நவரத்தினங்களுள் தனி இடத்தைப் பெறுவது கோமேதகம்! ஏனெனில் சுகபோக வாழ்வையும் வெற்றியையும் தருவது அது!
வெற்றிக்கான கல்லான கோமேதகத்தை பழங்கால நாகரிகத்தினர் அனைவரும் போற்றி அணிந்தனர். இது கண் திருஷ்டியிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்றும், பயங்கரமான தீய கனவுகளைப் போக்கும் என்றும் அவர்கள் நம்பினர். இதை அணிந்தால் தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கி விடும் என்பதும் அவர்களது நம்பிக்கை. ஒருவருக்கு அபாயம் வரும் போது இதன் ஒளி மங்கி விடும்; ஆகவே உடனேயே தக்க தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் அவர்கள் நம்பினர்.
இத்தாலியில் இதை விதவைகளின் கல் என்று அழைத்து வந்தனர். ஏனெனில் பெரும்பாலும் கணவனை இழந்த விதவைகளே தங்களின் பெரும் இழப்பால் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீள கோமேதக நெக்லஸை அணிந்து வந்தனர்; கொண்டை ஊசியிலும் கோமேதகக் கல்லைப் பதித்துப் பயன்படுத்தினர்.
கோமேதகம் அணிவோருக்குக் காதலில் வெற்றி, நம்பிக்கை, விசுவாசம், தம்பதியினரிடம் பரஸ்பர அன்பு, தீக்காயங்களிலிருந்து பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது.
ஜோதிட சாத்திரம் கூறும் பலன்கள்
ஜோதிட சாத்திரத்தின் படி சாயா கிரகமான ராகு கிரகத்திற்கு உரியது கோமேதகம். ராகுவைப் போற்றித் துதிக்கும் ராகு அஷ்டோத்தர சத நாமாவளியில் 19வது நாமமாக கோமேதாபரண ப்ரியாய நமஹ என்று கூறப்படுவதால் கோமேதக ஆபரணத்தை அணிந்தவர் ராகு என்பது பெறப்படுகிறது.
ராகு தசை நடக்கும் காலத்திலும் ஒரு ஜாதகத்தில் ராகு தீய பலன்களைக் கொடுக்கும் இடத்தில் இருந்தாலும் கோமேதகத்தை அணிந்தால் கெட்ட பலன்கள் நீங்கும்; நல்ல பலன்கள் ஓங்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கிரகத்திற்கு உரிய கோமேதகம் பரிந்துரைக்கப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் கேதுவிற்கு உரியதாக உள்ள வைடூரியம் அணியலாம்.
எண் கணிதத்தின் படி ராகுவின் எண் 4 ஆகும். நான்கு எண்ணில் பிறந்தவர்களும் (பிறந்த தேதி 2,13, 22 ஆகிய தேதிகள்) கூட்டு எண் நான்கைக் கொண்டிருப்பவர்களும் கோமேதகத்தை அணியலாம்.இதனால் காரியசித்தியும் தெய்வ பலமும் கை கூடும்.
தெய்வீகக் கல் கோமேதகம்
தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள பிரகாரங்களை வர்ணிக்கிறது. இதில் கோமேதக பிரகாரம் பத்மராக பிரகாரத்திற்கு மேல் செம்பருத்தி மலர் போல பிரகாசித்து ஒளிர்வதாகக் கூறப்படுகிறது. இங்கு 32 சக்திகள் நானாவித சஸ்திரங்களைக் கொண்டு கோமேதக மணிகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டவாறு இருக்கின்றனர்.
சிலப்பதிகாரம் ஊர் காண் காதையில் (190ஆம் வரியில்) ‘இரு வேறு உருவவும்’ என்று கூறப்படுகிறது. ஆகவே இரு வண்ணமுடைய கோமேதகமே சிறந்தது என்பது வலியுறுத்தப்படுகிறது.
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை:-
மஞ்சளுடனான சிவப்பு வண்ணம் கலந்த கல் இது.
இது கோமேதகம் என ஏன் அழைக்கப்படுகிறதெனில் இது கோமயம் போல இருப்பதால் தான்.
நல்ல ஒரு கோமேதகம் என்பது : 1) பசுவின் தெளிந்த சிறுநீரின் வண்ணத்தை ஒத்திருக்கும் 2) ஒளி ஊடுருவதாய் இருக்கும் 3) எண்ணெய் பூச்சு பூசப்பட்டது போல இருக்கும் 4) சமனான பரப்புடன் இருக்கும் 5) கனமாக இருக்கும் 6) அடுக்கு அடுக்காய் (layers) இருக்காது 7) வழவழப்பாய் இருக்கும் 8) ஒளி பிரகாசிப்பதாய் இருக்கும்.
விலக்கத்தக்க கோமேதகம் என்பது 1) இரண்டாவது வண்ணம் இல்லாமல் ஒரு வண்ணத்துடன் மட்டுமே இருக்கும் 2) இலேசானதாய் இருக்கும் 3) கரடுமுரடாய் இருக்கும் 4) தட்டையாய் இருக்கும் 5) ஒரு அடுக்கு இருப்பது போல இருக்கும் 6) ஒளி இருக்காது 7) மஞ்சள் நிறக் கண்ணாடியைப் பார்ப்பது போல இருக்கும்.
ஒவ்வொரு ரத்தினமும் தனக்கென உள்ள பிரதானமான வண்ணத்தைத் தவிர ஒரு உப வண்ணத்தையும் கொண்டிருக்கும். இந்த வண்ணம் 1) வெள்ளை 2) சிவப்பு 3) மஞ்சள் 4)கறுப்பு ஆகிய வண்ணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட கல்லும் கோமேதகமே.
பிரதானமாக உள்ள மஞ்சள் வண்ணத்துடன் மேலே கூறப்பட்ட எந்த வண்ணத்தையும் நல்ல கோமேதகம் கொண்டிருக்கலாம்.
மிக மிகச் சிறந்த கோமேதகம் என்பது கனமாயும், அதிக பிரகாசத்துடனும், எண்ணெய் பூசப்பட்டது போன்ற தோற்றத்துடனும், மிருதுவாகவும், ஒளி ஊடுருவதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சிறந்த கோமேதகம், அதை அணிபவருக்கு செல்வத்தைத் தரும்; அதிர்ஷ்டத்தையும் தரும்.
அதிக பித்தம் இருந்தால் பித்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கும்.
ரத்த சோகையை நீக்கும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக பசி எடுக்க வைக்கும். தோலுக்கு நலம் பயக்கும். ஆயுளை அதிகரிக்கும்.
நல்ல கோமேதகம் இமயமலையில் சிந்து நதி உள்ள சிந்து மாநிலத்திலும் சிந்து சாகரத்திலும் கிடைக்கும். நல்ல கோமேதகம் தானா என்பதை நெருப்பை மூட்டித் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது கோமேதகத்தை நெருப்பில் வாட்டினால் அதன் நிறம் மாறிக் கொண்டே இருக்கும். இதை வைத்து அறிந்து கொள்ளலாம்.
இப்படி ரஸ ஜல நிதி கூறுவதைத் தவிர ஏனைய பல நூல்களும் கோமேதகத்தின் அருமை பெருமைகளை விளக்குகின்றன.
பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூல் கோமேதகம் அணிந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும், மலக் கட்டறுக்கும், குஷ்ட நோய்கள் நீங்கும், வாத நோய் நீங்கும், உடல் ஒளி ஓங்கும் என்று கூறுகிறது.
அறிவியல் தகவல்கள்
இது சிலிகேட் கனிம வகையைச் சார்ந்ததாகும்.
மோவின் அளவுகோல் படி இதன் கடினத்தன்மை : 6.5 – 7.5
இதன் ஒப்படர்த்தி (Specific Gravity) : 3.1 – 4.3
இதன் இரசாயன பொது வாய்பாடு : X3Y2(SiO4)3
செயற்கைக் கற்களும் கிடைக்கும் இடங்களும்
கோமேதகத்தில் அரிய பல வகைகள் உண்டு. இவற்றை தொழிலகப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
கோமேதகத்தின் அரிய பல வகைகள் தாய்லாந்து, சீனா, அமெரிக்கா, பிரேஜில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கிடைக்கிறது.
நியூயார்க் மாகாணத்தின் அதிகாரபூர்வமான மாநில ரத்தினம் கார்னெட் (New York State Gemstone : Garnet) ஆகும்!
செயற்கை முறையில் தயாரிக்கப்படும் கார்னெட் உள்ளிட்ட வகைகள் ஏராளமாகத் தயாரிக்கப்படுவதால் இயற்கையாகக் கிடைக்கும் கோமேதகத்தைத் தேர்வு செய்ய விரும்புவோர் கவனத்துடன் தக்க நிபுணர்களை நாடுவது நலம்.
இந்தியாவில் மேற்குப் பகுதியிலும் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கோமேதக தாது ஏராளமாகக் கிடைக்கிறது. ஆனால் பாதுகாப்பற்று இருப்பதாலும் இப்படி ஒரு அரிய வகை ரத்தின தாது இருப்பது அதன் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் இருப்பதாலும் இந்த தாது திருடப்படுவது வருந்தத்தக்க விஷயம்.
பொதுவாகவே ஒரு அரிய வகைக் கல்லையோ அரிய தாதுக்கள் கொண்ட மண்வளத்தையோ உரிமையாகக் கொண்டிருப்பவர் அதன் மாதிரியை (Sample) இதற்கெனவே அமைந்துள்ள ஜெம்மாலஜி சோதனைச்சாலைகளில் சோதனை செய்து என்ன வகை, என்ன விலை பெறும் என்பதைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.
பொதுவாகவே ஒரு நவரத்னக் கல்லை அணியும் போது அதை பசும்பாலில் நனைத்து, பின்னர் தண்ணீரில் அலசி அணிவது மரபு. கல்லுக்குரிய கிழமையன்று அணிவது சிறப்பாகும். மாணிக்கம் – ஞாயிறு; முத்து – திங்கள்; பவளம் – செவ்வாய்; மரகதம் – புதன்; கனக புஷ்பராகம் – வியாழன்; வைரம் – சுக்ரன்; இந்திரநீலம் – சனி என்று இப்படி அணிவது சிறப்பாகும்.
பரம்பரை பரம்பரைச் சொத்தாக வருகின்ற நவரத்னக் கற்கள், மற்றும் மாலைகளை வீட்டின் உள்ளே பெட்டியில் வைத்துப் பூட்டாமல் அதைச் சுத்தம் செய்து துலக்கி, தேவையெனில் சோதனைச்சாலையில் அதன் மதிப்பையும் அரிய தன்மைகளைப் பற்றியும் அறிந்து கொண்டு அவற்றை அணிந்து நல்ல பலன்களைப் பெற்று மகிழலாம்.
