சங்கத் தமிழில் நகைச்சுவை

laughter

கட்டுரையை எழுதியவர் :– London Swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1535; தேதி 1 January, 2015.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நகைச் சுவை அதிகமில்லை. ஆனால் பிற்கால இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம். ஆயினும் படித்து ரசிப்பதற்கு ஏராளமான கவிதைகள் உண்டு.

சங்க இலக்கியத்தின் பதினெட்டு (மேல் கணக்கு) நூல்களில் ஒன்றான நற்றிணையில் இருந்து ஒரு பாடல்:

tamil joke2

நற்றிணை

புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி

கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்

பல்கால் அலவன் கொண்டகோள் கூர்ந்து

கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்

இரை தேர் நாரை எய்தி விடுக்கும் (நற்.35)

இந்தியாவுக்கு நாவலந்தீவு (ஜம்பூத்வீபம்) என்று பெயர். தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இந்தப் பெயர் வருகிறது. ஆகவே இது ஒரு பொருத்தமான பாடல்.

ஒரு நாவல் பழம் கீழே விழுந்தது. அதைப் பறக்கும் வண்டுகள் தம் இனத்தைச் சேர்ந்தவை என்று எண்ணி அதைச் சூழ்ந்து நின்றன. அந்தப் பக்கமாக வந்த நண்டு இவை எல்லாம் பழங்கள் என்று நினைத்து அவற்றைக் கவ்வின. உடனே வண்டுகள் அனைத்தும் ரீங்காரம் செய்துகொண்டு பறந்தன. அந்தப் பக்கம் பறந்து வந்த நாரை இதைப் பார்த்து, பெரிய சண்டை சச்சரவு போல இருக்கிறது,  நாம் போய் சமரசம் செய்து வைக்கலாம் என்று போய் சமரசம் செய்தது.

இது ஒரு நல்ல காட்சி. இயற்கையில் நடக்கும் சில நகைச் சுவை மிகு கட்சிகளைக் கண்டு வியந்த அம்மூவனார் பாடிய பாடல் இது.

மேம்போக்காகப் பார்த்தால் இது இயற்கைக் காட்சி பற்றிய பாடல் என்று தோன்றும். ஆனால் இந்தக் காட்சி மூலம் ஒரு செய்தியை மறைமுகமாக உணர்த்துவது சங்கப் புலவர்களின் அகத்துறைப் பாடலில் உள்ள சிறப்பு அமசம் ஆகும். இதை உள்ளூறை உவமம் என்பர்.

இதில் புலவர் அம்மூவனார் கொடுக்கும் செய்தி:– நாவற்கனியாகிய தலைவியை, நாரையாகிய தலைவன் வந்து தடைகளை நீக்கி திருமணம் நடைபெறச் செய்தான்.

எட்டுத் தொகை நூலில் உள்ள அகநானூற்றிலும் இதே போல ஒரு நண்டுக் காதல் பாடல் வருகிறது. அதையும் ஒப்பிட்டு மகிழ்வோம். மதுரை மருதன் இளநாகனார் (380) பாடிய பாடல் இது:–

joke2

அகம் 380 நண்டுக் காதல்

அகலிலை நாவல் உண்துறை உதிர்த்த

கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன்

தாழை வேரளை வீழ்துணைக்கு இடூம்

அலவன் காட்டி நற்பாற்று இதுவென

நினைத்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே

உதுக்காண் தோன்றும் தேரே இன்று

நாமெதிர் கொள்ளா மாயின் தானது

துணிகுவன் போலா நாணுமிக உடையன் (அகம்380)

பொருள்:– உன் ஊர் எது என்று ஒரு பெண்ணை தலைவன் வினவினான். அவன் ஒரு காட்சியைக் காட்டினான் – ஒரு நாவல் பழம் கீழே விழுந்தது. அதை ஒரு ஆண் நண்டு இழுத்துச் சென்று தன் அன்பு மனைவிக்குக் கொடுத்தது. அதை நல்ல நண்டு என்று சொல்லிவிட்டுப் போனான். இதோ பார்! அவனது தேர் மீண்டும் வந்துவிட்டது என்று தலைவியிடம் தோழி கூறினாள்.

humor-6

சுட்ட பழமும் சுடாத பழமும்!

மற்றொரு சுவையான காட்சி பிற்கால இலக்கியத்தில் வருகிறது. தமிழ் மொழி மூலம் ஆன்மீகத்தைப் பரப்பிய அவ்வையார் என்னும் புலவர் முருகன் பால் பேரன்பு கொண்டவர். திரு முருகனோ அவ்வைப் பாட்டியை தமிழ் சொற்கள் மூலமே வெல்ல எண்ணினான். முருகா….. முருகா என்று முக்கி முனகிக் கொண்டு ஒரு நாவல் பழ மரத்துக்கு அடியில் அவ்வையார் உடகார்ந்தார். மேலேயிருந்த முருகன் வேண்டுமென்றே கணைத்து தான் மரத்தின் மீது இருப்பதை உணர்த்தினான். அவனை ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் என்று எண்ணிய அவ்வையார், சிறுவா கொஞ்சம் நல்ல நாவற் பழங்களைப் போடேன் என்றார்.

முருகனோ , பாட்டி! சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்றான். தமிழ் கடலான அவ்வையாரை வியப்புக்குள்ளாக்கியது இந்தக் கேள்வி. மரம் என்ன சமையலா செய்கிறது? அடுப்பா இருக்கிறது? பழத்தைச் ‘’சுட’’ என்று நினைத்தார். அதற்குப் பதில் தெரியாமல், பையா, எனக்குக் கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன் என்று அவர் கெஞ்சவே முருகன் மரத்தின் கிளைகளை உலுக்கினான். பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. அவ்வையார் நல்ல பழுத்த பழங்களை எடுத்து மண்ணை ஊதி ஊதித் தின்னார். என்ன பாட்டி! சுட்ட பழங்களை சாப்பிடுகிறீர்கள் என்று சொன்னபோதுதான் அவருக்குப் புரிந்தது. வாயினால் ஊதி வெப்பக் காற்றால் சுடுவதெலாம் ‘’சுட்ட பழங்கள்’’ என்று.

contact swami_48@yahoo.com

நமது உடலுக்கு ஒன்பது வாசல்! நவத்வார புரி!

7_main_chackra.svg

உடலில் உள்ள சக்ரங்கள் (விக்கிபீடியா படம்)

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1533; தேதி 31 டிசம்பர், 2014.

