Kailash, abode of Lord Siva

Siva linga in Assam
Post No. 15,184
Date uploaded in London – 15 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version posted yesterday
லிங்கம் பற்றிய விளக்கம்
கடவுளுக்கு உருவமும் உண்டு உருவமும் இல்லை என்ற இரண்டு வடிவங்களில் இறைவனை வழிபடலாம்/ கும்பிடலாம் என்ற கருத்தினை சிவலிங்கம் விளக்குகிறது. லிங்கம் என்பது உருவமற்ற வழிபாட்டைக் குறிப்பதாகும். சில இடங்களில் அந்த லிங்கத்துக்குள்ளேயே ஒரு உருவத்தையும் அதாவது சிவபெருமானின் வடிவத்தைக் காண முடியும்; அதை லிங்கோதப்பவர் என்பார்கள்; இது அந்த தத்துவத்தை சரியாக எடுத்துக் காட்டுகிறது அதாவது உருவம் உண்டு உருவமும் இல்லை; அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு ஆண்டவனை வழிபடலாம் என்பதைக் காட்டுகிறது .
இந்த சிவலிங்கத்தையும் பல வகையாக வடிவமைக்கிறார்கள் ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்களை செதுக்கி அதை சகஸ்ர லிங்கம் என்பார்கள்இது; சிறப்பாக வழிபடப்படுகிறது.
***
லிங்கத்தின் வகைகள்
சஹஸ்ரலிங்கத்தை எப்படி உருவாக்குகிறார்கள் என்று சில்ப சாஸ்திர நூல்களிலிருந்து அறியலாம்; ஒரே கல்லில் 25 சதுரப் பகுதிகளைப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு சதுரப்பகுதிலும் 40 லிங்கங்களை செதுக்குகிறார்கள் . இது ஆயிரம்/ சஹஸ்ர லிங்கம்!
நர்மதா நதி நீர் உருட்டிக்கொண்டு வருவது பாணலிங்கம் ;
இயற்கையில் பூமிக்குள்ளிலிருந்து எழும்புவது ஸ்வயம்பு லிங்கம் ;
இமய மலைச் சிகரமே பனிக்கட்டி மூடி லிங்கம் போல காட்சிதருவது கயிலாயம்;
இயற்கையாக குகைக்குள் ஐஸ் கட்டியால் உருவாவது காஸ்மீரில் உள்ள அமர்நாத் ஐஸ் லிங்கம்;
ஆதி சங்கரர் நதியிலுருந்து எடுத்தது ஸ்படிக லிங்கம் .
சிவன் ஆவுடையார்
பஞ்சமுக சிவன், திருவானைக்கா
London Swaminathan in Chengal, Tiruvananthapuram, Kerala
***
My Old Article
QUIZ சிவலிங்கம் பத்து QUIZ (Post No.12,922)
1.இந்தியாவில் ஐஸ் கட்டி மூலம் ஆண்டுதோறும் தோன்றும் பனிக்கட்டி லிங்கம் எங்கே இருக்கிறது ?
XXXX
2.நெய் அபிஷேகம் செய்து செய்து முழுக்க, முழுக்க நெய் மலையாகி விட்ட நெய் லிங்கம் எங்கே இருக்கிறது ?
xxxx
3.ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஆவணி மாதத்தில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெறும் கோவில் எங் இருக்கிறது ?
xxxx
4.உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் எங்கே இருக்கிறது ?
xxxx
5.கேரளத்தில் பெரிய சிவலிங்கம் உள்ள இடம் எது ? லிங்கத்தின் உயரம் என்ன ?
xxxx
6.தலையில் துளை உடைய லிங்த்தை எங்கே காணலாம் ?
xxxx
7.திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எத்தனை லிங்கங்கள் உள்ளன? அவை யாவை ?
xxxx
8. நீரூற்று அல்லது தண்ணீர் இடையே உள்ள சிவலிங்கங்களை எங்கே தரிசனம் செய்யலாம் ?
xxxx
9 . தஞ்சசைப் பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு பெரியது?
xxx
10.சிவலிங்கத்தின் பொருள் என்ன ?
xxx
விடைகள்
1.காஷ்மீரில் அமர்நாத் குகையில் வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் ஐஸ் லிங்கம் உண்டாகி பின்னர் மறைந்துவிடும்.
