written by S NAGARAJAN
Date:12 April 2017
Time uploaded in London:- 5-27 am
Post No.3810
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி சிக்மண்ட் ஃப்ராய்ட்!
ச.நாகராஜன்
பிலிப்பைன்ஸில் 2013ஆம் ஆண்டு சான் டியோடோரோ நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரியண்டல் மிண்டோரோ பூவா தலையா போட்டுப் பார்த்த பின்னர் ஜெயித்தவ்ர் என அறிவிக்கப்பட்டார், பிலிப்பைன்ஸின் விதிகளின் படி ஒரே ஓட்டு எண்ணிக்கையை இருவர் கொண்டிருந்தால் இருவரும் ஆளுக்கு ஐந்து முறை நாணயத்தைச் சுண்டிப் போட்டுப் பார்த்து அதிகம் தலை விழுந்தவரே ஜெயித்தவராக அறிவிக்கப்படுவார். இதிலும் முதல் முறை சரி சமமாக இருவரும் இருந்ததால் இரண்டாம் தடவை ஐந்து முறை பூவா தலையா போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் ஜெயித்தார் ஓரியண்டல் மிண்டோரோ. – பிலிப்பைன்ஸ் செய்தி
மனிதனின் வாழ்வில் முடிவு எடுக்கத் திணறும் படியான சிக்கலான தருணங்கள் ஏராளம் வருகின்றன. வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு இரண்டு நல்ல நிறுவனங்கள் வேலை தர முன்வருகின்றன. எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது?
பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க நீண்ட நாட்கள் முயற்சி செய்த ஒரு பெற்றோருக்குத் திடீரென இரண்டு இடங்களில் மாப்பிள்ளை கிடைக்கிறார். இருவருமே நல்லவர்கள். யாரைத் தேர்ந்தெடுப்பது. இது போல நூற்றுக்கணக்கான விஷயங்களில் முடிவை எப்படி எடுப்பது?
நம் முன்னோர்களில் பலரும் கோவிலில் சென்று பூ கட்டிப் பார் என்பர். இறைவன் கொடுக்கும் முடிவை எடுத்து அதன் படி நடப்பர். சைவர்கள் தேவாரத்தில் கயிறு சார்த்திப் பார்ப்பர். அதாவது தேவார நூலில் ஏதோ ஒரு பக்கத்தில் கயிறைச் சார்த்திப் பார்த்து அந்த பக்கத்தில் என்ன உத்தரவு வருகிறதோ அதன் படி நடப்பர். அவர்களுக்குத் தகுந்த பாடல் அதில் இருக்கும்.
கிறிஸ்தவர்கள் இதே முறையில் பைபிளில் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்துப் பார்த்து அதன் படி முடிவெடுப்பர்.
அறிவியலுக்கு ஒத்த முறையாக இது இல்லை என்றாலும் நம் சக்திக்கு மீறிய விஷயங்கள் நமக்குத் தெரியாத போதிலும் பேரறிவுக்குத் தெரியும் என்று அந்தப் பேரறிவின் மீது பாரத்தைப் போட்டு முடிவை எடுப்பது வழக்கம்.
இன்றைய நடைமுறை வாழ்விலும் இது சகஜமாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக கிரிக்கட் மேட்சில் முதலில் யார் ஆட்டத்தைத் துவங்கி விளையாடுவது என்பதில் பூவா தலையா போட்டுப் பார்த்து முடிவை எடுப்பது நடைமுறைப் பழக்கமாக இருக்கிறது.
நண்பர் ஒருவரைப் பார்க்கப் போகிறீர்கள். அவர் ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் உள்ளே போன சமயம் அவருக்கு விழுந்தது தலை.
அவர், “அடடா! நீ வந்த சமயம் ஆறாம் முறையாகத் தலை விழுந்திருக்கிறது, என்ன அதிசயம்! சரி. இப்போது உனக்கு என்ன வேண்டும், தலையா, பூவா சொல்” என்கிறார்.
நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நீங்கள் அல்ல, யாராக இருந்தாலும் உடனே பூ என்று தான் பதில் சொல்வார்கள்.
ஏனெனில் ஏழாம் முறையாக எங்காவது தலை விழுமா என்ற ஒரு எண்ணம் தான் காரணம்!
இது பொதுவாக அனைவரும் செய்யும் மதிப்பீடு. இதற்கு “ தி கேம்ப்ளர்ஸ் ஃபாலஸி – சூதாடுவோர் செய்யும் பிழை – (The Gamblers Fallacy) என்று பெயர். இப்படி நம்புவோர் பொதுவாக உலகில் இல்லாத ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பவர்கள்.
