புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்! (Post No.4406)

Written by S.NAGARAJAN

 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-24 am

 

 

Post No. 4406

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 2

பிறவி ஏன்? முக்தி எப்போது – கட்டுரை எண் 4388 வெளியான தேதி ̀12-11-17 – இதைத் தொடர்ந்து வெளியாகும் கட்டுரை இது.

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்!

 

ச.நாகராஜன்

அத்வைத நோக்கில் புண்ணிய, பாவ கர்மங்களைப் பற்றி இனி காண்போம்,

 

*

 

சரீர பரிக்கிரகத்தினால் ஆன்மாவுக்குத் துக்கம் எனில். அது எத்தனை விதம்?

புண்ணியம், பாவம், மிஸ்ரம் என்று மூன்று விதம்.

 

இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

புண்ணிய கர்மத்தினால் தேவாதி சரீரம் உண்டாகும்.

பாவ கர்மத்தினால் மிருகாதி சரீரம் உண்டாகும்.

புண்யமும் பாவமும் இணைந்த மிஸ்ராதி (கலந்த) கர்மத்தினால் மனுஷ்யாதி சரீரம் உண்டாகும்.

 

இவைகளில் வித்தியாசம் உண்டா?

அத்ருஷ்டம், மத்யமம்,சாமான்யம் என்று தனித் தனியாக மூன்று வித பேதங்கள் (வேறுபாடுகள்) உண்டு.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ம பந்தத்தினால் தான் நானாவித ஜனபேதம் உருவாகிறது.

எப்படி எனப் பார்ப்போம்.

ஹிரண்யகர்ப்பாதி சரீரம் புண்யோத்க்ருஷ்ட சரீரம்.

இந்திராதி சரீரம் புண்ய மத்யமம்.

யட்ச, ராக்ஷஸ, பிசாசம் புண்ய சாமானியம்.

 

இந்த மூன்று வித கர்மங்கள் எதனால் ஏற்படுகிறது?

மூன்று வித கரணங்களினால்.

 

அப்படியா? ஆத்மாவினால் அல்லவா?

ஆத்மா அவிகாரி, நிஷ்கிரியன் (அவத்த பேதம்) அவயவம் அற்றவனாவதால் கர்த்ருத்வம் கிடையாது.

 

ஆனால் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இருப்பது போலத் தோற்றமளிக்கிறதே. இது ஏன்?

அத்தியாசிகமே. (அதாவது ஆரோபிதமே)

 

புரியவில்லை. ஆரோபிதம் என்றால் என்ன?

ஒன்றின் தர்மங்கள் வேறொன்றில் காணப்படுதலே ஆகும்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஓடம் ஒன்று நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓடத்தின் ஓட்டம் நதிக்கரையில் இருக்கின்ற மரங்களிலும், அசையாமல் ஓரே இடத்தில் இருக்கும் தன்மையை உடைய  மரங்களின் தர்மம் ஓடத்திலும் ஆரோபிப்பது போலாகும்.

 

நல்லது, மூன்று கரணங்களும் அசேதனமாக இருக்கின்ற போது, அதற்கு எப்படி கர்த்ருத்வம் உண்டாகும்?

(குறிப்பு: சேதனம் என்றால் உயிருள்ளவைகள். ஜங்கமம் என்று சொல்லப்படும். அசேதனம் என்றால் ஸ்தாவரம் , அதாவது உயிரில்லாத ஜட வஸ்துக்கள்)

அசேதனமன நீரும், காற்றும் மரம் முதலானவற்றை வேருடன் பிடுங்கித் தூக்கிக் கொண்டுபோவது போல,தூக்கி எறிவது போல கர்த்ருத்வம் காணப்படுகிறதில்லையா?

அதே போல மூன்று கரணங்களுக்கும் வேறு கரணங்களின்றிக் கர்த்ருத்வம் காணப்படுகிறது.

 

இந்த மூன்று வித கரணங்களினால் செய்யப்படுகின்ற கர்மங்கள் யாவை?

ஸவிசேஷ சிந்தை, நிர்விசேஷ சிந்தை, பரலோக சிந்தை, பக்தி ஞான வைராக்கிய சிந்தை என்பவையேயாம்.

இவைகளில் மனதினால் செய்யப்படுபவை புண்ணிய கர்மங்கள்- விஷய சிந்தை.

மற்றவர்களுக்கு உபகார சிந்தை,

வேத சாஸ்திரங்களில் பற்றுள்ள சிந்தை,

தர்மம், அதர்மம் என்கிற சிந்தை,

இவை போன்ற புத்தி விகாரங்கள் மன சம்பந்தமான பாவ காரியங்கள்.

அவிசேஷ, நிர்விசேஷ, புண்ய விஷய சிந்தை முதலான பாவ சிந்தையுடன் கலந்து அநுஷ்டிப்பது மிஸ்ர கர்மங்களாகும்.

வேத சாஸ்திரப்படி பகவத் சங்கீர்த்தனம், சத்தியம், பரோபகார வார்த்தை, மிருதுவாகப் பேசுதல், பூர்வ பாஷணம் (தானாக முனவந்து முதலில் பேசுதல்) ஆகியவை வாசிக புண்ய கர்மங்கள் ஆகும்.

வேத சாஸ்திர தூஷணை (இழித்துப் பேசுதல்) வேத தூஷணை,அசத்தியம், கடும் சொல், பொய் சொல்லுதல், கேலி செய்தல் ஆகியவை வாக்கினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் ஆகும்.

 

வேதாத்தியயனம், தேவ பூஜை காலங்களில் பரநிந்தை, கேலி, அசத்தியம் ஆகியவற்றை அனுஷ்டித்தல் மிஸ்ர பாவ கர்மங்களாகும்.

இப்படியே பலவித பாவ கர்மங்கள் உண்டு.

பிரம்ம ஞானம் உண்டாயிருந்தாலும் கூ மூன்று வித கரணங்களையும் புண்ய கர்மத்திலேயே நிறுத்த வேண்டும்.

***

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்? (Post No.4403)

Written by S.NAGARAJAN

 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-00 am

 

 

Post No. 4403

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்?

 

ச.நாகராஜன்

நமது முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்த்வர்கள். தேவதைகளின் அனுக்ரஹத்திற்கு உரிய வழிகளைக் கண்டவர்கள். மஹாசக்தியின் அருள் வேண்டி உள்ளுணர்வால் தாம் கண்டவற்றை மனித குலத்திற்கு சாஸ்திரமாகத் தந்தவர்கள்.

 

 

எடுத்த காரியம் வெற்றியைப் பெறவும் அநுகூலமாக முடியவும் அவர்கள் பல எளிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த வகையில் வார நாட்கள் ஏழிலும் எதை எதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருளுரை பகர்ந்திருக்கின்றனர். எந்த நாளில் எந்தத் திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அருளி இருக்கின்றனர்.

 

 

அதன் தொகுப்பு இதோ:-

 

எந்த திசையில் எந்த நாளில் செல்ல் வேண்டும் ?

 

அங்காரபூர்வே கமனே ச லாப:

    சோமே சனௌ தக்ஷிணம்ர்த்த லாபம் I

புதே குரௌ பச்சிமகார்யசித்தி

   ரவி ப்ருகௌ சோத்தரமர்த்த லாப: II

 

 

உபஜாதி என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தின் பொருள் : :-

செவ்வாய்க்கிழமைகளில் கிழக்குத் திசையில் சென்றால் ஒருவன் லாபத்தை அடைவான்.

திங்கட்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் தெற்குத் திசையில் சென்றால் லாபம் உண்டாகும்.

புதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் மேற்குத் திசையில் சென்றால் எடுத்த காரியம் வெற்றியை அடையும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வடக்குத் திசையில் சென்றால் செல்வம் பெருகும்.

