HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 (Post No.15,559)

Picture of Kushana Coin

Written by London Swaminathan

Post No. 15,559

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Words beginning with letter KA continues…………………………….

English version posted yesterday; Tamil version is posted here today.

***

கனிஷ்கர் ( 127–150 CE)

குஷான மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவர் ; மாத்திரை ஆசியாவின் சில பகுதிகளையும் மதுரா வரையுள்ள பெரும்பகுதியை ஆண்டவர் . தலைநகர் புருஷபுரம் ; இதன் தற்போதைய பெயர்  பெஷாவர் (பாகிஸ்தான் நகரம் ).சீன எல்லைப் புறத்தில் வாழ்ந்து வந்த “யூச்சி” என்னும் நாடோடி இனத்தவர் ஆக்ஸஸ் நதி தீரத்தை அடைந்து பின்னர் பாக்டிரியாவில் குடியமர்ந்தனர். யூச்சி இனத்தில் ‘கியூசுவான்ங் ‘ என்ற இனமே குஷான ர் என்று அழைக்கப்பெறுகின்றனர். இவ்வம்சத்தில் குஜீலா காட்பீஸஸ், வீமா காட்பீஸஸ், கனிஷ்கர் போன்ற சிறந்த அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

வீமா காட்பீஸஸ் காசுகளில் முன்புறம் சிவன், திரிசூலம், கோடரி போன்ற சின்னங்கள் இடம்பெறுகின்றன. பின்புறம் அரசரின் பெயர் கிரேக்க மற்றும் கரோஷ்டி எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது.

கனிஷ்கரது காசுகளின் முன்புறம் கனிஷ்கர் இந்திய பாணியில் உடை  அணிந்து, தன் இடக்கையில் ஈட்டியை ஏந்தி நிற்கிறார் . பிற்காலத்தில் வெளியிட்ட காசுகளில்

சூரியன், சந்திரன், வாயு, நெருப்பு போன்ற தெய்வங்களின் பெயர்களை ஈரானிய மொழியில் பொறித்துள்ளார். ஓஷோ என்ற பெயரில் சிவனின் உருவத்தைப் பொறித்தார். சிவனோடு புத்தரின் உருவத்தையும் புத்த அபொறித்தார்.  பெரும்பாலும் இவர்கள் தங்கத்தாலான காசுகளை வெளியிட்டுள்ளனர்.

King Kanishka 

***

கண்வர் /மகரிஷி

காளிதாசனின் உலகப்புகழ்பெற்ற சாகுந்தல நாடகத்தில் வரும் கண்வ மகரிஷியைத் தவிர யஜுர் வேதத்திலும் கண்வர் பெயர் வருகிறது .

கண்வ மகரிஷி பேருரை

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண். பறவைகள் (சகுன) வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலை என்று பெயர். இதோ அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது:

“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-

உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)

இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.

காளிதாசன் உலக மகா கவிஞன் மட்டுமல்ல. பெரிய சைகாலஜிஸ்ட்= உளவியல் நிபுணன். ஒரு பெண்ணின் வாயால் இது எல்லாம் சரி என்று சொன்னால்தான் மற்றொரு பெண் நம்புவாள். இல்லை என்றால் இந்த ஆண்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைத்து விடுவார்கள். அது மட்டுமல்ல. பெண்கள் என்றாலேயே அம்மாவின் கருத்தே முதலில் நிற்கும். அவளுக்கு அதிகாரம் அதிகம். அந்த முறையிலும் மனைவி கருத்தைக் கேட்கிறார் மகரிஷி கண்வர்..

அவர் மேதாதிதி ரிஷியின் மகன் சுக்ல யஜுர்வேதத்தில் கண்வ சம்ஹிதையில் நாற்பது அத்தியாயங்களும் 2,086  மந்திரங்களும் உள்ளன ; இருவரும் வேறு ரிஷிகள் என்றே யூகிக்க வேண்டியுள்ளது.

***

கார்த்திகேயன்


முருகனின் பெயர்களில் ஒன்று. சரவணப் பொய்கையில் தோன்றிய குழந்தையை ஆறு கிருத்திகா பெண்கள் வளர்த்ததால் இந்த நாமம். தாரகாசுரனை வதம் செய்ய எடுத்த அவதாரம் . சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் தோற்றம் இது.

