கடவுள் கண்டெடுத்த முத்து! (Post No.4071)

Translated by London Swaminathan
Date: 11 July 2017
Time uploaded in London- 10-15 am
Post No. 4071

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேதம் என்பது சம்ஹிதை (துதிப்பாடல் பகுதி), பிராமணம் (யாகம் செய்யும் வழிமுறைகள்), ஆரண்யகம், உபநிஷத் (தத்துவ விளக்கங்கள்) நிறைந்தது.

 

இதில் ரஹசிய மொழியில்தான் விஷயங்களைச் சொல்லுவர். இதில் ரிஷிகளுக்குள் ஒரு போட்டி! பேரானந்தம்!

 

ஆங்கிலம் மட்டுமே படித்த, இந்து கலாசாரமே தெரியாத– புரியாத – அறிவிலிகள் இது பற்றி ஏராளமாகப் பிதற்றியுள்ளன. வெளிநாட்டாருடன் போட்டி போட்டுக் கொண்டு மார்கஸீய அரை வேக்காடுகளும் குட்டையைக் குழப்பியுள்ளன.

 

யார் சொல்லுவதை நம்பலாம்?

காஞ்சி, சிருங்கேரி சங்கராசார்யார்கள் போன்ற சந்யாசிகள் சொல்லுவதை நம்பலாம். இந்து மதத்தில் நம்பிக்கை உடையோர் சொல்லுவதை நம்பலாம்.

 

யார் சொல்லுவதை நம்பக் கூடாது?

ஒழுக்கங் கெட்ட, வாழ்க்கையில் சத்தியத்தை, நேர்மையைக் கடைப்பிடிக்காத அதுகளையும் இதுகளையும் நம்பக்கூடாது. வெளிநாட்டிலிருந்து வந்து வேதத்தை மொழி பெயர்த்த பல அதுகளும் இதுகளும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் மாதிரித்தான். அதாவது ஒரு சாரார் இடமிருந்து காசு வாங்கி மற்றவர்களைத் திட்டுவது,

‘ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல’ என்று வீட்டில் பேசுவது இவர்களுடைய வாடிக்கை. நிற்க. நல்ல விஷயங்களுக்கு வருவோம்.

பிராமண நூல்களில் கிடைக்கும் சில அற்புதமான மேற்கோள்களைப் பார்ப்போம்

 

“சமுத்ரே த்வா மதனே சாதயாமி இதி.

மனோ வை சமுத்ர:

மனஸோ வை சமுத்ராத் வாசா அ ப்ரயா தேவாஸ் த்ரயீம் வித்யாம் நிரகனன்”

 

“மனம் தான் கடல்;

வாக்குதான் மண்வெட்டி (கரண்டி).

தேவர்கள் அந்த மூன்று வேதங்களையும் தோண்டி எடுத்தனர்”– சதபத பிராமணம் (7-5-2-52)

 

நாம் தமிழில் “கடலில் மூழ்கி முத்து எடுப்போம்” வாருங்கள் -என்று பல சந்தர்ப்பங்களில் சொல்கிறோம். அந்த இடத்தில், படிப்போருக்கு நாம் அரிய விஷயங்களை ஆழ்ந்து இறங்கி கண்டு பிடிப்போம் வாருங்கள், என்பது புரியும். அதைப் போல வேதங்கள் என்பது தேவர்கள்  — அல்லது அவர்களைப் போன்ற ரிஷிகள் — கண்டவை — மனக் கண்ணில் கண்டவை –என்பது தெளிவாகத் தெரியும். இதை அறியாத ஆங்கில மாக்கள் ” பாருங்கள் வேதங்கள் என்பவை பற்றி பலவிதமான கருத்துகள் இருக்கின்றன– ஆகவே அவைகளும் கவிஞர்களால் இயற்றப் ப ட்டவையே’’ என்று வாதிப்பர்.

ஆனால் நம்முடைய நூல்கள் ரிஷிகளை ‘மந்த்ர த்ருஷ்டா’ — மறை மொழிகளைக் ‘கண்டவர்கள்’ என்று சொல்லுகின்றன. ‘இயற்றியவர்கள்’ என்று எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக ‘அபௌருஷேயம்’ (மனிதர்களால் இயற்றப்படாதவை) என்றும் தெளிவாகச் செப்புகின்றன.

 

இப்போது நீங்களே தெரிந்து கொள்ளலாம். வேத வாழ்வைக் கடைப்பிடிக்காத வெளிநாட்டினர் சொல்லுவது சரியா? அல்லது நம்முடைய மூதாதையர்கள் சொல்லுவது சரியா என்று.

 

இங்கு அப்பர் தேவாரப் பாடலை ஒப்பிடுவது சாலப் பொருந்தும்

 

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

xxx

 

பிரஜாபதியின் தாடி

பிரஜாபதியின் (பிரம்மா) தாடி முடிதான் வேதங்கள்!

ப்ரஜாபதேர் வை ஏதானி ஸ்மஸ்ரூணி யத் வேத:

–தைத்ரீய பிராமணம் 3-39-1

xxx

சொற்களே வேதங்களின் தாய்!

“வாக் அக்ஷரம் ப்ரதமஜா ருதஸ்ய வேதானாம் மாதா அம்ருதஸ்ய நாபி:”

–தைத்ரீய பிராமணம் 2-8-85

“சொல் என்பது அழியாதது, முதலில் பிறந்தது, வேதங்களின் தாய், மரணமிலாப் பெருவாழ்வின் அச்சு (மூலாதாரம்)”

xxx

சரஸ்வதி

வாக், வாக் தேவி என்பதெல்லாம் சரஸ்வதியையும் குறிக்கும். சாதாரண மக்களுக்கு — பாமர மக்களுக்கு — இப்படி தத்துவ விஷயங்களைச் சொன்னால் புரியாதே என்பதற்காக பிற்காலத்தில் சரஸ்வதி முதலிய உருவங்களைப் படைத்து விளக்கினர். அதாவது எப்படி ரஹஸிய மொழி மூலம் அரிய கருத்துக்ளைத் தந்தனரோ, அதே போல சாதாரண கற்சிலை- விக்ரஹ — உருவங்கள் மூலம் அரிய– பெரிய கருத்துக்களை மனதில் பதிய வைத்தனர்.

xxx

பாகவத புராணம் சொல்லும்:

நான்முகனிடமிருந்து வேதங்கள் தோன்றின; “முன்போல எப்படி சொல் தொகுப்பை உண்டாக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு முகங்களில் இருந்து ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கையும் படைத்தார். அத்தோடு யாக யக்ஞங்கள், துதிகள் ஆகியவற்றையும் உருவாக்கினார்” — பாகவதம் 3-12-34)

(விஷ்ணு புராணமும் இதைச் சொல்கிறது).

xxxx

 

காயத்ரியிலிருந்து உண்டானது வேதம்

ஹரிவம்சம் சொல்கிறது–

“உலகைப் படைத்த பிரம்மா, மூன்றே வரிகள் உள்ள காயத்ரீயைப் படைத்தார் – அதுதான் வேதங்களின் தாய் – அந்த காயத்ரீயில் இருந்து நான்கு வேதங்களும் உருவாயின”

(இதன் உட்பொருள்- நான்கு வேதங்களில் காணப்படும் காயத்ரீ மந்திரம் முழு வேதங்களுக்கும் சமம் ஆனவை.

xxxx

மஹாபாரதம் சாந்தி பர்வதத்திலும்

“வேதானாம் மாதரம் பஸ்ய மஸ்தாம் தேவீம் சரஸ்வதீம், அதாவது, வேதங்களின் தாயான சரஸ்வதி என்னிடம் வசிக்கிறாள்” என்று சொல்லும்.