XXXX
2.திருஸூர் வடக்குநாதன் சிவன் கோவிலில் நெய் லிங்கம் இருக்கிறது
xxxx
3.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண காலத்தில் ஒரு முறையும், தட்சிணாயன காலத்தில் ஒரு முறையும் தொடர்ந்து 5 நாட்கள் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழும்.
xxxx
4.அஸ்ஸாம் மாநிலத்தில் நவகாவ்ன் என்னும் இடத்தில் எழுப்பப்பட்ட சிவலிங்கத்தின் உயரம் 126 அடி. இதுதான் மிக உயரமான சிவலிங்கம் .
xxxx
5. திருவனந்தபுரத்துக்கு அருகில் செங்கல் என்னுமிடத்திலுள்ள சிவன்-பார்வதி கோவிலில் 111. 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் கான்க்ரீட்டினால் அமைக்கப்பட்டுள்ளது .
xxxx
6.பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதன் அடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம். நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்றும் சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது.
xxxx
7.எட்டு லிங்கங்கள் இருப்பதால் இதை அஷ்ட லிங்கம் என்பர் . அவை
இந்திர லிங்கம் (கிழக்கு), அக்னி லிங்கம் ( தென்கிழக்கு),
எம லிங்கம் (தெற்கு), நிருதி லிங்கம் (தென் மேற்கு), வருண லிங்கம் (மேற்கு) வாயு லிங்கம் (வட மேற்கு ), குபேர லிங்கம் (வடக்கு), ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு)
xxxx
8. திருச்சி அருகிலுள்ள திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில், சீர்காழி திருக்காளமுடையார் கோவில், திருவேடகம் ஆலயம் ஆகியவற்றில் நீர் சுரக்கும் லிங்க சந்நிதிகளைக் காணலாம்.
xxxx
9.சிவலிங்கத்தின் உயரம் 12 அடிகள் ; பீடத்தின் உயரம் 18 அடிகள். மொத்த உயரம் 30 அடிகள் .
xxxx

சஹஸ்ரலிங்கம்



Huge Lingas in Karnataka, Jharkhand, Chattisgarh
10. இறைவனை உருவமற்றவராகவும் வழிபடலாம் என்பதை சிவலிங்கம் காட்டுகிறது. இறைவனுக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை என்பதையும் லிங்க உருவம் காட்டுகிறது . இயற்கையில் ஆறுகளில் கிடைத்த வட்ட வடிவான , வழ வழப்பான கற்களை பாண (சுயம்பு) லிங்கம் என்று வழிபடுவது எளிதாக இருந்தது . இதே போல லிங்க வடிவிலுள்ள கயிலாயம், சிவலிங்க மலை, லிங்க வடிவிலான பாறைகளை வணங்குவதும் இறைவன் ‘அடி, முடி இல்லாதவர், ஆதி அந்தம் அற்றவர்’ என்பதை காட்டுகிறது.
***
லிங்கத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் பகுதிகள்
லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம் என்றும், நடுப்பகுதி விஷ்ணுபாகம் என்றும், மேல்பகுதி சிவபாகம் என்றும் பெயர் பெறும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைக் குறிக்கும் விதத்தில் உள்ளன.
***
சிவலிங்கம் அமைந்துள்ள மேடைக்கு யோனி அல்லது ஆவுடையார் என்று பெயர். அதில் பாலும் தண்ணீரும் பிற அபிஷேபப் பொருட்களும் வடிந்து செல்லும் வகையில் இடைவெளி இருக்கும் .காரணம்?
சிவ பெருமான் அபிஷேகப்பிரியன்;
விஷ்ணு அலங்காரப் பிரியன் –என்பது சான்றோர் வசனம். ஆகையால் சிவலிங்கத்து மேலே ஓட்டையுள்ள ஒரு தாமிர கலசம் இருக்கும்; அதிலிரிருந்து சொட்டுச் சொட்டாக சிவலிங்கத்தின் மீது 24 மணிநேரமும் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள் .
கர்நாடகத்தில் ஹம்பியிலுள்ள படவி லிங்கம் , திருவானைக்காவிலுள்ள ஜம்புகேஸ்வரம் ஆகியன நீர் சுரக்கும் ஊற்றுகளிலேயுயே அமைந்துள்ளன !
****
சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா அதிசய தொடர்பு
My article posted on Jun 5, 2012
(English version of this article is already posted under “The Mysterious Link between Karanataka “. Related subjects “Cambodia and Indus Goddess: Karnataka-Cambodia Link” and Pandya King Who Ruled Vietnam).
இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.
கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.
கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்– மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.
இயற்கை எழில் சிந்தும் இந்த இடத்தைச் சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்களும் சல சல என்று ஓடும் நதியும் மனதுக்கு இதம் அளிக்கும். ஆற்று நீரோட்டதுக்கு இடையே இருக்கும் பாறைகளில் லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தரும்.
இந்தியாவில் இப்படி ஒரு மகானுக்கு யோசனை வந்து இதை நிறுவியதே ஆச்சரியமான விஷயம். இதையே கம்போடியாவின் காட்டுக்குள் ஓடும் நதியில் யார் செய்தார்கள் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது! கம்போடியாவிலும் இதை சஹஸ்ரலிங்கம் என்ற சம்ஸ்கிருத பெயரிலேயே இன்று வரை அழைக்கின்றனர்.
