கம்பன் கவி இன்பம்- கௌஸ்துப மணிமாலை இறுதிக் கட்டுரை (Post No.4487)

Date: 13  DECEMBER 2017

 

Time uploaded in London- 8-14 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4487

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 10; இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ; 21-11-17 – 4418 ; 4-12-17-4457ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

உயர் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிக்க முயன்றாற் போல இராமாயணத்தைப் பருக விழைகிறேன்” – கம்பனின் தன்னடக்கம்!

 

.நாகராஜன்

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:

 

 

வேறு

பாடல் 75

 

மூவரும் மூவரின் முதல்வரு  மிவரான்

தேவரு  மிதனிசை செவிமடுத் திடுவர்;

மேவரு மரசரும் விபுதரும் மேலாம்

பாவரு புலவரும் பருகலும் வியப்போ?

 

குறிப்பு: கம்பன் அடிகளை வேற்றுமையின்றித் தரும் பொழுது அவற்றை “ “ போன்ற இரட்டைத் தலைப் புள்ளி (Quotation Marks) யுள்ளமைத்தும் சிறிது வேறுபாட்டோடு தரும் பொழுது ‘ ‘ போன்ற ஒற்றைத் தலைப்புள்ளியமைத்தும் இங்கு குறியீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

உவமைப் பகுதி

பாடல் 76

ஓசை பெற்றுயர் பாற்கட லுற்றொரு

பூசை முற்றவும் நக்குபு புக்கெனப்

பேசலாய உவமையும் பேரெழில்

மூசத் தந்த கவித்திறம் முன்னுமின்

 

 

பாடல் 77

ஈர நீர்ப்படிந் திந்நிலத் தேசில

கார்க ளென்ன வருங்கரு மேதி யென்

றேரெ டுத்த இசைப்பு னிழைத்தனன்

ஊர டுத்தவோர் காட்சிக் கொருபடம்

 

பாடல் 78

கோல்பி டித்தகு ருடரொ ழுக்குபோல்

வால்பி டித்தொழு குங்கவி மாலையாம்

பால்ப டிந்தவு வமைஇ யற்கைமெய்ந்

நூல்ப டிந்தவ ரல்லர் நுவல்வரோ?

 

பாடல் 79

மீனொ ளித்தவான் முத்தினி டுபந்தர்

தானொ ளித்தெனச் சாற்றுங் கவிநயம்

தேன ளித்தசெ ழுஞ்சொலின் சீரிய

ரான ளித்திட்ட லன்றிமற் றாவதோ?

 

பாடல் 80

அரக்கி வன்குடர்க் கொண்ட வனுமனைக்

குரக்கு வாலிற் குயிற்றிக் குழூசஞ்சிறார்

பறக்க விட்ட கதலியெனப்பயன்

சிறக்கச் சொற்ற திறக்கத் தகுவதோ?

 

பாடல் 81

நிலம கள்முக மென்ன நிறுத்திடா

துலக வூழியு றையுள்வ ரைப்படி

பலக ணித்த வுருவகப் பந்திசெய்

புலவன் புந்தியோ ரந்தம் புணர்வதோ?

 

பாடல் 82

இடைந்து போனவி ளைஞர்தம் சிந்தைபோல்

மடந்தை மார்பின் மருவிள மஞ்ஞையென்

டந்தை யாளன் உரைத்த உவமைநூற்

றுகடைந்து நோக்கினுங் காணக் கிடைப்பதோ?

 

பாடல் 83

விண்ண வர்க்கு முனிசெயும் வேள்வியை

மண்ணைக் காத்துறை மன்னவன் மைந்தருங்

கண்ணைக் காக்குமி மையிற்காத் தாரென

எண்ணிக் கூறிய ஏற்றமுங் காண்பிரால்

 

பாடல் 84

எண்கின் கூட்டம் எறிந்தகி ரிக்குலம்

புண்ணி யம்பொருந் தாதமு யற்சிபோற்

சுண்ண நுண்பொடி யாகித் தொலைத்தெனத்

திண்ண றத்திறன் செப்பங் காண்பிரால்

 

