கண்ணன் எத்தனை கண்ணனடி!

krishna unjal ,sivaramn

2015 செப்டம்பர் 5 ஜன்மாஷ்டமி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை!

ச.நாகராஜன்

Written by S NAGARAJAN

Date : 5 September  2015

Post No. 2126

Time uploaded in London : 6-16 am

காலம் காலமாக கோடிக் கணக்கானோருக்கு கோடானு கோடி விதத்தில் ஒரு அவதாரம் அருள் செய்து வருவது மனித குலத்தின் சிறப்பான ஒரு அதிசய அம்சம்.

கண்ணன்! எத்தனை கண்ணனடி!

குழந்தைகளுக்கு அவன் வெண்ணெய்திருடி. தமாஷ்வாலா!

யசோதைகளுக்கு வாயில் அண்ட பிரபஞ்சத்தையேக் காண்பிக்கும் அதிசய மாயாவி!

யௌவன ருக்மிணிகளுக்கு தன்னைப் போன்ற சரியான ஒருவனுக்குக் காதல் கடிதம் எழுத உத்வேகமூட்டும் அற்புத சுந்தரன்!

அர்ஜுனனுக்குத் தன்னை மறைத்துக் கொண்டு தேர் ஓட்டிய பார்த்தசாரதியான அற்புத நண்பன்

ஆனால் அவனை நிமித்தமாக வைத்து குருக்ஷேத்திரத்தில் உலகிற்கே கீதையை உபதேசம் செய்த லோக குரு!

cute krishna, fb

காந்தாரிக்கோ தர்மம்.

சகாதேவனுக்கு மனதால் பற்றும் பற்றற்றான்!

பீஷ்மருக்கோ இச்சாமரணியாக இருந்த போதும் மரணத்தின் போது கண்ணுக்கு நேரே வந்து அருள் பாலிக்கும் கடவுள்.

துரியோதனனுக்கு அவனது சுடுசரங்களை எதிர்கொள்ளும் காலாக்னி.

குந்திக்கு கஷ்டகாலத்தில் உன்னை நினைக்க வரம் தா என்று கஷ்டத்தை வரவேற்கத் தூண்டும் கர்த்தா!

திரௌபதிக்கோ சகல கஷ்டங்களையும் அரை நொடியில் போக்கும் ஹ்ருதய கமல வாஸன்.

தர்ம பீம நகுலருக்கோ ராஜ தந்திரி!

வியாஸருக்கு புவனத்ரய வாஸுதேவன்

சஞ்சயனுக்கோ யோகேஸ்வரன்.

krishna dance by sivaraman fb

கண்ணன் இன்னும் எத்தனை பேருக்கு என்னென்னவாக இருக்கிறானோ, யார் அறிவார்?

பாரதிக்கு அவன் தீராத விளையாட்டுப் பிள்ளை.

நம்மாழ்வாருக்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்!

பொய்கையாழ்வாருக்கு வினைச்சுடரை நந்துவிக்கும் ஓங்கோதவண்ணன்!

அவன் லீலைகளைக் கேட்டவண்ணமும் சொன்ன வண்ணமும் இருக்கும் லீலாசுகருக்குச் செவிக்கு அமிர்தமாக இருப்பவன் (கிருஷ்ணகர்ணாம்ருதம் இயற்றியது அதனால் தான்!)

சைதன்யருக்குத் தன்  நாமம் சொல்லி நாட்டியமாட வைக்கும் நர்த்தன நாயகன்!

சூர்தாஸுக்கு அவனை மட்டும் பார்க்க கண்ணொளி தரும் ஞான சூரியன்!

யோகினியாக கண்ணனைத் துதிக்கும் மீராவுக்கோ அவன் கோவர்த்தன கிரிதாரி!

ஆண்டாளுக்கோ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோனாக ஆகும் ஆழிமழைக்கண்ணன்!

வேங்கடசுப்பையருக்கு ஈரேழு புவனமும் அசைந்தாட, குழல் ஆடி வரும் அழகன்.

தமிழ்நாட்டின் தீய சக்திகளுக்கோ கால சக்தி!

இந்திய நாட்டிற்கோவெனில் பாரதத்தை மையமாக வைத்து உலக நாடுகளை வழி நடத்திச் செல்லும் ஒளி விளக்கு!

இத்தனையும் அவன்!

இதற்கு மேலும் அவன்!!

இதெல்லாம் இல்லாமல் தன்னை மறைத்துக் கொள்பவனும் அவனே!

சொல்லுரைக்க மாட்டா விந்தையிலும் விந்தையான கண்ணனைப் பற்றிச் சொல்ல நூலாயிரம் வேண்டும். நாளாயிரமும் நாவாயிரமும் போதா!

அவனைப் போற்றி வணங்கும் இந்த ஜன்மாஷ்டமியில்,

அவனை மனம் பற்றித் துதிப்போம்! மகிழ்வோம்!! உயர்வோம்!!!

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே I

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே II***************

((Photos are from my face book friends Mr Sivaraman and others; thanks:swami))

————–xxxxxxxxxxxxx—————

ராமன் – யமன் சண்டை! அரிய ஏட்டுச் சுவடி!!

Compiled by London swaminathan

Date : 4 September  2015

Post No. 2124

Time uploaded in London : 12-58

கம்ப ராமாயணத்திலும்,வால்மீகி ராமாயணத்திலும் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் செவி வழியாக வந்துள்ளன. புற நானூற்றில் உள்ள இரண்டு பாடல்களில் உள்ள செய்திகள் இரண்டு ராமாயணங்களிலும் இல்லை. ஆழ்வார் பாடல்களில் உள்ள அணில் கதையும் முந்தைய இரண்டு ராமாயணங்களில் இல்லை. இவைகள் குறித்து முன்னரே எழுதிவிட்டேன். ஒரு வேளை இவைகள் நமக்குக் கிடைக்காமற்போன போதாயன ராமாயணம் முதலியவற்றில் இருந்திருக்கலாம். ராமனுக்கும் யமனுக்கும் நடந்த சண்டை குறித்த ஏட்டுப் பிரதி விஷயம், ஒரு சிறிய நூலாக வெளிவந்து, பிரிட்டிஷ் லைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்தப் புத்தகம்.

வசந்தன் உயிர்வரு படலம்

வெளியான தேதி – 6-11-1917

வெளியிட்டவர்: கும்பகோணம் அ.அரங்கசாமி மூப்பனார்

(தற்போதைய கம்பராமாயணப் பதிப்புகளில் இந்தப் படலம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை).

IMG_3972 (2)

IMG_4130

IMG_4133 (2)

IMG_4134

IMG_4135 (2)

IMG_4136 (2)

IMG_4137 (2)

IMG_4138

மஹாசக்தி அருள் பெற்ற மேலை நாட்டினர்!

saktisakta

Written by S NAGARAJAN

Date : 2 September  2015

Post No. 2116

Time uploaded in London : 6-05 am

My brother S Nagarajan is a regular contributor to several Tamil Magazines including Bhagya, Jnana Alayam.

ஞான ஆலயம் செப்டம்பர் 2015 இதழில் வெளியான கட்டுரை

 ச.நாகராஜன்

சாதுவின் தந்திரம்

 

மஹாசக்தியின் அருள் விளையாடல்கள் எத்தனையோ! ஹிந்துக்களாகப் பிறந்தவர்களுக்கு மட்டும் அன்னையின் அருள் என்பதில்லாது வேற்று மதத்தினருக்கும் பல்வேறு விதத்தில் அருள் லீலைகளால் அருளி அவர்களைத் தம்பால் அன்னை மஹேஸ்வரி ஈர்த்துள்ளாள்.

