யோகிகள் தீப் பிழம்பாக மாறும் அதிசயம்!

shc bbc

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:- 1298; தேதி: 19 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது எட்டாவது கட்டுரை.

மகாவம்சத்தில் தானாக மனிதன் தீப்பற்றி எரியும் ஒரு அதிசய நிகழ்வும் பதிவாகியுள்ளது இதை ஆங்கிலத்தில் Spontaneous Human Combustion (SHC) என்று அழைப்பர். இது அபூர்வமாகவே நிகழக்கூடியது. 5000 ஆண்டு இந்துமத வரலாற்றில் பத்து முதல் பதினைந்து சம்பவங்களே இருப்பதாகச் சொல்லலாம்.

திருஞான சம்பந்தர் தனது திருமணம் நடந்தபோது புது மனைவி மற்றும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் முதலிய நூற்றுக் கணக்காணோருடன் ஜோதியில் கலந்தார்.

ஆண்டாள் ஜோதியில் கலந்தார்.
திருப்பணாழ்வார் ஜோதியில் கலந்தார்.
நந்தனார் ஜோதியில் கலந்தார்.

என்றெல்லாம் படிக்கிறோம். நாத்தீகர்கள் இதைக் கண்டு நகைப்பதுண்டு. தீ விபத்துக்களை இப்படிச் சொல்லிவிட்டார்கள் அல்லது கீழ்ஜாதி நந்தனாரையும் திருப்பணாழ்வாரையும் தீயில் தள்ளிவிட்டு பிராமணர்கள் இப்படிக் கதை கட்டிவிட்டார்கள் என்று கதைப்பதும் உண்டு.

ராமலிங்க சுவாமிகள் ஜோதி வடிவில் கலந்ததையும் நம்பாதோர் உண்டு. கண்ணகி தன் ஒரு முலையைத் திருகி எரிந்து மதுரையை எரித்ததாக நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் சொல்வதைக் கண்டு நகைப்போரும் உண்டு.

ஆதிசங்கரரும், பட்டினத்தாரும் தாயின் சிதைக்குப் பார்வையாலேயே தீ மூட்டினர் என்பதைச் சந்தேகிப்போரும் உண்டு. ஆனால் இந்துக்கள் இதை உண்மை என்றே நம்புவர். பல நூறு கோடி ஆட்களில் இப்படிச் செய்தவர் பத்துப் பேரே என்பதே இதை அபூர்வ சம்பவம் என்று காட்டும்.

இதே போல வடக்கிலும் சில சம்பங்கள் உண்டு. கோபால் நாயக் என்பவர் தீபக் என்னும் ராகத்தைப் பாடினால் மனிதர்கள் தீப்பற்றி எரிந்துபோவார்கள் என்கிறார். மொகலாய சக்ரவர்த்தி அக்பர், அப்படியானால் தண்ணீருக்குள் நின்று பாடுங்கள் என்கிறார். அப்படிப் பாடினாலும் தண்ணீரிலும் தீ தோன்றி நான் எரிந்துவிடுவேன் என்று சொன்னபோதிலும் மன்னனே சொல்கிறாரே என்று அவர் தீபக் ராகத்தை இசைத்தார். தீப்பிழம்பாக மாறி மாண்டு போனார் பாடகர்.

மகாவம்சத்தில் இத்தகைய இரண்டு நிகழ்ச்சிகள் உள்ளன. ஒன்று புத்தர் காலத்தில் நடந்தது. காஸ்யபர் என்ற மகாதேரர் புத்தரின் சடலத்தை மூன்று முறை சுற்றி வந்தவுடன் புத்தரின் சிதை தானாகவே எரிந்ததாக மகாவம்சம் பகரும். இது மகாவம்சம் 30-ஆவது அத்தியாயத்தில் வருகிறது.

மற்றொரு சம்பவம் மகாவம்சம் 5-ஆவது அத்தியாயத்தில் வருகிறது.
முன்னொரு காலத்தில் காட்டில் வாழும் ஒருவன் பாடலிபுத்ரம் அருகில் காட்டில் உள்ள குந்தி என்ற வனதேவதையைக் காதலித்தான். இருவரும் கூடியதன் விளைவாக அவள் தீசன், சுமிதன் என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். இருவரும் மகாவருண தேரரிடம் தீட்சை பெற்று அரிய சக்திகளைப் பெற்றனர்.

shac4

ஒருமுறை மூத்தவரை ஒரு விஷப் பூச்சி கடிக்கவே அவர் வலியால் துடித்தார். இளையவர் உதவ முன்வந்தபோது நெய் கிடைத்தால் போதும் என்றும் ஆனால் அதை பிட்சைக்குச் செல்லும்பபொழுதுதான் வாங்கலாம் என்றும் நிபந்தனை போட்டுவிட்டார். இளையவர், பிட்சைக்குச் சென்றபோது கொஞ்சமும் நெய் கிடைக்கவில்லை. இதற்குள் வலி அதிகமாகி அவர் மரணத்தை நெருங்கினார். அப்போது அவர் உடல் காற்றில் மிதந்தது. அவர் தேஜோ கான வாசனத் தியானத்தில் ஆழ்ந்தார். உடம்பு ஜோதி வடிவமானது எலும்புகள் மட்டுமே எஞ்சின. மன்னன் செய்தி கேட்டு விரைந்து வந்தான். காற்றில் மிதந்த எலும்புகளை யானை மீது ஏறிச்சென்று சேகரித்து உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தான்.

இதைச் சொன்ன மகாவம்சம் தேஜோ கான வாஸனம் என்ன என்பதை உரையில் விளக்குகிறது:
தியானத்தில் ஈடுபடும் துறவி தனது சிந்தனை முழுவதையும் ‘’நெருப்பு’’ என்பதில் ஒருமுகப்படுத்துவது. இதனால் உடலுக்குள் அக்னி மூண்டு முழுவதும் எரித்து அழித்துவிடும்.

இதை நாம் வள்ளலார் கதையுடன் ஒப்பிடலாம். கண்ணகி, பட்டினத்தார், ஆதிசங்கரர் கதைகளுடனும் ஒப்பிடலாம். யோக சக்தியால் எதுவுமே சாத்தியம். விஞ்ஞானிகளுக்கு — இந்துக்கள் அளவுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்படவில்லை. ஆகையால் இத்தகைய விஷயங்களை ஏற்க மறுக்கின்றனர். மனோசக்தியின் வலிமையை விஞ்ஞானம் அறியும் நாளில் இதற்குப் புதிய விஞ்ஞான விளக்கமும் புதிய பெயரும் தருவர்!!!

