பாரதி போற்றி ஆயிரம் – 4 (Post No.4491)

Date: 14  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-29 am

 

COMPILED BY S NAGARAJAN

 

Post No. 4491

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 4

  பாடல்கள் 19 முதல் 24

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

 

தவமார் புதல்வன்!

சூ. கிரிதரன்

 

 

பாடல் எண்: 19 முதல் 24

1

தமிழ்த்தாய் ஈந்த தவமார் புதல்வன்

அமிழ்தம் நிகர்த்த ‘கவிக்கோ’ பாரதி!

அழியாப் புகழ்கொல் அருட்பெருஞ் செல்வன்

மொழியை விழியாப் பேணிய தலைவன்!

2

நிலையாய் வந்து நிழல்மர மாகி

அலையெனப் பெருக்கிக் கலைபல தந்து

மலையென நின்று புகழ்மணம் வீசி

தலைவன் ஆனான் தன்னிகர் இல்லான்!

3

சாதிகள் வெறிப்பயன் சாய்த்திடப் பாடுவான்

ஆதியும் அந்தமும் அணைந்திடா ஒருவனை

ஓதியே ஒற்றுமை எங்குமே பரவிட

தீதினை வென்றிடக் கவிதையைக் கொண்டவன்;

 

4

சேதமே இல்லா வகையினில் செந்தமிழ்

மாதரின் உரிமையைக் காத்திடப் பாடிய

மூதறி வாளன்; மொழிபுகழ்ச் சீலன்,

கோதிலாக் கவிக்குயில்; குணமலை பாரதி!

 

5

பலமொழி உணர்ந்த பைந்தமிழ்ப் புலவன்;

நலமெலாம் நற்றமிழ் மொழியினைச் சேர்ந்திட

குலவிட எழில்மிகக் கவியினில் வழிகளைப்

பலபல வழியினில் பகர்ந்தவன் பாரதி!

 

6

அடிமைக்குக் கூற்றுவன் அவன்கவி யாகும்;

மிடிமைக்கு மருந்து, மிளிர்ந்திடும் அவன்சொல்;

கொடுமையின் எதிரி; குளிர்புனல்; கவிமணி;

படித்தவர் பாமரர் புகழ்ந்திடும் பாரதி!

 

தமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:

 

சூ.கிரிதரன் : கல்லூரி மாணவர். கட்டுரையாளர். கவியுளம் கொண்டவர். பெயர் பெற்ற டாக்டர் நா.சூரிய நாராயணன் அவர்களின் புதல்வர்.

 

குறிப்பு: இப்போது (2017ஆம் ஆண்டில்) கவிஞர் சூ.கிரிதரன் லண்டனில் வசிக்கிறார்.

 

****

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

 

கம்பன் கவி இன்பம்- கௌஸ்துப மணிமாலை இறுதிக் கட்டுரை (Post No.4487)

Date: 13  DECEMBER 2017

 

Time uploaded in London- 8-14 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4487

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 10; இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ; 21-11-17 – 4418 ; 4-12-17-4457ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

உயர் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிக்க முயன்றாற் போல இராமாயணத்தைப் பருக விழைகிறேன்” – கம்பனின் தன்னடக்கம்!

 

.நாகராஜன்

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:

 

 

வேறு

பாடல் 75

 

மூவரும் மூவரின் முதல்வரு  மிவரான்

தேவரு  மிதனிசை செவிமடுத் திடுவர்;

மேவரு மரசரும் விபுதரும் மேலாம்

பாவரு புலவரும் பருகலும் வியப்போ?

 

குறிப்பு: கம்பன் அடிகளை வேற்றுமையின்றித் தரும் பொழுது அவற்றை “ “ போன்ற இரட்டைத் தலைப் புள்ளி (Quotation Marks) யுள்ளமைத்தும் சிறிது வேறுபாட்டோடு தரும் பொழுது ‘ ‘ போன்ற ஒற்றைத் தலைப்புள்ளியமைத்தும் இங்கு குறியீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

உவமைப் பகுதி

பாடல் 76

ஓசை பெற்றுயர் பாற்கட லுற்றொரு

பூசை முற்றவும் நக்குபு புக்கெனப்

பேசலாய உவமையும் பேரெழில்

மூசத் தந்த கவித்திறம் முன்னுமின்

 

 

பாடல் 77

ஈர நீர்ப்படிந் திந்நிலத் தேசில

கார்க ளென்ன வருங்கரு மேதி யென்

றேரெ டுத்த இசைப்பு னிழைத்தனன்

ஊர டுத்தவோர் காட்சிக் கொருபடம்

 

பாடல் 78

கோல்பி டித்தகு ருடரொ ழுக்குபோல்

வால்பி டித்தொழு குங்கவி மாலையாம்

பால்ப டிந்தவு வமைஇ யற்கைமெய்ந்

நூல்ப டிந்தவ ரல்லர் நுவல்வரோ?

 

பாடல் 79

மீனொ ளித்தவான் முத்தினி டுபந்தர்

தானொ ளித்தெனச் சாற்றுங் கவிநயம்

தேன ளித்தசெ ழுஞ்சொலின் சீரிய

ரான ளித்திட்ட லன்றிமற் றாவதோ?

 

பாடல் 80

அரக்கி வன்குடர்க் கொண்ட வனுமனைக்

குரக்கு வாலிற் குயிற்றிக் குழூசஞ்சிறார்

பறக்க விட்ட கதலியெனப்பயன்

சிறக்கச் சொற்ற திறக்கத் தகுவதோ?

 

பாடல் 81

நிலம கள்முக மென்ன நிறுத்திடா

துலக வூழியு றையுள்வ ரைப்படி

பலக ணித்த வுருவகப் பந்திசெய்

புலவன் புந்தியோ ரந்தம் புணர்வதோ?

 

பாடல் 82

இடைந்து போனவி ளைஞர்தம் சிந்தைபோல்

மடந்தை மார்பின் மருவிள மஞ்ஞையென்

டந்தை யாளன் உரைத்த உவமைநூற்

றுகடைந்து நோக்கினுங் காணக் கிடைப்பதோ?

 

பாடல் 83

விண்ண வர்க்கு முனிசெயும் வேள்வியை

மண்ணைக் காத்துறை மன்னவன் மைந்தருங்

கண்ணைக் காக்குமி மையிற்காத் தாரென

எண்ணிக் கூறிய ஏற்றமுங் காண்பிரால்

 

பாடல் 84

எண்கின் கூட்டம் எறிந்தகி ரிக்குலம்

புண்ணி யம்பொருந் தாதமு யற்சிபோற்

சுண்ண நுண்பொடி யாகித் தொலைத்தெனத்

திண்ண றத்திறன் செப்பங் காண்பிரால்

 

பாடல் 85

திங்க ளைக்கரி தென்னத் திருத்திய

சங்க வெண்சுதை தாங்கிய மாளிகைத்

தங்கு வெண்மை தழைப்புறப் பாற்கடற்

பொங்க லைக்குவெங் காலும் பொருத்தினன்

 

பாடல் 86

இடும்பை யெத்தனை யும்படுத் தெய்தினுங்

குடும்பந் தாங்குங் குடிப்பிறந் தாரினே

துடும்பல் வேலைது ளங்கிய தில்லென

நெடும்பு கழப்பெரி யார்நிலை கூறினன்

 

பாடல் 87

வஞ்சப் பூசையின் வாயின் மறுகுறும்

பஞ்ச ரக்கிளிப் பான்மை கதறலும்

தஞ்ச  மாயதன் சேவற் பிடிபட

அஞ்சு மன்னத் தழுங்கலுந்தந்தனன்

 

பாடல் 88

கருத்த டக்கணக் காரிகை காதலர்

பொருந்த வெண்ணிப் புகுந்தக டைசிநாள்

வருந்து நீர்தசை யால்வரு மானெனப்

பெருந்த டையிற்பே துற்றதும் பேசினன்

 

பாடல் 89

வானும் மண்ணுநீர் வந்தம றுகுறும்

மீனெ னமுகில் மேற்றுவன் மின்னெனக்

கான வேழங்கை விட்டபிடியெனக்

கோனி ழந்தகொ டியைக் குறித்தனன்

 

பாடல் 90

முன்பி ழைக்கவ றுமையில் முற்றினோர்

பொன்பி ழைக்கப் பொதிந்தனர் போலெனா

வெம்பி யந்தியில் வீட்டை தாயினை

அன்பில் வந்தனை யான்கன்று போலெனா

 

பாடல் 91

ஊதை தாக்க ஒசியுங் கொடியெனா

ஊதி மூட்டிடா ஊழியின்  தீயெனா

ஓது மண்டத் துறையமை வாயெனா

ஏதெல்ல் லாம்பரி செண்ணி யடுக்கினன்!

                     கம்ப ராமாயண கௌஸ்துப மணி  மாலை  முற்றும்

***

இத்துடன் நான் படி எடுத்து வைத்துள்ள நூல் முடிவடைகிறது.