நூற்றுக் கணக்கான அபூர்வ சம்பவங்களில் ஒரு சம்பவத்தை இங்கு பார்ப்போம்.

சர் ஜான் உட்ராஃப் (1865-1936) கல்கத்தாவில் ஹைகோர்ட் நீதிபதியாகப் பணியாற்றி பிரிட்டிஷ்காரர். கல்கத்தா பல்கலைகழகத்தில் சட்டத்துறை பேராசிரியராகவும் அவர் பணியாற்றி வந்தார்.

சக்தி சம்பந்தமான தத்துவங்களில் அபார ஈடுபாடு அவருக்கு ஏற்பட்டது. தந்திரங்கள் சம்பந்தமாக ஆர்தர் அவலான் (Arthur Avalon) என்ற புனை பெயரில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

அவருக்கு எப்படி இதில் ஈடுபாடு ஏற்பட்டது என்பதற்கு ஒரு சுவையான சம்பவம் உண்டு.இந்த சம்பவத்தை அவரது நூல்களை ஆழ்ந்து படித்த அறிஞரான ஜான் மம்ஃபோர்ட் (John Mumford) குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாள் நீதிமன்றத்தில் இருந்த போது ஒரு கேஸ் சம்பந்தமாக எவ்வளவு முயன்ற போதிலும் அதில் மனதை ஈடுபடுத்த உட்ராஃபால் முடியவில்லை. கோர்ட்டில் இருந்த சிப்பந்திகளில் ஒருவர் உட்ராஃபிடம் வந்தார். தாந்திரீகத்தில் பயிற்சி உள்ள ஒரு சாதுவை இந்த கேஸில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒருவர் வெளியில் உட்கார வைத்திருக்கிறார் என்றும் அவரைத் தனக்கு அநுகூலமாக இருக்குமாறு அவரிடம் பிரார்த்தித்துள்ளதாகவும் அவர் கூறினார். அந்த சாது மந்திரங்களை உச்சாடனம் செய்வதாலேயே உட்ராஃபினால் சரியாக சிந்திக்க முடியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

உட்ராஃபுக்கு ஒரே ஆச்சரியம்! வெளியே வந்து பார்த்தார். ஒரு சாது, உடலெல்லாம் விபூதி பூசியவர் அங்கே அமர்ந்து சம்ஸ்கிருத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

உட்ராஃப் போலீஸை அணுக, இந்திய போலீஸார் அந்த சாதுவை அந்த இடத்திலிருந்து அகற்றினர். அந்தக் கணமே உட்ராஃபின் மனம் அமைதியானது. அவர் வியந்து போனார்.

தந்திர சாஸ்திரத்தால் இப்படியெல்லாம் கூடச் செய்ய முடியுமா? இதை ஆராய வேண்டுமென்று மனதில் எண்ணிக் கொண்டார்.

serpent power

அந்த தீவிர எண்ணத்தின் விளைவாகவே அவர் தந்திர சாஸ்திரத்தில் நிபுணராக மாறினார். .The Serpent Power, Shakti and Shakta, The Garland of letters உள்ளிட்ட பல   புஸ்தகங்களை எழுதினார். தந்திர சாஸ்திரங்களில் உள்ள தீமை செய்யும் பிரயோகங்களை விட்டு விட்டு அதிலுள்ள ஆன்மீக சக்தியை எழுப்பும் ஏராளமான தாந்திரீக முறைகளை அவர் தனது நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மஹாசக்தியின் இயக்கம்

 

ஏதோ ஒரு மஹாசக்தி அனைத்தையும் இயக்குகிறது என்று அடிக்கடி ரமண மஹரிஷி அருள்வதுண்டு.மஹரிஷியை அடிக்கடி சந்திக்க விழைந்த ஒரு பணக்காரப் பெண்மணி ரமணாசிரமத்திற்கு, 21-10-1936 அன்று, மீண்டும் வருகையில் பங்களூருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே உள்ள ஒரு காட்டாற்றில் வெள்ளம் வந்து ஒரு பஸ் கவிழ்ந்த விபத்தைக் கூறித் தனது கார் அந்த ஆற்றின் வழியே பின்னர் வந்ததென்றும் ஆனால் பயப்படாமல் ஆற்றைக் கடந்து ஆசிரமம் வந்து சேர்ந்ததாகவும் கூறினார். மஹரிஷியின் அருளை வேண்டி அவர் இறைஞ்சிய போது மீண்டும் மீண்டும் இங்கு வருவதே அருள் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று கூறிய ரமணர் “ஒரு மஹாசக்தி வழி நடத்துகிறது. அதன் வழிகாட்டுதலில் நட” என்றார். அந்த சக்தி எனக்குத் தெரியவில்லையே என்று அவர் கூறிய போது, “அந்த சக்திக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியும். அதை நம்பு” என்று அருளினார் அவர்.

இந்த மஹாசக்தியே நூற்றுக் கணக்கான மேலை நாட்டினரை அவர் அருகில் வரவழைத்து அவரது பக்தர்களாக ஆக்கியது.

book humphreys

ப்ராங்க் ஹம்ப்ரீஸின் ரமண தரிசனம்

 

ரமண மஹரிஷியிடம் வந்த முதல் மேலைநாட்டுக்காரர் ஃப்ராங்க் ஹம்ப்ரீஸ்        (Frank H.Humphreys) என்னும் பிரிட்டிஷ்காரர். 1911ஆம் ஆண்டு அவர் மஹரிஷியிடம் வந்து சேர்ந்த விதமே சுவாரசியமானது. அவர் ரமணரின் அற்புத அருள் சக்தியை அறிந்து ‘தி இண்டர்நேஷனல் சைக்கிக் கெஜட்டில் ‘(The International Psychic Gazette) 1913ஆம் ஆண்டு மஹரிஷியைப் பற்றிக் கட்டுரைகளை எழுதினார். இதன் மூலம் ரமணரின் அவதார அருள் சக்தி வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தது.

ஹம்ப்ரீஸ் 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸிஸ்டண்ட் சூபரின்டென்டெண்டாக இந்தியாவிற்கு வந்தார். அவர் பம்பாயை அடைந்த போது அவர் உடல்நிலை மோசமாகவே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மார்ச் மாதம் அவர் உடல்நிலை தேறியது. அந்த மாதம் வெல்லூருக்கு 18ஆம் தேதி வந்து சேர்ந்தார். அவருக்குத் தெலுங்கு கற்பிக்க நரசிம்மய்யா என்ற ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.

19ஆம் தேதி ஹம்ப்ரீஸ் நரசிம்மய்யாவிடம், ‘உங்களுக்கு மகான்கள் யாரையாவது தெரியுமா’ என்று கேட்டார். தெரியாது என்று பதில் சொல்லி விட்டார் நரசிம்மய்யா. ஆனால் அடுத்த நாள் ஹம்ப்ரீஸ் அவரிடம் கேட்ட முதல் கேள்வி:’ நீங்கள் நேற்று எனக்கு ஒரு மகானையும் தெரியாது என்று சொன்னீர்களே! உங்கள் குருவை நான் இன்று காலையில் தூக்கத்தில் பார்த்தேன். அவர் ஏதோ சொன்னார். என்ன என்று புரியவில்லை. உங்களையும் நான் பம்பாயில் முதன் முதலாகப் பார்த்தேன்” என்றார். குண்டக்கல் தாண்டி எங்கும் போகாத அவரை பம்பாயில் எப்படிப் பார்த்திருக்க முடியும்?