கம்போடியாவின் உலகப் புகழ் கோவில் அங்கோர்வட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கபல் சியான் என்னும் ஊர் இருக்கிறது.அங்கே ஓடும் ஆற்றுக்கு இடையேயும் சஹஸ்ரலிங்கம் செதுக்கப்பட்டுள்ளன. அங்கே மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் லெட்சுமி, விஷ்ணு, ராமர், அனுமார், சிவன் ஆகிய உருவங்களையும் செதுக்கி இருக்கிறார்கள். இதையும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் காண நிறைய பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சபரிமலை போல காடு மேடுகளக் கடந்து வந்துதான் பார்க்கவேண்டும்.
Kbal Spean in Cambodia
கபால் சியான் என்றால் பாலம் என்று பொருள். இயற்கையாகவே அமைந்த கல் பாலம் வழியாக இந்த சஹஸ்ரலிங்க தலத்தை அடைய வேண்டும். ஆற்றின் இரு பக்கப் பாறைகளிலும் மிருகங்களின் சிற்பங்களையும் காணலாம். இந்த ஆறு குலன் மலையின் தென் மேற்கு சரிவில் இருக்கிறது. அருமையான ஒரு நீர்வீழ்ச்சியும் உண்டு. சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழும் அருவி மனம் கவரும் ஒரு காட்சியாகும். ஒரு காலத்தில் மன்னர்கள் புனித நீராட இங்கே வருவார்களாம்.
சஹஸ்ரலிங்கம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கோவில்களை 11 ஆவது 13 ஆவது நூற்றாண்டுகளில் கம்போடியாவை ஆண்ட இந்து மன்னர்கள் முதலாம் சூர்யவர்மன், இரண்டாம் உதயாதித்யவர்மன் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிவலிங்கம் ஆக்க சக்தியின் வடிவம் என்றும் ஆற்றுப் படுகைகளில் சிவலிங்கங்களை நிறுவினால் தானிய விளச்சல் அதிகரிக்கும் என்றும் கம்போடீய மக்கள் நம்புகின்றனர். கம்போடிய நெல் வயல்களைச் செழிக்கச் செய்வதோடு மக்களை புனிதபடுத்தும் என்பது அவர்கள் நம்பிக்கை.
கம்போடியாவில் நீண்ட காலம் நடந்த யுத்தத்தினால் ஏராளமான இந்துச் சின்னங்கள் சின்னா பின்னமாயின. ஆனால் காட்டுக்குள் இருக்கும் சஹஸ்ரலிங்கம் பாதிக்கப்படவில்லை. கம்போடிய சஹஸ்ரலிங்கத்தைக் காண பண்டேய்ஸ்ரீ என்னும் இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் போகவேண்டும். மலை அடிவாரத்திலிருந்து கரடு முரடான பாதைகள் வழியாக 45 நிமிடம் மேலே ஏறிச் சென்றால் சஹஸ்ரல்ங்கங்களைக் கண்டு களிக்கலாம். மஹாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. அவருடைய நாபியிலிருந்து எழும் தாமரையில் பிரம்மா காட்சி தருகிறார்.
கர்நாடகத்துக்கோ கம்போடியாவுக்கோ போக முடியாதவர்கள் யூ ட்யூபில் இவைகளக் காணலாம்.கூகுல் செய்தால் போதும் .எனது ஆங்கிலக் கட்டுரையில் இடங்களின் பெயர்கள் இருக்கின்றன.
வட குஜராத்திலும் ஒரு சஹ்ஸ்ரலிங்கம்
வட குஜராத்தில் பதான் நகருக்குப் பக்கத்தில் சஹஸ்ரலிங்க குளம் இருக்கிறது. இதை கி.பி.1084ல் சித்தராஜ் ஜெய்சிங் என்ற மன்னன் கட்டினான். ஆனால் இப்போது 48 தூண்களுடன் கூடிய கோவில் மட்டுமே இருக்கிறது. அதில் பல குட்டி லிங்கங்கள் இருக்கின்றன. முஸ்லீம் படை எடுப்புகளில் பெரும் பகுதிகள் அழிந்துவிட்டன.
இவை தவிர நாடு முழுதும் ஒரே கல்லில் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப் பட்ட சஹஸ்ரலிங்கம் சிலைகளும் உண்டு. ஒரிஸ்ஸா மாநில புவனேஸ்வரில் பரசுராமேஸ்வரர் கோவிலில் இருக்கும் சஹஸ்ரலிங்கம்தான் மிகப் பெரியது, அழகானது. இதையும் பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர் என்று கூகுள் செய்தால் கம்ப்யூட்டர் திரைகளிலேயே காணலாம்.
ஹம்பி நகரில் துங்கபத்திரா நதிக்கரையில் 108 லிங்கங்கள் இருக்கின்றன.
ஆயிரம் ஏன்?
