

B V Raman 1912- 1998

சாமா பி வி ராமன் (click here for the Tamil article)
Posted by Tamil and Vedas on January 2, 2013
https://tamilandvedas.com/2013/01/02/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%b5-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0/
அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் ஆசிரியர் மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயண ராவ்
ச.நாகராஜன்
ஷிமோகாவுக்கு சென்ற போது அபூர்வ சந்திப்பு
1885ம் ஆண்டு ஒரு நாள். தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த பி.எல் படிக்கும் இளைஞர் ஒருவர் குப்பி ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கினார்.பங்களூர் சென்ட்ரல் காலேஜில் அப்போது தான் ஆரம்பிக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் படிப்பில் முதல் குழுவில் முன்னணி மாணவராக இருந்தார் அவர். ஆங்கிலப் படிப்பினால் ஹிந்து சாஸ்திரங்களில் பகுத்தறிவுக்கு ஒத்த பௌதிக விஞ்ஞானத்திற்கு இடமே இல்லை என்று அவர் முடிந்த முடிவுக்கு வந்திருந்தார்.
அப்போது தான் எஸ்.எம்.ரயில்வே ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே ஷிமோகாவுக்கு மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும்!ஷிமோகா 150 மைல் தூரம். ஒரு நாளைக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்- ஷிமோகா போய்ச் சேர! ரயிலை விட்டு இறங்கிய அந்த இளைஞரின் கண்ணில் ஒரு ஏழை வைதிக அந்தணர் போலத் தோற்றமளித்த ஒருவர் தென்பட்டார். அவரது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸ் அந்த இளைஞரை வெகுவாகக் கவர்ந்தது. அவரிடம் சென்று, “நீங்கள் யார்? எங்கு போக வேண்டும்”, என்று கேட்டார் அந்த இளைஞர்.
“எனது பெயர் சுப்பராய சாஸ்திரி. நான் ஷிமோகா செல்ல வேண்டும்.அங்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்ஸிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன்” என்றார் அவர்.
அடுத்த எட்டு நாட்களில் சூர்யநாராயணராவ் என்ற அந்த விஞ்ஞான மனப்பான்மை படைத்த இளைஞரின் வாழ்க்கைப் போக்கே மாறி விட்டது சுப்பராய சாஸ்திரி என்ற அந்த அற்புதமான மனிதரால்! உலகில் உள்ள எல்லா பௌதிக விஞ்ஞானத்துறைகளும் ஓர் உருவம் எடுத்து நடை பயில்வது போல இருந்த அவர் சூர்யநாராயணராவின் கண்களைத் திறந்தார்.
“அடுத்த 25 ஆண்டுகள் அவருடன் பழகினேன். எனது நீண்ட வாழ்வில் அவரைப் போல ஒரு மனிதரை நான் கண்டதே இல்லை. முதல் சில நாட்கள் அவருடன் உரையாடியது என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது” என்று பின்னாளில் பெரும் புகழ் படைத்த ஜோதிடரான பின்பு கூறினார் சூரியநாராயண ராவ்.
ஜோதிடக் கலையைத் தானே கற்றவர்
பங்களூர் சூரியநாராயணராவ் (1856-1937) மிகவும் புகழ் வாய்ந்த ஜோதிடராக சென்ற நூற்றாண்டில் விளங்கியவர். ஜோதிட சாஸ்திரத்தை யாரிடமும் பயிலாமல் தானே கற்றுக் கொண்டவர். பல்வேறு பழைய நூல்களைப் படித்து ஜோதிட நுட்பங்களில் அவர் நன்கு தேர்ந்து, ஜோதிடத்திற்கு தேசீய அளவில் ஒரு புது மதிப்பை ஏற்படுத்தியவர். வரலாறு, வாழ்வியல், இலக்கியம், சாஸ்திரம் என பல துறைகளிலும் மேதை. எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். எல்லாவற்றிற்கும் மேலாக புகழ் வாய்ந்த ஜோதிட மேதை பி.வி.ராமனை உருவாக்கியவர். ஸ்ரீ பி.வி.ராமனுடைய பாட்டனார் தான் சூரிய நாராயண ராவ்.
1895 முதல் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து ஜோதிட சம்பந்தமான நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு அவர் உலக அறிஞர்களை வேத ஜோதிடத்தின் பால் பார்வையைப் பதிக்க வைத்தார்,சுப்பராய சாஸ்திரிகளின் நூல்களை அவர் வெளியிட்டார். 1914 மார்ச் மாதமே முதல் உலகப் போர் வரப்போவதை அவர் முன் கூட்டியே அறிவித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. பல்வேறு ராஜாக்களும், மந்திரிகளும், வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டுப் பிரமித்துப் போனார்கள். தன் வாழ் நாள் முழுவதும் ஒரு கர்மயோகியாகத் திகழ்ந்த அவர் ப்ருஹத் ஜாதகம்,ஜைமினி சூத்திரங்கள் உள்ளிட்ட பழம் பெரும் முக்கிய நூல்களை வடமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.
புகழ்பெற்ற நூல்களில் சில
அவரது நூல்களில் மாதிரிக்குச் சிலவற்றைப் பார்ப்போம்:
ஸ்திரீ ஜாதகம்:பாரத நாகரிகத்தின் ஹிந்து வாழ்க்கை முறைக்கு ஜீவாதாரமாக விளங்குபவள் பெண். பல்வேறு நூல்களிலிருந்து அற்புதமான தகவல்களைச் சேகரித்து அபூர்வமான இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். ஆண், பெண் ஜனனம், ஆண் பெண்ணாக மாறுவது, அர்தவ லக்னம், பெண்களின் குணாதிசயங்கள்,வாழ்க்கையில் துணையாக இருக்கும் மனைவி லட்சணம், புத்ரபாக்கியம், கல்யாணமாகாமல் இருக்கும் பெண்கள்,பெண்களின் ஆன்மீக சிந்தனை, பழக்க வழக்கங்கள், கிரக தசா புக்தி பலன்கள், சந்திர, சூர்ய, செவ்வாய், குரு, சுக்ர, சனியின் பாவ பலன்கள், ராஜயோகம் உள்ளிட்ட நல்ல யோகங்களின் விவரணம் ஆகியவை கொண்ட இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்டது.
ஸ்ரீ சர்வார்த்த சிந்தாமணி :இரண்டு தொகுதிகள். முதல் பாகம் 1899ம் ஆண்டும் இரண்டு மூன்றாம் பாகங்கள் 1920ம் ஆண்டும் வெளியிடப்பட்டது. வெங்கடேச தைவக்ஞர் இயற்றிய அற்புதமான இந்த நூலை சூரியநாராயண ராவ் மொழிபெயர்த்தார். திருமணம், யோகங்கள், தசா புக்தி பலன்கள், பாவங்களைப் பற்றிய பகுப்பாய்வு உள்ளிட்ட அரிய நூல் இது.
புகழ்பெற்றவரின் ஜாதகங்கள் : ஸ்ரீ ராமர், ஹரிச்சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணர்,ஆதி சங்கரரிலிருந்து ஆரம்பித்து தற்கால மஹாராஜாக்கள் வரை உள்ள ஏராளமானோரின் ஜாதங்களைத் தொகுத்து வழங்கும் நூல்.1921ல் வெளிவந்தது.
ஜோதிடத்திற்கு புத்துயிரூட்டிய மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயண ராவ்.
ஜோதிட ஆர்வலர்கள் அவரது நூல்களைப் படிக்க வேண்டிய அவசியத்தை இந்த ஒரு வரியே விளக்கி விடும்.
*********
Posted by Tamil and Vedas on December 29, 2012
https://tamilandvedas.com/2012/12/29/%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%b8%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82/

Pasupathinath Temple at Kathmandu, Nepal
எழுதியவர்: ச.நாகராஜன்
வானவியல், கணித, ஜோதிட மேதை
ஸ்ரீபதி புதிய பாதையை ஜோதிடர்களுக்குக் காண்பித்த மகா மேதை! இவர் வாழ்ந்த காலம் கி.பி.1019 முதல் 1066 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீபதியின் தந்தையார் பெயர் நாகதேவர். நாகதேவரின் தந்தையாரான கேசவரும் ஒரு ஜோதிட மேதை தான். பிரபல ஜோதிட மேதையான லல்லரின் ஜோதிட நூல்களைக் கற்றுத் தேர்ந்த ஸ்ரீபதி பெரும் வானவியல் நிபுணராகவும் கணித மேதையாகவும் ஜோதிடத்தில் புது நெறி காட்டும் புரவலராகவும் திகழ்ந்தார். கோளங்களைப் பற்றிய இவரது ஆராய்ச்சி குறிப்பிடத் தகுந்தது.
