சத்ரபதி சிவாஜி: சத்ய சாயிபாபா அருளுரை! (Post No.4097)

Written by S NAGARAJAN

 

Date: 20 July 2017

 

Time uploaded in London:- 5-51 am

 

 

Post No.4097

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பெரியோரின் ஆசி

சத்ரபதி சிவாஜியின் நமஸ்காரம்!-ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை!

ச.நாகராஜன்

 

 

ஸ்ரீ சத்ய சாயிபாபா 24-7-2002 அன்று நிகழ்த்திய குரு பூர்ணிமா உரை குறிப்பிடத்தகுந்த ஒன்று.

 

அதில் அணு ரகசியத்தை விளக்கிய கணாதரைப் பற்றிய அனைத்தையும் விவரிக்கிறார்.

 

அந்த உரையில் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு அருமையான சம்பவத்தை எடுத்துரைக்கிறார்.

ஒருமுறை சத்ரபதி சிவாஜி மஹாராஜாவும் அவரது மந்திரியும் மாலை நேரத்தில் உலா சென்று கொண்டிருந்தனர்.  அப்போது எதிரில் ஒரு புத்த துறவி வந்து கொண்டிருந்தார். சிவாஜி தனது மகுடத்தைக் கழட்டி விட்டு அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். மந்திரிக்கோ இது பிடிக்கவில்லை.

 

ஒரு சாதாரண துறவியின் பாதங்களில் மாமன்னனான சாம்ராட் சிவாஜி அடி பணிந்து வணங்குவதா? அவர் மனம் இதை ஏற்கவில்லை.

 

மந்திரியின் மன ஓட்டத்தை சிவாஜி ஒரு கணத்தில் புரிந்து கொண்டார். மந்திரிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

 

சிவாஜி மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக தர்ம வழியில் நின்றவர்; தனது சகலத்தையும் தியாகம் செய்தவர்.

 

ஒரு நாள் தனது மந்திரியை சிவாஜி அழைத்தார். உடனடியாக ஒரு வெள்ளாட்டின் தலை, ஒரு செம்மறி ஆட்டின் தலை, ஒரு மனிதனின் தலை ஆகிய மூன்றையும் கொண்டு வருமாறு உத்தரவு பிறப்பித்தார்.

 

மந்திரிக்கு வெள்ளாட்டின் தலையையும் செம்மறி ஆட்டின் தலையையும் கொண்டு வருவதில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை.

 

ஆனால் மனிதனின் தலை?!!!

சுடுகாட்டிற்குச் சென்று அங்கு ஒரு சவமாக இருந்த மனிதனின் தலையை வெட்டி அதைக் கொண்டு வந்தார்.

மந்திரி கொண்டு வந்த மூன்று தலைகளையும் சிவாஜி பார்த்தார். உடனடியாக சந்தைக்குக் கொண்டு சென்று அவற்றை விற்குமாறு மந்திரியிடம் அவர் உத்தரவு பிறப்பித்தார்.

 

வெள்ளாட்டின் தலை மற்றும் செம்மறி ஆட்டின் தலை ஆகிய இரண்டையும் மந்திரியால் உடனடியாக விற்க முடிந்தது.

ஆனால் மனிதனின் தலை? அதை யாரும் வாங்க முன்வரவில்லை.

 

இரண்டு நாட்கள் மந்திரி முயன்று பார்த்தார், ஊஹூம், பயனில்லை.

 

யாரும் அதை வாங்க முன் வராத நிலையில் சத்ரபதியிடம் சென்று தன் இயலாமையை மந்திரி கூறினார்.

 

உடனே சிவாஜி, “ மந்திரி அவர்களே! பார்த்தீர்களா?  ஒரு துறவியின் பாதங்களில் என் சிரத்தை வைத்து வணங்கிய போது நீங்கள் வெகுவாக வருத்தப்பட்டீர்கள். உடலை விட்டு உயிர் பிரிந்த போது செத்த மனிதனின் தலைக்கு என்ன நேர்கிறது என்பதை நீங்கள் பார்த்து விட்டீர்கள். அதை நிலை தான் ஒவ்வொருவனுக்கும் நேரும். அதற்கு மதிப்பே இருக்காது. ஆகவே உயிருடன் இருக்கும் போது மிகப் பெரும் ஆத்மாக்களின் முன்னர் பணிந்து வணங்கி நம்மை நாம் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். புரிகிறதா?” என்றார்.

 

தர்ம நெறி வாழ்வும் சத்தியமுமே மனிதனுடன் எப்போதும் கூட வந்து அவனைக் காப்பாற்றும்.

 

மந்திரி இதைப் புரிந்து கொண்டார்.

தனது உரையின் இறுதியில் மீண்டும் சிவாஜியைக் குறிப்பிட்ட பாபா, துரியோதனனையும் எடுத்துக் காட்டாகக் கூறினார்.

துரியோதனனின் கடைசி விநாடிகளில் அவன் கூறினான்: “ நான் உயிருட்ன இருந்த வரை மிகவும் மரியாதையுடன் மதிக்கப்பட்டேன். நாளை இந்த உடல் காக்கைகளுக்கும் நரிகளுக்கும் தான் விருந்தாக ஆகப் போகிறது”

இதை உணர்ந்து தர்ம நெறியுடன் வாழ வேண்டும் என்றார் பாபா.

அருளாளர்கள் அனைவருமே பெரியோரைப் பணிந்து அவர்கள் ஆசியைப் பெறுதல் வேண்டு என்பதைத் தங்கள் வாழ்வில் வற்புறுத்தி வந்துள்ளனர்.

 

சத்ரபதி சிவாஜி துகாராம் மஹராஜைப் பார்த்து அவருடனேயே தங்கி விடுவதாகச் சொன்ன போது, “வேண்டாம். ஸ்வராஜ்யமே உனது பணி. அதை அடை” என்று அருளினார்.

சமர்த்த ராமதாஸரோ அவரது குருவாக ஒவ்வொரு விஷயத்திலும் சிவாஜிக்கு அருள் பாலித்தார்.

‘உனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்’ என்று ஆசீர்வதித்த ஸ்ரீ சமர்த்த ராமதாஸர், “நான் உன அருகிலேயே உள்ள பாலிக் கோட்டையில் தான் தங்கியுள்ளேன்” என்று அருளினார்.

அதன் பின் பாலிக் கோட்டைக்கு சஜ்ஜன் கர் – “ஆன்றோர் உறைவிடம்” எனப் பெயர் சூட்டப்பட்டது.

பெரியோரைப் பணிவது எவ்வளவு பயனைத் தரும் என்பதை சத்யசாயி பாபா சத்ரபதி சிவாஜியைச் சுட்டிக் காட்டிக் கூறியது எவ்வளவு பொருள் பொதிந்தது!

***

 

 

தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் (Post No.4092)

Written by London Swaminathan


Date: 18 July 2017


Time uploaded in London-14-06


Post No. 4092


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மனிதர்களுடைய பெயர்கள் காலத்துக்கு காலம் மாறுபடும்; சங்கத் தமிழ் நூல்களில் வழங்கும் பல பெயர்கள் இப்பொழுது புழக்கத்தில் இல்லை; இதே போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல பெயர்களை நாம் இப்பொழுது நமது குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. உலகில் மாறாத பொருட்கள் இல்லை. மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது (Change is inevitable) . உடை, உணவு, மொழி எல்லாமே மாறுபடும் என்பது அனுபவத்தில் கண்ட விஷயம்!

சுமார் ஐந்தாம் நூற்றாண்டிலேயே புனிதவதி, திலகவதி, பரம தத்தன் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதை காரைக்கால் அம்மையார் சரித்திரம் அதற்குப்  பின்னர் வந்த அப்பர் சரித்திரம் ஆகியன காட்டும். ஆனால் நப்பசலை, நச்செள்ளை போன்ற பெண்களின் பெயர்களை நாம் இப்போது பயன்படுத்துவதில்லை. ஆயினும் சங்க காலத்தில் கேசவன், தாமோதரன், வால்மீகி, பிரம்மா, கபிலர், பரணர் போன்ற சம்ஸ்கிருதப் பெயர்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினர்.

சங்கத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை தமிழில்  மொழி பெயர்த்து வைத்துக் கொண்டனர். காமக்கண்ணி என்ற சங்கப் புலவரின் பெயர் காமாக்ஷி என்ற தெய்வத்தின் பெயராகும். வேத கால இந்திரனின் பெயரை காஷ்மீர் முதல், இலங்கையின் கண்டி வரையுள்ள எல்லோரும் பயன்படுத்துகிறோம். ஜாதி வித்தியாசமின்றி எல்லோரும் ராஜேந்திரன், மஹேந்திரன், உபேந்திரன் என்றெல்லாம் இந்திரன் பெயரை வைத்துக் கொள்கிறோம். இதே போல ஊர் என்பது சங்க காலத்திலேயே உள்ளது. இது புரம், பூர் (Jaipur, Nagpur, Jodhpur) என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் தொடர்புடையது. சங்க காலத்துக்கு முன்னமே சம்ஸ்கிருத நூல்களில் உள்ளது.

 

(என்னுடைய கொள்கைப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திலிருந்து பிறந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான ஒற்றுமைகளைக் காணலாம். இவை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால் மாக்ஸ்முல்லர், வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்கள் சொன்னதெல்லாம் வெறும் ஊகமே — தவறான ஊகங்களே — என்பது உறுதியாகின்றது)

 

இதோ சில சுவையான கல்வெட்டுப் பெயர்கள்:

கல்வெட்டுகள் அனைத்தும் இந்து முறைப்படிதான் திசைகளைக் குறிக்கும்— பூர்வ, தக்ஷிண, பஸ்சிம, உத்தர = கீழ் பாலெல்லை, தென்பாலெல்லை, மேல் பாலெல்லை, வட பாலெல்லை). இது இந்துக்களின் கண்டுபிடிப்பு. கோவிலை வலம் வருதல், கடிகராத்தில் முள் வலமாகச் சுற்றல் எல்லாம் , உலகிற்கு இந்துக்கள் கற்பித்த நாகரீகம்!