பாடல் 85

திங்க ளைக்கரி தென்னத் திருத்திய

சங்க வெண்சுதை தாங்கிய மாளிகைத்

தங்கு வெண்மை தழைப்புறப் பாற்கடற்

பொங்க லைக்குவெங் காலும் பொருத்தினன்

 

பாடல் 86

இடும்பை யெத்தனை யும்படுத் தெய்தினுங்

குடும்பந் தாங்குங் குடிப்பிறந் தாரினே

துடும்பல் வேலைது ளங்கிய தில்லென

நெடும்பு கழப்பெரி யார்நிலை கூறினன்

 

பாடல் 87

வஞ்சப் பூசையின் வாயின் மறுகுறும்

பஞ்ச ரக்கிளிப் பான்மை கதறலும்

தஞ்ச  மாயதன் சேவற் பிடிபட

அஞ்சு மன்னத் தழுங்கலுந்தந்தனன்

 

பாடல் 88

கருத்த டக்கணக் காரிகை காதலர்

பொருந்த வெண்ணிப் புகுந்தக டைசிநாள்

வருந்து நீர்தசை யால்வரு மானெனப்

பெருந்த டையிற்பே துற்றதும் பேசினன்

 

பாடல் 89

வானும் மண்ணுநீர் வந்தம றுகுறும்

மீனெ னமுகில் மேற்றுவன் மின்னெனக்

கான வேழங்கை விட்டபிடியெனக்

கோனி ழந்தகொ டியைக் குறித்தனன்

 

பாடல் 90

முன்பி ழைக்கவ றுமையில் முற்றினோர்

பொன்பி ழைக்கப் பொதிந்தனர் போலெனா

வெம்பி யந்தியில் வீட்டை தாயினை

அன்பில் வந்தனை யான்கன்று போலெனா

 

பாடல் 91

ஊதை தாக்க ஒசியுங் கொடியெனா

ஊதி மூட்டிடா ஊழியின்  தீயெனா

ஓது மண்டத் துறையமை வாயெனா

ஏதெல்ல் லாம்பரி செண்ணி யடுக்கினன்!

                     கம்ப ராமாயண கௌஸ்துப மணி  மாலை  முற்றும்

***

இத்துடன் நான் படி எடுத்து வைத்துள்ள நூல் முடிவடைகிறது.

  • இதற்கு மேலும் பல பாடல்கள் நூலில் இருந்திருக்கலாம்.
  • மங்கிப் போன நோட்டு. தேதியைப் பார்த்த போது 18-6-1968 என்று இருக்கிறது.பழுப்பேறிய தாள்களை பூதக்கண்ணாடியின் உதவியோடு உற்று நோக்கி மேற்கண்ட பாடல்களைத் தந்துள்ளேன். பிழைகள் இருக்கக் கூடும். இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்த ஏதுவாக இருக்கும்.

***                                                                                    

கம்ப ரஸிகரின் காவிய ரஸனையைப் பற்றி இனியும் கூறத் தேவையில்லை.

கம்பனைக் கரைத்துக் குடித்து முக்கியப் பகுதிகளில் உள்ள உவமைகளில் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஓசை பெற்று உயர் பாற்கடலில் பூனை நக்குவது போல நான் புகுந்துள்ளேன்; இராமாயணத்தைச் சிறிது தந்துள்ளேன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் சிவராஜ பிள்ளை. எப்படிப்பட்ட மகாகவி என்ன ஒரு தன்னடக்கத்துடன் இப்படிக் கூறுகிறான். எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

இதையடுத்துப் பல உவமைகளைக் கூறி வியந்து போகிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

கம்பனைக் கற்க இது போல் ஒரு உத்வேகமூட்டும் நூல் இருந்தால் தானே கம்ப ராமாயணத்தின் அருமை, பெருமைகள் தெரியும்.

கம்பனின் ராமாயணம் ஒரு வாழ் நாள் பாடம்’. அந்தக் காலத்தில் பாடம்கேட்கும் பழக்கம் இருந்தது. இன்று அது மறைந்து விட்டது; பல அறிஞர்களின் துணையுடன், பல நூல்களின் துணையுடன் நாமே கற்க வேண்டியதாகி இருக்கிறது.