ஹம்ப்ரீஸ், பம்பாய் மருத்துவமனையில் ஜுரத்தினால் அவதிப்பட்ட போது அவர் வலியிலிருந்து மனதைத் திருப்பி ஆவி உடலில் மேலே சஞ்சரித்த போது வெல்லூர் வந்து நரசிம்மய்யாவைத் தான் பார்த்ததாகக் கூறினார். இதனால் வியந்து போன நரசிம்மய்யா கணபதி முனி, ரமணர் உள்ளிட்ட பலரது போட்டோக்களை ஹம்ப்ரீஸின் மேஜை மீது வைத்து விட்டார். சிறிது நேரம் கழித்து கணபதி முனிவரின் படத்தை எடுத்து அவரிடம் தந்த ஹம்ப்ரீஸ், “இவர் தானே உங்கள் குரு?” என்றார். உண்மை அது தான்! 1906லிருந்து கணபதி முனிவரே அவருக்கு குரு!

raman-maharshi-3-728

ஏப்ரல் மாதம் ஹம்ப்ரீஸுக்கு மீண்டும் உடல் நிலை மோசமானது. அவர் ஊட்டிக்குச் சென்று விட்டார். அங்கிருந்து பல கடிதங்களில் தன் அனுபவங்களை எழுதி நரசிம்மய்யாவிடம் விளக்கம் கேட்டு வந்தார் அவர். 21 வயது ஆகி விட்டதால் மகான்களில் சங்கம் ஒன்றில் தன்னால் சேர முடியுமா என்பது அவரது கேள்விகளில் ஒன்று. 1911ஆம் ஆண்டின் இறுதியில் வெல்லூருக்கு மீண்டும் வந்த ஹம்ப்ரீஸ் ஒரு நாள் நரசிம்மயாவிடம் ஒரு பேப்பரையும் பென்சிலையும் கொண்டு வரச் சொன்னார். அதில் ஒரு மலை குகையையும் குகை வாயிலில் ஒரு மகான் நின்று கொண்டிருப்பதையும் வரைந்து காண்பித்தார்.

“இந்த மகானைத் தான் நான் என் தூக்கத்தில் கண்டேன். இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா” என்று அவர் நரசிம்மய்யாவிடம் கேட்டார்.

அது சாட்சாத் ரமணரையும் ரமணர் இருந்த விருபாட்சி குகையையும் காட்டியது.

நரசிம்மய்யா அதைத் தெரிவிக்கவே, ரமண தரிசனம் ஹம்ப்ரீஸுக்குக் கிட்டியது.

அடிக்கடி தனக்கு சந்தேகம் வரும் போதெல்லாம் அவர் ரமணரை சந்திப்பது வழக்கமானது.

மஹாசக்தி வழி காட்டும்

 

முதல் சந்திப்பிலேயே ஹம்ப்ரீஸ் மஹரிஷியிடம் கேட்ட கேள்வி:

“ஸ்வாமி! நான் உலகிற்கு உதவ முடியுமா?”

ரமணர்: “முதலில் உனக்கு நீ உதவிக் கொள். பின்னர் உலகிற்கு நீ உதவலாம்!”

ஹம்ப்ரீஸ்: “ஸ்வாமி! கிருஷ்ணர், ஏசு போல என்னால் அற்புதங்கள் நிகழ்த்த முடியுமா?”

ரமணர்: அற்புதங்களை அவர்கள் நிகழ்த்தியபோது தாங்கள் அற்புதங்களை நிகழ்த்துகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்களா?

ஹம்ப்ரீஸ்: (ஒரு நிமிட மௌனத்திற்குப் பின்னர்): “இல்லை, ஸ்வாமி! கடவுளின் சக்தி அவர்களின் மூலம் வெளிப்பட்டு வேலை செய்தது.

ரமணர் புன்னகை பூத்தார்.

ஒரு பெரும் மஹாசக்தி எல்லாவற்றையும் அணுவளவும் பிசகாது செய்து வருகிறது என்று ரமண மஹரிஷி கூறி வந்ததை அவர் வாழ்வு நிகழ்வுகளினாலேயே நன்கு   உணரலாம்.

அதில் ஏராளமான மேலை நாட்டினர் இறை சக்தியின் அருளுக்குப் பாத்திரமான பிரமிக்க வைக்கும் அதிசய நிகழ்வுகளையும் காணலாம்!

******************

அப்பரின் அருமையான ‘லாபரட்டரி’!

appar1

Written by S NAGARAJAN

Date : 1 செப்டம்பர்  2015

Post No. 2114

Time uploaded in London : 9-02

ச.நாகராஜன்

இறைவனை அறிய ஒரு லாபரட்டரி சோதனை!

விஞ்ஞான யுகம் மலர்ந்ததிலிருந்து லாபரட்டரிகளுக்கு ஒரு தனி ‘மவுசு’ ஏற்பட்டிருக்கிறது. சோதனைச்சாலையில் எதையும் செய்து பார்த்து நிரூபித்தால் தான் அந்தக் கொள்கையைப் பற்றிய நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.

மாணவர்கள் சிறுவயதிலிருந்தே லாபரட்டரி ஃபீஸ் தனியே இப்போது கட்ட வேண்டியிருக்கிறது. எதையும் ஆராய்ந்து அறிந்தால் சுகம் தான்!

அது சரி சிக்கலான கேள்விகளுக்கு சோதனைச் சாலை உண்டா?

இறைவன் இருக்கிறானா, எங்கு இருக்கிறான், எப்படி அவனை அறிவது, இப்படி இதைத் தொடர்ந்து ஆயிரம் கேள்விகள். பதிலைப் பெற, சோதனை செய்து அறிய லாபரட்டரி ஏதேனும் இருக்கிறதா?

இறைவனைப் பற்றிப் பாடிய அருணகிரிநாதர் ‘அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சி’ என்கிறார்.

அறிவால் அறிய சோதனைச் சாலை உண்டா?

ஏதுக்கள் எதற்கு?

வேண்டாம் இந்த விபரீதம் என்று அருளுரையாக அன்புரையாக எச்சரிக்கிறார் திருஞானசம்பந்தர்.

“ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா” என்ற அவரது மொழி, லாஜிக் மற்றும் வார்த்தை சித்துகளை ஓரம் கட்டி வை என்று கூறுகிறது.

“சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி” என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் அவர்.

அத்தோடு, “மா துக்கம் நீங்கல் உறுவீர்” என்று ஆறுதலும் கூறுகிறார்.

துக்கம் நீங்க என்ன ஐயன்மீர், வழி என்று சம்பந்தரைக் கேட்க வாய் திறக்குமுன்னர்

அவரே சிறிய யோசனை ஒன்றைக் கூறி இதற்கு முற்றுப் புள்ளியையும் வைத்து விடுகிறார்.

அவரது மாபெரும் ரகசிய உரை இது தான்: “மனம் பற்றி வாழ்மின்!”