 

கி.பி. 550

சிம்மவர்மன் (சிம்ஹவர்மர்), வஜ்ர நந்தி, நரபயன் (ஆணத்தி)

 

கி.பி.675

பரமேச்சுரன், அநந்தசிவ ஆசாரியர்

 

ஒன்பதாம் நூற்றாண்டு

சதுர்புஜன், சதுர்வக்த்ரன்,, அத்ரி, புரூரன், நஹுஷன், தசவதனன், தார்தராஷ்டிரன், வானரத்வஜன், ஹரிச்சந்திரன், சிரிவல்லன், வரகுணன், சிரிகண்டராசன், வீரநாரணன், ஸ்ரீ பராந்தக மஹாராஜன், பரமேஸ்வரன், காடக ஸோமயாஜி, மாயா நாராயண பட்டர், நாராயணங் கேசவன், கண சுவாமி பட்டர், யோகேசுவர பட்டர், மாதவன், சிரீவல்லன், நக்கன்

11ஆம் நூற்றாண்டு

வீர கேரளன், வீர பாண்ட்யன், வினைய கஞ்சுகன், விசால சீலன், கோவிந்த சுவாமி பட்டச் சோமாசி, வாசுதேவ பீதம்பரப் பட்டன்,

ப்ரஹ்ம ஸ்ரீதுங்க ராஜ, ராஜ சிம்ஹ, மாங்குடிச் சோலைக் கிழவன், இளவளம்புல்லன், அரையன், வேற்சாத்தன், சாத்தன்.

 

கி.பி.865

கருநந்தடக்கன், விஷ்ணு பட்டாரகன், குமாரசுவாமி பட்டன், இளையான் கண்டன், வெண்ணீர் வெள்ளாளன், சாத்த முருகன், சிங்கங்குன்றப் போழன்.

 

ராரஜராஜன் லெய்டன் செப்பேடு

கிருஷ்ணன் ராமன், பருத்திக் குடையான் வேளான், மூவேந்த வேளான், ஆரூரன்,  தத்தன் சேந்தன்,  பொற்காரி, , தாமோதர பட்டன், , கற்குடையான் பிசங்கன்,  சங்கர நாராயணரங்கன், , தம்மடி பட்டன், தியம்பக பட்டன், கொற்றன் பொற்காரி, சூற்றியன் தேவடி, தேவன் சாத்தன்,

தளிக்குளவன், குமரன் ரங்கன், சிங்கன் வெண்காடன்,   தம்மடிப் பட்டன், ஸ்ரீதரபட்டன், பற்பநாப பட்டன், வெண்ணைப் பட்டன்,  நந்தீஸ்வர பட்டன், அமுதன் தீர்த்தகரன், அரைசூர் மறியாடி, வேட்கோவன் மாதேவன், காஸ்யபன் ஸூர்யரங்கன், பாரத்வாஜி திரித்தி வைகுந்தன், சதுர்முகனரங்கன், கண்ணன், தேவன் குடையான், பூவத்தபட்டன், நள்ளாறன், கற்பகஞ் சோலை, கணவதி, முண்டனரங்கன், ராஜேந்திர சோழ பட்டன்.

TAGS: கல்வெட்டு, தமிழ்ப் பெயர்கள், லெய்டன், சங்கப்புலவர்

 

–சுபம்-

 

பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)

பூர்வ, தக்ஷிண, பச்சிம, உத்தர சதுச் சமுத்ராதிபதி கிருஷ்ண தேவ மகாராயர் (Post No.4089)

 

Written by London Swaminathan


Date: 17 July 2017


Time uploaded in London-16-08


Post No. 4089


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

முஸ்லீம்களின் படை எடுப்பிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியவர் இருவர்: தென்னகத்திலிருந்து முஸ்லீம் படை எடுப்பாளர்களை விரட்டியவர் கிருஷ்ண தேவ ராயர்; வடநாட்டிலிருந்து விரட்டியவர் வீர சிவாஜி.

கிருஷ்ண தேவ ராயர் போல கோவில்களுக்கு தானம் செய்தவரும் இல்லை; இலக்கியத்தை வளர்த்தவரும் இல்லை. திருப்பதி கோவிலுக்கு வாரி வழங்கியுள்ளார். ஆமுக்த மால்யதா என்ற காவியத்தைத் தெலுங்கில் எழுதினார். அவர் ஒரு வீர வைஷ்ணவர்; திருப்பாவை மீது அலாதிப் பிரியம் கொண்டவர்.

ஆமுக்தமால்யதா என்பது ஆண்டாள்- விஷ்ணு கல்யாணம் பற்றிய கவிதை ஆகும்.

 

 

1509 ஆம் ஆண்டு முதல் 1529 ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளுக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்டார்; அதை விரிவாக்கினார். இவரது சபையில் அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு பேரறிஞர்கள் இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற இருவர் அல்லாசானி பெத்தண்ணா, தெனாலி ராம (கிருஷ்ணா)

 

துளுவ வம்சத்தை ஸ்தாபித்தவர். திருப்பதி முதல் திருவண்ணாமலை வரை கோவில்களுக்கு தானம் வழங்கினார்.

 

திரு ஈங்கோய் மலை மீதுள்ள க்ருஷ்ண தேவ மகாராயரின் கல்வெட்டு அவருடைய வீரதீரச் செயல்களை விவரிக்கின்றது. அவருடைய பட்டங்கள் கம்பீரமான சொற்களை உடையது.

 

முதலில் கல்வெட்டின் சுவையான பகுதிகளைக் காண்போம்:

 

இந்தக் கல்வெட்டுக்குத் தீங்கு செய்வோருக்கு காசியில் பிராமணர்களையும் பசுக்களையும் கொன்ற பாவம் வரட்டும் என்று சாபம் தரும் பகுதியைக் கவனிக்கவும்.

பசுவுக்குத் தீங்கு செய்வோருக்கு, அதுவும் காசியில் தீங்கு செய்வோருக்கு வரும் பாபம்= அதாவது பல படங்கு பாவம்!!

 

கடைசியில் ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது; அதன் பொருள்:-

“தான், தானம் செய்வதைக் காட்டிலும் மற்றவர் கொடுத்ததைத் திறம்பட நிர்வகிப்பது இரு மடங்கு பலன் தரும்

பிறர் கொடுத்ததை அபகரித்தால், தான் செய்த புண்ணியங்களும் வீணாகிப் போய்விடும்” என்று கல்வெட்டு எச்சரிக்கிறது.

அருமையான எச்சரிக்கை.

இறை வணக்கமாகக் கல்வெட்டின் ஆரம்பத்திலுள்ள ஸ்லோகம் பரம சிவனின் அருளை வேண்டுகிறது.

இக் கல்வெட்டு கிருஷ்ணவேணி ஆற்றங்கரையில் மகர சங்கராந்தித் திருநாளன்று (பொங்கல் திருநாள்) மன்னன் எழுந்தருளிய போது சோழ மண்டலத்திலுள்ள சிவன், விஷ்ணு கோவில்களுக்கு பத்தாயிரம் வராகன் பொன் தானம் செய்ததைக் கூறுகிறது

 

கோவில்களுக்கு சோடி, சூல வரி, புற வரி, அரச பேறு ஆகிய வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதைக் கல்வெட்டு விளம்புகிறது.

 

விஜய நகரத்திலிருந்து புறப்பட்ட மன்னர் எந்தெந்த மன்னரை வெற்றி கொண்டு உயிருடன் சிறைப்படுத்தினார் என்பதையும் இது குறிக்கிறது.

இந்த வெற்றிகளைக் குறிக்கும் வண்ணம் பொட்டுனூரில் ஒரு வெற்றித் தூண் நிறுவியதையும் கல்வெட்டு சொல்கிறது.

இவைகளில் பெரும்பாலும் தெலுங்குதேச வெற்றிகளாகும். தென்னகத்தின் மிகப் பெரும்பகுதியை ஆண்டவர் ராயர். இவருடைய பொக்கிஷங்களை மதிப்பிட வந்த ஐரோப்பியர் இவைகளை மதிப்பிடவே முடியாது; அவ்வளவு விலைமிகுந்த ரத்தினங்கள் என்று எழுதி வைத்துள்ளனர்.

 

திருச்சி மவட்டத்தில் திரு ஈங்கோய் மலை மீதுள்ள மரகதாசலேசுவரர் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது; கல்வெட்டின் காலம் சக வருஷம் 1439, அதாவது கி.பி.1517.

இதோ அந்தக் கல்வெட்டு

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ நமஸ்துங்க சிரச்சும்பி

சந்த்ர சாமரசாரவே

த்ரைலோக்ய நகராரம்ப

மூலஸ்தம்பாய சம்பவே”

 

“ஸ்ரீ விசயாயாப்யுதய சாலிவாகன சகாப்தம் 1439 இதின்மேல் செல்லாநின்ற ஈசுவர (பிலவங்க) சம்வத்சரம் (புஷ்ய மாசத்துப் பௌர்ணமி நாள்) ஸ்ரீமன் மஹாமண்டலேஸ்வர,

அரியராய   ரவிபாடன்,

பாஷைக்குத் தப்புவராய கண்டன்,

கண்டநாடு கொண்டு,

கொண்டநாடு கொடாதான்

 

பூர்வ தக்ஷிண பச்சிம உத்தர சதுச் சமுத்ராபதிபதி

(East, South, West, North நாற்கடலை எல்லையாக உடையவர்)

ஸ்ரீ வீரப்ரதாப, ஸ்ரீ வீரகிருஷ்ண தேவ மகாராயர்

சோழ மண்டலத்து விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம், முதலான தேவஸ்தானங்களுக்கு சோடி, சூல வரி, புறவரி, அரசபேறு மற்றும் உண்டா னது எல்லாம் சர்வமானியமாக திருவுளம் பற்றின தர்மசாசன ராயசம்.