  • இதற்கு மேலும் பல பாடல்கள் நூலில் இருந்திருக்கலாம்.
  • மங்கிப் போன நோட்டு. தேதியைப் பார்த்த போது 18-6-1968 என்று இருக்கிறது.பழுப்பேறிய தாள்களை பூதக்கண்ணாடியின் உதவியோடு உற்று நோக்கி மேற்கண்ட பாடல்களைத் தந்துள்ளேன். பிழைகள் இருக்கக் கூடும். இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்த ஏதுவாக இருக்கும்.

***                                                                                    

கம்ப ரஸிகரின் காவிய ரஸனையைப் பற்றி இனியும் கூறத் தேவையில்லை.

கம்பனைக் கரைத்துக் குடித்து முக்கியப் பகுதிகளில் உள்ள உவமைகளில் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஓசை பெற்று உயர் பாற்கடலில் பூனை நக்குவது போல நான் புகுந்துள்ளேன்; இராமாயணத்தைச் சிறிது தந்துள்ளேன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் சிவராஜ பிள்ளை. எப்படிப்பட்ட மகாகவி என்ன ஒரு தன்னடக்கத்துடன் இப்படிக் கூறுகிறான். எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

இதையடுத்துப் பல உவமைகளைக் கூறி வியந்து போகிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

கம்பனைக் கற்க இது போல் ஒரு உத்வேகமூட்டும் நூல் இருந்தால் தானே கம்ப ராமாயணத்தின் அருமை, பெருமைகள் தெரியும்.

கம்பனின் ராமாயணம் ஒரு வாழ் நாள் பாடம்’. அந்தக் காலத்தில் பாடம்கேட்கும் பழக்கம் இருந்தது. இன்று அது மறைந்து விட்டது; பல அறிஞர்களின் துணையுடன், பல நூல்களின் துணையுடன் நாமே கற்க வேண்டியதாகி இருக்கிறது.

கற்கக் கற்க மணற் கேணி ஊற்றுப் போல கருத்துக்களும் இன்பமும் பொங்கி வரும்.

அன்பர்கள் அனைவரும் சிவராஜபிள்ளையைச் சிரமேல் வைத்துப் பாராட்டிக் கம்பனை இன்னும் நன்கு கற்கப் புகலாம்.

***                

                                                                            இதை முடிக்கின்ற போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. இருக்கின்ற ஒரு

பிரதியும் மங்கிப் பயனற்றுப் போய் விடுமோ என்ற பயம் நீங்கி விட்டது.எங்கேனும் இந்த நூலின் பிரதிகள் இருக்கலாம். கம்பன் கழகத்தினரோ, சிவராஜபிள்ளையின் சந்ததியினரோ,கம்ப ரஸிகர்களோ இதை மீண்டும் அச்சிட்டுத் தரலாம் அல்லது டிஜிடலாக் வலையில் உலாவ விடலாம்.

நன்றி, வணக்கம்!

***                                                                                              இந்தக் கட்டுரைத் தொடர் இத்துடன் முற்றும்

 

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 3 (Post No.4486)

Date: 13 DECEMBER 2017

 

Time uploaded in London- 4-56 am

 

Compiled BY S NAGARAJAN

 

Post No. 4486

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 3

  பாடல்கள் 13 முதல் 18

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

 

எண்ணிலா மாட்சியுற்றோன்!

கலைமோகன்

பாடல் எண்: 13 முதல் 15

1

பாரதியின் புகழ் பேச யானோ வல்லேன்

   பார்போற்றப் பாமலர்கள் படைத்தான்; பார்த்தன்

சாரதிபோல் சீரான வழிகள் காட்டிச்

    சார்ந்திடுவீர் சேர்த்திடலா முரிமை யென்றான்!

2

இடியெனக் குரலும் துள்ள

    இரங்குநன் னெஞ்சும் கொண்டு

விடிதலு மென்றோ வெங்கள்

    வளமையு மென்றோ அன்னை

அடிமனத் துயரம் தன்னைத்

    தவிர்த்திடத் தக்கோ ரேநீர்

துடித்தெழத் தயக்கம் கொண்டே

     துஞ்சுதல் அழகோ வென்றான்!

3

சன்மார்க்க நெறியினில் சமரசத் தூதனெனச்

     சமயங்கள் சார்ந்து நின்றோன்

அன்பாகிச் சக்தியாம் அன்னையவள் தாளினை

      அருள்கவென ஆட்சி கொண்டோன்

என்பாகி உடலமே இளைத்துமிடி சூழினும்

    எஃகென உயர்ந்து வென்றோன்

எந்நாளும் சோர்விலா தெழுச்சிமிகு வீரனாய்

     எண்ணிலா மாட்சி யுற்றோன்!

தமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞர் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:

‘கலை மோகன்’: இப்புனைப் பெயர்க்குரியவர் ல.ராமகிருஷ்ணன். சேதுபதி உயர் பள்ளியில் எழுத்தராகப் பணி செய்பவர். கவிதை நயம் கொண்ட பல பாக்கள் புனைந்துள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார்.

 

 

பாடல் எண்: 16 மற்றும் 17

 

பாரதி பிள்ளைத் தமிழ்

மு.சதாசிவம்

1

செங்கீரைப் பருவம்

சுவைபல தருமொழி ஒருமொழி எங்கள் தங்கத் தமிழ்மொழியில்

   கவிபல இசையுடன் உணர்வெனும் பக்தி சேர்ந்தே பலபாடல்

உவகையை “அவனு”ளம் கொளும்வகைப் பாடிப் போந்த திருவடியார்

        உளம்செலும் வழியினில உனதுளம் போக்கி;                   

       கண்ணன்    எனுமிறையை

நவமுறைக் கவிகளில் நயமுறப்பாடும் நல்லோய்! தமிழ்நாட்டின்

  நிறைபுகழ் பரவிட வழிசொலும் எங்கள் பாண்டித் திருமகனே!

புவிமிசைக் கவிகளில் தனியிடம் பெற்றோய்! செங்கோ செங்கீரை!

                   புகழொடு வறுமையின் முழுமையைக் கண்டோய்   

                    செங்கோ செங்கீரை!

2

முத்தப் பருவம்

 

அருள்நனி சுரக்கின்ற அமுதத்தை அறிவினை;          

                அன்பர்தம் நெஞ்சம் வாழும்:

      அமர்க்களம் தன்னிலொரு அருச்சுனன்

           தெளிவுபெற அறைந்திட்ட கீதை வாழ்வை;

பெருமறம், தூங்காமை, கல்விசேர் அரசனாய்ப்

            பேசியே  பெருமை கொண்டு,

         பிறப்பினை அறுக்கின்ற நினைப்பவர்

            உளவாழ்வை, பின்னரும் வேலையாளாய்,

பெருமையுடன் கொண்ட நீ அன்னவன் தன் மூலம்

             பேரறிவு, சீர்,சிறப்பு

         பேசுநற் கீர்த்தியுடன், இளமாண்பு, சிவஞானம்,

               கவியோடு செல்வத்தையும்

அருமையுடன் பெற்றவ! அவைகளையே

         அடியனேன் அடைந்திட முத்த மருளே!

      அழைக்கிறேன் அறிவொளி! திழைக்கின்ற

           தமிழ்க்கவி! அன்புடன் முத்தமருளே!

 

தமிழ்க்குயில் கவிதைத் தொகுப்பு நூலில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:

 

 

மு.சதாசிவம்: ‘வித்துவான்’ பட்டம் பெற்றவர். யாப்பறி புலவர். நல்ல பேச்சாளர். வேம்பத்தூரார் வழி வந்தவர். கேப்ரன் ஹால் பெண்டிர் உயர்-பயிற்சிப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிபவர்.

 

 

பாடல் எண்: 18

எண்ணங் கேள்!

கா.தேவராசக்கனி

 

 

ஊருலகைக் காப்பாற்று முத்தமராங் கள்ளமிலா

ஏருழவர் கைவினைகள் எக்களித்துப் பூரிக்குந்

தோட்டங்கள், புன்செய்கள், தோப்புகள், ஓங்குபனைக்

கூட்டங்கள், வெண்பருத்திக் காடுகள், ஓடைகள்;

செய்யாத கோலத்தார், செங்கரும்புச் சாறனைய

பொய்யாத நெஞ்சத்துப் பூத்தமுகத் தாய்மார்கள்

தம்முழைப்புத் தாங்கித் தமிழ்மணக்கு மண்பிறந்த

செம்மனத்துச் சான்றோனே! செப்பேட்டுச் சாசனமே!

காலத்தின் மூலத்தைக் கானக் கவிகளிலே

சீலத்தால் வைத்தவனே! சீரிடத்தைப் பெற்றவனே!

மூக்குடைந்த மானிடர்க்கு மூத்தநெறி யாத்தவனே!

மாக்கவிஞர் பேரணிக்கு வாய்த்த தளபதியே!

உண்மைக்குப் பாமுழங்கி, உள்ளார்ந்த நேசமுடன்

பெண்மைக்குக் காப்பான பேராண்மை மாமலையே!

பாரதத்தின் பண்பாட்டைப் பைந்தமிழ்த் தேன்குழைத்துக்

காரணைத்த மாமழைபோற் காசினிக்குப் பெய்தவனே!