 

இவ்வாறு வேத, இதிஹாச, புராணம் மூலம் இழையோடும் கருத்துக்களை நாம் நுணுகி ஆராய்ந்தால் என்றுமுள – சாஸ்வதமான-  சத்தியத்தையே வேதங்கள் உரைக்கின்றன என்பது தெளிவுபடும்.

 

 

சுபம்–

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்! (POST NO.4070)

Written by S NAGARAJAN

 

Date: 11 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4070

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ஆயுர்வேதம் கூ உணவு இரகசியம்

 

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

 

ச.நாகராஜன்

உணவு என்பது உடலை போஷிக்கும் ஒன்று மட்டும் அல்ல, அது உள்ளத்தை உருவாக்கவும் உதவும் ஒன்று. ஆன்மீக வளர்ச்சிக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ அது அடிகோலும் என்கிறது ஆயுர்வேதம்.

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

  • அர்த்த தோஷம்
  • நிமித்த தோஷம்
  • ஸ்தான தோஷம்
  • ஜாதி தோஷம்
  • சம்ஸ்கார தோஷம்

இது பற்றி ஆஸ்ரம்ஜி பாபு தனது உரைகளில் ஒன்றில் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சாராம்சத்தைப் பார்க்கலாம்.

 

அர்த்த தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.

உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.

பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.

வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.

நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

நிமித்த தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.

அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.

உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.

அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.

நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

 

ஸ்தான தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.

எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.

உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்

 

ஜாதி தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.

சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

 

சம்ஸ்கார தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.

அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.

தட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது.

அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

அதைக் கடைப்பிடித்து எளிமையான உணவை உண்டு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்தனர் சில தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்.

 

இன்றோ…

இப்படிப்பட்ட ஐந்து உணவு தோஷங்கள் உண்டு என்பது கூட  தெரியாத காலம் ஆகி விட்டது.

என்றாலும் கூட ஆயுர்வேதத்தை மதிப்போர் உணவு பற்றிய இந்த தோஷங்களை அறிந்து அவற்றை நீக்கி உணவை உண்ண ஆரம்பித்தால் அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தருவதுடன் ஆன்ம முன்னேற்றத்தையும் தரும்.

இதுவே ஆயுர்வேதம் உணவு பற்றிக் கூறும் இரகசியமாகும்!

 

***

உ.வே.சா.வுக்கு புரியாத பாண்டவ பாஷை! (Post No.4056)

Written by London Swaminathan
Date: 6 July 2017
Time uploaded in London- 6-10 am
Post No. 4056

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சங்கீத மேதை மஹா வைத்யநாதையர் பற்றி தமிழ் தாத்தா உ.வே.சாமிநதையர் எழுதிய புத்தகத்தில் ஒரு அரிய விஷயத்தைச் சொல்லுகிறார். ஆனால் இது பற்றி அதிகம் பிரஸ்தாபிக்காமல் ஒரே ‘பாரா’வில் விஷயத்தை முடித்துவிட்டு ஓடி விடுகிறார்.

பாண்டவ பாஷை!

 

இப்படி உண்மையிலேயே ஒரு பாஷை இருந்ததா? அல்லது மதுரை வணிகர்கள், அல்லது நாம் சிறு பிள்ளைகளுக்குப் புரியக் கூடாதென்பதற்காக உபயோகப் படுத்தும் ஒரு மொழி (உத்தி) யா என்று விளங்கவில்லை.

முதலில் உ.வே.சா. சொல்லுவதைப் படியுங்கள்:-

 

“சகோதரர்களோடு பேசுங்காலத்தில் ஏதோ ஒரு பாஷையில் அவர் (மகா வைத்யநாதையர்) பேசுவார்; அஃது இன்ன பாஷையென்று யாருக்கும் விளங்காது. ஒரு முறை நான் என்ன பாஷையென்று கேட்டேன்; அவர் இதனைப் பாண்டவ பாஷையென்று சொல்வதுண்டு. விராட நகரத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தமக்குள் வழங்கி வந்ததைப் போன்றதென்று கேள்வி” என்றார்.

 

மதுரையில் வணிகர்கள், வாடிக்கையாளர்கள் பேரம் பேசுகையில், தமக்குள் சில சங்கேத சொற்களைப் பரிமாறிக்கொள்வார்கள். ‘இந்த ஆளுக்கு விலையை  இவ்வளவு குறைக்கலாம் அல்லது கூட்டு என்றோ, வந்த வாடிக்கையாளர் ஒரு சாவுக் கிராக்கி; நேரத்தை வீணடிக்காதே; ஆளை புறக்கனி என்றோ சங்கேத மொழியில் பேசிக் கொள்வார்கள்.

 

இதே போல நாம் வீட்டில் சிறு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாதென்பதற்காக “ நான் சாக்லெட்டை அங்கே வைத்திருக்கிறேன்” என்று சொல்லாமல் ‘அசா அல் அலெ அட் அங்கே இருக்கிறது’ என்று சொல்லுவோம். சிலர் ‘அ’ என்பதற்குப் பதிலாக ‘க’  என்பதைப் பயன்படுத்துவர் ‘கசா கக் கலெ கட்’ என்பர். ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி சில உத்திகள் இருக்கும்.

 

இது பற்றி உவே.சா. வேறு எங்கும் சொல்லி இருக்கிறாரா என்று தெரியவில்லை. இப்படி உண்மையிலேயே வேறு ஒரு பாஷையைப் பாண்டவர்கள் விராட தேசத்தில் பேசினார்களா என்றும் தெரியவில்லை.

 

என்னுடைய சம்சயம் (ஐயப்பாடு)!

இப்படி பாண்டவ பாஷை என்று ஒன்று இருந்ததா? அல்லது மஹா வைத்திய நாத அய்யர் கிண்டலாக இப்படிக் பகன்றாரா? என்பதே.

 

வாசகர்களுக்கு ஏதேனும் தெரிந்தால் எழுதுங்கள்.

-சுபம்-

 

மஹா வைத்திய நாத அய்யரின் தமிழ் அறிவு (Post No.4048)

Written by London Swaminathan
Date: 3 July 2017
Time uploaded in London-22-42
Post No. 4048

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹாவைத்திய நாத அய்யர் பெரிய சங்கீத மேதை. அவருடைய சங்கீத அறிவுக்கு யாரும் ‘சர்ட்டிபிகேட்’ கொடுக்க வேண்டாம். ஆனால் அவருடைய தமிழ் அறிவு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களாலும் பாராட்டப்பட்டத்தை உ.வே சாமிநாத அய்யர் எழுதும்போது அவருக்கு இரட்டைப் பட்டம் கிடைத்தது போலாகும்.