 

நாம் விசய நகரத்திலிருந்து புறப்பட்டு, பூர்வ திக்கு விசையார்த்தம் எழுந்தருளி உதயகிரி துர்கமும் யிரிசிக் கொண்டு,

திருமலை ராகுத்தராயனையும் பிடித்துக்கொண்டு, வினி கொண்டை, வெல்லம கொண்டை, நாகார்ச்சுன கொண்டை,  கொண்டை வீடு, கொண்டை  பள்ளி ராசமகேந்திரவரம்,  முதலான துர்கங்களும் இரிசிக்கொண்டு,

 

பிரதாபருத்ர கசபதி பிரகலாதன், சிரச்சந்திரன், மல்லூகான், உத்தாண்டகான்,  முதலான பாத்திர சாமந்தரையும் சீவக்கிரகமாகப் பிடித்துக்கொண்டு, பிரதாபருத்திர கசபதியையும் முறியவெட்டி, சிங்காத்திரிக்கு எழுந்தருளி, பொட்டு நூரில் ஜயஸ்தம்பம் நிறுத்தி,

 

சோள மண்டலத்தில் தேவஸ்தானம் திருச்சிராப்பள்ளி, திரு ஈங்கோய்மலை, சந்தலைகை, திருக்காட்டுப்பள்ளி, திருமழவாடி, வல்லம், தஞ்சாவூர் திருநல்லூர், திருவாரூர், திருநகரி, திருவையாறு, திருவெழுந்தூர், இராசுராமப்பாளையம், திருவாஞ்சியம், திருப்புகலூர், திருப்பனந்தாள், திருநாங்கூர்,  தாடலங்கோயில், சீர்காழி, ச்ரிகண்டபுரம் உள்பட இரண்டாற்றுப் பற்றுச் சீர்மை, புவனேகவீரன் பட்டனச் சீர்மை, ராசராசச்சுர சீர்மை, தஞ்சாவூர்ச் சீர்மை  , வீரமடக்குச் சீர்மை, வழுதலம்பட்டுச் சீர்மை, வழுவத்தூர்ச் சீர்மை பெரம்பூர்ச் சீர்மை,

குழித்தண்டலைச் சீர்மை,  உடபட விஷ்ணுஸ்தானம், சிவஸ்தானம் தேவஸ்தானங்களில்  பூர்வம் அரண்மனைக்கு இறுத்து வருகிற சோடி, சூலவரி, ஆயம் ஸ்தலயாதிக்கம் பதினாயிரம் பொன்னிலே

(அந்தந்த தேவஸ்தானங்களுக்கு மகரசங்கராந்தி புண்ணியகாலத்திலே கிருஷ்ணவேணி தீரத்திலே)

உண்டவல்லி அநந்தசாயி சந்நிதியிலும்

விசயவாடை மல்லிகார்ச்சுன தேவர் ஆக

தாராபூர்வமாகச் சர்வமானியமாகவிட்டு (தர்மசாசன ராயசமும் பாவித்தோம். இந்த ராயசப்

பிரமணத்திலே எல்லா தேவஸ்தானங்களிலும்)

சிலாசாசனம் எழுதிவிச்சு பூஜை புனஸ்கரமும் அங்கரங்க    வைபோகமும், திருப்பணிகளும் சாங்கோபாங்கமாக ஆசந்திராதித்த (Moon and Sun) ஸ்தாயியாக நடத்திகொண்டு சுகத்திலே இருக்கவும்

 

இந்த தர்மத்துக்கு அகிதம் (harm) நினைத்தவன் தங்கள் மாதா பிதாவையும் கோ பிராமணரையும் வாரணாசியிலே கொன்ற பாவத்திலே போகக்கடவராகவும்.

 

ஸ்வ  தத்தாத்   விகுணம் புண்யம் பர தத்தானுபாலனம்

பரதத்தாபராரேன ஸ்வதத்தம் நிஷ்பலம் பவேது

     

Source: Kalvettu- An Intoduction, Archaological Department of Tamil Nadu, year 1976

 

–Subham–

 

வேத காலம் கி.மு.4500 ஏன்? எப்படி? திலகர் விளக்கம் (Post No.4007)

Written by London Swaminathan
Date: 16 June 2017
Time uploaded in London- 15-49
Post No. 4007
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

பால கங்காதர திலகர் பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்; பத்திரிகையாளர்; சம்ஸ்கிருத அறிஞர்; எழுத்தாளர். அவர் 1856-ல் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். 1920ல் பம்பாயில் உயிர்நீத்தார். அவர் எழுதிய கீதா ரஹஸ்யம் என்ற நூலும்  ஓரியன் அல்லது வேத காலம் குறித்த ஆராய்ச்சி என்ற (The Orion or Researches into the antiquity of the Vedas) நூலும் மிகவும் புகழ்பெற்ற நூல்கள். அவர் வேத இலக்கியத்தில் குறிப்பிடப்படும் நட்சத்திரங்களின் நிலைகளை ஆராய்ந்து அவை கி.மு.4500-ஐ ஒட்டி எழுதப் பட்டிருக்க வேண்டும் என்கிறார். பெரும்பாலான பாடல்கள் கி,மு 3500-க்கும் 2500-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பட்டிருக்க லாம் என்பது அவரது துணிபு.

அவர் ஏன் இந்த ஆராய்ச்சியில் இறங்கினார் என்பதை அவரே தனது வேத கால ஆராய்ச்சிப் புத்தகமான ஓரியனில் (அரையன் என்றும் சொல்லுவர்) சொல்கிறார்

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் திருவாதிரை, மிருகசீர்ஷம் முதலிய நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நூலின் முகவுரையில் திலகர் சொல்லுவதாவது:–

 

 

1893 ஆம் ஆண்டில் அவர் எழுதுகிறார்:- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தேன். அதில் “மாதங்களில் நான் மார்கழி” –  என்று கிருஷ்ணர் சொல்லுவதிலிருந்து வேத காலம் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைக்கலாம் என்று எண்ணினேன். ஆதிகால காலண்டர் வேதங்களில் உள்ளது. அதுபற்றி லண்டன் மஹாநாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அதுவோ கட்டுரை அளவுக்கு நிற்காமல் புத்தகம் அளவுக்கு விரிந்தது.

அங்கே சுருக்கத்தை மட்டும் அனுப்பிவிட்டு புத்தகத்தை சில  மாறுதல்கள், பிற்சேர்க்கைகளுடன் வெளியிடுகிறேன்.

கட்டுரையின் தலைப்பிலிருந்தே நான் எதைப் பற்றி ஆராய்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது கி.மு.2400க்கு முன் வேத காலத்தைத் தள்ளுவதற்கு ஒரு தயக்கம் காணப்படுகிறது. ஆனால் வேதங்களில் குறித்துள்ள விஷயங்கள் இதை கி.மு.4000-க்குப் பின்னர் என்று சொல்லமுடியாத தெளிவான குறிப்புகளாக உள்ளன.

சம இரவு நாள் எனப்படும் Vernal Equinox வெர்னல் எக்வினாக்ஸ் அப்பொழுது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் இருந்தது. இது தொடர்பாக வேத கால இலக்கியத்தில் உள்ள கதைகள், பாடல்களைக் காட்டுகிறேன். அவைகளை அறிவுபூர்வமாக விளக்குகிறேன். இதன் மூலம் வேதங்களில் உள்ள கதைகளுக்கு விளக்கமும் கிடைக்கிறது. மேலும் ஈரான், கிரீஸ் ஆகிய நாடுகளில் உள்ள புராணக் கதைகளுடன் இது ஒத்து இருக்கிறது இது இறுதியான ஒரு முடிவு என்று சொல்ல முடியாது. ஆனால் நான் புராணக் கதைகளையோ, சொல் ஆராய்ச்சி அடிப்படை யிலோ  என் வாதங்களை எழுதவில்லை . ஆகையால் அக்கதைகளை தவறு என்று காட்டினாலும் வேதகால இலக்கியம் முழுதும் சிதறிக்கிடக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட எனது  வாதங்களைப் பாதிக்காது.

 

என்னால் முடிந்த அளவுக்கு புரியாத வானியல் (Technical) பதங்களைத் தவிர்த்துள்ளேன். ஆயினும் காலக் கணக்கீடு பற்றிய இந்திய முறைகளை அறியாதோருக்கு, இது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். என்னுடைய வாதங்களை ஏற்று,  ஒருவேளை இரண்டாவது பதிப்பு தேவைப்பட்டால் அப்பொழுது இந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கி எழுதுவேன்.

 

நான் வானியல் தொடர்பான விஷயங்களையே எழுதினாலும் பெண்ட்லியின் (Bentley) புத்தகத்தைப் பார்த்தவர்களுக்கு இது வான சாத்திரம் கூட அல்ல, சுலபமான ஒரு கட்டுரை என்று புரியும்.

ரிக்வேத காலத்தை நான் மிகவும் பழைய காலத்துக்குத் தள்ளுகிறேனோ என்று சிலர் நினைக்கலாம். ஆனால் வரலாற்று அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிகளில் உண்மையைக் கண்டுபிடிப்பதே நோக்கம் ஆதலால் அத்தகைய அச்சங்கள் தேவையற்றது.

 

ஏற்கனவே கோல்ப்ரூக், பெண்ட்லி (Colebrook, Bentley and others) முதலியோர் போன வழியில்தான் நானும் போகிறேன். ஆயினும் நான் சொல்லும் சம்ஸ்கிருத விளக்கங்கள் சரியா இல்லையா என்பதை சம்ஸ்கிருத அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.

 

இன்னொரு விஷயம், இந்தப் புத்தத்தில் சேர்க்கப்படவில்லை. ராமனின் ஜாதகம், மஹாபாரதப் போர்க்கால கிரஹ நிலைகள் ஆகியவற்றைக் கொண்டு சிலர் ராமாயணம், மஹாபாரதம் ஆகியன கி.மு.5000 அல்லது 6000 என்று கணித்து, வேதங்கள் அதற்கும் முந்தையவை என்று வாதிடுகின்றனர். அதே குறிப்புகளை வைத்து ராமரின் ஜனனம் கி.மு. 961 என்று பெண்ட்லி காட்டுவதால் இந்த வகையான கணக்குகளும் அறிக்கைகளும் எவ்வளவு லேசானவை என்பதை அறியலாம். இப்போது நம்மியையே உள்ள முரணான விஷயங்களைக் கொண்ட புராணங்கள் முந்தைய பழைய வடிவத்தில் நம் கைகளில் தவழாமல் இருக்கலாம். மேலும் மஹாபரத போரின்  போதான கிரஹ நிலைகள் குழப்பமாக உள்ளன. நல்ல அல்ல கெட்ட கிரஹ நிலைகளைக் காட்ட அவர்கள் இப்படிச் சொல்லி இருக்கலாம்.

