மொழி அழகு: ருதம், ம்ருதம், அம்ருதம், ப்ரம்ருதம், சத்யாந்ருதம்

shankara begging

பவதி பிக்ஷாம் தேஹி = தாயே பிச்சை போடுங்கள்

எழுதியவர்-லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண்:1795; தேதி 12 ஏப்ரல்

இலண்டனில் பதிவு ஏற்றிய நேரம் –6-22 காலை

(இந்தக் கட்டுரையை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளேன்)

ருதாம்ருதாப்யாம்  ஜீவேத்து ம்ருதேன ப்ரம்ருதேன வா சத்யாந்ருதாப்யாமபி வா ந ஸ்வவ்ருத்யா கதாசன  – மனு 4-4

பிராமணர்கள் எப்படிச் சம்பாதிக்கலாம் என்று கூறும் மனு ச்லோகத்தை எல்லோரும் படிக்க வேண்டும். ஏனென்றால் இது பல விஷயங்களை நமக்குச் சொல்லித் தருகிறது

முதலாவதாக நாம் எல்லோரும் இன்று சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் “நாய்ப் பிழைப்பு” என்பதை மனு பயன்படுத்துகிறார். பிராமணர்கள் நாய்ப்பிழைப்பு செய்யக் கூடாது ( ந ஸ்வ வ்ருத்யா கதாசன) — என்கிறார்.

இரண்டாவது சம்ஸ்கிருத மொழையின் அழகை ரசிக்க இது உதவும். ருதம் – ம்ருதம் – அம்ருதம் – ப்ரம்ருதம் – சத்யாந்ருதம் – என்று பல சொற்கள், இசை பாடுவது போல இருக்கும்.

தமிழிலும் இது போல உண்டு:

வாய்மை = சொற்களால் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது;

உண்மை = சிந்தனையால்/உள்ளத்தால் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது;

மெய்மை = உடலால் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது

இதை சம்ஸ்க்ருதத்தில் த்ரிகரண சுத்தி (மனம்,மொழி,மெய்) என்பர்.

begging1

மூன்றாவதாக மனுவின் ஸ்லோகம், பிராமணர்கள் என்றுமே பிறரைச் சார்ந்துதான் வாழவேண்டும்  —  ஆனால் வேத விதிப்படி வாழ வேண்டும் – என்று காட்டுகிறது. அவர்கள் மூன்று நாட்களுக்கு மேல் உணவைச் சேமித்து வைக்கக்கூடாது – பிறரிடம் புரோகிதம் செய்து வாழ வேண்டும் என்று காட்டுகிறது. இதனால்தான் சங்க காலம் முதல் 2000 ஆண்டுகளுக்குத் தமிழ் மன்னர்கள், பிராமனர்களுக்கு அள்ளிக் கொடுத்தனர். 80,000 க்கும் மேலான தமிழ்க் கல்வெட்டுகளில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கும் (பிரம்மதேயம்), கோவில்களுக்கும் (தேவதானம்) தானம் கொடுத்த செய்திதான் இருக்கிறது.

இப்பொழுது ஸ்லோகத்தின் செய்தியைக் காண்போம்:

பிராமணர்கள் கீழ்கண்ட வழிகளில் சம்பாதிக்கலாம்.

சிந்திய கதிர் நெல்லைப் பொறுக்குதல் சிலம் எனப்படும்.

சிந்திய தனி நெல்லைப் பொறுக்குதல் உஞ்சம் எனப்படும்.

இவ்விரண்டும் ருதம்;

யாசிக்காமல் (பிச்சை எடுக்காமல்/தானம் வாங்காமல்) உணவு பெறுவது அமிர்தம்

யாசித்து வரும் உணவு ம்ருதம்;

பயிரிட்டு வரும் உணவுப்பொருட்கள் ப்ரம்ருதம்;

வியாபாரம் செய்வது ஸத்யான்ருதம். இதுகூட சரியே.

ஆனால் மற்றவர்களிடம் சேவகம் செய்து பிழைப்பது நாயின் பிழைப்புக்கு சமம் என்பதால் அதை விட்டு விட வேண்டும் (மனு 4—4 முதல் 6 வரை).

