மகுடம் சூட்டும் மரகதம்! (Post No.7287)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 2 DECEMBER 2019

 Time in London – 10-49 AM

Post No. 7287

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

30-11-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

மகுடம் சூட்டும் மரகதம்!

ச.நாகராஜன்

மரகதச் சிலைகள்

நவரத்தினங்களுள் பச்சை பசேலென ஒளிர் விடும் ரத்தினம் மரகதம்.

அன்னை மீனாட்சியின் சிலை மரகதத்தால் ஆனது என்பது ஒன்றே மரகதத்தின் அருளாட்சியைப் புலப்படுத்த வல்லது.

தமிழ்நாட்டில் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை நடராஜரின் திருவுருவமும் மரகதத்தால் ஆன ஒன்றே! வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும் நடராஜரின் திருவுருவம் திருவாதிரை உற்சவத்தின் போது மட்டும் சந்தனம் எடுக்கப்பட்டு காட்சியளிக்கும். சிறு அதிர்வுகள் கூட சிலைக்குப் பங்கம் விளைவித்து விடும் என்பதால் ஒரு வித தாள வாத்தியமும் சந்நிதியில் வாசிக்கப்பட மாட்டாது.

மரகத வண்ணன்

வில்லிபுத்தூரார் அர்ஜுனனும் துரியோதனனும் கண்ணனின் உதவி கேட்டு வரும் நிகழ்ச்சியை விவரிக்கும் போது கண்ணனை மரகதவண்ணன் என்று கூறிச் சிறப்பிக்கிறார்.

கம்பரோ இராமபிரானை வர்ணிக்கையில் அவரது மேனியிலிருந்து எழும் ஒளியால் சூரியனின் ஒளி மறைவதைக் குறிப்பிட்டு, ‘மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ, ஐயோ, இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்’ என்று ராமரின் அழியா அழகைப் பாராட்டுகிறார்.

ஆம், மரகதம் அழியா அழகுடையது தான்.

காலம் காலமாக உலக மக்களுடன் ஒன்றி விட்ட மணி மரகத மணி.

ஜோதிடத்தில் மரகதம்

ஜோதிட சாஸ்திரத்தில் மிதுன ராசிக்காரர்களும்,கன்னி ராசிக்காரர்களும் அணிய வேண்டிய ரத்தினம் மரகதம். புத கிரகத்திற்கு உரியது மரகதம்.

எண் கணிதத்தின் படி ஐந்து என்ற எண்ணை பிறந்த தேதி எண்ணாகவும் கூட்டு எண்ணாகவும் உடையவர்கள் அணிய வேண்டியது மரகதமே.

மரகதத்தின் மற்ற பெயர்கள்

        மரகதம் எப்படித் தோன்றியது என்பதைப் பற்றி சிலப்பதிகார உரையில் ஊர்காண் காதையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகையில், “வலாசுரன் வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் அதனைக் கனைத்து உமிழ, அது வீழ்ந்து பல மலைகளிலும் ஊறிப் பிறந்த கற்கள் மரகதம் எனப்படும்” என்று குறிப்பிடுகிறார்.

கருடோற்காரம் எனவும் மரகத்தின் பெயராக அவர் குறிப்பிடுகிறார்.

நிகண்டுகள் மரகதத்தின் மற்ற பெயர்களாக, பச்சை, தோல், பரிமளம், புதல், மால் புந்தி ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

மதுரை கலெக்டர் அளித்த மரகதக் காணிக்கை

மரகதம் பற்றி உலகெங்கும் சுவையான வரலாறுகள் ஏராளம் உண்டு.

மதுரையை ஆளும் மரகத மீனாட்சி பற்றி ஒன்றைப் பார்ப்போம். பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் ரோஸ் பீட்டர் என்பவர் (1812 முதல் 1828 முடிய) மதுரை கலெக்டராக இருந்தார்.