கற்கக் கற்க மணற் கேணி ஊற்றுப் போல கருத்துக்களும் இன்பமும் பொங்கி வரும்.

அன்பர்கள் அனைவரும் சிவராஜபிள்ளையைச் சிரமேல் வைத்துப் பாராட்டிக் கம்பனை இன்னும் நன்கு கற்கப் புகலாம்.

***                

                                                                            இதை முடிக்கின்ற போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. இருக்கின்ற ஒரு

பிரதியும் மங்கிப் பயனற்றுப் போய் விடுமோ என்ற பயம் நீங்கி விட்டது.எங்கேனும் இந்த நூலின் பிரதிகள் இருக்கலாம். கம்பன் கழகத்தினரோ, சிவராஜபிள்ளையின் சந்ததியினரோ,கம்ப ரஸிகர்களோ இதை மீண்டும் அச்சிட்டுத் தரலாம் அல்லது டிஜிடலாக் வலையில் உலாவ விடலாம்.

நன்றி, வணக்கம்!

***                                                                                              இந்தக் கட்டுரைத் தொடர் இத்துடன் முற்றும்

 

 

 

 

 

விதி கொடியது: ராம பிரானின் 16 பொன்மொழிகள் (Post No.4337)

Written by London Swaminathan

 

Date: 26 October 2017

 

Time uploaded in London- 12-44

 

 

Post No. 4337

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ராமன் வாய் மொழியாக 16 ஸ்லோகங்கள் வருகின்றன. அவற்றில் வள்ளுவர், இளங்கோ கூறிய ஊழ்வினை கருத்துக்களைக் காணலாம். அதாவது, வள்ளுவருக்கும், இளங்கோவுக்கும் முன்னதாக, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டில் உள்ள கருத்துக்கள்தான் இவை. சிலர் ஊழ்வினைக் கருத்துக்களை மட்டும் முன்வைத்து வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் மாற்று மதம் கற்பிப்பர்; சமணர் என்று புலம்புவர். அது தவறு என்பது ஒட்டுமொத்த நூலையும் படித்து எடை போட்டால் தெரியும்.

 

 

ராமாயணமும் மஹாபாரதமும் நமக்குத் தெரிந்த கதைகள்தாம். ஆயினும் அவைகளில் நிறைய நுட்பமான விஷயங்கள் உள்ளன. கதைப் போக்கை மறந்து விட்டு உவமைகளாகக் காணவேண்டும்; பொன் மொழிகளாகக் காணவேண்டும். அவை நல்ல இன்பம் பயக்கும். இதோ முதலில் சுருக்கமாக 16 பொன்மொழிகள், ஸ்லோகங்களுடன் கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும் போது வால்மீகி எழுதிய 24,000 ஸ்லோகங்களை, 48,000 வரிகளை ஊன்றிப் படியுங்கள்; தேன் ஊறும்; நாக்கில் அல்ல; மனதில், உள்ளத்தில். அதைத்தான் மாணிக்கவாசகர் ‘உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து’ என்று சொன்னார் போலும்.

சர்வே  க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:

சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்

सर्वे क्षय अन्ता निचयाः पतन अन्ताः समुग्च्छ्रयाः |
सम्योगा विप्रयोग अन्ता मरण अन्तम् च जीवितम् || २-१०५-१६

சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்.

xxxx

 

யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்

ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்

यथा फलानम् पक्वानाम् न अन्यत्र पतनाद् भयम् |
एवम् नरस्य जातस्य न अन्यत्र मरणाद् भयम् || २-१०५-१७

பழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.

xxxx

யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி

ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:

यथा अगारम् दृढ स्थूणम् जीर्णम् भूत्वा अवसीदति |
तथा अवसीदन्ति नरा जरा मृत्यु वशम् गताः || २-१०५-१८

உறுதியான கட்டிடங்கள் இடிந்து விழும்; அழிந்து போகும்அ. தைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்

xxxx

 

 

அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத

யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்

अत्येति रजनी या तु सा न प्रतिनिवर्तते |
यात्येव यमुना पूर्णा समुद्रमुदकाकुलम् || २-१०५-१९

இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.

xxxxx

அஹோராத்ராணி கச்சந்தி சர்வேஷாம் ப்ராணினாம் இஹ

ஆயும்ஷி  க்ஷபயந்த்ய ஆசு க்ரீஷ்மே ஜலம் இவ அம்சவ:

अहो रात्राणि गग्च्छन्ति सर्वेषाम् प्राणिनाम् इह |
आयूम्षि क्षपयन्त्य् आशु ग्रीष्मे जलम् इव अंशवः || २-१०५-२०

 

கோடை காலத்தில் தண்ணீரை சூரியன் வற்றச் செய்வதுபோல, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் உயிரினங்களை மாயச் செய்கின்றன.

xxxx

 

ஆத்மானம் அனுசோச த்வம் கிம் அன்யம் அனுசோசசி

ஆயு: தே ஹீயதே யஸ்ய ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச

आत्मानम् अनुशोच त्वम् किम् अन्यम् अनुशोचसि |
आयुः ते हीयते यस्य स्थितस्य च गतस्य च || २-१०५-२१

நீ நின்றாலும் நகர்ந்தாலும் வாழ்நாள் குறைந்துகொண்டே வரும்; ஆகைஅயால் உன்னைப் பற்றி வருதப்படு; மற்றவர்கள் குறித்து வருந்தாதே.

xxxx

 

சஹ ஏவ ம்ருத்யுர் வ்ரஜதி சஹ ம்ருத்யுர் நிஷீததி

கத்வா சுதீர்கம் அத்வானம்சஹ ம்ருத்யுர் நிவர்தத

सह एव मृत्युर् व्रजति सह मृत्युर् निषीदति |
गत्वा सुदीर्घम् अध्वानम् सह मृत्युर् निवर्तते || २-१०५-२२

 

நாம் நடந்தாலும் மரணம் நம்மைப் பிந்தொடரும்; உட்கார்ந்தாலும் அதுவும் அருகில் அமர்ந்து ஓய்வெடுக்கும்; எவ்வளவு தூரம் போனாலும் அதுவும் வரும்; நாம் திரும்பி வந்தால் நம்முடன் திரும்பியும் வரும்.

xxxx

 

காத்ரேஷு வலய ப்ராப்தா: ஸ்வேதாள் சைவ சிரோ ரஹா:

ஜரயா புருஷோ ஜீர்ண: கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத்

गात्रेषु वलयः प्राप्ताः श्वेताः चैव शिरो रुहाः |
जरया पुरुषो जीर्णः किम् हि कृत्वा प्रभावयेत् || २-१०५-२३

நம் அங்கங்களின் மீது சுருக்கம் விழுகிறது; முடி நரைத்து விடுகிறது;

முதிய வயது காரணமாக போன அழகு திரும்பி வருமா?

xxxx

 

நந்தந்த்ய உதித ஆதித்யேநந்தந்த்ய அஸ்தம் இதே ரவௌ

ஆத்மனோ அவபுத்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்

नन्दन्त्य् उदित आदित्ये नन्दन्त्य् अस्तम् इते रवौ |
आत्मनो न अवबुध्यन्ते मनुष्या जीवित क्षयम् || २-१०५-२४

காலையில் சூரியன் உதிக்கும்போதும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும்போதும் மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள்; ஆனால் அவர்களின் ஆயுள் குறைந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.

xxxx

ஹ்ரச்யந்த்ய ருது முகம் த்ருஷ்ட்வா நவம் நவம் இஹ ஆகதம்

ருதூணாம் பரிவர்தேன ப்ராணினாம் ப்ராண சம்க்ஷய:

हृष्यन्त्य् ऋतु मुखम् दृष्ट्वा नवम् नवम् इह आगतम् |
ऋतूनाम् परिवर्तेन प्राणिनाम् प्राण सम्क्षयः || २-१०५-२५

 

ஒவ்வொரு பருவம் வரும்போதும் ஏதோ புதிதாக வருவது போல மகிழ்கிறார்கள்; ஆனால் மாறி மாறி வரும் பருவங்களினால் அவன் ஆயுள் குறைந்துகொண்டே வரும்.