 

அடுத்து எந்த நாளில் எதை எதைச் செய்யலாம் என்பதற்கான அறிவுரைகளைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருபாபிஷேக மாங்கல்ய யானாஸ்த்ர கர்ம ச I

ஔஷதா ஹவ தான்யாதி விதேயம் பானுவாஸரே II

 

1 மன்னர்களுக்கு மகுடாபிஷேகம் செய்தல் 2. மங்களகரமான காரியங்களைச் செய்தல் 3) உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளுதல் 4) பணிபுரியத் தொடங்குதல் 5) பிரபு தர்சனம் (உயர் அதிகாரிகள் சந்திப்பு) செய்தல் 6) மருந்து தயாரித்தல் (மூலிகை சேர்ப்பதிலிருந்து உட்கொள்ளுதல் முடிய) 7) வாகனம் செய்தல், வாகனத்தில் ஏறி அமர்தல் 8) போர் செய்யத் தொடங்குதல், அதற்கான் ஆயுதங்களைத் தயாரித்தல் 9) தான்யம் முதலியனவற்றைச் சேகரித்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்தல் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

திங்கட்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

சங்கமுக்த அம்பு ரஜத வ்ருக்ஷ இக்ஷு ஸ்தீரி விபூஷணம் I

புண்யகீத க்ரதுக்ஷீ ர க்ருஷிகர்ம இந்துவாஸரே II

 

  • சங்கு, முத்து சேகரிப்பு வேலைகள் 2) நீர் சம்பந்தமான பணிகள் 3) வெள்ளி சம்பந்தமான பணிகள் 4) மரவேலைகள், கரும்பு ஆலையாட்டல் 5) பெண்களின் நலத்திற்கான அனைத்துப் பணிகள் 6) ம்லர்த் தோட்டம் அமைத்தல் 7) நல்ல சங்கீதப் பயிற்சி 8) யாகம் செய்தல் 9) பால் சம்பந்தமான பணிகள் 10) விவசாயம் செய்தல் ஆகியவற்றை திங்கட்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

செவ்வாய்க்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

விஷாக்னிபந்தன்ஸ்தேய சந்திவிக்ரஹகர்ஷணம் I

தாத்வாகர ப்ரவுளாதி கர்மபூமிஜாவஸரே II

 

  • விஷப் பொருள்களைச் சுத்தம் செய்தல் 2) காளவாய் அடுப்புப் போடுதல் 3) அணை கட்டல் 4) திருட்டுக் காரியங்களைச் செய்தல் 5) கலகம் செய்தல் 6) பகைவரைச் சந்தித்தல் 7) போர் 8) சுரங்க வேலை 9) பவளம் எடுத்தல்; பவள நகை செய்தல் 10) அம்பு (போர்க்கருவி) தயாரித்தல் ஆகியவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

புதன்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

ந்ருத்யஷில்பகலாகீதிலிபி பூரசஸங்க்ரஹம் I

விவாததாது சங்க்ராம கர்ம குர்யாதித்தோஹனி II

 

  • நடனம் பயிலுதல் 2) சிற்பக் கலை கற்றல் 3) பாட்டுப் பயில ஆரம்பித்தல் 4) எழுத்து வேலை 5) புஸ்தகம் எழுதல், அச்சிடல் 6) கலகம் புரிதல் 7) விவகாரம் – விவாதம் செய்தல் 8) தாதுப் பொருள் சேகரித்தல், விற்றல் 9) கலை பயிலல் ஆகியவற்றைப் புதன்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

வியாழக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

யக்ஞபௌஷ்டிக மாங்கல்ய ஸ்வர்ணவஸ்த்ராதி பூஷணம் I

வ்ருக்ஷ குல்மலதாயான் கர்மதேவேத்வாஸரே II

 

  • யாகம் செய்தல் 2) புஷ்டியளிப்பன 3) மங்களகரமானவை 4) பொன்வேலை 5) ஆடை முதலியன செய்தல்,வாங்குதல் 6) நகை செய்தல் 7) மரம், செடி, கொடி நடுதல் (படரவிடல்) 8) வாகனத்தில் ஏறுதல் 9) தெய்வீகமான செயல்களைச் செய்தல் ஆகியவற்றை வியாழக்கிழ,மைகளில் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

 

ந்ருத்யகீதாதி வாதித்ர ஸ்வர்ண்ஸ்த்ரீ ரத்னபூஷணம் I

பூபண்யோத்ஸவ கோதான்யவாஜிகர்ம ப்ருகோர்தினே II

 

  • பாட்டு, நடனம் கற்றல் 2) வாத்தியம் கற்க ஆரம்பித்தல் 3) தங்க வேலை தொடங்குதல் 4) புத்தாடையுடுத்தல் 5) ஆபரணம் அணிதல் 6) புண்ணிய காரியம் செய்தல் 7) உற்சவம் முதலியன இயற்றல் 8) பசு வளர்த்தல் 9) தானியங்களைச் சேகரித்தல் 10) குதிரை வாகனம் வாங்குதல் 11) திருவிழா நடத்தல் 12) பூமி சேகரித்தல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

 

சனிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

த்ரபு சீஸ ஆயஸ அஷ்மாதி விஷ பாப ஆஸவா ந்ருதம் I

ஸ்திரக்ர்மாகிலம் வாஸ்து சங்க்ரஹ: சௌரிவாஸரே II

 

  • துத்தநாகம், ஈயம் போன்ற தாது சம்பந்தமான வேலைகள் 2) விஷ சாயம் 3) அம்பு- யுத்த வேலை 4) கல் பணி 5) பாவ காரியங்கள் 6) கள் (ஆஸவம்) தயாரித்தல் 7) பொய் கூறுதல் 8) வீடு, மனை சேகரித்தல் ஆகியவற்றை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

இப்படி அந்தந்தக் கிழமைகளில் பலிக்கக்கூடிய காரியங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உசிதமான நமது  பணிகளைத் தொடங்கிச் செய்தால் வாழ்வு சிறக்கும்; வெற்றி கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் அறிவுரை.

கடைப்பிடிப்போம்; வெற்றி பெறுவோம்

***

 

 

 

 

 

 

 

ஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன்- ஆழ்வார் உறுதி (Post No.4399)


Written by London Swaminathan
 

 

Date: 15 NOVEMBER 2017

 

Time uploaded in London-  12-28

 

 

Post No. 4399

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

ஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன்- ஆழ்வார் உறுதி (Post No.4399)

 

குலசேகர ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் தனித்து நிற்கிறார். அவர் ஒரு விநோதமான பேர்வழிதான்; யாரும் விடுக்காத கோரிக்கைகளை விடுக்கிறார். ஒரு லட்சம் பவுன் தா, தங்கக் கட்டிகளாக மழை பொழி, உலக மஹா அழகிகள் எனக்கு சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆயினும் பெருமாள்– திருவேங்கடத்தான் ஏற்க முடியாத கோரிக்கைகளாக முன் வைக்கிறார். யாருக்கும் தோன்றாத அற்புத எண்ணங்கள் அவருக்குத் தோன்றுகின்றன. ஏன்?

 

 

திருப்பதி மலை மீது– திரு மலையில் – குடிகொண்டிருக்கும் திரு வேங்கடத்தானை — திருப்பதி பெருமாளை- வேங்கடமலையானை- வெங்கடாசலபதியை (வேங்கடம்+அசலம்+பதி)– தரிசிப்பது எவ்வளவு கடினமென்று நமக்கு எல்லோருக்கும் தெரியும். இலவச தரிசனத்துக்கு நின்றால் 14 மணி நேரம் க்யூ வரிசை; காசு கொடுத்து ஸ்பெஷல் வரிசையில் நின்றாலோ மந்திரி வருகிறார் என்று திடீர் தடை; இதற்கெல்லாம் மேலாக அற்புதமாக அவர் முன் விரைவில் போய் நின்று விட்டாலோ நம் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் கோவில் சேவகர்கள் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் இதே நிலைதான் போலும்! ஏனெனில் விஜய நகரப் பேரரசன் கிருஷ்ணதேவ மஹா ராயர்

 

மட்டும் திருப்பதிக்கு 30 தடவைக்கு மேல் வந்துள்ளதாக வரலாறு பேசுகிறது; இது போல எத்தனையோ அரசர்கள் அந்தக் காலத்திலும் வந்திருப்பர். ஆகையால் குல சேகர ஆழழ்வார் ஒரு புது வழி– குறுக்கு வழி– கண்டுபிடித்தார். இவ்வளவுக்கும் அவரே சேர நாட்டு அரசர்.

