ஆண்டவா! என்னால் பிரயோசனம் உனக்கு ஏதுண்டு? பட்டினத்தார் கேள்வி (Post No.3585)

Written by London swaminathan

 

Date: 28 January 2017

 

Time uploaded in London:-9-50 am

 

Post No.3585

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

contact: swami_48@yahoo.com

 

 

கடவுளிடம் பட்டினத்தார் ஒரு கேள்வி கேட்கிறார்:

 

ஆண்டவா! தங்கம் வைத்திருப்பவர்களுக்கு அந்தத் தங்கத்தினால் கொஞ்சம் பிரயோசனம் உண்டு; ஆனால் அவர்களால் தங்கத்துக்குப் பிரயோஜனம் உண்டா? அது போல நீ அருள் மழை பொழிவதால் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல பலன் உண்டு. ஆனால் என்னைப் போன்றவர்களால் உனக்கு ஏதேனும் பலன் உண்டா?

 

பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்

குண்டு பொன்படைத்தோன்

தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங்

கேதுண்டத் தனமையைப் போல்

உன்னாற் பிரயோசனம் வேணதெல்

லாம் உண்டு உனைப் பணியும்

என்னாற் பிரயோசனம் ஏதுண்டு?

காளத்தீயீச்சுரனே! —- பட்டினத்தார்

 

 

பட்டினத்தாராவது கொஞ்சம் மரியாதையுடன் ஒரு கேள்வி கேட்டார். திருவாசகம் எழுதிய மாணிக்க வாசகரோ சிவ பெருமானைக் கிண்டலே செய்கிறார்!

யார் கொலோ சதுரர்?

 

இதோ பார்! சல்லிக்காசுக்குப் பிரயோசனமில்லாத என்னை நான் உனக்கு தந்தேன். என்னை நீ ஏற்றுக் கொண்டு, உன்னையே எனக்குத் தந்து விட்டாயே! யார் புத்தி சாலி? நீயே சொல் — என்று சிவ பெருமானை நக்கல் செய்கிறார்.

 

தந்தது  உன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்?

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றதொன்று என்பால்!

 

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறையுறை சிவனே

எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே

–திருவாசகம், மாணிக்கவாசகர்

 

(சதுரர்= புத்திசாலி, கெட்டிக்காரர்)

ஆதிசங்கரர்

ஆதி சங்கரரோவெனில் வேறு பாணியில் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்; நீயோ சூரியன் சந்திரன் முதலிய எல்லா ஜோதிகளுக்கும் ஒளியூட்டுபவள்; பார்! உன்னை ஒரு தீவாரதனை என்னும் சிறிய தீபத்தைக் காட்டி திருப்தி செய்கிறேன்! (அதாவது சின்ன விளக்கைக் காட்டி உன்னை ஏமாற்றுகிறேன்; நீயோ வெள்ளமென அருள் மழை பொழிகிறாய்)

 

ப்ரதீப ஜ்வாலாபிர் திவசகர நீராஜன விதி:

சூதாச்ஸூதேச் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா

ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநித சௌஹித்யகரணம்

த்வதீயபிர் வாக்பிஸ் தவ ஜனநி வாசாம் ஸ்துதிரியம்

–நூறாவது பாடல், சௌந்தர்யலஹரி

 

பொருள்:-

வாக்கிற்குப் பிறப்பிடமாகிய தாயே! உன்னுடைய வாக்குகளால் அமைந்த இந்த உனது பாமாலையானது, தீவட்டி கொண்டு சூரியனுக்குக் கற்பூரம் காட்டுவது போலவும், அமுதம் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் தாரை வார்த்துக் கொடுப்பது போலவும், கடலுக்குச் சொந்தமான நீரால் கடலுக்கே தர்ப்பணம் செய்வது போலவும் இருக்கிறது.

 

–Subham–