
Post No. 15,115
Date uploaded in London – 24 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முத்தும் பவளமும் எல்லாக் கடவுளரின் அணிகலன்களிலும் இடம்பெறுகிறது . மதுரை, ஸ்ரீரங்கம் முதலிய கோவில்களில் உள்ள முத்து அங்கிகள் மிகவும் பிரபலமானவை .
ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலன்விதா என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒரு நாமம்.
இதைத் தொடர்ந்து காமேச்வர ப்ரேம ரத்னமணி ப்ரதிபணஸ்தனீ என்ற நாமம் வருகிறதுவருணிக்கும்போது பக்தர்கள் கேசாதி பாதம், அதாவது முட்டிமுதல் அடிவரை பாடுவார்கள் . ஆகையால் அம்பாளின் கழுத்தில் அணிந்த முத்துமாலையை முதல் நாமம் வருணிக்கிறது
ரத்ன க்ரைவேய – இரத்தின மாலை அணிந்த கழுத்து;
சிந்தாகம்- பதக்கம்;
லோல – ஆடிக்கொண்டிருக்கிறது;
முக்தா – முத்து /மாலை
தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் முத்துக்கு ஒரே ஒலி/ சப்தம் இருப்பதைக் கவனிக்க வேண்டும்
பாரத நாட்டைப் பொருத்த வரையில் முத்து என்றால் தமிழ்நாட்டிலுள்ள பாண்டிய நாடுதான் . 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாண்டிய கவாடம் என்ற முத்தினை அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது இது இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த கபாட புரத்திலிருந்து சென்ற முத்து ஆகும்.
வராஹமிஹிரரும் பலவகையான முத்து வடங்களை வெவ்வேறு பெயர்களுடன் குறிப்பிடுகிறார் . இன்றும் பல கோவில் நகைகளில் இவற்றைக்காண முடிகிறது.
இரண்டாவது நாமத்தில் சிவபெருமானுடைய அன்புக்கும் தேவியின் அன்புக்கும் ரத்தினங்கள் உவமையாக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு ரத்தினைக் கற்கள் உயர்ந்தவை! காமேஸ்வரனின் பிரேமை /அன்பு என்ற ரத்தினத்துக்கு மாறறாகத் தன்னுடைய மார்பகங்கள் என்ற ரத்தினத்தை அளிப்பவள் லலிதாம்பாள்.
முத்துமாலை பற்றிய இணைப்புக் கட்டுரைகள் கீழே உள்ளன .
***
அடுத்த நாமம் சிந்தாமணி க்ருஹ அந்தஸ்ததா;
இதன் பொருள் சிந்தாமணிக் கற்களாலான கிருஹத்தில்/ இல்லத்தில் அமர்ந்து இருப்பவள். அற்புதமான கற்பனை !
சிந்தாமணி என்பது கேட்டதையெல்லாம் கொடுக்கக்கூடிய ரத்தினக் கல் . அந்த கற்களாலான வீட்டில் வசிப்பவள் அன்னை ! நாம் எல்லோரும் செங்கற்களால் அல்லது கான்க்ரீட்டினால் ஆன வீட்டில்தான் வசிக்கிறோம், ஆனால் இறைவியோ சிந்தாமணிச் செங்கற்களால் ஆன வீட்டில் வசிக்கிறாள்! இந்த ரூபத்தில் தேவியை மனைத்தில் நிறுத்தி தியானிப்போருக்கு வீட்டில் ரத்தினக் கல் மழை பொழியும்! ஆனால் ஒரு பெரிய நிபந்தனை; மனம் மொழி மெய் – மனோ வாக் காயம்- ஆகிய மூன்றிலும் தூய்மை இருக்க வேண்டும் இந்த நிபந்தனையை நிறைவேற்றுபவர் கோடியில் ஒருவர்தான்!
பத்மராகக் கல் பற்றிய ஒரு நாமத்தில் தேவியை ஹயக்ரீவர் (குதிரைக் கழுத்துக் கடவுள்),
பத்மராக ஸமப்ரபா என்று வருணிக்கிறார் . அவள் பத்மராகம் தரக்கூடிய பிரகாசத்தை உடையவள் என்பது பொருள். இதை நாம் சொல்லும்போது கோடி பத்மராக கற்கள் என்று கற்பனை செய்தால்தான் நமது சிற்றறிவுக்கு அம்பாளின் பெருமை விளங்கும் .