முடிவுரை
நவரத்தினங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடருக்கு வாசகர்கள் பெருமளவில் உற்சாக ஆதரவு தந்தனர். குறிப்பாகத் தாய்மார்களும் ஆர்வத்துடன் இவற்றைப் படித்து வந்தனர். வாசக அன்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைத் தொடரை எழுத ஊக்குவித்த மாலைமலர் சி.இ.ஓ. (C.E.O) திரு ரவீந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் பயன்படக் கூடிய ஒரு தொடர் பற்றிச் சிந்தித்து அதை உங்கள் முன் வழங்கி இருப்பதிலிருந்தே சமுதாயம் மேம்படுவதற்கான கலைகளையும் துறைகளையும் ஊக்குவிக்கும் அவரது பாராட்டப்பட வேண்டிய சமுதாய நோக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட ஆசிரிய குழுவினர் கட்டுரைகளை நல்ல முறையில் வெளியிட ஆர்வத்துடன் உதவியுள்ளனர். மாலைமலர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
தொலைபேசியில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் என்னிடம் பேசி விளக்கங்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய கற்களைப் பெற்று நலமாக வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
கற்களை அணிந்தவுடன் ஏற்பட்ட நல்ல பலன்களை மகிழ்ச்சியுடன் தொலைபேசி மூலம் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
நமது பூர்வ ஜென்ம கர்மங்களுக்கு ஏற்ப நல்லவையும் தீயவையும் இப்பிறவியில் அவ்வப்பொழுது நமக்கு அமைகின்றன. ஆனால் தீயவற்றைப் போக்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடவும் இறைவன் அருளியுள்ள வழிகள் மணி, மந்திரம், ஔஷதம்.
இந்த மூன்றுமே உடனுக்குடன் பலன் அளிக்கும் என்பதால் முன்னோர்கள் அரிய பல சாத்திரங்களை வகுத்து நமக்கு வழி காட்டி அருளியுள்ளனர்.
ஏழாம் நூற்றாண்டு நூலான ரஸ ஜல நிதி, தமிழின் பழம் பெரும் காப்பியமான சிலப்பதிகாரம் (அடியார்க்கு நல்லார் உரை), ரத்தின சாஸ்திரம், தேவி பாகவதம், கருட புராணம், சிவ புராணம், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் பதார்த்த குண சிந்தாமணி உள்ளிட்ட நூல்கள் பல அரிய செய்திகளை வழங்குகின்றன.
1930இல் இங்கிலாந்தில் வெளியான Amulets and Superstitions என்ற சிறந்த ஆய்வுப் புத்தகம் சர்.இ.ஏ. வாலிஸ் பட்ஜ் (Sir E.A. Wallis Budge) அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூல் பழம் பெரும் நாகரிகத்தினர் மணிகளை எப்படிப் பயன்படுத்தினர் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது.
1905ஆம் ஆண்டு வெளியான Precious Stones என்ற புத்தகம் நவரத்தினங்களைப் பற்றிய அரிய செய்திகளைத் தருகிறது. இதை எழுதியவர் ஏ.ஹெச்.சர்ச் (A.H.Church F.R.S) என்பவர். அறிவியல் பூர்வமாகவும் கலை நோக்குடனும் விலை மதிப்பற்ற அபூர்வ மணிகளைப் பற்றி இவர் விளக்கி எழுதியுள்ளார்.
இப்படிப்பட்ட இன்னும் பல நூல்களையும் ஆராய்ந்து ஒப்பு நோக்கி நவரத்தினங்களைப் பற்றிய செய்திகளை வழங்க முடிந்தது. இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
காலம் கடந்து நின்று எப்போதும் ஜொலிக்கும் மணிகள் மனித குலத்தின் பொக்கிஷம்!
இல்லத்தில் மகிழ்ச்சி; அதில் வாழும் குடும்ப உறுப்பினர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி!
சுபிட்சமான வாழ்க்கை!
இன்றைய வேக யுகத்தில் இது சாத்தியம் தானா?
சாத்தியம் தான் என நமது அறநூல்கள் உரத்த குரலில் கூவுகின்றன.
அதற்கான வழிகளை அன்றாட வாழ்க்கை முறையுடனும் வீட்டின் அமைப்பு முறையுடனும் கலந்து அதைக் கடைப்பிடிக்குமாறு அற நூல்கள் முறையாகச் சொல்லி இருக்கின்றன.
மறந்து விட்டோம்; அவ்வளவு தான்!
அதைக் கடைப்பிடிக்க உத்வேகம் கொண்டு, சிறிது நேரம் அதற்கென செலவழித்துக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நல்லது நடக்கும்; நல்லதே நடக்கும்.
அவற்றைக் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் முன்னர் உங்கள் பாங்க் பாலன்ஸைக் குறித்து வைத்துக் கொண்டு சில வாரங்கள் கழித்து மீண்டும் உங்கள் பாங்க் பாலன்ஸைச் சரி பார்த்தால் உள்ளம் மலரும்; இல்லம் மகிழ்ச்சியுறும்.
அதே போல மனதிருப்தியை அடையவும் (பார்க்கப் போனால் அது தானே வாழ்வின் இறுதி லட்சியம்) அந்த விதிகள் வழி வகுக்கும்.
பல நூல்கள் காட்டும் எளிய வழிமுறைகள்
இந்த முறைகள் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், சீன வாஸ்து முறைகள், புராண சாஸ்திரங்கள் உள்ளிட்ட நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை. ஒவ்வொன்றையும் விரிப்பின் பெருகுமாதலால் சுருக்கமாகச் செய்ய வேண்டுவன மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
வீட்டின் மைய பாகம்
வீட்டின் மைய பாகம் பிரம்ம ஸ்தலம் எனப்படும். இந்தப் பகுதியில் எதையும் வைக்காமல் சுத்தமாக வெற்றிடமாக இருக்கச் செய்ய வேண்டும். இதற்கென சோபாக்கள், நாற்காலிகளைச் சிறிது மாற்றி வைக்க வேண்டுமெனில் அதை உசிதப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
வீட்டின் நுழைவாசல்
வீட்டின் நுழைவாசலை எடுத்துக் கொள்வோம்.
அங்கு வாசலில் முன்னே எந்த விதமான தடையும் இருக்கக் கூடாது.
வாயிலை ஒட்டி துடைப்பம், செருப்புகளை வைக்கும் ஸ்டாண்டுகள் இருக்கக் கூடாது.
கண்ணாடியைச் சிலர் நுழைவாயிலுக்கு எதிரே மாட்டுவது வழக்கம். உள்ளே வருகின்ற நல்ல சக்தியைப் பிரதிபலித்து இது வெளியே அனுப்பி விடும். ஆகவே கண்ணாடியை நுழை வாசலுக்கு எதிரே மாட்டக் கூடாது.
வீட்டின் வாயிலைப் பார்த்தவாறு லாஃபிங் புத்தா எனப்படும் புத்தரின் சிலையை வைப்பதன் மூலம் செல்வ வளம் சேரும்.
குபேரனின் திசை வடக்கு
வடக்குத் திசை செல்வத்தின் திசை. அங்கு கல்லா பெட்டியை – காஷ் பாக்ஸை வைத்திருத்தல் நலம்.
வடகிழக்கு மூலையில் ஒரு சிறிய பாத்திரத்தில் நீரை நிரப்பி அதை ஒவ்வொரு நாளும் மாற்றிக் கொண்டே இருந்தால் கடன்கள் தீரும்; செல்வம் சேரும்.
இந்த அமைப்பைச் செய்ய ஆரம்பித்தவுடன் வரு நல்ல அறிகுறியை இனம் காணுதல் முக்கியம். இப்படி ஒரு நல்ல செய்தி அல்லது வருமானம் (24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்திற்குள்) ஏற்படின் நீரில் பூக்களைச் சேர்க்கலாம்; பன்னீரைச் சேர்க்கலாம். பலன்கள் அதிகரிக்கும். இதை அனுபவத்தில் கண்டால் மட்டுமே உண்மையை உணர முடியும்.
பணப்பெட்டியில் (காஷ் பாக்ஸ்) சம்பிரதாயமாக பழைய காலத்தில் திருவிதாங்கூர் அம்மன் காசு, சங்கு பொறித்த காசு, தாமரை பொறித்த காசு, லக்ஷ்மி படம் பொறித்த பழைய கால காசு ஆகியவற்றை வைத்தல் மரபு. பெரியவர்கள் கொடுத்த ஆசீர்வாதப் பணங்களையும் செலவழிக்காமல் சேர்த்து வைப்பது சில குடும்பங்களின் பாரம்பரியப் பழக்கம். (குறைந்தபட்சம் ஒரு சில காசுகளையாவது அதிலிருந்து எடுத்து வீட்டில் நிரந்தரமாக வைத்திருப்பர்)
பூஜை அறையும் மங்கலச் சின்னங்களும்
பூஜை அறையில் இஷ்ட தெய்வங்களின் படங்களை முறையாக மாட்டி அதற்கு அன்றாடம் நைவேத்யம் (ஒரு இலை அல்லது சிறிது நீர், அல்லது ஒரு பழம், கல்கண்டு ஏதேனும் ஒன்று) செய்தல் அவசியம்.
மங்கலச் சின்னங்கள் ஏராளம் உள்ளன. ஓம், ஸ்வஸ்திகா உள்ளிட்ட ஏராளமான அடையாளச் சின்னங்கள் ஒரு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் விலைக்குள் அழகுறக் கிடைக்கின்றன. நுழை வாயில் கதவிலும் பூஜை அறை உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சின்னங்களை இடம் பெறச் செய்தல் மரபு.
மகிழ்ச்சி தரும் சித்திரக் காட்சிகள்
போர், வன்முறைக் காட்சிகளுடனான படங்கள், வேட்டையாடிய மிருகங்கள் ஆகியவற்றை வீட்டில் தொங்க விடக்கூடாது. இவை சண்டை சச்சரவை வீட்டில் தூண்டி விடும்
மாறாக மகிழ்ச்சியைச் சித்தரிக்கும் அழகிய குடும்ப உறுப்பினர்களின் போட்டோவை பிரதானமான இடத்தில் மாட்டி மகிழலாம்.
லவ் பேர்ட்ஸ் போன்றவற்றை பெட் ரூமில் மாட்டுவதன் மூலம் அன்யோன்யமான கணவன் மனைவி உறவு அமையும்.
தரித்திரமும் கண் திருஷ்டியும் நீங்க !
வீட்டில் சுத்தம் மிகவும் அவசியம்.
அளவுக்கு மீறிய கடன்கள், வருமானமின்மை, வரவுக்கு மீறிய செலவு ஆகிய அனைத்திற்கும் வீட்டில் இருக்கும் அழுக்குகளே காரணம். இவை நெகடிவ் எனர்ஜியின் பெட்டகங்கள்.
பழைய பேப்பர்கள், பால் பைகள், கிழிந்த துணிகள் இதர தேவையற்ற குப்பைகள் ஆகியவற்றைச் சேர்த்து பின்னால் வெளியில் விற்பதால் வரும் வருமானம் பத்து ரூபாய் என்றால் அதனால் இழக்கும் பணமோ ஆயிரம் என்பதை நினவில் கொண்டு இவற்றைச் சற்றும் தாமதிக்காமல் அகற்றி விட வேண்டும்.
வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியைப் போக்கவும் கண் திருஷ்டியைப் போக்கவும், ஆக்க பூர்வமான பாஸிடிவ் சக்தியை உருவாக்கவும் தினமும் வீட்டு அறைகளை நீரால் மெழுகித் துடைக்கும் போது அந்த நீரில் சிறிது கல் உப்பைச் சேர்த்தல் வேண்டும். (பவுடர் உப்பு அல்ல)
ரத்தினக் கற்களை அணிக என்பது சரகர் தரும் அறிவுரை. அவரவர் தேவைக்குத் தக உரிய ரத்தினக் கற்களையும் உபரத்தினங்களையும் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்.
பூக்களும் சங்கும்
மலர்ந்த அழகிய புஷ்பங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. ஒவ்வொரு பூவிற்கும் என்ன சக்தி உள்ளது என்பதை அரவிந்த ஆசிரம் அன்னை விளக்கியுள்ளார்.
உதிர்ந்த பூக்களை அன்றாடம் அகற்றுதல் வேண்டும்.
உலர்ந்த பூக்களை வாங்கவும், பயன்படுத்தவும் கூடாது. (துளஸி மட்டும் இதற்கு விதி விலக்கு)
வலம்புரிச் சங்கு கிடைப்பது அரிது. நல்ல வலம்புரிச் சங்கு கிடைத்தால் அதை வீட்டில் வைக்கலாம். அது செல்வம் சேர்வது உள்ளிட்ட பல நலன்களுக்கான ஒரு அஸ்திவாரம்.
கெமிக்கல் கலந்த கந்தக (சல்பர் கலந்த) ஊதுபத்தியை ஒரு நாளும் வீட்டில் ஏற்றக் கூடாது. இது உடல் நலத்தைப் பாதிக்கும்; சுவாசக் கோளாறுகளை உருவாக்கும். மாறாக இயற்கையான நறுமணம் தரும் நல்ல ஊதுபத்திகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
சுக கந்த மால்ய ஷோபே என்று லட்சுமி தோத்திரத்தில் வருகிறது. இதன் பொருள் நல்ல நறுமணம் வீசும் இடத்தில் வாசம் புரிபவள் என்பது தான். அது இன்றைய நாளில் சுக கந்தக மால்ய ஷோபே என்பது போல ஆகி விட்டது; சல்பர் இருக்கும் இடத்தில் லட்சுமி வாசம் நிச்சயம் இருக்காது.
நல்ல அருமையான சந்தனக் கட்டையின் சிறிய பகுதியேனும் வீட்டின் பூஜையறையில் இருக்கச் செய்தல் வேண்டும்.
எந்தப் பக்கம் தலை வைத்துப் படுப்பது?
வடக்குப் பக்கம் தலையை வைத்துப் படுக்கக் கூடாது.
தெற்குப் பக்கம் தலை வைத்துப் படுப்பது ஆயுளைக் கூட்டும். வீட்டில் கிழக்கு நோக்கியும் வெளியிடங்களில் மேற்கு நோக்கியும் தலையை வைத்துப் படுப்பது மரபு.
கண்ணாடி தரும் உணவு வளம்
கண்ணாடியை பெட் ரூமிலும் சமையலறையிலும் மாட்டக் கூடாது.
டைனிங் டேபிளின் எதிரே கண்ணாடியை மாட்டுவதன் மூலம் சுவையான உணவும் ஆரோக்கியமும் நிரந்தரமாகக் கிடைக்கும்.
பெட் ரூமில் பெரிய நிலைக் கண்ணாடிகளோ, அல்லது பீரோக்களில் பெரிய கண்ணாடிகளோ இருந்தால் அவை கணவன் – மனைவி உறவில் சச்சரவையும் வாதங்களையும் உண்டாக்கிக் கொண்டே இருக்கும்; அத்துடன் மட்டுமன்றி தூக்கத்திற்கு இடைஞ்சலாகவும் அமையும்.
ஒருவேளை தவிர்க்க முடியாமல் கண்ணாடி இருப்பின் அதை ஒரு சிறிய திரையால் மூடி விடுவது நலம்.
ஃபேஷன் டேஞ்சர்!
திறந்த அலமாரிகள் இன்றைய நவநாகரிகத்தால் வந்த ஃபேஷன் டேஞ்சர். புத்தகங்களை இப்படித் திறந்த அலமாரியில் வைத்திருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆகவே அலமாரிகளுக்குக் கதவுகள் அவசியம்.
வீட்டைச் சுத்தம் செய்ய உதவும் துடைப்பங்களை மறைவான இடத்தில் வைக்க வேண்டும்.
வடகிழக்கில் கழிவறை இருத்தல் கூடாது. அப்படி ஒருவேளை அமைந்திருப்பின் அங்கு கல் உப்பை (காய்ந்திருக்கும் நிலையில் )ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்தல் வேண்டும். உப்பை ஈரம் பட்ட நிலையில் மாற்றி புது உப்பை கிண்ணத்தில் நிரப்பல் வேண்டும். இது தீய சக்திகளை ஓரளவு கட்டுப்படுத்தும்.
இயற்கையை அலட்சியம் செய்யக் கூடாது
‘சீரைத் தேடின் நீரைத் தேடு’ என்பதற்கு இணங்க ஒரு நாளும் வீட்டில் குழாயிலிருந்து நீர் ஒழுகக் கூடாது; கசியக் கூடாது. கசியும் நீர் செல்வம் குறைவதற்கான வழி. இயற்கை தரும் இனிய நீரைக் காத்தல் கடமை.
நீர்வீழ்ச்சி படத்தை வீட்டின் உட்பக்கம் நீர் உள்ளே பாய்ந்து வருவது போல மாட்டுவது செல்வம் அதிகரிக்க வழியாகும்.
தங்கமும் வெள்ளியும்
தங்கமும் வெள்ளியும் சிறிய அளவிலேனும் வீட்டில் இருக்கச் செய்வது தொன்று தொட்டு எல்லாக் குடும்பங்களிலும் இருந்து வரும் ஒரு நல்ல மரபு. (தாலியில் குந்துமணி அளவேனும் தங்கம் இல்லாத பெண்மணி யாரும் இல்லை)
வீட்டின் அந்தஸ்தைக் கூட்டுவது, பண நிலையை ஸ்திரம் செய்யும் பாதுகாப்பு என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க ரஸ ஜல நிதி போன்ற அருமையான நூல்கள் தங்கம் வீட்டில் இருப்பதாலும் தங்க நகைகளை அணிவதாலும் ஏற்படும் அதிசயக்கத் தக்க பலன்களை விளக்குகின்றன.
1) அமைதியைத் தரும் 2) சுத்தத்தைத் தரும் 3) விஷத்தை முறிக்கும் 4) க்ஷய ரோகத்தைப் போக்கும் 5) பைத்தியத்தை நீக்கும் 6) நினைவாற்றலைக் கூட்டுவதோடு நுண்ணறிவை அதிகரிக்க வைக்கும் 7) ஞாபக சக்தியோடு நினைத்தவுடன் ஒரு விஷயத்தை கணத்தில் நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லும் திறன் கூடும் 8) ஜீரண சக்தியை அதிகரிக்க வைக்கும் 9) மூன்று தோஷங்களை நீக்கும் – தங்கத்தின் பயன்களாக இவற்றைத் தான் ரஸ ஜல நிதி அறிவிக்கிறது.
இதே போல வெள்ளிக்கும் தனிப் பலன்கள் உண்டு. விரிப்பின் பெருகும்.
கடல் அளவில் ஒரு சிறு திவலையே இந்தக் குறிப்புகள்
இப்படி ஏராளமான குறிப்புகளை நமது நூல்கள் தருகின்றன; பாரம்பரியப் பழக்கங்கள் செல்வ வளத்தைத் தந்து மன சாந்தியை உறுதிப் படுத்தி சந்ததி விருத்தியை நல்ல விதத்திலும் செய்து வந்தன. இனியும் செய்து வரும்!
மேலே குறிப்பிட்டவை கடல் அளவு போன்ற குறிப்புகளில் ஒரு சிறு திவலை தான்!
அனைத்தையும் அறிய தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி அவற்றை பரிசோதனை முறை என்ற அளவிலாவது மேற்கொண்டு கடைப்பிடித்து சொந்த அனுபவத்தால் உணர்ந்து பலன்களைப் பெறலாம்.
இன்னும் ரத்தினக் கற்களின் பயன்பாடு, ஜோதிட சாத்திரத்தை உண்மையான முறையில் பயன்படுத்துவது, எண் கணிதத்தின் மேம்பாடு, மந்திர யந்திரங்களின் மஹிமை, இசை மற்றும் தோத்திரங்களால் துதித்தல், சிவ, விஷ்ணு, தேவி, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் தலங்களில் செய்யும் வழிபாடு, புண்ய தீர்த்தங்களில் குளிப்பதன் மேன்மை, மூலிகைகளின் மகிமை, யோகா, ஸ்வரோதய விஞ்ஞானம் எனப்படும் சுவாசத்தின் அடிப்படையிலான சாத்திரம், அற நூல் வழிப்படி நடக்கும் பெரியோரைச் சார்ந்து அவர்களை அணுகி அவர்களின் அறிவுரைப்படி நடப்பது, அன்ன தானம் உள்ளிட்ட அறங்களை மேற்கொண்டு சமுதாயத்திற்கு உதவுவது உள்ளிட்ட ஏராளமான வழிமுறைகள் நமது வாழ்க்கை முறையில் உள்ளன.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு; நல்வழியில் பயணம் மேற்கொண்டால் நற்பலன் உண்டு.
முயற்சி திருவினையாக்கும் அல்லவா! முயல்வோம் வெல்வோம்!
‘Tracy’ the sheep (1990-97) was genetically modified to produce a human protein, alpha antitrypsin, in her milk. The protein is being clinically tested by PPL Therapeutics, who also donated Tracy to the Science Museum, with the aim of finding a treatment for the symptoms of cystic fibrosis. Tracy was born in 1990 after human DNA was inserted into fertilised sheep embryos at the Roslin Institute near Edinburgh, Scotland. In an attempt to reproduce animals such as Tracy, the Roslin Institute later cloned Dolly the sheep.
தாவர உலகில் ஆர்க்கிட் (Orchids) என்னும் மலர்களின் உருவம் வினோதமாக இருக்கும் .இது பற்றி நான் தினமணியில் 17-5-1992ல் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்துளேன்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
21-12-2019 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ச.நாகராஜன்
இசைபட வாழ வைக்கும் வைடூரியம்
நீங்கள் ஒரு இசைக் கலைஞரா, பேச்சாளரா, கல்லூரியிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்ப்பவரா, உங்கள் சொல்லை மற்றவர் மதித்து நடக்க வேண்டிய தலைமை இடத்தில் இருப்பவரா, உங்களுக்கெனவே இருக்கிறது வைடூரியம் என்னும் அபூர்வ ரத்தினம். நவ ரத்தினங்களுள் ஒன்றான இதை ஆங்கிலத்தில் கேட்ஸ் ஐ – (Cat’s Eye) என அழைக்கின்றனர். தோன்றில் புகழொடு தோன்றுக என்று ஆணையிட்ட வள்ளுவர் ஈதல் இசைபட வாழ்தல் -அதாவது புகழுடன் வாழ்தல் – உயிருக்கு ஊதியம் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
குரல் வளம் சிறக்கவும் இசைபட – புகழுடன் – வாழவும் பெரிதும் உதவுவது வைடூரியம்!