நேபாளத்தை சேர்ந்தவர்
துருவ மானஸம் (1056ல் எழுதியது) என்னும் நூலில் இவர் தன்னைப் பற்றிக் கூறுகையில்,”நேபாளத்தைச் சேர்ந்த கபிலவாஸ்துவில் ரோஹிணி நதி பாயும் ஊர் எங்களது ஊர்” எனக் குறிப்பிடுகிறார்.இந்த நூல் 105 செய்யுள்களைக் கொண்டது. இதில் கிரகங்களிருக்கும் நிலைகள், செல்லும் பாதை, கிரகணங்கள் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன.நாளுக்கு நாள் இவர் புகழ் பாரதமெங்கு பரவியது. மூன்று ஸ்கந்தங்களிலும் வல்லவரான இவர் பல அரிய நூல்களை இயற்றினார். ஆகவே இவரை மரியாதையாக அனைவரும் ஸ்ரீபதி பட்டர் என அழைக்கலாயினர்.

Another View of the Paupathinath Temple
ஸ்ரீபதி பத்ததி
ஜோதிடர்களுக்கு சவாலான ஒரு விஷயம் பாவம் மற்றும் ராசி சந்திகளில் இருக்கும் கிரகங்களின் பலத்தை நிர்ணயிப்பது தான். பராசரர் வழியிலிருந்து மாறி இவர் புது பத்ததியை உருவாக்கினார். இதன் படி பத்தாம் இடத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி அதையொட்டி பல புதிய பாதைகளை சுட்டிக் காட்டினார். இந்த பத்ததி (வழிமுறை) கற்பதற்கு மிகவும் கடினமானது. என்றாலும் கூட மிகவும் பிரபலமானது.ஜாதக பத்ததி அல்லது ஸ்ரீபதிபத்ததி என்ற பெயரால் இது சிறப்புற அழைக்கப்பெற்று ஜோதிடர்களின் மனம் கவர்ந்த நூலாக இன்று விளங்குகிறது.
ஸ்ரீபதியின் இதர நூல்கள்
வராஹமிஹிரரின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. அவரை வியந்து போற்றி அவர் பாதையில் தான் ஒரு வழி நூலையும் இயற்றினார். இவரது சித்தாந்தசேகரம் என்ற அரிய வானவியல் நூல் 19 அத்தியாயங்களைக் கொண்டது. 125 செய்யுள்களைக் கொண்ட இவரது கணிததிலகா பூர்த்தியாகாத ஒரு நூல்.ஜோதிட மேதை ஸ்ரீதரரின் நூலை ஒட்டி அவர் இதை எழுதத் தொடங்கினார்.இதன் 14ம் அத்தியாயத்தில் அல்ஜீப்ராவின் பல்வேறு சமன்பாடுகளையும் சூத்திரங்களையும் அவர் அன்றே விளக்கி இருப்பதைக் காணும் மேலை நாட்டார் இன்று வியந்து அவரைப் போற்றுகின்றனர்.திக்கோதிதகரணம் (1039ல் எழுதியது) சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றி 20 செய்யுள்களில் விளக்குகிறது.20அத்தியாயங்கள் கொண்ட ஜ்யோதிஷ ரத்னமாலா லல்லரின் ஜ்யோதிஷரத்னகோசத்தைத் தழுவி இவரால் எழுதப்பட்டது. இந்த நூலுக்கு மராத்தியமொழியில் இவர் ஒரு விளக்க உரையையும் எழுதினார். மராத்திய மொழியின் புராதன நூலாக இது இலங்குகிறது.ரத்னமாலையில் இவர் மக்களைப் பரிவுடன் அழைக்கும் பாங்கு வியந்து போற்றுதற்கு உரியது.
மறைந்த நூல்கள் பல
ஸ்ரீபதி எழுதிய பல நூல்கள் மறைந்து விட்டன. பீஜ கணிதம் போன்ற இவரது சிறந்த நூல்கள் இன்று காணக் கிடைக்கவில்லை.(என்றாலும் கூட கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்த கிருஷ்ணமிசிரர் என்னும் அந்தணர் இவரது அரிய நூலான சித்தாந்த சேகர விவரணத்தை வியாக்யானத்தோடு முதல் 4 அத்தியாயம் 75 சுலோகங்கள் வரை அச்சிட்டுள்ளார்.)
ஜோதிடத்தில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தி ஒரு பத்ததியை உருவாக்கி புது வழி காட்டியவர் ஸ்ரீபதி என்பதால் இவரது நூல்களை ஜோதிட ஆர்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேடிக் கற்று வருகின்றனர்.
******************
Posted by Tamil and Vedas on December 20, 2012
https://tamilandvedas.com/2012/12/20/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/

Picture: Maldives, a Muslim country, has issued stamps on Zodiac Signs in 1974.
ஜோதிட மேதைகள் தொடருக்காக
பாரதத்தின் சாரம் மஹாகவி காளிதாஸ்
By Chitra Nagarajan
நவரத்னங்களில் ஒருவர்
விக்கிரமாதித்தன் அரசவையில் இடம் பெற்றிருந்த மேதைகளில் மஹாகவி காளிதாஸரின் கவித் திறன் பாரதமெங்கும் பரவி இருந்ததை வரலாறு வியப்புடன் பொன்னேட்டில் பொறிக்கிறது! மஹரிஷி அரவிந்தரோ, “ வால்மீகி, வியாஸர், காளிதாஸர் ஆகியோர் புராதன இந்தியாவின் சாரம்” என்று வியந்து கூறுகிறார். அறநெறி, அறிவுத்திறன், உலகியல் பொருள் ஆகிய மூன்றிலும் ஆர்யர்கள் எவ்வளவு மேம்பட்டிருந்தனர் என்பதை அவர்கள் தங்கள் நூல்களில் சித்தரிக்கின்றனர் என்று மேலும் கூறும் அவர் மனித ஆன்மாவின் மேம்பாட்டை அவர்களது கவிதைகள் சித்தரிக்கும் பாங்கைப் புகழ்கிறார்.
காளிதாஸரின் கதை
காளிதாஸரின் கதை அனைவரும் அறிந்ததே. வழி வழியாகக் கூறப்படும் கதைப்படி காளிதாஸர் ஒன்றுமே அறியாத முழு மூடனாக இருந்தார். அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க அரசவையில் இருந்த பண்டிதர்கள் ஒரு பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு நாள் மரத்தின் நுனியில் உட்கார்ந்தவாறே அடி மரத்தை வெட்ட முனையும் முழு மூடனான காளிதாஸைப் பார்த்து தமது சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கான சரியான நபர் அவனே என்று தீர்மானித்து அவனிடம் எதுவும் பேச வேண்டாம்; அரசகுமாரியின் முன்னர் சைகைகளாலேயே எதையும் சொல்; பொன்னும் பொருளும் மிக்க வாழ்க்கை உண்டு” என்று கூறி அவனை அழைத்துச் சென்றனர். அரசகுமாரி கேள்விகளைக் கேட்க காளிதாஸன் மனம் போனபடி சைகைகளைக் காட்ட அதற்கு அரசவை பண்டிதர்கள் அற்புதமான வியாக்யானம் தந்தனர். வியந்து போன ராஜகுமாரி காளிதாஸனை மணமுடித்தாள், ஆனால் முதல் இரவிலேயே காளிதாஸனின் ‘புலமை’ அவளுக்குத் தெரிந்தது தான் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது.
இதற்குப் பின்னர் காளிதாஸன் மனம் நொந்து காளியின் முன் சென்று தன் தலையை அர்ப்பணிக்க முற்பட்ட போது அவள் பிரசன்னமாகி அனுக்ரஹிக்க, காளிதாஸரின் கவி மழை பாரதமெங்கும் பொழிந்தது. இதையே வெவ்வேறு விதமாக பல நூல்கள் சித்தரிக்கின்றன. இன்னொரு பரம்பரைச் செய்தியின் படி காளிதாஸன் மனம் நொந்து ஒரு ஆற்றங்கரை படித்துறைக்குச் சென்ற போது அங்கு துணி துவைக்கும் கற்களைப் பார்த்தார். அடித்துத் துவைக்கப்படும் கற்கள் மழுமழுவென்று மழுமழுப்பாகவும் உருண்டையாகவும் இருக்க அருகே உள்ள ஏனைய கற்கள் சொரசொரப்பாகவும் எந்த வித அழகான வடிவமும் இன்றி இருப்பதையும் பார்த்தார். அவருக்கு பொறி தட்டியது போல ஞானம் ஏற்பட்டது, தன் அறிவை மழப்பான கற்கள் போல ஆக்க புத்திகூர்மையைத் தீட்டினால் போதும் என்று படிக்க ஆரம்பித்தார்; பெரிய மேதையானார்.
