உழைத்து வாழ வேண்டும்! குந்தித் தின்றால் குன்றும் கரையும்!!

2 er uzavan

Written by London swaminathan

Date : 3 September  2015

Post No. 2120

Time uploaded in London : 8-02 காலை

கிராமப்புற மக்களுக்கு எழுத்தறிவு குறைவு. ஆனால் பட்டறிவு மிகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெற்ற அற்புதமான கருத்துக்களை கதைகள் மூலமும், பழமொழிகள் வாயிலாகவும் பசுமரத்தாணி போல மனதில் பதிய வைத்துவிடுவார்கள். இதோ ஒரு குட்டிக்கதை!

குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது பழமொழி. “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்திருப் போரை நிந்தனை செய்வோம்” என்று குரல் கொடுத்தான் புரட்சிக் கவிஞன் பாரதி.

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தார். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருந்தார். உழைத்து உழைத்து ஓடாய்ப் போனார். தினமும் வயலுக்குச் சென்று நிரைய சாகுபடி செய்தார். நல்ல வரும்படி கிடைத்தது. பெரிய நிலச்சுவான்தார் ஆனார். அவருக்கு எட்டு பிள்ளைகள். எல்லாம் சோம்பேறிகள். குடியிலும் கூத்திலும் பணத்தை விரயமாக்கினர். தந்தையும் எவ்வளவோ நல்ல வார்த்தைகள் சொல்லிப் பார்த்தார். அவருக்கு 90 வயதானபோது மரணம் நெருங்கியது. இறுதியாக ஒரு முறை நல்ல வார்த்தை சொல்ல நினத்தார். எட்டுப் பிள்ளைகளையும் அழைத்தார்.

“அன்புச் செல்வங்களே! காடு வா, வா என்கிறது; வீடு போ, போ என்கிறது. காயமே இது பொய்யடா; இது வெறும் காற்றடைத்த பையடா – என்று ஆன்றோர் சொல்லுவர். எந்த நிமிடத்திலும் இந்த மூச்சுக் காற்று போகலாம். நான் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு ரகசியத்தை மட்டும் சொல்லி விடுகிறேன். நான் உழைத்துப் பாடுபட்டு தேடிய செல்வத்தை எல்லாம் நிலத்தில் ஆழமாகப் புதைத்து வைத்துள்ளேன். யார், யார் எதை, எதைத் தோண்டி எடுக்கிறீர்களோ அது, அது அவரவர்களுக்கே சொந்தம். மேலும் உங்களை ஊக்குவிப்பதற்காக ஒன்பது இடங்களில் செல்வத்தைப் புதைத்து வைத்திருக்கிறேன். யார் அதிகம் தோண்டுகிறீர்களோ அவர்களுக்குக் கூடுதலாக ஒரு புதையலும் கிடைக்கட்டும் என்று செய்து வைத்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. என் மீது நீங்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பீர்களானால் நான் இறக்கும் வரை புதையலைத் தேடக்கூடாது” – என்று சொன்னார்.

எட்டுப் பிள்ளைகளுக்கும் அளவிலா மகிழ்ச்சி. எப்போது இந்தக் கிழவனார் சாகப்போகிறார் என்று காத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. கிழவனார் இறந்தார். எட்டுப்பேரும் மிக ஒற்றுமையாக உடலை தூக்கிச் சென்று தகனம் செய்துவிட்டூ ஓடினர், ஓடினர், வயல் வெளியின் நான்கு எல்லைகளுக்கும் ஓடினர். கையில் கோடரி ,மண்வெட்டி சகிதம் ஓடினர். தோண்டினர், தோண்டினர், தோண்டிக்கொண்டே இருந்தனர்.

நாட்களோடின, வாரங்கள் பறந்தன; மாதங்கள் ஆகின. மழைக்காலமும் வந்தது. யாருக்கும் , எந்தப் புதையலும் கிடைக்கவில்லை. அட! வயல் வெளியோ சேரும், சகதியுமாக ஆய்விட்டது. அப்பா சாகுபடி செய்த அதே பயிர்களை நாமும் சாகுபடி செய்வோம் என்று முடிவெடுத்து களத்தில் இறங்கினர். அருமையான மகசூல். அப்பாவுக்குக் கிடைத்ததைவிட பன்மடங்கு விளைச்சல்; பொன் விளையும் பூமியைக் கண்டவுடன் அப்பா சொன்ன, “புதைத்துவைத்த புதையல்” இதூதான் என்பது அவர்களுக்கு விளங்கியது.

er uzavan

மேலுலகத்தில் இருந்து இதை வேடிக்கைப் பார்த்த, கிழவனாரின் ஆன்மாவும் சாந்தி அடைந்தது!

——-xxxxxx——-