அது என்ன மனம் பற்றி வாழ்வது? அதன் பயனை நான்கடிப் பாடலில் நான்காவது அடியில் கூறி விடுகிறார் இப்படி:-

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே!

மனம் பற்றி வாழ்ந்தால் இறையைச் சார்ந்து விடலாம்.

நான்கு அடிகளில் நான்கு கோடி அறிஞர்கள் சேர்ந்து நான்கு யுகங்கள் யோசித்தாலும் கூற முடியாத விஷயத்தை சம்பந்தர் எளிய தமிழ்ப் பாடல் ஒன்றில் கூறி விடுகிறார். (மூன்றாம் திருமுறை வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் பதிகத்தில் ஐந்தாம் பாடல் காண்க)

appar2

எத்தனை யோசனைகள்!

மனம் பற்றி வாழ்வது பற்றி மண்டை குடைகிறது!

கங்கை செல்க, காவிரியில் நீராடுக, குமரித் துறையில் குளிக்கவும் என்போர் ஒரு புறம்!

சாஸ்திரம் ஓது, அனைவருக்கும் கொடு, யாரும் அறிய முடியாத எட்டும் இரண்டும் பற்றி எட்டு மணி நேரம் பேசுமளவு தெரிந்து கொள் என்போர் இன்னொரு புறம்!

வேதம் ஓது, யாகம் செய். நீதி நூல் நித்தம் பயில் – இது சிலரின் அறிவுரை; காலை நீராடு; கானகம், நாடு ஆகியவற்றில் திரிந்து அலை; ஊனை ஒழி; வேடம் பூண்டு குழுவில் சேர்; நோன்பு நோற்கவும்; பட்டினி கிட; இதுவும் சரிப்படவில்லையா?

இன்னும் இருக்கிறது யோசனை; கோடி தீர்த்தம் ஒன்றாய்க் கலந்து குளி தவம் செய்!

அப்பப்பா, எத்தனை குழப்பம். எத்தனை நூல்கள்; எத்தனை அறிஞர்கள்; எத்தனை யோசனைகள்!

இந்த யோசனைகள் அனைத்தையும் தன் லாபரட்டரிக்கு எடுத்துச் செல்கிறார் அரிய தெய்வ புருஷர் ஒருவர். அவர் யார்?

அப்பர்!

டெஸ்ட் டியூபில் நமக்காக அனைத்து யோசனைகளையும் போட்டு அலசி ஆராய்கிறார்.

விடைகளைத் தர தமிழே உகந்தது என்பது அவரது முடிவு. நான்கு நான்கு அடிகளில் உண்மைகளைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார்; நாம் வியக்கிறோம்.

மனம் பற்றி வாழும் அரிய ரகசியக் கலை தெரிந்து விடுகிறது அவரின் பாடல் மூலமாக. மேலே சொன்ன கங்கை காவிரி ஆடல், வேதம் ஓதல், யாகம் செய்தல் இத்யாதி யோசனைகள் அனைத்தும் நல்லவையே! ஆனால் அவை பலன் அளிக்க வேண்டுமெனில் மனம் பற்றி வாழ வேண்டும் என்ற ஞான சம்பந்தரின் யோசனைக்கு அவர் ஆதரவு தெரிவிக்கிறார்.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்? இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்யின் என்? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே

காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்? ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே!

கானம் நாடு கலந்து திரியில் என்? ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே!

கூட வேடத்தர் ஆகிக் குழுவில் திரியில் என்? அம்பலக்கூத்தனைப் பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே!

நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்? என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே!

கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே!

நல் தவம் செய்து வருந்தில் என்? ஆர் கழல் சேவடி பற்று இல்லாதவர்க்குப் பயன் இல்லையே!

ஆஹா! அப்பரின் பத்துப் பாடல்களை ஓதி உணர்ந்த பின்னர் எப்படி இத்தனை நாளும் ஓடும் நீரை ஓட்டைக் குடத்தில் அடைத்து மூடி மூடி வைக்கப் பார்த்து முழித்து முழித்து பேதையாக இருந்திருக்கிறேன் என்பது நன்கு தெரிகிறது!

அவரது லாபரட்டரி ரிஸல்ட் சுருக்கமானது; சுவையானது.

உள்ளத்தில் மகிழ்ந்து உள்கு, எப்போதும் எங்கும் இருக்கும் ஞானனைப் பாடு; நினை; அவன் சேவடியைப் பற்று.

 

மனம் பற்றி வாழ்மின் என்ற ஞானசம்பந்தரின் வாக்கை தன் சோதனைச்சாலையில் சோதித்து நமக்காக அப்பர் அருள் விருந்து படைக்கிறார். தமிழில் தவிர இப்படிப்பட்ட அரிய பாடல்கள் வேறு எந்த மொழியிலாவது உண்டா?

இனி ஏதுக்கள் எதற்கு? மிக்க சோதனைகள் எதற்கு. மனத்தில் இறைவனைப் பற்றி வாழ்வோம். உள்ளுக்குள் உறையும் உத்தமனை எப்போதும் நினைத்து வாழ் என்பதே சாரம்!

மாம் ஏகம் சரணம் வ்ரஜ; (என் ஒருவனையே சரணடை; நான் உன்னை அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் – கீதையில் கண்ணன்)

******************

பாரசீகக் கிளி செய்த தந்திரம்!

alexandrine_parrot_f

கிளி படங்கள் பல  இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன; நன்றி)

Article No. 2104

Written by London swaminathan (தமிழில் மொழி பெயர்ப்பு)
Date : 28 August  2015
Time uploaded in London :– 8-38 am

காஷ்மீரில் ஒரு பெரிய வணிகர் இருந்தார். அவர் ஆண்டுதோறும் பாரசீகத்துக்குச் சென்று வணிகம் செய்து வந்தார். (பாரசீகத்தின் தற்போதைய பெயர் ஈரான்). இந்திய சரக்குகளை அங்கே விற்றுவிட்டு ஈரானிய சரக்குகளைக் காஷ்மீருக்குக் கொண்டுவந்து விற்பது அவரது வழக்கம். ஒரு முறை பாரசீகத்தில் ஒரு அழகான கிளியைப் பார்த்தார். அது மனிதர்களைப் போலவே பேசுவது கண்டு வியப்படைந்தார். உடனே அந்தக் கிளியை ஒரு விலை பேசி வாங்கிவிட்டார்.

காஷ்மீருக்குத் திரும்பிவந்தவுடன் அழகான, பெரிய கூண்டு செய்து அதற்கு ராஜ உபசாரம் செய்துவந்தார். அவரது குடும்பத்தினரும் அக்கிளியைப் போற்றி வளர்த்தனர். தங்கக் கூண்டு ஆனாலும், கூண்டு என்பது சிறைவாசம்தானே! இருந்த போதிலும் கிளி அழகாகப் பேசி அவர்களை மகிழ்வித்து வந்தது.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் காஷ்மீர் வணிகருக்கு உலல்நலம் சரியில்லை. உடனே அந்தரங்கக் காரியதரிசியை அழைத்து, “இந்த ஆண்டு நீ போய் பாரசீகத்திலிருந்து சரக்குகளை வாங்கி வா; எனக்கு உடம்பு சரியில்லை” என்றார். எஜமானர் போட்ட உத்தரவை சிரம் மேல் தாங்கி அவரும் பாரசீகத்துக்குப் புறப்படத் தயாரானார்.