 

அவருக்கே இந்த கதி என்றால் நமக்கெல்லாம்?

 

அவர் 10 அம்ச திட்டத்தை வெங்கடாசலபதியிடம் சமர்ப்பிக்கிறார்.

1.என்னை மீனாகப் பிறக்கச் செய்

2.என்னை நாரையாக ஆக்கிவிடு

3.என்னை காட்டாறு (wild stream) ஆக்கிவிடு

4.ஒரு மலைச் சிகரமாகவாவது ஆக்கிவிடு

5.பூவாக மாற்றிவிடு

6.புதாராக வளர்த்து விடு

7.எச்சில் (வெற்றிலைச் சக்கை) துப்பும் பொன்வட்டில் பிடிக்கும் சேவகனாய் மாற்று

8.பாதையாக மாற்று

  1. அல்லது படியாக மாற்று

10.ஐயா, இதெல்லாம் முடியாதா? ஏதாவது ஒரு

பொருளாக ஆக்கப்பா!

(எங்கே என்றால்?  திருப்பதி மலையானைத் தரிசிக்கச் செல்லும் ஏழு மலைப் பாதையில்)

 

இதையேல்லாம் விட்டு விட்டுவிட்டு எல்லா   அரம்பையர்களையும் (அப்ஸரஸ் பேரழகிகள்)  —  அதிலும் பெரிய பேரழகி ஊர்வசி– அவளையே அனுப்பி – அவள் என்னை வா, வா என்று அழைத்தாலும் எனக்கு வேண்டாம்; இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் (   அரங்கமா நகருள்ளானே) திருவேங்கடத்தானே—என்கிறார்.

என்ன மன உறுதி! திட சித்தம்!!

ஏன் இப்படிச் செய்தார்?

பக்தர்களின் பாத தூளிகளுக்கு அவ்வளவு மதிப்பு! இறைவனை விட பக்தர்களுக்கு மதிப்பு அதிகம்; பக்தர்களுக்குத் தீங்கிழைத்தால் கடவுளும் கூடத் தலையிடமாட்டார். பக்தனிடமே சென்று மன்னிப்புக் கேள் என்று ஆண்டவனே சொல்லி விடுவான்; இதை அறிந்த குல சேகரர் பக்தர்களின் பாதத் தூசு படட்டும் அல்லது அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஏழுமலை வாசா என்றும் போடும் கோஷமாவது கேட்டுக்கொண்டே இருக்கட்டும் என்று இப்படி வேண்டுகிறார்.

 

இதோ அவரது அற்புத வரிகள் அடங்கிய பாசுரம்; இதை மாணிக்க வாசகரின் திருவாசகத்தைப் பாடும் மோஹன ராகத்தில் பாடினால் , பாடிக்கேட்டால், புல்லரிக்கும்; மெய்சிலிர்க்கும்; ஆனந்தக் கண்ணீர்  துளிர்க்கும்.

 

திருவேங்கடமுடையான்

 

 

ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*

ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*

கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*

கோனேரி வாழும்  குருகாய்ப் பிறப்பேனே.                            1

 

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*

தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.                          2

 

பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*

துன்னிட்டு புகலரிய வைகுந்த  நீள்வாசல்*

மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*

பொன்வட்டில்  பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே.                  3

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*

கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*

பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*

செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே.                       4

 

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*

இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*

எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*

தம்பகமாய் நிற்கும்  தவமுடையே னாவேனே.                        5

 

மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*

அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*

தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*

அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே.                 6

 

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்

கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*

கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே.                        7

 

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*

முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*

வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*

நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே.                      8

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*

நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.                          9

 

உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்

அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*

செம்பவள வாயான்  திருவேங் கடமென்னும்*

எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே.                  10

 

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*

பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*

கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*

பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே.                     11

 

வாழ்க குலசேகர ஆழ்வார்! வளர்க அவர்தம் அடியார்கள் !!

–Subham, Subham–

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் சூக்தங்கள்! (Post No.4397)

Written by S.NAGARAJAN

 

 

Date: 15 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-44 am

 

 

Post No. 4397

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் திருமதி மஞ்சுளா ரமேஷை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வருகிறது. அதில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் வைதிக சூக்தங்கள்!

 

 

 

(செல்வம்,ஆரோக்கியம், மன அமைதி, நீண்ட ஆயுள் பெற வழி!)

 

 

BY ச.நாகராஜன்

ஒருவன் இந்த உலகில் இப்பிறவியில் அனுபவிக்கும் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அவனது கர்ம வினைகளே காரணம் என்று நமது வேதங்களும் சாஸ்திரங்களும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.

 

‘உனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் நீயே காரணம் ஆகவே உன்னை நீயே உயர்த்திக் கொள்’ (உத்தரேத் ஆத்மனாத்மானம் – பகவத் கீதை) என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

 

 

இந்த ஜன்மத்தில் விதி வசத்தால் தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு, ‘அப்படியெனில் எனக்கு உய்வே கிடையாதா? தரித்திரனாக, படிக்க முடியாதவனாக, ஆரோக்கியம் குன்றியவனாக, மன அமைதியற்று இந்த ஜன்மம் பூராவும் இருக்க வேண்டுமா?’ என்ற கேள்வி எழுகிறது.

 

இதை மனதில் கருதி ரிஷிகளும் ஞானிகளும் வைதிக சூக்தங்கள் பலவற்றை அருளியுள்ளனர்.

தீர்க்க முடியாத சில கர்ம வினைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர ஏனையவற்றை சூக்தங்களை ஒதி அல்லது ஓதுவித்து கஷ்டங்களைத் தீர்த்து இப்பூவுலக வாழ்வை பரிபூரணமாக் ஆனந்தமாக அனுபவித்துக் கடைத்தேறலாம் என்பது வேதங்களின் தீர்ப்பு.

 

இந்த வகையில் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒரு நிவாரணம் உண்டு; அதற்கான சூக்தம் உண்டு. இதை நன்கு ஓதி உணர்ந்தவர்களை அணுகி அவர்கள் மூலமாக பரிகாரம் தேட வழி வகை செய்திருப்பதே வைதீக மதத்தின் தனிச் சிறப்பு.

சூக்தங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றையும் அதன் சிறப்பையும் இங்கு காணலாம்.

 

  • ஸ்ரீ சூக்தம்

ஹிரண்ய வர்ணாம் என்று ஆரம்பிக்கும் சூக்தம் இது. வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் மஹாலக்ஷ்மியின் பல்வேறு துதிகளின் தொகுப்பே இது. இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் அளப்பரிய செல்வ வளத்தைப் பெறலாம். அனுதினமும் பல பக்தர்கள் ஒதும் சூக்தம் இதுவே.

 

 

  • அக்னி சூக்தம்

அக்னியை வேதங்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்றாகப் புகழ்கிறது.பிரஜைகளின் உற்பத்தி,, மனிதர்களின் பலம், வீர்யம் ஆகியவை அக்னியினாலேயே உருவாகிறது. அக்னியே அனைத்தும்.