யஜூர்வேதத்தில் வரும் புருஷசூக்தத்தில் இறைவனை ஆயிரம் கண்கள், ஆயிரம் தலைகள் நிறைந்தவன் என்று போற்றுகின்றனர். ரிக் வேதத்தில் ஆயிரம்கால் மண்டபம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்களில் எல்லாம் ஆயிரம் கால் மண்டபங்கள் உண்டு. இறைவன் எங்கும் நிறந்தவன் , கணக்கில் அடங்காதவன் என்பதற்காக இந்துக்கள் சஹஸ்ரநாமம், சஹஸ்ரலிங்கம், சஹஸ்ர கால் மண்டபம் என்று போற்றுவது மரபு.
************

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் பற்றிய ஸ்லோகம்
சௌராஷ்ட்ரே ஸோமனாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்;
உஜ்ஜயின்யாம் மஹாகாளம் ஒங்காரமமலேச்வரம்;
பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீம சங்கரம்
ஸேது பந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே ;
வாரணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே ;
ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே .
ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி ஸாயம் ப்ராத: படேந் நர:
ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .
கயிலாயம்
ஸோமநாதமும், ஸ்ரீ சைலமும், உஜ்ஜைனி மஹாகாளமும்,ஒங்காரேச்வரமும்,பரலி வைத்யநாதமும், பீமசங்கரமும், ராமேச்வரமும்,, நாகேசமும்,காசி விச்வேசமும், த்ரயம்பகமும், கேதாரமும்,குஸ்மேசமும் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
இந்த 12 தலங்களை காலையிலும் மாலையிலும் நினைத்தாலே ஏழு ஜென்மங்களில் செய்த பாபங்களும் விலகிவிடும்; அழிந்துபோகும் என்று புராதன ஸ்லோகம் சொல்லுகிறது.
12 ஜோதிர் லிங்க தலங்களில் ஐந்து, மகாராஷ்டிரத்தில் இடம்பெற்றுள்ளன. இன்று பரலி என்னும் இடத்திலுள்ள வஜ்ஜிநாத் என்னும் வைத்யநாதரை தரிசிப்போம் .
***
பரலி வைத்தியநாதர் கோவில் ज्योतिर्लिंग परळी वैद्यनाथ
மஹாராஷ்டிர மாநிலத்தில் பீட் BEED என்னும் நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெங்களூர், ஹைதராபாத் மும்பை ஆகிய நகரங்களிலிருந்து ரயிலிலும் செல்லலாம்.
இந்தக் கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இதுபற்றி பல கதைகள் இருக்கின்றன. சத்தியவான் – சாவித்திரி கதையை அறியாத இந்துக்கள் இல்லை. எமனிடமிருந்து சத்தியவானின் உயிரை வாதாடி வாங்கி வந்த சாவித்ரியின் தந்தை அஸ்வபதி ஆண்ட மாத்ரா Madra Desa தேசம் இது. ஆகையால் இங்கேதான் அந்த சம்பவம் நடந்ததாக ஐதீகம் (செவிவழி வரலாறு).
இன்னொரு கதையும் உண்டு. சிவபெருமானை அதிகம் துதிபாடிய ராவணனுக்கு சிவனே ஒரு லிங்கத்தைக் கொடுத்து , இலங்கையில் கொண்டுபோய் கோவில் கட்டு; ஆனால் வழியில் எங்கேயாவது வைத்தால் அது அங்கேயே ஸ்தாபிக்கப்பட்டுவிடும் என்று சொன்னார் . ராவணன் அதை வாங்கிக்கொண்டு வருகையில் கை, கால் கழுவுவதற்காக ஒரு பையனிடம் கொடுத்துவிட்டுச் செல்ல, அதன் எடை கூடிக்கொண்டே வந்ததாம். கனத்தைத் தாங்க முடியாதபடி அந்தப் பையன் அந்த லிங்கத்தை கீழே வைக்க அது பரலி க்ஷேத்திரமாகப் பரிணமித்தது.
கடைசி கதை என்னவென்றால், இங்குள்ள விஷ்ணுதான் தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க உதவினார் ஆகையால் இதை வஜ்ஜி நாத (அமிர்த) என்று மராத்தியில் அழைக்கின்றனர் என்பதாகும் .
இந்தக் கோவில் மிகவும் சிறியது. அரை மணி நேரத்துக்குள் கோவிலிருந்து வெளியே வந்துவிடலாம். சிறப்பு என்னவென்றால் ஒரு பெரிய தேக்கு மர மண்டபம் தூண்கள் இல்லாமலே கட்டப்பட்டிருப்பதாகும்.
*****
அஸ்ஸாமில் மிக உயரமான லிங்கம்
அஸ்ஸாமில் மிகப்பெரிய சிவலிங்கக் கோவில்
மோரிஸ் தீவில் எப்படி பெருமாளையே கோவில் கோபுரம் போல முன்னனியில் வைத்தார்களோ அதே போல இந்த 2021-ம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் சிவலிங்க உருவத்தையே கோபுரம்போல வடிவமைத்து ஒரு கோவிலை எழுப்பியுள்ளனர். இந்த சிவலிங்க கோபுர உயரம் 126 அடி.