ஒருநாள் அவர் தூங்கும் போது பலத்த மின்னல் இடியுடன் ஒரு சூறாவளி எழுந்தது. ஒரு சிறிய பெண் ரோஸின் முன்னே தோன்றி உடனே கட்டிடத்திலிருந்து வெளியேறுமாறு கூறினாள். ரோஸ் பீட்டர் உடனே வெளியேறினார். அவர் வெளியே வந்ததும் ஒரு இடி கட்டிடத்தின் மேல் விழ, கட்டிடம் அடியோடு நொறுங்கிப் போனது. மிகவும் ஆச்சரியப்பட்ட ரோஸ் கனவில் தோன்றிய  பெண் யார் என விசாரிக்கத் தொடங்கினார். அது மதுரை மீனாட்சியே என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட அவர் தனது நன்றிக் காணிக்கையாக மதுரை மீனாட்சிக்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாத அணிகளை  பக்தியுடன் சமர்ப்பித்தார். ஒவ்வொரு பாத அணியும் 28 தோலா (ஒரு தோலா என்பது சுமாராக 11.5 கிராம்) எடையுடன் இருந்தது. 412 சிவப்புக் கற்கள், 72 மரகதக் கற்கள், 80 வைரக் கற்கள், முத்துக்கள், வைடூரியம், நீலம் உள்ளிட்ட கற்கள் அவற்றில் பதிக்கப்பட்டிருந்தன. மரகதவல்லிக்கு காணிக்கையாக மரகதம் இப்படி வந்து சேர்ந்தது.

தர்மதேவதைக்கும் மரகதவல்லி என்ற பெயர் உண்டு. குபேரனுக்கு மரகதன் என்ற பெயரும் உண்டு.

விஷமகற்றும் மரகதம்

எகிப்திய நாகரிகம் உள்ளிட்ட பண்டைய நாகரிகங்கள் அனைத்திலும் மரகதத்தை அணிந்தால் கண் நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இருந்தது. அத்தோடு தீய கண்திருஷ்டியைப் போக்கவும் வலிப்பு வியாதி தீரவும் மரகத்தை அணிந்து கொண்டனர். தூய்மையான ஒளி பொருந்திய மரகதத்தைப் பார்த்தவுடன் கட்டுவிரியன், நாகப்பாம்பு ஆகியவற்றின் கண்கள் தெறித்து வெளியில் வந்து விழும் என்று அவர்கள் தங்கள் அனுபவ உரையைக் கூறினர்.

ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்

இனி பண்டைய பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி மரகதம் பற்றி ஏராளமான சுவையான கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறது.

நல்ல மரகதத்தின் ஏழு அம்சங்களாவன :-

  1. பச்சை வண்ணம் கொண்டிருக்கும் 2) கனமாக இருக்கும் 3) ஆனால் மிருதுவாக இருக்கும் 4) ஒளிக் கதிர்களைப் பீச்சி அடிக்கும் 5) வழவழப்பாக இருக்கும் 6) பிரகாசமாக  இருக்கும் 6) ஒப்படர்த்தி அதிகமாக இருக்கும்

மோசமான மரகதம் எப்படி இருக்கும்?

1) மஞ்சள் பழுப்பு நிறம் கொண்டது 2) கரடுமுரடானது 3) நீல வண்ணம் உடையது 4) இலேசானது 5) தட்டை வடிவமானது 6) அழகற்றது 7) கறுப்பாக இருப்பது 8) ஒழுங்கான வடிவமற்று இருப்பது

இப்படிப்பட்ட மரகதங்களை விலக்க வேண்டும்.

மரகதத்தின் பயன்கள் :

 (உரிய முறைப்படி பஸ்மமாக ஆக்கப்பட்ட போது) மரகதம் ஜுரத்தைப் போக்கும். வாந்தியை நீக்கும். விஷத்தை முறிக்கும். ஆஸ்த்மாவைப் போக்கும். திரிதோஷத்தை அகற்றும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். மூலத்தைப் போக்கும். ரத்த சோகையை விலக்கும். உடல் வீக்கத்தைத் தணிக்கும். வலிமையைக் கூட்டும்.