தேவருக்குத் தேவனெனத் தோன்றுந் தலைமகனே!

பாவலர்க்குப் பாவலனே! பாமணியே! பாரதியே!

உன்னையான் வாழ்த்துவதால் உன்வழியிற் சென்றிடுவேன்:

சின்னஞ் சிறுமதியைச் ‘சீ’யென்பேன்! எண்ணங் கேள்!

மானுடத்தை வாழ்விக்கு மாண்பார்ந்த ஆன்மீகம்,

ஊனுடம்புக் கெட்டா உயர்காதற் றத்துவம்,

பாரத ஒற்றுமை, பாரின் நலவாழ்வு

வேறெதுவும் வேண்டேன் வினை!

 

தமிழ்க் குயில் கவிதைத் தொகுப்பில் கவிஞரைப் பற்றித் தரப்பட்டுள்ள குறிப்பு:

கா.தேவராசக்கனி: தமிழுணர்ச்சி மிகுந்த நல்ல கவிஞர். கவியரங்கேறியவர். ராஜபரமேசுவரி பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்.

 

****                                             தொடரும்

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி  கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 12 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-43 am

 

 

Post No. 4484

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புறச் சூழல் பாதுகாப்பு பற்றி வருணன் வாயிலாகவும் ராமனின் வாய் மொழி மூலமும் கம்பன் சொல்லும் செய்திகள் சிந்திக்க வைப்பவை.

 

யுத்த காண்டத்தில், ‘வருணனை வழிவிட வேண்டிய படல’த்தில், இந்தச் செய்திகள் வருகின்றன.கடலில் திமிங்கிலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றன.இது பற்றிக் கம்பனும் பேசுகிறான்.

பூமிக்கடியிலிருந்து வரக்கூடிட்ய மின்காந்தலைகள் (magnetic waves) அல்லது பல நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வரும் சிக்னல்கள் SONAR SIGNALS (சமிக்ஞை ஒலிகளே) திமிங்கிலங்களை வழிதவறச் செய்வதாகவும் அல்லது அவைகளைக் குழப்புவதாகவும் இந்த திமிங்கிலத் தற்கொலைகளுக்கு (Mass Suicide of Whales) விளக்கம் தரப்படுகிறது. தமிழ் நாட்டின் கடல் ஓரங்களிலும் இது நிகழ்வதுண்டு என்பது அவனது பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

ராமன் விட்ட அம்புகள்,மலை போன்ற உடல் உடைய பெரிய மீன்களைக் கரையில் வந்து விழச் செய்ததாக ஒரு பாடலில் கூறுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவன் கம்ப ராமாயணத்தை இயற்றினான். ஆனால் உவமை கூறும் விஷயங்களும், இது போன்ற நிகழ்வுகளும் உண்மையில் நடந்தால்தான் எழுத முடியும்; அவ்வாறு எழுதுவதை பாமர மக்களும் ரசிக்க முடியும்.

கம்பன் தனது பாடல்களில் ஜேம்ஸ், மேரி என்ற சொற்களைப் பயன்படுத்தமுடியாது நியூயார்க்கில் உள்ள வானளாவிய கட்டிடங்களை உவமை சொல்ல முடியாது. அந்த காலத்தில் உள்ள விஷயங்களைத்தான் சொல்ல முடியும். அவ்வாறே அவன்,சம காலத்திய நிகழ்வுகளையும், உவமைகளையும் நம் முன் வைக்கிறான்.

 

முதலில் கடற்கரையில் திமிங்கிலம் ஒதுங்கிய செய்திகளைக் கண்போம்:

 

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்

ஓரிடத்து உயிர்தரித்து ஒதுங்ககிற்றில

நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்

பாரிடைக் குதித்தன  பதைக்கும் மெய்யன்

 

பொருள்:

பெரிய மலை போலப் பெருத்த மீன்களும், ஓரிடத்தில் உயிரைத் தாங்கி நிற்க முடியாமல் தீயில் வேகும் இந்தக் கடல் நீரைவிட நல்லதாகும் என்று தரையில் குதித்துத் துடிக்கும் உடலை உடையவை ஆகின.

 

இன்னொரு பாடலில் ராமனை சேது எனப்படும் பாலம் கட்டச் சொல்கிறான் வருணன்; கடலைக் குடித்து வற்றச் செய்வது காலம் பிடிக்கக்கூடிய செயல் என்றும் சக்தியை விரயம் செய்யும் செயல் என்றும் சொல்லிவிட்டு  அப்படிக் கடலை வற்றச் செய்தால் எவ்வளவு உயினங்கள் அழிந்து போகும் என்றும் நினைவிவு படுத்துகின்றான். ஆக, கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் உணர்வும்  அக்காலத்தில் இருந்தது.

கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்

ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்

எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிந்தின் எந்தாய்

செல்லுதி சேது ஏன்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய்

 

பொருள்:

 

என் தந்தை போன்றவனே! வற்றாமல் நீர் இறுகிக்   கல்லைப் போல ஆனால் உயிரினங்கள் மாண்டுவிடும் ஆகையால் என் முதுகின் மீது சேது என்னும் அணையைக் கட்டி அதன் மீது செல்வாயாக. இதனால் நீண்ட காலம் நான் நிலைத்து நிற்பேன்.

 

 

இதைவிட ராமன் சொல்லும் காரணம் இன்னும் நன்றாக இருக்கிறது

நன்று இது புரிதும் அன்றே நளிர்கடல் பெருமை நம்மால்

இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம்

குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர் என்று கூறிச்

சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளிச் சென்றான்

–யுத்த காண்டம், கம்பராமாயணம்

பொருள்:

இராமன், ‘வருணன் கூறும் இது நல்லது, இதையே செய்வோம்’ என்றான். மேலும் பெரிய ஆழம் உடைய கடலின் பெருமை என்னால் நீக்கப்பட்டால் மற்ற நான்கு பூதங்களான நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவும் பெருமை நீங்கி எளிமைப் பட்டுவிடும். ஆகையால்  மலைப் பாறைகளை அடுக்கி பாலம் கட்டும் பணியை துவக்குங்கள் என்று சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்றான். இராமனின் அருளுடன் வருணனும் அவனது இருப்பிடத்திற்குச் சென்றான்.

பஞ்ச பூதங்களில் ஒன்றை நான் அவமானப்படுத்தினால், பின்னர் மற்ற நான்கு பூதங்களும் கெட்டுப்போக, பெருமை இழக்க நேரிடும் என்ற இராமனின் வாதம் பொருளுடைத்து; நாள் தோறும்கடலில் சேரும் குப்பைகள், அசுத்தங்கள் பற்றி நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஜிகினா பொட்டு முதலியன கடல் மீன்கள் வயிற்றில் சேர்ந்து அவைகளுக்குச் சொல்லொணாத் துயரம் தரும் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. நமது வீட்டு சாக்கடைகளில் தூக்கிப் போடும் சிறிய பிளாஸ்டிக் பொட்டுகளும் பாட்டரிகளும் கடல் வரை சென்று உலகைப் பாதிக்கின்றன; கடலை விஷமாக்குகின்றன.

 

நானே இன்று கடலை வற்றச் செய்து அவமானப் படுத்தினால், சிறுமைப் படுத்தினால், அது கெட்ட முன்னுதாரணமாகி மற்ற நான்கு பூதங்களையும் பாதிக்கும் எனும் ராமனின் வாதம் கம்பன் கால அறிவியல் கூற்று என்று கண்டு வியப்படைகிறோம்.

 

இதைத் தனித்துப் பார்க்காமல், முந்தைய பாட்டுகளில் கம்பன் சொன்ன கடலில் நடக்கும் சுறாமீன் சண்டைகள் (Shark Fights), திமிங்கிலங்களைத் தின்னும் திமிங்கிலங்கள் (Killer Whales) பற்றிய விஷயங்களையும் இணைத்துப் பார்த்தால் சோழர்கால கடல்  இயல் விஞ்ஞா ம் பற்றி அறிய முடியும்; Killer Whale கில்லர் வேல் என்று அழைக்கப்படும் திமிங்கிலங்கள் மற்ற சிறியவகை திமிங்கிலம், டால்பீன் (Dolphins), சுறாமீன்கள் ஆகியவற்றைக் கொல்லும் காட்சிகளை இன்று நாம் இயற்கை பற்றிய டெலிவிஷன் (T V Documentaries on Nature)  நிகழ்ச்சிகளில் காண முடிகிறது; இதைக் கம்பனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாட்டில் கூறுவதால் கடலோர மக்கள் சொல்லும்  அன்றாடக்கதைகளில் இவை இடம்பெற்றதை நாம் அறிகிறோம்.

இதற்கெல்லாம் கம்பனுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசன் காவியத்திலேயே சான்று இருக்கிறது. அவன் திமிங்கிலங்கள் மூச்சு விடுகையில் தண்ணீர் ஊற்று போல மேலே பீய்ச்சி அடிப்பதையே குறிப்பிட்டுப் பாடுகிறான்.