நவகான் அல்லது பெர்பெரி என்னும் இடத்திலுள்ள இந்த ஆலயத்தின் பெயர் மகா மிருத்யுஞ்சய ஆலயம் ; அதாவது மரணத்தை வெல்ல வழிகாட்டும் சிவ பெருமானின் ஆலயம்.
250 தமிழ்நாட்டு புரோகிதர்கள், அர்ச்சகர்கள் வந்து இந்தக் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகளை நடத்தினர். நாட்டின் உட்துறை அமைச்சர் அமித் ஷா இந்தக் கோவில் பூஜைகளில் கலந்து கொண்டார். 2021 பிப்ரவரி 26ம் தேதிமுதல் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது வடக்கில் இமய மலையில் வாசம் செய்யும் கயிலாய மலைக்குப் போட்டியாக இன்னும் ஒரு சிவன் வந்து விட்டார். இதற்கு வித்திட்டவர் ஆசார்ய பிருகு கிரி மஹராஜ்.
சிவலிங்க வடிவிலான கோபுர உயரம் – 126 அடி சுற்றளவு –56 அடி
2003ம் ஆண்டில் கட்டிடவேலை துவங்கியது. 2021ல் கோவில் உருவானது
ஆதிகாலத்தில் சுக்ராச்சார்யார் தவம் செய்த இடம் இது.
5000 பேர் இடம்பெறும் பெரிய பரப்பு கொண்டது இந்தக் கோவில்.
Maha Mrityunjay Temple in Puranigudan, Nagaon,ASSAM
****
சிவலிங்கம் , தத்துவம், ஸ்வயம்பு,
ஸ்வயம்பூ லிங்கங்கள் தோன்றுவது உண்மைதான் !
இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்.
இது உண்மையா? பூமியிலிருந்து தானாக லிங்கங்கள் தோன்றுமா? இதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறதா? என்று கேட்டால் விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது என்றே சொல்லுவேன். இதற்கு லண்டன் டைம்ஸ் நாளேட்டில் நீண்டகாலத்துக்கு முன் வந்த ஒரு ஆசிரியருக்குக் கடிதமே சான்று (இந்த பேப்பர் கட்டிங் என் அலமாரியில் இத்தனை நாளும் தூங்கிக் கொண்டிருந்தது.)
ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்.
சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் கடவுளைக் பார்ப்பார்கள். உண்ணும் உணவு, பெரியோர்கள் காலில் அணியும் செருப்பு (பாதுகை), அவர்களின் பாதச் சுவடுகள், இசை, நாட்டியம், வீட்டுக்கு முன் போடும் கோலங்கள், பறவைகள், மிருகங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் இந்துக்களுக்கு பெரிய கற்களும் சிறிய கற்களும் தெய்வம்தான்!
இமயத்திலுள்ள புனித கயிலாய மலை, திருவண்ணாமலை ஆகியன லிங்க வடிவத்திலுள்ள புனித அமைப்புகள். காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கம் ஒரு புனிதத்தலம் ஆகும். இவைகளுக்கு விஞ்ஞான விளக்கம் உண்டு. மலை இடுக்கு வழியாக சொட்டுச் சொட்டாக விழும் நீர் லிங்கமாக உருவாகிறது. இது மிகப் பெரிய இயற்கை அதிசயம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டுதோறும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்க வடிவத்தில் தோன்றுவதும் அற்புதமே.
ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!
பஞ்சாயதன பூஜை
காஞ்சி மகா சுவாமிகள் அவரது சொற்பொழிவு ஒன்றில் பஞ்சாயதன பூஜை பற்றி விளக்கி இருக்கிறார். சில இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விஷேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கற்களை சாலக்ராமம் என்றும் விஷ்ணுவின் சக்கரம் தாங்கிய அம்சம் என்றும் சொல்லுவர். தஞ்சாவூர் அருகில் வல்லத்தில் கிடைக்கும் சூரியாகாந்தக் கற்களை சூரியன் வடிவமாகக் கருதி பூஜை செய்வர். இதே போல பீஹாரில் சோனபத்ராவில் கிடைக்கும் சிவப்பு நிறக் கற்களை விநாயகராகவும் நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும், ஆந்திரத்தில் சுவர்ணமுகி நதியில் கிடைக்கும் கற்களை அம்பாளாகவும் வைத்து பூஜை செய்வார்கள். ஐந்து கற்களை வைத்து செய்யப்படும் இந்த பூஜை பஞ்சாயதன பூஜை ஆகும்.
