித்தவுடன்,
கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்
–சுந்தர காண்டம், திருவடி தொழுத படலம், கம்ப ராமாயணம்
இந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி போடுவது போல கண்டேன் கற்பினுக்கு அணியை (சீதையை) என்று சொல்லிவிட்டு என் கண்களால் பார்த்தேன் என்றும் சேர்க்கிறான். இக்காலப் பத்திரிக்கைகள் போல சொல்லப்படுகிறது, அறியப் படுகிறது, நம்பப்படுகிறது என்றெல்லாம் சொல்லாமல் என் கண்களால் கண்டேன் என்கிறான். இங்கே அனுமனின் சொல்லாற்றலையும் கம்பனின் கவி புணையும் ஆற்றலையும் ஒருங்கே காண்கிறோம்.
இதனால்தான் ராமன் – அனுமன் முதல் சந்திப்பின் போதே
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே – என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே! யார் கொல் இச் சொல்லின் செல்வன்!
வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!
இந்தச் சொல்லின் செல்வன் நான்மறைகளை நாலு வாயாலும் சொல்லும் பிரம்மாவா? மொழிகளுக்கு எல்லாம் மூல முதல்வனான விடை ஏறு சிவ பிரானா? என்று வியக்கிறான் ராமன். காரணம் முதலில் அனுமன் தன்னைப் பணிவுடன் அறிமுகப் படுத்திக் கொண்ட முறை!!
ஆக பொது இடங்களில் பேசுவது எப்படி என்பதில் ஆதி சங்கரரரும் வள்ளுவரும் ஒன்றிப்போவதைக் கண்டு சுவைத்து மகிழலாம்.
***
பணிவுக்கும் துணிவுக்கும் மட்டும் பெயர் எடுத்தவர் ஆஞ்சனேயர் என்று எண்ணிவிடக்கூடாது; கண்மூடித்தனமான பக்திக்கும் அவர் எடுத்துக்காட்டு இதை தாஸ்ய பக்தி என்பர். ராமதாஸனாக விளங்கும் அவரை கிஷ்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் , யுத்த காண்டத்திலும் காணலாம்
இதோ ஒரு கதை :
ஜாம்பவான் மூலம் அனுமனின் பக்தியையும் அளவுகடந்த திறமையையும் அறிகிறோம்; பிராம்மாஸ்த்திரத்தின் தாக்குதலால் , போர்க்களத்தில் லெட்சுமணன் உளப்பட அனைவரும் மூர்ச்சசையாகி இருக்கின்றனர்; ஆனால் விபீஷணன் பாதிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து உடல்நிலையைச் சோதிக்கிறார். ஜாம்பவான் அருகில் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி :
ஆஞ்சனேயர் உயிருடன் இருக்கிறாரா ?
விபீஷணனுக்கு ஒரு அதிர்ச்சி. ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் பற்றிக் கேட்காமல் ஏன் அனுமன் பற்றி மட்டும் விசாரிக்கிறீர்?
என்று வினவினார் விபீஷணன் ..
ஜாம்பவான் பதில் சொல்கிறார் :
அனுமன் ஒருவன் உயிரோடு இருந்தால் அனைவரும் பிழைத்துவிடுவார்கள் அவன் புத்திமான்; பலவான்; காற்றினும் கடுகிச் செல்பவன் அவன் எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க முடியும் . இதை ராமாயணக் கதையிலும் காண்கிறோம்; சஞ்சீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்து வந்து — ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தியது போல– அனைவருக்கும் உயிர்மூச்சினை உண்டாக்கினார்
***
சிவ பெருமானின் அவதாரம் தான் ஹனுமான் என்பதற்கு குறைந்தது மூன்று இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.