மரகத சுரங்கத்தில் உள்ள அனைத்துமே விஷத்தை நீக்கும் வல்லமை வாய்ந்தது. கொடிய விஷமுள்ள பாம்பு கடிக்கு – மூலிகை உள்ளிட்ட மற்ற அனைத்து மருந்துகளினாலும் குணப்படுத்த முடியாத நிலையிலும் கூட – மரகத பஸ்மமே சிறந்த மருந்து.

நல்ல உயரிய மரகதத்தின் குணங்கள் :

நல்ல பச்சை வண்ணமும் மிருதுவாகவும் ஒளி பளீரென மின்னுவதாகவும் வெளியிலிருந்து கதிர்கள் ஊடுருவும் படியான மரகதம் அருமையானவை. அதன் உட்புறம் தங்கத் துகள்களால் மின்னுவது போல இருக்கும். வண்ணம் சீராக இருப்பதுடன் வடிவ அமைப்பு அற்புதமாக இருக்கும். சூரியக் கதிர்கள் அதன் மீது படும் போது அது இருக்கும் அறையே ஒளிரும்! அதைப் பார்த்தாலே மனம் அமைதியுறும்; மகிழ்ச்சி பொங்கும்.

மரகதத்தைச் சோதிக்கும் விதம்

முதலாவது முறை

 அதை ஒரு கல்லினால் கீறும் போது அது கண்ணாடியாக இருந்தால் பல துண்டுகளாக உடைந்து வீழும். நிஜமான மரகதம் இப்படி உடையவே உடையாது.

இரண்டாவது முறை

ஒரு இரும்புக் கம்பியினால் மரகதத்தைக் கீறி விட்டுப் பின்னர் எலுமிச்சையினால் பூசினால் நிஜ மரகதம் ஒளிரும். போலிகள் ஒளி இழந்து காணப்படும்.

மூன்றாவது முறை

ஒரு மரகதம் இன்னொரு மரகதத்தால் உடைபட்டால் அதை அணியக் கூடாது. அப்படிப்பட்ட கல்லை வாங்கவும் கூடாது.

நான்காவது முறை

பட்டுத் துணியினால் அழுத்தித் துடைக்கப்படும் போது போலி மரகதம் அதன் ஒளியை இழக்கும்; நல்ல மரகதமோ ஒளியை அதிகரித்துக் காட்டும்!

ஐந்தாவது முறை

மரகதத்தின் எடையை அதே அளவுடன் கூடிய நீரின் எடையுடன் ஒப்பிட வேண்டும். பின்னர் நீரின் அதே அளவுடன் கூடிய ஒரு கல்லின் எடையுடன் ஒப்பிட வேண்டும். கிடைத்த எடையில் இரண்டாவதாகக் கிடைத்தது  முதலில் கிடைத்ததை விட மிகவும் குறைவாக இருந்தால் அது வெறும் கண்ணாடி தான் என்பதை அறியலாம் ; அல்லது மரகதமில்லாத வேறொரு கல் எனத் துணியலாம்.

ஆறாவது முறை

மரகதம் போன்று தோற்றமளிக்கும் கற்களை இனம் காண்பது எளிது. வண்ணம் தெளிவாகவும் அதிகமாகவும் இருப்பது தான் உண்மை மரகதம். (அதாவது ஒரு நல்ல மரகதக் கல்லை பக்கத்தில் வைத்துக் கொண்டு போலியா உண்மையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்)

இவ்வளவு அரிய விஷயங்களையும் ரஸ ஜல நிதி  நமக்குத் தெரிகிறது. ஒப்படர்த்தி எனப்படும் Specific Gravity பற்றி அந்தக் காலத்திலேயே நன்கு அறிந்திருந்தனர் என்பதை ரஸ ஜல நிதியின் மரகதம் பற்றிய பகுதியால் நன்கு அறிய முடிகிறது!

 

அறிவியல் தகவல்கள்

‘மோ அலகின் படி மரகதத்தின் கடினத் தன்மை 7.5 முதல் 8 ஆகும்.