ஏனெனில் விநாயாகரை நாம் வணங்கும்போது
வக்ரதுண்ட மஹா காய சூர்யகோடி ஸம்ப்ரபா
நிர்விக்னம் குருமேதேவா ஸர்வகார்யேஷு ஸர்வதா –
என்று கோடி சூரியன்களை நினைக்கிறோம் பகவத் கீதையில் இறைவனின் விஸ்வரூபத்தை வருணித்த சஞ்சயன் திவி சூர்ய சஹஸ்ரஸ்ய — ஆயிரம் சூரியன்கள உதித்தாற்போல இருக்கிறது என்கிறார் . அமெரிக்கப் பாலைவனம் ஒன்றில் முதல் அணுகுண்டு சோதனை நடத்தியத்தைக் கண்ட அணுகுண்டின் தந்தை ராபர்ட் ஓப்பன்ஹீமர் “father of the atomic bomb J. Robert Oppenheimer (1904-1967) அந்தக் காட்சியைத் தொலைதூரத்தினில் கண்டபோதே அவருக்கு அந்த பகவத் கீதை ஸ்லோகம்தான் நினைவுக்கு வந்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
***
மீண்டும் முத்து குறித்து ஒரு நாமம் வருகிறது
ஸகல ஆகம ஸந்தோஹ சக்தி ஸம்புட மெளக்திகா
சம்படம் அல்லது சம்புடம் என்பது மூடியுள்ள பாத்திரம் . மெளக்திகா என்பதை முத்துவினால் ஆன மூக்குத்தி என்று சொல்லலாம் .
முதல் பொருள் – முத்துச் சிப்பிக்குள் முத்து இருப்பது போல வேதங்களாகிற , ஆகமங்களாகிற , முத்துச் சிப்பிக்குள் அம்பாளுடைய முத்து மூக்குத்தியானது இருப்பதாகச் சொல்லப்பட்டது
இரண்டாவது பொருள் – வேதங்களாகிற முத்துச் சிப்பிக்குள் இருக்கும் முத்து மாதிரி இருப்பவள்.
மூன்றாவது பொருள் – இதற்கு முந்திய நாமத்துடன் சேர்த்துப் பார்க்கையில் நான்கு ஜாதியாராலும் வணங்கப்படுபவள் என்றும் பாஸ்கரராயர் உரை கூறுகிறது.
***
சர்வ வர்ண உப சோபிதா = சர்வவர்ணோப சோபிதா
என்ற நாமத்தில் தேவியின் கலர்கள் வருகின்றன ; சித்ர வர்ணமாக , அதாவது எல்லா நிறங்களுடன் ஒளிவீசுபவள் என்பது ஒருபொருள்.
உப என்றால் சமீபத்தில் அல்லது மேல் என்று பொருள் ; UPPER அப்பர் என்ற ஆங்கிலச் சொல் ஊபர் என்ற ஹிந்தி சொல் ஆகியன இதிலிருந்தே பிறந்தன.
வர்ணம் என்பதை அக்ஷரம்/ எழுத்து என்று பொருள் கொண்டால் அக்ஷர யோகினிகளுக்கு அருகில் அல்லது மேல் இருப்பவள்; கலர் என்று பொருள் கொண்டால் அவைகளுக்கும் மேலானவள்; எல்லா வர்ணங்களும் உள்ள வட்டத்தைக்/ காற்றாடியைச் சுற்றினால் நாம் காண்பது வெண்மை நிறம் ; அதாவது ஸ்படிக நிறம்.
ரத்தினங்கள் பல கலர்களைக் கொண்டவை ; ஸ்படிகம் என்னும் ரத்தினம் நிறம் வெண்மை ; நாம் எல்லோரும் ஸ்படிக மாலையை அணிந்திருக்கும் பெரியோர்களைப் பார்த்து இருப்போம் அதன் குணம் அதன் அருகிலுள்ள பொருளின் நிறத்தை ஏற்பதாகும் . சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் எல்லா நிறத்திலும் இருப்பதாக நாம் பாவனை செய்து மகிழலாம்; நிறங்களுக்கு மேலானவர் என்று தியானித்தும் மகிழலாம் . மதுரை மீனாட்சி கோவில் காசி விசாலாக்ஷி சமேத விச்வநாதர்கோவிலுக்குச்சென்றால் ஸ்படிக நிற சிவபெருமானைத் (மூல விக்ரஹத்தைச் சொல்லவில்லை ) தரிசிக்கலாம் ஆனால் அவரையே நாம் ஐந்து நிறங்கள் என்று சொல்லி திருவாசகம் ஒதுகிறோம் .