 

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கையில் திருக்குற்றாலப் புராணத்தின் அச்சுப் பிரதி ஒன்று கிடைத்தவுடன் ஒவ்வொரு பாடலாகப் படித்து பொருள் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது மஹா வைத்யநாத அய்யரும் இருந்தார். அவரும் தமக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டு வந்தார். அதில் சண்டிகேசுவர வணக்கம் பற்றிய பாடல் வந்தது

 

தான் பிறந்த தந்தையையும் இனிப்பிறக்கும் நிந்தையையும் தடிந்து சேயென்

றான்பிறங்கு மழவிடைமே லொருவரழைத்திடவிருவர் அயிர்ப்பவேகிக்

கான்பொலிதா ரரிபிரமா தியர்க்குமெய்தா விருக்கையெய்திக்கடவுட்சேடம்

வான்புலவர் பெறாப்பேறு பெற்றவனை நற்றவனை வழுத்தல் செய்வாம்

 

என்னும் செய்யுளில் “சேயென்று ஒருவர் அழைத்திட இருவர் அயிர்ப்பவேகி” என்ற பகுதியில் இருவர் என்பது யார்? என்று விளங்கவில்லை; உடனிருந்தவர்களும் யோசித்தார்கள்; சிலர் பிரம்மா-விஷ்ணு என்றனர். ஆனால் அது பொருத்தமாக இல்லை. அப்பொழுது மஹா   வைத்யநாதய்யர், விநாயகர், சுப்பிரமணியர் என்று பொருள் சொல்லலாமோ என்றா ர் அது அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தவுடன் பிள்ளையவர்களும் அதை ஆமோதித்தார்.

 

ஐயா, நீங்கள் சொன்னதுதான் நன்றாக இருக்கிறது. உங்களுடைய ஈஸ்வர பக்தியே இவ்வாறு தோன்றச் செய்தது என்றார். அவருடைய தமிழறிவை மஹாவித்துவானே கொண்டாடிவிட்டார்கள் என்றால் வேறு புதிதாக என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறார் உ.வே.சா.

 

மஹா வைத்தியநாதரும் அவருடைய தமையனாரும் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர்கள்

மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் தென்னாட்டு யாத்திரை சென்றபோது இருவரும் உடன் சென்றனர். கம்பனேரி புதுக்குடி என்ற இடத்தில்  அவர்கள் இருவர் மற்றும் உ.வே.சா. ஆகிய மூவரும் அணிந்திருந்த ஏறுமுக ருத்திராட்சக் கண்டியில் இருந்த தங்க முலாம் கொடுத்த வெள்ளி வில்லைகளை அகற்றிவிட்டு தங்க வில்லைகளைப் போடும்படி தேசிகர்  செய்வித்தனர்.  அப்பொழுது இராமஸ்வாமி அய்யர், “வெள்ளிவில்லை தங்க வில்லை” என்று சிலேடை மொழியில் பேசி அனைவரையும் மகிழ்வித்தார்.

 

இதே போல குற்றாலம் சென்றபோது அவருடைய தமையனார் ” எவ்வளவு கல் (மைல்) தாண்டி இருப்போம்? என்றார். மஹா வைத்திய நாதய்யர் “எல்லாங் கல்லுத்தானே” என்றனர்.

 

 

மஹா வைத்திய நாதய்யர் கூறும் சொல் விளக்கங்கள் மிக நன்றாக இருக்கும். தமிழ் மற்றும் சம்ஸ்கிருத நூல்களிலிருந்து மேற்கோள்காட்டி விளக்குவார். அப்பொழுது அவரது ஆராய்ச்சியின் ஆழம் புலப்படும். தேவர-உபநிஷத் கருத்துகளை ஒப்பிட்டுப் பேசுவார்.மங்களம் பாடுகையில் சஹானா ராகத்திலுள்ள நந்திகேசாய மங்களம் என்பதைப் பாடி நிறைவு செய்வார்.

அப்பூதி நாயனார் சரித்திரப் பிரசங்கம் செய்தபோது பெரியபுராணக் கீர்த்தனையில்  திங்களூர் மாடத்திங்களூர் என்ற வரிக்குப் பொருள் சொல்கையில் ‘சந்திரன், மேல் மாடத்தில் ஊர்ந்து செல்லும் ஊர்’ என்று பொருள் சொன்னார். சந்திரன், குருத் துரோகம் செய்த பாவத்தில் சிக்கியதால் அப்பூதி அடிகள் வாழும் ஊரின் மாடத்தில் ஊர்ந்தாதாலாவது பாவம் போகும் என்று “நிலவு சென்ற ஊர்” என்று விளக்கம் தந்தார்.

 

சோமாசிமாறநாயனார் சரித்திரம் சொல்கையில் எப்படியாவது, சுந்தரமூர்த்தி நாயனாரின் உதவிபெற்று  தியாகேசப் பெருமானைத் தன் யாகத்துக்கு வரவழைக்க திட்டமிட்டார். இதற்காக சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பிடித்த தூதுவளைக் கீரையை நாள்தோறும் அவர் அனுப்பிவந்தாராம். அதைக்கூறும் கீர்த்தனம் “தூதுவளைக் கீரையைக் காதலாய்க் கொடுத்துவந்தார்” என்று தொடங்குவது. இதைப்  பாடிப் பிரசங்கம் செய்கையில் வைத்திய நாதய்யர், அந்தக் கீரையின் பெயர் ‘தூதுவளை’. உங்களுக்குத் தூதாகச் சென்ற  சிவபெருமானை இணங்கச் செய்யவேண்டும் என்பதால்தான் தூதுவளைக் கீரையை தினமும் சப்ளை செய்தார் போலும் என்றார் வைத்திநாதய்யர்.

 

–சுபம்–

பெரியவாளின் நகைச்சுவை! (Post No.4035)

Written by S NAGARAJAN

 

Date: 29 June 2017

 

Time uploaded in London:-  5-51 am

 

 

Post No.4035

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

காஞ்சி பெரியவா மஹிமை

 

பெரியவாளின் நகைச்சுவை!

 

ச.நாகராஜன்

 

காஞ்சி மஹா பெரியவா அத்வைத ஞானி. என்றாலும் கூட லௌகிக உலகத்திற்கு அவர் நாசுக்காக சொல்ல வேண்டியதைச் சொல்லுவார்.

 

பி.நாராயண மாமா பகிர்ந்து கொண்ட சம்பவம் இது:

ஒரு முறை உடல் பருமனான ஒரு குண்டு மாமி பெரியவாளை தரிசிக்க வந்தார்.

 

அவரால் நமஸ்காரம் பண்ணக் கூட முடியவில்லை. அவ்வளவு குண்டான மாமி.

 

பக்தி இருந்தாலும் நமஸ்காரம் பண்ண உடல் வாகு இடம் தராததால் ஒரு வித சங்கடம் கலந்த குழப்பத்தில் அவர் ஒரு ஓரமாக கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தார்.

பின்னர் பெரியவாளை அணுகினார்.

 

“எனக்கு டயபடீஸ் (Diabetes) இருக்கிறது.டாக்டர் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்காக தினமும் ஒரு மணி நேரம் நான் நடக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் என்னாலோ ஒரு பத்து நிமிடம் கூட நடக்க முடியவில்லை.” என்று கூறிய அவர், “பெரியவாள் தான் எனக்கு ஒரு சுலபமான வழியைக் காண்பிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.

“இந்த டாக்டர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான். மெடிகல் புஸ்தகங்களில் இருப்பதை அப்படியே திருப்பித் திருப்பிச் சொலவதே அவர்களின் வழக்கமாக ஆகி விட்டது. பிராக்டிகலாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுக மாட்டேன் என்கிறார்கள்” என்று ஆரம்பித்தார் பெரியவாள்.

 

குண்டு மாமியின் முகம் விகசித்தது.பெரியவாள் ஏதோ ஒரு சுலபமான வழியைச் சொல்லப் போகிறார் என்று அவர் எதிர்பார்த்தார்.

 

“ஒருவருக்கு வியாதி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் பகவானின் அனுக்ரஹம் வேண்டும்.”