எல்லோர் அன்புக்கும் பாத்திரமான கிளி, அவரை அழைத்து, “அன்பரே. நீர் பாரசீகத்துக்குச் செல்லும்போது எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். இங்கு எனக்கு ராஜபோக உபசாரம் கிடைத்தாலும் என் சொந்தக்காரர்களைப் பார்க்காமல் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்களை நீங்கள் சந்தித்து நான் குசலம் (நலம்) விசாரித்ததாகக் கூறுங்கள். என் சொந்தக்கார கிளிகள் நீர் செல்லும் நகருக்குக் கிழக்கேயுள்ள தோட்டத்தில்தான் வசிக்கின்றன. மிகப் பெரிய கூட்டம் என்பதால் அந்தக் கிளிகளை நீவீர் எளிதில் இனம் காண முடியும். இடர்ப்பாடு ஏதும் இராது “ என்றது. கடைசியாக நான் அவர்களைப் பார்க்க வேண்டும். அதற்கு என்ன வழி என்றும் ஒரு கேள்வியைக் கேளும்; அவர்கள் சொல்லும் பதிலை என்னிடம் மறவாது செப்பும்” என்றும் கிளி பகன்றது. காரியதரிசியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

330591-green-parrot

வணிகரின் செயலர் பாரசீகத்துக்குச் சென்று வணிகப் பணிகளை செவ்வனே செய்து முடித்தார். திடீரென காஷ்மீரிலுள்ள கிளி சொன்ன விஷயம் நினைவுக்கு வரவே நகருக்கு வெளியேயுள்ள தோட்டத்துச் சென்றார். அந்தக்கிளி சொன்னது போலவே எளிதில் சொந்தக் கார கிளிக்கூட்டத்தைக் கண்டு பிடித்தார். அவர்களுடைய சொந்தக்கார கிளி காஷ்மீரில் அடைபட்டிருப்பதையும் அது “நலம்தானா?” என்று வினவியதையும் செப்பிய பின்னர், ”ஒரு முக்கிய விஷயம் காஷ்மீர் கிளி உங்களை மீண்டும் பார்க்கவேண்டுமாம். நீங்கள்தான் வழி சொல்லவேண்டுமாம்” என்றார். அந்தக் கிளிகளோ கீச்சுக் கீச்சு என்று ஒலி எழுப்பியனவே அன்றி பதில் இறுக்கவில்ல. அவரும் மூன்று நான்கு முறை கேட்டுப் பார்த்தார். பலனில்லை. அவர் புறப்படும் முன் ஒரே ஒரு கிளி மட்டும்—வயதான கிளி—இறக்கையெல்லாம் பாதி இழந்துவிட்ட கிளி- தொப்பென்று மரத்திலிருந்து கீழே விழுந்தது. செத்துப்போன கிளி போல சிறகெல்லாம் விரிந்து, மல்லாந்து கிடந்தது. அதைப் பார்த்த செயலர், “ஐயோ பாவம்; தள்ளாத வயது போலும்” என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.

காஷ்மீருக்குத் திரும்பிவந்தவுடன் , எஜமானரிடம் – முதலாளியிடம் – வணிக விஷயங்களை ஒப்புவித்தார். அவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிளி மெதுவாக அவரை அழைத்து “நான் சொன்ன விஷயம் என்னவாயிற்று?” என்று கேட்டது. அவரும் நடந்ததை நடந்தபடியே சொல்லிவிட்டு கடைசியில் ஒரு கிளி மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்ததையும் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டே இருந்த கிளி திடீரென கூண்டின் உட்புறத்தில் நிற்கும் மரக்குச்சியில் இருந்து விழுந்தது. அது சிறகை விரித்து மல்லாந்து கிடந்ததைப் பார்த்துவிட்டு எஜமானரிடம் கிளி திடீரென்று இறந்துவிட்டது என்றார். அவரும் அதன் பரிதாபச் சாவைப் பார்த்துவிட்டு வேலைக்கரனைக் கூப்பிட்டு, ஊருக்கு வெளியேயுள்ள தோட்டத்தில் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யச் சொன்னார்.

உடனே வேலைக்கரன் அந்தக் கிளியை மிகவும் மரியாதையுடன் எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே ஒரு இலைதழை படுக்கை செய்து அதன்மீது வைத்துவிட்டு, ஒரு குழிதோண்டத் துவங்கினான். இதுவரை இறந்ததுபோல பாவனை செய்த கிளி சிறகடித்துப் பறந்தோடிப் போய்விட்டது!!!

விடுதலை! விடுதலை!

சுவாமி ராமதாஸ் சொன்ன கதை இது.

Parrot_clay_lick

(கிளி ப்டம்: விக்கிபீடியா)

அவர் சொல்லுவார்: எப்படி அந்தக் கிளி தான் (நான்) என்னும் தன்மையை இழந்தவுடன் விடுதலை பெற்றதோ அது போல நாமும் அஹம்காரம் (யான், எனது என்னும் செருக்கு) என்பதை இழந்தோமானால் விடுதலை/ முக்தி/ மோக்ஷம் கிடைக்கும்.

தமிழில் மொழிபெயர்ப்பு- லண்டன் சுவாமிநாதன்

parrot group

கொம்பு முளைத்த மாணவன், வகுப்புக்குள் வர முடியவில்லை!

red-bull

Article No. 2101

Compiled by London swaminathan (தமிழில் மொழி பெயர்ப்பு)
Date : 27 August  2015
Time uploaded in London :– காலை 8-27

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவனின் கவனம்  எங்கேயோ இருந்தது. ஆசிரியர் அதைக் கவனித்துவிட்டார். மாணவனிடம் கேட்டபோது அவனும் ஒப்புக் கொண்டான். என் மனது வேறு எங்கோ இருக்கிறது. பாடத்தில் கவனமே செலுத்த முடியவில்லை என்றான்.

தான் ஒரு காளை மாடு வளர்ப்பதாகவும், வீட்டை விட்டு வெளியே போனாலும் அதே நினைவுதான் வருகிறது என்றும் சொன்னான். ஏனெனில் அந்த காளை மாட்டின் மீது எனக்கு அலாதியான அன்பு என்றான்.

வாத்தியார் சொன்னார்: “நீ அருகிலுள்ள மலைக்குப் போ. அங்கே ஒரு வாரம் அமர்ந்து காளை மாடு பற்றி சிந்தித்துக்கொண்டு இரு. பின்னர் வகுப்புக்கு வா. ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா என்று பார்ப்போம்” என்றார். பையனுக்கும் அந்த யோஜனை பிடித்திருந்தது. அவனும் அருகிலுள்ள மலையில் அமர்ந்து காளை மாடு பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தான். ஒரு வாரம் உருண்டோடிவிட்டது. பள்ளிக்கூடத்துக்குத் திரும்பி வந்தான். ஆசிரியரும் மாணவர்களும் அவனது வருகையை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தனர்.

பள்ளிக்கூடத்துக்கு வந்த பையன் வகுப்பு அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். ஓஹோ, மரியாதையின் பொருட்டு நிற்கிறான் போலும் என்று கருதிய ஆசிரியர், “பிள்ளாய்! உள்ளே வருவீர்!” என்றார்.

மாணவனோ “எனக்கும் உள்ளே வர அவாதான். ஆனால் என் கொம்பு தடுக்கிறதே என்றான். ஒரு வார காலத்துக்குள் கொம்பு மிகவும் உயரமாக வளர்ந்து விட்டது” என்றான்!