xxxx

யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹா அர்ணவே

சமேத்ய ச வ்யபேயாதாம் காலம் ஆஸாத்ய கஞ்சன

 

ஏவம் பார்யா: புத்ரா: ச ஜ்நாதய: ச வசூனி ச

சமேத்ய வ்யவதாயந்தி  த்ருவோ ஹ்ய ஏஷாம் விநா பவ:

यथा काष्ठम् च काष्ठम् च समेयाताम् महा अर्णवे |
समेत्य च व्यपेयाताम् कालम् आसाद्य कंचन || २-१०५-२६
एवम् भार्याः च पुत्राः च ज्नातयः च वसूनि च |
समेत्य व्यवधावन्ति ध्रुवो ह्य् एषाम् विना भवः || २-१०५-२७

கடலில் மிதக்கும் இரண்டு மரக்கட்டைகள் சிறிது காலத்துக்கு ஒன்றாகப் பயணித்துப் பிரிந்து விடுகின்றன. அது போலத்தான் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர், சொத்து, சுகம் ,செல்வம் எல்லாம் சிறிது காலத்துக்கு உடன் வரும். அவை பிரிவது தவிர்க்கமுடியாதது.

 

xxxxx

 

ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே

தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:

न अत्र कश्चिद् यथा भावम् प्राणी समभिवर्तते |
तेन तस्मिन् न सामर्थ्यम् प्रेतस्य अस्त्य् अनुशोचतः || २-१०५-२८

 

ஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மற்றவர் இறக்கும்போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.

xxxxx

 

யதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:

அஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி

 

ஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:

தம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:

यथा हि सार्थम् गग्च्छन्तम् ब्रूयात् कश्चित् पथि स्थितः |
अहम् अप्य् आगमिष्यामि पृष्ठतो भवताम् इति || २-१०५-२९
एवम् पूर्वैर् गतो मार्गः पितृ पैतामहो ध्रुवः |
तम् आपन्नः कथम् शोचेद् यस्य न अस्ति व्यतिक्रमः || २-१०५-३०

வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்; அது திரும்பிவராத  பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?

xxxx

 

 

வயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:

ஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:

वयसः पतमानस्य स्रोतसो वा अनिवर्तिनः |
आत्मा सुखे नियोक्तव्यः सुख भाजः प्रजाः स्मृताः || २-१०५-३१

ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும். ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத்தானே.

Slokas Source: valmikiramaan.net

Translated by London swaminathan

 

TAGS: ராமபிரான், விதி, பொன்மொழிகள், அயோத்யா காண்டம்

–SUBHAM–

இரண்டு சொற்கள் தொடர்பாக ராமன், பரதன் மோதல்! (Post No.4334)

Written by London Swaminathan

 

Date: 25 October 2017

 

Time uploaded in London- 11-09 am

 

 

Post No. 4334

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நம் எல்லோருக்கும் ராமாயணம் தெரியும். காலத்தால் அழியாத காவியம்! எங்கெங்கெல்லாம் ஒரு மனிதன் எளிதில் திசை மாறிப்போக முடியுமோ அங்கெங்கெல்லாம் ராமன் என்னும் ஒரு மாமனிதன், ஒரு க்ஷத்ரிய அரசன்- தவறாத, நேரான பாதையில் சென்றான். ஆகையால் உலகம் முழுதும் வாழும் நல்லோர் மனதில் எல்லாம் நீங்காத இடம் பிடித்தான். வால்மீகி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய காவியம்தான் உலகின் ஆதி காவியம். இவர் ராமரின் சம காலத்திய முனிவர். 24,000 ஸ்லோகங்கள் 48,000 வரிகளில் அருமையான் நீதிநெறிகளை ராமன் வாயிலாகவும் ஏனைய கதா பாத்திரங்களின் வழியாகவும் முத்து முத்தாக உதிர்த்துச் செல்கிறார்.

 “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50) என்று வள்ளுவன் சொன்னதிலிருந்தே ராமன், கிருஷ்ணன் ஆகிய புருடர்கள் தெய்வம் என்பதை உணரலாம்.