பல்துறை மேதையின் காவியங்கள்
எது எப்படியானாலும் காளிதாஸர் பல் துறை மேதை. சொற்களையும் அதன் ஆழத்தையும் சொல்லும் பாங்கையும் மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதையும் அறிந்த விற்பன்னர் அவர். அவரது காவியங்களின் வர்ணனைகள் தென் பாரதத்தையும் வட பாரதத்தையும் அற்புதமாக வர்ணிப்பதால் அவர் நாடு முழுவதும் சுற்றி வந்த பயணி என்பதும் அவர் ருதுக்களை வர்ணிப்பதை வைத்து அவர் இயற்கையை நேசிக்கும் இயற்கை ஆர்வலர் என்பதும் தெரிய வரும். ரகுவம்சம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், அபிஞான சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், ருதுசம்ஹாரம் ஆகிய அற்புத கவிதை காவியங்களில் ஜோதிடக் குறிப்புகளையும் தேவ ரகசியங்களையும் காளிதாஸர் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்வது அவர் அருள்சக்தி படைத்த மாமேதை என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
காளிதாஸரைப் பற்றிய ஏராளமான (நூற்றுக்கும் மேலானவை) சுவையான சம்பவங்கள் உள்ளன.இவரது முழு வாழ்க்கையை அறிவதோடு இவரது நூல்களைப் படிப்பது இந்திய கலாசாரத்தை அறிய விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
காளிதாஸர் தரும் நட்சத்திர சித்திரங்கள்
காளிதாஸர் நூற்றுக்கணக்கான நட்சத்திர ரகசியங்களை தன் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்கிறார். மாதிரிக்கும்ஸோமதாரையை ஸ்வர்க்க பத்ததி என்றும் (ரகுவம்சம் 9-87) அஸ்வினி நட்சத்திரத்தை குதிரை தலை போல இருக்கிறது (தன்வி கோடகமுகாக்ருதௌ த்ரிபே) என்றும் அவர் கூறுவதைக் குறிப்பிடலாம்! நவீன வானவியல் நிபுணர்கள் நட்சத்திர தொகுதிகளைப் பற்றி இன்று என்ன கூறுகிறார்களோ அதையே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விளக்கமாக அவர் குறிப்பிட்டிருப்பது வியக்க வைக்கும் விஷயம்!
உத்தரகாலாம்ருதம்
உத்தரகாலாம்ருதம் என்ற ஜோதிட நூல் காளிதாஸரால் இயற்றப்பட்டதாகக் காலம் காலமாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. ஒரு இலக்கிய மேதையே இதை எழுதி இருக்கக் கூடும் என்பதால் மஹாகவி காளிதாஸரே நிச்சயமாக இதை இயற்றினார் என்று ஒரு சாரார் கூறுவர்.ஆனால் இதை எழுதியவர் இன்னொரு காளிதாஸர் என்றும் (பிற்காலத்தில் புழக்கத்தில் வந்த சரஸ சல்லாபம், உத்யோகம் போன்ற வார்த்தைகளையும் ஆந்திர மற்றும் பாரசீக பாஷைகளைப் பற்றிய அவரது குறிப்புகளினாலும்) அவர் 16 அல்லது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நூலின் சுவடிகள் சென்னையில் உள்ள கவர்ன்மெண்ட் ஓரியண்டல் மானஸ்க்ரிப்ட் லைப்ரரி உள்ளிட்ட பல நூலகங்களில் உள்ளன.வேத ஜோதிடத்தை உத்தர காலாம்ருதம் போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை என்ற புகழ் இந்த நூலுக்கு உண்டு.பல்வேறு அறிஞர்களின் விளக்க உரையுடன் எல்லா கடைகளிலும் இது கிடைக்கிறது.
12 பாவங்களின் முக்கியத்துவம். கிரஹங்களின் முக்கியத்துவம், குளிகை, மாந்தியை நிர்ணயிக்கும் விதம், ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கும் முறை,கேந்திர திரிகோணங்களின் முக்கியத்துவம், ராஜயோகம், விபரீத ராஜ யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட ஏராளமான யோகங்கள் பற்றிய அபூர்வமான விளக்கங்கள், தசா காலமும் அதன் பலன்களும் என்று இப்படி ஜோதிட களஞ்சியமாக அனைத்து விஷயங்களையும் இந்த நூல் விளக்குகிறது.இதை ஒரு ஜோதிட பொக்கிஷம் என்றும் ஜோதிட புதையல் என்றும் ஜோதிடர்களும் ஜோதிட ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர்.
காளிதாஸர் இந்தியாவின் சாரம் என்றால் உத்தரகாலாம்ருதம் ஜோதிடத்தின் சாரம் என்று ஒரே வரியில் கூறி விடலாம்!காதலின் மென்மையையும் மேன்மையையும் உணர வேண்டுமா? தேவ ரகசியங்களை அறிய வேண்டுமா? மனித மனத்தின் உன்னதமான அகல நீள ஆழங்களை தரிசிக்க வேண்டுமா?பாரதம் போற்றும் ஆன்மீக சிகரத்தில் ஏற வேண்டுமா? ஜோதிடக் கடலை ஒரே மடக்காகக் குடிக்க வேண்டுமா? இவை அனைத்துக்கும் ஒரே வரியில் பதில் உண்டு: காளிதாஸரைப் படியுங்கள்! காளிதாஸரை மட்டும் படியுங்கள், போதும்!!
************************
Posted by Tamil and Vedas on December 7, 2012
https://tamilandvedas.com/2012/12/07/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d/

Picture: Postage Stamps issued by Hong Kong
ச.நாகராஜன்
கலைகளின் தலைநகரம் உஜ்ஜயினி
ஜோதிடம், வானவியல் மற்றும் கணிதம் ஆகிய கலைகளுக்கு தாயகமாகவும் தலைநகரகமாகவும் திகழ்ந்த உஜ்ஜயினிக்கு மேலும் புகழ் சேர்த்த ஒரு பெரிய ஜோதிடமேதை பாஸ்கராசார்யர். இவரது காலம் 1114 முதல் 1185 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரில் (விஜயபுரம் என்னும் ஊரில்) அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.இவரது தந்தையார் மஹேஸ்வரர் ஒரு பெரிய ஜோதிட மேதை. உஜ்ஜயினியில் இவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஜோதிடம் வானவியல் கணிதம் ஆகிய கலைகளுக்குத் தன்னை அர்ப்பணித்து பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளைக் கண்டு உலகினரை வியக்க வைத்தார்.
சித்தாந்த சிரோமணி என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. கோள அத்யாயம் மற்றும் க்ரஹகணிதம் ஆகிய இரு பாகங்களைக் கொண்டுள்ள இதில் பூமி சூரியனைச் சுற்றி வரும் காலத்தை 9 தசமஸ்தான சுத்தமாக, 365.258756484 என்று கண்டுபிடித்துள்ளது பிரமிக்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு.
லீலாவதியின் கதை
இவர் எழுதிய லீலாவதி என்ற நூலைப் பற்றிய சோகமான நிகழ்வு ஒன்று உண்டு! இந்த நூலை பின்னால் 1587ம் ஆண்டில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்த பைஜி என்பவர் இந்தக் கதையை விரிவாக எழுதியுள்ளார்.
லீலாவதி பாஸ்கராசார்யரின் அன்புக்கு உகந்த புத்திரி.அவள் ஜாதகத்தை கணித்த பாஸ்கராசார்யர் திடுக்கிட்டார். அவளுக்கு ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தால் மட்டுமே அவளால் தீர்க்க சுமங்கலியாக வாழ்க்கை நடத்த முடியுமே தவிர அது தவறி விட்டால் அவள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பே இல்லை என்பதை அவர் ஜாதக மூலம் கண்டார்.
