அப்பர் தேவாரத்தில் புவியியல்: நதிகள், மலைகள், கடல்கள்! (Post 15,163)

Written by London Swaminathan

Post No. 15,163

Date uploaded in London –  8 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அப்பர் தேவாரத்தில் நவரத்தினங்களைக் கண்டோம் . இதோ மேலும் ஒரு கட்டுரை

நால்வர் என்று போற்றப்படும் அப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர், சுந்தரர் ,மாணிக்க வாசகர் ஆகியோரில் அதிகம் பயணம் செய்தவர் அப்பர் சுவாமிகள்தான். ஏனைய மூவரும் அந்தக் காலத் தமிழ் நாட்டுக்குள்ளேயே வலம் வந்தவர்கள் தான். சமண மதத்தைத் தழுவியதால் அப்பர், பீஹார் மாநிலத்திலுள்ள பாட்னா (பாடலிபுத்திரம்) வரை  சென்றிருக்கிறார். இதை அவரது பாடல்களில் காண முடிகிறது.

அடைவுத் திருத்தாண்டகம்  என்ற அற்புதமான பாடலில் அப்பர் தரும் விஷயங்களை வைத்து மட்டுமே தனியான புஸ்தகம் எழுதலாம். அவ்வளவு விஷயங்களை அடுக்கடுக்காகப்   பாடுகிறார். சிவன் தொடர்பான ஊர்களே இவ்வளவு இருக்குமானால்  சக்திக் கேந்திரங்கள் திருமால் திவ்ய க்ஷேத்ரங்கள் என்பன எவ்வளவு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்

அப்பரின் புவியியல் அறிவுக்கு ஈடு இணை இல்லை! புவியியல் விஷயங்களை ,செய்திகளை மட்டும் காண்போம்

ஆறாம் திருமுறையை மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு பூகோள வர்ணனைகளைக் காண்போம்.

1

 திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -அடைவுத் திருத்தாண்டகம் – திருத்தாண்டகம்

பள்ளி என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் , வீரட்டானத் தலங்களையும்,  குடி , ஊர் என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் தந்த பின்னர் காடுகளின் பெயர்களை பாடுகிறார் :

மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு; வண்பொழில் சூழ் தலைச்சங்காடு;

தலையாலங்காடு; தடங்கடல் சூழ் அம் தண் சாய்க்காடு; தெள்ளு புனல் கொள்ளிக்காடு;

பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு; பனங்காடு; பாவையர்கள் பாவம் நீங்க,

விலை ஆடும் வளை திளைக்க, குடையும் பொய்கை வெண்காடும்; அடைய வினை வேறு ஆம் அன்றே.

பின்னர் வாயில், ஈச்வரம் என்று முடியும் ஊர்ப்  பெயர்களையும் தந்துவிட்டு மலைகளையும், ஆறுகளையும்  பாடுகிறார்

****

2

கந்த மாதனம், கயிலைமலை, கேதாரம், காளத்தி, கழுக்குன்றம், கண் ஆர் அண்ணா,

மந்தம் ஆம் பொழில் சாரல் வடபர்ப்பதம், மகேந்திர மா மலை நீலம், ஏமகூடம்

விந்த மா மலை, வேதம், சையம், மிக்க வியன் பொதியில் மலை, மேரு, உதயம், அத்தம்,

இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம், இடர் கெட நின்று ஏத்துவோமே.

***

3

நள்ளாறும், பழையாறும், கோட்டாற்றோடு, நலம் திகழும் நாலாறும், திரு ஐயாறும்,

தெள்ளாறும்; வளைகுளமும், தளிக்குளமும், நல் இடைக்குளமும், திருக்குளத்தோடு; அஞ்சைக்களம்,

விள்ளாத நெடுங்களம், வேட்களம்; நெல்லிக்கா, கோலக்கா, ஆனைக்கா, வியன் கோடி(க்)கா;

கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா, என அனைத்தும் கூறுவோமே.

***

4

பின்னர் துறைகளைப்பாடுகிறார்

கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள் உரம் நெரியக் கால்விரலால் செற்றோன்

பயில்வு ஆய பராய்த்துறை, தென்பாலைத் துறை, பண்டு எழுவர் தவத்துறை, வெண்துறை, பைம்பொழில்

குயில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறையும், குரங்காடு துறையினோடு,

மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே.

துறை என்பது ஆற்றில் புனித நீராடும் கட்டங்களாகும்

***

5

இவ்வாறு ஒருவர் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூச்சில் பாட வேண்டும் என்றால் அவருக்கு அபார பூகோள அறிவு இருக்க வேண்டும் .