 

கில்லர் வேல் எனப்படும் திமிங்கிலங்கள் பற்றிய பாடலுடன் கட்டுரையை முடிப்போம்:

 

நிமிர்ந்த செஞ்சரம் நிறத்தொறும்படுதலும் நெய்த்தோர்

உமிழ்ந்து உலந்தன மரங்கள் உலப்பு இல உருவத்

துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன தொடர்ந்து

திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் சிதறி

பொருள்:

செஞ்சரமான அம்புகள் பட்டு சுறாமீன்கள் குருதி கக்கி இறந்தன. இராமன் தொடுத்த அம்புகள் தொடர்ந்து ஊடுருவியதால் திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் பல துண்டுகளாகச் சிதறி விழுந்தன.

TAGS:– திமிங்கிலம், திமிங்கிலங்கள், கடல், புறச்சூழல், கரை ஒதுங்கல், கம்பன் அறிவியல்

 

–சுபம்–

பாரதி போற்றி ஆயிரம் – 2 (Post No.4483)

Date: 12 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-29 am

 

Compiled BY S NAGARAJAN

 

Post No. 4483

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 2

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

பாடல்கள் 7 முதல் 12

 

பார் புகழும் பாரதியே!

இரகுபதி சாமிநாதன்

 

 

பாடல் எண்: 7

பார் புகழும் பாரதியே! பைந்தமிழின் சாரதியே!

ஆர்கடல்சூழ் அவனிக்கே அமரகவி அளித்தவரே!

நேர்மைக்குத் தலைதாழ்த்தி நீதியதன் தாள்பணிந்து

பேர்பெற்ற பெருங்கவியே! பல்லாண்டு பகர்கின்றோம்.

 

கட்டுண்டு கிடந்தவரைக் கண்விழிக்கச் செய்தவரே!

மட்டுண்டு மகிழ்வதற்கே ஒப்பாகும் விடுதலையைத்

தட்டின்றிப் பெறுவதற்குத் தமிழ்க்கவிகள் செய்தவரே!

இட்டமுடன் வாழ்த்துரைகள் இனிதுறவே இயம்புகிறோம்.

 

வெள்ளையுளம் கொண்டவரே! வேற்றவரை யெதிர்த்தவரே!

கள்ளமிலாக் குழந்தைகட்கும் கவியூட்டி உவந்தவரே!

புள்ளினத்தைத் தம்மினமாய்ப் புகன்றீரே! புகழ்ந்தீரே!

கொள்ளையின்பப் பாவருளும் கோமகனே! வாழ்த்துகிறோம்.

 

‘தமிழ்க்குயில்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை இது.

 

 

அதில் வந்துள்ள கவிஞரைப் பற்றிய குறிப்பு:   எம்.ஏ. பட்டம் பெற்றவர். டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிபவர். கலப்பு மணத்தின் மூலம் காதலொருவரைக் கணவராகக் கொண்டவர். நல்ல தமிழில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுபவர்.

 

தமிழ்க் குயில்

இரா. இளங்குமரன்

 

 

பாடல்கள் 8,9,10,11,12

 

பூமணக்கும் சோலையெனப் புனலூற்றின் பெருக்கென்னப் புலவர் பாடும்

தேமணக்கும் தென்றலெனத் திகழ்நிலவின் ஒளியென்ன விளங்கி இன்பப்

பாமணத்தால் நாமணக்கச் செவிமணக்கப் பயின்றவொரு தமிழில் தோய்ந்து

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங் காணோம்,

 

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்றுரைத்த புலமைச் செல்வன்

தூமணியாய் ஓங்குமுயர் மொழித்தொண்டன் துடிதுடிக்கும் உணர்ச்சியாளன்

ஏமமிகு மொழியன்பன் இயற்புலவன் பாரதியே ஐயமின்றே!

 

தண்டமிழே தன்னுடலாய்த் தன்னுணர்வாய்த் தனி நின்றோன்; தகவு மிக்க

தண்டமிழே தனிப்பொருளாய்த் தவப்பேறாய்த் தளிர்ப்பெய்தி நின்றோன்; வாழுந்

தண்டமிழாம் மழைபொழிந்த மாமேகம்; தமிழருந்து வானம் பாடி

தண்டமிழே மூச்சான பாரதியாம் தமிழ்க்குயிலே; கவிதை வேந்தே!

 

ஆங்கிலத்தில் மேம்பட்டோன்; ஆரியத்தின் நிலைகண்டோன்; வனப்பு வெள்ளம்

ஓங்கியஓர் பிரெஞ்சுமொழி தெலுங்குமொழி யோடுமிந்தி யாக இன்ன

பாங்குணர்ந்த மொழிகள்பல பயின்றிருந்தும் பைந்தமிழின் வனப்பில் ஆழ்ந்த

தேங்குமொழிப் பற்றாளன்; தெய்வநிலைக் கவிமன்னன்; தேன்வண் டானோன்

 

சொல்லணியும் பொருளணியும் சுவையில்லாக் கற்பனையும் சொல்லிச் சொல்லி

நல்லபொழு தெல்லாமும் பாழ்செய்து நயத்தக்க பயனொன் றின்றிச்

செல்லுவதாம் வழியதனை ஒழிகென்று செழுந்தமிழி வளர்த்த செம்மல்

சொல்லரிய உணர்வாளன் சோர்வில்லா வினையாளன்; வாழி நன்றே!

*

கவிஞர் இளங்குமரைனைப் பற்றி தமிழ்க்குயில் நூலில் உள்ள குறிப்பு:

இரா.இளங்குமரன்: இத்தமிழ்ப் ‘புலவர்’ திருநகர் மு.மு. உயர்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றுபவர். பெரும் புலவர். ‘குண்டலகேசி’யெனும் பெருங்காப்பிய நூலைச் சிறப்புற எழுதியுள்ளவர். சிறுவர்க்கான நூல்கள் பல எழுதியுள்ளவர்.

                                                  ***                                 தொடரும்

 

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

*****

ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச் சுவை? (Post No.4480)

ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச் சுவை? (Post No.4480)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 11 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-28

 

 

Post No. 4480

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ‘வருணனை வழிவேண்டு படல’த்தில் இரண்டு பாடல்களில் உள்ள நொண்டிச் சாக்குகள் நமக்கு நகைச் சுவையை ஏற்படுத்தும். வருணன் தாமதமாக வந்ததற்குச் சொல்லும் சாக்குகள் இவை. அதுவும் பிரம்மாஸ்திரத்தை ராமன் ஏவப் போகிறான் என்பதை அறிந்த பின்னர் சொன்ன சாக்குகள் இவை. கம்பன் இதை நகைச் சுவையாக சேர்த்தானா அல்லது உண்மைக் கதையாக சேர்த்தானா என்பது விவாதத்திற்குரியது.

 

இலங்கை செல்வதற்கு கடல் வழிவிட வேண்டும் என்று கடற்கரையில் நின்று கொண்டு ராமன் வேண்டுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கடல் தெய்வமான வருணன் வரவில்லை. ராமனுக்கு கோபம் வந்து விடுகிறது. பிரம்மாஸ்திரத்தை ஏவுவதற்கு ராமன் தயாராகிறான். உடனே வருணன் பயந்து கொண்டு ஓடி வந்து அவன் முன் தோன்றுகிறான்.

 

தாமதமாக வந்ததற்கு வருணன் சொல்லும் இரண்டு சாக்குகளும் விநோதமானவையே!

 

நீ எனை நினைந்த தன்மை நெடுங்கடல் முடிவில் நின்றேன்

ஆயினேன் அறிந்திலேன்   என்று அண்ணலுக்கயிர்ப்பு நீங்க

காய் எரிப் படலை சூழ்ந்த கருங்கடல் தரங்கத்தூடே

தீயிடை நடப்பான் போலச் செறிபுனற்கு இறைவன் சென்றான்.

 

பொருள்:

நீ என்னை அழைத்தது எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் கடலின் ஒரு கோடியில் நின்று கொண்டிருந்ததால் அறியவில்லை. இவ்வாறு சொல்லிக்கொண்டு தீ பரவியுள்ள கடலின் அலைகளுக்கு இடையே தீயின் மீது நடப்பவனைப் போல நடந்து வந்தான் வருணன்.

 

இது ஒரு நொண்டிச் சாக்கு ! கடலுக்கே தெய்வமானவன், மிகப் பெரிய கணைகளை ராமன் தொடுத்தபோது கூட அறிய வில்லை என்பது உண்மைச் சாக்காக இருக்க முடியாது. இன்னும் பல பாடல்களுக்குப் பின்னர் அவன் சொல்லும் ஒரு சாக்கைப் பார்த்தால் முதலில் சொன்ன பொய் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விடும்!

 

சுறாமீன் சண்டை!