உரிய காலத்தில் திருமணத்தை நிச்சயித்த பாஸ்கராசார்யர் குறிப்பிட்ட முகூர்த்தம் தவறி விடக் கூடாதே என்ற எண்ணத்தில் ஒரு புதிய சாதனத்தை அமைத்தார்.ஒரு சிறிய கோப்பையில் துவாரம் ஒன்றைச் செய்து அதை ஒரு பெரிய பாத்திரத்தில் மிதக்க விட்டார்.சரியான முகூர்த்த நேரத்தில் அந்த கோப்பை பெரிய பாத்திர நீரில் மூழ்கி விடும். அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தி விடலாம் என்பது அவரது எண்ணம். எல்லாம் சரியான படி அமைக்கப்பட்டது.
ஆனால் திருமண நாளன்று (ஆறு வயதே ஆன) லீலாவதி அந்த கோப்பையில் என்ன இருக்கிறது என்று ஆவல் மீதூற பார்க்கக் குனிந்த போது அவள் அணிந்திருந்த முத்து மாலையில் இருந்த ஒரு சிறிய முத்து நழுவி அவளை அறியாமல் அந்த கோப்பையில் விழுந்தது. அது சரியாக கோப்பையிலிருந்த துவாரத்தை அடைத்து விட்டது. நேரம் சென்று கொண்டே இருந்ததைக் கவனித்த பாஸ்கராசார்யர் ஏன் கோப்பை மூழ்கவில்லை என்று ஆராயப் போனார். துவாரத்தை ஒரு சிறிய முத்து அடைத்திருந்ததையும் அதனால் நல்ல நேரம் கடந்து விட்டதையும் அறிந்து விசனித்தார். திருமணம் செய்து கொண்ட லீலாவதி சிறிது காலத்தில் கணவனை இழந்து விதவையானாள். அவளுக்கு ஆறுதல் தரும் விதத்தில் அவள் பெயரில் லீலாவதி என்ற புகழ் பெற்ற நூலை அவர் தனது 30வது வயதில் எழுதினார்!
லீலாவதி நூலின் புகழ்
லீலாவதி ஒரு அபூர்வமான நூல் இதில் 13 அத்தியாயங்களில் கணிதம் ஜியோமிதி சூத்திரங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கி உள்ளன.டிபரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்னாமெட்ரி உள்ளிட்ட கணிதத் துறைகளில் அவரது கண்டுபிடிப்புகள் மேலை நாட்டினரை வியக்க வைக்கின்றன. லீலாவதியைப் படிப்பவர்களுக்கு சந்தோஷமும், உற்சாகமும் அதிகரித்துக் கொண்டே போகும் என்று பாஸ்கராசார்யரே கூறி இருப்பது உண்மை என்பதை இந்த நூலைக் கற்பவர்களுக்கு நன்கு புரியும். பொது மக்கள் லீலாவதியைப் பற்றி, “லீலாவதியை நன்கு கற்றவர்கள் ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கிறது என்று நிச்சயமாகக் கூறி விடுவர்” என்று கூறி அதைப் புகழ்ந்தனர்.
லீலாவதியைத் தவிர பீஜ கணிதம்,சித்தாந்த சிரோமணி, வசனபாஷ்யம்,கரணகுதூகலம்,ப்ரஹ்மதுல்யா ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். பாஸ்கராசார்யர் தனக்கு முன் வாழ்ந்த வானவியல் நிபுணரான பிரம்மகுப்தரின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தினார். இவரது மகனான லோக்சமுத்ரரும் ஒரு பிரபல ஜோதிடராகத் திகழ்ந்தார்.லோக்சமுத்ரரின் மகன் பாஸ்கராசார்யரின் நூல்களைக் கற்பிக்க 1207ம் ஆண்டில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார்.
ஜோதிட சாஸ்திரத்தில் கிரக சஞ்சாரங்கள் மிக முக்கியமானவை. அவை குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்களைக் கூற முடியும். இந்த வகையில் கிரகங்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்கும் விதத்தைத் தன் நூல்களில் பாஸ்கராசார்யர் விளக்கியுள்ளார் என்பதே இவரது தனிச் சிறப்பு.
மயிலின் உச்சி எனத் திகழும் மாமேதை
இந்திய கோவில் ஒன்றில் உள்ள மத்தியகால கல்வெட்டு பாஸ்கராசார்யரைப் பற்றிக் கூறுவது அவரைப் பற்றிய சரியான கணிப்பாக அமைகிறது. அது இது தான்: ‘‘அறிஞர்களாலும் மேதைகளாலும் மதிக்கப்படும் அபூர்வ திறமைகள் கொண்ட ஒப்பற்ற பாஸ்கராசார்யருக்கு வெற்றி! புகழ் கொண்டு ஆன்மீகத்தில் சிகரம் ஏறிய அந்தக் கவிஞர் மயிலின் உச்சி போலத் திகழ்கிறார்! ‘’
**********************
Posted by Tamil and Vedas on December 4, 2012
https://tamilandvedas.com/2012/12/04/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%b0/

ச.நாகராஜன்
கணேசரின் பிறந்த ஊரும் காலமும்
ஜாதகாலங்காரம் என்ற புகழ் பெற்ற ஜோதிட நூலைத் தந்த கணேசர் அல்லது ஸ்ரீ கணபதியை ஜோதிடர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர். ஏழு அத்தியாயங்கள் கொண்ட சிறிய நூலில் ஏழாவது அத்தியாயத்தில் இவர் தம்மைப் பற்றி வெகு சுருக்கமாக நான்கே செய்யுள்களில் கூறுகிறார்.இந்த அத்தியாயத்தின் பெயர் வம்ச வருண அத்தியாயம். அதில் இவர் தன்னைப் பற்றிக் கூறுவதன் சுருக்கத்தைப் பார்ப்போம்.
“புகழ் பெற்ற இந்த உலகில் குஜராத் மன்னரின் அரசவையில் கன்ஹாஜி என்ற ஜோதிடர்களுக்குள் மகேந்திரனாக விளங்கிய பிரபல மேதை இருந்தார். அவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று புத்திரர்கள் பிறந்தனர்.மூத்தவரான சூர்யதசா மிகவும் புத்திசாலி. சிறந்த ஜோதிடருமாவார். அவருக்கு அடுத்துப் பிறந்தவர் கோபாலர்.அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர், மூன்றாமவரான ராமகிருஷ்ணர் ஜோதிடர்களிலெல்லாம் சிறந்தவராக விளங்கினார். இதில் கோபாலருக்கு மகனாகப் பிறந்தவர் கணேசர்.இவர் சாலிவாகன சகாப்தம் 1535ல் (கி.பி, 1613) பாத்ரபத மாதத்தில் ப்ரத்னபுரத்தில் இதை இயற்றினார்.” இப்படி இவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
ப்ரத்ன என்றால் சூர்யன் என்று பொருள். ஆகவே இவர் தாபீ நதிக்கரையில் அமைந்திருந்த சூரியபுரத்தில் இருந்து இதை எழுதினார் என்று தெரிய வருகிறது. சிவ பண்டிதர் என்னும் குஜராத் பிராமணரிடமும் ஜோதிடக் கலையை தான் கற்றதாக அவரே தெரிவிக்கிறார். அனைத்துக் கலைகளிலும் சிறந்து விளங்கியவரான இவரை லாபஜி என்று அனைவரும் அன்போடு அழைத்தனராம்.
ஜாதகாலங்காரம்
இந்த நூல் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அனைவராலும் படிக்கப்பட்டு போற்றப்பட்டது. காரணம் மிகவும் ரத்னச் சுருக்கமாக எளிமையாக இந்த நூல் அமைந்திருப்பதினால் தான். ஜோதிடத்தைக் கற்க விரும்பும் அனைவருக்கும் முதலில் கற்க ஏற்ற நூல் இது. சுமார் 110 சுலோகங்கள் கொண்டது இது. ஸ்ரக்தரா விருத்தத்தில் அமைந்துள்ள இந்த நூலை தமிழ். தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சம்ஸ்கிருதம். ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இன்று வாங்கிப் படிக்க முடியும்!