பெரியவாளின் பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கலானார் அந்த மாமி.

 

“ உன் ஆத்துக்குப் பக்கத்தில் ஏதேனும் கோவில் இருக்கா?” – பெரியவாள் கேட்டார்.

 

“இருக்கிறது. பெரிய சிவன் கோவில் இருக்கிறது.” – மாமி பதில் சொன்னார்.

 

“நல்லதாப் போச்சு. அங்கு தினமும் காலையும் மாலையும் ஆறு ஆறு பிரத்க்ஷிணம் பண்ணு. துடைப்பக்கட்டையால் ஒரு நூறு அடி மட்டும் கோவிலை சுத்தம் செய்.”

 

பெண்மணிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பெரியவாளின் பிரசாதத்துடன் வீட்டிற்குக் கிளம்பினார்.

 

பெரியவாளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு அடக்க முடியாத சிரிப்பு.

 

அவரைப் பார்த்த் பெரியவாள்,”என்ன, நான் ஏதேனும் தப்பா சொல்லிட்டேனா?” என்று கேட்டார்.

 

“இல்லை பெரிய்வா! டாக்டர் நடைப் பயிற்சி – வாக்கிங் போ என்று சொன்னார். ஆனால் பெரிய்வா பிரதக்ஷிணம்னு பிரஸ்கிரைப் (prescribe) பண்ணேள்.” என்றார் அவர்.

 

“ஓ! மருந்தாக இரண்டு பேரும் பிரஸ்கிரைப் (Prescribe) பண்ணது அத்வைதம் தான். ஆனால் பேர் தான் த்வைதம் என்கிறாயா?”

என்றார்  பெரியவாள்.

 

அவரது நுட்பமான நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

***                                                        நன்றி திலிப் அக்டோபர்/டிச்மப்ர் 2016 இதழ்

ராக்பெல்லரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் (Post No.4029)

Written by London Swaminathan
Date: 27 June 2017
Time uploaded in London- 7-19 am
Post No. 4029
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

 

உலகின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று ராக்பெல்லர் குடும்பம். எண்ணெய், எரி வாயு ஆகிய இரண்டு  தொழில்களிலும் கோடிக் கணக்கில் சம்பாதிப்பவர்கள். ஒரு முறை ஒரு அமெரிக்க பத்திரிக்கை  நிருபர் அவரிடம் கேள்வி கேட்டார்.

 

மிஸ்டர் ராக்பெல்லர், பில்லியன் டாலர் கணக்கில் சம்பாதிக்கிறீர்கள். இன்னும் எவ்வளவு சம்பாதிக்கப் போகிறீர்கள்? உங்கள் நோக்கம் என்ன? என்று கேட்டார்.

 

ராக்பெல்லர் சிறிதும் தயங்கவில்லை; தனது கை விரல்களை ஒரு அங்குல இடைவெளிக்கு ( கட்டை விரல் கீழே, மற்ற நான்கு விரல்களும் மேலே) விரித்துக்கொண்டு இன்னும் கொஞ்சம்தான் என்றார். எவ்வளவு பொருள் பொதிந்த வாசகம்; எவ்வளவு அர்த்த புஷ்டியான வாக்கியம்! அக்ஷர லக்ஷம் பெறும்.

 

ஆசைக்கு அளவே இல்லை என்பதை சிறு விரல்களால் காட்டி விட்டார். அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்தவனும் இல்லை; போதும் இனிமேல், எனக்கு வேண்டாம் என்று சொல்லும் பணக்காரனும் இல்லை.

 

ஆர். எஸ்.எஸ் தலைவர் குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் மதுரை முகாம் ஒன்றில் பேசுகையில் கூறினார்; ஆசையே கூடாது; எல்லாம் பொது மக்களுடையது என்பதை உணர்த்தும் முகத்தான் நம் முன்னோர்கள் யாகத்தில் நெய்யை விடும் போது “இதம் ந மம” (இது என்னுடையது அல்ல) என்று சொல்லி விடுவர். அது மட்டுமல்ல. ஆசைத் தீயை அணைக்க முடியாது என்பதையும் இந்த யாக யக்ஞங்கள் உணர்த்தும். எப்படி நெய்யை  விட விட அக்னி சுவாலை விட்டு எரியுமோ அதே போல ஆசைக்குத் தீனி போடப் போட, ஆசைத்தீயும் வளரும் என்றார்.

ராம கிருஷ்ண பரமஹம்சர் இதை ஏழு ஜாடி அம்பட்டன் கதையில் இன்னும் அழகாக விளக்குகிறார். மஹாத்மா காந்தியும் போதும் என்ற எண்ணம் வளர வேண்டும் ;எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்றார். தமிழர்களோ ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று சொல்லி வைத்தனர்.

நான் முன்னரே எழுதிய ஏழு ஜாடி அம்பட்டன் கதையைப் படிக்கவில்லையானால் இதோ படியுங்கள்:–

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பேய்க்கதையை வள்ளுவன் குறள் 565-ல் சொன்னதை 20 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் இருந்து வந்த ‘’மேகம்’’ பத்திரிக்கையில் எழுதினேன்.

ஏற்கனவே எழுதிவிட்டதால் பேய்க் கதையை மிகவும் சுருக்கமாகப் பார்போம்:

‘’ராஜாவுக்கு முடிவெட்டும் ஒரு நாவிதன் காட்டு வழியாக வந்தான். மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது? நாவிதனும் வேண்டும் என்று சொல்லவே ஏழு ஜாடி தங்கம் கிடைத்தது. ஆனால் ஒரே ஒரு குறை! ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதை எப்படியாவது நிரப்பவேண்டும் என்ற ஆசை வந்தது. உழைத்து உழைத்து ஓடாகிப் போய் எத்தனை போட்டாலுல் ஜாடி நிரம்பவே இல்லை.

ராஜாவுக்கு முடி வெட்டப் போகும் போதெல்லாம் மகிழ்ச்சியாக அவருடன் பேசிவிட்டு கூடுதலாகப் பணத்துடன் திரும்புவது அவனது வாடிக்கை. ஆனால் ஏழு ஜாடி தங்கம் வந்த பின் அந்த மகிழ்ச்சி எல்லாம் மாயமாய்ப் பறந்தோடி விட்டது. முகம் வாடியது, உடலும் மெலிந்தது. இவனது நடத்தையில் மாற்றம் வந்தது ராஜாவுக்கும் தெரிந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தார். ஒரு வேளை நாடே சீர் கெட்டுப் போய்விட்டதோ என்று ராஜாவை வேறு வகை பயம் பிடித்துக்கொண்டது.. இவன் எவ்வளவு கேட்டும் சொல்லாமல் எப்போது பார்த்தாலும், கூடக் காசு வேண்டும் என்று சொன்னவுடன், ஒரு நாள் ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது, ‘’ஏ, சனியனே, என்ன? எங்கேயாவது ஏழு ஜாடித் தங்கத்தை எடுத்துவந்து விட்டாயா?’’ இப்படிப் பணத்துக்காக பேயாகப் பறக்கிறியே!’’ என்று திட்டினார்.

 

நாவிதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது, ‘’ராஜா, மன்னித்துவிடுங்கள், புதையல் கிடைத்ததை உங்களிடம் சொல்லவில்லை. மன்னித்துவிடுங்கள். வீட்டுக்கு ஓடிப்போய் கொண்டுவந்து 7 ஜாடி தங்கத்தையும் ஒப்படைத்துவிடுகிறேன் என்றான் நாவிதன். ராஜாவோ, சிரித்துக் கொண்டே, ‘’அந்த ஏழு ஜாடி தங்கத்தை இங்கே கொண்டுவந்து விடாதே. ஓடிப்போய் மரத்துக்கு அடியில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்து விடு’’ என்றார்.

