
Post No. 15,486
Date uploaded in Kumbakonam, India – 11 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part41
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 41
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்க அச்சத்துக்குக் … இரை
கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு,
குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என மாறா குட்சிக்குப்
பக்ஷிக்கைக்குக் கக்ஷத்தில் பட்சத்து அத்தக் கொட்டி … குக்குக்
குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி,
சுட்டிக் கொக்ரிக் குக்குட தாரி … குறிப்புடன் கொக்கரிக்கின்ற
சேவலைக் கொடியாகக் கொண்டவனே,
****
தர தர தர தர தர திருப்புகழ்
சடிலதர விடதர … ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால
விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும்,
பணிதர தரபரசுதர … பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும்,
மேன்மையான மழுவைத் தாங்கியவரும்,
சசிதர சுசிதர … சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே
உருவாக நிற்பவரும்,
இத தமருக மிருக தர … இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும்,
மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும்,
வனிதர சிரதர … பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும்,
பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும்,
பாரத் தரணிதர … சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும்,
தநுதர … மேருமலையையே வில்லாகத் தரித்தவரும்,
வெகு முககுல தடினி தர … ஆயிரம் முகங்களை உடைய சிறந்த
கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும்
சிவ சுத … ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே,
குண தர … அரும் குணங்களை உடையவனே,
பணி சயில … நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி
இருப்பவனே,
விதரண … தயாள மூர்த்தியே,
தருபுர சசிதரு … கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி
மகள்
மயில்வாழ்வே … மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக
இருப்பவனே,
***
கொல்லிப் பாவை கதை
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண
வல்லி மணவாளா … முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும்,
அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே,
பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ பட்ட
துன்னு கொல்லி மலை நாடா … வழியில் அமைக்கப்பட்டிருந்த
மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே,
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை
வல்ல பெருமாளே. … பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி
இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச்செலுத்த வல்ல பெருமாளே.
** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம் உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது.
*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.
***
பெண்களின் தழை உடை
தொய்யுபொருள் ஆறங்கம் எனமேவும் … சோர்வடையச்
செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு
வேதாங்கங்களாகி*1,
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் … பலப்பல
நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம்
ஆகியவற்றில் தங்குவதாய்,
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி … பெருகிவரும் தமிழ்
மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி,
பல்லுயிருமாய் அந்தமில்ல சொருபாநந்த பெளவமுறவே …
பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில் மூழ்கும்படி
நின்ற தருள்வாயே … எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ
அருள்வாயாக.
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ … கல்லும்
உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம்
அடைந்திருந்த பசுக்கள்
அம் புகல் வருகவே நின்று குழலூதுங் கையன் … அழகிய புகும்
இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால்
மிசையேறு உம்பன் நொய்யசடையோன் எந்தை …
(முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக*2 ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான்
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா … கை குவித்துத்
தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே,
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமேசென்று … தினைக்
கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று,
கொள்ளைகொளு மாரன்கையலராலே … உயிரைக் கொள்ளை
கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே,
கொய்துதழையேகொண்டு செல்லுமழவாகந்த … தழைகளைக்
கொய்து சென்ற*3 கட்டழகுக் கந்தனே,
கொல்லிமலை மேனின்ற பெருமாளே. … கொல்லிமலை*4 மீது
நின்றருளும் பெருமாளே.
(*1) ஆறங்கம் – வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை: சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் – இவை முறையே நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.
(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால் அத்தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.
(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர். அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு. அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும். வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.
***
ஞான மலை எங்கே இருக்கிறது ? மேலும் ஒரு புதிர்
திருப்பதியில் முருகன், சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனத்தில் முருகன் என்றெல்லாம் புதிர் போட்ட அருணகிரிநாதர் ஞானமலை குறித்தும் புதிர் போடுகிறார்.
நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள்
பாலா … தலைவரான சிவபெருமானுடைய இடப் பாகத்தில் உறையும் மாது சிவகாமி, பார்வதியாகிய அழகி அருளிய குழந்தையே,
நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞான மலை மேவும்
பெருமாளே. … நாராயண மூர்த்தி ஈன்ற மகளான வள்ளியோடு, ஞான மலையில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.
***
அருணகிரிக்கு முருகன் கொடுத்த உயிர் பிச்சை
தடிநிகர் அயிற்கடாவி … மின்னல் போன்ற ஒளிவிடும்
வேலாயுதத்தை வீசி
அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி
முருகோனே … அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய
ஜோதி முருகனே,
எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத … என்
மனத்தை உருக்கி, யோக அநுபூதியை* அளித்த திருவடிகளை
உடையவனே,
எழுதரிய பச்சை மேனி உமைபாலா … எழுதுதற்கு அரியதான
மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே,
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக … தேவர்கள்
துதிக்க ஞானமலையில்** வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின்
மணவாளனே,
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே. … விளங்குகின்ற
இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே.
* அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது. தம் வாழ்க்கைத் துன்பத்தை நினைத்து உயிர் விடத் துணிந்ததையும், முருகன் அவருக்கு பாத தீக்ஷை தந்து யோக அநுபூதி அருளிய திறனையும் இங்கு விளக்குகின்றார்.
–subham—
Tags- சேவல், அருணகிரி வருணனை, ஞான மலை, தழை உடை, கொல்லிப் பாவை, தர தர திருப்புகழ் , Part 41