இதில் சாலக்ராமம் எனப்படுபவை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூச்சிகளின் படிம அச்சு என்று உயிரியல் படித்தோர் கூறுவர். இந்துக்களுக்கு இதில் எல்லாம் வியப்பு ஒன்றும் இல்லை. வெள்ளை உவர் மண் பூசி வந்த வண்ணானைக் கூட விபூதி பூசிய சிவனடியார் என்று எண்ணி பூசித்தவரை நாம் 63 நாயன்மர்களில் ஒருவராக வைத்து குரு பூஜை செய்யவில்லையா? மயிலுக்குப் போர்வையும் முல்லைக்குத் தேரும் ஈந்த பாரியையும் நாம் கடை எழு வள்ளல் என்று புகழ்வில்லையா? பாதி ராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கையில் ராமபிரானுக்கு மேலும் படைகள் தேவை என்று எண்ணி படை அனுப்ப உத்தரவிட்ட குலசேகர ஆழ்வாரை நாம் பூஜிக்கவில்லையா?
இறைவன் எங்கும் இருப்பான் என்பதே நம் கொள்கை.
—சுபம்—
நெய் லிங்கம் உள்ள அதிசய திரிசூர் சிவன் கோவில்
Post No. 12,757
Date– – – 24 November , 2023
திருச்சூர் என்ற பெயரை கேரள அரசு த்ரிசூர் என்று மாற்றியுள்ளது; இங்குள்ள வடக்குநாதன் சிவன் கோவிலும் வருடம்தோறும் நடக்கும் பூரம் விழாவும் பாரதம் முழுதும் பிரசித்தமானவை. கேரள கோவில் விழாக்களில் மிகவும் பிரசித்தமானது த்ரிசூர் கோவில் விழாதான்
திரு — சிவப் — பேரூர் என்பது சுருங்கி த்ரிசூர் ஆனதாக ஒரு கருத்து உளது
ஒன்பது ஏக்கர் பரப்பில் 4 பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில் தேக்கு மரக் காட்டுக்கு இடையே நின்றது இப்பொழுது வெற்று மைதானத்துக்கு பெயர் மட்டும் தேக்கின்காடு!
கோவிலுக்குள் வடக்குநாதன் என்ற பெயரில் சிவ பெருமானும், சங்கர நாராயணன், ராமன் ஆகியோரும் மூன்று முக்க்கிய சந்நிதிகளில் இருக்கின்றனர் கோவிலின் வடக்குப் பக்கத்தில் குடிகொண்டதால் சிவனின் பெயர் வடக்கு நாதன்; அவர் மேற்கு திசையை நோக்கி இருக்கிறார். அதே சந்நிதியில் சிவனும் பார்வதியும் கிழக்கு நோக்கி இருக்கும் மூர்த்திகளும் உண்டு . தென் பகுதியில் ராமர் கோவில்; நடுவில் சங்கர நாராயணன் கோவில்.
பரசுராமருடன் தொடர்புடைய கோவில். சிவனுக்குப் பின்பக்கமுள்ள பார்வதியை பரசுராமர் நிறுவியதாக ஐதீகம் (வரலாறு). மரத்தினால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.
மேலும் கேரளத்தில் எல்லா வைணவ கோவில்களிலும் உள்ளது போல விஷ்ணு உருவம்.
சிறப்பு அம்சங்கள்
மஹாபாரதக் காட்சிகளை சித்தரிக்கும் 300 ஆண்டுப் பழமையான ஓவியங்கள் .
சிவன் ஒரு பெரிய நெய் மலை ! காஷ்மீர் அமர்நாத் குகையில் பனிக்கட்டி சிவன்; இங்கு நெய் — டன் கணக்கில் — உறைந்து உருவான சிவ லிங்கம் !
எப்போதும் பசு நெய்யினால் அபிஷேகம் செய்து சிவ லிங்கத்தை மலை போன்ற நெய் மறைத்துவிட்டது. சிவலிங்கத்தின் மீது பத்து அடி (Ten Feet) சுற்றளவுக்கு நெய் உறைந்து நிற்பதால் அர்ச்சகர் சுற்றி வர கர்ப்பக்கிரகத்தில் இடம் கிடையாது.
ஆயுர் வேத சிவன்
ஆயுர்வேதத்தில் நெய் ஒரு முக்கிய மருந்துச் சரக்கு; ஆகையால் இங்குள்ள ஆயிரம் ஆண்டு பழமையான நெய்யினை வாங்குவதற்காக ஆயுர்வேத மருத்துவர்களும் வருகிறார்கள்;
யஜுர் வேதப் பகுதியான ருத்ரம்- சமகம் மந்திரத்தில் சிவ பெருமானை MR DOCTOR திருவாளர் டாக்டர் (பிஷக்), MR MEDICINE திருவாளர் மருந்து (பேஷஜம்) என்று ஒரு மந்திரம் வருகிறது. இங்கு அது உண்மையாகிறது.
சிவன் நெய்ப் பிரியர் ; அவருக்கு நெய் அபிஷேகம்; ஆனால் ராமருக்கு எண்ணெய் அபிஷேகம்; சங்கர நாராயணருக்கு பஞ் சகவ்ய அபிஷேகம் !