ஏழு அத்தியாயங்கள்
இந்த நூலில் உள்ள ஏழு அத்தியாயங்கள் இவை தான் 1) சம்ஜ்ஞா அத்யாயம் 2)பாவ அத்யாயம் 3) யோக அத்யாயம் 4) விஷ கன்யா அத்யாயம் 5) ஆயுர்த்தாய அத்யாயம் 6)வ்யதியய பாவ பலாத்யாயம் 7)வம்ச வருண அத்யாயம்
சம்ஜ்ஞா அத்தியாயத்தில் லக்னத்திலிருந்து ஒவ்வொரு பாவமாக அது எதைக் குறிக்கும் என்பதை விளக்குகிறார். லக்னத்திற்கு மூர்த்தி, அங்கம் தனு உதயம் என்று பெயர்கள் உண்டு என்பதையும் இரண்டாம் இடத்திற்கு ஸ்வ, கோச, அர்த்த,குடும்ப தன என்ற பெயர்கள் உண்டு என்பதையும் சொல்லி அதன் அர்த்தமான செல்வம்,புதையக் போன்ற சொற்களால் அதை விளக்குகிறார். இப்படிப்பட்ட விளக்கம் தான் ஜோதிடம் கற்க விரும்புவோரை இந்த நூலின் பால் கவர்கிறது. அடுத்த அத்தியாயத்தில் ஒவ்வொரு ராசியிலும் நிற்கும் கிரகத்திற்கான பலன்களைத் தெளிவாகச் சொல்கிறார்.இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரி வரியாக ஒவ்வொரு விஷயமாக இவர் விளக்கிச் சொல்வது கற்பவரை பரவசத்தில் ஆழ்த்தும். ஜோதிடத்தை படிப்படியாக எளிமையாகக் கற்க ஏற்ற நூல் இது.
கணபதி அல்லது கணேசர் இயற்றிய ஜாதகாலங்காரம் ஜோதிடம் கற்பதில் விக்னம் நீங்கி பிள்ளையார் சுழி போடுவதற்கான சிறந்த நூல்!
*****************
Posted by Tamil and Vedas on November 30, 2012
https://tamilandvedas.com/2012/11/30/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be/

பலதீபிகா அருளிய மந்த்ரேஸ்வர்!
By ச.நாகராஜன்
திருநெல்வேலி தந்த ஜோதிட விற்பன்னர்
அற்புதமான ஜோதிட விற்பன்னராக 13ம் நூற்றாண்டில் திகழ்ந்தவர் மகாமுனிவர் மந்த்ரேஸ்வரர். இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பஞ்சகிரி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் மார்க்கண்டேய பட்டர். இந்த கிராமத்தில் இருந்த சிவாலயத்தில் உள்ள அம்பிகையின் பெயர் சுகந்த குந்தளாம்பாள்.இறைவனின் திருநாமம் குலசேகர பெருமாள்! சுகந்த குந்தளாம்பாளை இடைவிடாமல் துதித்து வந்த மந்த்ரேஸ்வரர் சகல கலைகளிலும் சிறந்த விற்பன்னரானார். ஜோதிடத்தில் தலை சிறந்த வித்தகரானார்.
வாழ்க்கையின் பின் பகுதியில் மகாமுனிவராகத் திகழ்ந்த இவர் பாரதமெங்கும் பயணம் மேற்கொண்டார். பத்ரிகாசிரமம், மிதிலா ப்ரதேசம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பெரும் ஞானம் பெற்றார். சாஸ்திரம், வேதாங்கம் உள்ளிட்ட அனைத்திலும் வல்லவரானதால் மந்திரங்களில் சித்தி அடைந்த சித்தரானார். ஆகவே மந்த்ரேஸ்வர் என்ற பெயரைப் பெற்றார். இறுதி நாட்களில் திருநெல்வேலிக்கே திரும்பி வந்தார். யோக முறைப்படி தன் உயிரை நீத்து சமாதி அடைந்தார்.
பலதீபிகா
இவர் எழுதிய பலதீபிகா என்ற ஜோதிட நூல் ஜோதிடர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கிறது. ஜோதிட ஆர்வலர்கள் விரும்பிப் படிக்கும் சிறந்த நூலாகவும் இது அமைகிறது. இந்த நூலில் அவர் வராஹமிஹிரர்,அத்ரி. பராசரர், சாணக்யர், மயன், யவனாசார்யர், சத்யாசார்யர் உள்ளிட்ட பெரும் மேதைகள் கூறுவதை மேற்கோள் காண்பிப்பதிலிருந்தே அனைத்து நூல்களையும் படித்துக் கரை கண்ட மாமேதை அவர் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
பலதீபிகா ஒரு ஜோதிடக் களஞ்சியம்.இந்த நூலில் கிரகங்களின் குணாதிசயங்கள், ராசி மண்டலப் பிரிவுகள், ஷட்பல நிர்ணயம், தொழில் மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் விதம்யோகங்களைக் கண்டறியும் முறைகள், மஹா ராஜயோக விளக்கம், சூரியன் உள்ளிட்ட நவகிரகங்களின் பலாபலன்கள், மேஷத்திலிருந்து மீனம் முடிய உள்ள லக்னங்களின் பலன்கள், ஏழாம் இடமான களத்ரபாவம், பெண்களின் ஜாதகங்கள், குழந்தைப் பேறு, ஜனனம், மரணம், நோய்கள் ஆகியவை ஏற்படும் விதம், பாவங்களின் பலன்களை அறிந்து சொல்லும் முறை,கிரக சேர்க்கைகளுக்கான பலன்கள், தசா புக்தி, அந்தரங்களின் பலன்கள், அஷ்டக வர்க்க பலன்கள் உள்ளிட்ட அனைத்து ஜோதிட விஷயங்களும் தெளிவுற அழகாக விளக்கப்பட்டுள்ளன.இருபத்தியெட்டு அத்தியாயங்கள் உள்ள இந்த நூலில் கடைசி அத்தியாயத்தில் ஆறு ஸ்லோகங்கள் உள்ளன.இதில், தான் இயற்றிய பலதீபிகாவில் என்னென்ன விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதைச் சொல்கிறார்.பின்னர் ஐந்து மற்றும் ஆறா¡ம் ஸ்லோகத்தில் பின் வருமாறு கூறுகிறார்:
ஸ்ரீசாலிவாடி ஜாதேன மயா மந்த்ரேஸ்வரேன வை தைவஜ்ஞேன த்விஜாக்ரேன சத்தாம் ஜ்யோதிர்வித்யாம் முதே சுகுந்தளாம்பாள் சம்பூஜ்ய சர்வாபீஷ்ட ப்ரதாயினீம் தத் கடாக்ஷ விசேஷன க்ரிதா யா பலதீபிகா
இதன் பொருள் :-சாலிவாடி கிராமத்தில் பிறந்த மந்த்ரேஸ்வரராகிய நான் ஜோதிடர்களின் மகிழ்ச்சிக்காக சுகுந்தகுந்தாளாம்பாளை வணங்கி அவள் ஆசியுடன் இந்த நூலை இயற்றியுள்ளேன். அவள் அனைவருக்கும் ஆசி நல்கட்டும்.
திருநெல்வேலி என்பதன் வடமொழியாக்கமே ஸ்ரீசாலிவாடி என்பதாகும் ஸ்ரீ என்றால் திரு; சாலி என்றால் நெல்; வாடி என்றால் தோட்டம் ஆக திருநெல்வேலியை அழகுற ஸ்ரீசாலிவாடி என்று மகான் மந்த்ரேஸ்வரர் குறிப்பிடுகிறார்.
புத்திரப்பேறு அடைய பரிகாரங்கள்
இந்த நூலின் விசேஷமே இது அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது என்பது தான். மனித குலத்தின் மீது மிகவும் பரிவு கொண்ட மகான் மந்த்ரேஸ்வர் என்பதற்கு ஆதாரமாக அவர் கூறும் பல பரிகாரங்களைச் சுட்டிக் காட்டலாம்.
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம். குழந்தைப் பேறு இல்லாதவர்களின் துக்கம் சொல்லி மாளாது. அவர்கள் துயர் நீங்கி புத்திர பாக்கியம் பெற பன்னிரெண்டாம் அத்தியாயம் 24ம் சுலோகத்தில் வழி கூறுகிறார்!
ராமேஸ்வரத்தில் புனித நீராடுவது, புனித நூல்களைப் படிப்பது,சிவனைத் துதிப்பது,விஷ்ணுவை உரிய முறையில் ஆராதிப்பது, தர்மங்களை தவறாது செய்வது, இறந்தவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடன்களைச் செய்வது, நாகதேவதையை பிரதிஷ்டை செய்வது ஆகிய இவை பிள்ளைப் பேறு அடைவதற்கான வெவ்வேறு வழிமுறைகளாகும்.
இப்படி மனிதாபிமானத்தை உள்ளடக்கி இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் அறிய வழி வகுக்கும் நூலை இயற்றியவர் மந்த்ரேஸ்வர் என்பதை உணர்ந்து அவரை வணங்கி அவர் நூலைப் படிப்போர் ஜோதிட திலகமாக ஆவது உறுதி!