Specific Gravity சராசரியாக 2.6 இருக்கும்.

வைரத்திற்கு உள்ள நான்கு ‘C’க்கள் – Colour, Clarity, Cut, Carat weight – நிறம், தெளிவு, பட்டை தீட்டல், கேரட் எடை  ஆகியவை – மரகதத்திற்கும் உண்டு. தரம் பிரிக்கையில் வண்ணத்திற்கே முதலிடம் தரப்படும்.

அதிசய மரகத புத்தர்

 பாங்காக்கில் உள்ள தியானம் செய்வது போன்ற யோக நிலையில் காணப்படும் புத்தர் மரகதத்தால் ஆனது. 26 அங்குலம் உயரம் உள்ள இந்தச் சிலை மரகத புத்தர் ஆலயத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கிறது. இதை வாட் ப்ரா க்யூ என அழைக்கின்றனர்.

        இந்தச் சிலை பற்றி ஏராளமான சுவையான வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இது:

பாடலிபுத்ரத்தில் (இன்றைய பாட்னா நகரில்) நாகசேனர் என்னும் புத்த துறவி இதை உருவாக்கினார். இதை உருவாக்குவதில் விஷ்ணுவும் இந்திரனும் அவருக்கு அருள் புரிந்தனர். நாகசேனர் இந்த மரகத புத்தர் பிரபலமடையப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்லி விட்டார் இப்படி :” மிகப் பெரும்  புகழை ஐந்து தேசங்களில் – ஸ்ரீ லங்கா, ராமலக்கா, த்வாராவதி, சியங் மாய் மற்றும் லாவோஸ் ஆகிய தேசங்களில் – இது பெறப் போகிறது.”

பாடலிபுத்ரத்தில் இருந்த இந்த மரகத புத்தர் உள்நாட்டுப் போரினால் சேதமடையாமல் இருப்பதற்காக ஸ்ரீ லங்காவிற்கு 457ஆம் ஆண்டு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து அனுருத் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க பர்மாவிற்கு அனுப்பப்பட்டது, ஆனால் வழியில் ஒரு சூறாவளியில் அதை எடுத்துச் சென்ற கப்பல் திசை மாறி கம்போடியாவை அடைந்தது. பின்னர் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு இப்போதிருக்கும் பாங்காக்கை அடைந்தது.

கொலம்பியா மரகதம்

தென்னமரிக்காவில் உள்ள கொலம்பியாவில் உள்ள மரகதச் சுரங்கங்கள் பிரபலமானவை. மரகத சந்தையில் 70 முதல் 90 சதவிகிதம்  மரகதத்தை உலகிற்கு வழங்குவது கொலம்பியாவே.

தமிழ்நாட்டில் கோவை,காங்கேயம் பகுதியிலும், ஜெய்ப்பூர் பகுதியிலும் நல்ல மரகதம் கிடைக்கிறது.

பிரேஜில் நாட்டில் ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் முதன் முதலாக ‘வனடியம் பெரில்’ என்னும் மரகதம் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இது மரகதம் தானா என்ற சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. அமெரிக்கா ‘வனடியம் பெரிலை’ மரகதம் என்று அங்கீகரித்துள்ளது. ஆனால் இதர நாடுகள் இதை மரகதம் என்று அங்கீகரிக்கவில்லை.

செயற்கை முறையிலும் மரகதம் கடந்த அறுபது ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இவை ஒரிஜினல் மரகதம் போல அவ்வளவு சிறப்பானவையாக இல்லை.

 நமது அறநூல்கள் கூறும் அனைத்துப் பயன்களும் இயற்கை மரகதத்திற்கே பொருந்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இன்னும் அக்னி புராணம், கருட புராணம் ஆகியவற்றில் கூறப்படும் செய்திகளையும் முழுவதுமாக அறிந்தால் நாம் மரகத நிபுணராக ஆகி விடுவோம்; நம்மிடம் மரகதம் பற்றிய தகவல் களஞ்சியம் ஒன்று இருக்கும்!