ரிக்வேதத்தின் முதல் பாடலாக அமையும் இந்த சூக்தம் அக்னி மீளே என்று துவங்குகிறது.மகனுக்குத் தந்தை போல எளிதில் அணுகத் தக்க அக்னியால் புகழும் ஒளியும் பெருகும் (யசஸம், வீரவத்தமம் – புகழை வளர்ப்பது, மனித குலத்தை வளர்ப்பது)

 

  • வைஸ்வானர சூக்தம்

வேதங்களில் வைஸ்வானர அக்னியின் புகழ் எல்லையற்றதாக வர்ணிக்கப்படுகிறது. ஆனந்தம் தருபவன், சுவர்ணமய ரதம் கொண்டிருப்பவன்,ஜலத்தில் வசிப்பவன்,சர்வக்ஞன்,சர்வ வியாபி, அனைவரிடமும் இருப்பவன்.

 

வைஸ்வானரோ என்று இந்த சூக்தம் ஆரம்பிக்கும்.

நல்ல ஆரோக்கியம் வாழ்நாள் முழுவதும் நிலை பெறவும் மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைவது வைஸ்வானர சூக்தமே. குறிப்பாக ஜீரண சம்பந்தமான வியாதிகளைக் கொண்டிருப்போர் நாட வேண்டியது இந்த சூக்தம்.

 

  • கர்ப்ப சூக்தம்

கர்போஸ்ய என்று ஆரம்பிக்கும் இந்த சூக்தம் கர்ப்பம் உற்பத்தியாகவும்.கர்ப்ப ரக்ஷைக்காகவும், கர்ப்பம் உரிய விதத்தில் வளர்ச்சியுறவும் ஓதப்படுகிறது.

 

  • நவக்ரஹ சூக்தம்

ஆஸத்யேன ரஜஸா வர்த்தமானோ என்ற சூர்ய மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது இந்த சூக்தம்.

நவகிரகங்கள் அசுப பலன்களைத் தரும் விதத்தில் ஒருவருக்கு அமைந்திருந்தால் அதனால் எற்படும் தீய விளைவுகளை அகற்ற நவ கிரகங்களையும் பிரார்த்திக்கும் அற்புத சூக்தம் இது.

 

 

  • மேதா சூக்தம்

யச்சந்தஸாம் என்று ஆரம்பிக்கும் சூக்தம் இது. விஞ்ஞான உலகில் அனைத்துக் கண்டுபிடிப்புகளும் உள்ளுணர்வின் தூண்டுதலினாலேயே அமைகிறது. இந்த உள்ளுணர்வை நல்ல விதமாக ஆக்கவும் தூண்டி விடவும் ஓதப்படும் அற்புத சூக்தம் இது. உள்ளுணர்வு மேதா தேவியாக வர்ணிக்கப்படுகிறாள்.

 

தேவியின் அருள் பெற்றவன் ரிஷி ஆகிறான்.பிரம்ம ஞானி ஆகிறான், செல்வந்தன் ஆகிறான், சிறந்த ஐஸ்வர்யங்களை அடைகிறான் என்று வர்ணிக்கும் இந்த மந்திரத்தின் மூலம் என்னென்ன பலன்களை நாம் அடைய முடியும் என்பதை எளிதில் ஊகித்து உணரலாம்.

 

  • ச்ரத்தா சூக்தம்

சிரத்தை இல்லாமல் எதுவும் இல்லை; எந்த வெற்றியும் இல்லை.யமனிடம் நசிகேதன் யாருமே அறிய முடியாத ரகசியத்தை அடைந்ததற்குக் காரணமே அவனது சிரத்தை தான். வாழ்வின் நல்ல காரியங்களுக்கு அஸ்திவாரமாக அமைவது சிரத்தையே.

இந்த சூக்தம் ச்ரத்தயாக்னி சமித்யதே என்று ஆரம்பிக்கிறது.. சிரத்தையை நாடி அதன் மூலம் வெற்றிக்கு வழி கோலுவோர் ஓத வேண்டிய சூக்தம் இது.

 

 

  • சங்கல்ப சூக்தம்

ஹிந்து மதத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்குவதற்கு முன்னர் சங்கல்பம் செய்வது இயல்பு.  எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கத் தேவை திட சங்கல்பம். அதை நமக்கு அருளுமாறு வேண்டவே இந்த சங்கல்ப சூக்தம் வீடு, பணி புரியும் இடம் உள்ளிட்டவற்றில் காரியம் துவங்கும் முன்னர் இது ஓதப்படுகிறது.

 

  • தேவி சூக்தம்

எல்லையற்ற மஹிமையை உடைய தேவியின் அருளைப் பெற பல்லாயிரக்கணக்கானோரால் பாரதமெங்கும் அனுதினமும் ஓதப்படும் அற்புத சூக்தம் இது.  அஹம் ருத்ரேபிர் என்று இது ஆரம்பிக்கும்.

இதை இயற்றியவர் ஒரு பெண் ரிஷி. அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளான  வாக் என்பவர் கண்ட சூக்தம் இது.

சகல நலன்களையும் தேவியின் அருளையும் அடைய உகந்த சூக்தம் இது.

 

  • சூர்ய சூக்தம்

ரிக் வேதத்தில் வரும் அற்புத சூரிய துதி இது. நமோ மித்ரஸ்ய என்று இது ஆரம்பிக்கும்.

சூரியனே எல்லாம்! புகழ், ஒளி, படிப்பு, செல்வம்,. நீண்ட ஆயுள், தீராத வியாதிகள் எல்லாம் தீர்ந்து பரிபூரண ஆரோக்கியம் பெறுதல், கணவன் – மனைவி ஒற்றுமை உள்ளிட்ட அனைத்தையும் தரும் பிரத்யக்ஷ பகவான் சூரியனே. அனைத்தும் நலனையும் ஒருங்கே பெற சொல்ல வேண்டிய சூக்தம் சூரிய சூக்தம்.

 

 

  • துர்க்கா சூக்தம்

மிகவும் சக்தி வாய்ந்த இந்த சூக்தம் தைத்திரிய ஆரண்யகத்தில் இடம் பெறும் ஒன்று. வாழ்க்கையில் வரும் எந்தக் கஷ்டத்தையும் அகற்றும். எதிரிகள் ஒழிவர். யுத்தத்தில் ஜெயம் நிச்சயம். பாரத பாகிஸ்தான் போரில் நாம் ஓதிய சூக்தம் இதுவே. எந்தக் காரியத்திலும் வெற்றி நிச்சயம். ஜாதவேதஸே என்று ஆரம்பிக்கும் இது பரவலாக பல்லாயிரக்கணக்கானோரால் தொன்று தொட்டு இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.

 

  • நாஸதீய சூக்தம்.

விஞ்ஞானிகளே வியக்கும் சூக்தம் இது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே இன்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கும் பிக்-பேங் தியரியை விட உன்னதமான பிரபஞ்ச தோற்றம் பற்றிய கொள்கையை விளக்கும் சூக்தம் இது. ரிஷி பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் அதன் தலைவனையும் பற்றி வியந்து கூறும் அபூர்வ சூக்தம் இது. விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவருக்குமான் இந்த சூக்தம் இயற்கை இரகசியங்களை அறியத் துடிப்போர் ஒத வேண்டிய ஒன்றாகும்.

 

 

  • ஸம்வனன சூக்தம்

இது சமுதாயத்தின் மொத்த நலனுக்கான சூக்தம். அனைவராலும் சமுதாய நலனைக் கருதி ஓதப்பட வேண்டிய ஒன்று. ரிக் வேதத்தில் இடம் பெறும் இது ஸ்ம்ஸமித்யுவஸே என்று ஆரம்பிக்கும். அனைவரின் பிரார்த்தனையும் ஒத்த கருத்துடன் அமையட்டும் என்ற இந்த வேத பிரார்த்தனை இன்றைய அமைதியற்ற உலகில் மிகவும் தேவைப்படும் ஒன்று. வேதம் உலகளாவிய விதத்தில் அனைவரது நலனையும் வேண்டுகிறது என்பதை நிரூபிக்கும் சூக்தம் இது.

 

  • சாந்தி சூக்தம்

அதர்வண வேதத்தில் இடம் பெறும் இது மகத்தான சாந்தி மந்திரம்.. சாந்தா த்யௌ என்று ஆரம்பிக்கும் இது நல்லன ஓங்கட்டும் தீயன விலகட்டும் என்ற உயர்ந்த சிந்தனையை முன் வைக்கிறது.