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு

வார்த்தையின் அறிந்ததல்லால் தேவர்பால் வந்திலேன் நான்

தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரைக் கடலில் மீனின்

போர்த்தொழில் விலக்கப்போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும்

 

பொருள்:-

பூமியைவிடப் பொறுமை மிகுந்த உன் கற்பரசியான சீதைக்கு நேர்ந்துள்ள கஷ்டத்தை நின் சொல்லால் அறிந்தேன் அன்றி, தேவர்கள் மூலம் அறியவில்லை. தூயவனே! நெருங்கிய அலைகளையுடைய ஏழாம் கடலில் சுறாமீன்கள்   சண்டை நடந்து கொண்டிருந்தது. அதை விலக்கிவிடப் போயிருந்தேன். நின் கட்டளையை அறியாதவனாய் இயல்பாகவே இங்கு வந்தேன்!- என்று வருணன் உரைத்தான்.

 

இது கட்டாயம் நொண்டிச் சாக்குதான்.

சுறாமீன் சண்டயை விலக்கி, சமாதானம் செய்யப் போனதாக வருணன் கூறுவது விநோதமானதே.

 

–சுபம்–

 

பாரதி போற்றி ஆயிரம் (Post No.4479)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4479

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 1

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

1

ஏறத்தாழ கடந்த நூறு ஆண்டுகளில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியோர் ஆயிரக்கணக்கானோர். அவனைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் ஒன்று.

எத்தனை கவிதைகள் என்பதை எண்ணிச் சாத்தியமில்லை. ஆனால் அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றிய ஆவலின் விளைவே இந்த முயற்சி.

இதில் பாரதியைப் பற்றிப் பாடியவர்களின் கவிதைகள் தொகுத்து வெளியிடப்படும்.

 

காபிரைட் பிரச்சினை இருப்பின் அதை எழுதியோரோ அல்லது கவிதைகள் அல்லது புத்தகத்தை வெளியிட்டோரோ வேண்டாம் என்று சொன்னாலோ ஆட்சேபணை தெரிவித்தாலோ அது உடனடியாக இந்தத் தொகுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று உறுதி கூறுகிறோம்.

 

பாரதிக்குப் பாமாலை சூடியோர் அனைவரையும் முடிந்த மட்டில் ஒரு இழையில் இணக்க முயலும் முயற்சி இது.

அன்பர்கள் இதை வரவேற்பர் என்றே கருதுகிறோம்.

 

 

2

 

இந்தத் தொகுப்பிற்கென முதல் கவிதையைத் தேர்ந்தெடுத்தப்பதில் எனக்கு எந்த வித சிரமமும் இருக்கவில்லை.

பாரதியை எனக்கு அறிமுகப்படுத்தி, அந்த பக்தியை வளர்த்து அதற்கு உரமும் இட்டவர் பாரதி அன்பர் திரு வி.ஜி. சீனிவாசன் அவர்கள்.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

தீரா பாரதிக் காதலன். பாரதி பற்றி பேசாத நாள் எல்லாம் அவருக்குப் பிறவாத நாளே! நூற்றுக் கணக்கானோருக்கு பாரதி பற்றும் பக்தியும் ஊட்டியவர்.

 

 

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியின் சிலை நிறுவ பாடுபட்டவர். உருவச்சிலை கமிட்டியின் செயலாளர். பல ஊர்களிலும் சென்று பாரதி புகழ் பரப்பியவர்.

நல்ல பேச்சாளர். எழுத்தாளர். மதுரை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். திரு கி.வா.ஜகந்நாதன், தீபம் நா.பார்த்தசாரதி உள்ளிட்ட ஏராளமானோரை நண்பராகக் கொண்டவர்.

 

எனது வீட்டிற்கு அடிக்கடி வருவார். எனது தந்தையாரிடம் பேசிக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி மகிழ்ச்சி அவருக்கு.

எனக்கு ஜர்னலிஸ்ட் என்ற அந்தஸ்தைத் தந்தவரும் அவர் தான்.

எட்வர்ட் ஹாலில் மாணவர்கள் உறுப்பினராக முடியாது. அங்கிருந்த நூலகத்தின் மீதோ எனக்கு அளவற்ற பற்று.

ஒரு நாள் பாரத்தைக் கொடுத்து அதில் ஜர்னலிஸ்ட் என்று போட்டு அவரே என்னைச் சேர்த்து விட்டார்.

சற்று திகைத்த என்னை.”நீ தான் தினமணியில் மதிப்புரைகள் எழுதுகிறாயே” என்றார்.

 

மழலைச் செல்வி, ஜீவகுப்தா, நாகராஜன் என்று பல பெயர்களில் நான் புத்தக மதிப்புரை எழுதினாலும் சரியாக நான் தான் அந்தப் பெயரில் எழுதினேன் என்பதை உடனடியாக ஊகித்து அறிந்து என்னைப் பாராட்டுவார்.

 

ஆக என்னை ஜர்னலிஸ்டாக ஆக்கியவருக்கு, பாரதி பணியில் இந்த நாள் வரை – 57 வருடங்களுக்கும் மேலாக – உத்வேக மூட்டிய ஆசிரியருக்கு இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக சமர்ப்பிப்பதில் பேருவகை அடைகிறேன்.

ஆகவே தான் பாரதியாரைப் போற்றி அவர் எழுதியுள்ள வெண்பாக்களை தொகுப்பின் முதல் போற்றியாக வெளியிட்டு அவரின் நினைவைப் போற்றுகிறேன்.

 

பாடல்கள் 1 முதல் 6

 

பாரதியார் பா

வி.ஜி.சீனிவாசன்

1  

தொன்மொழியாம் தென்மொழியும் தூய வடமொழியும்

தன்மொழியாக் கொண்டு தமிழகத்தை – நன்மையுறச்

செய்தபுகழ் பாரதிசீர் செப்புதற்குத் தானெளிதாய்

எய்திடுமோ என்றனுக்கு மே!

 

2

நாட்டிற்கு இன்பம் நனிவிளையச் செய்வதற்கும்

வாட்டம் ஒழிப்பதற்கும் வாய்ந்தசுகம் – ஈட்டுதற்கும்

சத்தியமும் ஒற்றுமையும் தான்வேண்டும் என்றுரைக்கும்

பத்தியுள பாரதியார் பா!

 

3

 

மன்னுலகோர் என்றும் மனவேறு பாடின்றி

தன்மையுட னேயிருந்தால் தாரணியுள் – இன்பமெலாம்

பொங்குமெனச் சொன்ன புதுயுக சக்தியின்

தங்குரலே பாரதிசொல் தான்!

 

4

 

நாட்டின் விடுதலைக்காய் நம்வீரர் பாரதியின்

பாட்டென்னும் மந்திரத்தைப் பத்தியுடன் – போட்டியிட்டுப்

பாடி அதன்சக்தி பாலிக்கத் தாமகிழ்ந்து

நாடிதனைப் பெற்றார் நயந்து!

5

 

விஞ்ஞான முண்டுநல் வேதாந்த மும்முண்டு

அஞ்ஞானம் போக்கும் அருளுண்டு – மெஞ்ஞான

சீலகுண பாரதியார் செந்தமிழ்ப் பாடலிலே

ஞாலமிது தானுணரும் நன்று!

6

 

பாட்டுத் திறத்தாலே பாரிதனைப் பாலித்திட

நாட்டமுற்ற பாரதிசொல் நம்புபவர் – கேட்டதெலாம்

தந்தருளும் இன்பம் தழைக்க அருள்செய்யும்

சந்ததமும் மக்களுக்குத் தான்!

 

 

Picture posted by Bhaskran Shivaraman

தமிழ்க் குயில் என்ற சிறு வெளியீடு மதுரையில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்டது.

இரகுபதி சாமிநாதன், இரா. இளங்குமரன், கலைமோகன், சூ.கிரிதரன், மு.சதாசிவம், ம.க. சிவசுப்பிரமணியம், வி.ஜி.சீனிவாசன், கா.தேவராசக்கனி, க.பாண்டியன், சு.சா. பாப்பையா (சாலமன் பாப்பையா), நா.பார்த்தசாரதி, நா.சீ.வரதராஜன் ஆகிய 12 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த நூல்.

 

அதில் திரு வி.ஜி.சீனிவாசன் பற்றிய குறிப்பு இது:

வி.ஜி.சீனிவாசன்: பி.ஏ., எல்.டி. இந்தி மொழியில் ‘விசாரத் பட்டம் பெற்றவர். ‘பரிதிமாற் கலைஞரின் பெண்வழிப் பேரர். பன்னூலாசிரியர். மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்.

 

          ****           தொடரும்

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

ஹிந்து பாரதி! (Post No.4478)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-45 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4478

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி இயல்

டிசம்பர் 11 : பாரதி பிறந்த தினம்; அதையொட்டிய சிறப்புக் கட்டுரை

 

ஹிந்து பாரதி!

 

.நாகராஜன்

1

மஹாகவியை கடந்த எண்பது ஆண்டுகளில் ‘எங்களில் ஒருவர்’ ஆக்க பலர் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்; தொடரும் முயற்சிகள் பற்றியும் எல்லோருக்கும் புரியும்.

முதலில் சிலர் பாரதியை ஒதுக்கிப் பார்த்தார்கள். அவனோ விசுவ ரூபம் எடுத்தான்.