நிறையாத ஏழாவது ஜாடி என்பது மனிதனின் பேராசையைக் குறிக்கும். அது எப்போதுமே நிறையாதது. அதுதான் வள்ளுவர் சொன்ன ‘பேய் காத்த செல்வம்’. ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொன்ன இக்கதை, நாடு முழுதும் நிலவிய கதை. அதைத் தமிழ்நாட்டோரும் அறிந்திருந்தனர். வள்ளுவன் இதை

‘’அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து’’ (குறள் 565)—என்றார்.

பொருள்: மக்களால் எளிதில் காண முடியாத, கோபம் கொண்ட மன்னனிடம் இருக்கும் செல்வம், பேய் காத்த செல்வம் போலப் பயன்படாது.

ஆசைத் தீயை அணைப்போம்; அமைதியாக, இன்பமாக வாழ்வோம்.

–subham–

 

The above story is from my old post —வள்ளுவன் சொன்ன சுவையான கதைகள்; posted on 18 July 2012

Tiruvalluvar statue in London | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/tiruvalluvar-statue-in-london/

 

மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடிதங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது?

 

இதம் ந மம | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/இதம்-ந-மம/

 

31 Oct 2016 – இந்த,” இதம் ந மம” ( என்னுடையது அல்ல) என்பது புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற மன்னர் பாடிய பாட்டிலும் …

 

 

–subham–

 

 

 

 

போர்ச்சுகல்லில் யோகா பரவுகிறது! (Post No.4027)

Written by London Swaminathan
Date: 26 June 2017
Time uploaded in London- 21-16
Post No. 4027

 
Pictures shown here are taken  by me in Lisbon, Portugal on 25th June 2017; They are taught Yoga by a genuine swamiji Sri Amrta Suryananda Maharaja.

 

ஐரோப்பாவில் பல நாடுகளில் யோகசனப் பள்ளிகள் இருந்தாலும் போர்ச்சுகல் நாட்டில் சீராக , முறையாக யோகாசனம் பரவுவதை நேரில் கண்டேன். நாங்கள் ஆறு பேர் லண்டனிலிருந்து புறப்பட்டு போர்ச்சுகல் நாட்டின் தலை நகரானன லிஸ்பனில் நடந்த ஐரோப்பிய ஹிந்து ஃபோரம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றோம் (Hindu Forum of Europe AGM in Lisbon) . எல்லாம் அவரவர் செலவு. சொந்தப் பணத்தைப் போட்டுச் சென்றோம். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு நாள் போர்ச்சுகீஸிய யோகா பெடெரேஷனின் கூட்டம், யோகா பயிற்சி, இந்தியப் பிரதமரின்  போர்ச்சுகீசிய விஜயம் ஆகியன இருந்ததால் கூடவே தங்க ஏற்பாடுகள் செய்தோம். அந்த இரண்டு நாட்களுக்கான சாப்பாடு, தங்குமிடம் எல்லாவற்றையும் அந்த யோகா அமைப்பே எங்களுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தது.

 

அட, நம்மிடம் ஏதோ எதையோ எதிர்பார்த்துதானே எல்லோரும் ‘இலவசங்களை’ அள்ளி வீசுகிறார்கள்; இதுவும் அப்படித்தான் என்று மனதில் எங்கோ ஒரு மூலையில் கொஞ்சம் சம்சயம் (Doubt) இருந்தது. ஆனால் இந்த ஐயப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறியும்படி, எங்கள் ஒவ்வொருவரையும் யோகா பெடெரேஷன் தொண்டர்களே வரவேற்றனர். நாங்கள் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு விமானத்தில் தரை இறங்கிய போதிலும் ஒவ்வொருவரையும் தனித்தனி தொண்டர் வரவேற்றார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஒருவர்  வந்தார்.    அவர் ஸ்ப்ரெட் ஷீட்ட் (Spread sheet) வைத்துக்கொண்டு சரி பார்த்தார். இதை எல்லாம் பார்த்தவுடன் இந்த பெடெரேஷன் நல்ல திட்டமிட்டு இயங்கும் (organised group) ஒரு குழு என்று தெரிய வந்தது. எல்லோரும் தங்களை சுவாமிஜி அனுப்பியதாக சொல்லிக் கொண்டனர். யார் அந்த சுவாமிஜி என்று கேட்டவுடன், போர்ச்சுகீசிய ஆக்ஸெண்டில் accent சூர்யா நண்டா மஹா ராஜா என்றனர்.

ஹிந்து போரம்  (Hindu Forum) கூட்டம் முடிந்த மறு நாளன்றுதான் அந்த சூர்யாநந்தா மஹாராஜாவைப் பார்த்தோம். எளிய தோற்றம்; எல்லோருடனும் அவரே வந்து பழகினார். எங்களை வரவேற்றவர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் ஆனால் பெயர்கள் எல்லாம் இந்துப் பெயர்கள்!

 

ஹிந்து போரம் முடிந்த மறுநாளன்று யோகா பெடெரேஷனின் முதல் நாள் கூட்டம்  பலகலைக் கழக மண்டபத்தில் நடந்தது அப்பொழுதுதான் நாங்கள் எல்லோரும் சுவாமிஜிக்கு வணக்கம் சொன்னோம். ஆனால் பிரதர் நரேந்திர மோடி, லிஸ்பன் நகரிலுள்ள புகழ்மிகு ராதாகிருஷ்ணா கோவிலுக்கு வரவிருந்ததால் மஹாநாட்டைத் துவக்கி வைத்துவிட்டு சுவாமிஜி  சென்றுவிட்டார். பின்னர்தான் தெரிந்தது; இதற்காகவே அவர் சீடர்களை, இரண்டு அணிகளாகப் பிரித்து மோடி வரவேற்புக்கு ஒருகுழுவை அனுப்பி இருந்தார் என்பது. எல்லா இடங்களிலும் சத் சங்கம், நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுடன் துவங்கியது.

 

சுவாமி அம்ருத சூர்யாநந்த மஹராஜாவும் அவரது சீடர்களும் சொன்ன விஷயங்களைச் சுருக்கமாகத் தருகிறேன்; அடுத்த கட்டுரையில் கூட்டத்தில் பேசியோர் தந்த சுவையான விஷயங்களைத் தருகிறேன்

 

2011 ஆம் ஆண்டில் ஒரு யோகா மஹாநாட்டுக்காக இவர் பெங்களூரிலுள்ள பண்டிட் ரவி சங்கரின் ஆர்ட் ஆப் லிவிங் Art of Living அமைப்பின் உதவியைக் கேட்டவுடனேயே அவர் தயக்கமினிறி இடம் கொடுத்தார். அங்கே பாபா ராம்தேவ் மற்றும் புகழ்பெற்ற யோகா குருக்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். அம்ருத சூர்யாநந்தா முன்வைத்த சர்வதேச யோகா தினத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதை ஐ.நா. சபை ஏற்காவிட்டாலும் அதைக் கொண்டாடுவோம் என்று தீர்மானித்தனர். பின்னர் நல்ல வேளையாக நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி ஏற்பட்டதால் அது உலகம் முழுதும் பரவியது. இன்று உலகின் முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது

 

போர்ச்சுகல்லில் பள்ளிக்கூடங்களிலும் யோகா சொல்லித் தரப்படுகிறது. மறு நாள் யோகா காட்சி அணிவகுப்புக்கு வந்த அனைத்து அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும், சர்வ மதத் தலைவர்களும் யோகா பயிற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் சுவாமிஜி மீது வைத்திருக்கும் மதிப்பும் நல்லுறவும் அவர்களுடைய பேச்சிலிருந்தே தெரிந்தது.