 

பொதுவாக சாந்தி சூக்தம் ஓதலின் முடிவில் இறுதியாகச் சொல்லப்படுகிறது.

 

இது தவிர ஆயுளை நீடிக்க ஆயுஷ்ய சூக்தம், இறைவனை அறிய வழிகாட்டும் ஹிரண்ய கர்ப்ப சூக்தம்,விஷ்ணுவைத் துதிக்கும் விஷ்ணு சூக்தம், கருத்துச் செறிவு மிக்க, மிகப் பிரபலமான, மந்திர ஆற்றல் பெற்ற புருஷ சூக்தம், நல்லன எங்கிருந்தாலும் வரட்டும் என்று வரவேற்கும் ஆ நோ பத்ரா சூக்தம்,,அறிவை வளர்க்கும் சரஸ்வதி சூக்த்ம்,

 

 

நாராயணனைத் துதிக்கும் நாராயண சூக்த்ம், பாவத்தைப் போக்க வருணனை வேண்டும் அகமர்ஷண சூக்தம், பிராணனைப் போற்றும் ப்ராண சூக்தம், சகல வியாதிகளையும் போக்கும், உதவத் துடிக்கும் தேவதைகளான அஸ்வினி தேவதைகளை அழைக்கும் அஸ்வினி சூக்தம், நக்ஷத்திர அடிப்படையில் நலனை வேண்டி அவற்றைப் பெற நக்ஷத்ர சூக்தம் என்று சூக்தங்களுக்கு முடிவே இல்லை.

 

 

ஒவ்வொன்றும் (காரண்டியாக) நன்மை தரும் என்பதற்கு பல்லாயிரக்கணக்கில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள்

ஓதி அனுஷ்டித்துப் பலனைப் பெற்ற நம் முன்னோர்களே சாட்சி.

 

இவற்றை முதல் படியாக அறிய வேண்டும்; பின்னர் இதை முறையாக ஒதும் வேத பிராமணர்களை அணுகி அவர்களிடம் உரிய அறிவுரை பெற வேண்டும்.

 

காப்பிக்கும், அன்றாட வாழ்க்கை நடத்த இன்றைய நாளில் ஊழலுக்கெனவே நாம் தரும் ‘கட்டியப் பணத்திற்கும்’, இதர தேவையற்ற ஹோட்டல் ஆகியவற்றிற்காக ஆகும் செலவிற்கும் ஆகும் பணத்தை ஒப்பிட்டால் அதில் பல நூறு பங்கில் ஒரு சிறிது பங்கே இந்த ஓதலுக்கு நாம் செலவிடும் தொகையாக அமையும்.

 

திருமதி மஞ்சுளா ரமேஷ் நடத்தும் விசேஷ நிகழ்ச்சிகளில்இவற்றை ஓதக் கேட்டுப் பயன் பெறலாம்.

நாம் தரும் பணத்திற்கு ஈடாகப் பெறும் பலனோ  பெரிது.

இந்த வைதீக சூக்தங்க்ள் அளப்பரிய பலனை அனுக்ரஹத்துடன் தரும் என்பதில் ஐயமே இல்லை!

***

தானம் செய்தால் வானம் திறக்கும்-புறநானூறு (Post No.4395)

Written by London Swaminathan 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4395

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

புறநானூற்றுப் புலவர்  ஏணிச்சேரி முடமோசியாரும், அறநெறிச் சார ஆசிரியர் முனைப் பாடியாரும் சொல்லுவர்:

 

“தானம் செய்தால் வானம் திறக்கும்”.

 

வானம் என்ற சொல்லைத் தமிழ்ப் புலவர்கள் இரு வகையில் பயிலுவர்:

வானம் = மழை

வானம் = சொர்க்க லோகம் , இந்திர லோகம்

 

மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான திருவள்ளுவன் பகவத் கீதை பாணியில் (16-1) யாத்த தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம், வானம் வழங்காதெனின் (குறள் 19)” என்னும் இடத்தில் வானம் என்பது மழையைக் குறிக்கும்; வள்ளுவன் தானம், தவம் என்னும் சம்ஸ்கிருதச் சொற்களை பகவத் கீதை ‘ஸ்டைலில்’ 19, 295 ஆகிய எண்ணிட்ட குறள்களில் பயன்படுத்துவான். சம்ஸ்கிருத ஸ்லோகக்ங்களில் இது நூற்றுக் கணக்கான இடங்களில், குறிப்பாக கீதையில், சேர்ந்தே பயிலப்படும் சொற்கள்; நிற்க

 

நாம் சொல்ல வந்த விஷயத்தைக் காண்போம். தானம் செய்தால் வானம், அதாவது சொர்க்க லோகம் திறந்து இருக்குமாம்!~

 

அறநெறிச் சாரம் என்னும் நீதி நூலில் முனைப்பாடியார் புகல்வது யாதெனின்,

ஒன்றாகநல்லது உயிரோம்பல் ஆங்கதன்பின்

நன்றாய்ந்தடங்கினார்க் கீத்துண்டல் – என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து

 

–அறநெறிச்சாரம்

பொருள்:-

ஒன்றாகநல்லது உயிரோம்பல் = அறங்களில் சிறந்தது பிற உயிர்களைப் பாது காப்பது ஆகும்

 

ஆங்கு அதன் பின்  நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்= ஞான நூல்களைக் கற்று, மனம் போன வழியில் செல்லாமல், அடக்கத்துடன் வாழ்வோருக்கு உணவு கொடுத்தல் மற்ற ஒரு சிறந்த தர்மம்; பிறகு தானும் உண்ணுதல் வேண்டும்.

 

என்ற இரண்டும் குன்றாப் புகழோன்= இவ்விரு தர்மங்களால் புகழ்பெற்று விளங்குபவர்களை

வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது =  வருக வருக என வரவேற்பதற்காக சொர்க லோகம் அதன் வாயில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றது.

 

அதாவது மாலையைக் கையில் வைத்துக்கொண்டு இந்திரனும் அப்சரஸ் அழகிகளும் மேள தாளத்துடன் காத்து  நிற்பர் என்பதாம்!

இந்திர லோகத்தில் டமாரம்!

ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடாமோசியார் பாடிய புறநானூற்றுப் பாடலில் (241)

 

திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,

அண்டிரன் வரூ உம்என்ன, ஒண்தொடி

வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,

போர்ப்புறு முரசம் கறங்க,

ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே

 

சுருக்கமான பொருள்:

வறுமையில் வாடியோருக்கு அள்ளி, அள்ளித் தந்த ஆய் அண்டிரன் (அஜேந்திரன்) இறந்தவுடன் அவனை வரவேற்க இந்திர லோகத்தில், இந்திரன் கோவிலில், முரசுகள் முழங்கினவாம். வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில் என்பதற்கு பழைய உரைகாரர்கள் இந்திரலோகம் (சொர்க்கலோகம்) என்றே பொருள் கண்டுள்ளனர். பூமியில் உள்ள இந்திரன் கோயிலன்று.

 

அதாவது, பூமியில் தானம் என்னும் புண்ணிய கருமத்தைச் செய்தால் அவர்களை வரவேற்க இந்திரன் காத்திருப்பானாம்; அதுவும் எப்படி? ‘பாண்டு வாத்திய’க் குழுவுடன் வாசலில் நிற்பானாம்!

புற நூலுக்குப் பின் தோன்றிய அறநெறிச் சாரத்தில் முனைப்படியாரும் இதே கருத்தைச் சொல்லும் போது நம் ஐயமெல்லாம் பறந்தோடிப் போகின்றது.