ஆனால் இது எல்லாம் இப்போது பொருளற்றதாகிவிட்டது. எல்லா ஜாதியினரும் எல்லாத் தொழிகளையும் செய்கின்றனர். பழைய கால வரலாற்றை ஆராயும் போது இவைகளைப் பின்னனியாகக் கொண்டு பார்க்கவேண்டும்.

shankara

ஒரு ஏழை வீட்டில், ஏழ்மையைப் போக்க  ஆதி சங்கரர் வேண்டியவுடன்

தங்க மழை பெய்தது; படத்தில் கனக தாரையைக் காணலாம்.

பவதி பிக்ஷாம் தேஹி

மனு பிச்சை எடுப்பதற்கான சங்கேதக் குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

பிராமண பிரம்மச்சாரிகள் படிக்கும் காலத்தில் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும். இதைக் குருவுக்கும் தருவார்கள்.

ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டு பிராமணப் பையன் “பவதி பிக்ஷாம் தேஹி” = தாயே! பிச்சை போடுங்கள் தாயே என்பான்.

உடனே வீட்டிலுள்ள வயதான பெண்மணி வந்து சுத்தமான அன்னத்தைப் பிச்சைப் (பிக்ஷை என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் = பிச்சை) பாத்திரத்தில் இடுவாள்.

(மதுரையில் நான் இருந்த கலத்தில் பக்கத்து வேத பாடசாலைப் பையன்கள் இப்படி எங்கள் வீட்டு வாசலிலும் குரல் கொடுத்ததுண்டு. உடனே எனது தாயார், பிச்சை (பிக்ஷை) போடுவாள்.

க்ஷத்ரியர்கள், பிச்சை எடுக்கையில் இந்த கோஷத்தைச் சிறிது மாற்றுகிறார் மனு. அவர்கள்

“பிக்ஷாம் பவதி தேஹி” என்று குரல் கொடுக்கவேண்டும்.

வைஸ்யர்கள் (வணிகர்கள்)

“தேஹி பிக்ஷாம் பவதி” என்று குரல் கொடுக்கவேண்டும்.

இதில் பவதி என்ற சொல் மூன்று வர்ணத்தாருக்கும் முதல், இரண்டாவது, கடைசி சொல்லாக வருவது ஏண் என்று தெரியவில்லை. ஆனால் அனதக் காலத்தில் பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய சமூகத்தினர் மூவரும் குருகுல வாசம் செய்ததும், அவர்களும் மாணவப் பருவத்தில் பிச்சை எடுத்து உண்டதும் இதிலிருந்து தெரிகிறது.

யாரிடம் முதல் பிச்சை கேட்க வேண்டும் என்றும் மனு சொல்லுகிறார். மனு, மிகப்பெரிய மன இயல் நிபுணர்.

அவர் சொல்கிறார், ஒரு பையன், முதல் பிச்சையை தனது தாயாரிடமோ, சின்னம்மாவிடமோ (சித்தி), தன்னுடைய சகோதரியிடமோ, யார் மாட்டேன் என்று சொல்லமாட்டாரோ அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் சொல்லுகிறார் (2-49).

Buddhist-Priest-

இதைப் படிக்கவே மிக உருக்கமாக இருக்கிறது. ஏழு வயது பாலகன், ஒரு வீட்டில் முதல் நாள் பிச்சை கேட்கப்போன போது, சீ, போ! என்று சொன்னால் அந்தப் பையனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். இதற்காக உளமார, நெஞ்சார வாழ்த்தும் தாய், சின்னம்மா, சகோதரி ஆகியோரிடம் முதல் பிச்சை கேட்கச் சொல்கிறார்.

உலகில் ஹமுராபி போன்றோர் எழுதிய சட்டப் புத்தகத்தில் இவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. இதனால்தான்  தமிழ் மன்னர்களும் கம்பன் போன்ற கவிஞர்களும் மனுவை இந்திரனே சந்திரனே என்று புகழ்கின்றனர். கம்பன் ஏராளமான இடங்களில் மனு நீதியைப் புகழ்கிறான். இது பற்றிய குறிப்புகளைத் தனிக் கட்டுரையாகத் தருவேன்.