பின்னர் சிலர் வெறுத்துப் பார்த்தார்கள். வெறுத்தவர்கள் வெறுக்கப்பட்டதால் மிரண்டு போனார்கள்.

இறுதியாக இருந்த ஒரே வழி புகழ்வது தான்.. அதிலும் அவர் எங்களில் ஒருவர் என்று சொல்லி விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது இல்லையா?

‘ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என்ற வரியைக் கையிலே ஏந்திக் களமிறங்கினர் கம்யூனிஸ்ட் தோழர்கள். மதத்தைப் பற்றியும், சிவன், முருகன், கண்ணன், அம்பிகை உள்ளிட்ட தெய்வங்களை அவன் மனமுருகித் தொழுததற்கு விபரீத வியாக்யானங்களைத் தந்தனர். ஏனென்றால் மதம் என்பது அபின் இல்லையா அவர்களுக்கு! என்றாலும் எடுபடவில்லை!!

திராவிடப் பிசாசுகளுக்கு பாரதி என்றாலே பாகற்காய். கம்பனைப் புகழ்ந்த வம்பன் அல்லவா அவன்! ஆனால் பாரதிக்குக் கிடைத்த பாரதிரும் புகழ் கண்டு பயந்தவர்கள் ‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே’ என்ற வரியைக் கையில் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினர். ஆனால் இவர்களின் இரட்டை வேடத்தைக் காலம் தோலுரித்துக் காட்டியது. கர்த்தரின் ஏஜண்டுகளுடன் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களும், தலையில் முக்காடிட்டு நோன்பில் பங்கு கொள்வதும் ஒரு புறம் அவர்களைப் ‘பக்திப் பரவசத்தில்’ ஏற்ற, இன்னொரு புறமோ ராமனையும், கிருஷ்ணனையும் ஏசி, அம்பாள் எந்தக் காலத்திலடா அருள் பாலித்தாள் என்று வீர வசனம் பேசினர். மக்கள் இந்த ஜகஜாலப் புரட்டைக் காலம் கடந்தேனும் புரிந்து கொண்டனர். ஆக அவர்களும் வலுக்கட்டாயமாக பாரதி விழாக்களிலும் கவியரங்கங்களிலும் பங்கேற்க வேண்டி வந்து விட்டது.

சுயநல மதவாதிகளுக்கோ பாரதி கூறிய ஏசு, அல்லா உதவிக்கு வந்தது.

ஆக, பாரதியை ஒரு குழப்பு குழப்பி விட்டு ஒரு பெரிய உண்மையை எல்லோருமாகச் சேர்ந்து மறைக்க முயன்றார்கள்.

என்ன உண்மை அது?

ஹிந்து பாரதி! பாரதி ஹிந்துவாக வாழ்ந்தான்; ஹிந்துத்வத்திற்கு ஏற்றம் தந்தான். அது வாழ்ந்தால் உலகம் வாழும் என்று நம்பினான். அந்த ஹிந்து பாரதியைத் தங்கள் குப்பைக் கொள்கைகளாலும் வீர தீரப் பேச்சுக்களாலும் மூடி மறைத்தார்கள்!

மலையை, சிறு கை மறைக்க முடியுமா?

ஆதவன் ஒளியை, அறை இருட்டு எதிர் கொள்ளுமா?முடியாது.

ஹிந்துத்துவத்தின் அடிப்படையான அன்பால் (அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்!) அனைவரையும் கட்டுப் படுத்தலாம் என்று பாரதி ஹிந்து சிந்தனையோடு ஏராளம், ஏராளம் எழுதினான்.

ஹிந்து பாரதி பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், அவனது எழுத்தைக் கொண்டே எழுதுவதாக இருந்தால், பல நூறு பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்.

இந்தச் சிறு கட்டுரையில் சில கருத்துக்களைப் பார்க்கலாம்.

ஒரு பானைச் சோற்றில் இவை சில பருக்கைகளே. ஆனால் அனைத்தும் உண்மையில் வெந்த பருக்கைகள்!

சுவையுங்கள். ஹிந்து பாரதியை அனைவருக்கும் சொல்லி ஆனந்தம் அடையுங்கள்.

2

உமையே பாரத தேவி

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!

கமலமெல் லிதழ்களில் களித்திடும் கமலை நீ!

வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவி நீ   – வந்தே மாதரம்!

(பங்கிம் சந்திர சட்டர்ஜியின் கீதத்தில் பாரதி எப்படி மனதைப் பறி கொடுத்தான், வந்தேமாதரம் பற்றி எப்படியெல்லாம் பாடியுள்ளான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை)

 

ஆரிய மென்ற பெரும்பெயர் கொண்ட எம் அன்னை …

பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடு மந்திரமும்,

பாதகர் ஓதினும் மேதகவுற்றிடும் பண்புயர் மந்திரமும்…

மாணுயர் தேவி விரும்பிடும் வந்தேமாதரமே.

 

உபநிடதப் புகழ்

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே

பார்மிசை ஏதொரு நூலிது போலே

 

 

வேத பூமி

நாரத கான நலந்திகழ் நாடு

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே!

 

உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே!

 

நாவில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடையாள்

 

ஹிந்து பாரம்பரியமே தேச பாரம்பரியம்!

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்?

எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில்!

 

இப்படி வேத பாரதியின் வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையெல்லாம் படித்தும் கூட ஹிந்து பாரதியைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன!

ஹிந்துப் பண்பாட்டை, ஹிந்து அடித்தளத்தை வைத்தே சுதந்திரத்தை அடைய எழுச்சியை ஊட்டியவன் ஹிந்து பாரதி!

3

தாய் பிறன் கைப்படச் சகிப்பவன் நாயே!

இனி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜியின் வாய்ச் சொற்களாக கம்பீரமான வார்த்தைகளில்  அவன் தரும் சில கருத்துக்கள்:

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

தாய்த்திரு நாட்டைத்  தறுகண் மிலேச்சர்

பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வண்மையும்

ஞானமும் அறியா நவைபடு துருக்கர்

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாட் படைகொணர்ந் தின்னல்செய் கின்றார்

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்

பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்

கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்.

தாய் பிறன் கைப்படச் சகிப்பவ னாகி

நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?!

காளியும் கனக நல்நாட்டு தேவியும் ஒன்றே!

அடுத்து குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.

வ.வே.சு. ஐயர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு  எழுந்தது இந்தக் கவிதை.

காளியும் நமது கனக நன்னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!

 

நீர் அனைவரும் தரும, கடவுள், சத்தியம், சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதி ஒன்றனையே சார்ந்தோர் ஆவீ ர்.

 

 

ஹிந்து பாரதியின் மனம் இன்னுமா புரியவில்லை?

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் அறிந்திலார் என்று பாரதி கேலி செய்வானே, அந்தக் கூட்டத்தில் நாமும் சேர்ந்து விடக் கூடாது.

செகுலரிஸ்டுகளும்  கம்யூனிஸ்டுகளும் போலி மதவாதிகளும் மேலே கூறியது போன்ற பாரதியின் நூற்றுக் கணக்கான வரிகளை எங்குமே மறந்தும் கூடச் சொல்ல மாட்டார்கள்.

ஆகவே பாரதியை நாமே தான், நேரடியாகக் கற்க வேண்டும்.

4

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். முடிவே இருக்காது.

இறுதியாக ஒரு கட்டுரைப் பகுதியை மட்டும் இங்கு பார்ப்போம்:

“ஆதி முதல் அந்தம் வரையில் இந்தியா மேல் படையெடுத்து வந்த ஒவ்வொரு மிலேச்ச ஜாதியும் இந்தியர்களில் வேற்றுமைகளுண்டு பண்ணி அவர்களில் தேசத் துரோகிகளாயும், ஸகோதரத் துரோகிகளாயுமிருந்த சிலரைத் தம் வசம் சேர்த்துக் கொண்டு வஞ்சனையாலும் பலவித மோசங்களாலும் இராஜ்யங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்களேயொழிய  வீரத் தன்மையோடும் தரும வழியிலும் ஒருவராவது ஒரு அடி பூமி கூட ஸம்பாதிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் சென்னை இராஜதானியிலும் மற்றுமுள்ள இந்தியாவின் பிராந்தியங்களிலும் என்னென்ன மோசங்களும் மித்திர துரோஹங்களும் செய்து இராஜ்யம் ஸம்பாதித்தார்களென்பது சரித்திரங்களை வாசிக்கத் தெரியும். பூர்வீக பிரதேச மஹம்மதீய எதிரிகளும் இவ்வாறே தான் ஸம்பாதித்தார்கள். இன்றைக்கும் நாளைக்கும் இது தான் ஆங்கிலேயரின் இராஜதந்திரம்.”

 

“ஆகாயத்தினின்று விழும் எல்லா ஜலங்களும் எப்படிக் கடலையே போய்ச் சேருமோ அவ்வண்ணம் எல்லா மதஸ்தர்கள் செய்யும் ஆராதனைகளும் ஒரே ப்ரஹ்மத்தைத் தான் சேரும் என்னும் வேதாந்த சமரஸ புத்தியை அடைந்து இனியாகிலும் ஒத்து வாழ வேண்டும்.”