கார்த்திகை  மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இவர்கள் கார்த்திகை நக்ஷத்திரங்களாக வானில் ஜொலிப்பதை இப்போதும் காணலாம். மேலும் கார்த்திகை பெளர்ணமியன்று வீடெங்கும், வீதியெங்கும் விளக்கேற்றி இவர்களையும் முருகனையும் நாம் இன்றும் நினைவு கூறுகிறோம்.

***

கார்த்தவீர்யன் 

புகழ்பெற்ற புராண கால மன்னன் ; யாரேனும் தவறு செய்ய நினைத்தாலே அவர்  முன் இவன் தோன்றுவான் என்பதால் ஆயிரம் கை படைத்தவன் என்று பெயர்; இவன் பெயரும் அர்ஜுனன் .

கார்த்தவீர்யார்ஜுனன், ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியனின் மகன்; , விஷ்ணுவின் அம்சம், தத்தாத்ரேயரின் சீடர்   நர்மதை நதிக்கரையிலுள்ள மகிஷ் மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர், தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கைகள் மற்றும் ஒப்பிட முடியாத வலிமையைப் பெற்றவர். ராவணனைத் தோற்கடித்த்து சிறைப்பிடித்த  பின்னர் அவன் இந்தப் பக்கமே வர மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஓடிவிட்டான்    .

இவனது ஆட்சியில் மக்கள் பாவம் செய்ய பயந்தனர்; தவறு நடந்தால் இவனது கைகள் அதைத் தடுத்து நிறுத்தின. ஒரு சமயம்

வேட்டையாடித் திரும்பும்போது, பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் காமதேனுவை அபகரிக்க முயன்று, இறுதியில் பரசுராமரால் கொ ல்லப்பட்டார்.

***

கபில முனிவர்

இந்து மதத்திலுள்ள ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று ஸாங்க்யம்; கபில முனிவர் சாங்கிய தத்துவத்தை (Sankhya Philosophy) உருவாக்கிய வேதகால மகரிஷி ஆவார். இவர் கர்தம முனிவர் – தேவஹூதி தம்பதியரின் மகன்;பகவத் கீதையில் கிருஷ்ணர் முனிவர்களில் தான்  கபில முனிவராக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

மகாவிஷ்ணு அவதாரம்: இவர் மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மன்னன் சகரனின் 60,000 புதல்வர்கள் கபில முனிவரின் ஆசிரமத்தில் இருந்த யாகக் குதிரையைத் திருடியதாக நினைத்து அவரை அவமதித்ததால், கபிலர் அவர்களைத் தன் தவ வலிமையால் எரித்துச் சாம்பலாக்கினார். அங்கே கங்கை பாய்ந்தது ;இதனால் கடலுக்கு சாகரம் என்று பெயர்

கங்கை பூமிக்கு வருதல்: கபிலரின் சாபத்தால் இறந்த சகர புதல்வர்களுக்கு முக்தி அளிக்கவே பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தார்.

***

சங்கப் புலவர் கபிலர்

சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர் . அவர் ஒரு பிராமணப் புலவர். பெயரும் சம்ஸ்கிருதப் பெயர் ; பிள்ளையாரின் பெயர். சங்க இலக்கியத்தில் 30, 000 வரிகளில்  பிள்ளையார் பெயர் எங்கும் இல்லையே , சிவன் என்ற சொல் எங்கும் இல்லையே என்று வருத்தப் படுவோர்க்கு ஓரளவு ஆறுதல் /ஆதரவு அளிப்பவர் இவர். திருமுருகாற்றுப் படையின் பதிகப்பகுதியில் வரும் பிள்ளையார் குறிப்பை அறிஞர்கள் பிற்காலச் சேர்க்கை என்பதால் பலரும் அதை ஏற்பதில்லை.

பிள்ளையார் மற்றும் புகழ் பெற்ற ரிஷியின் பெயர் உடையவர் கபிலர். அது மட்டுமல்ல பிள்ளையார் ஒருவருக்கு மட்டுமே நாம் எருக்கம் பூ போட்டு வணங்குவோம். வேறு கடவுளர்க்கு அது ஆகாது.