அதில் ஒரு ஆதாரம் , முருகன் புகழ் பாடிய திருப்புகழில் கிடைக்கிறது. இந்த 3 ஆதாரங்களும் ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது ; வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராமாயணம்தான் மிகவும் பழமையானது என்றாலும் பரந்த பாரத பூமியில் செவி வழியாக வந்த எவ்வளவோ செய்திகள் 3000 ராமாயணங்களிலும் ராமன் பற்றிய பாடல்களிலும் கிடைக்கின்றன. இவைகளை எல்லா மொழிகளிலும் இருந்தும் தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டால் அவை பல தொகுதிகளாக, ஒருவேளை பல நூறு தொதகுதிகளாக வர வேண்டியிருக்கும். கடல் அளவுக்குப் பெருகியது ராமாயணம்; தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்தால் அங்குள்ள அதிசய வினோத ராமாயணங்களில் நாம் அறியாத புதிய கதைகளைக் கேட்டு ரசிக்கலாம்; அதில் வியப்பில்லை. நம்முடைய சம்ஸ்க்ருத பெயர்கள், இந்தியாவுக்கு வெளியே எத்ததனை விதமான ஸ்பெல்லிங்க்குகளில் எழுதப்படுகிறது என்ற விநோதத்தைக் கண்டால் , இன்னும் வியப்பாக இருக்கும்;
அனுமனின் தாயின் பெயர் அஞ்சனா (அஞ்சனை ); தந்தையின் பெயர் கேசரி . அஞ்சனா என்ற பெண்மணி , சிவபெருமானை வேண்டி பெற்றபிள்ளை அனுமன் என்று பாவார்த்த ராமாயணம் கூறுகிறது. இதை எழுதியவர் மராட்டிய பூமியில் அவதரித்த மஹான் ஏக நாதர் .
தசரதன், புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்னர் யாக குண்டத்திலிருந்து வந்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பிரித்துத் தந்ததை வால்மீகி நமக்குச் சொன்னார். அதில் கீழே சிந்திய ஒரு பகுதியை கருடன் எடுத்துச் செல்லவே , அது அஞ்சனை தவம் செய்த காட்டில் விழுந்தது; அதை வாயு பகவான் அஞ்சனை இடம் தந்தான். அவளும் சிவனை நினைந்து அதை அருந்தவே கர்ப்பம் அடைந்து வாயுகுமாரனைப் பெற்றாள் . பிறந்த குழந்தை சிவனுடைய அம்சத்துடன் பிறந்தது .
***
இன்னுமொரு கதை :
ராமன் என்னும் அவதாரம் ராவணன் என்னும் ராட்சசனை அழிக்க வந்தது ; அப்போது வைகுண்டத்தில் அல்லது சொர்க்கத்தில் இருந்த ஒவ்வொருவரும் பூமியில் வெவ்வேறு பெயர்களில் தோன்றினார்கள். தேவர்கள் வானரங்களாகவும், சிவ பெருமான் அனு மானாகவும் அவதரித்து ராவண ஸம்ஹரத்தில் உதவினார்.
இதை ஏகநாதர் பாடல்களும் , அருணகிரி நாதரின் திருப்புகழும் , துளசிதாஸரின் ஹனுமான் சாலீசாவும் சொல்கினறன.
அனுமன் சிவனின் அவதாரம்
கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று
கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி
கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து
கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி
அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ
இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்
எரியது என்றும் ருத்ரற் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே
பொருள்–
கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து
கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து
குழந்தையின் வடிவத்தில் தோன்றி, குழந்தையை அங்கு கழுவியெடுத்து, சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும், பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு,
நோய்வாய்ப்பட்டு அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்)
உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?
சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கரடி இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த மருமகனே, பிரம்மாவையும் கோபித்து, (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
***
ஹனுமான் சாலீசா
ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥
வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥
பொருள்
. நீங்கள் சிவபெருமானின் அவதாரம் பரிசுத்தமான, ஏகாந்தமான, அழகான கைலாச பர்வதத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்கிறீர்கள் ; உங்களுடைய இருதயம் என்னும் காட்டில் ராமன் எபோதும் உலவிக்கொண்டு இருக்கிறார். ராமாவதார நோக்கத்தை நிறைவேற்ற நீங்களே கேசரி மைந்தனாக அவதரித்தீர்கள் புகழ் ஒளியாலும் , வீரத்தாலும் உயர்ந்த உங்களை உலகமே தொழுது நிற்கிறது என்று உரைகாரர்கள் விளக்கியுள்ளனர்.
8.ஆழம் காண முடியாத அறிவுடையவர் நீங்கள்; நற்குணங்களும் செயலாற்றுவதில் பெரும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் .ராமனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாக உடையவர்.
ஆக துளசிதாஸர் , ஏகநாதர் , அருணகிரி நாதர் மூவரும் அனுமனை சிவனின் அம்சமாகவே கருதுகின்றனர்.
to be continued………………….
tags–Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-7, Part Seven, அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி,கண்டெனன் கற்பினுக்கு அணியை, சொல்லின் செல்வன்