This is part of Ancient Astrologers Series written by my brother S Nagarajan, Engineer,Bangalore. More of his articles are available in this blog .Please read them if you are interested in Astrology and Astronomy: swami
************************
Posted by Tamil and Vedas on November 27, 2012
https://tamilandvedas.com/2012/11/27/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/

By ச.நாகராஜன்
நவரத்தினங்களில் ஒருவர்
வராஹமிஹிரர் விக்கிரமாதித்தனின் அரசவையில் முக்கிய இடம் பெற்றிருந்ததை வரலாறு உறுதிப்படுத்துகிறது. விக்கிரமாதித்தனின் காலம் பொற்காலம் எனக் கூறப்படுவதற்கான முக்கியமான காரணம் அவன் அரசவையை அனைத்துக் கலைகளிலும் வல்லவர்களான மகாகவி காளிதாஸர்,தன்வந்தரி,க்ஷபனாக்,அமரசிம்மர்,சங்கு,வேதாளபட்டர்,
கட் கர்பர்,வராஹமிஹிரர்,வரருசி ஆகிய நவரத்தினங்கள் அலங்கரித்தது தான்!
வராஹமிஹிரர் நூல்கள்
வராஹமிஹிரர் எழுதியுள்ள பல நூல்களில் ப்ருஹத் ஜாதகம், ப்ருஹத் சம்ஹிதா, யோக யாத்ரா, பஞ்ச சித்தாந்திகா, ப்ரஸ்ன வல்லபா, லகு ஜாதகா ஆகியவை மிக முக்கியமானவை. இவரது நூல்கள் இவர் ஒரு ரிஷி மட்டுமல்ல. ஒரு சிறந்த விஞ்ஞானியும் கூட என்பதை நிரூபிக்கின்றன. ப்ருஹத் ஜாதகம் மற்றும் ப்ருஹத் சம்ஹிதாவில் பூகோளம், நட்சத்திரத் தொகுதிகள், தாவரவியல், மிருகவியல், வானவியல் உள்ளிட்ட பல்துறை விஞ்ஞானம் பற்றிய வியக்கத்தகும் உண்மைகளை விளக்குகிறார். வ்ருக்ஷ ஆயுர்வேதா என்ற சிகிச்சை முறை மூலம் தாவரங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களையும் அதைத் தீர்க்கும் விதம் பற்றியும் கூட அவர் விரிவாக விளக்குகிறார்.
.தனது தீவிர ஆராய்ச்சி மற்றும் தீர்க்கதிருஷ்டியின் மூலம் இவர் கண்டுபிடித்த உண்மைகள் பல! பஞ்ச சித்தாந்திகா என்ற அபூர்வமான நூல் சூர்ய,ரோமக,பௌலீஸ, வசிஷ்ட. பைதாமஹ சித்தாந்தங்களை எடுத்துரைக்கிறது. ஐந்து சித்தாந்தங்களின் சுருக்கத் தொகுப்பாக இருப்பதால் பஞ்ச சித்தாந்திகா என்ற பெயரை இந்த நூல் பெற்றது.ஹிந்துக்களின் வானவியல் அறிவை விளக்கும் இது பிரமிக்க வைக்கும் ஒன்று என்று அறிஞர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்!சந்திரனும் இதர கிரகங்களும் சுய ஒளியால் பிரகாசிக்கவில்லை; சூரியனின் ஒளியாலேயே பிரகாசிக்கின்றன என்ற உண்மையை முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவர் இவரே!
சில கணித சூத்திரங்களையும் இவரே உலகுக்கு முதலில் அறிவித்துள்ளார்.திரிகோணமிதியின் இன்றைய கண்டுபிடிப்புகளை (sin2 x + cos2 x = 1 உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகள்) அன்றே இவர் ரத்தினச்சுருக்கமாக சூத்திர வடிவில் கூறி விட்டார்..மாஜிக் ஸ்குயர் எனப்படும் மந்திர சதுரங்களை (pandiagonal magic square of order four -டு தி ஆர்டர் ஆ•ப் •போர் – அதாவது வர்க்கத்தின் நான்கு மடங்கு என்ற அளவில்) இவர் விரிவாக விளக்கி இருப்பது நவீன கணித மேதைகளை வியப்புற வைக்கிறது.
நியூட்டன் பின்னால் கண்டுபிடித்த புவி ஈர்ப்பு விசை பற்றிக் கூட வராஹமிஹிரர் நன்கு விளக்கி இருப்பது பிரமிக்க வைக்கும் விஷயமாகும். புவி ஈர்ப்பு விசையை அவர் குரு த்வ ஆகர்ஷண் என்று குறிப்பிடுகிறார். அதாவது குருவினால் ஈர்க்கப்படுதல் என்பது இதன் பொருள். சூரியனை நடு நாயகமாகக் கொண்டு சூரியனின் ஆகர்ஷணத்தால் இதர கிரகங்கள் பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு இருப்பதை அவர் கண்டறிந்து அதை குருத்வாகர்ஷன் என்று பெயரிட்டார்!

ஆர்யபட்டரின் சீடர்
இவருக்கு முன்னால் தோன்றிய ஆர்யபட்டர் வானவியலிலும் கணிதத்திலும் தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதையாகத் திகழ்ந்தார்.கி.பி,476ல் பிறந்த இவர் 550 முடிய வாழ்ந்ததாகவும் இவரின் சீடரே வராஹமிஹிரர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.ஆர்யபட்டரிடம் வானவியல்,கணிதம் ஆகியவற்றை நன்கு பயின்ற வராஹமிஹிரர், அவரது புலமையை வெகுவாக வியந்து பாராட்டியதோடு அவரது சூத்திரங்களை தனது கணிதத் திறமையால் இன்னும் துல்லியமாக ஆக்கினார்!
வானவியலை ககோள சாஸ்திரம் என நமது பழைய நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ககோள சாஸ்திரம் நாலந்தா பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. ககோள சாஸ்திரத்தில் நிபுணராகத் திகழ்ந்த ஆர்யபட்டர் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.ஆர்யபட்டர் எழுதிய அற்புதமான நூல் ஆர்யபட்டீயம்! இந்த நூலுக்குப் பல மேதைகள் விரிவாக விளக்கவுரைகள் எழுதி உள்ளனர்.
ஆர்யபட்டரின் கண்டுபிடிப்புகள்
பூமியின் சுற்றளவை 39968.0582 கிலோமீட்டர் என்ற அளவுக்கு இவர் துல்லியமாகக் கணித்துள்ளார். நவீன சாதனங்களுடன் விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவை 40075.0167 கிலோமீட்டர்கள் என இப்போது கணித்துள்ளனர்! ’பை’ எனப்படும் கணிதக் குறியீட்டின் அளவையும் .கிரஹணங்களைப் பற்றியும் வியக்கத்தக்க விதத்தில் துல்லியமாக அவர் குறிப்பிடுகிறார். ‘காலக்ரியா’ என்ற அவரது அற்புதமான நூல் அனைத்து விவரங்களையும் விளக்குகிறது. இந்த நூலை அவர் தனது 23ம் வயதிலேயே எழுதி உலகத்தையே பிரமிக்க வைத்தார்!
மேலை நாடுகளுக்கு ஆர்யபட்டரே வழிகாட்டி
ஆர்யபட்டரின் அனைத்து நூல்களும் 13ம் நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப்படவே மேலை நாடுகளில் ஹிந்து முறையிலான வேத ஜோதிடமும் அதன் அடிப்படையான வானவியல் கணிதமும் பரவலாயிற்று, அதுவரை முக்கோணங்களின் பரப்பளவை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தெரியாமல் திகைத்திருந்த அவர்கள் ஆர்யபட்டரின் சூத்திரங்களால் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு பிரமித்தனர்!
வராஹமிஹிரரின் புதல்வர்
ஆர்யபட்டரும் வராஹமிஹிரரும் வானவியலையும் ஜோதிடத்தையும் ஒரு புதிய பரிமாணத்திற்கு ஏற்றி வைத்த போது வராஹமிஹிரரின் புதல்வரும் தன் பங்கிற்கு ஜோதிடக் கலை வித்தகராக ஆனார்.
வராஹமிஹிரரின் புதல்வரான ஹோராசரர் ப்ரஸ்ன சாஸ்திரம் பற்றி ஷட்பஞ்சசிகா என்ற நூல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். வராஹமிஹிரரின் நூல்களுக்கு விளக்கவுரையாக அவரது நூல்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.