கோவிலில் கணபதி, காவல் தெய்வம் வேட்டைக்கொருமகன் சந்நிதிகளும் இருக்கின்றன . வலம் வரும் பிரதட்சிணப் பாதையில் பரிவார தேவதைகள் இடம்பெறுகின்றன . பரசுராமர் வசிப்பதாக கருதப்படும் தரா (தரை– மேடை)வடகிழக்கு மூலையில் இருக்கிறது. கேரளத்தில் வினோதமான ஒரு விஷயம் என்னவென்றால் பரசுராமர் சம்பந்தப்படாத கோவிலே இராது அவர்தான் பல சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார். அவருக்கோ திருவல்லம் என்னும் ஓரிடத்தைத் தவிர வேறு எங்கும் பரசுராமர் கோவில் இல்லை!!!
கோவில் சுவரில் ஒரு முக்கோண துவாரம் இருக்கிறது; இதன் மூலம் மூன்று முக்கிய சந்நிதிகளையும் காணலாம்.
ஆதி சங்கரர் தொடர்பு
இந்தியாவே வியக்கும் வண்ணம் தோன்றிய மாபெரும் தத்துவ வித்தகர் ஆதிசங்கரர் பிறப்பதற்கு வடக்குநாதனே காரணம். அவருடைய பெற்றோர்கள் மகப்பேறு இன்றி தவித்து நல்ல புத்திரன் பிறக்க நோன்பு இருந்தது வடக்குநாதன் கோவிலே; இதனால் சங்கரர் காலத்துக்கும் முன்னரே கோவில் இருந்ததை நாம் அறிகிறோம்.
மேற்குக் கோபுரத்துக்கு வெளிய அரசமரமும் மேடையும் இருக்கிறது. அங்குதான் நம்பூதிரி பிராமணர்களிடம் பரசுராமர் சிலையை ஒப்படைத்தார்
கூத்தம்பலம்
மேலைக் கோபுரம் வழியாக நாம் நுழைந்தால் இடது புறம் அழகிய கூத்து அம்பலத்தைக் காணலாம்; கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடப்பதற்கு எல்லா கோவில்களிலும் கூத்தம்பலம் இருந்தாலும் திரிசூர் போல கலை வேலைப்பாடு உடையவை வெகு சிலவே.
கூத்தம்பலம் கட்டுமானம் பற்றிப் ப ல கதைகளும் உண்டு; வெள்ள நாழி நம்பூதிரி என்பவர் கட்டிடக்க கலை நிபுணர் என்றும் அவர் வரைபடம் இல்லாமலேயே சிற்பிகளை வைத்து கட்டிடத்தைக் கட்டி முடித்தார் என்றும் சொல்லுவார்கள். அவரையே மதில் சுவர் கட்டும்படி மன்னர் சொன்னபோது அவர் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் செ ங்கற்களைக் கேட்டாராம் . அதே அளவு கற்களைக் கொண்டு வந்து மதில் சுவர் எழுப்பும்படி மன்னர் சொன்னாராம் அவரைச் சோதிப்பதற்காக இரண்டு செங்கற்களை மட்டும் மன்னர் மறைத்து வைத்தாராம்; ம தில் சுவற்றில் இரண்டு செங்கற்களான இடம் அப்படியே காலியாக இருந்தது; மன்னர் , ஒன்றும் தெரியாதவர் போல நடித்து, என்ன அறிஞரே! இரண்டு ஓட்டை தெரிகிறதே!! என்றாராம்; அவர் உடனே சட்டென்று யாரோ இரண்டு செங்கற்களை ஒளித்து வைத்து இருக்க வேண்டும் அல்லது இரண்டு செங்கற்களினை குறைத்து கொண்டு வந்திருக்க வேண்டும் என்றாராம்; உடனே மன்னர் அவரது திறமையை மெச்சி, அவருக்குத் தங்கக் காப்பு செய்து அணிவித்தாராம் .
வெள்ளை நந்தி கதை
ஒரு காலத்தில் ஒரு இளம் துறவி கோவிலுக்கு வந்து தினமும் தியானம் செய்தாராம்; அவரது தேஜஸில் மயங்கிய பெண்கள் குழந்தை பெற்றபோது அக்குழந்தைகள் அந்த துறவியின் முக ஜாடையில் இருந்தவுடன் பலருக்கும் சந்தேகம் துளிர்விட்டது; வதந்தியும் (Gossip rounds) பரவியது. அப்பாவியான துறவி தமிழ் நாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்து ஒரு அழகிய நந்தியைச் செய்தாராம்; அதைச் சுற்றி தினமும் பசுக்கள் நின்றனவாம்; அவை கன்று ஈன்ற போது அனைத்தும் வெள்ளை நந்தி போலவே இருந்தவுடன் கிசுகிசுப் பேச்சுக்கள் நின்றனவாம்.