கிளியோபாட்ராவின் மகுடம்

மரகதத்தைப் பற்றிய மகுடமான செய்தியும் உண்டு!

எகிப்திய மன்னர்களும் சக்கரவர்த்திகளும் மரகதத்தை உயரிய அந்தஸ்தைத் தரும் ஒன்றாகக் கருதினர்.

உலகின் பேரழகியும் பெரும் சாம்ராஜ்யத்தின் ராணியுமான கிளியோபாட்ராவிற்கு மரகதம் என்றால் உயிர். அதை மகுடம் உள்ளிட்ட தனது அனைத்து ஆபரணங்களிலும் பதித்து மகிழ்ந்தார்; உலகினரும் அவரைக் கௌரவித்தனர்.

ஸ்பெயினிலும் அனைத்து மன்னர்களும் மரகத கிரீடத்திற்குத் தனி கௌரவத்தை வழங்கினர்.

தி க்ரௌன் ஆஃப் ஆண்டஸ் (The Crown of Andes) என்ற ஆண்டஸ் மகுடத்தில் இருந்த மிகப் பெரும் மரகதம்  உலகப் புகழ் வாய்ந்த ஒன்று!  இப்போது அடாகுலாபா மரகதம் என இது அழைக்கப்படுகிறது. இங்கா வமிச மன்னரான அடாகுலாபா என்பவரை பிரான்ஸிஸ்கோ பிஜாரோ என்பவர் வெற்றி கொண்டபோது எடுத்துச் செல்லப்பட்டது இந்த மகுடம்!

கிளியோபாட்ரா ராணியின் மகுடம் ஒரு புறம் இருக்கட்டும், என் இல்லத்திற்கு நானே ராணி என்று உங்கள் அன்புக்குரியவர் சொன்னால் அதுவும் சரி தான்! அவருக்கு ஒரு மரகத மகுடத்தைச் சூட்ட வேண்டியது தான்!

மரகதம் மரகதமே தான்!

****

.

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று!!

ruby

மாணிக்கம்/ கெம்பு

Research Paper written by London swaminathan

Research Article No.1647; Dated 13th February 2015.

 

கடந்த சில நாட்களில் முத்து, வைரம், ரத்தினக் கற்களின் எடை, விலை ஆகிய தலைப்புகளில் வராஹமிகிரர் கருத்து என்ன என்பதை அவரது சம்ஸ்கிருதக் கலைக் களஞ்சிய நூலான பிருஹத் சம்ஹிதையில் இருந்து கண்டோம். இன்று மரகதம், மாணிக்கம், நாகரத்தினம் பற்றி அவர் செப்புவதைக் காண்போம்.

வராகமிகிரர் 66 ஸ்லோகங்களில் ரத்தினக் கற்கள் பற்றிப் பாடினார். அவற்றில் முத்து பற்றி மட்டும் 36 பாடல்கள் பாடிவிட்டு, மரகதம் பற்றி ”ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” — என்று ஒரே ஒரு பாடலோடு முடித்துவிட்டார்! இதோ அது:–

Group-emerald

மரகத மகிமை

சுக வம்சபத்ர கதலி சீரிஷ குசுமப்ரபம் குணோபேதம்

சுர பித்ரு கார்ய மரகதம் அதீத சுபதாம் ம்ருனாம் விஹிதம்

 

இதன் பொருள்:– கிளியின் சிறகு, மூங்கில் இலை வாழைத் தண்டு (சாம்பல்/மஞ்சள்), சீரிச மலரின் நிறம் (வெள்ளை/மஞ்சள்) ஆகிய வர்ணங்களில் உள்ள மரகதக் கற்கள் நல்ல ஜாதிக் கற்கள். இதை தெய்வங்களைக் கும்பிடும்போதும், முன்னோருக்கான கிரியைகளைச் செய்யும் போதும் அணிந்தால் மிகவும் நன்மை பயக்கும்.