இலக்கியம் புகழும் வைடூரியம்
பழைய காலத்திலிருந்தே அனைத்து நாகரிக மக்களும் கொண்டாடிய கல் வைடூரியம்.
செய்வினை, மந்திர சக்தி, மரணம் ஆகியவற்றிலிருந்து இது ஒருவரை காப்பாற்ற வல்லது என்று பழைய நாகரிகத்தினர் பெரிதும் நம்பினர். அராபியர்களோ பெரும் யுத்த களத்தில் இதை அணிந்தால் மறைந்து இருந்து மாயாவியாகப் போர் புரிய முடியும் என்று நம்பினர்.
சிலப்பதிகாரத்தில், ஊர் காண் காதையில் “தீதறுக் கதிரொளி தெள் மட்டு உருவவும்” என்று குறிப்பிடப்படும் வரியினால் (வரி 189) ‘குற்றமற்ற கதிரவனின் ஒளி போலவும் தெளிந்த தேன் துளி எனச் சொல்வதற்கு ஒத்த உருவமும் உடையது வைடூரியம்’ என்பது தெரிய வருகிறது.
இராமாயணத்தில் அயோத்தி நகரமும் இலங்கையும் வைடூரியக் கற்களினால் ஜொலிப்பது பல இடங்களில் அழகுற வர்ணிக்கப்பட்டுள்ளது.
ரஸ ஜல நிதி தரும் சுவையான செய்திகள்
வைடூரியம் பற்றி மிகப் பெரும் பண்டைய நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை : –
இந்தக் கல் காம-பூதி நாட்டின் எல்லையில் உள்ள மிக உயரமுடைய மலையான விதுர மலையில் தோண்டி எடுக்கப்படுகிறது. (காம-பூதி என்பதைக் கம்போடியா என அறிஞர்கள் ஆய்வு செய்து சொல்கின்றனர்). இந்தக் கல்லின் உள்ளே பார்த்தால் ஊஞ்சலாடும், கழுத்தைச் சுற்றி அணியும் துணி போன்ற குறி தெரியும்!
வைடூரியத்தின் வகைகள்
இந்தக் கல் மூன்று வகையாக இருக்கிறது. 1) மஞ்சளுடன் கறுப்பு வண்ணம் கலந்திருப்பது 2) சிவப்புடன் நீல வண்ணம் கலந்திருப்பது 3) வெள்ளையுடன் கறுப்பு வண்ணம் கலந்திருப்பது
வைடூரியம் மூன்று விதங்களில் கிடைக்கும் 1) பச்சை மூங்கில் இலை வண்ணத்துடன் இருப்பது 2) மயிலின் கழுத்தில் ஜொலிக்கும் வண்ணத்துடன் இருப்பது 3) பூனையின் கண்ணில் இருக்கும் கபில வண்ணம் போல இருப்பது.
இந்த அனைத்து வகைகளிலும் சிறந்த வைடூரியம் என்று கூறப்படுவதன் குணாதிசயங்கள் இவை :- கனமாக இருப்பது, வழ்வழுப்புடன் இருப்பது, பொதுவான குறைகளான கோடு, கீறல், பள்ளம். புள்ளி போன்றவை இல்லாமல் இருப்பது (முந்தைய பல ரத்தினங்களுக்காக சொல்லப்பட்ட குறைகள் இருக்கக் கூடாது),ஒளி ஊடுருவிப் பிரகாசிப்பது ஆகியவை கொண்ட கற்களை அணியலாம்.
கறுப்பு வண்ணத்துடன் இருப்பது, நீர் வண்ணம் கொண்டது, தொப்பி வடிவம் கொண்டது, இலேசானது, கரடுமுரடாக இருப்பது, சிவப்பு வண்ணத்துடன் கூடிய, ஊஞ்சலாடும் கழுத்தைச் சுற்றி அணியும் துணி போன்ற தோற்றத்துடன் இருப்பது ஆகியவை விலக்கப்பட வேண்டியவையாகும்.
நல்ல ஒரு வைடூரியத்தை அணிந்தால்,
ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு நீங்கும்,
அறிவு மேம்படும்,
ஆயுள் நீடிக்கும்,
வலிமை கூடும்,
பித்தத்தினால் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நீங்கும்,
ஜீரண சக்தி கூடும்,
மலம் இளகி நீங்கும்.
ஒரு நல்ல வைடூரியத்தை எப்படிக் காண்பது எனில் அதை உரைகல்லில் வைத்து உரசிப்பார்த்தால் அது ஒளி விட்டுப் பிரகாசிக்கும்.
இப்படிப்பட்ட அரிய செய்திகளை ரஸ ஜல நிதி மூலமாக அறிகிறோம்!
கேட்ஸ் ஐ என்ற வார்த்தை எப்படி வந்தது?
க்ரைசோபெரில் (Chrysoberyl) என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்தக் கல்லின் நடுவே ஒளியைப் பாய்ச்சினால் உள்ளே பூனையின் கண்ணைப் போல இருக்கும் வடிவைக் காணலாம். அதனால் தான் இது கேட்ஸ் ஐ என்ற பெயரைப் பெற்றது. கேட்டோயர் (chatoyer) என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது கேட்ஸ் ஐ என்ற வார்த்தை.
ஜோதிட சாத்திரம் கூறும் உண்மைகள்
ஒரு ஜாதகத்தில் கேது தசை நடந்தாலோ அல்லது கேது புக்தி நடந்தாலோ இதை அணிவது நலம் பயக்கும். கேது வைடூரிய ஆபரணத்தை அணிந்தவன் – வைடூர்ய விபுஷண தாரணாயாம் – என்று கேது தியான ஸ்லோகம் கூறுகிறது.
சாயா கிரகம் எனப்படும் நிழல் கிரகமான இந்தக் கேதுவினால் ஏற்படும் சில தோஷ பலன்களை நீக்க வைடூரியம் அணியலாம்; உடனே தீய பலன்கள் நீங்கி விடும். குறிப்பாக சர்ப்ப கிரக தோஷம் என்ற தோஷத்தால் புத்திர பாக்கியம் தாமதப் படுவோர் இதை அணிந்தால் சீக்கிரமே புத்திர பாக்கியம் கை கூடும்.
வைடூரியத்தில் அதன் நடுவில் இருக்கும் கோடு தான் அதற்கு அழகூட்டுகிறது. இதை ரத்தின சாஸ்திரம் சூத்ரம் என்று அழைக்கிறது. இந்த சூத்ரம் இருபுறமும் முழுவதும் ஓடுவதாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி அணிந்தால் தைரியம் கூடும்; தெய்வ பலமும் சேரும்.
எண் கணிதத்தில் 7 என்ற எண்ணுக்குரியது வைடூரியம். ஆகவே 7 எண் (7,16,25 ஆகிய தேதிகள்) பிறந்த தேதியாக இருந்தாலோ அல்லது கூட்டு எண் ஏழாக அமைந்தாலோ வைடூரியம் நல்ல பலன்களை அளிக்கும்.
வைடூரியத்திற்கு கேது ரத்னம், சூத்ர மணி என்று வேறு பெயர்களும் உண்டு.
பிரபலங்களின் ஸ்பெஷல்!
இதை மோதிரமாகவோ பதக்கமாகவோ அணியாத பிரபலங்களே இல்லை எனலாம். குறிப்பாக வாக்கு சக்தியை இது கூட்டும், குரல் வளம் ஓங்கும் என்பதால் இசைக் கலைஞர்களும், பேச்சாற்றல் உள்ளவர்களும் இதை அணிகின்றனர்.
ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவோர் இதை அணிவது வழக்கம். அத்துடன் அபாயகரமான விளையாட்டுக்கள் மற்றும் மலையேறுவது, சூதாடுவது போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு ஆபத்துக்களை விலக்கிப் பாதுகாப்பளிப்பதும் வைடூரியமே. சில அபூர்வமான வைடூரியக் கற்கள் இரு வண்ணங்களைச் சரி பாதியாகக் கொண்டிருக்கும். ஒரு பக்கம் இலேசான வண்ணம் மற்றொரு பக்கம் அடர்த்தியான வண்ணம் கொண்டிருக்கும் இந்த வகைக் கற்களை பால்-தேன் விளைவைக் (Milk and Honey effect) கொண்டிருப்பது என்று கூறுவர்.
அறிவியல் தரும் தகவல்கள்
இதன் ரசாயன சமன்பாடு : BeAl2O4 மோ அலகின் படி இதன் கடினத் தன்மை : 8.5 இதன் ஒப்படர்த்தி (Specific Gravity ) : 3.5 – 3.84
அறிவியல் வளர்ச்சியால் வைடூரியம் செயற்கை முறையிலும் தயாரிக்கப்பட ஆரம்பித்து விட்டது. இது இயற்கையான வைடூரியம் போலவே தோற்றம் அளிக்கும். இயற்கை வைடூரியத்தையும் செயற்கையினாலான சிந்தடிக் வைடூரியத்தையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் எது இயற்கை, எது செயற்கை என்று இனம் காண்பது மிகவும் கடினம். வெவ்வேறு வண்ணங்களில் கூட செயற்கை வைடூரியம் கிடைக்கிறது. ஆனால் நமக்கு வேண்டிய நல்ல பலன்களுக்காக நாம் நாட வேண்டியது இயற்கையில் கிடைக்கும் வைடூரியக் கற்களை மட்டுமே தான்!
19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கன்னாட் டியூக் (Duke of Connaught) வைடூரியம் பதித்த மோதிரத்தை நிச்சயதார்த்த மோதிரமாக கொடுத்த போது இது மிகவும் பிரபலமானது.
வைடூரியத்தைப் பற்றிய சுவையான ரோமானியக் கதை ஒன்று உண்டு. வ்ரிணா என்ற ஒரு இளவரசி ரோம் நகரத்தை ஆண்டு வந்தாள். அவளிடம் வைடூரியப் பதக்கம் பதித்த மாலை ஒன்று இருந்தது.