 

–Subham, Subham–

 

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

 

 Written by London Swaminathan 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-21

 

 

Post No. 4393

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பூணூல் அணிந்த ராவணனை, “இரா+வண்ணன்= இருட்டு போலக் கருப்பு நிறத்தன்” என்று சொல்லி அவனுக்கு திராவிட முத்திரை குத்தும் அறிவிலிகள் உலகில் உண்டு! இப்படிப் பிரித்தாளும் சூட்சி உடையோர் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைப்பர் என்று முன் உணர்வால் அறிந்து இராவணனுக்கு பிராமணன் என்று ‘அக்மார்க்’ முத்திரை வைத்துவிட்டனர் அப்பரும் கம்பரும். ஒருவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மற்றொருவர் 1000 . ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

 

 

அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் பற்றிச் சொல்லுகையில் அவனுடைய பூணூலையும் சேர்த்துப் பாடுகிறார்.

 

அசுரர்கள் ராக்ஷசர்கள் தேவர்கள், நாகர்கள் முதலியோர் , ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று நம் வேத, இதிஹாச புராணங்கள் பேசும்; ஆனால் வேற்றுமை பாராட்டி இந்துக்களைப் பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளும், பிற மதத்தினரும் ஒரு சாராரை திராவிடர்கள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் சொல்லிப் பிரித்தாளுவர்.

 

எல்லாக் கதைகளிலும் சிவனிடமோ, பிரம்மாவிடமோ அசுரர்களும் வரம் வாங்கினர். அவர்களும் ஒரே கடவுளை வணங்கினர்; அந்தக் கடவுளரும் பாரபட்சமின்றி வரம் ஈந்தனர். ஆனால் உலக விதி, ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதாகும். இதனால் வரம் பெற்றும் கூடத் தீயோர் வெல்ல முடியாது. ராவணனும் பல வரங்களைப் பெற்றும், செய்த தவற்றினால் உயிர் இழந்தான். ராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும்  தகவல் இதோ:

 

மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்

வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்

நூலினா  னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்

காலினா  லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

பொருள்:-

பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க,  ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்

 

 

வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர்

நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்

 

இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

 

இதி வேதம் ஓதுதலையும், முப்புரி நூல் அணிவதையும் சிலர் சிவன் மீது ஏற்றிச் சொல்லுவர். அப்படிச் சொல்லும் வழக்கம் அரிது. அப்படிச் சொன்னாலும் அதை பிரம்மனுக்கே ஏற்றிச் சொல்லுவர்.

 

பூணூலும் வேத நாவும் ராவணனையே குறிக்கும் என்பதற்கு கம்ப ராமாயணம் துணை புரியும்; இதோ கம்பன் கூற்று:–

வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்

ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:-உலகைப் படைத்தவன் பிரம்மன்; அவன் மகன் புலஸ்தியன்; அவன் மகன் விசிரவசு; அவன் மகன் ராவணன்; ஆயிரம் கிளைகளை உடைய சாம வேதத்தில் வல்லவன்.

பிரம்மாவை வேதியன், பிராமணன் என்றே இலக்கியங்கள் போற்றும்

அக்க குமாரன் வதைப் படலத்தில் கம்பன் சொல்லுவான்:

அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்

மயன்மகள் வயிறு அலைத்து  அலறி மாழ்கினாள் என்று. இதன் பொருளாவது– மயனுடைய மகளான மண்டோதரி தன் கணவனான ராவணனிடம் சென்று வயிற்றில் அடித்துக்கொண்டு அலறினாள்– சீதையை விட்டுவிடு என்று. ராவணனுக்குக் கம்பன் கொடுக்கும் அடை மொழி– பிரம்மனின் மகனான, புலஸ்தியன் மகனான, விசிரவசுவின் மகனான ராவணன்  என்பதாகும்.

அதே சுந்தர காண்டத்தில் பிணிவீட்டு படலத்தில்,

அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்

தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்த தக்கோய்” என்று சொல்லுவான்; உலகங்கள் மூன்றையும் ஆதிகாலத்தில் படைத்த அந்தணன் பிரம்மாவின் வழி வந்தவனே! என்று  ராவணனை போற்றும் வரிகள் இவை. ஆக கம்பராமாயணம் முழுதும் ராவணன் ஒரு பிராமணன் என்று அடிக் கோடிட்டுக் கொண்டே செல்வான் கம்பன். இதன் காரணமாகவே தேவாரத்துக்கு உரை எழுதிய பெரியாரும் பூணுல் அணிந்ததையும் வேத பாராயணம் செய்ததையும் அப்பர் பாட்டில் ராவணனுக்கு உரித்தானதாகச் சொல்கி றார். நாம் அதை ஏற்பதில் தயக்கம் ஏதுமில்லை.

 

சுபம் –

 

பிறவி ஏன்? முக்தி எப்போது? (Post No.4388)

Written by S.NAGARAJAN

 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-52 am

 

 

Post No. 4388

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அத்வைத ஸார விளக்கம்

பிறவி ஏன்? முக்தி எப்போது?

 

ச.நாகராஜன்

 

1

நம்மைக் குழப்பும் கேள்விகள் பல. பிறவி ஏன்? அது ஏன் வந்தது? எப்போது போகும்? – இப்படிப் பல கேள்விகள்

அத்வைத, விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஆகிய மூன்றும் மூன்று நிலைகளை நம் முன்னே வைக்கிறது.

 

அத்வைதம் தரும் சில பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுத் தரப்படுகின்றன.

இங்கு தரப்பட்டதைத் தவிர ஏராளமான கேள்விகளும் உண்டு. அதற்கு அத்வைத சித்தாந்தம் தரும் அற்புத பதில்களும் உண்டு.

இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது சிந்திக்க வேண்டும் என்பது பெரியோர் போதனை.

இப்போது இதோ , சில கேள்விகள், அதற்கான பதில்கள்- அத்வைத நோக்கில்.

 

2

ஆத்மா சுகஸ்வரூபன். அழிவற்றவன் என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால் ஆத்மாவுக்குத் துக்கம் எப்படி வந்தது?

உடலை அடைவதால் – சரீரத்தை அடைவதால் வந்தது.

 

சரீரம் – உடல் – எப்படி வந்தது?

பூர்வ கர்மத்துடன் கூடிய ஐந்து பூதங்களால் (பஞ்சீகிருத பூதங்களால்)

 

கர்மம் எத்தனை வகை?

மூன்று வகை.

அவை என்ன?

ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகை

 

ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்றால் என்ன?

ஆகாமியம் என்றால் இந்த தேகம் எடுத்த பதினான்கு வயது முதல் செய்ததும் ,சஞ்சிதத்துடன் சேருவதுமாம்.

சஞ்சிதம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை.

 

பிராரப்தம் என்றால் பூர்வ ஜென்ம கர்மங்களில் எந்தக் கர்மத்தின் பலனாக இந்த ஜென்மம் வந்ததோ,அந்த தேகத்தினால் அனுபவிக்க வேண்டியவையாம்.

இந்தக் கர்மங்கள் எப்போது நசிக்கும்?

 

ஞானம் வந்தால் ஆகாமியம் சஞ்சிதம் நாசம் அடையும்.

பிராரப்தம் அனுபவத்தால் தான் நசிக்கும்.

ஆகவே அனைவரும் விதேக முக்தியின் பொருட்டு பிரயத்னம் செய்ய வேண்டும்.

 

 

விதேக முக்தி என்றால் என்ன?

தேகமில்லாத முக்தி

 

அப்படியானால் வேறு பல முக்திகளும் உண்டா?

ஆம்.

ஸாலோக்கியம், ஸாமீப்யம்,ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என் இப்படி நான்கு வகை முக்தி உண்டு.

 

 

 

இவைகளை அடைவதற்கு சாதனங்கள் என்ன?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு உண்டு.

 

சரியை என்ரால் என்ன?

பகவத் கைங்கரிய ரூபமான தாஸ பாவனை.

 

கிரியை என்றால் என்ன?

தேவதா பூஜை செய்தல்

 

யோகம் என்றால் என்ன?

யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை,தியானம், சமாதி ஆகிய எட்டு அங்கங்களைக் கொண்டது யோகம். இவற்றினால் பரமாத்மாவுடன் ஜீவாத்மா ஐக்கியம் ஆதல் அதாவது ப்ரம்மத்துடன் கலந்து பேதமற்று ஒன்றாக ஆதல்

 

 

ஞானம் என்றால் என்ன?

ப்ரம்ம் சைதன்யத்தை எங்குமாய் ஏகமாய் கண்டு ஆனந்தித்து  ஐக்கியமுற்றிருத்தல்.

 

இந்த நான்கில் முந்தைய மூன்றும் மறுபடியும் பூமியில் ஜனனத்தைக் கொடுக்கும்.

ஸாயுஜ்யமே முக்கியமான முக்தி.

 

 

இன்னும் புண்யம், பாவம், மிஸ்ரம், இராக த்வேஷம் போன்றவற்றிற்கும் விளக்கம் உண்டு. அவற்றை பின்னால் பார்ப்போம்

***

 

 

இருதலைக் கொள்ளி எறும்பு! அப்பர் பெருமான் தவிப்பு! (Post No.4387)

Written by London Swaminathan 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 13-37

 

 

Post No. 4387

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பல அடியார்கள் தங்களை நெருப்பு பற்றி எரியும் விறகில் அகப்பட்ட எறும்பு என்று உவமிக்கின்றனர். இது ஒரு அருமையான உவமை. எரியும் வீட்டில் நாம் சிக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நடு அறையில் மாட்டிக் கொண்டோம்; வாசல் பக்கம் போனாலும் தீ; கொல்லைப் புறம் சென்றாலும் தீ என்றால் நம் மனம் எப்படி இருக்கும்? இதைப் போலத் தவிக்கும் தவிப்புதான் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.

 

ராம கிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று இறைவன் இருக்கிறானா? என்று கேட்ட விவேகாநந்தரிடம் ‘இருக்கிறானே. உனக்கும் காட்டுகிறேன்’ என்று சொன்னவுடன் அதை விவேகாநந்தர் நம்பவில்லை; ஏன் எனில் அதற்கு முன்னர்  பல போலி சாமியார்களைக் கண்டவர் அவர். ‘எங்கே காட்டுங்கள் பார்க்க்கலாம்’ என்று சொன்ன உடனே, விவேகாநந்தர் தலையில் அவர் கை வைத்தவுடன் அவர் மூச்சுத் திணறிப் போகிறார். எங்கும் கடவுள்; கை, கால் வைக்க இடமில்லை. அதாவது தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவன் நிலைமை. ராம கிருஷ்ண பரமஹம்சர் பின்னே சொல்கிறார்: ” தண்ணீரில் மூழ்கிவிட்ட ஒருவன், மேலே வந்து மூச்சு விட எவ்வளவு தவிப்பானோ அவ்வளவு தவிப்பு இருப்பவனே இறைவனைக் காண முடியும் என்று.

அப்பர், மாணிக்க வாசகர் எல்லாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்து , இறைவனையும் கண்டதால் தேவாரமும் திருவாசமும் பாடி, காலத்தால் அழிக்க முடியாத இடம் பெற்றனர். ஆயினும் நம்மைப் போன்றோருக்காக இப்படி ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல’ தவிப்பதாகப் பாடிச் சென்றனர். இதோ அப்பர் பெருமானின் அருட் புலம்பல்:–

 

உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை

உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி

எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற

கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே

–நாலாம் திருமுறை

பொருள்

தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.

அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என்  உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.

பதவுரை:

 

உள்குவார் உள்ளத்தான் =நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவன்;

உணர்வு என்னும் பெருமையானை = பரமசிவன் தலைசிறந்த பெருமையாகிய    அருளை உடையவன்;

உள்கினேன் ஊறி ஊறி உருகினேன்; ஊறுவது அன்பு, உருகுவது உள்ளம்;

எள்கினேன் = அரியனாகக் கருதாது எளியனென்று கொண்டிட்டேன்;

இரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு = இரு பக்கமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் நடுப்பக்கத்தில் நின்று கொண்டு போக வழி இல்லாமல் சிக்கிய எறும்பு போல;

எறும்பு= உள்ளத்துக்கு உவமை.

 

மாணிக்கவாசகரும் இருதலைக் கொள்ளியினுள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்– — என்று பாடியது காண்க.

–நீத்தல் விண்ணப்பம்

 

சுபம், சுபம்–

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7 (Post No.4385)

Written by S.NAGARAJAN

 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-32 am

 

 

Post No. 4385

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7

 

ச.நாகராஜன்

10

பாரிஸிலிருந்த தனது தாயாருக்கு அவர் 1845ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள அம்மா, உங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கு பதிலாக கொஞ்சம் மகிழ்ச்சியை நான் கொடுத்திருக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் – எனது எதிர்காலத்தை நான் முற்றிலுமாக தியாகம் செய்தாலொழிய…. லெடர்ஹோஸிடமிருந்து இன்னும் 200 ஃபிராங்குகளை நான் வாங்க வேண்டியிருந்தது. நீங்கள் இப்போது அனுப்பியுள்ள பணத்தை வைத்து ஜனவரி அல்லது பிப்ரவரி வரை ஓட்ட முடியும்” என்று எழுதியுள்ளார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைக் காண்போம்.

TO HIS MOTHER. PARIS, December 23, 1845.

“…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”

1847ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று அவர் தன் தாயாருக்கு எழுதுகையில்,எனது லண்டன் அறைகள் பிரமாதமாக இருக்கின்றன.கீழ்த்திசை ஆராய்ச்சியாளரான டாக்டர் ட்ரிஹென்னும் அதே வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அவரை  எனக்கு பாரிஸிலேயே தெரியும். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் வெளியுறவு இலாகாவில் பணிபுரிந்து வந்தார். இன்னும் பல கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் எனக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு ஓரியண்டல் காலனியையே இங்கு உருவாக்கியுள்ளோம். நல்ல வேடிக்கை பொழுதுபோக்குகளை எங்கள் காஸ்மாபாலிடன் தேநீர் அருந்தும் மாலை நேரங்களில் கொண்டுள்ளோம் என்று எழுதுகிறார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைப் பார்ப்போம்:

TO HIS MOTHER. September 1, 1847.

“My rooms in London are delightful. In the same house lives Dr. Trithen, an orientalist, whom I knew in Paris, and who was once employed in the Office for Foreign Affairs in St. Petersburg. Then there are a great many other orientalists in London, who are mostly living near me, and we form an oriental colony from all parts of the world… We have a good deal of fun at our cosmopolitan tea-evenings.”

அதாவது மாக்ஸ்முல்லர் லண்டனில் ஒருவாறாகசெட்டில் ஆகி விட்டார்.

ஆக கடுமையான பணத்தட்டுப்பாட்டில் இருந்த மாக்ஸ்முல்லருக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனி மூலம் ஒரு வழி பிறந்தது. மளமளவென்றுஎதையாவது செய்து அவர்களைத் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.

மனம் போனபடி அவர் வேதங்களின் மொழி பெயர்ப்பைத்தயார்  செய்யலானார்.

தனது மொழி பெயர்ப்பைப் பற்றி அவரே தனது Vedic Hymns”  என்ற புத்தகத்தில், “எனது வேத மொழியாக்கம் ஊகத்திற்கிடமானது (“My translation of the Vedas is conjectural”) என்று கூறியுள்ளார்.

வேதத்திற்கு  பல பொருள்கள் உண்டு. அதை உள்ளுணர்வு பெற்றவர்களே சரியாக அறிய முடியும். வெறும் கற்றுக் குட்டிகளை வைத்து வார்த்தைகளைத் தனக்குத் தோன்றிய பொருளில் அவர்  மொழியாக்கம் செய்தது தவறு.

பல கொள்கைகளை அவர் உருவாக்கினார். ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், வேதத்தின் காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது போன்ற கருத்துக்களை அவர் வித்திட்டார்.