இந்தக் கதையைச் சொன்னவர் சுவாமி ராமதாஸ். அவர் மேலும் சொல்லுவார்:” பாருங்கள் அந்தப் பையன் காளை மாடு பற்றி தியானித்தவுடன், தானே காளை மாடு ஆகிவிட்டதாக எண்ணினான். மனதின் சக்தி அபாரமானது. மனிதனிடம் ஏற்கனவே இறையுணர்வு இருக்கிறது. அதைத் தியானித்தால் விரைவில், எளிதில் இறைத் தன்மையை அடையலாம்”

bull big

xxx

உபநிஷத வாக்கியங்கள்:

அஹம் பிரம்மாஸ்மி = நானே பிரம்மம் (கடவுள்)

தத் த்வம் அஸி = நீயே அதுவாக இருக்கிறாய்!

–சுபம்–

கல்யாண ஊர்வலத்தில் மனம் மாறிய மாப்பிள்ளை!

Procession

Article No. 2097

Written by London swaminathan
Date : 25 August  2015
Time uploaded in London :–  15-29

நேமி என்பவர் சமுத்ரவிஜயன் என்ற மன்னரின் மகன். அவர் ஷௌரிபூர் என்ற சிறிய பிரதேசத்துக்கு மன்னர். நேமிக்கும் ராஜ்மதி என்ற இளவரசிக்கும் திருமணம் நிச்சயமாகியது. அவள் பவநகர் மன்னன் உக்ரசேனனின் மகள். ராஜா வீட்டுக் கல்யாணம் என்றால் கேட்கவா வேண்டும். ஊரே அலங்காரம் செய்யப்பட்டது. மேளதாள, தாரை, தம்பட்டையுடன் பெரிய மாப்பிள்ளை அழைப்பு  ஏற்பாடாகியது!

யானை, ஒட்டகம், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் , ஆடல், பாடல் கலைஞர்களுடன் மாபிள்ளை நேமி ஊர்வலத்தில் வந்தார். அவர் வந்த ரதம் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இளவரசி ராஜ்மதி எனப்படும் ரஜூலை தோழிகள் கிண்டல் செய்த வண்ணம் இருந்தனர். அவள் அரண்மனை சாளரத்திலிருந்து, வழி மேல் விழி வைத்து, ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கல்யாண மப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், அரண்மனையிலுள்ள கல்யாண மண்டபத்தை நெருங்கிவந்துவிட்டது.

அப்பொழுது ஒரே ஆடுமாடுகளின் கோழி, கௌதாரிப் பறவைகளின் ஓலம் கேட்டது. மாப்பிள்ளைக்கு சிறிய சந்தேகம். தனது தோழர்களிடம் இது என்ன இரைச்சல்? என்று கேட்டார். உடனே அவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் கேட்க, அவர்கள் பெருமையுடன், எல்லாம் உங்கள் கல்யாண விருதுக்குத்தான்! இன்று கனஜோரான விருந்து கிடைக்கப்போகிறது– என்றனர்.

baraat2

அதைக்கேட்ட மாப்பிள்ளை வண்டியிலிருந்து குதிக்கப் ப்போனார். அவர்கள் எல்லோரும் என்ன ? என்ன ஆயிற்று? என்று வினவ, மாப்பிள்ளை எனக்குக் கல்யாணமும் வேண்டாம், கார்த்திகையும் வேண்டாம்; ரதத்தை கிர்னார் மலையை நோக்கிச் செலுத்துங்கள் என்று கட்டளையிட்டார். ரதம் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தவுடன் மேளதாளங்கள் நின்றன. ஒரே பரபரப்பு. பெண் வீட்டாருக்கும் செய்தி பரவியது. ஊரே அமைதியில் ஆழ்ந்தது.

பாதி ஊர்வலத்தில் மனம் மாறிய நேமி, சமணமதத் துறவியாகப்போவதாக அறிவித்துவிட்டு கிர்னார் மலையில் சமணத் துறவிகளிடம் தஞ்சம் அடைந்தார்.

குஜராத்திலுள்ள கிர்நார் மலை பலவகைகளிலும் புனிதம் பெற்ற இடம். கண்ண பிரான் முதல் சமணத்துறவிகள் வரை எல்லோரும் பழகிய இடம். இப்பொழுது அசோகன், ருத்ரதாமன், குப்தமன்னரின் கல்வெட்டுகள் அந்த மலையை அலங்கரிக்கின்றன.

இளவரசி ரஜூலுக்கு முதலில் மன வருத்தம்; பெரிய ஏமாற்றம். 51 நாட்கள் வரை, ஒரு வேளை மணமகன், மனம் மாறிவிடக்கூடும் என்று காத்திருந்தார். ஆனால் வரவில்லை. சிறிது சிறிதாக அவர் மனதிலும் மாற்றம் உண்டானது. என்னை அடைவதைவிட ஒரு இன்பமான நிலையை என் கணவராவதற்கு இருந்த நேமி, அடையமுடியுமானால் அதே இன்பத்தை நானும் நுகர்வேன் என்று அவரும் கிர்நார் மலைக்குச் சென்று துறவி ஆனார்.

ரஜூல் என்ற ராஜ்மதி உடனே துறவியானதாகச் சில நூல்களும் சில காலத்துக்குப் பின்னர் துறவியானதாகச் சில நூல்களும் செப்பும். மேலும் இடைக்கால கவிஞர்கள் இதையே ஒரு காதல் காவியமாக மாற்றி விரகதாப பாடல்களும் எட்டுக்கட்டிவிட்டனர். நேமி- ராஜூல் மணமுறிவு, ஒரு புது வகை இலக்கியத்தையே படைத்துவிட்டது.

அதையெல்லாம் விட மிகப்பெரிய விஷயம் அந்த நேமி என்பவர்தான் சமணர்கள் போற்றும் 22ஆவது தீர்த்தங்கரரான நேமிநாதர். அவருக்குப் பின்னர்தான் வர்த்தமான மஹாவீரர் அவதரித்தார். அவர் புத்தருக்குக் கொஞ்சம் சீனியர்.

நேமிநாதரின் மற்றொரு பெயர் அரிஷ்ட நேமி. இவர் கிருஷ்ணருக்கு உறவினர் என்றும் அதே யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர், ரிக் வேதம் முதலிய நூல்களில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் பகர்வர். அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவரானாலும் போற்றுதலுக்குரிய புண்ணிய புருஷர் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை.

baraat

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும்  தொழும்” என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னது இவர் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. கொல்லாமை விரதம் பூண்டோருக்கு பிற தர்மம் தேவை இல்லை என்றும் வள்ளுவர் கருதுவார்.

இந்துமத யோகிகளும் சந்யாசம் ஏற்கையில் மனம் , மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்று விரதம் ஏற்பர். வள்ளுவனும் இக்கருத்தைத் துறவறவியலில் கூறுவதைக் காண்க.