பகவத் கீதையில் 9-26  கிருஷ்ண பரமாத்மா எனக்கு பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை,பூ , பழம் , தண்ணீர் ) எதை அன்புடன் கொடுத்தாலும் அதை ஏற்பேன் என்கிறார். அதை ஒரு பாடலில் எதிரொலித்த கபிலர், வேண்டு மென்றே எருக்கம்பூவைக் கொண்டு சேர்க்கிறார். இதனால் இவர் பெயரும் பிள்ளையார் பெயரே ; அவர் வழிபடுவதும் பிள்ளையாரே என்பது உறுதியாகிறது ; இதோ அந்தப் பாடல்:-

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

 புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை

கடவுள் பேணேம் என்னா ………….

—-புறனானூறு பாடல் 106

பொருள்

“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம்புல்லையும் பூஜையில் போட்டு வாங்கினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”

கபிலர் சம்ஸ்கிருத மன்னன்.

குறிஞ்சிப் பாட்டை படித்த டாக்டர் ஜி.யூ.போப் (Dr G U Pope)   இது காளிதாசன் காவியத்தின் எதிரொலி என்கிறார். எனது ஆராய்ச்சியும்  இதை நிரூபிக்கிறது .

தமிழ் மொழியை மட்டம் தட்டிப் பேசிய பிருஹத் தத்தனை அழைத்துவந்து அவனுக்கு காளிதாசனைப் போல குறிஞ்சிப்பாட்டுப் பாடிக்காட்டி, அதில் 99 மலர்களின் பெயர்களை அடுக்கிப் பாடி, (கின்னஸ்) சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்றவர் . அதுமட்டுமல்லாமல் அவனையும் பாடவைத்து அதை சங்க இலக்கியத்தில் ஒரு பாடலாகச் சேர்த்து வைத்தவர்.

ஐயருக்கு அமோகப் பாராட்டு

பொதுவாகப் புலவர்களிடையே போட்டி , பொறாமை உண்டு. சங்க காலப் புலவர்களினிடையே இது அதிகம் என்பதை திருவிளையாடல் புராணக் கதைகளும் பிற சம்பவங்களும் காட்டுகின்றன. ஆனால் உலக மஹா அதிசயம்!! ஒரு பிராமணப் புலவரை மட்டும் ஆறு பேர் பாராட்டியுள்ளனர். சங்க இலக்கியச் செய்யுள்களில் மட்டும்!

அவரோ மன்னர் அரண்மனைகளுக்குச் சென்று ‘நான் பிராமணன் வந்திருக்கிறேன்’ என்று தன்னை இண்ட்ரொட்யூஸ் INTRODUCE செய்து கொள்கிறார் . ‘அந்தணர்’ என்பவர் யார் என்று சந்தேகப்படும் அறிவிலிகளுக்கு அவர்  சொல்  பதில் தருகிறது.

தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பாடல் —

பறம்பின் கோமான்

நெடுமாப் பாரி மகளிர்;  யானே

தந்தை தோழன் இவர் என் மகளிர்;

அந்தணன்புலவன் கொண்டுவந்தனனே

–புறம் 201

பாடியவர் கபிலர்; பாடப்பட்டோன் -இருங்கோவேள்

பொருள் –

பறம்பு மலைப் பிரதேசத்தை ஆண்ட பாரியின் மகள்கள் இருவரும் இதோ வந்துள்ளனர் நான் ஒரு பிராமணன்; இவர்கள் தந்தை என் தோழன் ; ஆகையால் என் மகள்கள் போன்றவர்கள்”.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி வெறியை உடைத்து க்ஷத்ரிய வேந்தன் பாரியின் மகளிரை  தன்  மகள் என்று அறிவித்த புரட்சிக்கவிஞன் கபிலன் !!

***

 1

“செறுத்த செய்யுள் செந்நாவின்

வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்

இன்றுள்ள ஆயின் நன்றுமன்” – புறம் 53

பாடியவர் பொருந்தில் இளங்  கீரனார்

பாடப் பட்டோன் – மாந்தரஞ் சேரல் இரும்பொறை

பொருள் :–

“பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செம்மையான நாவும் , மிக்க அறிவும் பெரும் புகழும் உடைய கபிலன் இன்று இருந்தால் நல்லது என்று நீ சொன்னாய். அது நன்றாக இருக்கிறது.”