அதர்வண வேத காலம் முதல் அவ்வையார் காலம் வரை நமது உடலை இந்துக்கள் வருணித்த விதம் ஒரே மாதிரியாக உள்ளது!! இந்த விதமான வருணனைகளை வேறு எந்தப் பண்பாட்டிலும் காண முடியாது. ஆக பாரத நாட்டுப் பழங்குடி மக்கள் “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” – என்பதும் அவர்கள் இதே மண்ணில் தோன்றி இதே மண்ணில் வாழ்ந்தவர்கள் என்பதும் தெரிகிறது.

அவர்கள் வெளி நாட்டு “அறிஞர்கள்” எழுதியது போல வந்தேறு குடிகள் அல்ல, அல்லவே அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என தெள்ளத் தெளிவாகப் பளிச்சிடுகின்றது!

உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (திருமூலர்) – என்று ஆன்றோர்கள் உடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதும், அடைய வேண்டியதை அடைந்தவுடன் அந்தப் பழைய உடலை, பழைய சட்டைக்குச் (வாசாம்ஸி ஜீரணானி—பகவத் கீதை)  சமமாக எண்ணி கழற்றி எறியவும் தயங்கவில்லை!

காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!! என்று பாடி மகிழ்ந்தனர்.

இதோ அதர்வண வேத மந்திரம்:

ஒன்பது வாசல் உடைய இந்த உடலை நன்கு அறிந்தால் உனது சக்தியைப் பெருக்கு; அல்லது உனக்குப் பலன் இல்லை (5-16/9)

பகவத் கீதையில் கண்ண பிரானும் இதையே சொல்லுவார்:

இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)

tirumoolar

திருமூலர் படம்

கடோபநிஷத்திலும், ஸ்வேதஸ்வதார உபநிஷத்திலும் இதே கருத்துகள் உள்ளன. அதர்வண வேத மந்திரம் தொடர்ச்சியாக உபநிஷத் வழியாக கீதை (மஹாபாரதத்தில் உள்ளது) மூலம் பாரதம் மூலம் பரவியது. இதையே மாணிக்க வாசகர் அவரது திருவாசகத்திலும், திருமூலர் அவரது திருமந்திரத்திலும், பட்டினத்தார் அவரது பாடல்களிலும் அவ்வையார் அவரது விநாயகர் அகவலிலும் பாடினர். ஆழ்வார்கள், நாயன்மார்களின் திவ்யப் பிரபந்த தேவாரத்திலும் சித்தர் பாடல்களிலும் இக்கருத்துகள் உள.

ஆதிசங்கரர் மட்டும் விவேக சூடமணியில் இவ்வுடலை அஷ்ட புரி (எட்டு நகரம்) என்பார்.

காளிதாசனும் குமார சம்பவ காவியத்தில் (3-50) பகவத் கீதை என்ன சொன்னதோ அதே கருத்தை எதிரொலிக்கிறார்.

kanchi kovanandi

அதிசயம்: காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்

15-10-1932-ல் சென்னையில் ஆற்றிய உபந்யாசத்தில் காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) கூறிய அதிசயப் பாடல்:

“ ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார் நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று; இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

நவத்வாரே சரீரே அஸ்மின் ஆயு: வசதி சந்ததம்

ஜீவததீ த்யத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

 

அதைப் போலவே பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது”.

—பக்கம் 109, ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற் பாகம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை-1, முதல் பதிப்பு ஆண்டு 1933, இரண்டாம் பதிப்பு 1957

yoga_sukhasana

பட்டினத்தார் பாடல்:

ஒன்பது வாய்த் தோற்பைக்கு ஒருநாளைப் போலவே

அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! – வன் கழுக்கள்

தத்தித் தத்திச் செட்டை தட்டிக்கட்டிப்பிட்டுக்

கத்திக்குத்தித் தின்னக் கண்டு …………

Having witnessed the cruel vultures hop and hop,

Adjust the feathers with their beaks

Tug and tear at the flesh, and eat it

In vociferous gaiety,

You have roamed about to foster always with love

The nine holed leathern bag, alas!

(Tamil: onpathu vaay thorpai…………… Translated by Dr T N Ramamachandran)

திருமூலர் சொல்வது……………….

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்

ஒன்பது நாடி உடையதோர் ஓர் இடம்

ஒன்பது நாடி ஒடுங்க வலார்கட்கு

ஒன்பது காட்சி யிலை பலவாமே (திருமந்திரம் 638)

ஒன்பது துளைகளையுடைய இப்பிண்டமாகிய உடம்பகத்து வீங்காற்று ஒழிந்த ஏனைய ஒன்பது காற்றும் புகும் ஒன்பது நாடிகளையும் ஒடுக்கவல்ல யோகப் பயிற்சி உடையார் வல்லாராவர். அவர்கள் இந்த நாடிகள் சேரும் நாற்சந்தி இடத்தை அருளால் காண்பர். இவர்கள் அகத்தே கேட்கப்படுவது பல்வேறு ஓசைகளாகும்.

ஒன்பது வாசல்கள் யாவை?

இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரண்டு துளைகள், வாய், மல ஜலம் கழிக்கும் இரு உறுப்புகள் ஆக ஒன்பது துளைகள்.

திருவாசகம் எனும் தேனில் மாணிக்கவாசகர் சொல்வது,

அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி

புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய … (சிவபுராணம்)

tamil-poetess-avvaiyar-

சங்க காலம் முதல் ஆறு பேர், — அவ்வையார் —- என்னும் பெயரில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிவுரைகள் பகன்றனர். அவர்களில் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அவ்வையார் பாடிய விநாயகர் அகவலில்,

தலம் ஒரு நன்கும் தந்து எனக்கருளி

மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறாதாரத்து அங்கிசை நிலையும் ……..

இவ்வாறு நூற்றுக் கணக்கான இடங்களில் ஒன்பது வாயில் குடில் பற்றி இமயம் முதல் குமரி வரை நம்மவர் பாடியது, இந்த நாடு ஏக பாரதம் என்பதையும், சொல் செயல் சிந்தனையால் இணைந்த ஒரே இனம் இது என்பதையும், இவர்களே இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்பதையும் ஐயமற விளக்கும்.

சுபம்- அனைவர்க்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக –

contact swami_48@yahoo.com

தமிழ் விந்தை-20: மாலைமாற்று – 1

malaimatru

தமிழ் என்னும் விந்தை! -20

மாலைமாற்று – 1

கட்டுரையை எழுதியவர் :– S.Nagarajan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1532; தேதி 31 டிசம்பர், 2014.

By ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் காவ்யாதர்சம் மிகச் சிறந்த நூலாகக் கொண்டாடப்படுகிறது. இதை இயற்றியவர் பெரும் புகழ் பெற்ற தண்டி. இதே பெயரைக் கொண்ட தமிழ்க் கவிஞரான தண்டியும் தண்டியலங்காரம் என்னும் அழகிய இலக்கண நூல் ஒன்றை யாத்துள்ளார்.