ஆக ஒரு முடிவை எட்ட முடியாமல் இருக்கும் போது பூவா தலையா போட்டுப் பார்ப்பது உலகெங்குமுள்ள நடைமுறையாக தொன்று தொட்டு இருந்து வருகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் வாலிபால். கால்பந்தில் பூவா தலையா போடுவது நிச்சயமாக இடம் பெறுகிறது.
பிரிட்டனில் ஒரே எண்ணிக்கையில் இருவர் ஓட்டு பெற்று விட்டார்கள் என்றால் பூவா தலையா போட்டுப் பார்த்து வென்றவர் யார் என்று முடிவு செய்யப்படுகிறது. அமெரிக்க செனட்டர் தேர்தலிலும் பூவா தலையா போட்டுப் பார்ப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு பழக்கம் தான்!
இந்த முறையை அறிவியல் ஆதரிக்கிறதா?
Toss the Coin என்ற இந்த் நடைமுறையை விஞ்ஞானி ஒருவரும் ஆதரிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இல்லை?பிரபல விஞ்ஞானி சிக்பண்ட் ப்ராய்ட் முடிவை எட்ட முடியாத நிலையில் பூவா தலையா போட்டுப் பாருங்கள் என்கிறார்.
அவரது கொள்கை ‘டாஸ் தி காயின்’ கொள்கை என்று பிரபலமானது.
இந்தக் கொள்கையில் அவர் என்ன சொல்கிறார்?
“பூவா தலையா போட்டுப் பாருங்கள் என்று நான் சொல்வது முடிவு எடுப்பதற்காக அல்ல, இந்த முடிவை எடுப்பவர்கள் தங்களை உணர்ச்சிபூர்வமாக தெளிவு படுத்திக் கொள்வதற்காகத்தான் இப்படி போட்டுப் பார்க்கச் சொல்கிறேன்.நீங்கள் நாணயம் என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள். பிறகு அந்த முடிவிற்கான உங்கள் எதிர்வினை என்ன என்று பாருங்கள். இந்த முடிவால் எனக்கு சந்தோஷம் தானா என்று கேட்டுக் கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயலில் இறங்குங்கள்” என்கிறார் அவர்.
உலகெங்கும் பூவா தலையா போட்டுப் பார்ப்பது பகுத்தறிவுக்கொத்த ஒரு நடைமுறைப் பழக்கமாக ஆகி விட்டது.
மூட ந்ம்பிக்கை என்று சொல்பவர்கள் சொல்லி விட்டுப் போகட்டும், கோவிலில் பூ கட்டிப் பார்ப்பதும் நிற்கப் போவதில்லை, கிரிக்கட்டில் முதலில் யார் ஆடுவது என்பதை நிர்ணயிக்க டாஸ் தி காயினும் நிற்கப் போவதில்லை.
உளவியலாளர்களும் நடுவர்களும் அறிஞர்களும் ஆதரிக்கும் ஒரு விஷயம் பூவா தலையா போட்டுப் பார்ப்பது தான்!
இதன் படி நிகழ்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளை விரும்புப்வர்கள் ஒரு பெரும் நூலாகவே தொகுத்துப் பார்க்கலாம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில்!
பிரிட்டனைச் சேர்ந்த கணித மேதையும் எலக்ட்ரிகல் பொறியாளருமான ஆலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside) மின்சார சர்க்யூட்டுகளை பகுப்பாய்வு செய்ய சிக்கலான பல கணித உத்திகளைக் கண்டுபிடித்தார். ஆனால் இவருக்கு பல விசித்திரமான பழக்கங்கள் இருந்தது. (ஏற்கனவே 25-11-16 பாக்யா இதழில் அறிவியல் அறிஞர் பகுதியில் இவரைப் பற்றிப் பார்த்துள்ளோம்)
இவர் தனது வீட்டை பிரம்மாண்டமான க்ரானைட் கற்களைக் கொண்டு அமைத்தார். தனது நகங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் நெய்ல் பாலிஷைத் தடவிக் கொள்வார்.. வெறும் பாலை மட்டுமே பல நாட்களில் அருந்துவார். அதுவே அவரது உணவாகும் எப்பொழுதும் எழுதிக் கொண்டே இருக்கும் ஒரு வித நிலையை மூளை கொண்டிருந்தால் அதற்கு ஹைபர்க்ராபியா (Hypergraphia) என்று பெயர். இத்தகைய ஹைபர்க்ராபியாவை அவர் கொண்டிருந்ததால் எப்பொழுதும் அவர் எழுதிக் கொண்டே இருப்பார். இத்தனை விசித்திரப் பழக்கங்களுடன் அவர் ஆராய்ச்சி செய்து வாழ்ந்து வந்தார்!
****
You must be logged in to post a comment.