 

ஆயிரம் பேர் யோகாசன அணிவகுப்பு, பயிற்சி செய்து காட்டினர். 40 பேர் ஹார்மோனியம் வாசித்தனர். அதற்குப் பின்னர் நூறு பேர் பல்வேறு வாத்தியங்களில் விருந்து அளித்தனர்.சிறுவர்கள், மேடையில் ஏறி யோகா பயிற்சி செய்தனர்.

 

கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் பெண்மணி நந்தினி சிக்லா போர்ச்சுகல்லில் இந்திய தூதராக உள்ளர் அவர் யோகாசனம்  செய்வதற்காகவே அதற்குரிய உடையில் வந்தார். மேடை ஏறி முழங்கிய போதும் இன்று நான் தூதராகஇன்றி யோகாசனம் செய்யும் சீடனாக வந்தேன் என்று சொல்லி யோகாசனத்திலும் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.

 

யோகா ஆபத்து!

முதல் நாள் நாங்கள் நடத்திய ஹிந்து போரம் கூட்டத்தில் நெதர்லாந்து பிரதி நிதி ராட்ஜ் பாண்டோ யோகாசனத்தையும் இந்து மதத்தையும் பிரிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கினார். இது பற்றி தான்நடத்திய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட் டார். எல்லோரும் யோகாசனம் என்ற பெயரைச் சொல்லி யோகா பியர் Yoga Beer, யோகா குஸ்தி சண்டை Yoga Wrestling , யோகா பாடி பில்டிங் Yoga Body Building என்பன வெல்லாம் நடத்துகின்றனர். இது பல கோடி டாலர் குவிக்கும் தொழில் என்பதால் எல்லோரும் இதில் இறங்கிவிட்டனர். யோகத்துக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பு இல்லை; இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று பிதற்றத் துவங்கி விட்டனர். இந்து மதத்தில் பதஞ்சலி அவர்களோவெனில்  எட்டு வித கட்டுப்பாடுகள் உடையவர்கள்தான் இதைச் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட மனக் கட்டுப்பாடோ, ஐம்புலக் கட்டுப்பாடோ இல்லாமல் யோகா  என்று யாராவது கற்றுக் கொடுத்தால் அது சர்கஸ் வித்தை அல்லது ஜிம்னாஸ்டிக்ஸ் Gymnastics தான் என்றார். ஆகவே யோகம் இந்து மதத்தினுடையது; அதில் கட்டுப்பாடுகள் உண்டு; அப்படித் தர்மத்தின் பிண்ணனி இல்லாமல் யோகா சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றார்.

 

எனது பேச்சு

நானும் அவரை ஆதரித்துப் பேசினேன். தர்மம் அல்லது உற்கட்டுப்பாடு- மனக் கட்டுப்பாடு இல்லாமல் யோகப் பயிற்சி செய்தால், அல்லது கற்றுக் கொடுத்தால் விரைவில் செய்திப் பத்திரிக்கைகளில் யோகா கொலை, யோகா கற்பழிப்பு, யோகா தற்கொலை, யோகா வழிப்பறி என்றெல்லாம் செய்திகள் வரத் துவங்கி விடும். யோகம் என்பது இந்துக்களுடையதே என்று காட்ட வேதங்களிலும் சிந்து சமவெளி முத்திரைகளிலும் சான்றுகள் உள்ளன என்றேன்

 

இன்று லண்டனில் ஆண்டுதோரும் பிரம்மாண்டமான யோகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அங்கே வெள்ளைக்காரர்கள் ஏராளமான ஸ்டால்கள் Stalls வைக்கின்றனர், வெள்ளைக்காரர்கள் ஏராளமான யோகா பத்திரிக்கைகள் நடத்துகின்றனர். அசைவ உணவு சாப்பிடுவோர், குடிகாரர்கள் கூட அதைச் செய்துகொண்டே யோகாசனம் செய்கின்றனர். இதையெல்லாம் நீக்கி யம , நியமம் என்னும் கட்டுப்பாடுகளுடன் செய்வதே ‘யோகம்’ ‘ஆசனம்’ என்பதை இந்துக்கள் உலகிற்கு பறை அறிவிக்க வேண்டும் என்றேன்.

 

–சுபம்—

 

 

 

லண்டனில் தமிழ் வளர்ந்த கதை! (Post No.4015)

Written by London Swaminathan
Date: 19 June 2017
Time uploaded in London- 14-39
Post No. 4015
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

தமிழ்  வாய்மொழி வரலாறு திட்டம்

 

லண்டனில் மித்ரசேவா (MITRASEVA) என்ற அமைப்பு முதியோருக்காக — குறிப்பாக தென் இந்தியாவில் இருந்து வந்த முதியோருக்காக– துவக்கப்பட்டது. அதனுடைய ஆண்டு விழா 17 ஜூன் 2017 சனிக்கிழமை அன்று லண்டனில் நடந்தது. அதில் என்னுடைய நிதி குவிப்பு அறப்பணிகள் பற்றிப் பேச அழைத்திருந்தனர்.

 

லண்டனில் நான் கடந்த 25 ஆண்டுகளில் லண்டன் சத் சங்கம் (London Sath Sangam) , சவுத் இந்தியன் சொசைட்டி (South Indian Society) , தமிழ் ஹெரிட்டேஜ் பவுண்டேஷன் (தமிழ் மரபு அறக்கட்டளை Tamil Heritage Foundation) , உலக இந்து மஹா சங்கம், பாரதீய வித்யா பவன் , லண்டன் தமிழ் சங்கம், சிந்தி மந்திர் (Sindhi Mandhir), Tamil and Malayalee Health Advocacy Project முதலிய பல அமைப்புகளுக்கு இரண்டு லட்சம் பவுண்களுக்கு மேலாக நிதி சேர்த்ததையும் அந்த நிதி எந்த அமைப்புகளால் கொடுக்கப்பட்டன என்பதையும் சொன்னேன் (எனது ஆங்கிலக் கட்டுரையில் விரிவாகக் கொடுத்துள்ளேன்; ஏனெனில் என்னை ஆங்கிலத்தில் பேச அழைத்திருந்தனர்)

 

 

அந்தக் கூட்டத்தில் நான் தமிழர்களின் வாய்மொழி வரலாறு (Tamil Oral History Project) பற்றி வெளியிட்ட சி.டி (Compact Disc) . நாங்கள் வெளியிட்ட கம்யூனிட்டி நியூஸ்லெட்டர் (Community Newsletter) முதலியவற்றையும் காட்டினேன். அதில் வாய்மொழி வரலாற்று விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறேன். இந்த சி.டி. லண்டனிலுள்ள லைப்ரரிகளுக்கு அனுப்பப்பட்டது. பேட்டி கொடுத்த 30 பேருக்கும் பேட்டி எடுத்த 30 பேருக்கும் அனுப்பப்பட்டது. இது எதிர்கால ஆராய்ச்சியாளருக்கு உதவும்.