நுட்பமான பல விஷயங்களை இந்நூலில் காண முடிகிறது. இதை இயற்றிய தண்டி கம்பனின் மகனான அம்பிகாபதியின் புதல்வர் எனக் கருதப்படுகிறார். இவரது காலம் 12ஆம் நூற்றாண்டு. வடமொழியும் தென்மொழியும் நன்கு கற்ற தண்டி தனது அலங்கார நூலில் சுமார் 35 அணிகளின் இலக்கணத்தைச் சிறப்பாகத் தருகிறார். அத்துடன் சுமார் இருபது சித்திர கவிகளையும் சித்தரிக்கிறார்., அதில் கோமூத்திரி, கூடசதுக்கம்,சருப்பதோபத்திரம் ஆகியவற்றை விளக்கும் செய்யுள்களையும் காணலாம்.

ஏற்கனவே இத்தொடரில் பரிதிமால்கலைஞரின் விளக்கமாக நாம் பார்த்துள்ள கோமூத்திரி, கூடசதுக்கம்,சருப்பதோபத்திரம் ஆகியவற்றின் உதாரணச் செய்யுள்கள் தண்டியலங்காரத்தில் மேற்கோள் காட்டப்பட்டவையே!

 

சருப்பதோபத்திரம் (அத்தியாயம் 12-இல் தரப்பட்டுள்ள “மாவா நீதா தாநீ வாமா’ என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)

 

கூடசதுக்கம் (அத்தியாயம் 16இல் தரப்பட்டுள்ள புகைத்தகைச் சொற்படைக் கைக்கத என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)

 

 

கோமூத்திரி (அத்தியாயம் 18இல் தரப்பட்ட பருவ மாகவி தோகன மாலையே என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)

ஆகிய இவை தண்டியலங்காரம் தரும் செய்யுள்கள்.

மாலைமாற்று

ஒரு செய்யுளை கடைசி முதலாகக் கொண்டு படித்தாலும் அதே செய்யுள் வந்தால் அதுவே மாலைமாற்று எனப்படும்.

தண்டியலங்காரம் தரும் மூன்று உதாரணச் செய்யுள்கள் வருமாறு:-

“நீ வாத மாதவா தாமோக ராகமோ                                        தாவாத மாதவா நீ”

 

இதன் பொருள்: நீ வாத மாதவா – நீங்காத பெரும் தவம் உடையோனே!    தா மோக ராகமோ  தாவாது – வலிய மயக்க வேட்கையோ நீங்காது      அம் மாது அவா நீ – (ஆதலால்) அழகிய பெண்ணினுடைய ஆசையினை நீக்கி அருள்வாயாக! (அவள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக)

“வாயாயா நீகாவா யாதாமா தாமாதா                           யாவாகா நீயாயா வா

                         

வாயா யா – எமக்கு வாயாதன (கிடையாதவை) யாவை?

நீ காவாய் – நீ எம்மைக் காத்து அருள் புரிவாய்!

யாதாம்  – (இன்றேல்) யாதாகும்?

மாது ஆம் மா தா – இம்மாது பெரும் வருத்தம் உறுவள்

யா ஆகா – (நீ விரும்பினால்) எவை முடியாதன?

ஆயா நீ வா – யான் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து நீ வருக

தலைவியின் ஆற்றாமையைப் பாங்கி தலைவனுக்கு உணர்த்தியது.

“பூவாளை நாறுநீ பூமேக லோகமே                                      பூ நீறு நாளைவா பூ”

 

பூவாளை நாறும் நீ – இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து புலால் நாற்றம் வீசும் நீ

பூ லோகம் மேகமே – பூவையும் பொன்னையும் மழையாகச் சொரியும் மேகமோ!

பூ நீறு நாளை வா – பூவும் திருநீறும் தரித்து நாளைய தினம் வருவாய்

பூ – இவள் இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள்

பூ மேகம் , லோக மேகம் என்று தனித் தனியாகக் கூட்டுக. பூவைச் சொரியும் மேகன் ‘புட்கலாவருத்தம்’ என்றும் பொன்னைச் சொரியும் மேகம் ‘சங்காரித்தம்’ என்றும் கூறப்படும்.

மணத்தல் – கலத்தல்

பூப்புனைதல் புலால் நாற்றம் நீங்குதற்கும், திருநீறு புனைதல் குற்றம் நீங்கிப் பரிசுத்தம் அடைவதற்குமாம்.

பரத்தையர் சேரி சென்று மீண்ட தலைவனுக்கு பாங்கி வாயிலாக மறுத்து உரைத்ததாம் இந்தச் செய்யுள்.

பரிதிமால்கலைஞர் தண்டியலங்காரம் தரும் மூன்று செய்யுள்களுக்கும் இப்படி விளக்கம் அளித்துள்ளார்.

மாலைமாற்றைச் சித்திரமாகப் பார்த்தால் வரும் மாலை இது:-

Contact swami_48@yahoo.com

***********************

அதர்வ வேத மூலிகை மர்மம்! ஜங்கிடா மூலிகை!

atharva-veda-8

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1530; தேதி 30 டிசம்பர், 2014.

நான்கு வேதங்களில் மிகவும் மர்மம் நிறைந்தது அதர்வ வேதம். ஏனெனில் ஆதிகால மருத்துவ, விஞ்ஞான உண்மைகள், மாய மந்திர பில்லி சூனியங்கள் நிறைந்தது இந்த வேதம். துரதிருஷ்டவசமாக இதில் குறிப்பிடப்படும் மூலிகைகள், தாயத்துக்கள் ஆகியன வழக்கத்தில் இருந்து போய்விட்டதால் என்ன என்றே தெரியவில்லை. ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வரும் சோமக் கொடி பற்றியே நமக்கு தெரியவில்லை. 3000 ஆண்டுகளுக்கு முந்தைய ஜில்காமேஷ் (சுமேரிய/ பாபிலோனிய) காவியத்தைப் படித்துப் புரிந்து கொண்டுவிடலாம். அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களை அறிவது கடினம். நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்க முடியும்.

ரிக்வேதத்தில் 107 மூலிகை பற்றி வரும் பாடல் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் அதில் 107 மூலிகைகள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. நம் வசமுள்ள சரக, சுஸ்ருத சம்ஹிதைகளையும், தமிழ் சித்த மருத்துவ நூல்களையும் வேதங்களையும் வைத்துக்கொண்டு கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்து ஆராய வேண்டும்.