பி.பி.சி திரைப்படம்
வெளிநாட்டிலும் இப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகள் பத்திரிக்கைகளில் வருகின்றன. 1992 ஆம் ஆண்டிலும் இப்படி நடந்தவுடன் இதுபற்றி ஆராய்ச்சி செய்து பி பி சி ஒரு டாகுமெ ன் டரி தயாரித்தது. அதில் விஞ்ஞானிகள் பல விளக்கம் கொடுத்தனர். எல்லாம் அரை குறையான விளக்கமே. கால்கள் மட்டும் எரியாமல் உடம் முழுவதும் எப்படி எரிய முடியும்? மின்சாரச் சுடுகாட்டில் 1000 டிகிரி சென் டி கிரேடிலும் எரியாத எலும்புகள் கால்களை மட்டும் விட்டுவிட்டு உடல் முழுதும் எப்படி எரிந்து சாம்பாலயின? இப்படிப் பல புதிர்கள்!!! சடலம் எரிந்தும் பக்கத்தில் உள்ள மேஜை நாற்காலிகள் தீப்பிடிக்கதது ஏன்?

shc

இத்தனை புதிர்களுக்கும் அவர்கள் சப்பைக்கட்டு பதில்கள் தந்தனர். மனித உடலில் கொழுப்பு அதிகம் இருந்தால் இப்படி நடக்கலாம், மீதேன் வாயு சேர்ந்தால் இப்படி நடக்கலாம், குடிகாரராக இருந்தால் இப்படி நடக்கலாம் என்று பல விளக்கங்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு மாணவன் மாடிப்படியில் இருந்து இறங்கிவந்த ஜோரில் தீப்பிழம்பானான். அவன் உடைகள் புத்தம் புதிய உடைகளாகக் காட்சிதந்தன. கருகவே இல்லை அப்போது இவ்வளவு பதிவு செய்யும் வசதிகள் இல்லாததால் வேறு எந்த நிரூபணமும் இல்லாமல் செய்தி மட்டுமே பத்திரிகையில் வெளியானது

சித்தர்களின் அஷ்ட மஹா சக்திகளை நம்பும் இந்துக்களுக்கு இவைகள் எல்லாம் கொசுறு!

Please read my earlier articles:
The Mysterious Death of Great Hindu Saints (Posted Nov.15, 2011)
Strange Facts about V I P Deaths (27th April 2012)
Contact swami_48@yahoo.com

Source book : Mahavamsam in Tamil ; translated by S Sankaran, 1986, Rs.25

மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!! – பகுதி 3

dahamsonda paitings

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1297 தேதி: 19 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஏழாவது கட்டுரை.

(( இலங்கையில் தமிழ் செல்வாக்கைக் காட்டும் 20 விஷயங்களை முதல் இரண்டு பகுதிகளில் காண்க. ))

21.சோழ பிக்கு போர்க்கொடி
அத்தியாயம் 36-லும் 37-லும் சோழநாட்டு பிக்கு சங்கமித்ரன் இலங்கைக்கு வந்து பெரும் குழப்படி செய்ததைப் படிக்கிறோம். இலங்கையில் புத்தபிட்சுக்கள், அரசாங்கப் பணிகளில் குறுக்கிடுவது இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறுவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. அவர் அங்குள்ள பௌத்தர்களிடையே பெரும்பிளவை ஏற்படுத்தி பழம்பெரும் கட்டிடங்களான மஹாவிஹாரை, லோகபஸாதா ஆகியவற்றை இடிக்கச் செய்கிறார். இதனால் கோபம் அடைந்த ராணி, ஒரு ஆளை அனுப்பி அவரையும் அவருக்கு உதவி செய்த மந்திரியையும் கொன்றுவிடுகிறாள். மகாசேனன் (கி.பி..275—301) காலத்தில் இது நடந்தது. 37ஆம் அத்தியாயத்துடன் மஹாவம்சமும் முடிவடைகிறது.
இதனால் கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டின் மலயப் பகுதியும் சோழ நாட்டுக் கடற்கரைகளும் இலங்கை அரசியலில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை அறியமுடிகிறது

22.தமிழ் மன்னர்கள்: ஏலாரா/எல்லாளன் (கி.மு.205 –161)
அத்தியாயம் 21 முதல் 33 வரை சோழநாட்டில் இருந்து வந்த ஏலாரா என்ற உயர்குலத் தமிழன் பற்றியும் அவனை வெற்றி கொண்ட துட்டகாமினி என்பவனின் வரலாறு பற்றியும் இருக்கிறது. 44 ஆண்டுக்காலம் இலங்கையை நீதி நேர்மையுடன் ஆண்ட தமிழ்ப் பெருந்தகை ஏலாராவைப் பற்றி மஹாவம்சம் புகழ்கிறது. அவன் இறந்த பின்னரும் இலங்கை மன்னர்கள் அவ்விடத்தில் மரியாதை செலுத்தி வந்ததையும், துட்டகாமினி பிறப்பில் இருந்தே தமிழ் விரோதியாக இருந்ததையும் மஹாவம்சம் ஒளிவு மறைவு இன்றி உரைக்கிறது.
ஏலாரா ஆட்சி நமக்குத் தெரிவிக்கும் விஷயம் — 2200 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் “ஞாலம் நடுங்கவரும் கப்பற்படை” வைத்திருந்தனர் என்பதாகும்.

“தமிழர்களுடன் சமாதானமாக வாழ்” — என்று சொன்ன தந்தைக்கு பெண்கள் அணியும் நகைகளை அனுப்பி, நீ ஒரு ஆண்மகன் அல்ல என்று தந்தையையே துட்டககாமினி இழிவு படுத்தியதையும் காணமுடிகிறது. துட்ட காமினி 32 தமிழ் மன்னர்களை வெற்றிகொண்டதாக மஹாவம்சம் கூறுகிறது. சந்தன், தித்தம்பன் என்ற சில பெயர்களையே மஹாவம்சம் நமக்கு அளிக்கிறது. இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) புகழை தனியாக ஆய்வு நூலாக வெளியிடுவதும் வரலாற்றில் புத்தொளி பரப்பும்.

துட்டகாமினியின் புகழ்பாட ஏறத்தாழ மஹாவம்சத்தின் மூன்றில் ஒருபகுதியை ஒதுக்கியிருப்பதையும் காணமுடிகிறது. மஹாவம்சம் இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல் என்பதைவிட இலங்கையில் புத்தமதத்தின் வளர்ச்சியை வருணிக்கும் நூல் என்பதே பொருத்தமாக இருக்கும்!!

painting5

23. ஏழு தமிழ் மன்னர்கள் (கி.மு 104-ஐ ஒட்டிய காலம்)
அத்தியாயம் 33 (பத்து அரசர்கள்): வட்டகாமனி ஆட்சி செய்த காலத்தில் ரோஹணாவில் வசித்துவந்த தீசன் என்ற பிராமணன் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்தான். அப்போது தமிழ்நாட்டிலிருந்து வந்து இறங்கிய ஏழுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். “ஆட்சியை ஒப்படைத்துவிடு” — என்று செய்தியும் அனுப்பினர். ஆனால் கூரிய மதிபடைத்த வட்டகாமனி, தனியாக தீசனுக்குச் செய்தி அனுப்பி, இது உன் நாடு, முதலில் தமிழர்களை விரட்டு என்றான். அந்தப் பிராமணனும் உடனே தமிழர்களை எதிர்த்தான், ஆனால் தோற்றுப் போனான். ஏழு தமிழர்களில் ஒருவன் ராணி சோமதேவியைக் கல்யாணம் செய்துகொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிப் போனான். மற்றொருவன் புத்தரின் பிட்சா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தமிழகம் சென்றான்.