தெய்வ வழிபாடு, இறந்தோர் வழிபாடு ஆகிய காலங்களில் ரத்தினம் அணிவது அற்றி இந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே உள்ளது.

நாகரத்தினக் கல் உண்மையா?

மாணிக்கக் கல் (சிவப்புக் கல்), முத்து பற்றிய பாடல்களில் நாகரத்தினம் பற்றிய விவரங்களைத் தருகிறார்:

நாகரத்தினக் கல் உண்மை என்றே வராஹமிகிரர் நம்புகிறார். ஆனால் விஞ்ஞான முறைப்படி இது வரை யாரும் கண்டதில்லை. நாகரத்தினக் கல் தருவதாகச் சொல்லி பலர் மோசடி செய்து வருவதால் இதைப் படிக்கும் எமது வாசகர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

இதோ வராகமிகிரரின் கூற்று:

ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்

பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா:

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82

இதன் பொருள் என்ன?

பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்;  ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிக்க ஒண்ணாதது.

snake worship

இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்:

நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் (வேர் அறுப்பான்) செய்வான்.

நாகரத்தினக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட ‘’ஆஸ் யூ லைக் இட்’’ — நாடகத்தில் குறிப்பிடுகிறார். நாகரத்தினம் உண்மையா என்று நான் எழுதிய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் விவரம் காண்க:

Please read my research paper, “How did Shakespeare know about the Indian Cobra Jewel-Nagaratna?”– Posted on 1 October 2011.

http://swamiindology.blogspot.co.uk/2011/10/how-did-shakespeare-know-about-indian.html

வராகமிகிரர் மேலும் கூறுவதாவது: தக்ஷக, வாசுகி வம்சத்தில் வந்த பாம்புகளின் தலையில் ஒளிவீசும் நீல நிற முத்துக்கள் இருக்கும். இந்திரன் பெய்யும் மழை, இந்த பூமியில் அதிர்ஷ்டம் மிக்க இடத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் முத்தாகப் பொழிவதுண்டு. அவைகளும் பாம்பிடம் இருந்து வந்த முத்துகளே என்று அறிக!

இத்தகைய பாம்பு முத்துக்களை மன்னர்கள் அணிந்தால் எதிரிகள் அழிவர். மன்னரின் புகழும் வெற்றியும் ஓங்கும்.வெற்றி கிட்டும்.

ஆக, முத்து என்ற அத்தியாயத்தில் பாடுகையில் பாம்பின் தலை முத்து பற்றியும், மாணிக்கம் என்னும் அதிகாரத்தின் கீழ் பாடுகையில் நாகரத்தினம் என்றும் இரண்டு வகைக் கற்கள் பற்றிப் பகரும் பிருஹத் சம்ஹிதை!

நாகப்பாம்பு

எனது விளக்கம்:

நாகரத்தினம் என்பது பாம்புகளின் அகச்சிவப்பு உணரும் உறுப்பைக் குறித்துச் சொல்லி  இருக்கலாம்; பிற்காலத்தில் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு நாகரத்தினக் கல் என்று சொல்லிவிட்டனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது; கண்களே காதுகள் என்பதால் தமிழில் கட்செவி (கண்+செவி) என்றும் சம்ஸ்கிருதத்தில் சூன்ய கர்ண என்றும் சொல்லுவர். இருட்டில் இரை தேட அகச்சிவப்பு கதிர்கள் உதவும் .இப்பொழுது இரவு நேரத்தில் எதிரிகள் நடமாட்டத்தைக் காண அகச் சிவப்பு (இன்ப்ரா ரெட் பைனாகுலர்ஸ்) பைனாகுலர்களை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர். இது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையை “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்”– (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009) புத்தகத்தில் காணுங்கள். இந்தப் புத்தகம் 1990-ம் ஆண்டுகளில் நான் லண்டனில் இருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.