 

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்து காத்திருந்ததை வைத்து அவர் கிருத்திகை நட்சத்திர காலத்தில் (Krithika Period)  வாழ்ந்தது தெரிகிறது. ஆனால் இப்போது நம்மிடமுள்ள பாரதம் போர் முடிந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டதாகும்

 

இதற்குப் பின்னர் திலகர் மாக்ஸ்முல்லர் முதலியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஒரு சம்ஸ்கிருதப் பழமொழியைத் தருகிறார் “ஒரு தங்கம் தூயதா இல்லையா என்பதை நெருப்பில் புடமிட்டுப் பார்த்தால் தான் தெரியும்”. இந்த வாசத்துடன் என் ஆராய்ச்சிப் புத்தக த்தை உங்கள் கைகளில் தருகிறேன். என்னுடைய மற்ற பணிகளால் (சுதந்திரப் போராட்டம்) எதிர்காலத்தில் இந்த ஆராய்ச்சிக்கு இவ்வளவு நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆயினும் நியாயமான ஓரச் சார்பில்லாத ஒரு விவாதத்துக்கு என் ஆய்வுக்கட்டுரை வழி செய்தால் அதுவே எனக்கு திருப்தி தரும். நம்முடைய நாகரீகத்தின் மிகப் பழைய பதிவுகள் நம்முடைய புனித நூலகளில் உள்ளன. அவற்றின் பழமையை ஆராய இது துணை புரியட்டும்.

 

புனா, அக்டோபர் 1893  பி.ஜி. திலக்

 

–Subham–

 

 

மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி! (Post No.4002)

Written by S NAGARAJAN

 

Date: 15 June 2017

 

Time uploaded in London:-  6-01  am

 

 

Post No.4002

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 26-5-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

 

by ச.நாகராஜன்

 

 

கர்வம் என்பது ஒரு ஆயுதம் – 2003ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெய்ஸ் ஆஃப் ஈவில் என்ற படத்தில் ஹிட்லர் கூறுவது

 

 

ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளுக்கு ஒரு கணக்கே இல்லை,

இவற்றில் மிகவும் மோசமான கொலைகள் கருணைக் கொலை என்ற பெயரில் நடத்தப்பட்டவை தாம்!

 

உடல் ஊனம் அல்லது குறைபாடு ஹிட்லரைப் பொறுத்த மட்டில் ஒரு மருத்துவக் குறைபாடு அல்ல. அது இனத்தின் மரபணுவில் இருக்கும் ஒரு குறைபாடு என்று கருதப்பட்டது.

ஹிட்லர் “தனது ஆர்ய இனம்” என்பது உயரிய இனம் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோரைச் சிறை செய்து கருணக்கொலை செய்து அவற்றின் மூளைகளை ஆய்வு செய்யக் கட்டளையிட்டான். இந்த மூளைகள் இன்னும் இருக்கின்றன.

 

 

இவற்றை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி இந்த மூளைக்குச் சொந்தக்காரர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 

இந்த ஆயிரக்கணக்கான மூளைகள் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிலைடுகள் உள்ளிட்டவை அனைத்தும் மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிரது.

2017, ஜூன் மாதம் துவங்கி மூன்று ஆண்டு காலம் 15 லட்சம் யூரோ (ஒரு யூரோ என்பது சுமார் 70 ரூபாய்) செலவில் இந்த பிரம்மாண்டமான ஆய்வு தொடங்க உள்ளது

இந்த மூளை ஆய்வுத் திட்டத்திற்கு அகிடன் டி 4 (Akiton T4)  என்று பெயர்.

 

தனது உயரிய இனத்தைச் “சுத்தமாக” வைத்துக் கொள்ள ஹிட்லர் 1933இல் தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டான். மனம் மற்றும் உடல் ரீதியிலான குறைகள் இனத்தை அசுத்தப்படுத்தும் குறைகள் என்பது அவனது கருத்து.

 

1940இல் டி4 திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் உடல் ஊனமுற்றோர் சிறை பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கு என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் இருந்த கருணைக்கொலைக்கான ‘மருத்துவ தொழிற்சாலை மையங்க’ளுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு மரண ஊசி போடப்பட்டது. பெரியவர்க்ள் கேஸ் சேம்பரில் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

 

 

இப்படி கொல்லப்பட்டோர் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதியாயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐந்து சதவிகிதம் பேரின் மூளைகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

 

மூளைகள் அனைத்தும் பெர்லினில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்ட்ன. இந்த நிறுவனம் ஏராளமான விஞ்ஞானிகள் நோபல் ப்ரிசு பெற வழி வகுத்த ஒரு அருமையான நிறுவனம்.

 

 

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இதை மாக்ஸ்பிளாங்க் சொஸைடி தன் வசம் எடுத்துக் கொண்டது. விஞ்ஞானிகள் தாஙகள் மேற்கொண்ட மூளை மற்றும் செல் ஆராய்ச்சிக்கு இங்கு வந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மூளைகளைப் பயன்படுத்தலாயினர்.

 

1980ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இன்னும் ஏராளமான மூளைகளைக் “கண்டுபிடித்தனர்”.

மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடி 1933 முதல் 1945 முடிய ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டோரின் மூளைகளை மூனிச்சில் உள்ள ஒரு கல்லறையில் புதைத்து வைத்திருந்தது. இவை இப்போது எடுக்கப்பட்டு விட்டன.

 

எழுபது ஆண்டுகள் கழித்து செய்யப்பட இருக்கும் இந்த மூளை ஆராய்ச்சி மிக பிரம்மாண்டமானது.

 

இதில், கொல்லப்பட்டோரை அடையாளம் கண்டு பிடித்து அவர்கள் பெயருடன் உரிய விதத்தில் அந்த மூளைகளைப் புதைப்பதும் ஒரு பெரிய நினைவுச் சின்னத்தை எழுப்புவதும் இந்த ஆய்வின் முடிவில் செய்யப்படும்.

 

எதிர்காலத்தில் யாரும் இப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை விஞ்ஞானத்தின் பெயரால் செய்யக்கூடாது என்பதற்கும் வரலாற்றை முறைப்படுத்துவதற்குமான ஒரு ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது.

 

உலகம் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வந்து விட்டது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மர்யா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marya Sklodowska)  என்ற இயற் பெயருடைய பெண்மணி தான் பின்னால் நோப பரிசு பெற்று பிரபலமான விஞ்ஞானி மேடம் க்யூரி (1867-1934) ஆவார். இளமையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பின்னால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்.

 

 

சிறிய வயதிலேயே ஒரு விஷயத்தில் மனதைக் குவித்து கவனம் செலுத்துவதில் அவரது திறமை அபாரமாய் இருந்தது. ஒரு நாள் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது சகோதரி அவரைச் சுற்றி நாற்காலிகளை வரிசையாகச் சுற்றி அடுக்கலானார் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் க்யூரி படித்துக் கொண்டிருந்தார்.

 

படித்து முடித்த பின்னர் அவர் ஒரு நாற்காலியைத் தொட அனைத்து நாற்காலிகளும் சரிந்து விழுந்தன. ‘என்ன முட்டாள்தனமான் காரியம் செய்திருக்கிறாய் என்பது தான் அவரது ஒரே கமெண்ட்..

 

மிகுந்த ஏழ்மையின் காரணமாகவே மிகுந்த தாமதத்துடன் 1891இல் அவர் சார்போன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பாரிஸில் தான் தன் எதிர்காலக் கணவரான பால் அபெல்லை (Paul Appelll) அவர் சந்தித்தார். தனது பரிசாக அவர் இளம் பெண்மணியான கியூரிக்கு அவர் தந்தது எலக்ட்ரோ மாக்னெடிஸம் பற்றிய ஒரு கட்டுரை தான்!

 

க்யூரிக்கும் அவரது கணவருக்கும் விருதுகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவே இல்லை. லண்டன் ராயல் சொஸைடியால் வழங்கப்ப்ட்ட டேவி மெடலை தங்களின் குட்டிப் பெண்ணான ஐரீனுக்கு அவர்கள் விளையாடுவதற்காகத் தந்தனர். (ஐரீன் பின்னால் தன் கணவருடன் இணைந்து ஒரு நோபல் பரிசைப் பெற்றவர்). அதை ஐரீன் பிக் கோல்ட் பென்னி – பெரிய தஙகத்தினால் ஆன பென்னி நாணயம்- என்று சொல்லி விளையாடிக் கொண்டிருப்பாராம்.

1903இல் நோபல் பரிசு பெற்றவுடன் ஏராளமான பேர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். ஒரு நாள் மாலை பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் அதிகார பூர்வ இல்லமான எல்ஸி அரண்மணையில் நடந்த ஒரு விருந்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவரை விருந்துக்கு அழைத்தவர் க்யூரியிடம் கிரீஸ் தேசத்து அரசர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க விருப்பமா என்று கேட்டார். “அவரைப் பார்த்து எனக்கு என்ன ஆகப் போகிறது” என்று கூறிய க்யூரி அரசரைச் சந்திக்க விரும்பவில்லை.

 

தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தி உழைப்பால் உயர்ந்தார் எளிய குடும்பத்தில் பிறந்த இந்த மேதை.

****

 

 

அக்பர் பற்றிய 3 சுவையான சம்பவங்கள் (Post No.3989)

Translated by London Swaminathan

Date: 10 June 2017

Time uploaded in London- 14-58

Post No. 3989

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

contact: swami_48@yahoo.com

ரெவரெண்ட் ஆஸ்பார்ன் மார்டின் என்பவர் 1914 ஆண்டில் ‘இந்தியாவின் கடவுள்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். அதில் ஆங்கிலத்தில் தந்துள்ள மூன்று சம்பவங்களைத் தமிழில் தருகிறேன்.