(பிச்சை எடுக்கப் பயன்படுத்தும் பாத்திரம் பிக்ஷா பாத்திரம். பிச்சை என்பது ‘பிக்ஷா’ என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்த சொல். ஆதிகாலத்தில் வேதம் கற்கும் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று “பவதி பிக்ஷாம் தேஹி” என்று வேண்டுவர். மதுரையில் வேத பாடசாலை மாணவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து இப்படிக் குரல் கொடுத்தது இன்றும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. உடனே எனது தாயார் அன்னத்தை அவர்கள் பாத்திரத்தில் போடுவார். அதை அவர்கள் குருநாதருடன் பகிர்ந்துகொள்வார்கள். வள்ளுவனும் “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” — என்ற குறளில் விருந்தினர் பற்றிப் பேசுகிறார்).

ஏழு தமிழரில் ஐவர் மட்டும் தங்கி இலங்கையை ஆண்டனர். புலஹதன், பாஹியா, பணயமாரன், பிழையாமாறன், தாதிகன் என்ற ஐவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்துவிட்டு அடுத்தடுத்து ஆண்டனர். மொத்தம் ஆண்ட வருடங்கள் 14 ஆண்டு 7 மாதம்.

இந்தப் பெயர்களில் சில தமிழ்ப் பெயர்கள் போலத் தோன்றவில்லை. மாறன் என்ற பெயர் கொண்டவர்கள் பாண்டி நாட்டுக்காரர்கள். தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளில் பணய மாறன் என்ற பெயர் உண்டு. இவைகளைப் பற்றித் தமிழ் வரலாற்றில் ஒன்றையும் காணோம். இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

((“தமில் வாள்க்க” (தமிழ் வாழ்க) என்று கோஷம் போடுவதை நிறுத்திவிட்டு உருப்படியான ஆராய்ச்சிகளில் இறங்க வேண்டும். தமிழர்களை ஆஹா ஒஹோ என்று புகழ்வதோடு நிற்காமல் உண்மை நிலையையும் கண்டு உரைக்க வேண்டும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் காரவேலன் என்ற ஒரிஸ்ஸா மாநில (கலிங்க) சமண மன்னனிடம் தோற்றுப்போன பாண்டியன் யார்? ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தரபாண்டியன் யார்? என்பதை எல்லாம் ஆராய்வது நலம் பயக்கும். வெற்றியை வெற்றி என்றும் தோல்வியை தோல்வி என்றும் ஒப்புக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்!))

painting4

சந்தமுக சிவன் – தமிழா தேவி
சந்தமுக சிவன் என்ற அரசனின் மனைவி பெயர் தமிழாதேவி. சந்தமுகசிவனின் தந்தை பெயர் இளநாகன். சங்க இலக்கியத்தில் அதிகம் தமிழ்ப் பாடல்களை இயற்றியவரில் ஒருவர் பெயரும் இளநாகன். ஆகவே இந்தத் தமிழதேவி தமிழ்நாட்டுத் தொடர்புடைய பெண்ணே.

சிங்களவரும் தமிழரும் ரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயம் இது.

24.மிளகு
துட்டகாமினி ஒரு முறை புத்த பிக்குகளை நினைக்காமல் மிளகு சாப்பிட்டதற்குப் பிராயச்சித்தமாக மாரீசவதை விஹாரத்தையும் சேதியத்தையும் அமைத்தார். மிளகு என்றவுடன் கேரள மிளகு ஏற்றுமதி நினைவுக்கு வரும். அக்காலத்தில் அது சேர நாடு என்னும் தமிழ்ப் பகுதியாக இருந்தது. மிளகு சாப்பிடும் வழக்கம் உண்டு என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது

Kandy-Painting

25.சுனாமி/ கடல்கோள்
அத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.
கல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடித்ததைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.

இது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.

உடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான். இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-காடுகாண் காதை, சிலப்பதிகாரம்

இதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.

SriLanka-3

26. வனதேவதை/உடும்பு
அதிகாரம் 28-இல் வரும் உடும்பு அதிசயம் பற்றி ஏற்கனவே மஹாவம்சத்தில் அற்புதச் செய்திகள் என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்.
உலகப் புகழ்பெற்ற கம்போடியாவின் அங்கோர்வட் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு பட்டுப்பூச்சிதான் காரணம். உலகப் புகழ்பெற்ற அஜந்தா குகைக் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு ஆடு தான் காரணம். சிருங்கேரியில் முதல் மடத்தைச் சங்கராச்சார்யார் ஸ்தாபிக்க தவளைக்குக் குடைபிடித்த பாம்புதான் காரணம். பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை கட்ட முயலும் வேட்டை நாயும் தான் காரணம் என்பதை எல்லாம் விளக்கி நாங்கு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன் — Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri (3-10-2011). இதே போல வனதேவதை உடும்பு வடிவில் வந்து இந்திரனும் விசுவகர்மாவும் அனுப்பிவைத்த செங்கற்களைக் காட்டியதாகவும் துட்டகாமினி அதைப் பயன்படுதியதாகவும் படிக்கிறோம். இதுபோல தமிழ் நாட்டுக் கோவில்களிலும் உடும்பு தொடர்புடைய கோவில்கள் உண்டு

27.கோவலன் யானை அடக்கியது/ நந்திமித்ரன் யானை அடக்கியது

புத்தர் பிரான், யானையை வசப்படுத்தியது யோக சக்தியால்;
உதயணன் யானையை அடக்கியது மந்திர சக்தியால்;
கோவலன் யானையை அடக்கியது புஜபலத்தால்:

இதே போல கந்துலன் என்னும் யானை கதை மஹாவம்சத்தில் வருகிறது அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது

கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.

painting3

Pictures are taken from different websites;thanks.

இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்?

river map_srilanka

Ganges is everywhere in Sri Lanka!

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1295; தேதி: 18 செப்டம்பர் 2014
This is already published in English.

மஹாவம்சத்தில் உள்ள பல வரலாற்று உண்மைகளையும் அதிசயங்களையும் 1995 முதல் ஆராய்ச்சி செய்துவந்தேன். சில நாட்களுக்கு முன் இந்தத் தொடரைத் துவங்கினேன். மஹாவம்ச ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பில் இது 6-ஆவது கட்டுரை.

சில மாதங்களுக்கு முன் சேரன் செங்குட்டுவனுக்கு காடு வாழ் குறவர், குறத்தியர் சமர்ப்பித்த பரிசுப் பொருட்களின் பட்டியலை சிலப்பதிகாரத்தில் இருந்து எழுதினேன். மறைந்து கிடக்கும் சில அரிய விஷயங்களை வெளிக் கொணர்வதற்காக பலரும் பாராட்டி எழுதினர். இதோ அசோகனின் ஆருயிர்த் தோழனும், இலங்கையின் புகழ்மிகு மாமன்னனுமான தேவனாம் பிரிய திஸ்ஸன் அனுப்பிய சில பரிசுப் பொருட்கள்:-

(( ஆதாரம் : மஹாவம்சம் அத்தியாயம் 11 ))

kaluganga

Gift list from Devanampriya
மூன்று அரிய ரத்தினங்கள்
அதிசய (ரத்தின) மூங்கில் தண்டுகள்
வலம்புரிச் சங்கு
எட்டுவித முத்துகள்

எட்டுவித முத்துக்கள் என்ன என்பதை மஹாவம்ச அற்புதச் செய்திகள் என்ற கட்டுரையில் சில நாட்களுக்கு முன் எழுதி விட்டேன். 99 சகோதர்களைக் கொலை செய்ததற்காக “சண்டாள அசோகன்” என்று அழைக்கப்பட்ட அசோகன் புத்த தர்மத்தைத் தழுவி நல்லவன் ஆனபின் “தர்ம அசோகன்” என்று அழைக்கப்பட்டதாக மஹாவம்சம் இயம்பும்.

