சேவல் பற்றி அருணகிரி வருணனை- Part 41! (Post No.15,486)

Written by London Swaminathan

Post No. 15,486

Date uploaded in Kumbakonam, India –  11 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part41

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 41

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்க அச்சத்துக்குக் … இரை

கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு,

குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என மாறா குட்சிக்குப்

பக்ஷிக்கைக்குக் கக்ஷத்தில் பட்சத்து அத்தக் கொட்டி … குக்குக்

குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி,

சுட்டிக் கொக்ரிக் குக்குட தாரி … குறிப்புடன் கொக்கரிக்கின்ற

சேவலைக் கொடியாகக் கொண்டவனே,

****

தர தர தர தர தர  திருப்புகழ்

சடிலதர விடதர … ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால

விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும்,

பணிதர தரபரசுதர … பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும்,

மேன்மையான மழுவைத் தாங்கியவரும்,

சசிதர சுசிதர … சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே

உருவாக நிற்பவரும்,

இத தமருக மிருக தர … இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும்,

மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும்,

வனிதர சிரதர … பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும்,

பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும்,

பாரத் தரணிதர … சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும்,

தநுதர … மேருமலையையே வில்லாகத் தரித்தவரும்,

வெகு முககுல தடினி தர … ஆயிரம் முகங்களை உடைய சிறந்த

கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும்

சிவ சுத … ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே,

குண தர … அரும் குணங்களை உடையவனே,

பணி சயில … நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி

இருப்பவனே,

விதரண … தயாள மூர்த்தியே,

தருபுர சசிதரு … கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி

மகள்

மயில்வாழ்வே … மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக

இருப்பவனே,

***

கொல்லிப் பாவை கதை

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண

வல்லி மணவாளா … முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும்,

அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே,

பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ பட்ட

துன்னு கொல்லி மலை நாடா … வழியில் அமைக்கப்பட்டிருந்த

மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே,

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை

வல்ல பெருமாளே. … பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி

இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச்செலுத்த வல்ல பெருமாளே.

** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம் உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது.

*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.

***

பெண்களின் தழை உடை

தொய்யுபொருள் ஆறங்கம் எனமேவும் … சோர்வடையச்

செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு

வேதாங்கங்களாகி*1,

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் … பலப்பல

நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம்

ஆகியவற்றில் தங்குவதாய்,

பல்குதமிழ் தானொன்றி யிசையாகி … பெருகிவரும் தமிழ்

மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி,

பல்லுயிருமாய் அந்தமில்ல சொருபாநந்த பெளவமுறவே …

பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில் மூழ்கும்படி

நின்ற தருள்வாயே … எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ

அருள்வாயாக.

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ … கல்லும்

உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம்

அடைந்திருந்த பசுக்கள்

அம் புகல் வருகவே நின்று குழலூதுங் கையன் … அழகிய புகும்

இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால்

மிசையேறு உம்பன் நொய்யசடையோன் எந்தை …

(முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக*2 ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான்

கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா … கை குவித்துத்

தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே,

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமேசென்று … தினைக்

கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று,

கொள்ளைகொளு மாரன்கையலராலே … உயிரைக் கொள்ளை

கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே,

கொய்துதழையேகொண்டு செல்லுமழவாகந்த … தழைகளைக்

கொய்து சென்ற*3 கட்டழகுக் கந்தனே,

கொல்லிமலை மேனின்ற பெருமாளே. … கொல்லிமலை*4 மீது

நின்றருளும் பெருமாளே.

(*1) ஆறங்கம் – வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை: சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் – இவை முறையே நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.

(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால் அத்தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.

(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர். அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு. அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும். வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.

***

ஞான மலை எங்கே இருக்கிறது ? மேலும் ஒரு புதிர்

திருப்பதியில் முருகன், சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனத்தில் முருகன் என்றெல்லாம் புதிர் போட்ட அருணகிரிநாதர் ஞானமலை  குறித்தும் புதிர் போடுகிறார்.

நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள்

பாலா … தலைவரான சிவபெருமானுடைய இடப் பாகத்தில் உறையும் மாது சிவகாமி, பார்வதியாகிய அழகி அருளிய குழந்தையே,

நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞான மலை மேவும்

பெருமாளே. … நாராயண மூர்த்தி ஈன்ற மகளான வள்ளியோடு, ஞான மலையில்* வீற்றிருக்கும் பெருமாளே.

* ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.

***

அருணகிரிக்கு முருகன் கொடுத்த உயிர் பிச்சை

தடிநிகர் அயிற்கடாவி … மின்னல் போன்ற ஒளிவிடும்

வேலாயுதத்தை வீசி

அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி

முருகோனே … அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய

ஜோதி முருகனே,

எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத … என்

மனத்தை உருக்கி, யோக அநுபூதியை* அளித்த திருவடிகளை

உடையவனே,

எழுதரிய பச்சை மேனி உமைபாலா … எழுதுதற்கு அரியதான

மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே,

இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக … தேவர்கள்

துதிக்க ஞானமலையில்** வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின்

மணவாளனே,

இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே. … விளங்குகின்ற

இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே.

* அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது. தம் வாழ்க்கைத் துன்பத்தை நினைத்து உயிர் விடத் துணிந்ததையும், முருகன் அவருக்கு பாத தீக்ஷை தந்து யோக அநுபூதி அருளிய திறனையும் இங்கு விளக்குகின்றார்.

–subham—

Tags- சேவல், அருணகிரி வருணனை, ஞான மலை, தழை உடை, கொல்லிப் பாவை, தர தர திருப்புகழ் , Part 41

Leave a comment

Leave a comment