****

2

மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்

பொய்யா நாவிற் கபிலன் பாடிய

மையணி நெடுவரை ஆங்கண் “..

புறம் – 174 ; பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்

பாடப்பட்டோன் – மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்

பொருள் –

“நின் தந்தை , கபிலர் பாடும் புகழுடையோனாக இருந்து அறம் காத்து , பெரும் வலிவுடையோனாக இருந்து இறந்தனன்”.

பொய்யா நாவிற் கபிலன் என்ற சொற்தொடரைக் கவனிக்க வேண்டும். மனம், மொழி, உடல் மூன்றிலும் தூய்மை பெற்றவர்களை எவரும் மதிப்பர். அவர்கள் புலன்களை வென்றதால் மாவீரர் எனப்படுவர்.. அப்பேற்பட்ட வீரன் கபிலன். மூவேந்தர்களும் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது கிளிகள் மூலம் உணவு கொண்டுவந்து பாரி நாட்டைக் காத்தவன். முடியுடைய மூவேந்தேர்களை முடி/மயிர் போல தாழ்த்திய மாவீரன். இந்துத் துறவிகளைப் போல யாகத் தீ மூட்டி அதற்குள் நுழைந்தவன் கபிலன்.

****

காசி/  வாரணாசி

இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்று ; காசி விசுவநாதர் கோவிலைத் தரிசிப்பதையும் அங்குள்ள கங்கை நதியில் குளிப்பதையும் இந்துக்கள் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாக வைத்துள்ளனர் .காசியில் இறந்தால் மோ ட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் அழியாத நம்பிக்கை

காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும்.

மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் . அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது.  காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.

பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர்.

அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!

3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது.

வருணஅஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.

காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில்,   ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழியையே பேசினர்.

***

கடோபநிஷத்

கடோபநிஷத் என்பது யஜுர் வேதத்தின் காடக சாகையைச் சேர்ந்த  முக்கிய உபநிடதமாகும். நசிகேதஸ் என்ற சிறுவனுக்கும் எமதர்மராஜனுக்கும் இடையிலான உரையாடல் மூலம் ஆத்மா, மரணம் மற்றும் அழியாமை பற்றிய ஆழ்ந்த ஞானத்தை இது போதிக்கிறது. நசிகேதஸ் என்ற சிறுவன், எமனிடம் மரணத்திற்குப் பிந்தைய ரகசியத்தைக் கேட்டுப் பெறுகிறான்.

பொருள்: இது ஆத்மா அழியாதது, உடல் மட்டுமே இறக்கும், ஆத்மா மீண்டும் பிறக்கும் அல்லது மோட்சம் அடையும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிரியமான, உபநிடதம் இது.  ஆதிசங்கரரின் உரை மூலம் இது பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

****

கௌரவர்கள்

குரு  KURU வம்சத்தில் தோன்றிய அனைவரும் கெளரவர்கள் என்ற போதிலும் பிற்காலத்தில் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் பிறந்த நூற்றுவர் மட்டும்   கௌரவர்கள் என்ற பெயரைப் பெற்றனர் துரியோதனன் இவர்களில் மூத்தவன்; போட்டி, பொறாமையால் மஹாபாரத யுத்தம் ஏற்பட்டு அதில் கௌரவர்கள் நூற்றுவர் இறந்தனர் . இவர்களுக்குப் போட்டியாக இருந்த பாண்டவர்கள் ஐவரும் பாண்டு என்ற மகாராஜாவின் புதல்வர்கள்; அவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரர் என்னும் தர்மபுத்திரர் ஆவார் .

***

கெளசல்யா

 ராமாயணத்தில்,கெளசல்யா என்ற ராணி அயோத்தி மன்னன் தசரதனின் மூத்த மனைவி ஆவார்  ; ஸ்ரீ ராமரின் தாயார் ஆவார். அவர் தர்மம், பொறுமை மற்றும் தூய்மையான அன்பின் அடையாளமாகத் திகழ்ந்தார் .