 

மேற்கண்ட கட்டுரைப் பகுதிகள், “ இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?” என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.

இந்தக் கட்டுரை புதுவை சூரியோதயம் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரை.

இந்தக் கட்டுரை பாரதியின் கட்டுரை அல்ல என்று அபிப்ராயப்படுகிறார் சீனி.விசுவநாதன். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டு. 1) நூலில் எங்கும் பாரதியின் பெயர் இல்லை. 2) நூலின் நடையும் பாரதியினுடையதாகத் தோன்றவில்லை.

 

அதாவது இந்தக் கட்டுரை ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது. அது பிரிட்டிஷ் நூலகத்தில் மட்டும் தான் இருக்கிறது. இந்தியாவில் இல்லை.

ஆனால் ‘பாரதிக்குத் தடை’ என்ற நூலை எழுதியுள்ள வி.வெங்கட் ராமன் தனது நூலில் இது பாரதி எழுதியது தான் என்று ஆய்ந்து நிறுவியிருக்கிறார்.

சூரியோதயத்தில் பாரதியின் பணி குறிப்பிடத்தகுந்தது. ஆகவே இந்தக் கட்டுரையின் கருத்துகள் அவர் எழுதினாரோ இல்லையோ அவரது குழுவினரின் ஏகோபித்த கருத்து என்பதில் ஐயமில்லை.

“பிற தேச எதிரிகளுடைய வஞ்சக வேலையென்று முன்னமே தெரிவித்திருக்கிறோம்” என்ற கட்டுரை வரியை வைத்து இதர பாரதியின், “முன்னமே தெரிவித்திருக்கிற” பெயரிடப்பட்ட கட்டுரைகளை ஒப்பிட்டால் இது அவர் எழுதியதே என்ற முடிவுக்கு வர முடியும்.

5

 

பாரதிக்குச் சங்கடங்கள் ஏராளம். வெள்ளையரால் மட்டுமல்ல; நம்மவராலும் கூடத் தான். அவரைத் தன் மனதிற்கு ஏற்றபடி எல்லாம் ஒவ்வொருவரும் டிசைன் செய்யப் பார்ப்பதால் அவர் படும் அல்லல் ஏராளம்.

அவர் வாயில், தனக்குக் கெட்டது என்று தோன்றும் “கெட்ட வார்த்தைகள்” (செகுலர் அல்லாத என்று கொள்க) எதையும்  வந்து விட்டதாகச் சொல்லி விடக் கூடாது என்ற “பாரதியின் மீது கொண்ட கருணையால்” அந்த வார்த்தைகளை சென்ஸார் செய்த அறிஞர்களும் உண்டு.

சின்னச் சின்ன மாற்றங்களை – வார்த்தைகளை மாற்றி – சில்மிஷம் செய்த அறிஞர்களும் உண்டு.

ஆய்வுப் பதிப்புகள் என்று எடுத்துக் கொண்டாலோ, அவர்கள் அரசுக்குப் பயந்து இப்படியும் இருக்கலாம்; அப்படியும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம் என்ற பாணியில் பதிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆக மஹாகவிக்கு வாழ்ந்த நாளிலும் சங்கடம்; மறைந்த பிறகும் சங்கடம்.

இந்த சுயநலமிகளின் பதிப்புப் பணியில் ஹிந்து பாரதி மறைந்து விட்டார்.

நண்பர்களே, தேடிக் கண்டு பிடியுங்கள். உண்மை பாரதி தோன்றுவார்.

அப்படித் தோன்றும் பாரதி, ‘ஹிந்து பாரதி’ என்பதை அறிந்து மகிழலாம்.

***

சிவனா, விஷ்ணுவா யார் பெரியவன்? கம்பன் பதில் (Post No.4476)

WRITTEN by London Swaminathan 

 

Date: 10 DECEMBER 2017 

 

Time uploaded in London-  10–31 am

 

 

Post No. 4476

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பன் வாழ்ந்த காலம் பற்றி பல வேறு கருத்துக்கள் உண்டு. சிலர் 9-ஆம் நூற்றாண்டு என்றும் இன்னும் சிலர் 10ஆம் நூற்றாண்டு என்றும், மற்றும் சிலர் 12ஆம் நூற்றாண்டு என்றும் பகர்வர். எது எப்படியாகிலும் அவருக்கு முந்தைய காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே சண்டை இருந்தது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களில் இருந்து தெரிகிறது. கம்பன் இவர்களுக்குப் பின்னால் வாழ்ந்தவன் என்பது அவரது சமரசப் போக்கில் இருந்து அறியப்படுகிறது.

Siva and Vishnu in one form in SANKARANARAYANA idol.

சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்ற கேள்விக்கு, கிட்கிந்தா காண்டத்தில் போகிறபோக்கில் பதில் சொல்லுகிறான். அவன் பாடும் இடமோ சீதையைத் தேட,  வழி சொல்லும் கட்டம் ஆகும்; முழுக்க, முழுக்க பூகோள வருணனை. அதற்கிடையில் சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்ற கேள்விக்குப் பதில் தருகிறான். இப்படி வாதாடுபவர் எல்லோரும் ‘முட்டாள்கள்’ என்று முதல் வரியிலேயே ஒரு ஒரு போடு போடுகிறான்.

 

 

இதோ பாடலைப் பாருங்கள்:-

 

அரன் அதிகம் உலகு அளந்த அரி அதிகன்

என்றுரைக்கும் அறிவிலோர்க்குப்

பரகதி சென்று அடைவரிய பரிசேபோல்

புகல் அரிய பண்பிற்றாமால்

கரநதியின் அயலது வான்தோய் குடுமிச்

சுடர்த் தொகைய தொழுவோர்க்கு எல்லாம்

வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி யாம்

நெடுமலையை வணங்கி அப்பால்

நாடவிட்ட படலம்

பொருள்:-

சிவனே உயர்ந்தவன், உலகை அளந்த திருமாலே உயர்ந்தவன் என்று

சொல்லும் அறிவில்லாதவர்கள், நல்ல கதியை அடைதல் அருமையானது போல, புகுவதற்கு அரிய தன்மையுடைய வானத்திலுள்ள சுரநதியின் அருகில் உள்ளதும், வானளாவிய சிகரங்களில் சூரிய, சந்திரர்களின் சேர்க்கை உடையதும், வணங்கியவர்க்கு வேண்டிய வரங்களைத் தருவதுமான அருந்ததி என்னும் மலையைத் தொழுத பின்னர் அப்பால் செல்லுங்கள்.

 

அதாவது மூடர்கள் எப்படி மோட்சத்தை அடைவது கடினமோ, அவ்வளவு கடினமானது அருந்ததி மலையை அடைவது! அவ்வளவு வானளாவிய சிகரங்கள் உடைய மலை!

 

கம்பன் சொல்ல வந்தது– அருந்ததி மலையை அடைவது கடினம்; அங்கும் சென்று சீதையைத் தேடிவிட்டு அப்பால் செல்லுங்கள்.

 

இந்த வழிகாட்டும் படலத்தில் இடையே சிவன் பெரியவனா, விஷ்ணு பெரியவனா என்ற வாதத்தை நுழைத்து அப்படி வாதிடுவோர் மூடர்கள் என்கிறார்.

 

இதற்கு முன்னர் கம்பன் சொன்ன வேறு ஒரு கருத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தக் கடவுள் விஷயத்தில், கம்பன் என்ன கருத்து உடையவன் என்பது புலப்படும்.

கம்பன் கூறுகிறான்,

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்:
பல என்று உரைக்கின் பலவே ஆம்:
அன்றே என்னின் அன்றே அம்:
ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்:
இன்றே என்னின் இன்றே ஆம்
உளது என்று உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

(கடவுள் வாழ்த்து, யுத்தகாண்டம்)
பொருள்:–கடவுளை உண்டு என்பவனுக்கு அவன் உண்டு. இல்லை என்பவனுக்கு அவன் இல்லை. ஒரு கடவுள்தானென்றால் ஒரே கடவுளாகவே காட்சி தருவான். பல கடவுள் என்றால் பல கடவுளராக காட்சி தருவான். இன்றே காட்சி தருவன் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அவன் வருவான்.

ஆக, மேம்போக்கான காரணங்களை வைத்து, தோற்றங்களைக் கொண்டு அதுதான் உண்மை என்று வாதம் செய்யாதே. முழு உண்மையையும் உணர். அல்லது அப்படி உணர்ந்த பெரியோர்கள் கூறுவதையாவது நம்பு!

 

இவ்வளவு கஷ்டப்பட்டு கம்பன் போன்றோர் பாடிய கருத்தை நம் கிராமத்து  பாட்டிமார்களும் தாத்தாமர்களும் ஒரே வரியில் சொல்லி விடுகின்றனர்:-

அரியும் சிவனும் ஒன்னு; அரியாதவன் வாயில மண்ணு-– என்று.

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்கள் அவர்கள்!