All the three stories are summarised from ‘The Gods of India’ by Rev E Osborn Martin, London, year 1914.

 

 

அக்பர் பூர்வ ஜன்மத்தில் இந்து சந்யாசி!

ஆக்ரா கோட்டையில் முகுந்தா என்பவரின் சிலை உள்ளது. இந்த முகுந்தனின் கதை என்ன வென்றால் அவர் முன் ஜன்மத்தில் ஒரு இந்து சந்யாசி. ஒரு நாள் அவர் பசும்பால் குடிக்கையில் பசுவின் ஒரு முடி (ரோமம்) அவர் வயிற்றுக்குள் சென்றுவிட்டது; பாலை வடிகட்டாமல் குடித்ததால் நேரிட்ட தவறு இது. ஆகவே பிராயச்சித்தமாக ஆக்ரா கோட்டையினை ஒட்டி ஓடும் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார். எவ்வளவோ பெயர்கள் தடுத்தும் தனது தவறுக்கு தனக்குத் தானே தண்டனையும் கொடுத்துக்கொண்டார்.

 

இவர் எவ்வளவுதான் தண்டனை கொடுத்துக் கொண்டாலும், யமனின் கணக்குப்படி, அது போதவில்லை. ஆனாலும் இவர் தவம் செய்த நல்ல சந்யாசி. ஆகவே இவரை அடுத்த ஜன்மத்தில் மொகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியாக– அக்பர் சக்ரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார்.

அக்பரிடம் வந்த இந்துப் பேய்!

காலரா, அம்மை முதலிய நோய்கள்  தெய்வக் குற்றங்களால்தான்   வருகின்றன என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆகவே நோய் வரும் பருவத்தில், அதைத் தடுக்க பிரார்த்தனை, விழாக்கள் ஆகியன செய்வர். ஆனால், சாதாரண மனிதனை கும்பிடும் வழக்கம் அபூர்வமே; அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இது.

 

பண்டல்கண்ட் பகுதியில் ஒரு ராஜா இருந்தார். அவர் பெயர் வீர சிம்ம தேவன். அவருக்கு இரண்டு புதல்வர்கள்; அவர்களுடைய பெயர்கள் ஹரதர், ஜாஜர். அகபரின் மகன் ஜஹாங்கீர்,  ஹரகரரைக் கொண்டு அபுல் பாசல் என்ற பெரிய இலக்கிய கர்த்தாவைக் கொலை செய்யச் செய்தார். அபுல் பாசல் அக்பரின் அரசவையை அலங்கரித்த எழுத்தாளர். அயினி அக்பரி என்ற பெயரில் அக்பரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர்.

 

காலம் உருண்டோடியது; வீர சிம்மன் இறந்தான்; உடனே இரு புதல்வரில் ஒருவரான ஜாஜர் பதவிக்கு வந்தான். தனது சகோதரன் தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தான். உடனே தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி ஹரதருக்கும் அவனது தோழர்களுக்கும் ஒரு விருந்து வைத்து அதில் விஷத்தைக் கலக்கச் செய்து கொன்று விட்டான். இது நடந்தது கி.பி.1627ல்.

இதற்குச் சில காலத்துக்குப் பின்னர் ஜாஜரின் சகோதரி, இளவரசி கம்சவதிக்குத் திருமணம் நிச்சயமாகியது. அவரது தாய் எல்லோருக்கும் பத்திரிக்கை அனுப்பிக் கொண்டிருந்தாள்;

“அட! செத்துப் போன சகோதரனுக்கும் ஒரு பத்திரிக்கை வைக்க மறந்துவிடாதே”– என்று கிண்டல் தொனியில் சொன்னான் ஜாஜர்.

ஆனால் கம்சவதி உண்மையிலேயே ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹரதரின் சமாதிக்குப் போய் புலம்பினாள்

திடீரென்று கல்லறைக்குள்ளிருந்து ஒரு கை நீட்டி அந்தத் திருமணப்  பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு கல்யாணத்துக்கு வருவதாக உறுதியும் கூறியது.

திருமண நாளில் ஹரதர் (பேய்) வந்த அடையாளங்களும் தெரிந்தன. தக்க மரியாதைகளுடன் ஹரதர் வரவேற்கப்பாட்டார். அன்று இரவு அந்தப் பேய் அக்பரின் படுக்கை அறைக்குச் சென்று “எனக்கு ஊர் தோறும் சின்னம் ஏற்படுத்து. உனது நாட்டில் இயற்கை சேதம் ஏதும் வராமல் காப்பேன்” என்று ((பேய்)) உறுதி கூறியது. அதன்படி அக்பர் சாம்ராஜ்யத்தில் பல இடங்களிலும் ஹரதர் ( பேய்க்கு) நினைவுச் சின்னங்கள் எழுப்பபட்டன. இன்றும் கிராம மக்கள் பலரும் அந்த சின்னங்களை வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கதையில் கொஞ்சம் உதைப்பது கால வழுவமைதி ஆகும். அதாவது ஹரதர் இறந்தது 1627 ஆம் ஆண்டில். ஆனால் அக்பரோ அவருக்கு முன்னதாக 1605 ஆண்டில் இறந்தார். ஆகவே பேய் வந்தது அக்பரின் படுக்கை அறையாக இருக்க முடியாது. ஒரு வேளை  ஜஹாங்கீரின் படுக்கை அறையாக இருக்கலாம்.

சூர்ய நமஸ்காரப் பிரியன்!

அக்பரின் மனைவியரில் பலர் இந்துக்கள்; அவருக்கு சர்வ சமய ஒற்றுமையில் ஆர்வம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். அவருக்கு சூரிய நமஸ்காரத்தில் ஆர்வம் ஏற்படவே சூரியனின் 1001 பெயர்களை எழுதி தினமும் படித்து வந்தார் (சூர்ய சஹஸ்ரநாமம்)

 

காலை, நன்பகல், மாலை நள்ளிரவு ஆகியவற்றில் சூரிய தேவனை வழிபட்டார். மக்களும் கும்பிடுவதற்கு வசதியாக 4 காலங்களில் பாண்டு வாத்ய இசையை முழங்கச் செய்தார். அவர் எப்படி தலையில் குட்டிக் கொண்டார், காதைப் பிடித்துக் கொண்டார் என்ற விவரங்களையும் சேர்த்து அபுல்பாசல், தனது அயினி அக்பரி புத்தகத்தில் எழுதியுள்ளார். அக்பர் 1605ஆம் ஆண்டில் இறந்தார்.

 

-சுபம்–

‘தஸ்யூ’ என்றால் திருடன்: காளிதாசன் (Post No.3983)

Research article Written by London Swaminathan

 

Date: 8 June 2017

 

Time uploaded in London- 21-14

 

Post No. 3983

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

ரிக் வேதத்தில் ‘தஸ்யூ’ (Dasyu) என்ற சொல் பல இடங்களில் வருகிறது; அதன் பொருள் குற்றம் இழைத்தவன், திருடன் , கொள்ளையன் என்பதாகும். ஆனால் இந்து மதத்தை அழித்து, இந்தியாவைப் பிளக்க வேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்கள் அந்தச் சொல்லுக்கு பழங்குடி மக்களாக ‘இருக்கலாம்’ அல்லது திராவிடர்களாக ‘இருக்கலாம்’ அல்லது ஆப்கனிஸ்தான்/பாகிஸ்தான் பகுதியில் வாழும் பிரஹுயி மொழி பேசுவோராக ‘இருக்கலாம்’ என்றெல்லாம் கதை கட்டிவிட்டனர். இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்பதை ரிக் வேதத்துக்குப் பின் எழுந்த ஐதரேய பிராமணம் என்னும் நூலும், நமக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் பறை அறிவித்துள்ளனர்.

 

உலகிலேயே அதிகம் சண்டை போட்டவர்கள் தமிழர்கள்தான். உலக வரலாற்றைப் படித்தோருக்குத் தெரியும் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் போரிட்ட இனம் உலகில் தமிழ் இனம் மட்டுமே. சங்க இலக்கியப் பாடல்களில் இப்படி சண்டை போட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வீரர்கள் என்றும் புலவர்கள் போற்றியுள்ளனர். ஆனால் அந்த மூன்று வேந்தர்களையும் யாரும் ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று சொல்லுவதில்லை. இவ்வளவுக்கும் அவர்களிடையே ஜன்மப் பகை! ‘சூ’ என்றால் சண்டைக்கு வருவர். எதிரி மன்னர்களின் மனைவியரின் கூந்தலைக் கத்தரித்து கயிறு திரித்து வெற்றிபெற்ற மன்னரின் ரதத்தை இழுத்துவந்ததாகவும், அவனது அரண்மனைகளைத் தரைமட்டமாக்கி கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது அவமானப் படுத்தியதாகவும் புறநானூற்றுப் புலவர் பாடுவர். அப்படிப் பாடிய போதும் அவர்களை

எவரும் வேற்றினமாகப் பார்க்கவில்லை.

 

ஆனால் இந்துமதத்தில் விஷ விதைகளை ஊன்ற வந்த மாக்ஸ்முல்லர்களும் கால்டுவெல்களும் சாதாரண ஒரு சொல்லுக்குப் பயங்கரப் பொருள் கற்பித்தனர்.

உலகிலுள்ள எல்லா சமய நூல்களிலும் பழைய இலக்கியங்களிலும் அதே இனத்தைச் சேர்ந்த அல்லது மாற்று இனத்தைச் சேர்ந்த எதிரிகள் வருணிக்கப்படுகின்றனர். இது தவிர திருடர், கொள்ளையர், குற்றவாளிகள் ஆகீயோரும் வருணிக்கப்படுகின்றனர். அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணன் பல இடங்களில் ‘பரந்தப:’ (எதிரிகளை தஹிக்கவைப்பவனே) என்பார் பகவத் கீதையில்; இது போல தமிழ் இலக்கியத்தில் பாலைநில மறவர்கள் எல்லோரையும் கொள் ளையடித்து கொன்ற செய்தியும் உள்ளது ஒன்றுமில்லாத ஒரு பிராமணனைக் கொன்றுவிட்டு ஐயோ இவனைக் கொன்றுவிட்டோமே என்று கையை நொடித்துக் கொண்ட பாடலும் சங்க இலக்கியத்தில் உள்ளது; ஆனால் அவர்களை

வேறு இனமாக நாம் பார்க்கவில்லை. இது போலவே ரிக்வேத காலத்தில் குற்றமிழைத்தவர்களை தஸ்யூக்கள் என்றனர்

 

காளிதாசனில் ஒரு காட்சி

காளிதாசன் எழுதிய சாகுந்தலம் நாடகம் உலகம் முழுதும் பிரசித்தம்; பல ஐரோப்பிய மொழிகளில் நீண்ட காலத்துக்கு முன்னரே மொழி பெயர்க்கப்பட்ட நூல்; 2000 ஆண்டுப் பழமை வாய்ந்தது; அதில் ஒரு காட்சி.