இப்படி உஜ்ஜயினி வாழ் ஜோதிடமேதைகள் வேத ஜோதிடத்திற்கு விஞ்ஞான முறையில் ஒரு வலுவான அஸ்திவாரத்தை அமைத்ததோடு அதை உலகெங்கும் பரப்பினர்!
-வராஹமிஹிரர் வரலாறு முற்றும்
Posted by Tamil and Vedas on November 21, 2012
https://tamilandvedas.com/2012/11/21/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b9-2/
அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர் – (1) by ச.நாகராஜன்

Picture: Sun Dial at Ujjain Observatory
This is part of S Nagarajan’s Series on Ancient Astrologers of India. Please read his earlier posts on Astronomers, Astrologers,Stars and Astrology.
காலம் பிறக்கும் நகரமான உஜ்ஜயினியின் ரகசியம்
புகழோங்கிய பண்டைய பாரதத்தில் அபூர்வ நகரமாக விளங்கியது உஜ்ஜயினி. இந்த நகரைப் பற்றிய ஏராளமான அதிசயக்கத்தக்க உண்மைகள் உள்ளன. காலம் பிறப்பது இங்கே தான் என்பது முதல் ரகசியம். சூரிய பாதையில் தீர்க்கரேகை செல்லும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது உஜ்ஜயினி. இந்த முக்கிய கேந்திரத்தின் முக்கிய புள்ளியைக் கண்டு பிடித்த நம் முன்னோர் சரியாக அந்தப் புள்ளியில் மகா காலேஸ்வரரின் லிங்கத்தை ஸ்தாபித்தனர். ஸ்ரீ லங்காவிலிருந்து புராணம் விவரிக்கும் மேருவிற்கு செல்லும் தீர்க்க ரேகை உஜ்ஜயினியை ஊடுருவிச் செல்கிறது.ஹிந்து வானவியல் நிபுணர்களின் க்ரீன்விச் உஜ்ஜயினி நகரம் தான்! கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் கலை பூமியாகத் திகழ்ந்த இந்த நகரத்தில் தான் உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் அரசோச்சி வந்தான்.இங்கே உள்ள வானவியல் கட்டிடங்கள், மஹாகாலேஸ்வரர் ஆலயம், நவகிரஹ ஆலயம் முதலிய இடங்களை விளக்கத் தனி நூல் தான் எழுதப்படவேண்டும்!
ஏழு மோட்சபுரிகளுள் ஒன்று
‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரீ த்வாராவதீசைவ சப்தைதா: மோக்ஷதாயிகா’ என்ற சுலோக கூற்றின் படி அவந்தி ஏழு மோட்சம் தரும் இடங்களில் ஒன்று என்பது அடுத்த ரகசியம். 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கியமான லிங்கம் அவந்தியிலேயே அமைந்துள்ளது. இதன் தலை நகரமான உஜ்ஜயினி கிறிஸ்து பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பேயே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த புண்ணிய பூமி! இந்த அபூர்வ பூமியின் வரலாறில் புதைந்துள்ள இன்னொரு ரகசியம் தான் அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரரின் வரலாறு!உஜ்ஜயினியில் தான் வராஹமிஹிரர் வளர்ந்தார்;வாழ்ந்தார்; அந்த நகருக்கு ஒரு புதிய அந்தஸ்தையும் தன் ஜோதிட ஆற்றலினால் தந்தார்!

Picture: Ancient Ujjain Observatory
வராஹமிஹிரர் என்ற பெயர் வரக் காரணம்
வராஹமிஹிரர் என்ற பெயர் அவருக்கு வந்ததற்கு காரணமே ஒரு சுவாரஸ்யமான ஜோதிட நிகழ்வு தான்! உஜ்ஜயினியில் ஆதித்ய தாஸர் என்ற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் வராஹமிஹிரர். சூரியனை நன்கு வழிபட்டு வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார் அவர்.
விக்கிரமாதித்தன் அரசவையில் நவரத்தினங்களாக பெரும் அறிஞர்கள் ஜொலித்தனர். அந்த நவரத்தினங்களுள் ஒருவர் வராஹமிஹிரர். ஒரு சமயம் மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான்.மிக கவனமாக ஜாதகத்தைக் கணித்து அந்த ஜாதகத்திற்குரிய பலனை வராஹமிஹிரர் சிந்தித்து உணர்ந்தார்.மன்னனை நோக்கிய அவர், “அரசே! இந்த ராஜகுமாரனுக்கு அற்ப ஆயுளே உள்ளது. இவனது பதினெட்டாம் ஆண்டில் இவனுக்கு ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது” என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார்.

அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான். பட்டியின் ஆலோசனையின் பேரில் ராஜகுமாரனுக்காக 80 அடி மதில் சுவர் உள்ள ஒரு பிரத்யேகமான அரண்மனை கட்டப்பட்டது. அதைச் சுற்றி ஆயிரக்கணக்கான வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். பன்றி என்ற மிருகமே தொலை தூரத்திற்கும் இல்லாதபடி பன்றிகள் அழிக்கப்பட்டன. ராஜகுமாரனுக்கு அனைத்துப் பயிற்சிகளும் அரண்மனைக்குள்ளேயே அளிக்கப்பட்டதால் அவனுக்கு வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை ஆண்டுகள் உருண்டோடின. மன்னன் ராஜகுமாரனின் பதினெட்டாம் ஆண்டில் வராஹமிஹிரர் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அவரை அழைத்தான். “கடந்த ஆண்டுகளில் நான் செய்த காவல் திட்டத்தைக் கவனித்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள். என் பையனுக்கு ஒன்றும் நேராது அல்லவா?” வராஹமிஹிரர் வருத்தத்துடன். “அரசே! விதியை யாராலும் வெல்ல முடியாது. இன்று மாலை ராஜகுமாரனுக்கு பன்றியின் மூலம் மரணம் நிச்சயம் “ என்று கூறினார்.
மன்னன் உடனே தன் மெய்காவலர்களை அழைத்து ஒவ்வொரு மணி நேரமும் ராஜகுமாரனின் நிலை பற்றி எனக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டான். மாலையும் கடந்தது. கடைசியாக மன்னனுக்கு வந்த செய்தியின் படி அவன் தனது அறையில் மற்ற சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மன்னன் வராஹமிஹிரரை அழைத்து. “உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றான். வராஹமிஹிரரோ துக்கத்துடன் ராஜகுமாரன் இறந்து சிறிது நேரம் ஆகி விட்டது. வாருங்கள். அவன் அரண்மனைக்குப் போகலாம்” என மன்னனை துரிதப் படுத்தினார். கலங்கிய மன்னன் அரண்மனைக்கு விரைந்தான். அங்கே ராஜகுமாரனின் அறையில் அவனைக் காணோம்.
அனைவரும் பரபரப்புடன் தேடினர். கடைசியில் அரண்மனையின் ஏழாவது மாடியில் ரத்த வெள்ளத்தில் ராஜ குமாரன் இறந்து கிடந்ததைப் பார்த்து மன்னன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடந்தது இது தான்: நெடுநேரம் தன் அறையில் இருந்த ராஜகுமாரன் விதி ஆணையிட்ட அந்த சமயத்தில் மேல்மாடிக்குச் சென்றிருக்கிறான். அரண்மனை கோபுரத்தின் உச்சியில் ராஜ இலச்சினையான பன்றி இலச்சினை கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அங்கு அது வரை கண்டிராத பலத்த காற்று வீசவே அது ஆடி ராஜகுமாரன் மீது விழவே அதனால் வெட்டுண்டு ராஜகுமாரன் மரணமடைந்தான்.
எண்பது வயது வாழ்ந்த ஜோதிட மேதை
வராஹத்தின் மூலம் அதாவது பன்றியின் மூலம் மரணம் வருவதைச் சொன்ன இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் வராஹமிஹிரர் என அழைக்கப்படலானார்! அவர் வாழ்ந்த 80 ஆண்டுகளும் உலகினரால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.
வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார்.அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக இலங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவை! இத்தோடு ஜோதிட அறிவையும் . உலகியல் அறிவையும் மனித குலம் மீது அவருக்குள்ள பரந்துபட்ட மனிதாபிமானத்தையும் அவரது நூல்கள் மூலம் காண முடியும்.
-வராஹமிஹிரர் வரலாறு தொடரும்
Posted by Tamil and Vedas on November 20, 2012
https://tamilandvedas.com/2012/11/20/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b9%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b9/
by ச.நாகராஜன்
ராமாயணம் உருவாகக் காரணமான மஹரிஷி
ஹிந்து வாழ்க்கை முறையில் இதிஹாஸ, புராணங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அந்த இதிஹாஸ புராணங்களில் நாரத மஹரிஷிக்குத் தனி இடம் ஒன்று உண்டு.