–சுபம்–

மலைப் பாம்பாகப் பிறந்த கோவில் பூஜாரி!

python malay

Article No. 2080

Written by London swaminathan

Date : 18 August  2015

Time uploaded in London :–  காலை 6-18

ஒரு நாள் ஸ்ரீ வல்லபாசாரியார் தம் சிஷ்யர் தாமோதரதாசர் பின்தொடரக் காட்டுப் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் தென்பட்ட ஒரு கோரக் காட்சி அவரை மேலே செல்லவிடவில்லை. இறக்கும் தருவாயில் ஒரு மலைப் பாம்பு செயலற்றுக் கிடந்தது. அதன் உடலை ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டு கடித்தன.கொடிய சித்திர வதை! மலைப் பாம்பு வேதனை தாளாமல் உடலை நெளித்து நெளித்துத் துன்புறுவது கண்ணராவியாக இருந்தது. இரு மனிதர் கண்களிலும் நீர் ததும்பியது.

ஸ்ரீ வல்லபாசார்யார் பெருமூச்சுடன், கையிலிருந்த கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அந்தப் பாம்பின் மேல் தெளித்தார். அதற்கு நற்கதி கிடைக்கட்டும் என்று பரமனைப் பிரார்த்தித்தார். எறும்புகள் உடனே விலகிவிட்டன. மலைப் பாம்பும் நிம்மதியாக மரணத்தை வரவேற்றது. இருவரும் மேலே வழிநடந்தார்கள்.

720-Mahaprabhu-Vallabhacharya

ஸ்ரீ ஆச்சார்யரின் மனக் கலக்கம் நீங்காததைக் கண்ட சிஷ்யர் பணிவோடு காரணத்தை வினவவே, குரு பதில் சொன்னார்: “இந்த மலைப் பாம்பு போன பிறவியில் பிருந்தாவனத்தில் கண்ண பிரானின் திருக்கோயில் ‘மஹந்த்’ (தலைமை அர்ச்சகர்). இவனை நம்பி ஏராளமான சிஷ்யர்கள் அறப்பணிக்காக நிறைய பொருளுதவி செய்தார்கள். அவ்வளவையும் இந்த மனிதன் சுய சுக போகத்துக்கென்றே செலவு செய்துவிட்டு மடிந்தான். இந்தப் பிறவியில் அந்த சிஷ்யர்கள் எறும்புகளாக வந்து பழிதீர்த்துக் கொள்கிறார்கள். நிலைதவறிய குருவை எண்ணிப் பார்க்கிறேன். மனக் கலக்கம் மாறவில்லை.”

சிஷ்யரின் கோரிக்கைப் படி சிறந்த குரு யார் என்பதை விளக்கினார் வல்லபர்: “சிரத்தையோடு தினமும் தெய்வத்துக்கு எவர் திருத் தொண்டு புரிகிறாரோ, செருக்கு, சினம், வேட்கை ஆகியவை சிறிதும் இல்லாமல் எவர் வாழ்கிறாரோ, பகவானின் சொரூபத்தை உணர்ந்தவர் எவரோ, அத்தகைய அறிவாளியை மெய்யறிவு பெற விரும்பும் எவரும் குருவாகக் கொள்ளலாம்.”

(தமிழ்:எஸ். ராஜன், ஜூலை, 1964 மஞ்சரி)

ஹிந்து யோகிகளின் அபூர்வ நினைவாற்றல்!

Deenadayal

தீனதயாள்  உபாத்யாயா

Article No. 2076

Written by London swaminathan

Date : 16  August  2015

Time uploaded in London :–  8-47 am

ஹிந்து மத சாது, சந்யாசிகள் அபூர்வ நினைவாற்றலை உடையவர்கள். அவர்களுடைய அபார நினைவாற்றலுக்கு முக்கிய காரணம் பிரம்மசர்ய விரதமே!

இளம் வயதில் யார் ஒருவன் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் (திரி கரண சுத்தி) வாயிலாக பெண்களை நினையாமல் இருக்கிறானோ அவனுக்கு மூளையில் மேதா நாடி என்ற ஒரு விஷேச குணம் வளரும். இதைப் பெற்றவர்கள் அபார நினைவாற்றலைப் பெறுவர். சிலர் இந்த ஞாபக சக்தியைப் பெரிதாக்கிக் கொள்வர். சிலர் அதைப் பொருட்படுத்தாது வேறு சில சித்திகளைப் பெறுவர். மேதா நாடி பற்றி சுவாமி விவேகாநந்தர் எழுதியுள்ளார்.

நமது காலத்திலும் நமது தந்தையர் காலத்திலும் வாழ்ந்த இரண்டு பெரியோர்கள் சுவாமி விவேகாநந்தரும், காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகளும் ஆவர். காஞ்சி காமகோடிபீடச் சங்கராசார்யராகத் திகழ்ந்த சந்திர சேகர இந்திர சரஸ்வதி (1894-1994) அவர்களுக்கு இருந்த நினைவாற்றலை ஒவ்வொரு பக்தரும் தனது அனுபவத்தில் விளக்கியு ள்ளனர். ஒருவரை ஒரு முறை பார்த்துவிட்டால், பேசிவிட்டால் அது 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் மனதில் அப்படியே இருக்கும். ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முறையில் நூற்றுக்கணக்கான முக்கியஸ்தர்களை (வி.ஐ.பி.க்களை)ச் சந்தித்து ஆசிர்வதிக்கும் அவர், யாரோ ஒரு கிராமத்தான் போனாலும் அவன், குலம், கோத்திரம், குடும்பம், ஊர் பற்றி அன்பாக விசாரிப்பார். என்னைப் போன்ற ஏழை, எளியேனைக் கூட எப்போதோ சந்தித்ததை அப்படியே கூறி அன்பாக விசாரிக்கிறாரே என்று எல்லோரும் உருகிப் போவர். இதை ஆங்கிலத்தில் “போட்டோகிராபிக் மெமரி” என்பர்.

viveka  viveka lanka vivekaa maly

விவேகாநந்தா தபால்தலைகள்

சுவாமி விவேகாநந்தர் வாழ்விலும் அவரது நினைவாற்றலை விளக்கும் அரிய சம்பவங்கள் உண்டு. அவர் ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டால், பக்கம் பக்கமாக அப்படியே மனதில் பதிந்துவிடும். அவர் அடிக்கடி நூலகத்துக்குப் போவார். நூலகரிடம் அந்தப் புத்தகம், எங்கே, இந்தப் புத்தகம் எங்கே என்று கேட்டு நச்சரித்து வாங்குவார். ஒரு முறை நூலகருக்குக் கோபமே வந்துவிட்டது. புத்தகத்தைப் பார்க்க மட்டும் வாங்குகிறீர்கள? படிக்க வாங்குகிறீர்களா? என்று கேட்டுவிட்டார். சுவாமி விவேகாநந்தரோ, பொறுமையாக, நான் படித்துவிட்டேனே! எந்தப் பக்கத்தில் என்ன உள்ளது? என்று கேட்டால் நான் சொல்லத் தயார் என்றார். நூலகரும் விடவில்லை. அவரைக் கேள்வி கேட்டுச் சோதித்தார். விவேகாநந்தரின் அபூர்வ நினைவாற்றலக் கண்டு வியந்தார்.

ஜனசங்கக் கட்சியின் (இப்போது பாரதீய ஜனதா என்று பெயர்) தலைவராக இருந்த, காலஞ் சென்ற தீனதயாள் உபாத்யாயாவும் இப்படி நல்ல நினைவாற்றல் உடையவர். பார்லிமெண்டின் இருசபைகளிலும் உள்ள சுமார் 800 உறுப்பினர்களின் பெயர்களும் தோற்றமும் அவருக்கு அத்துபடி. யாரைபார்த்தாலும், இன்முகத்துடன் பெயரைச் சொல்லி மரியாதை செலுத்துவார். இதனால் அரசியல் எதிரிகளுமவரை நண்பர் போல் கருதினர்.