 

ஐந்தாம் காட்சி 21ஆவது ஸ்லோகம்

 

கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலை; அவள் உலகப் பேரழகி; கானக ரோஜா; கண்வர், ஆஸ்ரம்த்தில் இல்லாத போது துஷ்யந்தன் என்ற மன்னன் அவளை ரஹசியமாகக் கல்யாணம் செய்துகொண்டு கர்ப்பவதி ஆக்கிவிடுகிறான்; அதுமட்டுமல்ல அவளைக் கானகத்திலேயே விட்டு விடுகிறான்; செய்தி அறிந்த கண்வ மஹரிஷி, உரிய காலத்தில் ஒரு சிஷ்யன் மூலமாக துஷ்யந்தனிடம் அனுப்புகிறார். மன்னனோ ஒன்றும் அறியாத அப்பாவி போல நடிக்கிறான். அப்போது கோபமுற்ற கண்வரின் சீடன, ‘ஐயன்மீர்; திருடன் (தஸ்யூ) கொள்ளையிட்ட சொத்தை அவனிடமே திருப்பித் தரவந்துள்ளேன்’ என்று கடிந்துரைக்கிறான். இங்கே திருடனுக்கு காளிதாசன் பயன்படுத்திய சொல் தஸ்யூ. துஷ்யந்தன் திருட்டுத்தனமாக அவளை அனுபவித்து விட்டுப் போனதால் திருடன் கொள்ளையிட்ட சொத்து என்று சகுந்தலா வருணிக்கப் படுகிறாள்; ஆகவே தஸ்யூ என்பதன் உண்மைப் பொருள் திருடன்.

 

ரிக்வேதத்தில் தஸ்யூ

ரிக் வேதத்தில் தஸ்யூவைக் குறிப்பிடும் இடங்களில், அநாஸ (மூக்கு அற்றவர்), அவிரத (உரிய கருமங்களைச் செய்யாதோர்),அதேவ (கடவுளை வணங்காதோர்), அயஜ்ய ( யாகம் செய்யாதோர்) ம்ருதவாக் (கடுஞ் சொல்லுடையோர்) என்றெல்லாம் வருணிக்கப்பட்டுள்ளனர்.

 

திராவிடர்களை மூக்கு இல்லாதவர்கள் என்று எவரும் சொல்லமாட்டார்கள்; மஞ்சள் நிறத் தோலுடைய மங்கோலாய்ட் (Mongoloid) இனத்தினர் (ஜப்பான், சீனா) சப்பை மூக்குடையோர். ஜப்பானியர்களுக்கு மூக்கு இருப்பதே  தெரியாது; மேலும் திராவிடர்களுக்கு போண்டா மூக்கு, சுருட்டை முடி, முட்டைக் கண்கள் என்றெல்லாம் வெள்ளையர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே எதிரிகளைத் திட்டும்போது இப்படிப்பட்ட சொற்கள் வருவது இயல்பே.

 

உண்மையில் தமிழ் அரசர்களை காவல் காத்த யவனர்களைக்கூட ‘கடுஞ்ச் சொல்லுடையோர்’ என்று தமிழ் இலக்கியம் செப்பும்; அது போல இடையர்களைக் கல்லா இடையர் என்று தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர்.

 

ஒரு நல்ல சொல்லும் காலப் போக்கில் அவப் பெயர் பெறுவதும் , ஒரு கெட்ட சொல் காலப் போக்கில் நல்ல பொருள் பெறுவதும் மொழி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயமே.

 

 

பறை அறிவிக்கும் அரசு அதிகாரி= பறையன். ஆனால் காலப் போக்கில் தீண்டத்தகாதவன் என்று பொருள் பெற்றது. இன்றும் அதே அர்தத்தில் உலகம் முழுதும் ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும், டெலிவிஷன் ஸ்டேஷன்களிலும் பயன்படுத்துகின்றனர். வேண்டாத நாடுகளையும் தலைவர்களையும் இன்டெர்நேஷனல் பறையா (International Pariah) என்று ஓலமிடுகின்றனர். ஆக ஆங்கில அகராதியில் இடம்பெற்ற தமிழ் சொல்லுக்கு இவ்வளவு துஷ்பிரயோகம்!

 

பழைய காலத்தில் கழகம் என்றால் சூதாடும் இடம்; இன்று பல அரசியல் கட்சிகள் கழகம் என்று பெயர் வைதுக்கொண்டுள்ளன. மேலே குறிப்பிட்ட தஸ்யூவும் இப்படி பொருள் மாறி வந்து திருடன் என்று மென்மைப் பொருள் பெற்று இருக்கலாம். பூர்வ காலத்தில் அது எதிரி, குற்றவாளி, கெட்டவன் என்ற பொருளுடன் இருந்திருக்கலாம்.

 

இந்திரனை வருணிக்கும் ரிக் வேதப் பாடலும் அவனை தஸ்யூவைக் கொல்பவன் என்று சொல்கிறதே தவிர தாசர்களைக் கொல்பவன் என்று சொல்லவில்லை. ஆக தஸ்யூ என்பது கடுமையான குற்றம் இழைத்தோர் ஆவர்.  அதில் இனம் ஏதும் இல்லை. இந்திரன் கொன்ற 30 அரக்கர்களில் மூன்றே பேருக்குத்தான் தஸ்யூ என்ற சொல் சேர்க்கப் பட்டுள்ளது. ஆகவே எல்லோரும்  இப்படி அழைக்கப்படவில்லை. மேலும் வேதங்களில் தென்னகம் குறிப்பிடப்படவில்லை.; வடக்கில் திராவிடர்கள் இருந்ததும் ஊகமே.

 

–Subham–

 

 

 

காஷ்மீர் அமைச்சரின் தியாகம்! (Post No.3874)

Written by London swaminathan

Date: 3 May 2017

Time uploaded in London: 15-52

Post No. 3874

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

கல்ஹணர் என்ற பிராமணனை வெளிநாட்டு அறிஞர்கள் அனைவரும் சிலாகித்துப் பேசுவர். அவருக்கு ஏன் அவ்வளவு கியாதி (புகழ்)? ஏனெனில் இந்தியாவில் முதல் முதலில் வரலாற்றை எழுதியவர் இவர்தான் என்பது வெளிநாட்டு அறிஞர் கருத்து. சங்கத் தமிழ் நூல்களில் எண்பதுக்கும் அதிகமான வரலாற்றுச் செய்திகளை வரலாற்று மன்னன் பரணன் அளித்த போதும், அதற்கு முன்னால் 140-க்கும் மேலான தலைமுறை

 

மன்னர்களைப் புராணங்கள் பட்டியலிட்ட போதும் அதை எல்லாம் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இந்தக் காஷ்மீரி பிராமணன் 3400 க்கும் மேலான சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் “வருட”த்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதியுள்ளான்.

 

கல்ஹணர் சொன்ன பல அதிசய விஷயங்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் தந்தேன். இதோ மேலும் ஒரு அற்புதம்!

 

ரிக்வேதத்தில், தலைகொடுத்த தத்யாங்க் பற்றிப் படித்தோம். புராணங்களில் , வஜ்ராயுதம் செய்ய தன் முதுகெலும்பையே தியாகம் செய்த ததீசி முனிவர் கதையை அறிந்தோம்; சிவபெருமானுக்காக கண்களையே தியாகம் செய்த கண்ணப்ப நாயனார், மஹாவிஷ்ணு பற்றிப் பெரிய புராணத்திலும் தேவாரத்திலும் கேட்டோம். ஆனால் உடலையே நீச்சல் அடிக்க உதவும் தோல் பையாயாக்கி உயிர்த் தியாகம் செய்த தேவ சர்மன் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம்.

 

இதோ கல்ஹணர் வாய்மொழியாக கேட்போம்:

காஷ்மீரில் கி.பி.750-ஆம் ஆண்டை ஒட்டி ஜெயபீடன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் நேபாள நாட்டின்மீது படை எடுத்தபோது அங்கே அரமுடி என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். அவன் கில்லாடி. மந்திர தந்திரங்களில் வல்லவன்; ராஜ தந்திரமும் கற்றவன்.

 

ஜெய பீடனின் படைகளை நேரில் சந்திக்காமல் அவனைத் தாக்காட்டி தொலைதூரம் இழுத்து வந்தான். ஒரு கடலும் நதியும் சந்திக்கும் இடம் (முகத்துவாரம்) வரை படைகளை இழுத்தான். ஆற்றின் ஒரு பக்கத்தில் ஜெயபீடனின் படைகளும் மறுபுனிறத்தில் அரமுடியின் படைகளும் நிலைகொண்டிருந்தன. மிகவும் திட்டமிட்டு ஒரு நாள் திடீரென்று போர் முழக்கம் செய்து முரசு கொட்டினான் அரமுடி. அவனுடைய சூது வாது தெரியாத ஜெயபீடனி ன் படைகள், ஆற்றைக் கடந்தன. முழங்கால் அளவே தண்ணிர் என்று கருதி ஜெயபீடன் ஆற்றில் புகுந்தான். ஆயினும் நதியைக் கடப்பதற்குள் கடல் அலைகள் உள்ளே வந்து நீர் மட்டத்தை உயர்த்தின ஜெயபீடன் தத்தளி த்தான். பெரும்பாலான படைகளை வெள்ளம் கடலுக்கு அடித்துச் சென்றது

‘த்ருதி’ என்னும் தோல் பைகளை கட்டி நீந்தி வந்த வீரர்கள் வந்து ஜெயபீடனைக் கைது செ ய்து சிறைவைத்தனர். ‘த்ருதி’ என்பது எருமை மாட்டின் தோலினால் ஆனது. அதைக் காற்றடைத்து,  அதைப் பிடித்துக்கொண்டு நீந்துவது காஷ்மீரி மக்கள் அறிந்ததே.