25 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்த தமிழர்களுக்கு என்ன பிரச்சனைகள் இருந்தன, அவர்கள் அதையும் மீறி எப்படி ஆடலையும் பாடலையும் நாடகத்தையும் வளர்த்தனர் என்பதை கேள்விகள் மூலம் வரவழைத்து ரிகார்ட் செய்தோம் ஒவ்வொரு பேட்டியும்  20 முதல் 40 நிமிடங்கள்– அதன் சுருக்கம் மட்டும்தான் இந்த C.D. யில் இருக்கின்றது.

 

ஸி.டி.யைத் தயாரிக்கும் பணியை திருமதி நிர்மலா ராஜு செவ்வனே செய்து கொடுத்தார். இதில் பேட்டி கொடுத்த லண்டன் கலைஞர்களின் பட்டியல் இதோ:

 

1.திருமதி பிரேமலீலா கணேசன், வாய்ப்பாட்டு, மற்றும் வீணை

2.திருமதி சரோஜினி சுந்தரேசன், வாய்ப்பாட்டு

3,திருமதி கோகிலா தங்கராசா வாய்ப்பாட்டு

4.திருமதி பத்மினி குணசீலன், நடனம்

5.திருமதி சுகிர்தலா கடாட்சம், வாய்ப்பாட்டு, மற்றும் வயலின்

 

6.திருமதி விஜயாம்பிகை இந்திரகுமார், நடனம்

7.திரு சத்திய மூர்த்தி, மெல்லிசைக் கலைஞர்

8.திருமதி சீதா வெங்கட்  ராமன்   , வாய்ப்பாட்டு, மற்றும் நாடகம்

9.திரு உமேஷ், மெல்லிசைக் கலைஞர்

10.திரு.கோதண்டபாணி, வயலின்

11.டாக்டர் முசாபர் , மெல்லிசை

12.திரு. பாலா ரவி, கவிஞர்

13.திரு முரளி, நாடகம்

14.திரு முத்துகுமார் சிவ ராஜா, மிருதங்கம்

15.திரு. பி.கே. ராமகிருஷ்ணன், நாடகம்

16.திருமதி லதா மூர்த்தி, நாடகம்

17.திருமதி துஷ்யந்தி தியாகராஜா   , நடனம்

18.திரு.பாலேந்திரா , நாடகம்

19.திருமதி கலா யோகராஜா, வாய்ப்பாட்டு

20.திருமதி சரஸ்வதி பாக்கியராஜா, வயலின்

21.திரு. உன்னி கிருஷ்ணன், நடனம்

22.திருமதி. கீதா ஸ்ரீஇதர், நடனம்

  1. திருமதி பவித்ரா மகேஷ், வாய்ப்பாட்டு மற்றும் வீணை
  2. திருமதி ஹரிணி ரகு, வாய்ப்பாட்டு

25.திருமதி. அன்னபூரணி சத்தியமூர்த்தி, நடனம்

  1. திரு காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மிருதங்கம்

27.திருமதி லக்ஷ்மி ஜயன், வாய்ப்பாட்டு மற்றும் வயலின்

28.திரு மாணிக்கம் யோகேஸ்வரன், வாய்ப் பாட்டு

  1. திருமதி சிவ சக்தி சிவநேசன், வாய்ப்பாட்டு மற்றும் வீணை
  2. திருமதி புஷ்கலா கோபால், நடனம்

நிதி வாங்கிய அமைப்பு- லண்டன் சத் சங்கம் (செயலர், சந்தானம் சுவாமிநாதன்)

நிதி கொடுத்த அமைப்பு- கலொஸ்த் குல்பெங்கியன் பவுண்டேஷன்

 

Fund Received by London Sath Sangam

Fund Given by Calouste Gulbenkian Foundation for Tamil Oral History Project.

Year 2004

 

—Subham–

மறைந்திருக்கும் ஆற்றல் (Post No.4008)

Written by S NAGARAJAN

 

Date: 17 June 2017

 

Time uploaded in London:-  6-22  am

 

 

Post No.4008

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

யோகிகளின் ஆற்றல்

 

மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின் புத்தகம் – 1

 

ச.நாகராஜன்

 

நான்கு மாதங்களில் பதினொன்று பதிப்புகள் கண்ட அபூர்வ புத்தகம் லண்டனைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கானானின் ‘தி இன்விஸிபிள் இன்ஃப்ளூயன்ஸ்” (The Invisible Influence: Alexander Cannon ) என்னும் புத்தகம்.

 

1933ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது வெளியிடப்பட்டது. . 1934ஆம் ஆண்டு ஜனவரிக்குள்  11 பதிப்புகளைக் கண்டது.

ஹிந்து யோகிகளின் ஆற்றலை தனது நீண்ட பயணத்தின் போது நேரடியாகக் கண்டார் டாக்டர் கானான்.

அவர் தனது முன்னுரையில் கூறுகின்ற சில கருத்துக்களை அப்படியே இங்கு காண்போம்.

 

  • Thisbook has been written to prove that there exists in this mighty world in which we live, an Invisible Influence that rules our daily lives. That Influence can be for good or for evil, according to our desire.

 

இந்தப் புத்தகம் நாம் வாழுகின்ற பிரம்மாண்டமான உலகில் நமது அன்றாட வாழ்க்கையில் மறைந்திருக்கும் ஆற்றால் ஒன்று நம்மை ஆள்கிறது. அது நம்முடைய விருப்பத்திற்கேற்றபடி நலல்தாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கும்.

 

 

  • The withering of the fig tree was no imagination of the historical writers of old, but is an art practised to-day in the outlying villages of real India by the Yogi; who, after attaining powers over the lives of plants and trees, learns the psychic rules that govern the lives of animals and, having perfected himself to these, finally turns his unceasing attention in the mastery of human beings for the benefit of mankind.

 

அத்தி மரம் பட்டுப் போவது பழைய வரலாற்று ஆசிரியர்களின் கற்பனையில் தோன்றிய ஒன்று அல்ல; இந்தியாவில் யோகிகளால் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமே. செடிகள் மரங்கள் ஆகியவற்றின் மீது ஆற்றலை பெற்றவுடன், மிருகங்களின் வாழ்க்கையில் உள்ள சைக்கிக் விதிகளைக் கற்று அதைப் பயன்படுத்தும் வல்லுநராகி கடைசியில்  மனித குலத்தின் நன்மைக்காக மனிதர்களின் மீது அவர்களை வசப்படுத்தும் இடையறா கவனத்தின் மீது அவர் பார்வை பதிகிறது

 

 

  • In delving into the knowledge of the hitherto unknown, may I remind you to “Render unto Caesar the things that are Caesar’s, and unto God the things that are of God.”

 

இதுவரை தெரியாதவற்றைப் பற்றிய விஷயத்தில் மூழ்கும் போது, “சீஸருக்குரியதை சீஸருக்கு விட்டு விடுங்கள், கடவுளுக்குரிய விஷயங்களை கடவுளிடம் விட்டு விடுங்கள் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விழைகிறேன்.

 

 

முன்னுரையின் டாக்டர் கானான் கூறுகின்ற கட்டியமான வசனங்கள் இவை. நூல் முழுவதும் சுவையான சம்பவங்கள் நிறைந்துள்ளன.

 

 

கை ரேகை சாஸ்திரம் உண்மை

 

மந்திரங்கள் மூலம் தீமை விளைவிக்க முடியும். ஆனால் அதை மந்திரங்கள் மூலமாகவே முறியடிக்கவும் முடியும்.

தீமை செய்ய விழைந்தோர் அழிந்து படுவர்.