 

தனது தாயான  கைகேயி செய்த தவற்றை உணர்ந்த பரதன்—

அமைச்சர்களும், குருமார்களும் படைகளும், புடை சூழ கானகம் ஏகுகிறான். அங்கே ராமனைச் சந்திக்கிறான்.

“அண்ணா! தாயும் தந்தையும் தவறு செய்துவிட்டனர். உன்னை காட்டிற்கு அனுப்பியது தர்ம விரோதம்”– என்று ராமனிடம் வாதிடுகிறான். ராமனோ ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்பது சான்றோர் வாக்கு. ஆக நான் இருவரின் ஒப்புதலுடன் இங்கே வந்தேன்; 14 வருடம் கழித்து அயோத்தி மாநகருக்கு வந்து ஆட்சியை ஏற்றுக் கொள்வேன் என்கிறான். பரதன் விடவில்லை. சாம, தான, பேத, தண்டம் என்பதில் பல உபாயங்களைக் கையாளுகிறான்

 

“நாம் காலாகாலமாக வணங்கும் குருமார்கள் என்னுடன் வந்துள்ளனர் அமைச்சர்கள் வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் நான் சொல்லுவதை ஆ மோதிக்கின்றனரே” என்கிறான். அதற்கும் ராமபிரான் மசியவில்லை.

 

“அண்ணா, அண்ணா! ப்ளீஸ்! நான் சின்னப்பையன், என் மீது இவ்வளவு பெரிய ராஜ்ய பாரத்தைச் சுமத்துவது முறையோ, தகுமோ?” என்று கெஞ்சிப் பார்க்கிறான். உலகில் சத்தியத்தை நிலை நாட்ட வந்த ராமன், அசையவில்லை.

 

திடீரென சொற்சிலம்பம் மூலம் ராமனை விழுத்தாட்டல்லாம் என்று எண்ணுகிறான் பரதன்.

“அண்ணா மகன் என்றால் அபத்யம் என்று சம்ஸ்கிருதத்தில் சொல்வார்களே; இதன் பொருள் “கீழே விழாமல் தடுப்பவன்” என்பதுதான் உனக்குத் தெரியுமே. வயதான காலத்தில் கிழவர்களுக்கு புத்தி தடுமாறும் என்று சம்ஸ்கிருத்தில் முதியோர் சொன்ன பழமொழி உளதே.

அந்தகாலே ஹி பூதானி முஹ்யந்தீதி புரா ஸ்ருத்: 2-106-13

நம் அப்பாவும் கிழ வயதில் புத்தி தடுமாறி உன்னை காட்டுக்கு அனுப்பிவிட்டார். பெண் வயப்பட்டோ அல்லது கைகேயிக்குப் பயந்தோ இப்படிச் செய்திருக்கலாம். தவறு செய்தவர்கள் நரகத்தை அடைவார்களே. ஆகையால் நம் அப்பா, வாழ்க்கையில் தவறி விழுந்துவிட்டார். அவர் கீழே விழாமல் தடுக்க, நரகத்தில் விழாமல் தடுக்க நீ உதவலாமே? அபத்யனாக இரு”.

 

 

பிதுர்ஹி சமதிக்ராந்தம் புத்ரோ ய: சாது மன்யதே 2-106-15

ததபத்யம் மதாம் லோகே விபரீதமதோ அந்யதா 2-106-16

 

மா  பவான் துஷ்க்ருதம் பிது: (அப்பா போட்ட தவறான உத்தரவை பின் பற்றாதே)-2-106-16

முதலில் கெஞ்சிய பரதன், இப்பொழுது அண்ணனுக்கே அறிவுரை சொல்லப் புறப்பட்டுவிட்டான். ராமன் விடுவானா?

அபத்யன் என்பது நரகத்தில் விழாமல் தடுப்பவன் என்று பொருள்; அதாவது புதல்வர்களைப் பெற்றால் அவர்கள் செய்யும் திதி முதலியவற்றால் மேலுலகம் சென்றோர் நரகத்தில் விழாமல் தடுப்பர். ஆனால் பரதன் அதைத் தவறாக வியாக்கியானம் செய்தவுடன், அவனை ராமன் ஒரு பிடி பிடிக்கிறான்.