ஜெயபீடனை ஒரு உயரமான கட்டிடத்தில் நதி ஒரமாகக் காவலில் வைத்தான் நேபாள மன்னன் அரமுடி!

 

ஜெயபீடனிடம் தேவ சர்மன் என்ற புத்திசாலி அமைச்சன் வேலை பார்த்து வந்தான். மன்னரைக் கடவுளாகக் கருதி தன் இன்னுயிரையும் ஈயும் உத்தம குணம் கொண்ட சத்திய சீலன் அவன். நல்ல தந்திரம் ஒன்றை வகுத்தான். மன்னன்  அரமுடிக்குத் தூது அனுப்பி, ஜெயபீடன், இதுவரை போரில் வென்ற செல்வப் புதையலை எல்லாம் அளிப்பதாகவும் ஜெயபீடனை மட்டும் விடுவித்தால் போதும் என்றும் செப்பினான்.

 

தலையில் குறை முடியே உடைய அரைமுடியும் அதற்குச் சம்மதித்தான். உடன்படிக்கை கையெழுத்தானது. தங்கள் மன்னரை ஒருமுறை சந்திக்க அனுமதி கோரினான் தேவசர்மன். அப்பொழுது நடந்த சம்பாஷணை:–

“மன்னர் மன்னவா

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? நீங்கள் சிறைப்பட்டாலும் உங்கள் வீரமும் மனோ திடமும் குலையவில்லை என்றே கருதுகிறேன்” – என்றான் தேவ சர்மன்

 

“அது எப்படி முடியும் சர்மா? என்ன வீரம் இருந்து என்ன பயன்? நான்கு சுவருக்குள் இருக்கும் நான் என்ன செய்ய முடியும்?” – என்றான் ஜெயபீடன்

 

“மன்னா! நான் படைகளை நதியின் மறு கரை யில் தயாராக வைத்துள்ளேன். நீங்கள் மட்டு ம் இப்பொழுது நதியில் குதித்து, மறுகரைக்கு நீந்திச் சென்றால் போதும்.”

“நானா? இவ்வளவு ஆழத்திலிருந்து குதித்தால் மேலே  உடல் வராது. தோல் பையைக் கட்டிக் கொ ண்டு குத்தித்தாலோ தோல் பை கிழிந்துவிடும்”.

 

“அரசே! துணிவை இழக்காதீர்கள் நான் சொல்லும்படி செய்யுங்கள். ஒரு இரண்டு நாழிகை ( 48 நிமிடம்) வெளியே நில்லுங்கள்” – என்று மன்னனிடம் சொல்லிவிட்டு மன்னனின் அறைக்குள் சென்று, எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, தன்னையே கத்தியால் குத்திக் கொண்டு இறந்தான் தேவ சர்மன்.

 

அரசன் உள்ளே சென்ற போது சடலத்தைப் பார்த்து திடுக்கிட்டான். தனது உடலையே தோல்பையாகக் கொண்டு நீந்தி மறுகரைக்குச் செல்லும்படி குறிப்பு எழுதி வைத்திருந்தான் மன்னன் வசதியாக அமர பல பாகங்களில் துணிமணிகளைக் கட்டி வைத்தீருந்தான். மன்னனும் அவனது தியாகம் வீணாகக் கூடாது என்று எண்ணி உடனே ஆற்றுக்குள் குதித்தான். தனது படைகளை அடைந்தான்.

 

பின்னர் பெரும்படை திரட்டி, நேபாளத்தை நோக்கிச் சென்று அரமுடியைக் கவிழ்த்தான். தேவ சர்மனின் தியாகத்தால் காஷ்மீர் அரசு பிழைத்தது! இது உண்மையில் நடந்த சம்பவம்.

 

–சுபம்–

காஷ்மீரில் திராவிட மந்திரவாதி- உண்மைக் கதை (Post No.3871)

Written by London swaminathan

Date: 2 May 2017

Time uploaded in London: -6-46 AM

Post No. 3871

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

திராவிட மந்திரவாதி: ராஜ தரங்கிணி நூலில் அற்புதச்செய்தி

காஷ்மீரின் வரலாற்றை கல்ஹணர் என்ற புலவர் 3400-க்கும் மேலான சம்ஸ்கிருத பாக்கள் மூலமாக எழுதினார். அப்புத்தகத்தின் பெயர் ராஜதரங்கிணி. அதில் பல அதிசயமான விஷயங்களும் சுவையான செய்திகளும் உள. திராவிட என்ற சொல்லை அவர் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார். இந்த நூல் சுமார் 1000 ஆண்டு பழமை உடைத்து.

 

திராவிட அதிசயங்களைக் காண்போம்:

ஜெயபீடன் (கி.பி.750)  என்ற  அரசன் காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது: உண்மைக் கதை:

 

ஜெயபீடன் கனவில் ஒரு நாள் ஒரு மஹாபுருஷர் தோன்றினார்; இரு கரங்களையும் கூப்பியவாறு அவர் சொன்னதாவது–

 

“ஓ, அரசனே! உன்னிடம் அடைக்கலம் வேண்டி நான் வந்துள்ளேன். நான் உனது அரசின் எல்கைக்கு உட்பட்ட ஏரியில் வசிக்கிறேன். நான் ஒரு நாகன்; என் பெயர் மஹாபத்மன்;  ஒரு திராவிட மந்திரவாதி, தனது மந்திர சக்தியைப் பிரயோகித்து என்னை ஏரியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறான்; நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 

என்னை நீ காப்பாற்றுவாயானால் காஷ்மீருக்குள் உள்ள ஒரு மலையில் தங்கம் கிடைக்கும்; அந்த மலையை உனக்குக் காட்டித் தருவேன் என்றான் மஹாபத்மன்.

 

இந்தக் கனவைக் கண்ட அரசன் காலையில் தூங்கி எழுந்தவுடன், முதல் வேலையாக இப்படி ஒரு மந்திரவாதி தனது எல்கைக்குள் இருக்கிறானா என்று கண்டறிய உளவாளிகளை ஏவினான்; அவர்கள் பல திக்குகளிலும் பறந்து சென்றனர். தொலை தூரத்திலுள்ள ஒரு திராவிட மந்திரவாதியைக் கண்டுபிடித்து அரசன் முன்னிலையில் நிறுத்தினர். அரசன் ஜெயபீடன் கேட்டான்:

 

“நீ மந்திரசக்தியால் ஒரு நாகனை அகற்ற முயற்சி செய்கிறாயாமே?”

 

“ஆமாம் அது உண்மைதான்; எனது மந்திர சக்தியால் நான் எவரையும் கவர்ந்திழுக்க முடியும்” என்றான்.

 

அரசன் சொன்னான்: “அது எப்படி முடியும். காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு ஏரியும் ஆழமும் அகலமும் உள்ளது. நீ சொல்லுவது உண்மைதானா?”

 

மந்திதிரவாதி செப்பினான்:

அரசனே! என்னுடன்  ஊலூர் (Uloor/ Wular) ஏரிக்கு வாருங்கள்; நானே காட்டுகிறேன்.

 

அரசனும் மந்திரவாதியும், பரிவாரங்கள் சூழ ஸ்ரீநகர் அருகிலுள்ள ஊலூர் (இப்பொழுது இந்த அழகிய ஏரியின் பெயர் ஊலார் Wular) ஏரிக்குப் போனார்கள். மந்திரவாதி பல மந்திரங்களை உச்சாடனம் செய்தான். அம்புகளை ஏரியின் நால் திசைகளிலும் எய்தான்; சிறிது நேரத்தில் ஏரி வறண்டது. ஏரிக்கு நடுவில், சகதியில் ஒரு பாம்பு (நாகன்) சில சிறு பாம்புகள் புடை சூழ நெளிந்து கொண்டு இருந்தது.

மந்திரவாதி சொன்னான்: “பார் இப்பொழுது; சூ! மந்திரக் காளி என்று சொல்லி அவனை என் கைக்குள் கொண்டு வருகிறேன்”.

 

இதைக் கேட்ட அரசன் கோபத்துடன் அப்படிச் செய்யாதே என்று கட்டளையிட்டான். மந்திரவாதியும் அரசனின் கட்டளைக்கு அடிபணிந்து அப்படியே ஆகட்டும் என்று சொல்லி மந்திர உச்சாடனங்களை திரும்பப் பெற வேறு சில மந்திரங்களைச் சொன்னான். என்ன அதிசயம்!

 

 

ஏரி முழுதும்  மீண்டும் நிரம்பியது. அரசன், அந்த மந்திரவாதிக்கு நிறைய சன்மானங்களைக் கொடுத்து நீ போகலாம் என்றான் அரசன்.

 

மாதங்கள் உருண்டோடின. அரசனுக்கு, மஹாபத்மன் தங்க மலையைக் காட்டவில்லை. கனவிலேயே அந்த நாகனிடம், நா ன் தான் உன்னைக் காப்பாற்றி விட்டேனே; எனக்கு ஏன் இன்னும் தங்க மலையைக் காட்டவில்லை? என்று கேட்டான்.

அரசே! என்னை நீ காப்பாற்றவில்லை. என்னுடைய சந்ததியினர் முன்னே என்னைச் சக்தியற்றவனாகக் காட்டி அவமானம்தான் செய்தாய்; போகட்டும்; உனக்கு தங்கம் கிடையாது; ஆனால் தாமிரம் விளையும் ஓரிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி அந்த இடத்துக்குப் போகும் வழிகளை மஹாபத்மன் பகர்ந்தான்.