தேவானாம் ப்ரியன் (தெய்வங்களுக்குப் பிரியமானவன்) என்ற அடை மொழியை இலங்கை, இந்திய மன்னர் இருவரும் வைத்துக்கொண்டனர். இந்தியாவில் அசோகன் கல்வெட்டுகளில் பெரும்பாலும் தேவானாம் ப்ரியன் என்ற பட்டப் பெயரே இருக்கிறது.

இலங்கையில் இருந்து வந்த அரிய ரத்தினங்களையும் ரத்தின மூங்கில் தண்டுகளையும் பார்த்த அசோகன் அசந்தே போய்விட்டான். இப்படிப்பட்ட அரிய பொருட்களை நான் கண்டதே இல்லையே என்று விமர்சிக்கிறான். உடனே இலங்கையின் மாமன்னனாக முடிசூட்டப் போகும் தேவானாம்ப்ரிய திஸ்ஸனுக்குப் பட்டாபிஷேகத்துக்குத் தேவையான பொருட் பட்டியலை அறிஞர் பெருமக்கள் ஆலோசனையுடன் தயாரிக்கிறான். அதில் முக்கியமான இரண்டு பொருட்கள்: கங்கை நீர், வலம்புரிச் சங்கு!! புத்த மதத்தினர் இந்துக்காளாகவே வாழ்ந்தனர்.

(வலம்புரிச் சங்கு பற்றி முன்னரே நான் ஒரு ஆய்வுகட்டுரை எழுதியுள்ளேன். அதில் சங்கின் மகிமையைக் கண்டுகொள்க)

askokar, by thiru arul grand father, fb

இதோ அசோகன் அனுப்பிய பொருட்களின் பட்டியல்:

Gift list from Asoka
வெண் சாமரம், மகுடம், வாள் வெண்கொற்றக் குடை, பாதுகைகள், தலைப்பாகை, காதணிகள், கமண்டலம், ஆரங்கள், மஞ்சள் சந்தனக்கட்டைகள், சுத்தமே செய்யத் தேவை இல்லாத ஆடைகள், விலை உயர்ந்த அங்கி, நாகர் கொணர்ந்த தைலம், செம்மண், அனோதத் தடாக நீர், கங்கை நீர், வலம்புரிச் சங்கு, பொற்கலசங்கள், விலை உயர்ந்த மெத்தை.

இவை அனைத்தும் பட்டாபிஷேகத்துக்குத் தேவையானவை

பருவம் கொழிக்கும் எழில் மங்கை
உயர்ந்த மூலிகைகள்
6000 வண்டி நிறைய பறவைகள் கொணர்ந்த மலை அரிசி

இலங்கையில் கங்கை நதி

இந்தியர்கள் உலகம் முழுவதும் நாகரீகத்தை எடுத்துச் சென்றனர். இதனால் உலகம் முழுதும் எல்லா நதிகளின் பெயரும் தண் (ணீர்) என்ற தமிழ் சொல்லிலோ அல்லது கங்கை என்ற பெயரிலோ இருக்கும். தண்ணீருக்கு மட்டுமே சம்ஸ்கிருதத்தில் 280 சொற்கள் உண்டு. அதை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க.

இலங்கையில் எல்லா நதிகளையும் கங்கை என்றே அழைப்பர். “நதி” என்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல்லே “கங்கை”!! உலகம் முழுதும் கங்கை உண்டு என்பதை முந்தைய ஆய்வுக்கட்டுரையில் தந்துள்ளேன். மீகாங் என்ற தென் கிழக்கு ஆசிய நாட்டு நதி “மா கங்கா” என்றும் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் ஓடும் “காங்கோ” என்பது கங்கையின் மரூஉ என்றும் எகிப்தின் நைல் நதி நீல நிறத்தில் இருப்பதால் நைல் என்றும் லண்டனில் ஓடும் தேம்ஸ் நதி, வால்மீகி வாழ்ந்த தமஸா நதி போல மந்தமாகப் (தாமஸமாக) பாய்வதால் தேம்ஸ் என்று அழைக்கப்டுவதாக கின்னஸ் நூல் கூறி இருப்பதையும் விளக்கி இருக்கிறேன். ஐரோப்பாவில் டான்யூப் முதலிய நதிகள் “தண்”ணீர் என்ற வேச் சொல்லில் இருந்து பிறந்தவை என்பது அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உலகில் உள்ள எல்லா மொழிகளையும் தமிழ், சம்ஸ்கிருதம் என்ற இரண்டு மொழிகளில் அடக்கிவிடலாம் இரண்டும் பாரத மண்ணில் பிறந்தவை. இவ்விரு மொழிகளையும் சிவபெருமான் அளித்ததாக திருவிளையாடல் புராணம் பகரும். தென்கிழக்காசியா முழுதும் எல்லா மொழி எழுத்துக்களும் அசோகன் பயன் படுத்திய பிராமி லிபியில் இருந்து வந்தவையே. ஆனால் இவை எல்லாம் தமிழ்நாடு வழியாக பல்லவ கிரந்தம் என்னும் எழுத்தில் இருந்து சென்றவை. இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் எழுத்துக்களும் பிராமி லிபியில் இருந்து வந்தவையே. பிராமி என்பது சரஸ்வதி தேவியின் பெயர். சிங்களம் முதல் பாஷா இந்தோநேஷியன் வரை எல்லாம் நாம் உலகிற்கு வழங்கிய கொடையே!

jai_silver_wterpot
Jaipur Maharaja took Ganges water in six huge silver pots to England by ship

இங்கிலாந்துக்கு கப்பலில் கங்கை நீர்
கங்கை நீர் — நாகரீகம் தோன்றிய நாள் முதல் பிரசித்தமானது. இன்றும் லண்டனில் நாங்கள் பூஜையில் உபயோகிக்கிறோம். மதுரை மீனாட்சி கோவிலுக்கு ‘டன்’ கணக்கில் லாரிகளில் வருவதாக ம.க.சுந்தரேச பட்டர் என்னிடம் சொல்லுவார். ஜெய்ப்பூர் மகாராஜா கப்பலில் இங்கிலாந்துக்குச் சென்றபோது ஆறு பிரமாண்டமான வெள்ளிப் பானைகளில் கங்கை ஜலம் கொண்டு சென்றார். இன்றும் பூஜைகளில் எந்த நீரை வைத்தாலும் அதில் கங்கையை ஆவாஹனம் செய்யும் வழக்கம் உண்டு. தீபாவளிக்கு எங்கு குளித்தாலும் கங்கையில் குளித்த புனிதம் உண்டு என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா?” என்பர். “அல்வா சாப்பிட்டாயா? லட்டு சாப்பிட்டாயா? பட்டாசு வெடித்தாயா?” என்பதெல்லாம் பின்னர் வரும் கேள்விகளே!

ganga jal
Ganges water seller in Rishikesh

கங்கா மதா கீ ஜெய்!!

கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.

2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!

arumuga navalar
Sri Lanka stamp on Arumuga Navalar, great Tamil scholar.

மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!! – பகுதி 2
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1293 தேதி: 17 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஐந்தாவது கட்டுரை.

கட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது இரண்டாம் பகுதி.

17.யானை மூலம் குழந்தைக் கொலை
அத்தியாயம் 35:– சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” — என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை முதுகிலேற்றிக் கொண்டு சென்று அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது. மூர்த்தி நாயனாரையும் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னனையும் யானையே மன்னனாகத் தேர்ந்தெடுக்கிறது.

சங்க இலக்கியத்திலும் இதை ஒட்டிய ஒரு காட்சி உண்டு.

புறநானூறு பாடல் 46 (கோவூர்க்கிழார் பாடியது)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தனது எதிரியான மலையமான் குழந்தைகளை யானையின் காலடியில் வைத்து நசுக்குங்கள் என்று உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு பதறிப்போய் கோவூர்கிழார் என்னும் புலவர் ஓடோடி வருகிறார்.
“மன்னா, என்ன காரியம் செய்கிறாய்? ஒரு புறாவுக்காக தன்னுயிரையே கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் நீ. இவர்களோ பால் மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகள். பூதாகார கருப்பு உருவம் உடைய யானையைக் கண்டு மகிழக்கூடிய வயது. புது முகங்களைக் கண்டால் மருளுவர். உடனே இந்த இழி செயலை நிறுத்து” — என்கிறார். மன்னனும் புலவனின் நல்லுரைக்குச் செவி சாய்க்கிறான். இதோ அப்பாடல்:—

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
களிறு கண்டு அழூ உம் அழா அல் மறந்த
புன் தலைச் சிறார்; மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கணோ உடையர்;
கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்மே! (புறப் பாடல் 46)

ganesh
Sri Lanka stamp with Lord Ganesh

18.நாகர் பட்டியல்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலை கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—
நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்):
கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.
(( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க))

19.கஜபாகு
இலங்கை வரலாறு தமிழர்களுக்குச் செய்த பெரிய உதவி கஜபாகு பற்றிய குறிப்பாகும். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலம்பு. இதன் மூலம் சேரன் செங்குட்டுவன் காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது உறுதி ஆயிற்று.
கஜபாகு ஆட்சி மகாவம்ச 35 ஆம் அத்தியாயத்தில் உளது

new year stamp
Sri Lanka Stamp on New Year

2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!

20.மதுரைப் பாண்டியன்
மகாவம்சத்தில் மிகவும் சுவையான விஷயம் பாண்டிய நாட்டு இளவரசிகள் இலங்கைக்கு வந்ததாகும்; இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து வந்த விஜயன், குவென்னா என்ற ஒரு யக்ஷிணியைக் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை ( ஒரு மகன், ஒரு மகள்) ஆகிறான். ஆனால் உயர்குலத்து (க்ஷத்ரிய) மங்கை ஒருவளை ராணியாகப் பெறும்வரை மன்னன் ஆக முடிசூட்ட மாட்டேன் என்கிறான். உடனே மந்திரிமார்கள், ஒரு தூதர் குழுவை அமைத்து, முத்துக்களையும் விலை உயர்ந்த நகைகளையும் கொடுத்து பாண்டிய மன்னனிடம் பெண் கேட்க அனுப்புகின்றனர்.

தூதர்களும் கப்பல் மூலம் சென்று மதுரை மாநகரை அடைகின்றனர். (இது கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பதால் முதல் தமிழ் சங்கம் கொலு வீற்றிருந்த தென் மதுரையாக இருக்கலாம் என்பது என் கருத்து. இப்போதைய மதுரை அல்ல)

மதுரையில் பாண்டிய மன்னனும் மந்திரிகளைக் கலந்தாலோசித்து தன் பெண்ண அனுப்ப முடிவு செய்கிறான். உடனே மதுரை நகர தெருக்களில் தண்டோரா போடுகிறார்கள்:

“இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்…… மதுரை மாமன்னனின் மகள் — இளவரசியை — விஜனுக்கு மணம் முடிக்கப் போகிறோம். அங்குள்ள மந்திரிமார்களுக்கும் பெரிய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெண்கள் தேவை. இதுவரை நூறு பெண்கள் வந்து இருக்கிறார்கள். இன்னும் யார் யார் இலங்கைத் தீவுக்குப் போக விருப்பமோ அவர்கள் அனைவரும் இரண்டு மாற்று உடைகளுடன் வீட்டு வாசலில் நின்றால் மன்னரின் ஆட்கள் அழைத்துச் செல்வர். பெண்களை அனுப்புவோருக்கு மாமன்னன் நஷ்ட ஈடும் வங்குவார். தகுதிக்கு ஏற்ப இலங்கை செல்லும் பெண்களுக்கு யானை, குதிரை, தேர் வாகன வசதிகளும் அனுப்பப்படும்” — இந்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமான தமிழ்ப் பெண்கள் முன்வந்தனர். அவர்கள் கொண்டுவந்த இரண்டு உடைகளுடன் மன்னனும் ஆடை அணிகலன்களை வழங்கி கப்பலில் ஏற்றி விடுகிறான்.

AnandaCoomaraswamy
Sri Lanka Stamp on Ananda Coomaswamy, great art historian

கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு முன்கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இவர்கள் இலங்கையில் மகாதிட்டு என்னும் இடத்தில் கரை இறங்கினர்.

((ஆதாரம்: மகாவம்சம் அத்தியாயம் 7))

பின்னர் பழைய மனைவி குவென்னாவை, விஜயன் கெஞ்சிக் கூத்தாடி பணம் கொடுத்து வழியனுப்பியதையும், அவளை யக்ஷர்களில் ஒருவனே, ஒரே குத்தில் கொன்றதையும் மஹாவம்சப் படுகொலைகள் கட்டுரையில் தந்துவிட்டேன்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு மஹாவம்ச வரி “18 குடிகள்”. தமிழ்நாட்டில் அகஸ்தியர் குடியேறியபோது வடக்கில் இருந்து 18 குடிகளை அழைத்துவந்தார் என்பது நச்சினார்க்கினியர் உரைதரும் விஷயம்!!

மஹாவம்சத்தை எல்லா தமிழர்களும் படிக்கவேண்டும். இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இன்னும் சில சுவையான விஷயங்களைத் தருவேன்.

கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.

contact swami_48@yahoo.com

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

God heiroglyph

Indra Dwaja symbol meant GOD in Egypt!

ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1289; தேதி:– 15th September 2014.

This article was already published in English.