 கெளசல்யா கோசல நாட்டின் இளவரசி, கோசல மன்னன் பானுமந்தனின் மகள். தசரதனுக்கும் கெளசல்யாவிற்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, அதன் பலனாக ராமரை மகனாகப் பெற்றார் . ராமர் வனவாசம் செல்ல நேரிட்டபோது, அதைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார்.ராமாயணத்தில் பொறுமை, தியாகம் மற்றும் சிறந்த தாய்க்கு ஒரு எடுத்துக்காட்டாகத்  திகழ்கிறார்.

‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே! உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!’ என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகம் வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாகத் திகழ்கிறது ; லட்சக்  கணக்கான வீடுகளில் தினமும் காலையில் ஒலிக்கிறது.

விசுவாமித்திரர் அதிகாலைப் பொழுதில் எழுந்து கங்கையின் நீராடி, ஜப தபங்களை முடித்துவிட்டு ராம, லக்ஷ்மணர்களை எழுப்புகிறார். அவர் சொன்ன வாசகம் இது “கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல்ஒளி வந்துவிட்டது ! புலி போல் வீரம் படைத்த வீரர்களே எழுந்திருங்கள்! இன்றைய பணியைச் செய்வோம் வாரீர்” .

****

கௌசிக முனிவர் 

இருவர் பெயரில் நாம் இவர் பற்றி அறியலாம் ; ஒருவர் உலகப் புகழ் பெற்ற விசுவாமித்திரர் ; இன்னொருவர் மஹாபாரதக் கதையில் வரும் ஒரு முனிவர் .கௌசிக என்ற சொல்லுக்கு ஆந்தை என்றும் பட்டுநூலில் உருவானவர் என்ற பொருளும் இருக்கிறது . குஷிகா வம்சத்தில் தோன்றிய விசுவாமித்திரர் ரிக் வேதத்தில் ஒரு மண்டலத்தின் ரிஷி; சங்க இலக்கியத்தில் கெளசிக கோத்திர புலவர்களின் பெயர்களையும் காண்கிறோம்.

வசிஷ்ட முனிவருடன் பல முறை மோதி, பின்னர் மன்னர் பதவியை விட்டு, தவம் பல செய்து,  அவர் வாயால் பிரம்ம ரிஷி (பிராமணர்) என்ற பட்டத்தினைப் பெற்றார் .

கெளசிக முனிவர் கதை

மஹாபாரதத்தில் வரும் கெளசிக முனிவர் கதை, கோபம் மற்றும் அகந்தையைத் துறந்து, உண்மையான ஞானம் மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு கதை.

கெளசிகர் என்ற முனிவர் கடுமையான தவம் செய்து, கண்களை மூடி தியானிக்கும்போது, அவர் மீது பறவை ஒன்று எச்சமிட்டது. இதனால் கோபமடைந்த கெளசிகர், தன் தபோ பலத்தால்  அந்தப் பறவையை எரித்தார்.

தான் செய்த செயலை நினைத்து, “நான் எப்பேர்ப்பட்ட தவவலிமை கொண்டவன்” என்ற அகந்தையுடன், பிக்ஷை எடுக்க ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டுப் பெண், கணவனுக்குப் பணிவிடை செய்வதில் தாமதமானதால், பிக்ஷை கொடுக்க தாமதமானது.

இதனால் கோபமடைந்த கெளசிகர் முன்னர் பறவையை எரித்த பார்வையுடன் அந்தப் பெண்மணியைப் பார்த்தார் , அந்தப் பெண், “நான் அந்தப் பறவை இல்லை, எரிப்பதற்கு” என்று கூறி, கோபத்தைத் துறந்து பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுரை வழங்கினார்.

தன் தவறை உணர்ந்த கெளசிகர், உண்மையான தர்மத்தையும், ஞானத்தையும் அந்தப் பெண் மூலமாகவும், பின்னர்  தர்மவியாதன் (கசாப்புக் கடைக்காரன்) மூலமாகவும் கற்று, கோபத்தை வென்றார்.

TO BE CONTINUED…………………

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 , கனிஷ்கர், கெளசிகர், கபிலர், கடோபநிஷத், கெளசல்யா கண்வர், மகரிஷி

Leave a comment

Leave a comment