சோம பானத்தைப் போதையூட்டும் மருந்து என்று வெளிநாட்டுக்காரர்கள் பிதற்றியுள்ளனர். ஆனால் பாண்டியர் தமிழ் கல்வெட்டோ அதை மனோசுத்த மருந்து என்கிறது. நம்மவர்கள் கீதை, குறள், ராமாயணம், மஹாபாரதம் எதையுமே படிக்காமல், சங்க இலக்கிய 30,000 வரிகளைப் படிக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற பெயரில் பல அபத்தங்களை எழுதி வருவது வருந்ததக்கது. முதலில் எல்லாவற்றையும் படிக்க வேண்டும். வெளி நாட்டுக்காரர் சொல்வதைவிட்டுவிட்டு, நம்மவர் அது பற்றி என்ன சொன்னார்கள் என்று முதலில் அறிய வேண்டும்; நம்ப வேண்டும். அப்படிச் செய்தால் புரியாத புதிர்கள் விடுபடும். மர்மங்கள் துலங்கும்!

atharva__veda__samhita_

இதோ ஜங்கிடா மர்மங்கள்:-

ஜங்கிடா என்பது ஒரு மூலிகை என்றும் பல வியாதிகளுக்குக் கைகண்ட மருந்து என்றும் கீத், மக்டொனல் இருவரும் எழுதிய வேதப் பொருளகராதி (வேதிக் இண்டெக்ஸ்) கூறுகிறது. அவர்களே இது என்ன தாவரம் என்று தெரியவில்லை என்று ஒப்புகொண்டுவிட்டு கௌசிக சூத்திரத்தில் வரும் குறிப்பில் இதை காலண்ட் என்பவர் “டெர்மினாலியா அர்ஜுனா” — என்ற தாவரம் என்று சொல்வதாகவும் குறித்துள்ளனர். டெர்மினாலியா அர்ஜுனா என்பது மருத மரம் ஆக்கும்.

மூன்று மருத மரங்களும் மூன்று மாணிக்கங்களும் என்ற எனது கட்டுரையில், ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜுனம்), திருவிடை மருதூர் (மத்யார்ஜுனம்), திருப்புடைமருதூர் (புடார்ஜுனம்) ஆகிய தலங்களில் உள்ள மருத மரங்கள் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

ஆனால் தேவி சந்த் என்பவர் எழுதிய அதர்வண வேத புத்தகத்தில் ஒரு இடத்தில் ஜங்கிடா என்பது கடவுளைக் குறிக்கும் என்று எழுதிவிட்டு பிற இடங்களில் மூலிகை என்று மொழி பெயர்க்கிறார். சாயணர் என்ற  பெரிய மகான் தான் 700 வருடங்களுக்கு முன் துணிந்து வேதங்களுக்குப் பொருள் எழுதினார். அவர் இந்த ஜங்கிடா என்பது காசி மாநகரத்தில் உள்ள ஒரு மரம் என்கிறார்.

Terminalia_arjuna-1

மருத மரம் (விக்கிபீடியா படம்)

இது இருதய நோய்கள், நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்களைக் குணப்படுத்தும் என்று தெரிகிறது. மருத மரம் குறித்து வெளியான பல மருத்துவ நிபுணர்களின் கட்டுரைகள் இது இருதய மற்றும் ரத்த நாளம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் என்று எழுதியுள்ளனர். ஆயினும் அவர்களுடைய ஆய்வுகள் முடிவானவை அல்ல. எதிரும் புதிருமாக முடிவுகள் வந்தால் மருத்துவ உலகம் அதை ஏற்காது. வேறு சிலர் ஜங்கிடா என்பதை வேறு சில மூலிகைகளுடன் தொடர்புபடுத்திக் கட்டுரை எழுதியுள்ளனர்.

வேதங்களில் குறிப்பிடப்படும் நூற்றுக்கணக்கான மூலிகைகள், நோய்களின் பெயர்கள் எல்லாம் ஊகத்தின் பெயரிலேயே எழுதப்பட்டுள்ளதால் யார் சொல்வதையும் உண்மை என்றோ தவறு என்றோ சொல்ல முடியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதையுமே கேள்விக்குறியாக தொக்கி நிற்கும் வகையில் எழுதிவிட்டு சோம பானம் என்பது மட்டும் என்ன என்று “கண்டுபிடித்துவிட்டதாக” சில வெளி நாட்டினரும் அதைக் கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் சொல்லும் நம்மூர் பகுத்தறிவுகளும் நகைப்புக்குரியவர்கள் என்பது வேதங்களைப் படித்தோர் அறிவர். இனம் இனத்தோடு சேரும். மது, மாது, மாமிசம், போதைப் பொருளில் மூழ்கிக் கிடக்கும் வெளிநாட்டினருக்கு நம் கலாசாரம் எப்படிப் புரியும்? மாக்ஸ்முல்லர் போன்ற பலர் இந்தியாவுக்கு வரமலேயே நம் வேதங்கள் பற்றி எழுதினர்!! நியுயார்க்கிற்குப் போகாமலேயே மேலூர் கொட்டாம்பட்டி முனிசாமி “உலகிலேயே உயரமான கட்டிடங்கள்” என்று புத்தகம் வெளியிட்டால் அதை தமாஷ் இலக்கிய வகையில் சேர்க்கலாம் அல்லவா!!

terminalia arjuna

மருத மரம்

மேலும் இந்தியா வந்த வெளிநாட்டினருக்கும் உதவியோர் அரைகுறை ஆங்கிலம், அரைகுறை வேத சம்ஸ்கிருதம் அறிந்தவர்களே. ஆகையால் அவர்கள் மொழிபெயர்ப்பும் அரைகுறையே. ரமணர், ராம கிருஷ்ணர், காஞ்சி மஹா சுவாமிகள், சிருங்கேரிப் பெரியவர் போன்ற உத்தமோத்தமர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நம்பினால் போதும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேதங்களை உள்ளது உள்ளபடி காப்பது நமது கடமை. மனித இனத்தின் முதல் புத்தகம் அது. சுமேரிய எகிப்திய இலக்கியங்களை எல்லாம் படித்தோர்கூட வேதங்களை ஊகிக்கத்தான் முடிகிறது, பொருள் சொல்ல முடியவில்லை. ஆயினும் வேதங்களால் பலன் இல்லாமல் இல்லை.

டெலிவிஷனும். மொபைல் போனும் எப்படிச் செயல்படுகிறது என்பது நமக்குத் தெரியாது ஆயினும் அவைகளைப் பயன்படுத்திப் பயன் அடைகிறோம். இது போல வேதங்களையும் நம்பிக்கையுடன் ஓதினால் பலன் உண்டு.