ஒரு பெரிய யோகி அவளிடம், ஒரு போதும் அந்தப் பதக்கத்தை அவள் அணியாமல் இருக்கக் கூடாது என்றும் மிகவும் மோசமான கால கட்டத்தில அந்தப் பதக்கம் அவளை அந்த நிலையிலிருந்து மீட்கும் என்றும் மிருகங்களுடன் பேசும் சக்தி அப்போது அவளுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு சமயம் மழை பொய்க்கவே நாடெங்கும் பஞ்சம் தலை விரித்தாடியது. இளவரசி ஏழ்மை நிலை அடைந்து வருந்தினாள். அனைத்து செல்வமும் இழந்த நிலையில் செய்வதறியாது அவள் திகைத்த போது ஓவென அவள் அழ ஆரம்பித்தாள். அப்போது பூனையின் கண் போல கண்கள் கொண்ட ஒரு பல்லி அவள் அருகில் வந்து அவளிடம் பேச ஆரம்பித்தது. “இளவரசியே, அழாதே! நதியின் வறண்ட கரைப் பகுதிக்கு செல். உனக்குத் தேவையானது அங்கு கிடைக்கும். இழந்த நிலையை நீ மீண்டும் பெறுவாய்” என்றது அது. உடனே வ்ரிணா தன் படை வீரர்களுடன் நதிக் கரையை அடைந்து அங்கு தோண்ட ஆரம்பித்தாள். என்ன ஆச்சரியம்! வைடூரியச் சுரங்கம் ஒன்றை அவள் கண்டாள். ஏராளமான வைடூரியக் கற்களை அவளால் வெட்டி எடுக்க முடிந்தது. அந்தக் கற்கள் மூலமாக இழந்த செல்வம் மீண்டும் வர பெரும் ராணியானாள் அவள். இந்தக் கதை ரோமானிய நாகரிகத்தில் மிகவும் பிரபலமாக சொல்லப்பட்ட கதை.
இதிலிருந்தே இழந்த செல்வத்தை மீண்டும் தரும் வைடூரியத்திற்கு ரோமானியர்கள் எவ்வளவு மதிப்புக் கொடுத்தனர் என்பதை அறியலாம்!
கிடைக்கும் இடங்கள்
இலங்கையின் பல பகுதிகளில் அருமையான வைடூரியம் கிடைக்கிறது.
பிரேஜில், சீனா, தாய்லாந்து, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்போது வைடூரியம் கிடைக்கிறது.
இந்தியாவில் திருவனந்தபுரம் மற்றும் மலபார் பகுதிகளிலும், ஒரிஸாவின் சில பகுதிகளிலும் வைடூரியம் கிடைக்கப் பெறுகிறது.
தேவி இருக்குமிடத்தில் வைடூரிய பிரகாரம்
தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தம் பதினொன்றாம் அத்தியாயம் மணித்வீபத்தைப் பற்றி வர்ணிக்கிறது.
மணித்வீபம் என்பது பிரம்ம லோகத்திற்கு மேல் உள்ள உலகம். இதில் தேவி வசிக்கிறாள். அவள் வசிக்குமிடத்தில் உள்ள பிரகாரங்கள் வர்ணிக்கப்படுகையில் வஜ்ர பிரகாரத்திற்கு மேலுள்ள பிரகாரமாக அமைவது வைடூரிய பிரகாரம். இங்குள்ள ராஜ மார்க்கம், வாபி, தடாகம், கால்வாய், மணல் எல்லாமே வைடூரியம் தான்! பிராம்ஹி, மாஹேஸ்வரி,கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதர்களும் வசிக்கும் இடம் இது. இவர்களோடு மஹாலக்ஷ்மியும் இங்கு வாசம் செய்கிறாள். பிரகாரத்தின் துவாரங்களில் திரிமூர்த்திகளுடைய வாகனங்களான அன்னம், கருடன், ரிஷபம் ஆகியவை வெகு ஜாக்கிரதையுடன் (எக்கணத்திலும் புறப்படச்) சித்தமாயிருக்கும்.
இன்னும் பல செய்திகளைத் தரும் இந்த வர்ணனை பிரமிப்பூட்டும் ஒன்று. லக்ஷ்மி வாசம் செய்யும் இடம் வைடூரிய பிரகாரம் என்பதை அறியும் போது செல்வ வளத்தை வைடூரியம் கொடுக்கும் என்ற இரகசியம் பெறப்படுகிறது.
செல்வ வளத்துடன் இசைபட வாழ அனைவரும் வைடூரியத்தை வணங்கி வரவேற்று அணிவோம்!
****
அடுத்த கட்டுரையுடன் இந்த நவரத்தினத் தொடர் நிறைவுறும்.
Written by S Nagarajan swami_48@yahoo.com Date: 18 December 2019 Time in London – 9-45 am Post No. 7356 Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
கோகுலம் கதிர் டிசம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை ரத்தினபுரி இலங்கை!
ச.நாகராஜன்
ஸ்வர்ண மயமான இலங்கை என இராமரால் வர்ணிக்கப்படும் இலங்கை உண்மையிலேயே இன்றும் தங்கம் போல ஜொலிக்கும் ஒரு நாடாகவே திகழ்கிறது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய ஒன்று. இராமாயணம் மூலமாக சேதுப் பாலம் அமைக்கப்பட்டு இந்தியாவும் இலங்கையும் சேதுவால் இணைக்கப்பட்டதை அறிய முடிகிறது.
சேது பாலம் அமைக்கப்பட்டதை நாஸாவின் விண்கலம் உறுதிப் படுத்தியதைத் தொடர்ந்து அந்தப் படம் உலகளாவிய விதத்தில் பிரபலமாகியுள்ளது. இது இராமாயண நிகழ்ச்சிகளை உறுதிப் படுத்துவதாக அமைந்துள்ளது.
1505ஆம் ஆண்டு இங்கு வந்த போர்ச்சுக்கீசியர் இதை ‘செல்லாவோ’ என அழைக்க அது மருவி சிலோன் ஆனது. 1948இல் சுதந்திரம் பெற்ற நாடு, 1972இல் அதிகாரபூர்வமாக ஸ்ரீ லங்கா என்ற பெயரைக் கொண்டது.
இலங்கையின் இன்னொரு பெயர் செரிந்திப். இதிலிருந்து தான் serendipity என்ற ஆங்கில வார்த்தை உருவானது. திடீரென்று தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படும் நவீன கண்டுபிடிப்புகளைக் குறிக்கும் வார்த்தை தான் செரிண்டிபிடி.
தமிழுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத ஒன்று.
பாண்டிய மன்னர்களும் இலங்கை மன்னர்களும் பெண் ‘கொடுத்தும் கொண்டும்’ உறவை ஏற்படுத்திக் கொண்டதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன. ‘தொன்மாவிலங்கை’ என சிறுபாணாற்றுப்படையும் ‘தொல் இலங்கை’ என சிலப்பதிகாரமும் குறிப்பதால் இலங்கை சங்க காலத்திற்கும் முற்பட்ட நாடு என்பதைத் தெளிவாக அறியலாம்.
ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவரின் ஏழு பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன. ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழம் பெயர் என்பதை இதனால் அறியலாம்.
சிறிய இந்த தேசத்தை இந்து மஹா சமுத்திரத்தின் முத்து என்று சொல்கின்றனர். இந்தியாவின் வரைபடத்தின் கீழ் சிறிதாகக் கண்ணீர்த் துளி போலத் தோன்றும் இதை ‘இந்தியாவின் கண்ணீர்த் துளி’ என்றும் அழைக்கின்றனர்.
ஒளி என்ற பொருளைத்தரும் இலங்கு என்ற வார்த்தையிலிருந்து இலங்கை என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
25332 சதுர மைல் பரப்பையே கொண்டுள்ள இலங்கையில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. கடற்கரைகளும், வனப் பிரதேசங்களும், தேயிலைத் தோட்டம் அடர்ந்த மலைப் பகுதிகளும், பல மியூசியங்களும் உலக மக்களை வா வா என அறைகூவி அழைக்கின்றன.
கொழும்பை எடுத்துக் கொண்டால் அதன் அழகிய கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் போகாமல் இருக்க முடியாது.
மலைப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மனதைக் கவர்பவை; டீயின் சுவையோ அமிர்தத்திற்கு நிகரானது. இங்குள்ள ஏலக்காயின் மணமும் சுவையும் வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. எகிப்தியர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பேயே இந்த ஏலக்காயின் மகிமையை உணர்ந்து இங்கிருந்து அதைக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர். உலகின் முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கை. 1960 இல் சிரிமாவோ பண்டாரநாயகா இலங்கையின் பிரதம மந்திரி ஆகி இந்தப் பெருமையைப் பெற்றார்.
கேட்பதற்கு இனிய இசையைக் கொண்ட கீதம், இலங்கையின் தேசீய கீதம். அதன் கொடியோ உலகின் மிக மிகப் பழமையான கொடி. கிறிஸ்துவிற்கு முன் 162ஆம் ஆண்டில் பிறந்த சிங்கக் கொடி இன்றளவும் போற்றப்பட்டு அதன் தேசியக் கொடியாக இலங்குகிறது.
எல்லையில்லா மகிமையை இலங்கைக்குச் சேர்க்கும் புத்தரின் பல் இருக்கும் புத்த ஆலயம் கண்டியில் உள்ளது. புத்த ஆலயங்களுக்குள் செல்வோர் ஊதுபத்தி ஏற்றித் தொழுவதால் ஆலயங்கள் அனைத்துமே நறுமணத்தால் சூழப்பட்டிருக்கும். அனுராதபுரத்தில் காணும் மஹாபோதி மரம் உலகில் மனிதனால் நடப்பட்ட பழமையான மரம் என வரலாறு கூறுகிறது.
இலங்கையின் தெற்கே உள்ள ஆடம்ஸ் பீக் அனைத்து மதங்களும் போற்றும் ஒரு இடம். ஆதம் சுவர்க்கத்திற்குப் போகும் முன் தன் காலடியை இங்கு பதித்திருக்கிறார் எனக் கிறிஸ்தவர்கள் சொல்ல, இது புத்தரின் ஶ்ரீ பாதம் என்று புத்தர்கள் சொல்ல, சிவனின் திருப்பாதம் என ஹிந்துக்கள் சொல்கின்றனர். இலங்கையில் சிவன், திருமால், விநாயகர், முருகன் கோவில்கள் எனப் பல கோவில்கள் உள்ளன. திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரம் சிவன் கோவில் பழமையான ஒன்று. திருஞானசம்பந்தர் தன் ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசித்து ஒரு பதிகம் பாடியருளியுள்ளார். அதுமட்டுமன்றி 51 சக்தி பீடங்களில் இது ஒன்றாகவும் கருதப்படுகிறது. தேவியின் இடுப்பு விழுந்த பகுதி இந்தத் தலம் எனக் கூறப்படுகிறது.
கேது வழிபட்ட தலமான கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ளது. இத்தலத்தின் மீது ஞானசம்பந்தரும், சுந்தரரும் பதிகம் பாடியுள்ளனர்.
கதிர்காமம் இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகனின் பாதயாத்திரைத் தலம். இங்குள்ள கருவறையினுள் யாரும் புக முடியாது. திரையிட்டு மூடப்பட்டிருக்கும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை வேண்டிப் பாடிய பாடல்கள் தேனினும் இனிக்கும் சுவை கொண்டவை.