தேவியின் நிறம் பொதுவாக சிவப்பு என்று வருணிக்கப்பட்டாலும் அர்த்தநாரி, நாராயணி, ஹரிணி என்று அழைக்கும்போது பச்சை அல்லது நீல வர்ணம் வந்துவிடுகிறது. கடவுளுக்கு எல்லா நிறங்களும் பொருந்தும் ; நிறமில்லாத ஸ்படிக நிறமும் பொருந்தும் என்பது இந்து தெய்வங்களின் நாமாவளிகளைச் செல்வோருக்கு நன்கு தெரியும் . மாணிக்கவாசகர் சிவபெருமானை நிறங்களோர் ஐந்துடையாய் என்பார்; சிவ பெருமானுக்கு ஐந்து நிறங்கள் ,
கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம்-வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.
***
பவளக்கொடி
வித்ருமாபா என்பது லலிதாவின் இன்னும் ஒரு நாமம்; வித்ரும என்றால் பவளம் CORAL ;வித்ருலதா என்றால் பவளக்கொடி முத்தும் பவளமும் கடலில் கிடைப்பவை
வித்ரும ரூபா = பவழமாக — செந்நிறத்தில் — ஒளிர்பவள் .
இதையே வித் +த்ரும = ஞான மரம் = விஸிடம் ட்ரீ ஸ் – என்றும் உரைகாரர்கள் காண்கிறார்கள் (தரு என்ற சொல்லும் ட்ரீ என்ற ஆங்கிலச் சொல்லும் த்ரும என்பதிலிருந்து பிறந்த சொற்கள் ஆகும் )
***

முத்து பற்றிய 6 பழமொழிகள்
1.முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
2.முத்தைத் தெளித்தாலும் கலியாணந்தான் ,மோரைத் தெளித்தாலும் கலியாணந்தான்.
3.முத்துக்கு முத்தாயிருக்கிறது.
4.முத்தை அளக்கிறவளும் பெண்பிள்ளைதான் ,மூசப்பயறு அளக்கிறவளும் பெண்பிள்ளைதான்.
5.முத்தளந்த கையினாலே மோர் விற்கிறதா?
6.முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு.
***
முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524)
தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்
கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்
இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே
—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்
யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.
இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.
1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைளின் கொம்புகள்
3.இப்பி = முத்துச் சிப்பிகளும்
4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்
5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்
6.நந்து = சங்கும்
7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு
8.மீன்றலை = மீன் தலை
9.கொக்கு= கொக்கின் தலை
10.நளினம் = தாமரை
11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து
12.சாலி = செந்நெற் கதிர்க்குலை
13.கழை = மூங்கில்
14.கன்னல் = கரும்பு
15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்
16.கட்செவி = பாம்பு
17.கார் = மேகம்
18.இந்து = சந்திரன்
19.கரா =முதலை
20.உடும்பு= உடும்பின் தலை
***
காளிதாசனும் இதையே சொல்கிறான்:
ஆரிய திராவிட வாதம் பொய் என்பதும், பாரதம் முழுதும் ஒரே கலாசாரம்தான் இருந்தது என்பதும் காளிதாசனின் 1250 உவமைகளையும் சங்கத் தமிழ் இலக்கிய உவமைகளையும் ஒப்பிட்டால் நன்கு விளங்கும். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் அத்தகைய உவமைகளைக் காணவும் முடியாது; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை போல வேறு எந்த மொழியிலும் காணவும் முடியாது!
முத்துச் சரம், அறுந்த முத்து மாலை பற்றி “சூத்ர மணிகணா இவ” என்னும் பகவத் கீதை உவமை சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை சென்ற வாரம் எழுதினேன். அதற்கு முன் முத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். மிகச் சுருக்கமாக:-
சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.
காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)
யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;
தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-
முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173
காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.
பறவைகள் குடியேறும் போது (Please read my article on Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.
வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.
முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:
த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி
முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி
——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81
பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.
வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும் கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.
***
கடல் தரும் ஐந்து செல்வங்கள்
ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்
நீர்ப்படும் உப்பினோடைந்து
இவை ஐந்தும் கடல் தரும் செல்வம் என்று பழைய செய்யுள் கூறும்
ஒர்க்கோலை – அம்பர், அம்பர் க்ரிஸ் என்று அழைக்கப்படும் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கிலத்திலிருந்து கிடைக்கிறது. மரத்திலிருந்து வெளியேறும் கோந்து போன்ற பிசினும் ஓர்க்கோலை என்று அழைக்கப்படும். மற்ற நான்கு: சங்கு, பவளம், முத்து, உப்பு என்பன.
அம்பர் அம்பர்க்ரிஸ் என்பது திமிங்கிலத்தின் குடலில் சுரக்கப்படும் ஒரு திரவம் கெட்டியாகி அதன் மலத்துடன் வெளியே தள்ளப்படும். உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் (செண்ட், பெர்ஃயூம்) அந்த நறுமணத்தை நீடிக்க வைக்க இது உதவும். மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு அலங்காரப் பொருட்களைச் செதுக்குவர். அதற்குள் ஏதேனும் பூச்சி, புழுக்கள் சிக்கியிருந்தால் அது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.
***
ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!!
ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015
ரத்னங்களின் குணங்கள்
ஸ்னிக்த: ப்ரபானுலேபி ஸ்வச்சோ அர்சிஷிஷ்மான் குரு: சுசம்ஸ்தான:
அந்த: ப்ரபோ அதிராகோ மணிரத்னகுணா: சமஸ்தானாம்
—–(பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82)
ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும். கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.
என்ன கிடைக்கும்?
ஏதானி சர்வானி மஹா குணாணி சுதார்த்த சௌபாக்ய யசஸ்கரானி
ருக்சோக ஹந்த்ருனி ச பார்த்திவானாம் முக்தாபலானி ஈர்ச்சித காமதானி — (பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81)
இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.
இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.
குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:
அம்மனுக்கு முத்து அங்கி
தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.
அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.
17 வகை முத்து மாலைகளில் சில:
1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)
504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா
108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)
81 வடம் = தேவ சந்தா
64 வடம் = அர்த்த ஹார
54 வடம் = ரஸ்மி கலாப
32 வடம் = குச்ச
20 வடம் = அர்த்த குச்ச
16 வடம் = மாணவக
12 வடம் = அர்த்த மாணவக
எட்டு வடம் = மந்தர
ஐந்து வடம் = ஹார பலக
27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா
இவ்வாறு முத்துக்களின் பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.
***
எடைகள் பற்றிய வாய்ப்பாடு
ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:
விம்சதி: ஸ்வேதிகா: ப்ரோக்தா: காகின்யேகா:
விசக்ஷணை: தத் சதுஷ்கம் பண: இதி சதுர்த்தம் தத் சதுஷ்டயம்
சதுர்த்தக சதுஷ்கம் து புராண: இதி கத்யதே
கார்ஷா பண; சஹ ஏவ உக்த: க்வசித் து பண விம்சதி:
20 வெள்ளிக் காசு= ஒரு காகினி
4 காகினி = ஒரு பணம்
4 பணம் = ஒரு சதுர்த்தம்
4 சதுர்த்தம் = ஒரு புராண அல்லது கார்ஷா பணம்
80 வெள்ளிக்காசு =ஒரு பணம்
20 பணம் = ஒரு கார்ஷா பணம்
8 வெள்ளைக் கடுகு (ஐயவி)= ஒரு அரிசி
20 அரிசி எடை வைரம் = 2 லட்சம் கார்ஷா பணம்
14 அரிசி அடை= 1 லட்சம் கார்ஷா பணம்
முத்து விலை
5 குந்து மணி (ரத்தி/குஞ்சா/கிருஷ்ணல) = 1 மாச
16 மாச = 1 சுவர்ண
4 சுவர்ண = ஒரு பல
அரை பல = தரண அல்லது சுவர்ண
4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்
ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்
இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.
—-subham —
Tags- லலிதா, சஹஸ்ரநாமத்தில், நவரத்தினங்கள், Part 2 ,முத்து