Flowers_with_Sykes's_warbler_I_IMG_1880

மருத மரம்

காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்கிறார்: கண் தெரியாதவன் ஒருவன் கையில் விளக்கைக் கொண்டு சென்றான். எல்லோரும் கேட்டார்கள், உனக்கோ கண் தெரியாது, எதற்கப்பா விளக்கு? என்று. அவன் சொன்னான், “உண்மைதான் எனக்குக் கண் தெரியாது. இருட்டில் நீங்கள் என்மீது விழுந்து விடக் கூடாதல்லவா? அதற்காகத்தான். இது போலவே நாமும் அர்த்தம் தெரியாதபோதும் வேதம் என்னும் ஒளி விளக்கை ஏந்திச் செல்வோம். அதன் பொருள் தெரிந்த மகான்கள் யுகந்தோறும் அவதரித்து நம்மை வழிகாட்டிச் செல்வர்” (பெரியவர் சொன்ன சொற்கள் எனக்கு அப்படியே ஞாபகம் இல்லை. நினைவில் இருப்பதை வைத்து எழுதியுள்ளேன்)

நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு என்பது பாரதியின் மந்திர முழக்கம். அதையே நாமும் முழங்குவோம்.

contact swami_48@yahoo.com

தமிழ் விந்தை! கோமூத்திரி – 2

saraswati

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1529; தேதி 30 டிசம்பர், 2014.

 

சித்திர கவிகளில், கோமூத்திரியில் மேலும் சில செய்யுள்களைப் பார்க்கலாம்.

மாறனலங்காரம் தரும் உதாரணச் செய்யுள் இது:-

மாயாமாயாநாதாமாவா

   வேயாநாதாகோதாவேதா

   காயாகாயாபோதாகாவா                                  

   பாயாமீதாபேதாபேதா

 

இதன் பொருள்:-

மாயாமாயா – அழியாத மாயையை உடையவனே!                      நாதா – சுவாமியே!                                                      மாவா  – திருமகளை உடையவனே!                                   வேயாநாதா – வேய்ங்குழலில் உண்டாக்கும் கானத்தை   உடையவனே    கோதாவேதா  – பசுவைக் காத்தளித்த வேத சொரூபனே!                                    காயாகாயா – காயாம்பூப் போலும் திருமேனியை உடையவனே!            போதா – ஞானத்தை உடையவனே!                                       பேதாபேதா – பேதமும் அபேதமும் ஆனவனே!                       பாயாமீதா – பரந்த பிரளயத்தின் மேலானவனே!                            காவா – என்னைக் காக்க வந்தருள்வாயாக!    

இது கலி விருத்தம். துறை: கடவுள் வாழ்த்து

 

இது, “முன் இரண்டு அடி மேல் வரியாகவும், பின் இரண்டு அடி கீழ் வரியாகவும் எழுதி, அவ்வரி இரண்டையும் கோமூத்திரி ரேகை வழி படிக்க, ஒன்று விட்டு ஒன்றுமாறா அடி முடியுமாறு காண்க”  என்ற குறிப்புடன்   தரப்பட்ட பாடலின் சித்திரம் இது:-

2 gomuthri

யாப்பருங்கல விருத்தி இரண்டு செய்யுள்களை கோமூத்திரியாகச் சுட்டிக் காட்டுகிறது:

 

“மேவார் சார்கை சார்வாகா        

    மேவார் சார்கை சார்வாமா             

     காவார் சார்கை சார்வாகா                 

      மேவார் சார்கை சார்வாமா”

 

 

“பரவிப் பாரகத்தார் பணியுங்கழ                                         லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே                                     விரவிப் போர்வைத் தார்துணி வெங்கழ                                        லிரவி யீர்ந்தண் வலம்புரி மாலையே” 

 

நகுலேச்சர விநோத விசித்திர கவிப் பூங்கொத்திலே யாழ்ப்பாணக் கவிஞர் க.மயில்வாகனப்பிள்ளை அமைத்துக் காட்டும் கோமூத்திரி செய்யுள் பின் வருமாறு:-

நகுலை யாதி யடிமல ரோதவே        

   மிகுதி யாநு மவாகழி சாயுமே      

  தொகுதி யாகிய மாமய ரோடவே        

    தகுதி யான மகாகதி சாருமே”

 

இதன் பொருள்:- நகுலேச்சுரத்துத் தலைவரது திருவடித் தாமரைகளைத் துதிக்க மிகுதியாகிய நுமது அவா பெரிதும் நீங்கும்; கூட்டமாகிய பெருமயல் நீங்கத் தகுதியாகிய மகாகதி (வந்து) சேரும்.

புலவர் மா.முனியமுத்து இயற்றியுள்ள ஒரு கோமூத்திரி பாடல் இது:

 

 

தண்டமிழின் வானே எண்டிசையின் வாகை கொண்டலே வருகவே வண்டமிழின் தேனே பண்டிசையின் நாகை  வண்டலே தருகவே!    

   

கோமூத்திரியை சித்திரமாக அமைப்பது சுலபம். மேலே கண்ட பாடல்களுக்கு நீங்களே சித்திரம் அமைத்து மகிழலாம்!

contact swami_48@yahoo.com 

**********************

தமிழ் விந்தை: கோமூத்திரி-1

gomuthri

படத்தின் மீது ‘க்ளிக்’ செய்தால் படம் பெரிதாகும்

தமிழ் என்னும் விந்தை! -18

தமிழ் விந்தை: கோமூத்திரி-1

 

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1527; தேதி 29 டிசம்பர், 2014.

சித்திர கவிகளில் இன்னொரு விதம் கோமூத்திரி ஆகும். இதை பரிதிமால் கலைஞர் விளக்குகிறார் இப்படி:-

பசு மாடு நடந்து கொண்டே மூத்திரம் பெய்ய உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டு கோமூத்திரியாகும்.

கோ – பசு; மூத்திரி- மூத்திர வடிவுடையது

இதற்கு உதாரணச் செய்யுளாக பின் வரும் செய்யுளைத் தந்து அவர் பொருளையும் விளக்குகிறார் :-

பருவ மாகவி தோகன மாலையே                            

பொருவி லாவுழை மேவன கானமே                            

மருவு மாசைவி டாகன மாலையே                                 

 வெருவ லாயிழை பூவணி காலமே

 

 

இதன் பொருள்:-

இது ஓ பருவம் ஆக – இதுவோ தலைவர் குறித்த கார்ப்பருவமாதல் வேண்டும்

கனம் மாலை – மேக வரிசைகள்

ஆசை மருவும் – திக்குகளிலே பொருந்தும்; (அதுவேயன்றி)              

  விடா கன மாலையே – (கனம் மாலை விடா) அதிகமாக மாலைப் பொழுதிலே மழை பொழிதலை நீங்கா (எனவே, மிகவும் பொழியும்);