 

 

அவன் வாய்மொழியில் கே ட்டவாறு அரசனும் தாமிர மலையை நாடிச் சென்று நாட்டிற்குத் தேவையான கனிவளத்தைத் தோண்டி எடுத்தான்; தன் பெயர் பொறித்த கோடிக் கணக்கான தாமிர நாணயங்களை வெளியிட்டான்.

 

 

கல்ஹணர் தனது ராஜதரங்கிணியில் நாலாவது அத்தியாயத்தில் சொன்ன கதை இது.

 

இன்னொரு அத்தியாயத்தில் காஷ்மீரில் சிந்து சமவெளி பிராமணர்களுடன் திராவிட பிராமணர்கள் தங்கி இருந்ததைப் போகிற போக்கில் பாடுகிறான்.

 

கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்றோர் ஆரிய, திராவிட என்ற சொற்களுக்கு இனவெறி அர்த்தம் (அனர்த்தம்) கற்பிப்பதற்கு முன்னால் சம்ஸ்கிருத , தமிழ் இலக்கியங்களில் அப்படி அர்த்தமே இல்லை. ஆரிய என்றால் பண்பாடு உடைய, மாண்புமிகு என்ற பொருளும், வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் என்ற பொருளும் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் திராவிட என்பது தென் திசையிலுள்ள தேசம் என்ற பொருளில் மட்டுமே பிரயோகிக்கப்பட்டுள்ளது. திராவிடர்கள் யார் என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் அறிக.

 

My old articles on Kalhana’s Rajatarangini and Kashmir

 

திராவிடர்கள் யார்? | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/திராவிடர்கள்-யார்/

 

17 Jul 2013 – பிராமணர்கள் திராவிடர்களே !! திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!

 

கல்ஹணர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கல்ஹணர்/

ராஜதரங்கிணி என்றால் என்ன? காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் …

 

 

 

ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1470; தேதி 9 டிசம்பர், 2014.

 

100 யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்!

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1475; தேதி 11 டிசம்பர், 2014.

 

கஜினி முகமது நாணயத்தில் சம்ஸ்கிருதம்!

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1582; தேதி 17 ஜனவரி 2015

 

அழகான காஷ்மீரி பெண்கள் பெயர்கள் !

ஆய்வுக் கட்டுரை எண் 1586; தேதி 18 ஜனவரி 2015

ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்! (Post No.3753)Date: 24 March 2017

 

 

Ramayana cures Curses! Rajatarangini Episode! (Post No.3754);  24 March 2017

 

Kaliyuga Calculation: Kalhana’s Blunder! Post No: 1574:  14th January 2015

 

Nehru on Rajatarangini; Article No.1465; Dated 7th December 2014.

 

Kashmiri King who attacked Tamil Nadu and Sri Lanka; Article No.1468; Dated 8th December 2014.

 

106 Kings of Hindu Kashmir!; Post No: 1577: Dated 15th January 2015

 

Beautiful Names of Ancient Kashmiri Women!; Article No 1583; Dated 17th January 2015.

 

Sanskrit in Mahmud of Ghazni Coins!; Article No 1579; Dated 16th January 2015

 

–SUBHAM—1.

கிளியோபாட்ரா- எகிப்திய அதிசயங்கள் -27 (Post No.3820)

Written by London swaminathan

 

Date: 15 APRIL 2017

 

Time uploaded in London:- 8-18 am

 

Post No. 3820

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

உலகப் புகழ்பெற்ற கிளியோபாட்ரா ( Cleopatra VII) , உண்மையில் ஏழாவது கிளியோபாட்ரா. அவளுக்கு முன்னிருந்த ஆறு பேர் பற்றி அதிகம் பிரஸ்தாபிப்பதில்லை. ஏழாவது கிளியோபாட்ரா கி.மு.51 முதல்- கி.மு.30 வரை ஆண்டார். இவர் எகிப்தை டாலமி வம்ச மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் 12-ஆவது டாலமியின் (Ptolemy XII) மகளாகப் பிறந்தாள். கணவர் 13-ஆவது டாலமியுடனும், சகோதரனுடனும் சேர்ந்து சிறிது காலம் ஆண்டார். அவர்கள் கி.மு.48-ல் எகிப்திலிருந்து அவரை வெளியேற்றினர். அவர் உடனே ரோமாபுரி மன்னர் ஜூலியஸ் சீசரிடம் (Julius Caesar)  உதவி கோரினார். அதில் பலன் கிடைத்தது. மீண்டும் பட்டமேறினார். மற்றொரு சகோதரரான 14-ஆவது டாலமி அவருடன் சேர்ந்து ஆண்டார். கிமு.47-ல் அவருக்கு சிசேரியன்(Caesarean) என்ற மகன் பிறந்தார். அந்தப் பிள்ளை சீசருடன் மகனே என்று அவர் சாதித்தார். அவரை எகிப்தின் 15-ஆவது டாலமியாக அறிவித்தனர்.

 

 

ஜூலியஸ் சீசர் இறந்த பின்னர் ஆண்டனியுடன் (Antony) உறவு கொண்டு இரட்டைப் பிள்ளைகளைப் (Twins) பெற்றார். அவர் கிளியோபாட்ராவை ராணிகளுக்கெல்லாம் ராணி (Queen of Queens) என்று அறிவித்து தன்னை அரசர்க்கெல்லாம் அரசன் (King of Kings) என்றும் அறிவித்துக் கொண்டார்.

 

ஜூலியஸ் சீசரின் வாரிசான ஆக்டேவியஸ் சீசர் (Octavius Caesar) –கிளியோபாட்ரா ரோம சாம்ராஜ்யத்துக்கு எதிரி என்று கருதினார். கி.மு 30-ல் ஆக்டியம் (Actium)  போரில் ஆண்டனி தோற்கடிக்கப்பட்டார். அவர் உடனே தற்கொலை செய்துகொண்டார். கிளியோபாட்ராவும் ஒரு பாம்பைக் கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

  

Stamps on Cleopatra ( Statues in Museums)

இவருடைய அழகு பற்றி இலக்கியங்களில் எழுதப்பட்டபோதிலும் சிலையில் அவ்வளவு அழகு இல்லை. இவர் கறுப்பு நிறத்தவர் என்றும் சொல்லுவர். தான் தற்கொலை செய்யாவிடில் தன்னை ரோம் நகருக்குக் கொண்டுசென்று துன்புறுத்துவர் என்று அஞ்சியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது அழகைப் பராமரிக்க கழுதைப் பாலில் குளிப்பார் என்றும் சொல்லுவர்.

 

 

கிளியோபாட்ராவுடன் எகிப்தின் 5000 ஆண்டுக் கால ஆட்சி முடிவுற்றது. எகிப்து,  ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக மாறியது. இதனாலும் எகிப்திய வரலாற்றில்  கிளியோபாட்ராவை ஒரு மைல் கல் (Mile Stone) என்று சொல்லலாம்.

 

ஏடி ராணி (யதி Queen Eti)

இவர் பண்ட் (Punt) என்னும் தேசத்தின் ராணி. கி.மு.1470 வாக்கில் இருந்தவர். பண்ட் என்னும் தேசம் எது என்பது பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அந்த தேசத்துக்குப் போன ஒரு பயணம் குறித்து எகிப்தில், ஹட்செப்சுட் Hatshepsut (சதாசிவ சுதா) கல்லறையி ல் ஒரு ஓவியம் உள்ளது அது தேர் எல் பஹரி என்னும் இடத்தில் இருக்கிறது. அதில் இந்த ராணி ஒரு கூனல் நோயுடன் காணப்படுகிறார். மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வருகிறார். அவர் பூதாஹார உடல் படைத்தவராக இருக்கிறார். அவருடைய கணவர் பெயர் பெரெக்.(Pereh).

 

 

பண்ட் என்னும் தேசம், எகிப்துக்கு தென் கிழக்கு திசையில் இருந்தது. அங்கிருந்து எகிப்துக்கு வாசனைத் திரவியங்களும் பலவகை மிருகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.

ஹட்ஷெப்சுட் HATSHEPSUT (சத் சிவ சுதா)

ஆட்சி செய்த காலம் கி.மு.1473-1458.

 

எகிப்திய ராணிகளிலேயே மிகவும் கீர்த்தி பெற்றவர். திறமைசாலி. பெரிய நிர்வாகி. மன்னர் தத்மோசியின் (THUTMOSE I ) மகள்;  தனது ஒன்றுவிட்ட சகோதரனை மணந்து கொண்டாள்; எகிப்தில் சகோதர-சகோதரி மணம் மிகவும் பிரசித்தம். அவ்ர்களுக்கு ஒரே மகள் நெபரூரே ( NEFERURE நவரரி). ஆனால் ஒன்றுவிட்ட சகோதரர் வேறொரு பெண் மூலம் ஒரு ஆண் மகவை ஈன்றார். அவர் மூன்றாவது தத்மோசியாக பதவி ஏற்றபோது , சிறு பையன்   என்பதால் ஹ ட்ஷெப்சுட் (சத் சிவ சுதா), பதவிவகித்தார். தன்னை பெண் ஹோரஸ் ( Female Horus–சூர்ய தேவி என்னும் கடவுள்) அறிவித்துக் கொண்டார். எகிப்திய மன்னர்கள் இந்துக்களைப்போல மன்னரை கடவுளாகக் கருதினர் (தமிழில் இறைவன், கோ என்றால் அரசன், கடவுள்; கோவில்= கோ+ இல் என்றால் அரண்மனை, ஆண்டவன் குடிகொண்ட இடம்)

இந்த ராணியின் அதிர்ச்டம் எகிப்தில் வளம் கொழித்தது. நல்ல அதிகாரிகள் உதவினர். அவர்களில் ஒருவர் சேனென் முட் ( சேன முத்து).  அவர் பெரிய மேதாவி; கட்டிடக் கலை நிபுணன். கர்னாக் (Karnak) என்னும் இடத்திலுள்ள ராணியின் கட்டிடங்களும் தேர் எல் பஹ்ரி (Deir el Bahri) என்னும் இடத்திலுள்ள சமாதியும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இதில்தான் பண்ட் என்னும் தேசத்தின் கூனல் ராணி ஏட்டியின் (யதி) சித்திரம் உள்ளது.

–Subham–