உலகம் முழுதும் இந்திரன் வழிபடப்படுவது பாரத மக்களுக்கு பெருமைதரும் விஷயமாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதி தீரத்தில் ஒலித்த அதே மந்திரங்கள் இன்று இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோவில்களில் விழாக் காலங்களில் ஒலிப்பதும், “த்ரி கால சந்தியா வந்தனம்” செய்யும் பிராமணர்களின் வீடுகளில் நாள்தோறும் ஒலிப்பதும் அதிசயத்திலும் அதிசயமான விஷயம் ஆகும்.

அதைவிட அதிசயம், கரிகால் சோழன் முதல் சிலப்பதிகார காலம் வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட இந்திர விழா இன்றும் நேபாளத்தில் அதே பெயரிலும் தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் “நீர்ப் பெருக்கு விழா” (Water Festival) என்ற பெயரிலும் கொண்டாடப்படுவதாகும். இதை எல்லாம் பார்க்கும்போது ‘’ஒல்காப்புகழ் தொல்காப்பியன்’’ ஏன் இந்திரனையும் வருணனையும் தமிழ் தெய்வங்கள் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடினான் என்பதும் தெள்ளிதின் விளங்கும்.
Vientine, Laos
Indra in Vientine, Laos (South East Asia)

இதைவிட வியப்பான விஷயங்களைச் சொல்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம். ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனின் பெயரில் உள்ள அண்டிரன் (Andiran) என்பது இந்திரனின் பெயர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் பிராமணப் பெண் புலவர் அண்டிரனைப் பாடிய புறநானூற்றுப் பாடலில் இந்த ரகசியத்தை வெளியிடுகிறார். அதை விட வியப்பான விஷயம் எகிப்தில் இந்திர த்வஜத்துடன் இந்திரனைக் கடவுள் என்ற பெயரில் வணங்கியதாகும். சுமேரியர் என்ன சளைத்தவரா? கிரேக்கர்கள் என்ன இளைத்தவரா? அவர்களும் கும்பிட்டதோடு வானத்தில் உள்ள நட்சத்திரத்துக்கும் இந்திரன் பெயர்சூட்டினர்.

தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்திரன் சிலை இருப்பதும், நேபாளம் முதல் கண்டி வரை இன்றும் மக்கள் தம் மழலைச் செல்வங்களுக்கு இந்திரன், இந்திராணி, சசி போன்ற பெயர்களைச் சூட்டி மகிழ்வதும் நாம் அறிவரும் அறிந்ததே.

இந்திர அதிசயம் 1
எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்!
indra saci nepal
Indra in wooden sculpture , Nepal

இந்திர அதிசயம் 2
சுமேரியாவில் அண்டர ANDARA என்றால் இந்திர என்று ஒரு புத்தகம் (India We Lost) கூறுகிறது. சுமேரிய, பாபிலோனிய மெசபொட்டோமிய நாகரீகம் நிலவிய இராக், சிரியா பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி (Dictionary of the Near East) கூறுகிறது.
பழைய பாரசீக மொழியில் உள்ள Zend Avesta செண்ட் அவஸ்தாவில் இந்திரன் பெயர் இரண்டு இடங்களில் வருகிறது என்றும் அதுவும் அண்டிர என்ற சப்தத்தில் இருப்பதாகவும் இன்னொரு நூல் பகரும்.

இந்திர அதிசயம் 3
இந்திய புராணங்களில் இந்திரன் மனைவி பெயர் அய்ந்திரி Aindri. ஆக கணவன் பெயர் அய்ண்டிரன் என்பதில் பொருத்தம் உளது. மேலும் இந்திரன் மனைவி இந்திராணி, புலோமன் என்ற அசுரனின் பெண். ஆக ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை பொய் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்திரன் கொன்ற 30 அசுரர்களில் இருவர் பிராமணர்கள்! ஆக இதுவும் ஆரிய திராவிட இனவெறிக் கொள்கையைத் தகர்க்கிறது.

Indra-Jatra-14-,nepal

Indra Festival in Nepal

இந்திர அதிசயம் 4
கிரேக்கர்கள் கும்பிட்ட ZEUS சூஸ், ரோமானியர்கள் கும்பிட்ட JUPITER ஜூபிடர், நார்வீஜியர் கும்பிட்ட THOR தோர், கெல்ட்ஸ் கும்பிட்ட TARANIS தாரனிஸ் ஆகியோர் இந்திரன் போன்றே “இடி” எனும் வஜ்ர ஆயுதத்தை THUNDERBOLT கையில் வைத்திருப்பதை முன்னொரு கட்டுரையில் கண்டோம். இதைவிட முக்கியமான செய்தி கேட்டை நட்சத்திரம் ஆகும். “ஜ்யேஷ்டா” என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த நட்சத்திரத்துக்கு அதிதேவதை இந்திரன். அந்த கிரேக்க நட்சத்திரத்தின் பெயர் ANTARES அண்டாரெஸ். அண்டிரன் என்பதையே இப்படி சொல்கிறார்கள். அவருக்கு இதற்கு விளக்கம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு இதற்கு வேறு பொருள் கற்பித்தனர்!

இந்திர அதிசயம் 5
ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடல் PURANANURU 240-மற்றும்-241-ல் இரண்டு முக்கியச் செய்திகளைக் கூறுகிறார்.

1.ஆய் அண்டிரன் இறந்தவுடன் “வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலில்” அவனை வரவேற்க முரசுகள் முழங்கி வானில் ஒலி எழுந்தது என்கிறார் புலவர்.— இதற்கு மூன்றுவிதப் பொருள் உண்டு (அ) அவர் இறந்த அன்று மழைமூட்டமாக இருந்ததால் இடி இடித்தது (ஆ) அவர் நிறைய கொடையளித்துப் புண்யம் சம்பாதித்ததால் அவர் சொர்க்க (இந்திர) லோகம் போவார் (இ) அவர் பெயரில் அண்டிரன் / இந்திரன் இருப்பதால் புலவர் இப்படிப் பாடினார். இந்தக் கடைசி பொருளே சரி என்பது என் முடிவு. மற்ற எல்லா இடங்களிலும் மேல் உலகம் என்று புலவர்கள் பாடுவர். இங்கோ ‘வச்சிரத் தடக்கை நெடியோன் கோவில்’ — என்று இந்திரன் பெயரை நீட்டி முழக்குகிறார் புலவர். இதே வரியை இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்துகிறார்.