 

சுபம் –

கம்பன் கவி மந்திரம் (Post No.4457)

Date: 4 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-51 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4457

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 9)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ; 21-11-17 – 4418 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

மழைத்தாரை போலப் பொழியும் காவிய அமுதால் கம்பன் கவி மந்திரம் அமைத்தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

 

பாடல் 58

வில்லெடுக்கும் மீளிகை விரல்தெரிந்த வாளி போற்

சொல்லெடுக்கும் வன்மையி லவைதொடுக்குஞ் சூழ்ச்சியில்

எல்லெடுக்கும் கம்பன்முன் னெதிரடுத்த பாவலர்

புல்லெடுக்கும் போர்மறவர் போலொதுங்கிப் போவரே

 

பாடல் 59

சொல்லினுட் டுவன்றலாம் பொருட்டொரும் தெருட்டலோ

கல்லினுட் டுறுமணுக் கலைத்தெடுத்த லாகுமோ

புல்லுட னுயிர்த்திறன் பொறித்திறன் புலத்திறன்

எல்லைமாய வொன்றினொன் றெழுந்தவா றெழுதவால்

 

பாடல் 60

கடல்மடைதி றந்தகாட்சித் தாயினுங்கம் பன்கவி

அடலடைந்தொ ளிர்சொல்வ னத்துமட்டி னன்றுகாண்

உடலடைந்தி யக்குயிர்போ லொண்பொருளூ டோடியாற்

றிடையடைந்தொ ழுக்குபோலி சையுமுன் னிழுக்குமால்

 

பாடல் 61

நாடிநாடிப் பாவல்லோர் நயந்தசெஞ்சொல் மாமணி

மூடிமூடி வைத்தசெப்பும் முற்றுமுட்டல் செய்வதோ?

தேடித்தேடிச் சென்றுமன்னார் சேர்கிலா மணித்திரள்

கோடிகோடி யாக்குவிக்கும் கம்பனாழி கூலமே

 

பாடல் 62

ஐயின் வாரிக்கொண்டவா ரமுதளாவு சீர்பதம்

கையின் வாரித் தூவினர்மற் றைக்கவிஞர்; கம்பனோ

மெய்யின் வாரிக் கொண்டசொல் விரைமுகந்து போகமே

வையமாரு மாறுவட்டி வட்டியாகக் கொட்டினான்

 

வேறு

பாடல் 63

பொருள்தேடிடப் புகுவார்மிடிப் புரையாடிடல் முறையோ

தெருளாய்ந்துறத் திரிவார்செறி மருள்மாய்ந்திடல் திறனோ

அருனாடிய உளத்தார்கவி யருட்பாவினை மிகத்தாம்

சுருள்குடுசூத் திரமாமெனத் தொகுத்தாரிருள் மிகுத்தார்

 

பாடல் 64

முன்னார்வினை விளைவோகலை முடிப்பார்தவ முடிவோ

மின்னார்தமிழ் மிளிர்மேனியின் மெலிவோ பிணிநலிவோ

பின்னாளுறை வார்கொண்டதோர் பித்தோ கவிமுத்தேன்

சின்னாபின மாக்கிட்டுருச் சிதைத்தார்திருப் புதைத்தார்

 

பாடல் 65

அறியார்செயுந் தீங்கோசிறி தறிந்துமறி யாராய்

வெறியார்புரி வினைமுன்னரே வெளிறாமெனல் மெய்யே

குறியாதுமுன் னார்பாட்டுறை குறைப்பெய்தனர் பின்னார்

செறியாதன செருகாங்கவி யுளவோவுளச் செருக்கால்

 

பாடல் 66

குருடனெறி காட்டக்குறி யிடங்கூடிடல் செலுமோ?

புருடன்வெலாப் போரையொரு  பூவைவெலப் புகுமோ?
அருடன்வரத் தாலாங்கவி யறிவானரு ளிலையேல்

மருடன்வயத் தாராய்தொடர் வழிவிட்டுழல் வாரே

 

பாடல் 67

எல்லார்விரி வெயிலைச்சில ரிருளோவென மருளாப்

புல்லார்சிறு விளக்காலொளி புகட்டப்புகுந் தனரே

முல்லைமுருக்கவிழ்மாமணம் முடையென்றிவ ரடையாம்

வில்லைவெறி யளவாவெறி யளவாமிகுத் துரைத்தார்

 

பாடல் 68

அழகுக்கழ கணிதலருஞ் செயல்யாவினு மரிய

பழுதும்பழக் கனிவைப்படுங் கனியாக்கலும் பழுதே;

மழைத்தாரைபோற் கம்பன்பொழி வான்காவிய வமுதைக்

குழைத்தாரென லன்றிச்சுவை குவித்தாரென லாமோ?

 

பாடல் 69

தெய்வமணம் நாறியுயிர் திளைக்குங்கவித் தெறியற்

செய்வான்வரு மலரோசிறு தரைசிந்தின வலவே;

மெய்வானுறைதரு நின்றவன் மிளிர்மாலர் பொறுக்கிப்

பெய்வாந்தனிப் பிணையலிதைப் பிறிதார்கமழ் பிணிப்பார்

 

பாடல் 70

மின்னற்பிழம் பாலுமெரி வெயிலோன்கதி ராலும்

பொன்னினொளி யாலுஞ்சுவர் போக்கிமணிக் குவைக்காழ்

தன்னிற்புரை தபுத்தேசவி தனதந்துயர் கம்பன்

கன்னிக்கூர் காலம்பொலி கவிமந்திர மமைத்தான்

 

பாடல் 71

கவிமாளிகை புனைவாரிவண் கடந்தேகவின் கிடந்த

சவியோவியச் சமைப்பால்விழி யிமைப்பற்றுயிர்ப் பெடுப்பர்

புவியுள்ளுற யொருவனிதிற் புரைகாணிய விரைவான்

அவிகொள்வன வமுதிற்சுவை யறுபாகமாய் வானே

 

வேறு

பாடல் 72

சொல்கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல்கண்டார் எல்லே கண்டார்; இனிமை யோடிகலுஞ் சந்த

மல்கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய

வல்கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?

 

பாடல் 73

மொழிவளம் மொழிகு வேனோ? மொழிகதைத் தருண முன்னிப்

பொழிவளம் புகலு கேனோ? பொருள்வளம் புடைத்து விம்மிக்

கழிவளங் கழறு கேனோ? காவியக் கழனி யோங்கிச்

செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவில்

 

வேறு

பாடல் 74

பொன்கொண் டிழைத்தமணி யைக்கொடு பொதிந்த

மின்கொண் டமைத்தவெயி லைக்கொடு சமைத்த

என்கொண் டியற்றியவெ னத்தெரிகி லாத

மன்கொண் டமாமதிம ருட்கேவி மாடம்

***

கம்பனின் சொற்களாலேயே கம்பனைப் புகழும் வித்தையைக் கொண்டவர் கவிஞர் சிவராஜ பிள்ளை. கம்பன் கையாண்ட அதே சந்தத்தை அவர் கையாளும் போது சுவை இன்னும் கூடுகிறது.

கம்பன் முன் மற்ற கவிஞர்கள் போர்க்களத்தில் புல் எடுக்கும் மறவர் போல ஒதுங்கி ஒடுங்கி ஓடி விடுவர்.

முன்னவர் செய்த வினையின் விளைவோ என்னவோ! கவிதையின் உரு சின்னாபின்னமாகப் போகும் நிலை! குருடன் வழி காட்டப் போகுமிடம் செல்ல முடியுமா? பெரிய போர் வீரனான புருஷன் வெல்ல முடியாத போரை அவனது மனைவி வெல்ல முடியுமா? கவிஞனின் உளத்தை அறிந்தோரின் அருள் பெறாவிட்டால் அவன் கவிதையின் பொருளை உணர முடியாது.

கம்பனது பாடல்களை ரஸிக்கப் போனவர்கள் சொல் இன்பப் பிரியர்களாக இருப்பின் சொல் இன்பத்திலேயே திளைத்து நிற்பார்கள். அதில் விளங்கும் பொருளின் ஒளி கண்டவர்கள் அதிலேயே லயித்திருப்பர். இப்படிப்பட்ட அபூர்வ கவிஞரின் மொத்த நூலை யார் தான் முடியக் கண்டார்? ஒருவரும் இல்லை!

காலம் வென்ற ஒரு கவி மந்திரம் அல்லவா கம்பன் அமைத்து விட்டான்!

 

மொழிவளத்தைப் புகழ்வதா! கதைத் தருணம் நினைத்துப் பொழிகின்ற தன்மையைப் புகழ்வதா? பொருள் வளத்தைப் புகழ்வதா?

 

என்று இப்படி உளத்திலிருந்து எழும் சொற்களால் கம்பனின் அருமையை விதந்து கூறுகிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

இதுவரை 90 பாடல்களில் 74 பாடல்களைப் பார்த்து விட்டோம். அடுத்த கட்டுரையில் எஞ்சியுள்ள பாடல்களைப் பார்ப்போம்.                                                                                        அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.

 

*********** SUBHAM ******************