நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396)

Written by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 5 September 2018

 

Time uploaded in London – 10-15 am (British Summer Time)

 

Post No. 5396

 

நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396)

 

பாதரஸம் (Mercury) போல மனிதர்களைப் பைத்தியமாக்கிய ஒரு மூலகம் உலகில் இல்லை. ரஸவாத (alchemy) வித்தையில் மிகவும் பயன்பட்ட மூலகம். இரும்பையும் ஈயத்தையும் தங்கமாக்காலாம் என்று உலகம் முழுதும் ஆராயப்பட்ட மூலகம்.

 

இந்தப் பாதரஸம், மனிதன் இறந்த பின்னரும் முடியில், மயிரில் அப்படியே இருக்கும். அதன் மூலம் நாம் என்ன கண்டுபிடிக்கலாம்?

 

அவருக்கு காம சம்பந்தமான நோய்கள் இருந்து சிகிச்சை பெற்றது தெரியும்.

அல்லது

அல்லது அவர்கள் ஏதோ ரஸவாத (alchemy) ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் என்பது தெரியும்.

 

இதோ சுவையான ஆராய்ச்சியில் கிடைக்கும் சோகமான தகவல்கள்:-

 

மனிதனின் தலை முடியில் கந்தகம் இருக்கும் அமீனோ அமிலங்கள் உள. அவை மெர்குரி எனப்படும் பாதரஸத்தை ஈர்த்துக் கொள்ளும். இதனால் ஒருவர் எந்த அளவுக்கு மெர்க்யுரி (பாதரஸ) விஷத்தால் பாதிக்கப்பட்டார் என்று நிரந்தர ரிகார்ட் (பதிவுப் புஸ்தகம்) உண்டாகிவிடும்!

 

முன் காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்களுடைய மயிர்க் கற்றையை எடுத்து பாதுகாத்து வைப்பர்.

 

(காஷ்மீரில் உள்ள பிரபல மசூதியில் முகமது நபியின் மயிர், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதையும் அதைத் தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் வருவதையும் முன்னரே ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன்)

 

தற்காலக் கருவிகளைக் கொண்டு பிரபல தலைவர்கள், விஞ்ஞானிகளின் முடியை ஆராய்ந்ததில் பல முக்கிய விஷயங்கள் கிடைக்கின்றன. இதை மயிர் ‘விஷயம்’ என்று ஒதுக்கிவிடாமல் மயிர் ‘விஷம்’ என்று அதிசயிக்க வேண்டியுள்ளது.

காம சம்பந்தமான நோய்கள் ஜனன உறுப்புகளைத் தாக்கும் . அப்படித் தாக்கினால் கலோமெல் (calomel) என்ற  மருந்தைக் கொடுத்தனர் அந்தக் காலத்தில். இந்தப் பொடியில் மெர்குரி க்ளோரைட் முதலியன இருக்கும் . இது பூஞ்சக் காளான் முதலியவற்றை ஒழிக்கும்; நல்ல பேதி மருந்து.

 

மயிரிலுள்ள மெக்யுரி எனப்படும் பாதரஸம் இதன் காரணமாகவோ, அல்லது ஆராய்ச்சிசாலையில் பாத ரஸப் புகையை சுவாசித்ததாலோ வந்திருக்க வேண்டும்.

 

ஐஸக் நியூட்டன் (1642-1727) என்ற பிரபல பௌதீக (இயற்பியல்) விஞ்ஞானியின் முடியை ஆராய்ந்தனர். அவர் ஒரு பிரம்மாச்சாரி. ஆகவே அவர் செய்த ஆராய்ச்சியின் போது பாதரஸ ஆவி அவர் தலை முடிக்கு ஏறியிருக்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த கருத்து.

 

ராபர்ட் பர்ன்ஸ் (Robert Burns 1759- 1796) என்ற ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) புலவரின் முடியிலும் இப்படி பாதரஸம் இருந்தது. அவரது வாழ்வை ஆராய்ந்தோர், அவர் சிபிலிஸ் (syphilis) போன்ற காம நோக்கு சிகிச்சை பெற்றதால் மெர்க்யுரி தலைக்கு ஏறி விட்டது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

 

 

நெப்போலியனை பிரிட்டிஷ்கார ர் கள் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைத்த போது அவருக்கும் கலோமல் கொடுத்தது அவர் முடியிலிருந்து தெரிந்தது. ஆனால் அவர் இறந்ததற்குக் காரணம் ஆர்செனிக் (arsenic) விஷமாகும். பிரிட்டிஷார் அவரை விஷம் வைத்துக் கொன்றனர். அது தனிக் கதை.

 

அந்தக் காலத்தில் வேறு சில நோய்களுக்கும் பாதரஸ உப்புக்கள் கலந்த மருந்துகளைக் கொடுத்தனர். இதனால் நல்லோரும் கூட உயிர் இழந்தனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த புகழ் மிகு வானவியல் நிபுணர் டைகோ ப்ராஹியின் ((Tycho Brahe 1546-1601) கதை சோகக் கதை. அவருக்கு மூத்திரக் காயில் நோய். இதற்காக மருந்து கொடுத்து இருந்தனர். அவர் மறுநாளன்று பிராக் நகரில் ஒரு பெரிய விருந்து ஒன்றில் கலந்து கொள்ள வந்தார். அபோது சிறிநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மன்னர் கொடுக்கும் விருந்திலிருந்து பாதியில் வெளியேறுவது முறையல்ல என்று கருதி மூத்திரத்தை அடக்கினார். இதனால் அவரது சிறுநீர்ப்பை பிய்ந்து போய் சில நாட்களில் உயிரிழந்தார். அவரது முடியை ஆராய்ந்தபோது அவருடைய உயிரைக் காப்பாற்ற அவருக்கு மெர்குரி கலந்த மருந்தது கொடுக்கப்பட்டது தெரிந்தது. ஆகவே முடியில் மெர்க்யுரி இருந்த எல்லோரும் காம நோயாளிகள் என்றும் கணக்குப் போட்டுவிடக்கூடாது.

 

இங்கிலாந்தின் மன்னர்களில் அபகீர்த்தி வாய்ந்தர் எட்டாம் ஹென்றி (1491-1547) மன்னர் ஆவார். அவருக்கு நிறைய மனைவிகள்; பிடிக்காத மனைவியருக்கு எல்லாம் மரண தண்டனை விதித்தவர். அவர் முடியிலும், ரஷ்யாவின் ஐவான் தி டெர்ரிபில் (Ivan the Terrible) முடியிலும் பாதரஸ அளவு அதிகம் இருப்பது அவர்களைக் காம நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கத் தூ ண்டுகிறது. இரண்டாவது சார்ல்ஸ் மெர்க்யுரி விஷத்தால் இறந்தது உறுதி செய்யப்பட்ட செய்தி! அவர் காமக் களியாட்டங்களிலும் ரஸவாத வித்தை ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டவர். இந்த இரண்டில் ஏதோ ஒன்று அவர் முடியில் பாதரஸத்தை ஏற்றி இருக்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.

-சுபம்–