2. இரண்டாவது செய்தி என்னவென்றால் அவனது உரிமை மகளிர் (மனைவியர்) அவனுடன் (சிதைத்தீயில்) எரிந்தனர். ‘சதி’ என்னும் இவ்வழக்கம் வட நாட்டில் அதிகம் உண்டு. இன்னொரு புறப்பாடலில் பூதப்பாண்டியன் பெருந்தேவியாரும் கணவனுடன் சிதைத் தீயில் ஏறி மாண்டதைக் காண்கிறோம். ஆய் அண்டிரன் வடக்கே இருந்து வந்த வேளிர் மரபைச் சேர்ந்தவன். கபிலரின் புறநானூறு 201 ஆம் எண் பாடலின் உரையில் வேளிர் என்போர் அகத்தியர் தலைமையில் துவாரகா புரியில் இருந்து வந்தவர்கள் என்பதை அறிகிறோம். இவை அனைத்தையும் ஒரு சேரவைத்துப் பார்த்தால் ஆய் அண்டிரன் — இந்திரன் என்ற பெயரைக் கொண்டதில் வியப்பில்லை.

indra nepal 3
Indra Festival

இந்திர அதிசயம் 6
இந்திரனை அடிக்கடி காளைமாடு என்று ரிக்வேதம் வருணிக்கிறது. சிந்து சமவெளியிலும் முத்திரைகளில் காளைகளே அதிகம். அதுமட்டுமல்ல. உலகின் பழைய நாகரீகங்களில் யானைச் சின்னம் உள்ளது சிந்து சமவெளியில் மட்டுமே. இந்திரனுடைய வாகனம் யானை வாகனம் என்பதோடு அத்தகைய சின்னம் ஒன்றும் சிந்துவெளியில் கிடைதிருக்கிறது. ஒரு யானையின் மேல் ஒரு உருவம் நிற்க அதன் மேல் சக்ர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆக இந்திரன் எனபவர் மத்திய ஆசியாவில் அல்லது சைபீரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தெய்வம் என்ற கூற்று எல்லாம் பொய்யாய்ப் ப்ழங்கதையாய்ப் போயிற்று!!

இந்திர அதிசயம் 7
இந்திரனுக்கு ஒதுக்கப்பட்ட திசை கிழக்கு என்பதாலும் அவர் மேலை நாட்டில் இருந்து இறக்குமதியானவர் இல்லை என்பது புலப்படும். இந்திய இந்திரனே குதிரையிலும், காளையிலும், யானையிலும் ஏறி உலக வலம் வந்தான் என்று கொள்வதே சாலப் பொருத்தம்!!
antares_m4_stargazerbob_600

Red Colour Jyeshta (kettai in Tamil) Antares Star in Scorpio constellation.

தொல்காப்பியம் புகழும் இந்திரன் வாழ்க !!
தமிழ் தெய்வம் இந்திரன் வெல்க !!!

“தமிழில் பழ மறையைப் பாடுவோம்” – பாரதியார்.
“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” — பாரதியார்.

contact swami_48@yahoo.com

மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்?

killing 3

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1285; தேதி: 13 செப்டம்பர் 2014
மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது மூன்றாவது கட்டுரை

மாமன்னன் அசோகன் பற்றி மூன்று அதிசய விஷயங்கள், இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூலான மஹாவம்சத்தில் உள்ளன.

1)“தர்ம: அசோகன் அவனுடைய 99 சகோதரர்களைக் கொன்று பதவிக்கு வந்தான். அவனுக்கு முந்தைய ஆறு பேர் ஒவ்வொருவரும் அவரவர் அப்பாவைக் கொன்றுதான் பதவிக்கு வந்தனர்.

2) தர்ம அசோகனுக்கு முன்னர் கறுப்பு அசோகன் என்பவன் ஒருவன் ஆண்டான். ((வெள்ளைக்காரகள் எழுதிய இந்திய வரலாற்றில் இவனைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருட்டடிப்பு செய்துவிட்டனர்)).

3) அசோகனின் மனமாற்றத்துக்கு காரணமான “கலிங்கப் போர்” பற்றி மஹாவம்சத்தில் எதுவுமே சொல்லவில்லை!!
150 ஆண்டுகளுக்கு உன் வெள்ளைக்காரர்கள் எழுதிய வரலாற்றைதான் இன்னும் நம்மவர்கள் படித்துவருகிறார்கள். அவர்கள் இந்துமத புராண அரசர் பட்டியலை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புத்தமத செய்திகள மட்டும் எடுத்துகொண்டனர். புத்த மதம் இந்து மதத்தின் எதிரி என்று எண்ணி ஏமாந்து அதற்கு மட்டும் ஆதரவு கொடுத்தனர். சமண மதம் பல நாடுகளுக்குப் பரவாததால் அந்த மதத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.

இந்துமத புராண அரசர் பட்டியலை ஏற்றால் மனித குலம் கி.மு.4004ல் தோன்றியது என்ற பைபிள் பிரசாரகர்களின் கூற்று எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும் அது மட்டும் அல்ல. கலீலியோ, கோபர்நிகஸ் போல உயிரையோ கண்களையோ இழக்க நேரிடும். இதற்கெல்லாம் பயந்த ஆங்கில, ஜெர்மானிய அறிஞர்கள் (?? !!) இந்து புராண அரசர் வரிசையை அப்படியே குப்பையில் வீசிவிட்டனர். இதனால் கறுப்பு அசோகன் பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை.

புராணங்களில் முன்னுக்குப் பின்முரணான அரசர் பட்டியல் இருப்பது உண்மையே. ஆனால் சமண, பௌத்த, கிறிஸ்தவ நூல்கள் எல்லாவற்றிலும் முரணான விஷயங்கள் உண்டு. நூற்றுக்கணக்கன பைபிள்கள் முரண்பட்டு நிற்கவே அத்தனையையும் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான் டி நோபிளில் தீக்கிரையாக்கிவிட்டு ஒரே பைபிள் வைத்துக் கொண்டனர். அதிலும் முரண்பாடு உண்டு, யூதமத கதைகளுக்கும் கிறிஸ்தவ மதக் கதைகளுக்கும் இடையேயும் ஒரே விஷயம் பற்றி முரண்பாடு உண்டு என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர்.

மஹாவம்ச படுகொலைப் பட்டியலைக் கொடுப்பதற்குக் காரணம் இது பற்றி இந்தியர்கள் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிதல் வேண்டும் என்பதே—அதாவது இந்தியா பற்றி இதில் கூறப்பட்ட விஷயங்களின் உண்மையைக் கண்டறிதல் நம் கடமை. வெள்ளைக்காரன் எழுதியவற்றை இன்றும் அப்படியே பாடப்புத்தகத்தில் வைத்திருப்பது மடமை!!!

படுகொலைப் பட்டியல்:—

1)அத்தியாயம் 4:
பிம்பிசாரன் மகன் அஜாத சத்ரு அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அஜாத சத்ருவின் மகனான உதயபட்டகன் அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
உதயபட்டகன் மகனான அநிருத்தன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அநிருத்தன் மகனான முண்டா, அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.
முண்டாவின் மகனான நாகதாசகன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.

மக்களுக்கு ஒரே கோபம், “இதென்னடா அப்பனைக் கொல்லும் வம்சமாக இருக்கிறதே!” — என்று ஆத்திரம் கொண்டு நாகதாசகனை நாடு கடத்தி விட்டு மந்திரி சிசுபாலனை அரசன் ஆக்கினர்.
அவனுடைய மகன் காலாசோகன் (கறுப்பு அசோகன்) 28 ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்தான். அவன் தான் புத்த மதத்தின் இரண்டாவது மாநாட்டை நடத்தினான்.