பொருவு இலா உழை – நிகரற்ற மான்கள்,    

 கானமே மேவன – காட்டின் கண்ணே விரும்பி விளையாடுவனவாயின்; (ஆதலால்)                                  ஆயிழை – குற்றமற்ற அணிகளையுடையாய்                       

வெருவல் – அஞ்சாதொழிவாயாக;                 

பூ அணி காலமே – தலைவர் விரைவில் இங்கு வந்து நம்மைப் பூக்களால் அலங்கரிக்கும் காலம் இதுவே

குறிப்பு :- மேவன – விரும்புவன; ஓப்பிடுக: “மேவன செய்யும் புதல்வன் றாய்க்கே (குறுந்தொகை – 8)

இது பருவம் கண்டு வருந்திய தலைவியைப் பாங்கி தேற்றியது. கோமூத்திரியைச் சித்திரமாக கீழே காணலாம்:-

இந்தச் சித்திரத்தில் முதல் இரு அடிகளும் மேலே உள்ளன. அடுத்த இரு அடிகளும் கீழே உள்ளன. அத்தோடு மேலே ஒரு எழுத்தும் கீழே ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்துமாக, பின்னர் இப்படியே மேலும் கீழுமாகப் படித்தால் பாடலை முழுவதுமாகப் படிக்கலாம்.

இதை கோமூத்திரி என்று சொல்வது சரி தானே!

swami_48@yahoo.com

*****************

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

habits-logo

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – ஜனவரி 2015

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

Compiled by London Swaminathan

Post No.1525; Dated  29    December 2014.

Important Days:  Ekathasi Jan.1 (Vaikunda Ekathasi), 16, 30; Amavasya 20, Pournami- Jan.4

Festivals: Arudra Darsana 5; Bogi Festival 14; Pongal/Makara Sankaranti 15; Republic Day of India 26; Ratha saptami 26; Bhishmashtami 27.

ஆருத்ரா தரிசனம்-ஜனவரி 5, போகி 14, பொங்கல் 15, குடியரசு தினம் 26, ரத சப்தமி 26

ஜனவரி 1 வியாழக் கிழமை

பூட்டைத் திறப்பது கையாலே நல்ல

மனம் திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப

வீட்டைத் திறப்பது பெண்ணாலே – பாரதியார்

ஜனவரி 2 வெள்ளிக் கிழமை

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

ஜனவரி 3 சனிக் கிழமை

மணி வெளுக்கச் சாணையுண்டு – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

மனம் வெளுக்க வழியில்லை – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி! – பாரதியார்

ஜனவரி 4 ஞாயிற்றுக் கிழமை

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

ஜனவரி 5 திங்கட் கிழமை

உத்தரேத் ஆத்மனாத்மானம் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும்

ஜனவரி  6 செவ்வாய்க் கிழமை

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் – தமிழ் பழமொழி

ஜனவரி 7  புதன் கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் – பாரதியார்

ஜனவரி 8 வியாழக் கிழமை

மனம் போல மாங்கல்யம் — தமிழ் பழமொழி

ஜனவரி 9 வெள்ளிக் கிழமை

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிம வேண்டும் — பாரதியார்

1-piece-of-mind

ஜனவரி 10 சனிக் கிழமை

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியராகப் பெறின் — திருக்குறள்  666

ஜனவரி 11 ஞாயிற்றுக் கிழமை

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே – புறநானூறு 206

ஜனவரி 12 திங்கட் கிழமை

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம். – பாரதியார்

ஜனவரி 13 செவ்வாய்க் கிழமை

மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் – உலக நீதி

ஜனவரி 14 புதன் கிழமை

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

மனம் அலை பாயக்கூடியது; நிலையற்றது. அது இஷ்டப் பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது  மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.(35)

ஜனவரி 15 வியாழக் கிழமை

“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்

அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)

“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.

ஜனவரி 16 வெள்ளிக் கிழமை

மனதுக்கு மனதே சாட்சி; மனச் சாட்சியைவிட மறு சாட்சி வேண்டாம்- தமிழ் பழமொழிகள்

ஜனவரி 17 சனிக் கிழமை

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும் – பாரதியார்

ஜனவரி 18 ஞாயிற்றுக் கிழமை

மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி – திருக்குறள் 453

(மனத்தின் காரணமாகவே மாந்தர்க்கு அறிவு உண்டாகும்)

ஜனவரி 19 திங்கட் கிழமை

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் — திருக்குறள் 457

(மனத்தின் தூய்மை உரி இனத்துக்கு எல்லாம் நன்மையும் இனிமையும் தரும்)

ஜனவரி 20 செவ்வாய்க் கிழமை

மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் — திருக்குறள் 456

(தூய மனம் உடையாருக்கு நல்ல பிள்ளைகளும் புகழும் எஞ்சும்)

mind

ஜனவரி 21 புதன் கிழமை

நினைமின் மனனே நினைமின் மனனே

சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனை

நினைமின் மனனே நினைமின் மனனே  —-பட்டினத்தடிகள்

ஜனவரி 22 வியாழக் கிழமை

யானை வேட்டுவன் யானையும் பெறுமே;

குறும்பூழ் வேட்டுவன் வறும்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்தசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் – புறநானூறு 214

ஜனவரி 23 வெள்ளிக் கிழமை

மன நலத்தின் ஆகும் மறுமை — திருக்குறள் 459

(நல்ல மனம் உடையாருக்கு மறுமையிலும் இன்பம் கிட்டும்)

ஜனவரி 24 சனிக் கிழமை

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது  சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட தேசோ மயானந்தமே. — தாயுமானவர்

ஜனவரி 25 ஞாயிற்றுக் கிழமை

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனம் தூய்மை தூவா வரும் — திருக்குறள் 455

ஜனவரி 26 திங்கட் கிழமை

வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன்
என்செய்கேன் வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ – வள்ளலார் பாடல்

human_brain

ஜனவரி 27 செவ்வாய்க் கிழமை

“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்

அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்

.நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்

விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்

தொட்டதை மீள மீளவும் தொடுவாய் – பாரதியார்

ஜனவரி 28 புதன் கிழமை

காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு

ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்

ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை

தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே! – தாயுமானவர் பாடல்

ஜனவரி 29 வியாழக் கிழமை

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி

சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது

மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே

–அப்பர் தேவாரம் 4-46

ஜனவரி 30 வெள்ளிக் கிழமை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் — தமிழ் பழமொழி

ஜனவரி 31 சனிக்கிழமை

சிந்தா நாஸ்தி கில – தேஷாம் சிந்தா சிந்தா நாஸ்தி கில

சமதம கருணா சம்பூர்ணாணாம்

சாது சமாகம சங்கீர்ணானாம் – சதாசிவ பிரம்மேந்திரர்

(நல்ல குணங்கள், சாதுக்களின் தொட்ர்புடையோருக்கு மனக்கவலை இல்லை)

Contact swami_48@yahoo.com

தமிழ் விந்தைகள்: கூட சதுர்த்தம் – 2

1-piece-of-mind

தமிழ் என்னும் விந்தை! -17

தமிழ் விந்தைகள்: கூட சதுர்த்தம் – 2

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1524; தேதி 28 டிசம்பர், 2014.