மாபெரும் அறிஞரும் வேத விற்பன்னரும் இசைப் புலவரும் பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் கூட!
வால்மீகி ராமாயணத்தில் வரும் “தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்” என்ற சுலோகம் ஒன்றே போதும் நாரதரின் பெருமைப் பற்றிக் கூற! நாரத முனிவர் தவத்திலும் வேதத்திலும் ஆழ்ந்தவர்; வாக்கு வன்மையுள்ளவர், பகவானை தியானம் செய்பவருள் உத்தமர். அவரை தபஸ்வியான வால்மீகி கேட்டார் என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.
வால்மீகி தர்ம நாயகனும் பொய்பேசாதவரும் இன்னும் இப்படிப் பல்வேறு நற்குணங்கள் பொருந்தியுள்ள நாயகன் யார் என்று நாரதரைக் கேட்ட போது அவர் ராமரைப் பற்றிக் கூற, ராமாயணம் எழுந்தது. நாரதர் பாண்டவர்களின் உற்ற நண்பரும் கூட! தேவைப்பட்ட போதெல்லாம் அவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் தந்ததை மஹாபாரதத்தில் வியாஸர் வெகுவாக விரித்துரைப்பதைக் காணலாம்.
வேத வியாஸர் மனம் கலங்கி இருந்த போது அவரை பாகவதத்தை இயற்றுமாறு கூறி அவரின் கலக்கத்தைப் போக்கி பாகவதம் எழக் காரண புருஷராக இருந்தவரும் நாரதரே!
திரிலோக சஞ்சாரி
நாரத பாஞ்சராத்ரத்தின் படி நாரதர் பிரம்மாவின் புத்திரர்.இவரைப் பற்றி பதினெட்டு புராணங்களும் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் கூறுகின்றன. அவரது பல பிறவிகள் பல்வேறு சுவையான செய்திகளைத் தருகின்றன.நாரதர் பிரபஞ்சத்தின் முதல் சுற்றுப் பயணி. திரிலோக சஞ்சாரி என்ற பெயர் கொண்ட அவர் மூன்று லோகங்களுக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் க்ஷண நேரத்தில் சென்று விடுவார்.
நாரதர் கலகப் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது அவரது பல்முக பரிமாணங்களில் ஒரு சிறிய பரிமாணம் தான். ஆனால் சென்ற நூற்றாண்டில் பிரபலமடைந்த நாடகங்களில் ஹாஸ்ய ரசம் தேவைப்பட்டதால் இரவு முழுவதும் நடந்த நாடகத்தில் அவ்வப்பொழுது நாரதர் தோன்றி சிரிக்க வைத்து மக்களை ‘விழிப்புடன்’ இருக்குமாறு செய்வது வழக்கமாகிப் போனது. அதனால் தேவரிஷியான மிகப் பெரிய மஹரிஷியின் ஒரு சிறிய அம்சத்தையே நாம் வெகுவாக ரசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு விட்டோம்!
நாரதரின் கலகம் நன்மையில் முடியும். ஒரே ஒரு பிரச்சினையை எழுப்பி அதன் மூலம் அவர் பல பெரிய விஷயங்களுக்குத் தீர்வு காண்பதை ஏராளமான கதைகள் விளக்குவதை நாம் அறிவோம்.
ஜோதிடத்தின் மூலகர்த்தா
தேவரிஷியான நாரதரைப் பற்றி மட்டுமே உள்ள புராணம் நாரத புராணம். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இதில் சிக்ஷ¡ பகுதி வேத சம்ஹிதைகளை நன்கு விளக்குகிறது. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது.
ஒரு கீதத்தின் பத்துக் குணங்களையும் இந்த புராணமே நன்கு விளக்குகிறது. இசைக் கருவிகளில் வீணையையும் வேணுவையும் இந்தப் புராணம் விளக்குவது போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை!
பிரம்மா ஜோதிடத்தைப் பற்றி நான்கு லட்சம் சுலோகங்களில் விளக்கியுள்ளார்! இதன் சுருக்கத்தை நாரதர் விளக்கியுள்ளார். இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல். ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள். கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன. சூர்ய சித்தாந்த கருத்துக்களை இங்கு காணலாம்.வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் உள்ள பல கருத்துக்கள் இங்கு உள்ளன. நாரத சம்ஹிதையில் உள்ள பல சுலோகங்கள் அப்படியே ப்ருஹத் சம்ஹிதாவிலும் இருப்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்! நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!
த்ரி ஸ்கந்த ஜோதிஷம்
‘ஜோதிஷம் சூர்யாதி க்ரஹணம் போதகம் சாஸ்த்ரம்’ என்பது ஜோதிடம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது.
கிரஹ சஞ்சாரங்களைத் துல்லியமாக நிர்ணயிக்க உதவும் கணக்குகளும் அதையொட்டி நல்ல காரியங்களை நல்ல நேரங்களில் ஆரம்பித்து நற்பயன் காண்பதையும் நாரத சம்ஹிதா, ஸ்கந்த த்ரியா என்று மூன்று பகுதிகளாக விளக்குகிறது! த்ரிஸ்கந்த ஜோதிஷம் என்ற பெயரில் இன்று பிரபலமாக இது விளங்குகிறது.
பின்னால் இது விரிந்து சித்தாந்தம், ஹோரா (பராசரர்,ஜைமினி, யவனர் முறைகள்), வாஸ்து சாஸ்திரம் முஹ¥ர்த்தம் உள்ளிட்ட சம்ஹிதா, ப்ரஸ்னம் பார்த்தல், சகுனம் பார்த்தல் என ஐந்தாக விரிவடைந்தது.பிரம்மாவிடமிருந்து நாரதர் ஜோதிடத்தைக் கற்று அதை சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
நாரதரின் இசை
நாரதரைப் பற்றிய சுவையான ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்: தானே சிறந்த விஷ்ணு பக்தர் என்றும் இசைக் கலைஞர் என்றும் கர்வம் கொண்ட நாரதர், ஒரு முறை ஒரு நந்தவனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டார். யார் அவர்கள் என்று பார்த்த போது அவர் திகைத்துப் போனார். தேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவர்களில் சிலருக்கு கைகள் இல்லை; சிலருக்குக் கால்கள் இல்லை; சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனர். சிலர் குள்ளமாக ஆகி இருந்தனர். இதைப் பார்த்துத் திகைத்த நாரதர் அவர்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள். “நாங்கள் ராக தேவதைகள். இன்று வைகுந்தத்தில் நாரதர் என்ற ஒருவர் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து சீர் குலைந்து இப்படி ஆகி விட்டோம்” என்று பரிதாபமாகத் தங்கள் நிலையைக் கூறினர். நாரதரது கர்வம் ஒழிந்தது. அவர் தான் யார் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமானிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன்” என்றாராம். ஹனுமான் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராம்.
இப்படிப் பட்ட அனுபவங்களைக் கொண்ட நாரதர் ஜோதிடத்தை எவ்வளவு நுணுக்கமாகச் சொல்லி இருப்பார் என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.
நாரதரின் வழிபாட்டு நூல்
108 பாஞ்சராத்ர நூல்களில் நாரத பாஞ்சராத்ரம் பிரபலமானது. இது கோவிலில் நடைபெறும் வழிபாடுகளைப் பற்றியும் சுத்திகள் பற்றியும், தேவதா பிரதிஷ்டை போன்றவற்றையும் பற்றி விளக்குகிறது. இவற்றின் அடிப்படையாக ஜோதிடம் இலங்குகிறது! நாடக வாயிலாகவும் நமது திரைப்படங்கள் வாயிலாகவும் நாம் பார்க்கும் நாரதர் வேறு; ஜோதிடம்,பக்தி, நாட்டியம், பூஜை முறைகள் இவற்றை உபதேசித்து உரைக்கும் மகத்தான ஞானமுடைய மஹரிஷி நாரதர் வேறு!
நல்ல பக்தராக வேண்டுமா, நல்ல ஜோதிடராக வேண்டுமா, நல்ல நாட்டியக் கலைஞராக வேண்டுமா..?
நாட வேண்டிய மஹரிஷி நாரதரே!
*******************
Posted by Tamil and Vedas on November 2, 2012
https://tamilandvedas.com/2012/11/02/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%b0/
You must be logged in to post a comment.