அப்போது புத்தர் சமாதி அடைந்து (பரி நிர்வாணம் எய்தி) நூறு ஆண்டுகள் ஆயிற்று. ஆளாளுக்கு “புத்தர் சொன்னது இது — புத்தர் சொன்னது அது” என்று பிரசாரம் செய்யத் துவங்கினர் (அதாவது புத்த மதத்துக்குள் பிளவுகள் தோன்றத் துவங்கின).

killing 2

2) அத்தியாயம் 5:
பிந்துசாரன் மகனான் ‘’தர்ம’’ அசோகன், அவனது சகோதர்கள் 99 பேரையும் கொன்றுவிட்டு ஜம்பூத்வீபம் முழுதையும் அரசாளத் துவங்கினான். இவர்கள் மாற்றாந் தாய்களுக்குப் பிறந்தவர்கள்.
(( புத்த மதத்தைத் தழுவுவதற்குக் காரணமான அவனது கலிங்கப் போர் பற்றி மகாவம்சம் எதையும் சொல்லவில்லை!! ))

3) அத்தியாயம் 7:
விஜயனின் முதல் மனைவி குவன்னா ஒரு யக்ஷிணி வம்சப் பெண். மதுரையில் இருந்து பாண்டிய நாட்டுத் தமிழ் பெண் வந்துவிட்டதால் அவரை ராணியாக்கப் போகிறேன், தயவுசெய்து நீ உன் இரண்டு மகன்களுடன் ஓடிப்போய்விடு என்று கெஞ்சுகிறான். அவள் முதலில் தயங்கிவிட்டு வெளியே போனவுடன் யக்ஷர்களில் ஒருவன் ஒரே குத்தில் அவளைக் கொலை செய்கிறான். இரண்டு பிள்ளைகளும் வெளியே நின்றதால் தப்பித்துவிடுகின்றனர்.

4) அத்தியாயம் 9:
இளவரசர்கள், காலவேலன் என்ற அடிமையையும், சித்தன் என்ற இடையனையும் கொலை செய்கின்றனர்.

5) அத்தியாயம் 10:
இளவரசர்கள் எட்டு மாமன்மார்களையும் எதிரிப் படைகளையும் கொன்று குவித்து எலும்புக்கூடு மலையை உருவாக்குகின்றனர்.

killing 1

தமிழர் படுகொலைகள்

6)அத்தியாயம் 33:
தளபதி கம்மஹாரதகன், மன்னன் கல்லாட நாகனை தலைநகரிலேயே வெற்றிகொண்டான். அந்த துரோகியை அரசனுடைய தம்பியான காமனி கொன்றான்.
பாஹியா என்ற தமிழன் புலஹதா என்ற தமிழனைக் கொன்று 2 வருடம் ஆண்டான்.
படைத்தலைவன் பணயமாறன், பாஹியாவைக் கொன்று 7 வருடம் ஆண்டான்.
பணயமாறனை பிழையாமாறன் கொன்று 7 மாதம் ஆண்டான்.
தாதிகன் என்ற தமிழன் பிழையாமாறனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
இந்த ஐந்து தமிழர்களும் ஆண்ட காலம் 14 வருடம், 7 மாதங்கள்.

தனசிவன் என்பவனை அரசன், வில் எய்து கொன்றான்
கபதீசன் என்ற மந்திரி மரியாதையாக நடந்துகொள்ளாததால் அவனை அரசன் கொன்றான்

7) அத்தியாயம் 34:

ராணி அனுலா , வடுகன் என்ற தமிழ்த் தச்சனைத் திருமணம் செய்துகொள்கிறாள். விறகுவெட்டி மீது காதல் கொண்டு வடுகனை விஷம்வைத்துக் கொலை செய்கிறாள்.
அடுத்ததாக நிலீயன் என்ற பிராமணன் மீது காதல் கொண்டு விறகுவெட்டி திஸ்ஸனைத் தீர்த்துக் கட்டினாள்.
பின்னர் நிலீயனையும் விஷம் வைத்துக் கொண்ருவிட்டு தானே 4 மாதங்களுக்கு நாட்டை ஆள்கிறாள்.
அந்தக் காமாந்தகி அனுலாவை குடகன்ன திஸ்ஸா என்பவன் போரில் கொல்கிறான்.

8) அத்தியாயம் 35:
இலங்கைத்தீவு முழுதும் உயிர்க்கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். அவனை அவன் சகோதரன் கனிராஜனு திஸ்ஸ கொன்றுவிட்டு 3 வருடங்கள் ஆண்டான்!!
தீசவாபியில் நடந்த விழாவின்போது சந்தமுகசிவனைக் கொன்றுவிட்டு அவன் தம்பி யசாலக தீசன் 8 வருடங்கள் ஆண்டான்.
சுபா என்பவன் அரசன் போல நடிப்பது வழக்கம். அதை அரசனும் ரசித்து மகிழ்வான் அவன் ஒருநாள் அரசன் தலையைச் சீவுமாறு உத்தரவிட்டு தானே அரசாளத் துவங்கினான். விளையாட்டு வினை ஆயிற்று!!

வசபன் என்ற பெயர்கொண்டவன் அடுத்ததாக அரசாளுவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயருள்ள எல்லா இளைஞர்களையும் கொல்ல அரசன் உத்தரவிட்டான். அப்படியும் வசபன் என்பவன் அரசன் ஆகிவிடுகிறான்.

9) அத்தியாயம் 36:
குஜநாகன் தம்பி, குஞ்சநாகன் என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு 2 வருடங்கள் ஆண்டான்.
அபயன் என்பவன் மலயத்தில் அரசனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
மூன்று லம்பகர்ணர்களில் ஒருவனான சங்கதீசன் விஜயகுமாரன் என்ற அரசனிடம் சேவகம் புரிந்து பின்னர் அவனைக் கொலை செய்கிறான். அவன் 4 வருடங்கள் ஆண்டான்.
அவனை மக்கள் விஷம் வைத்த நாவல் பழம் மூலம் கொலை செய்கின்றனர்.

ஜேததீசன் என்ற மன்னன் துரோகம் செய்த மந்திரிகளைத் தந்திரமாகக் கொல்கிறான். தந்தையின் சவ ஊர்வலத்தில் எல்லோரையும் வரவழைத்து சவம் அண்மனை வாசலைத் தாண்டியவுடன் கதவை மூடி அனைத்து அமைச்சர்களையும் தீர்த்துக்கட்டுகிறான். அவர்களின் உடல்களை கம்பத்தில் நட்டு வைக்கிறான்.

THAILAND-SOUTH-UNREST

10) அத்தியாயம் 37:
மகாவம்சம் படுகொலைகளுடன் துவங்கி படுகொலைகளுடன் முடிகிறது. மஹாவிகாரத்தை இடித்ததால் கோபம் கொண்ட ராணி ( மஹாசேனன் மனைவி ) தேரர் சங்கமித்ராவையும், அமைச்சர் சோனாவையும் ஒரு தொழிலாளி மூலம் படுகொலை செய்கிறாள்.

போரில் கொல்லப்படவர்களை நான் கணக்கில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஆதிகாலம் முதல் போரில் கொல்வது அநியாயம் அல்ல, படுகொலை அல்ல என்று உலகம் ஒப்புக்கொள்கிறது. இன்றுவரை நீடிக்கும் சர்வதேச விதிமுறைகளும் நடைமுறைகளும் இதை ஏற்கின்றன.

அன்பென்று கொட்டு முரசே—மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும்—இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் – பாரதியார்

–சுபம்–
Pictures are taken from different websites; not related to stories here;thanks.