‘உடுக்கத் துகில் வேணும் நீள்பசி அவிக்கக் கனபானம் வேணும் நல் ஒளிக்குப் புனலாடை வேணும்மெய் யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் உள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணும் இவ் வகையாவும் கிடைத்துக் க்ருஹவாசி ஆகிய மயக்கக் கடல் ஆடி நீடிய கிளைக்குப் பரிபாலனாய் உயிர் அவமேபோம் க்ருபை சித்தமு ஞான போதமு மழைத்துத் தரவேணும்’
என்று இப்படி அருணகிரிநாதரின் திருப்புகழை மனமுருகப் பாடாதார் யாரும் இல்லை. ‘திருமகள் உலாவும் இருபுய முராரி’ என்ற திருப்புகழ்ப் பாடலும் தவறாது முருக பக்தர்களால் பாடப்படும் பிரசித்தமான பாடலாகும்.
இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் அங்கு 92 சதவிகித மக்கள் கல்வியறிவு படைத்தவர்கள். கலை உணர்வு மிக்கவரும் அரிய நூல்களை எழுதிவருமான ஆனந்த குமாரசாமி, நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் புதினங்களைப் படைத்த பிரபல எழுத்தாளர் ஆர்தர் கிளார்க், சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய ஆறுமுக நாவலர் உள்ளிட்ட ஏராளமானோர் இலங்கைக்குப் புகழ் சேர்ப்பவர்கள்.
யானை உள்ளிட்ட 123 அரிய விலங்கினங்களும், 227 வகையான பறவை இனங்களும், 178 வகையான பாம்பு போன்ற ஊர்ந்து செல்லும் உயிரினங்களும் 122 வகையான நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்களும் இங்கு உள்ளன.
இலங்கையின் தேசீய விளையாட்டு வாலிபால் எனலாம்.
ரத்தினங்களின் தலைநகரம் இலங்கை என்று கூறப்படுகிறது. மாணிக்கம், நீலம் உள்ளிட்ட ரத்தினக் கற்கள் அபரிமிதமாக இங்கு கிடைக்கின்றன. ரத்தினபுரி தான் இலங்கை!
அபூர்வ நாடாகிய இலங்கை இராமாயண காலத்திற்கு முற்பட்ட சரித்திரத்தைக் கொண்ட பழம்பெரு நாடாகும். இதை எப்படிச் சுருக்கமாக வர்ணிப்பது? OLD AND GOLD!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
14-12-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நீலம் செய்யும் ஜாலம்!
ச.நாகராஜன்
Princess Diana
சனி பயம் போக்கும் நீலம்
சனி பகவானை நினைத்தாலேயே பலருக்கும் பயம். ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி (அர்த்தாஷ்டம சனி) என்றெல்லாம் பயப்பட்டு தங்கள் துன்பத்திற்கெல்லாம் சனியே காரணம் என்று நொந்து கொள்வர்.
ஆனால் உண்மையில் கிள்ளி எடுக்கும் சனி அள்ளிக் கொடுப்பவரும் கூட. கெடுக்கும் சனி என்று சொல்லப்படுபவரே கொடுக்கும் சனி என்பதையும் உணர வேண்டும்.
நளனும் பேரழகி தமயந்தியும் ஒருவரை ஒருவர் காதலித்து மணந்த கதையும் பின்னால் பிரிந்த கதையும் நாம் அறிந்ததே.
சனியின் பிடி நீங்கி இருவரும் மீண்டும் இணைந்ததைப் படிக்கும் போது மனம் பெரிதும் ஆறுதல் அடைகிறது. திரு நள்ளாற்றில் நளன் சனியை வணங்கி அவன் அருள் பெற்று இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்ற வரலாறை அறிவதால் நாமும் அங்கு சென்று வழிபட்டு பிரச்சினைகள் அனைத்தும் நீங்கப் பெறுகிறோம்.
அந்த நளன் பட்ட பாடை விட நான் படும் பாடு பெரும்பாடு என்று சொல்பவர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் அற்புத மணியாக, ஜாலம் செய்யும் மணியாக அமைகிறது நீலம்.
Princess Kate William
ஜோதிடம் பரிந்துரைக்கும் நீலம்
ஒரு ஜாதகத்தில் சனி தீய பலன்களைத் தரும் அம்சம் இருப்பின் நீலமே அந்த ஜாதகருக்கும் உதவும் மணியாகும்.
முதலில் ஏழரை நாட்டுச் சனி என்று அழைக்கப்படும், சனி ராசிக்கு 12ஆம் இடம், ஜன்ம ஸ்தானம், இரண்டாமிடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஏற்படும் தீய பலன்களை இந்திர நீலம் மட்டுப்படுத்தும். அடுத்து அஷ்டம சனி (எட்டாம் இடத்தில் சனியின் சஞ்சாரம்) மற்றும் கண்டச் சனியினால் (நான்காம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலம்) ஏற்படும் தீய பலன்களும் கூட நீலம் செய்யும் ஜாலத்தால் மட்டுப்படுத்தப்படும்.
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அணிய உகந்த கல் நீலம்.
எண் கணிதத்தில் சனி பகவானுக்குரிய எண் 8. ஆகவே 8 எண்ணில் பிறந்தவர்களும் கூட்டு எண் 8ஆக உடையவர்களும் அணிய வேண்டிய கல் நீலமே.
ப்ளூ சபயர் (Blue Sapphire) என்று கூறப்படும் நீலத்தின் வரலாற்றை ஆராயப் போனால் பழங்காலத்திய அறிஞர்கள் எந்தக் கல்லுக்கு இந்தப் பெயரைத் தந்தார்கள் என்பது தெளிவாக விளங்கவில்லை. லெபிஸ் லஸூலி, டர்க்காய்ஸ், ஹயாசிந்த் (Lapis Lazuli, Turquoise, Hyacinth ) ஆகிய பல வண்ணக் கற்களையும் ஸபையர் என்றே கருதும் வகையில் பழைய நூல்களின் விளக்கங்கள் உள்ளன.
இந்தியாவிலும் அரேபியாவிலும் ஆரோக்கியம் நிலைப்பதற்கான தாயத்தாகவும் தீய திருஷ்டியைப் போக்கவும் நீலம் அணியப்பட்டு வந்தது. கடும் தொற்று நோய்களான பிளேக் உள்ளிட்ட மரண நோய்களை இது அண்ட விடாது என்பதும் இந்திய, அரேபியர்களின் நம்பிக்கை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இருக்க தீய திருஷ்டி ஒருவரை அண்டாது என அனைவரும் நம்பினர். அத்துடன் மனதை அலை பாய விடாது ஒரு நிலைப்படுத்தும் அரிய கல் இது என அனைவரும் போற்றி வந்துள்ளனர்.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் நீல மணி பற்றிப் பல அரிய குறிப்புகளை பண்டைய நூலின் மேற்கோள்களுடன் தருகிறார். அதன்படி நீலத்தின் வகைகள் 4. குணங்கள் 11. குற்றங்கள் 8.(நீல மணி போன்ற நிறத்தை உடைய மயில்கள் உனது சாயலுக்குத் தோற்று காட்டில் போய் ஒளிகின்றன – ‘மாயிரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் சாயற்கு இடைந்து தண்கள் அடையவும்’ என்பன போன்ற பல மணியான வரிகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.) இவை விரிப்பின் பெருகும்; ஆதலால் தக்க தமிழறிஞரை நாடி அறியலாம்.
ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்
நீலத்தைப் பற்றிப் பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை:
நீலம் பழங்காலத்தில் கலிங்கத்திலிருந்து கிடைத்து வந்தது. (இப்போதைய ஒரிஸாவும் வங்காளத்தின் மேற்குப் பகுதியும் இணைந்த பிரதேசம் கலிங்கம் என அழைக்கப்பட்டது). ஸ்ரீ லங்காவிலும் தரமான நீலக் கற்கள் கிடைத்தன.
நீலம் இரு வகைப்படும். 1) ஜல நீலம் 2) இந்திர நீலம்.
இவற்றுள் இந்திர நீலமே சிறந்தது.
இரு வகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் சற்று லேசானதாகவும் வெள்ளை ஒளியைக் கக்குவதாகவும் இருப்பது ஜல நீலமாகும்.
இந்திர நீலமோ கனமாக இருக்கும். கறுப்பு ஒளியை உள்ளிருந்து வெளிப்படுத்தும்.
ஜல நீலத்தில் சிவப்பு ஒளி காணப்பட்டால் அது ரக்த-காந்தி அல்லது ரத்ன-முகி எனப்படும். ஜல நீல வகையில் இதுவே சிறந்தது.
இந்திர நீலத்தை எடுத்துக் கொண்டால் சிறந்த இந்திர நீலக் கல் சீரான ஒளியுடன் கூடி இருக்கும். கனமாக இருக்கும். மேல் பரப்பில் எண்ணெய் பூசினாற் போலக் காணப்படும்.அது ஒளி ஊடுருவும் தன்மையுடன், உருண்டையாக மிருதுவாக உள்ளிருந்து ஒளியைப் பிரகாசித்துக் கொண்டவாறே இருக்கும்.
ஜல நீலத்தில் ஏழு வகைகள் உண்டு 1) ஐந்து வண்ணங்களை இணைத்து உள்ளது 2) ஐந்து வண்ணங்களை ஒரு பாதியிலும் இன்னொரு பாதியில் ஒரே ஒரு வண்ணமும் இருப்பது 3) மேற்பரப்பில் எண்ணெய் பூச்சு கொண்டது போலத் தோற்றமளிக்காதது 4) மிக லேசானது 5) உள்ளே சிவப்பு ஒளியுடன் காணப்படுவது 6) தட்டை வடிவுடன் கூடியது (அல்லது இன்னும் சிலரின் கருத்துப்படி வெந்த அரிசியை தட்டினால் வரும் தட்டை வடிவத்துடன் கூடியது) 7) சிறிய அளவுடன் கூடியது (சிறியது)
தாமிர வண்ணத்தில் உள்ள நீலமானது ஒதுக்கப்பட வேண்டாம். இதே போல தாமிர வண்ணத்தில் உள்ள கரபீரம் மற்றும் உத்பலம் (Opal) ஆகிய கறகளையும் ஒதுக்கத் தேவையில்லை.
வானவில் நீலம் : வானவில் போல ஜொலிக்கும் கல்லின் மதிப்பைச் சொல்லவே முடியாது. பூமியில் காணுதற்கு மிகவும் அரிதானது இது.
மஹா நீலம் : நீல வண்ணம் அளப்பரியதாக இருக்கும் நீலக் கல் மஹா நீலம் எனப்படும் அல்லது பெரும் நீலம் என அழைக்கப்படும்.
நீலம் செய்யும் ஜாலம்
சனியினால் ஏற்படுகின்ற கிரக தோஷங்கள் நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் விலகும்.
சிந்தனை சீராகும். பணம் செழிக்கும். பல்வேறு விதமான தொல்லைகள் தீரும்.
சனி நலம் பயக்கும் நிலையில் இருந்தால் அந்த நல்ல பலன்கள் கூடுதலாகும்.
இந்தக் கல்லின் இரசாயனச் சமன்பாடு அலுமினியம் ஆக்ஸைடு ஆகும். (Al2O3 )
மோவின் அலகுப் படி இதன் கடினத் தன்மை : 9
இதன் ஒப்படர்த்தி :- 3.98 – 4.06
நீலம், கொரண்டம் எனற கனிம வகையைச் சேர்ந்தது.