கேதார்நாத் முதல் இலங்கையிலுள்ள  கேதீச்வரம் வரை பாடுவதால் அவர் மனக் கண்களுக்கு  முன்னால் ஏக பாரதம்– அகண்ட பாரதம் –தெரிந்திருக்க வேண்டும்  இமயம் முதல் குமரி வரை பாரதம் ஒன்றே என்பதை பறைசாற்ற இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்

ஆறாம் திருமுறை திருவீழிமிழலை பதிகம்

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்

            பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்

கேதிசர மேவினார் கேதா ரத்தார்

            கெடில வடவதிகை வீரட் டத்தார்

மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்

            மழபாடி மேய மழுவா ளனார்

வேதி குடியுளார் மீயச் சூரார்

            வீழி மிழலையே மேவி னாரே.  2

***

6

நாவலந்தீவு

நாவலந்தீவு பற்றி சங்க இலக்கியப்பாடல்களிலும் அதற்கு முன்னர் காளிதாசன் கவிதைகளிலும் குறிப்புகள் உள்ளான . இதுபற்றியம்  அப்பரும் தேவாரத்தில் பாடியுள்ளார்

மூவுருவின் முதலுருவாய் இருநான் கான

                மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்

தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்

                செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்

நாவுடையார் நமையாள வுடையா ரன்றே

                நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான

காவலரே யேவி விடுத்தா ரேனுங்

                கடவமலோங் கடுமையொடு களவற் றோமே. 

அவர் வங்காளத்தில் ஆயிரம் கிளைகளாக பிரிந்து கங்கை நதி, வங்காள விரிகுடாவில் விழும் செய்தியோடு நாவலம் தீவு – ஜம்பூத்வீபம் , போகும் வழியிலுள்ள கோதாவரி முதலிய நதிகளையும் குறிப்பிடுகிறார். 

***

7

கங்கை நதிக் குறிப்புகள்:–

இதோ அப்பரின் ஆறாம் திருமுறையில் உள்ள கங்கை நதிக் குறிப்புகள்:–

திருப்பூவணம்

ஆறாம் திருமுறை , பாடல்

மயல் ஆகும் தன்  அடியார்க்கு  அருளும் தோன்றும் ;

மாசு இலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்;

இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் ;

இருங்கடல் நஞ்சு உண்டு  இருண்ட கண்டம் தோன்றும் ;

கயல் பாய கடுங்கலுழிக் கங்கை நங்கை

ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் -தோன்றும்

புயல் பாய்ச சட்டை விரித்த பொற்புத் தோன்றும்

பொழில் திகழும் பூவணத்து  எம் புனிதனார்க்கே

***

8

பல்வகைத் திருத்தாண்டகத்திலும்  இது போன்ற குறிப்பு வருகிறது

நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக்  கண்டு

நிலை தளர ஆயிரமாமுகத்தினோடு

பாய்ந்து ஒருத்தி படர்சடைமேல் பயிலக்கண்டு

பட அரவும் பனிமதியும்  வைத்த செல்வர்

தாம் திருத்தித் தம் மனத் தை  ஒருக்காத் தொண்டர்

தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம் பூந்துருத்தி என்பீராகில்

பொல் லால்புலால்  துருத்தி போக்கல் ஆமே –பாடல் 909

***

9

கோதாவரி பற்றிய அப்பர் பாடல்

உருத்திர தாண்டகம் – பாடல் 7, ஆறாம் திருமுறை

மாதா பிதாவாகி மக்க ளாகி

மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்

கோதா விரியாய்க் குமரி யாகிக்

கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்

போதாய மலர்கொண்டு போற்றி நின்று

புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி

யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி

அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே

***

10

கங்கை — காவிரி

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்

கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்

எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

ஏழ்  கடலும் ஏழ் மழையும் என்றும் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்

கேதீச்வரம் முதல் கேதாரம் வரை உள்ளானை திருவீழிமலைப் பதிகத்தில் பாடுகிறார்

இங்கு கொடுத்தவை ஒரு சாம்பிள்தான் இது போல அப்பர் பாடிய மூன்று திருமுறைகளையும் நிறையா பாடல்கள் உள்ளன.

–subham—

Tags- அப்பர், புவியியல், பூகோள, அறிவு, மலைகள், காடுகள், கங்கை, கோதாவரி நதிகள், கேதார்நாத், கேதீச்வரம்

Leave a comment

Leave a comment