இப்படிச் சொன்னதால் அவர்அறிஞராக்கப்பட்டார்.

மிஷனரிகளுக்குத் தேவையான அனைத்து விதைகளும் அவர் தந்து விட்டதால்செடிகளை வளர்ப்பது அவர்களுக்குச் சுலபமானது.

ஆனால் பின்னால் இதே மாக்ஸ்முல்லர் தன் கருத்துக்களைத் திருத்திக் கொள்ள முற்பட்டபோது அதே கிறிஸ்தவ மிஷனரிகளால் கடுமையாக விமரிசிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

அதையும் பார்ப்போம்.

                                –தொடரும்

****

எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே! (Post No.4384)

Written by London Swaminathan 

 

Date: 10 NOVEMBER 2017

 

Time uploaded in London- 16-56

 

 

Post No. 4384

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு: “எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே!”

ஏன் இப்படிச் சொல்லுகின்றனர்?

 

மஹாபாரதம் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்: இதில் சொல்லாத பொருள் உலகில் இல்லை என்று; அதில் வியப்பில்லை; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் உலகிலேயே பெரிய காவியம்; ஆகையால் எல்லாம் இருக்க வாய்ப்புள்ளது. வியாசர் தனது காலத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பாண்டவர் கதைக்குள் அழகுபடப் புகுத்திவிட்டார். அதே போல கந்தப் புராணத்தில் இருக்கிறதா?

இதோ சில சுவையான விஷயங்கள்:–

கந்த புராணத்தை இயற்றியவர் யார்?

கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள்

 

கந்த புராணத்திலே எத்தனை செய்யுட்கள் உள்ளன?

10346

 

இதன் முதல் பாட்டு எப்படி துவங்குகிறது?

‘திகடச் சக்கரச் செம்முக மைந்துளான்’

 

இது பற்றி ஏன் சர்ச்சை எழுந்தது?

காஞ்சீபுரத்தில் கந்தபுராண நூலை அரங்கேற்ற கச்சியப்பர் வந்தபோது முதல் செய்யுளே இலக்கணப் பிழையுடையதென்று அறிஞர்கள் சிலர் ஆட்சேபித்தனர். மறு நாள் விளக்கம் தருவதாகச் சொன்ன கச்சியப்பர் அதற்கான இலக்கண விதியைக் காணாமல் பரிதவித்தார். இரவில் முருகப் பெருமானே கனவில் வந்து வீரசோழியத்தில் அதற்கான விளக்கம் இருப்பதாகச் செய்யுளைக் காட்டியவுடன், மறு நாள் அவர் அதற்கு விளக்கம் தந்து வெற்றி கரமாக அரங்கேற்றினார்.

எந்தப் பொருளும் இந்தப் புராணத்தில் உளதா?

ஆம்; எல்லா உபகதைகளும் இதில் உள்ளன. இதன் மூலம் சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஸ்காந்தம் ஆகும்.அதுதான் 18 புராணங்களில் மிகப் பெரியது 81,000 ஸ்லோகங்கள் உடைத்து.

 

கந்த புராணத்தின் பெருமை என்ன?

பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவ பரமானவை; அவைகளில் கந்த புராணம் சிறந்தது; ஏனெனில் வேதாந்த சித்தாந்த சாரங்களை உள்ளடக்கியது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் எளிதில் தரவல்லது.மங்கலத்தைச் செய்விப்பது; வலிமிக்க கலித் துன்பத்தை நீக்குவது.

கச்சியப்பர் இது பற்றி செப்பியது யாது?

“காந்தம் என்னும் பெருங்கடல்”  — என்று அருளினார். 10,346 பாடல்களை ஆறு காண்டங்களாகவும் 94 படலங்களாகவும் அவர் பிரித்தார்.

 

இதைச் சுருக்க முடியுமா?

சம்பந்த சரணாலய சுவாமிகள் என்பார், கந்தப் புராணத்திலுள்ள வரலாறுகளை ‘சுருக்கித் தொகுத்தல்’ என்னும் யாப்பால் 1049 செய்யுட்களால் இயற்றி அருளினார்.

 

வடமொழியில் உள்ள ஏழாவது காண்டமான உபதேச காண்டத்தை கோனேரியப்பர் என்பவர் 4347 செய்யுட்களாகப் பாடியுள்ளார்; அதில் சூரன் முதலியோரின் முன்னை வரலாறும் உருத்திராக்க மஹிமையும்,  விபூதி மஹிமையும், சிவ நாம மஹிமையும் உளது.

கந்த புராணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் யாவை?

உற்பத்தி காண்டம், அசுர காண்டம் , மஹேந்திர காண்டம் , யுத்த காண்டம் , தேவ காண்டம், தக்க காண்டம் என்று ஆறு காண்டங்கள்

இவற்றில் அறுமுகக் கடவுளின் அவதாரம், தேவரை அசுரர்கள் சிறை செய்த வரலாறு,  சூரபன்மனை முருகன் வென்ற வரலாறு, வள்ளி, தெய்வயானை திருமணம், முதலியன உடைத்து.

 

 

கச்சியப்பரின் கந்த புராணத்தில் என்ன உளது?

 

கனிச்சுவை மிக்கது; நவில்தொறும் நவில்தொறும் நா நயம் பயப்பது;

பயில்தொறும் பயில்தொறும்  அறுமுகக் கடவுள் மேல் பக்தி ஞானம் விளைப்பது.

இதில் சொல்லபடாத கிளைக் கதைகள் இல; இதை ‘புதுமயிலூர்பரன் புராணத்துற்றிடாக் கதையிலை’ என்னும் செய்யுட் பகுதியால் அறியலாம்.

 

அது கிரந்தத் தொகை, கதைப் பரப்பு, அரும்பொருட்கிடக்கை, பொருள் ஆழம் என்பவைகளால் மற்றவற்றைச் விடச் சிறந்து விளங்குவதால்

கந்த புராணத்தை தமிழில் வெளியிட்டவர் யார்?

கந்த புராணத்தின் மூல பாடம் முழுவதையும் முதலில் யாழ்ப் பாணத்து நல்லூர் ஸ்ரீ ஆறுமுக நாவலர் பதிப்பித்தார். அவரே கந்தபுராணத்தை வசன நடையிலும் எழுதி  வெளியிட்டார்.

கந்த புராணத்தில் சுவையான, அதிசய விஷயங்கள்  இருக்கின்றனவா?

ஆம். யுத்த காண்டத்தில் 108 பூத கணத் தலைவர்கள் பெயர் உள்ளது. அசுர  காண்டத்தில் காச்யபர் உபதேசம், மாயாதேவி உபதேசம், சுக்கிராச்சாரியார் உபதேசம் உள்ளன. கஸ்யபருக்கு மாயைபால் தோன்றிய சூர பன்மன் , வீர வேள்வி செய்து, சிவனிடம் வரம் பெற்று 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆள வரம் பெற்றதையும் காணலாம். தட்ச காண்டத்தில், தக்கன் புதல்வர்களை, நாரதர் தவ வழியில் செலுத்தல், ததீசி முனிவர் பதில் கூறல், வீரபத்திரர், பத்திர காளி தோற்றம், யாக சங்காரம் ஆகியன ஆழ, ஊன்றிப் படித்தற்குரியனவாம். கந்தன் தொடர்பான விரதங்களும் நல்ல தகவல் தருவன.

 

கந்தபுராணத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை, முசுகுந்த சக்ரவர்த்தி கொண்டு வந்து, திருவாரூரில் பிரதிஷ்டை செய்த வரலாறும் ஆறு மூர்த்திகளை  ஆறு ஸ்தலங்களில்  பிரதிஷ்டை செய்த வரலாறும் அறிய வேண்டிய விஷயங்கள்.

TAGS:— கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியார், திகடச்சக்கர, ஆறு காண்டங்கள்

 

–சுபம், சுபம் –