சாணக்கியர் கூறும் எட்டு வகை நீலங்கள்
சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரம் மற்றும் சாணக்ய நீதியில் நவரத்னக் கற்களைப் பற்றிய ஏராளமான நல்ல குறிப்புகளைத் தருகிறார்.
இந்திரநீலம் : மயிலின் தோகை போல நீல நிறத்துடன் ஒளிர்வது.
கலாயவண்ணம் : கலாயம் என்னும் ஒரு வகை தானிய மலரைப் போன்ற வண்ணம் கொண்டு ஒளிர்வது.
மாநீலம் – பொன்வண்டின் நிறம் கொண்டு பிரகாசிப்பது
நாவல் வண்ணம் – நாவல் பழத்தைப் போன்ற நிறம் கொண்டு ஒளிர்வது.
முகில் வண்ணம் – முகில் என்றால் மேகம் என்று பொருள். மேகம் போன்ற நிறம் கொண்டு பிரகாசிப்பது.
நந்தகம் – தவளை போன்று உள்ளே வெண்மையும் வெளியே நீல நிறமும் கொண்டு ஒளிர்வது
நடுநீர்ப் பெருக்கு – நீர்ப் பெருக்குப் போல நடுவில் நீலத்துடன் பிரகாசிப்பது.
ஆக இந்த எட்டு வகையும் மனித குலத்திற்கு நன்மை பயப்பதே ஆகும்.
செயற்கை நீலம்
செயற்கை முறையில் சிந்தடிக் நீலக் கற்கள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி 1902ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் பல்வேறு விதமான முறைகள் கையாளப்பட்டு ஒரு வழியாக செயற்கை நீலக் கல் உருவானது. என்றாலும் கூட இயற்கையில் இருக்கும் நீல ஒளி அதே போல அமையவில்லை.
அமெரிக்காவும் ரஷியாவும் இந்த செயற்கைக் கற்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளன. 2003ஆம் ஆண்டில் மட்டும் 250 டன்கள் செயற்கை நீலம் உருவாக்கப்பட்டுள்ளது; அவை தொழிலகப் பயன்பாட்டிற்கும் உதவ ஆரம்பித்தன. பல்வேறு அரிய தன்மைகள் உள்ள செயற்கை நீலக் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு ஜன்னல்களில் பதிக்கப்படலாயின.
அரிய நீலக் கற்கள்
உலகில் ஏராளமான அரிய வகை நீலக் கற்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமானவை 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ லங்காவில் ரத்னபுரம் என்னும் இடத்தில் வெட்டி எடுக்கப்பட்ட நீல மணியாகும். ரத்னபுரம் நவரத்தினங்களின் நகர் என்ற பெயர் பெற்ற நகராகும். இது 1404.49 கேரட் எடையுடன் கூடியது. அதாவது 280 கிராம் எடை கொண்டது.
இதன் விலை 1000 லட்சம் டாலர் என மதிப்பிடுகின்றனர். (ஒரு டாலர் சுமார் 70 இந்திய ரூபாய்க்குச் சமம்.) ஆனால் இதை 1750 லட்சம் டாலருக்குக் கூட விற்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு ‘தி ஸ்டார் ஆஃப் ஆடம்’ (The Star of Adam) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஈடன் தோட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆடம் நேராக ஸ்ரீ லங்கா வந்ததாகவும், ஆடம்ஸ் பீக் என்று இப்போது அழைக்கப்படும் மலையில் ஆடம் வாழ்ந்ததாகவும் ஒரு பெரும் நம்பிக்கை நிலவுகிறது. அதன் அடிப்படையில் இப்பெயர் இடப்பட்டிருக்கிறது.
கடந்த 2000 ஆண்டுகளாக ஸ்ரீ லங்காவில் பல அரிய வகை ரத்தினக்கற்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டார் சபையர் என்று பெயரிடப்படும் நீல மணிகள் ஆறு முனை உள்ள நட்சத்திரம் போல ஒளி விடும் கற்களாகும்.
க்வீன்ஸ்லாந்தின் ப்ளாக் ஸ்டார் என்று அழைக்கப்படும் நீல மணி 733 கேரட் எடை கொண்டது. இது உலகின் இரண்டாவது பெரிய நீலமணியாகும். ஸ்டார் ஆப் இந்தியா என்று அழைக்கப்படும் மூன்றாவது பெரிய நீலக் கல் 563.4 கேரட் எடை கொண்டது. இது இப்போது வாஷிங்டன் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஆஃப் பாம்பே என்ற கல் 182 கேரட் எடை கொண்டது.
காஷ்மீர், பர்மா, ஸ்ரீ லங்கா ஆகிய இடங்களில் கிடைக்கும் நீலம் அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. காஷ்மீர் கற்கள் பழைய காலத்தில் கிடைத்தவை. அவை மாறி மாறி விற்கப்பட்டு அணியப்படுகின்றன. கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் நீலம் கிடைக்கிறது. இந்தியாவில் திருவனந்தபுரம் பகுதியில் நீலக் கற்கள் அபூர்வமாகக் கிடைக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் கிரஹ தோஷத்தினால் எதையெதை எல்லாம் இழந்தோமா அதையெல்லாம் மீண்டும் திரும்பப் பெற ஒருவர் அணிய வேண்டிய கல் நீலமே. அலங்கோலமாக இருக்கும் வாழ்க்கையை குதூகலமாக மாற்றுவதற்கான ஜாலத்தைச் செய்ய வல்லது நீலம்!
நல்ல வைரம் எப்படி உடனடியாக நற்பலனைக் காண்பிக்கிறதோ, தோஷமுள்ள வைரம் எப்படி உடனடியாகத் தீய பலன்களைக் காண்பிக்கிறதோ, அதே போல நீலமும் உடனேயே நற்பலன்களை அளிக்க வல்லது; தோஷமுள்ள நீலக் கல் உடனேயே தீய பலன்களைக் காண்பித்து விடும். ஆகவே இதைத் தேர்வு செய்பவர்கள் நிபுணரின் உதவியை நாடி நல்ல கல்லை மட்டுமே அணிய வேண்டும்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
மாலைமலர் நாளிதழில் 9-12-2019 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை!
‘தேடுதற்கு அரிதான நவமணி அழுத்தி இடு… சண்முகன் கை வேலே’ என்று முருகனின் கையில் இருக்கும் வெற்றி வேலில் தேடியும் கிடைப்பதற்கு அரிதான ஒன்பது இரத்தினங்கள் பதிக்கப்பட்டிருப்பதை வேல் விருத்தம் போற்றிப் புகழ்கிறது.
நவ ரத்தினங்களில் ஒன்றான புஷ்பராகம் நமது இதிஹாஸங்களிலும் அக்னி புராணம், கருட புராணம் ஆகிய நூல்களிலும் பெரிது சிறப்பாகப் பேtசப்படும் ரத்தினம்.
கருடபுராணத்தில் 68ஆம் அத்தியாயம் முதல் 80ஆம் அத்தியாயம் வரை ஒன்பது நவரத்தினங்கள் பற்றிய விளக்கமும் அவற்றைச் சோதனை செய்து தேர்வு செய்யும் முறையும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. 74ஆம் அத்தியாயம் புஷ்பராகத்தைப் பற்றிப் புகழ்ந்து விளக்குகிறது.
தெய்வாம்சம் பொருந்திய இந்தக் கல் தேவர்களுக்கு மிகவும் பிடித்தது.
அமராவதி உள்ளிட்ட தேவ லோகமே அற்புதமாக புஷ்பராகத்தால் அமைக்கப்பட்டது தான் என நமது புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீ தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைப் பற்றி விவரிக்கையில் மணித்வீபத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது (12ஆம் ஸ்கந்தம், 10,11 அத்தியாயங்கள்) நவரத்தின பிரகாரங்களை வர்ணிக்கிறது.
“புஷ்பராக மயமான பிரகாரம், பூமியும் வனங்களும், உபவனங்களும், சோலைகளில் உள்ள ரத்ன விருட்சங்களும், மதில்களும் புஷ்பராக மயமாகவே பிரகாசித்தும், பட்சிகள், ஜலங்கள், மண்டபங்கள், தூண்கள், குளங்கள், குளத்தில் மலரும் தாமரைகள் முதலியனவும் ரத்ன மயமாகவே இருப்பதால் ரத்னசாலை என்று பெயர் பெற்றும் விளங்குகிறது” என்று இவ்வாறு புஷ்பராக பிரகாரத்தை அது வர்ணிக்கிறது!
அனைத்து நாகரிங்களும் போற்றும் ரத்தினம்
புஷ்பராகத்தை ஆங்கிலத்தில் டோபாஸ் (Topaz) எனக் கூறுவர். தபஸ் என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து டோபாஸ் என்ற வார்த்தை உருவானதாக மொழியியல் அறிஞர் கூறுவர். தபஸ் என்பதற்கு ஒளி பொருந்திய அக்னி என்று ஒரு பொருள் உண்டு. அதை இந்தக் கல் குறிக்கிறது.
இன்னும் சிலர் டோபாஜியோஸ் (Topazios) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை உருவானதாகக் கருதுகின்றனர்.
மஞ்சள் நிற இரத்தினம் பற்றிப் பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகிறது. இதை புஷ்பராகம் என்று சிலரும், அதன் இன்னொரு வகை என்று சிலரும் கருதுகின்றனர்.
ஆக, மிகப் பழங்காலத்தில் இருந்தே புஷ்பராகம் பல நாகரிகத்தினராலும் அரிதாக மதிக்கப்பட்டு வருவது தெரியவருகிறது.
குருவுக்குரியது புஷ்பராகம்
ஜோதிட சாஸ்திரத்தில் கனக புஷ்பராகம் என்று குறிப்பிடப்படும் இந்தக் கல் குரு கிரகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இயக்க சக்தியைக் குறிக்கும் கிரகம் – குரு கிரகம்.
தனுர் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு உகந்த கல் இதுவே. குரு பகவான் தரும் நல்ல பலன்களை அதிகப் படுத்தவும் இந்தக் கல் பரிந்துரைக்கப்படுகிறது. குரு பகவானின் தீய பார்வையைப் போக்க வல்லது புஷ்பராகம்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதை அணிந்தால் அதன் தாக்கம் குறையும். எண் கணிதக் கலையில் குரு கிரகமானது 3 என்ற எண்ணுடன் தொடர்பு படுத்தப்படும். இந்தக் கல்லை 3 எண்காரர்கள் (பிறந்த தேதி 3 அல்லது கூட்டு எண் 3 இருந்தால்) இதை அணியலாம்; அனைத்துப் பலன்களையும் பெறலாம்.
திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். வயிற்று நோய்கள் போகும் என்பது ஜோதிட சாஸ்திரம் பரிந்துரைக்கும் பலன்களாகும்.
புக்ராஜ் என வட இந்தியாவில் இது கூறப்படுகிறது.