மாணிக்கக் கல்=குருந்தம்=குருவிந்தம்=கெம்பு

மாணிக்கம் என்னும் சிவப்புக் கல் — குருவிந்தம், ஸ்படிகம், சௌகந்திகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது (சௌகந்திகம் என்பது கந்தகக் கல்)

மாணிக்கக் கற்களின் விலை (1500 ஆண்டுகளுக்கு முன்)

ஒரு பலம் ( 4 கார்ஷா) எடையுள்ள கல்= 26,000 கார்ஷாபணம்

அரைப் பல கல்= 20,000 கார்ஷாபணம்

ஒரு கார்ஷா எடை= 6000 கார்ஷாபணம்

எட்டில் ஒரு குந்துமணி எடை= 3000 கார்ஷாபணம்

நாலில் ஒரு மாசா எடை கல் = 1000 கார்ஷாபணம்

(இதைப் புரிந்து கொள்ள நேற்று கொடுத்த எடைக் கல் வாய்ப்பாட்டைப் பார்க்கவும்)

குறைகள் உள்ள, ஒளி குன்றிய, மட்டான பிரகாசம் உடைய கற்களுக்கு விலை என்ன விகிதாசாரத்தில் குறையும் என்றும் வராகமிகிரர் விளக்கி இருக்கிறார்.

ஆர்வம் உடையோர் 66 பாடல்களையும் அதற்கு உரைகாரர்கள் எழுதிய வியாக்கியானங்களையும் படித்துப் பயன் அடைக!

முடிவுரை:

யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே அன்றி உண்மை அல்ல!! அல்ல!!

எனது பழைய கட்டுரை நிலாசாரல்.காம்  – இல் வெளியானது:–

Ruby_Jewel

தமிழ் இலக்கியம் கூறுவது என்ன?

பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு. இது இங்கிலாந்து வரை பரவி சேக்ஷ்பியர்(Shakespeare) கூட ஒரு நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம். காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை. நாகரத்தினம் என்பது என்ன என்பதை ஊகித்தறியலாம்.

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்”

அகம் 72

உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்
திருமணி விளக்கிண் பெறுகுவை”

அகம் 92

பாம்புகள் தனது இரையைப் பார்க்கும் போது அவைகளின் கண்ணுக்கு அவை சிவப்பாகவே தெரியும்! அதுதான் நாகரத்தினம்! இது எப்படி என்பதைக் கீழே காணலாம் :-

பாம்புகளுக்கு தமிழில் நிறைய பெயர்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான பொருளும் உண்மையும் அடங்கியுள்ளது. இன்று அதிநவீன கருவிகளைக் கொண்டு உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததை தமிழர்கள் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்துள்ளனர்.

பாம்புக்கு ‘கட்செவி’ என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது.

corundumpink

குருவிந்தம் (குருந்தம்)

இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இருட்டு நேரத்தில் எலி, தவளை போன்ற பிராணிகளை நாம் பார்க்கமுடியாது. ஆனால் பாம்புகள் அவைகளை நாகரத்தினம் போல சிவப்பாக காணும். இது எப்படி என்றால் எலி,தவளை ஆகியவற்றின் உடல்வெப்பத்தைக் கொண்டு அவை இருக்குமிடத்தை பாம்புகள் அறிந்துகொள்ளும். இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு ‘கட்செவி’ எண்று பெயரிட்டான்!

நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும். பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்.

opal
ஒபல் — ஓரளவு மதிப்புடைய ரத்தினக் கற்கள்

பாம்புகளுக்கு கண் பார்வையும் குறைவு! காது கேட்பதும் குறைவு. ஆனால் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு வெப்ப நிலை மாற்றத்தை அறியும் உறுப்புகள் (HEAT PITS) உண்டு. கண்ணுக்கு அருகிலுள்ள இந்தக்குழிகள் காதுகளின் பணியைச் செய்வதால் இதற்கு கட்செவி (கண் காது) என்ற பெயர் ஏற்பட்டது.

ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை!

-ச.சுவாமிநாதன் M.A (LIT), M.A (HIST)
நிலாச்சாரல்

amethist4

அமெதிஸ்ட்

agate

அகேட்