 

கூட சதுர்த்தம் என்னும் வடமொழிப் பெயரைத் தமிழில் கூட சதுக்கம் எனச் சொல்வது மரபு.

யாப்பருங்கல விருத்தி தரும் உதாரணச் செய்யுள் இது:-

கருமால் வினைகள் கையேறிச் செடிசெய்து காறடப்போ

  யருமா நிரயத் தழுந்துதற் கஞ்சியஞ் சோதிவளர்             

பெருமாள் மதிதெறு முக்குடை நீழற் பிணியொழிக்குந்          

திருமா றிருந்தடைக் காளா யொழிந்ததென் சிந்தனையே

 

 

இதில் நான்காம் அடியான, ‘திருமா றிருந்தடைக் காளா யொழிந்ததென் சிந்தனையே’ என்பதில் உள்ள எழுத்துக்கள் ஏனைய மூன்று அடிகளில் வந்துள்ளதைக் கண்டு மகிழலாம்.

இனி யாழ்ப்பாணம் கவிஞர் மயில்வாகனப் பிள்ளை இயற்றிய கூட சதுர்த்த செய்யுளைப் பார்ப்போம்:-

நீணலம் வாய்த்திட நின்மல மேவல்

   வேணுறு வாழ்க்கையி லேகுபு வாழ்வேந்                   

தாணுவை யீசனை மாமயல் சாரா                           

மாணகு லேசனை வாழ்த்திட வம்மே

 

 

இதில் நான்காம் அடியான, ‘மாணகு லேசனை வாழ்த்திட வம்மே’ என்பதில் உள்ள எழுத்துக்கள் ஏனைய மூன்று அடிகளில் வந்துள்ளதைக் காணலாம்.

பா.முனியமுத்துவும், கூட சதுக்கத்தில் ஒரு சித்திர கவி இயற்றியுள்ளார். அது வருமாறு:-

வாதா இனிதா வான பதமே         

  நாதூ தாவே தாகோலா தானாக  

  மாதா வேதமே தாவேநீ யேகா                                  

தாதா பாநா வேலாக வேதாயே!

  

இந்தப் பாடலில் நான்காம் அடியான, ‘தாதா பாநா வேலாக வேதாயே!’ என்ற அடி முதல் மூன்று அடிகளில் மறைந்து வந்துள்ளது.    

இவர் கூட சதுக்கமாக தருகின்ற இன்னொரு சித்திரப் பாடல் இது:-

தமிழ் என்னும் விந்தையில் என்னென்ன ஜாலங்கள் எல்லாம் இருக்கிறது, பார்த்தீர்களா?!

-தொடரும்

contact swami_48@yahoo.com

தமிழுக்கு எத்தனை பெயர்கள்?- பகுதி 2

sangam float

Sangam Age Tamils

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

கட்டுரை எண்- 1518; தேதி 26 டிசம்பர், 2014.

(compiled by Santanam Swaminathan)

இதன் முதற் பகுதி “தமிழுக்கு எத்தனை பெயர்கள்?” கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014 என்ற தலைப்பில் வெளியாகியது. இது இரண்டாம் பகுதி.

1.தமிழும் காயத்ரி மந்திரமும்

காயத்ரி மந்திரம் சூரிய ஒளி போல அறிவைப் பிரகாசிக்கச் செய்யும். அதை சூரியனை நோக்கி அனுதினமும் பார்ப்பனர்கள் மூன்று வேளைகளிலும் ஜபிப்பர். அதைப் போல தமிழும் அருள் புரிகிறது என்று தண்டிஅலங்காரம் சொல்லாமற் சொல்லும்:

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங் கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன் நேர் இலாத தமிழ் (தண்டி அலங்காரம்)

There are two things born from the mountains, shining so brilliantly that the great bow down, driving darkness from earth circled by roaring waters. One is the flaming sun, single wheel bright as lightning, the other is Tamil that has no like. (Tantiyalankaram)

pegan

Tamil Philanthropist Bekan and the peacock

  1. பரிபாடலில் (பாடல் 9) குன்றம்பூதனார் காந்தர்வ இன்பத்தை அனுபவிக்க உரியாரை

“ தள்ளாப் பொருள் இயல்பின்

தண் தமிழாய் வந்திலார்

கொள்ளார் இக்குன்று பயன்” என்பர்.

  1. “இன் தமிழ் இயற்கை இன்பம்” என்று கந்தருவ போகத்தை சிந்தாமணி (பாடல் 2063) கூறும்.

செந்தமிழ், பைந்தமிழ், தண்தமிழ்,இன் தமிழ் என புலவர்கள் வாழ்த்துகின்றனர்.

  1. தமிழ் இயல்பு இனிய சுகபோகங்களோடு உயர்வாய் உய்ர்வாய் மிளிர்கிறது

இமிழ் திரை வையத்து ஏயர் பெருமகன்

தமிழ் இயல் வழக்கினன் (பெருங்கதை 4-17)

 

thiruvalluvar logo

  1. காவீரி நதியை சீழ்தலைச் சாத்தனார் வாழ்த்தும் முறை:

கோன் நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாத் தண் தமிழ் பாவை (மணிமேகலை)

 

  1. காட்டில் மனைவியைப் பிரிந்த ராமன் , ஒரு தாமரை மலரை நோக்கி

“தன் பால தழுவும் குழல் வண்டு

தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே (கம்பன், கிட்கிந்தா, பம்பை 28)

 

  1. சீதை சொல் பற்றி கம்பன்

குழுவு நுண்தொளை வேயினும் குறி நரம்பௌ எறிவுற்று

எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொற் கிளியே!

sangam4

  1. தமிழ் என்னும் சொல்லை இனிமை, குளிர்ச்சி, உவகை முதலிய பொருளில் கவிகள் பயன்படுத்துவதைக் காண்கிறோம். தமிழ் பற்றி தொல்காப்பியப் பாயிரம் சொல்லுவது:–

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல் உலகத்து

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

——ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர்-பாயிரம்)

 

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

 

  1. இருபாற்றென்ப திரி சொற் கிளவி

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச் சொற் கிளவி

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (தொல்காப்பியம்-எழுத்து)

 

sangam3

  1. கன்னித் தென்கரைக் கட்பழந்தீவம்

சிங்களம் கொல்லம் கூவிளமென்னும் (மயிலைநாதர்)

அகத்தியன் பற்றி………………..