பிரம்மசர்ய விரதம் கடைபிடித்த வேத கால இந்துக்கள், இந்த அபூர்வ விஷயங்களைச் சர்வ சாதாரணமாகச் செய்தனர். உலகில் மிகப்பெரிய அதிசயம் வேதங்களை எழுதாமலேயே, அப்படியே 4000 ஆண்டுகளாக வாய் மொழியாகப் பரப்பி வருவதாகும். இது போன்ற இலக்கிய அதிசயம் உலகில் எங்கும் இல்லை, இனி வரப்போவதுமில்லை. அளவில் மிகப் பெரிய வேதத்தின் ஒரு சாகையை (கிளை) மனப்பாடம் செய்வதோடு அதன் ஆறு அங்கங்களில் ஏதாவது ஒன்றையும், அமர கோஷம் போன்ற நிகண்டுகளையும் அப்படியே ஒப்பிப்பர். இதற்கு குருகுல வாசத்தில் அவர்கள் கடைப் பிடித்த பிரம்மசர்ய விரதமே காரணம்

ஆனால் ஒருவரின் நினைவாற்றலுக்கு வேறு பல காரணிகளும் உண்டு. பயிற்சி மூலம் இதைப் பெறலாம். வெளிநாட்டுக்கார்கள் சங்கீதக் குறிப்புகள் (நொடேஷன்) இல்லாமல் பாட மாட்டார்கள். ஆனால் நம் நாட்டு இசைக் கலைஞர்களோ நூற்றுக் கணக்கான பாடல்களை எழுதி வைக்காமலே ஒவ்வொரு கச்சேரியிலும் பாடுவர்.

காஞ்சி, சிவனந்தவம்

தவ சீலர் காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள்

ஆர்வம் காரணமாகவும் பெறலாம். சிலர் சினிமா வசனங்களையும், நூற்றுக்கணகான பாடல்களையும் நினைவு வைத்திருப்பது ஆர்வம் காரணமாகப் பிறந்த சக்தி. சகுந்தலாதேவி போன்ற இளம் வயது மேதைகளிடமும் இதைக் கண்டோம். வெளிநாடுகளிலும் இப்படி நினைவாற்றல் மேதைகள் நூற்றுக் கணக்கில் உண்டு. அவை அபூர்வமாக நிகழ்பவை. ஆனால் இந்துக்களோ இதை எல்லோரும் பெறும் முறையை உலகிற்குக் கற்பித்தனர்!

பாரதியார் போற்றும் ஒரு மகமதிய ஸாது: கம்பளி ஸ்வாமி!

bharati

தேசீய கவி சுப்ரமண்ய பாரதி

Article No. 2067

Written by S NAGARAJAN

Date : 13 August  2015

Time uploaded in London :–  9-05

By ச.நாகராஜன்

கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்துமுஸ்லீம் ஒற்றுமை

ஸ்வாமி விவேகானந்தர் போற்றிய மகான். இமயமலையின் ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்குப் போக ஒரு இரும்புப் பாலம் கட்டியவர். அதற்கென தான் பிரயாசைப்பட்டுச் சேர்த்த கொஞ்சம் பணத்தையும் செலவழித்தவர். பெயர் – கம்பளி ஸ்வாமி!

இவரைப் பற்றி மஹாகவி பாரதியார் போற்றக் காரணம் இவர் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஒரு ஸாது என்பதால் தான்.

‘ஒரு மகமதிய ஸாது’ என்ற தலைப்பில் மஹாகவியின் கட்டுரை விஜயா இதழில் 1910ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கம்பளி ஸ்வாமியைப் பற்றிய பாதியாரின் வார்த்தைகள் இதோ:-

“கம்பளி ஸ்வாமி என்று இமயமலைப் பக்கங்களில் ஒரு ஸ்வாமி இருப்பதை நம் நேயர்கள் அநேகர் கேட்டிருக்கலாம். அவர் சில காலமாகத் தென் இந்தியாவிற்கு வந்து அநேக இடங்களில் உபன்னியாசம் செய்து கொண்டிருக்கிறார்.

இப்போது பெங்களூரில் உபன்னியாசம் செய்தார்.அதில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டுமென்றும், இருவர்களின் மதமும் ஒன்றையே குறிக்கிறதென்றும், நம் மதக் கொள்கையைச் சரியாக அனுசரிக்க வேண்டுமானால் எல்லோரையும் சகோதரர்களாகக் கொண்டாலொழிய முடியாதென்றும் பேசினார். இவருடைய உபன்னியாசத்தைக் கேழ்க்க அநேக ஹிந்துக்களும் மகமதியர்களும் கணக்கில்லாமல் வந்திருந்தார்கள். இவர் பேசிய ஒவ்வொரு பேச்சும் கேட்பவர்களுக்கு வெகு ஆனந்தத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.”

kabir_stamp

இந்தப் பாராவைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் குடுகொண்ட என்ற இடத்தில் பிறந்த இவர் அமரகோசம்,கீதை ஆகியவற்றை மனப்பாடமாகக் கற்றதையும் கபீர், நானக், கனகா முதலானோரின் கீதங்களைக் கற்றதையும் மஹாகவி குறிப்பிடுகிறார்.

கம்பளி ஒன்றைப் போர்த்திக் கொண்டு மலைச் சிகரங்களில் எல்லாம் சுற்றித் திரிவதால் இவர் பெயர் கம்பளி ஸ்வாமி ஆயிற்று.

இப்படிப்பட்ட மகானை நன்கு விவரித்துப் புகழும் பாரதியார் தன் ஆழ்ந்த கருத்து ஒன்றை இப்படிக் கூறுகிறார்:-

இப்படிப்பட்ட மகான்கள் ஹிந்து முஸ்லீம்களுக்குள் ஐக்கியத்தை உண்டாக்கக் கருதினால் அது அதி சீக்கிரத்தில் நடைபெறும்.”

 

இதற்கான காரணத்தையும் அவரே கூறி விடுகிறார்:;” இந்தியாவில் மதக் கோட்பாடுகளை நன்றாயறிந்த ஸாதுக்கள் வந்து ஒரு சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் அதைத்தான் ஹிந்துக்களும் மகமதியர்களும் அக்கரையோடு கேட்டு அனுசரிக்க எத்தனிப்பார்கள்.”

இப்படிக் கூறிய மஹாகவி தனக்கே உரித்தான நையாண்டி நடையில் இதை விட்டு விட்டு ஆங்கிலேயர்களின் நடவடிக்கையைப் புத்தகத்தில் படித்து விட்டு அதை இங்கு கொண்டு வர நினைக்கும் போலிச் சீர்திருத்தக்காரர்கள் என்ன தான் கூட்டம் கூட்டினாலும் ஒன்றும் நடக்காது என்று தெளிவுபடக் கூறுகிறார்.

தேசம் ஒன்றே சிந்தனையில்

பாரதியாரின் சொல் செயல் சிந்தனை அனைத்தும் தேச விடுதலை தேச ஒற்றுமை தேச முன்னேற்றம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவரது பல கட்டுரைகள் நன்கு விளக்குகின்றன.

அவற்றில் ஒன்று இது! முழுக் கட்டுரையும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

*************