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
ரஸ ஜல நிதி என்னும் நூல் தரும் சுவையான தகவல்கள் இவை:-
புஷ்பராகம் இரு வகையான சுரங்கங்களிலிருந்து கிடைக்கப் பெறும் ஒரு அபூர்வமான ரத்தினம். மாணிக்கம் மற்றும் மரகதம் கிடைக்கும் சுரங்கங்களில் இது காணப்படும்.
ரத்தினக்கற்களில் தேர்ச்சி பெற்ற சந்திர சேனர் என்ற ராஜா இதன் நிறத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இது மஞ்சள் நிறமாக இருக்கும், ஒளி ஊடுருவ வல்லது, வைரம் போலப் பிரகாசிப்பது என்று குறிப்பிடுகிறார்.
இது புத்திர பாக்கியம் இல்லை என்று ஏங்குவோருக்கு மகனைத் தரும். இதை அணிபவர் பெரும் செல்வந்தர் ஆவார்.
இதர ரத்தினக்கற்களிலிருந்து புஷ்பராகத்தை எப்படி இனம் பிரித்து அறிவது?
மஞ்சள் வண்ணத்துடன் பிரகாசமாக இருப்பது புஷ்பராகம் ஆகும்.
மஞ்சள் வண்ணத்துடன் சிறிது சிவப்பு கலந்திருந்தால் அதன் பெயர் கௌராந்தகம் எனப்படும்.
மஞ்சள்-சிவப்புடன் ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருப்பின் அதன் பெயர் கஷவம் எனப்படும்.
நீல வண்ணத்துடன் சிறிது வெண்மை கலந்திருந்து அது மிருதுவாக இருப்பின் அதன் பெயர் சோமலகம் எனப்படும்.
(மிகவும் சிவப்பாக இருப்பது மாணிக்கம். மிகவும் நீலமாக இருப்பது நீலம்.)
புஷ்பராகத்தில் வேறு வண்ணங்களும் உண்டு. அவையாவன 1) வெண்மை 2) மஞ்சள் 3) வெளுத்த வெண்மை 4) கறுப்பு
நல்ல புஷ்பராகத்தின் குணங்கள் :
கனமாக இருக்கும். ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். அதன் மேல் எண்ணெய் பூசப்பட்டது போல இருக்கும். அருமையான வடிவத்துடன் இருக்கும். கர்னிகர மலர் போல இருக்கும்.
விலக்கத்தக்க புஷ்பராகம் :-
மேல் பரப்பில் கரும் புள்ளிகள் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, வெண்மையாக இருப்பது, ஒளி இழந்து இருப்பது, இயல்பான தனது வண்ணத்துடன் இன்னொரு வண்ணம் கலந்திருக்காமல் இருப்பது, புள்ளிகள் இருப்பது – இப்படி உள்ள புஷ்பராகம் விலக்கத்தக்கது.
வழுவழுப்பாக இல்லாமல் இருப்பது, பழுப்பு அல்லது பழுப்புடன் கூடிய சிவப்பு, வெளுத்த வெண்மை, வெறும் மஞ்சள் வண்ணம் மட்டும், வெறும் கறுப்பு வண்ணம் மட்டும் இருக்கும் கற்களும் விலக்கத் தக்கதே.
புஷ்பராகம் அணிவதால் ஏற்படும் பலன்கள்
விஷத்தை அகற்றும். வயிற்றுக் குமட்டலை நீக்கும். அதிகமான வாயுத்தொல்லையைப் போக்கும். ஜீரணசக்தி குறைந்திருந்தால் அதை அதிகப்படுத்தும். வீக்கத்தை வற்ற வைக்கும். குஷ்டரோகத்தை நீக்கும். ரத்தக் கசிவைப் போக்கும்.
இவையெல்லாம் பழம்பெரும் நூலான ரஸஜல நிதி தரும் தகவல்கள்.
டோபாஸ் ஐலேண்ட்
புஷ்பராகம் பண்டைய காலத்தில் அனைத்து நாகரிகத்தினராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. இதை டோபாஸ் என்று அழைத்தனர். ஜஸிரட் ஜபூகட் (Jazirat Zabugat) என்ற தீவிலிருந்து இது கிடைப்பதாகப் பழம் பெரும் கிரேக்க நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தீவு எங்கிருக்கிறது என்பதை ஆராயப் புகுந்த இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் இன்றைய டோபாஸ் ஐலேண்டே (Topaz Island) ஜஸிரட் ஜபூகட் என்று முடிவுக்கு வந்துள்ளனர். செங்கடலில் உள்ள இந்தத் தீவு இப்போது ஜபர்காட் (Zabargad) என அழைக்கப்படுகிறது.
இடது கையில் இதை அணிவது தீய கண்திருஷ்டியைப் போக்கும் என்றும் பிரச்சினைகள் வரும் போது அதை எதிர்கொள்ள வலிமையைத் தரும் என்றும் கிரேக்க நூல்கள் கூறுகின்றன. கோலோன் கதீட்ரலில் உள்ள மாபெரும் மன்னர்களான காஸ்பர்,மெல்சியார்,பல்தஜார் ஆகியோர் புஷ்பராகம் அணிந்தவர்களே. ஏராளமான சிலுவைகளில் புஷ்பராகம் பதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சளுடன் பச்சை வண்ணம் கலந்த புஷ்பராக வகைகள் குடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும் என்றும் பொறாமை எண்ணங்கள் மனதில் தோன்றாமல் தடுக்கும் என்றும் கிரேக்க நூல்கள் கூறுகின்றன.
இதை நெக்லஸாக அணிவது துக்கத்தைப் போக்கி நுண்ணறிவைத் தீர்க்கமாக்கும் என்றும் நம்பப்பட்டது. விஸ்வாசம், நட்பு, நம்பிக்கை ஆகிய அனைத்திற்குமான ஒரே ரத்தினம் புஷ்பராகம் தான்.
புஷ்பராக சிகிச்சை
தீ விபத்து மற்றும் இதர விபத்துக்கள் ஏற்படாதவண்ணம் காக்கும் கல் புஷ்பராகம். பிரபல யோகியான பிஞ்ஜெனைச் சேர்ந்த செயிண்ட் ஹில்டிகார்ட் (St Hildegard of Bingen) 1255ஆம் ஆண்டு கண் சம்பந்தமான வியாதிகளைத் தீர்க்க ஒரு அரிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினார்.புஷ்பராகத்தைச் ஒரு ஒயின் உள்ள பாட்டிலில் செங்குத்தாக மூன்று நாள் வைத்திருந்து, பின்னர் அதை எடுத்துக் கண்களின் மீது லேசாகத் தேய்க்க வேண்டும். பின்னர் அதைக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். மங்கலான கண்பார்வை மறைந்து கண் பார்வை தீர்க்கமாகி கூர்மையான பார்வை உருவாகும். பைத்தியம் போகவும் புஷ்பராக சிகிச்சைப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
வானவில்லில் இருக்கும் அனைத்து வண்ணங்களிலும் புஷ்பராகம் கிடைப்பது அதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. சிவப்பு வண்ணத்துடன் கூடிய புஷ்பராகம் இம்பீரியல் டோபாஸ் என அழைக்கப்படுகிறது. கிடைக்கின்ற புஷ்பராகக் கற்களில், இது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே கிடைக்கிறது.
அறிவியல் தகவல்கள்
மோவின் அலகின் படி இதன் கடினத்தன்மை 8 ஆகும்.
அறிவியல் ரீதியாக இதைச் சொல்லப் போனால் இது அலுமினியம் மற்றும் புளோரின் ஆகியவற்றின் சிலிகேட் தாதுவால் ஆனது. இதன் இரசாயன சமன்பாடு Al2SiO4(F,OH)2 .
இதன் ஒப்படர்த்தி : 3.49 – 3.57
புஷ்பராகம் கிடைக்கும் இடங்கள்
இன்றைய நவீன யுகத்தில் பிரேஜிலில் கிடைக்கும் புஷ்பராகம் அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது. அமெரிக்கா (ஊடாஹ் என்னுமிடம்), ரஷியா, ஆப்கனிஸ்தான், இலங்கை, நார்வே, இத்தாலி,ஜிம்பாப்வே, ஜெர்மனி,நைஜீரியா போன்ற பல நாடுகளிலும் புஷ்பராகத்தின் வெவ்வேறு வகைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு பகுதிகளில் இது கிடைக்கிறது.
புஷ்பராகத்தின் அரிய கற்கள்
19ஆம் நூற்றாண்டில் ரஷியாவில் ஜார் அரசாண்ட காலத்தில், இளஞ்சிவப்பில் புஷ்பராகம் கிடைக்கவே அரிதான இந்த ரத்தினக் கல்லை ஜார் மன்னரும் அவர் குடும்பத்தினரும் மட்டுமே அணிய வேண்டும் என்றும் அவர் கொடுத்தால் மட்டுமே இதரர் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
1680 கேரட்டில் கிடைத்த புஷ்பராகம் போர்த்துக்கீசிய மன்னரின் மகுடத்தில் பதிக்கப்பட்டது. இது வைரம் என முதலில் நினைக்கப்பட்டு பின்னால் புஷ்பராகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்டில் உள்ள அமெரிக்கன் கோல்டன் டோபாஸ் 22892 கேரட் அதாவது 4.5785 கிலோ எடை உள்ளது. இது 172 வெட்டுக்களைக் கொண்டது. பல வர்ணஜாலங்களைக் காட்டுகிறது. 11.8 கிலோ மஞ்சள் வண்ணக் கல்லிலிருந்து இது வெட்டப்பட்டு உருவாக்கப்பட்டது. பிரேஜிலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கல் 1988ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைவரும் கண்டு களிப்பதற்காக வாஷிங்டன் மியூஸியத்தில் வைக்கப்பட்டது.
இன்னொரு அரிய 31000 கேரட் உள்ள கல் எல்-டோராடோ டோபாஸ் என அழைக்கப்படுகிறது. இதன் எடை 6.2 கிலோ ஆகும். இதுவும் பிரேஜிலில் வெட்டி எடுக்கப்பட்ட கல் ஆகும். 37 கிலோ கல்லிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த அரிய கல் இப்போது பிரிட்டிஷ் அரச வம்சத்தினரிம் உள்ளது.
தெய்வீக மணி புஷ்பராகம்
கோயிற் புராணம் என்ற நூல் ஞாயிறு முதல் சனி வரை ஒவ்வொரு கிழமையன்றும் ஒவ்வொரு ரத்தினம் இறைவனுக்கு அர்ப்பிக்கப்படுவதைச் சிறப்பித்து “நண்ணித் தினகரன் முதலோர் கிழமை கொணல்மார் நவமணி அணி மேவ” என்று கூறுகிறது. இதன் படி வியாழக்கிழமை புஷ்பராகம் அர்ப்பிக்கப்படுவதை அறிய முடிகிறது.
தெய்வீக மணியான புஷ்பராகம் தேவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று, என்றால் பல நலன்களைத் தரும் அது மனிதர்களுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன?!
You must be logged in to post a comment.