  1. தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென

வானோர் ஏத்தும் வாய் மொழிப் பல் புகழ்

ஆனாப் பெருமை அகத்தியன் (பன்னிரு படலம்)

 

 

  1. உயர் மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைகள் (திருக்கோவையார்)

 

13.மூவறு மொழியுளும்

குணகடல் குமரி குடக வேங்கடம்

எனநான் கெல்லையி னிருந்தமிழ்

-நன்னூல் பாயிரச் சூத்திரம்

14.தேனுறை தமிழும் திருவுறை கூடலும் (கல்லாடம்)

sangam2

பாரதி பாடல்கள்

15.யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;

பாமரராய்,விலங்குகளாய்,உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்.

16.யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம்;ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புது நூல்கள்

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகைமை இல்லை:

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்

17.வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி

வாழிய வாழியவே

வானம் அளந்தது அனைத்தும் அறிந்திடும்

வன்மொழி  வாழியவே

ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி

இசை கொண்டு வாழியவே

எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி

என்றென்றும் வாழியவே

சூழ் கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்

துலங்குக வையகமே

தொல்லை வினை தரு தொல்லை அகன்று

சுடர்க தமிழ் நாடே!

வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி

வாழிய வாழியவே

வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து

வளர்மொழி  வாழியவே

18.தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற-எங்கள்

தாயென்று கும்பிடடி பாப்பா !

அமிழ்தில் இனியதடி பாப்பா !- நம்

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா !

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா !

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்- அதைத்

தினமும் புகழ்ந்திடடி பாப்பா !

Aathi thamizhar peravai

Avvaiyar and Adhiyamaan

19.பாரதிதாசன் பாடல்கள்

தமிழுக்கும் அமுததென்று பேர் !- அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

தமிழுக்கு நிலவென்று பேர் !- இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !

தமிழுக்கு மணமென்று பேர்- இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !

தமிழுக்கு மதுவென்று பேர்- இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்- இன்பத்

தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் !

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் !- இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் !

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்-இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்- இன்பத்

தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

தமிழ் பற்றிய முக்கிய மேற்கோள்கள் அனைத்தையும் இந்த இரண்டு பகுதிக் கட்டுரையில் காணலாம்.

contact swami_48@yahoo.com

சருப்பதோபத்திரம் – 4

culture-7

தமிழ் என்னும் விந்தை! -15

சருப்பதோபத்திரம் – 4

 

கட்டுரையை எழுதியவர் :–  ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1516; தேதி 25 டிசம்பர், 2014.

 

இனி யாப்பருங்கலவிருத்தி உதாரணமாகத் தரும் நான்கு சருப்பதோபத்திரச் செய்யுள்களைக் கண்டு மகிழ்வோம்:

நீகா வாமா மாவா காநீ                                         காமா வாதா தாவா மாகா                                        வாவா கோதா தாகோ வாவா                                   மாதா தாமா மாதா தாமா

 

நீ கா வா மா மா வா கா நீ
கா மா வா தா தா வா மா கா
வா வா கோ தா தா கோ வா வா
மா தா தா மா மா தா தா மா
மா தா தா மா மா தா தா மா
வா வா கோ தா தா கோ வா வா
கா மா வா தா தா வா மா கா
நீ கா வா மா மா வா கா நீ

 

 

 

பீநீ காமா மாகா நீபீ        

   நீகா மாவா வாமா காநீ                                        

காமா வாகோ கோவா மாகா                                    

மாவா கோதா தாகோ வாமா

 

பீ நீ கா மா மா கா நீ பீ
நீ கா மா வா வா மா கா நீ
கா மா வா கோ கோ வா மா கா
மா வா கோ தா தா கோ வா மா
மா வா கோ தா தா கோ வா மா
கா மா வா கோ கோ வா மா கா
நீ கா மா வா வா மா கா நீ
பீ நீ  கா மா மா கா நீ பீ

 

culture6

மாநீ காமா மாகா நீமா                                              

நீகா மாவா வாமா காநீ                                                  

காமா வாகோ கோவா மாகா                                                                     

மாவா கோதா தாகோ வாமா

 

 

மா நீ கா மா மா கா நீ மா
நீ கா மா வா வா மா கா நீ
கா மா வா கோ கோ வா மா கா
மா வா கோ  தா  தா கோ வா மா
மா வா கோ  தா  தா கோ வா மா
கா மா வா கோ கோ வா மா கா
நீ கா மா வா வா மா கா நீ
மா நீ  கா மா மா  கா நீ மா

 

மாமா தாநீ நீதா மாமா                                              மாதீ யாகா காயா தீமா                                          தாயா வேடா டாவே யாதா                                       நீகா டாயா வாடா காநீ   

             

மா மா தா நீ நீ தா மா மா
மா தீ யா கா கா யா தீ மா
தா யா வே டா டா வே யா தா
நீ கா டா யா வா டா கா நீ
நீ கா டா யா வா டா கா நீ
தா யா வே டா டா வே யா தா
மா தீ யா கா கா யா தீ மா
மா மா தா நீ நீ தா மா மா

 

‘சருப்பதோபத்திரம்’ பற்றிய குறிப்பாக யாப்பருங்கல விருத்தி குறிப்பிடுவது பின் வருமாறு:

எட்டெழுத்தான் இயன்ற நான்கு வரியாம். அவை மாலைமாற்றும், சுழிகுளமுமாய் ஒருங்குவரக் கொள்வது.

மாலைமாற்று, சுழிகுளம் பற்றி இந்தத் தொடரில் பின்னர் பார்க்கப் போகிறோம்.

நான்கு செய்யுள்களை எடுத்துகாட்டாகத் தந்து விட்டு குறிப்புரையாக நூல் தருவது: “இப்பெற்றியே எல்லாவெழுத்தும் மொழிக்கு முதலாயினவே நிறுவி, ஓரெழுத்துக்கோரடியாகப் பாடிப் பொருள் முடிப்பனவுஞ் சருப்பதோபத்திரம் எனப்படும். அவையும் வந்த வழிக் கண்டு கொள்க.”

சருப்பதோபத்திரம் தமிழின் ஒரு பரிமாணத்தை விளக்கும் ஒரு அரிய வகை சித்திரக் கவியாகும் என்பதில் ஐயமில்லை!

-தொடரும்

குறிப்பு: வாசகர்கள்  முந்தைய கட்டுரைகளைப் படித்தாலேயே எப்படி சருப்பதோபத்திரத்தைக் கட்டங்களில் படிப்பது என்பதை முழுவதுமாக அறிய முடியும்.

Contact swami_48@yahoo.com