 

இருந்த இடத்திலிருந்தே இன்னொரு இடத்தில் உள்ளோரை டெலிபதி என்னும் தொலைதூரத் தொடர்பு மூலம் தொடர்பு கொள்ள்லாம் என்பன போன்றவற்றைச் சுவைபடச் சொல்கிறார் டாக்டர் கானான்.

 

இந்த நூல் 168 பக்கங்கள் கொண்டது என்பதால் அனைத்தையும் தமிழில் தருவது இயலாது.

 

நூலின் சில பகுதிகளை மட்டும் மிகவும் சுருக்கமாக அடுத்த ஓரிரு கட்டுரைகளில் காண்போம்.

–Subham–

 

அக்பர் பற்றிய 3 சுவையான சம்பவங்கள் (Post No.3989)

Translated by London Swaminathan

Date: 10 June 2017

Time uploaded in London- 14-58

Post No. 3989

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

contact: swami_48@yahoo.com

ரெவரெண்ட் ஆஸ்பார்ன் மார்டின் என்பவர் 1914 ஆண்டில் ‘இந்தியாவின் கடவுள்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் ஆங்கிலத்தில் தந்துள்ள மூன்று சம்பவங்களைத் தமிழில் தருகிறேன்.

All the three stories are summarised from ‘The Gods of India’ by Rev E Osborn Martin, London, year 1914.

 

 

அக்பர் பூர்வ ஜன்மத்தில் இந்து சந்யாசி!

ஆக்ரா கோட்டையில் முகுந்தா என்பவரின் சிலை உள்ளது. இந்த முகுந்தனின் கதை என்ன வென்றால் அவர் முன் ஜன்மத்தில் ஒரு இந்து சந்யாசி. ஒரு நாள் அவர் பசும்பால் குடிக்கையில் பசுவின் ஒரு முடி (ரோமம்) அவர் வயிற்றுக்குள் சென்றுவிட்டது; பாலை வடிகட்டாமல் குடித்ததால் நேரிட்ட தவறு இது. ஆகவே பிராயச்சித்தமாக ஆக்ரா கோட்டையினை ஒட்டி ஓடும் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார். எவ்வளவோ பெயர்கள் தடுத்தும் தனது தவறுக்கு தனக்குத் தானே தண்டனையும் கொடுத்துக்கொண்டார்.

 

இவர் எவ்வளவுதான் தண்டனை கொடுத்துக் கொண்டாலும், யமனின் கணக்குப்படி, அது போதவில்லை. ஆனாலும் இவர் தவம் செய்த நல்ல சந்யாசி. ஆகவே இவரை அடுத்த ஜன்மத்தில் மொகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியாக– அக்பர் சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார்.

அக்பரிடம் வந்த இந்துப் பேய்!

காலரா, அம்மை முதலிய நோய்கள்  தெய்வக் குற்றங்களால்தான்   வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆகவே நோய் வரும் பருவத்தில், அதைத் தடுக்க பிரார்த்தனை, விழாக்கள் ஆகியன செய்வர். ஆனால், சாதாரண மனிதனை கும்பிடும் வழக்கம் அபூர்வமே; அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இது.

 

பண்டல்கண்ட் பகுதியில் ஒரு ராஜா இருந்தார். அவர் பெயர் வீர சிம்ம தேவன். அவருக்கு இரண்டு புதல்வர்கள்; அவர்களுடைய பெயர்கள் ஹரதர், ஜாஜர். அகபரின் மகன் ஜஹாங்கீர்,  ஹரகரரைக் கொண்டு அபுல் பாசல் என்ற பெரிய இலக்கிய கர்த்தாவைக் கொலை செய்யச் செய்தார். அபுல் பாசல் அக்பரின் அரசவையை அலங்கரித்த எழுத்தாளர். அயினி அக்பரி என்ற பெயரில் அக்பரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர்.

 

காலம் உருண்டோடியது; வீர சிம்மன் இறந்தான்; உடனே இரு புதல்வரில் ஒருவரான ஜாஜர் பதவிக்கு வந்தான். தனது சகோதரன் தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தான். உடனே தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி ஹரதருக்கும் அவனது தோழர்களுக்கும் ஒரு விருந்து வைத்து அதில் விஷத்தைக் கலக்கச் செய்து கொன்று விட்டான். இது நடந்தது கி.பி.1627ல்.

இதற்குச் சில காலத்துக்குப் பின்னர் ஜாஜரின் சகோதரி, இளவரசி கம்சவதிக்குத் திருமணம் நிச்சயமாகியது. அவரது தாய் எல்லோருக்கும் பத்திரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தாள்;

“அட! செத்துப் போன சகோதரனுக்கும் ஒரு பத்திரிக்கை வைக்க மறந்துவிடாதே”– என்று கிண்டல் தொனியில் சொன்னான் ஜாஜர்.

ஆனால் கம்சவதி உண்மையிலேயே ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹரதரின் சமாதிக்குப் போய் புலம்பினாள்

திடீரென்று கல்லறைக்குள்ளிருந்து ஒரு கை நீட்டி அந்தத் திருமணப்  பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு கல்யாணத்துக்கு வருவதாக உறுதியும் கூறியது.

திருமண நாளில் ஹரதர் (பேய்) வந்த அடையாளங்களும் தெரிந்தன. தக்க மரியாதைகளுடன் ஹரதர் வரவேற்கப்பாட்டார். அன்று இரவு அந்தப் பேய் அக்பரின் படுக்கை அறைக்குச் சென்று “எனக்கு ஊர் தோறும் சின்னம் ஏற்படுத்து. உனது நாட்டில் இயற்கை சேதம் ஏதும் வராமல் காப்பேன்” என்று ((பேய்)) உறுதி கூறியது. அதன்படி அக்பர் சாம்ராஜ்யத்தில் பல இடங்களிலும் ஹரதர் ( பேய்க்கு) நினைவுச் சின்னங்கள் எழுப்பபட்டன. இன்றும் கிராம மக்கள் பலரும் அந்த சின்னங்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கதையில் கொஞ்சம் உதைப்பது கால வழுவமைதி ஆகும். அதாவது ஹரதர் இறந்தது 1627 ஆம் ஆண்டில். ஆனால் அக்பரோ அவருக்கு முன்னதாக 1605 ஆண்டில் இறந்தார். ஆகவே பேய் வந்தது அக்பரின் படுக்கை அறையாக இருக்க முடியாது. ஒரு வேளை  ஜஹாங்கீரின் படுக்கை அறையாக இருக்கலாம்.

சூர்ய நமஸ்காரப் பிரியன்!

அக்பரின் மனைவியரில் பலர் இந்துக்கள்; அவருக்கு சர்வ சமய ஒற்றுமையில் ஆர்வம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். அவருக்கு சூரிய நமஸ்காரத்தில் ஆர்வம் ஏற்படவே சூரியனின் 1001 பெயர்களை எழுதி தினமும் படித்து வந்தார் (சூர்ய சஹஸ்ரநாமம்)

 

காலை, நன்பகல், மாலை நள்ளிரவு ஆகியவற்றில் சூரிய தேவனை வழிபட்டார். மக்களும் கும்பிடுவதற்கு வசதியாக 4 காலங்களில் பாண்டு வாத்ய இசையை முழங்கச் செய்தார். அவர் எப்படி தலையில் குட்டிக் கொண்டார், காதைப் பிடித்துக் கொண்டார் என்ற விவரங்களையும் சேர்த்து அபுல்பாசல், தனது அயினி அக்பரி புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்பர் 1605ஆம் ஆண்டில் இறந்தார்.

 

-சுபம்–