 

கயா க்ஷேத்ர மஹிமை

ச்ரூயதே ஹி புரா தாத ச்ருதிர்கர்தா யசஸ்வினா

கயேன யஜமானேன கயேஸ்வேவ பித்ரூன் ப்ரதி 2-107-11

“தம்பி! முன்னொரு காலத்தில் கயா என்று  ஒரு மன்னன் இருந்தான். அவன் கயா என்ற புனிதத்தலத்தில் சிரார்த்தம் (திதி) செய்து முன்னோர்களைக் கடைத்தேற்றினான். அவன் பல விதிகளைச் செய்திருக்கிறான். ‘புத்’ என்னும் நரகத்தில் இருந்து விழாமல் தடுப்பவனே ‘புத்ரன்’ எனப்படுவான்.

 

புத்ராம்னோ நாரகாத்யஸ்மாத்பிதரம் த்ராயதே சுத:

தஸ்மாத் புத்ர இதி ப்ரோக்த: பித்ரூன் ய: பாதி சர்வத: 2-107-12

அப்பா சொல் எனக்கு மட்டும்தானா? பார், என்னை காட்டுக்குப் போ என்று சொன்னார்; நான் காடேகினேன்; உன்னை ஆட்சி செய் என்றார். நீ ஏன் ஆட்சி செய்து அவர் சொல்லைக் காப்பாற்றக் கூடாது? என்னை ‘அபத்யன்’ ஆக இரு என்றாய். நீ என் ‘புத்ரனாக’ இருக்கக்கூடாது? என்று ராமன் செப்பினான்.

பவானபி ததேத்யேவ பிதரம் சத்யவாதினம்

கர்துமர்ஹதி ராஜேந்த்ர க்ஷிப்ரமேவாபிஷேசனாத் 2-107-9

அபத்ய, புத்ர என்ற இரண்டு சொற்களுமே புதல்வன், மகன் என்றே பொருள்படும். ஒருவன் பல மகன்களை ஈன்றெடுத்தால் அதில் ஒருவனாவது கயாவுக்குச் சென்றோ செல்லாமலோ திதி/ சிரார்த்தம் செய்து முன்னோர்களை ‘புத்’ என்னும் நரகத்தில் விழாமல் தடுப்பான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இது தமிழில் புற நானூற்றிலும் சம்ஸ்கிருதத்தில் மானவ தர்ம சாத்திரம் என்பப்படும் மனு நீதி நூலிலும் உளது.

கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர்துறக்க உடகார்ந்த பந்தலில் தனக்கும் இடம் தா என்று பொத்தியார் என்னும் புலவர் வந்தார். ஆனால் சோழன் இடம் தரவில்லை. நீ திருமணமானவன்; இன்னும் உனக்குக் குழந்தை பிறக்கவில்லை. (ஈமக் கடன் செய்து உன்னை நரகத்தில் விழாமல் காக்க) ஒரு புதல்வன் பிறந்த பின்னர் வருக என்று சொல்லி அனுப்பினான் சோழ மன்னன். புறநானூற்றின் 222ஆவது பாடலுக்கு வியாக்கியானம் செய்த பெரியோர்கள், புதல்வன், புத் என்னும் நரகம் பற்றி விரிவுரை எழுதியுள்ளனர்.

 

ராமனை மடக்கிப் பிடிக்க வந்த பரதனை ராமன் கிடுக்கிப் பிடி போட்டு வீழ்த்திவிட்டான். ராமன் மற்போர் வீரன், விற்போர் வீரன்; சொற்போரிலும் வீரன்.

 

வால்மீகி, கம்பன் எழுதிய காவியங்களை நுணுகிப் படிக்க ஒரு வாழ்நாள் போதாது. இன்றே படிக்கத் தொடங்குங்கள்; பாடல் பாடலாக’ ஸ்லோகம் ஸ்லோகமாக பதம்  பிரித்துப் படியுங்கள்.

Translated by London swaminathan

Source: LECTURES ON THE RAMAYANA, THE RT.HON. V S SRINIVASA SASTRI, 1949, REPRINTED 1994, MADRAS SAMSKRIT ACADEMY

–Subham–