எவ்வளவு சுவையான கதைகள் ; ஒரு வேளை கோவிலின் சிறப்பினை நின்று ஆற, அமர இருந்து ரசிப்பதற்காக இப்படிக் கதைகளை எட்டுக்கட்டினாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
உலகப் பிரசித்திபெற்ற பூரம் விழா !
கோவிலில் நடக்கும் ஒரே உற்சவம் சிவராத்திரி உற்சவம்தான் ; அப்போதும் சுவாமி புறப்பட்டு கிடையாது .
மேடம்/ மேஷம் (ஏப்ரல்-மே ) மாத பூரம் விழா நடக்கும். அதை வடக்குநாதன் ஆசீர்வதிப்பார்; கோவில் மைதானத்தில் நடந்தாலும் இது கோவில் விழா அல்ல. எல்லா கோவில் மூர்த்திகளும் சிவ பெருமானை தரிசிக்க வருகை தருவது, பிரமாண்டமான யானைகள் அணிவகுப்பு, மிகப்பெரிய வாண வேடிக்கை , மாபெரும் விருந்து ஆகியன சிறப்பு அம்சங்கள். ஒருகாலத்தில் அருகாமையில் நடந்த ஆறாட்டு விழா மழை காரணமாக தடைபட்டவுடன் மன்னரிடம் மக்கள் முறை செய்தனர். அவர் அந்த வட்டாரத்திலுள்ள கோவில்களை இரண்டாகப் பிரித்து அருகிலுள்ள கோவில் தெய்வங்களுடன் பவனி வர ஏற்பாடு செய்தார் .
நூற்றுக்கணக்கான கலைஞர்கள் விண்ணதிர வாத்ய கோஷங்களை முழக்குவர் . பத்து கோவில் தெய்வங்கள் வருகை தந்து சிறப்பிக்கின்றன 200 ஆண்டுகளுக்கு முன்னர் கொச்சி மகாராஜா சாக்தன் தம்புரான் செய்த ஏற்பாடு இன்றுவரை பின்பற்றப்படுகிறது . ஆண்டுதோறும் புதிய புதிய வண்ண வண்ண குடைகள் தயாரிக்கப்படும். நெய் திலக்கா விலம்மா என்ற தெய்வத்தை ஏந்திய யானை, கோவிலின் கதவைத் திறக்கும் சம்பிரதாயம் இருக்கிறது. காலண்டரில்/ பஞ்சாங்கத்தில் பூர நட்சத்திரம் வருவதற்கு 7 நாட்கள் முன்னதாகவே விழா துவங்கி விடும்; பூரம் நட்சத்திரத்தன்று பெரிய விழா; லட்சக் கணக்கான மக்கள் இதில் பங்கேற்கின்றனர் . கேரளத்தில் இந்து விரோத அரசுகள் ஆட்சி புரியத் துவங்கியவுடன் அரசு உதவி குறைந்ததோடு கோவில் நிலங்களும் அபகரிக்கப்பட்டன ; ஆயினும் பக்தர்கள் ஆதரவில் இறைவன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் .
இது ஆதி சங்கரர் காலத்துக்கும் முன்னாலிருந்தே பக்கதர்களை ஆகர்ஷித்து வருகிறது
***


சஹஸ்ரலிங்கம், கம்போடியா , கர்நாடகம்
ஆற்று மணலில் லிங்கம்: பழுர் சிவன் கோவில்-
மூவாட்டுப்புழா பழுர் பெருந்த்ரிக் கோவில்
எர்ணாகுளம் வட்டாரத்தில் பிறவம் அருகில் மூவாட்டுப்புழா நதிக்கரையில் அமைந்த இந்த சிவன் கோவில் மிகவும் புகழ் பெற்றது எர்ணாகுளத்திலிருந்து 35 கி.மீ..
சிறப்பு அம்சம்
இங்குள்ள சிவ லிங்கம் ஆற்று மணலால் செய்யப்பட்டது. நம்பூதிரி பிராமண சிறுவர்கள் விளையாட்டாக செய்த சிவலிங்கம் பெரிய கோவில் உருவாகக் காரணம் ஆகியது .அந்த சிவலிங்கம் மணல் லிங்கம் போல உதிராமல் உறுதியாக நின்றதால் அதை பக்தர்கள் வழிபடத்துவங்கினர்.
இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயம் ஒரு சிறகு கொண்ட மரத்திலான கருடன் உருவம் ஆகும். இதை உருவாக்கிய சிற்பி, இரண்டாவது சிறகு செதுக்கப்பட்டவுடன் அது பறக்க எத்தனித்தது. உடனே அந்த சிற்பியே அதன் இரண்டாவது இறக்கையை வெட்டினான் என்பது இதன் பின்னாலுள்ள கதை
——xxxxxxxxx———-
Tags-சிவன் ஆவுடையார், பஞ்சமுக சிவன், சிவலிங்கம் , தத்துவம், ஸ்வயம்பு, பாணலிங்கம் , தஞ்சாவூர், சஹஸ்ரலிங்கம், கம்போடியா, Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம் -Part 26