Written by S NAGARAJAN
Date: 18 July 2017
Time uploaded in London:- 7-13 am
Post No.4091
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
அறிவியல் துளிகள் தொடர் கடந்த பல ஆண்டுகளாக பாக்யா வார இதழில் வந்து கொண்டிருக்கிறது. 7-7-17இல் பாக்யா இதழ் 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய பொலிவுடன் இந்த இதழ் முதல் பாக்யா வெளிவருகிறது.
ஏழாம் ஆண்டின் 20வது கட்டுரையாக வெளியாகியுள்ள கட்டுரை இதோ:-
உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ!
ச.நாகராஜன்
“கூகிளின் ஆல்ஃபா கோ என்ற புரோகிராம் ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் பேர் விளையாடும் போர்டு விளையாட்டை அவர்கள் விளையாடும் அதே கணத்தில் நன்கு கவனித்து மூன்று கோடி பொஸிஷன்களை கணித்துக் கொண்டு சமயத்திற்குத் தகுந்தபடி விளையாடுகிறது “- அறிவியல் தகவ்ல்
உலகின் அதி சிறந்த ரோபோ இருக்குமிடம் கொரியாவின் அட்வான்ஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கட்டிடத்தில்.
அதன் பெயர் ஹ்யூபோ! (Hubo) ரொபாட்டுகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து பார்த்தால் இது ஐந்தாம் தலைமுறை ரோபோவாகும். ஐந்து அடி உயரம் 200 பவுண்டு எடை. இலேசு ரக விமானத்தை உருவாக்கும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு வெள்ளி போல ஜொலிக்கும் ஹ்யூமனாய்ட் தான் ஹ்யூபோ. அதற்கு இரண்டு கைகள்,இரண்டு கால்கள் உண்டு. தலைக்குப் பதிலாக அதி நவீன லேஸர் தொழில்நுட்பம் அடங்கிய ஒரு காமராவும் உண்டு.ஒவ்வொரு கணத்திலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முப்பரிமாணத்தில் அறியும் சக்தி கொண்டது அது
ஹ்யூபோ நடக்கும். தேவையானால் முழங்கால் மண்டியிட்டு அமரும். அதற்கு விசேஷமான சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
உலகின் தலை சிறந்த ரொபாட் எது என்பதற்கான போட்டி ஒன்று 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோ பிரம்மாண்டமான தொகையான இருபது லட்சம் டாலர்கள். (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 64 ரூபாய்கள்)
இந்தப் போட்டியில் உலகின் பிரபல கல்வி நிறுவனமான கார்னீகி மெலான், எம் ஐ டி, ஆகியவற்றோடு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவின் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரியும் கலந்து கொண்டன.
போட்டி என்ன தெரியுமா?ஜப்பானில் 2011ஆம் ஆண்டு நடந்த ஒரு அணு உலை உருக ஆரம்பித்த போது நடந்ததைப் போல ஒரு காட்சியை உருவாக்க வேண்டும் என்பது தான். புகுஷிமா என்ற ஜப்பான் நகரில் நேர்ந்த அந்த அணுக்கசிவின் போது அணு உலையை மூடுவதற்கு முன்னர் அங்குள்ள எஞஜினியர்கள் தப்பிக்க வேண்டி இருந்தது. ரொபாட்டுகளே அங்கு நடந்த பேரழிவைப் பற்றியும் கதிரியக்க அளவு பற்றியும் மதிப்பீடு செய்தன.
இது போன்ற பேரழிவுச் சம்பவம் ஒன்று நடக்கும் போது மனிதனைப் போல உள்ள ரொபாட்டே சரியாகச் செயல்படும் என்று அமெரிக்க தற்காப்பு ஆய்வு நிறுவனமான டர்பா என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிஃபென்ஸ் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் ப்ராஜெக்ட்ஸ் ஏஜன்ஸி (The Advanced Research Projects Agency – DARPA) கருதியது. இது போன்ற சூழ்நிலையில் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை ரொபாட்டே செய்ய முடியும் என்பதால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த ரொபாட்டை வடிவமைப்போருக்குச் சிறந்த பரிசைத் தர அது கருதியது. அதனால் ஏற்பட்டதே இந்தப் போட்டி.
ரொபாட் இயலில் பெரும் நிபுணரான பேராசிரியர் ‘ஓ’ ரொபாட் எப்படி எதிர்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார். இவர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்.
ஒரு போர்க்களத்தில் அதைச் சுதந்திரமாக சிந்திக்க விட்டு செயல்பட வீடு விட்டால் அது ஒருவேளை நம்மையே கொன்று விடலாம். அதைச் சிந்திக்க விடாமல் வெறும் புரோகிராம் அடிப்படையில் சொன்னதை மட்டும் செய்யச் சொன்னால்,ரொபாட்டின் செயல்பாட்டுச் சுதந்திரத்தை பறித்ததாக ஆகி விடும்.
ஆகவே வலிமை வாய்ந்த ஒரு ரொபாட்டின் சிந்தனைத் திறன் அளவுடன் இருக்க வேண்டும் என்கிறார் ஓ. தென்கொரியாவின் கொடியை பின்னால் ஏந்திக் கொண்டிருக்கும் ஹ்யூபோ செங்கல் அடுக்குகளால் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளின் மீது சர்வ சாதாரணமாக ஏறுகிறது.
அதன் கேமரா, படியை ஸ்கேன் செய்கிறது. தவழும் சின்னக் குழந்தை போல அது ஒவ்வொரு படியாக ஜாக்கிரதையாக ஏறுகிறது.
மற்ற ரொபாட்டுகள் எல்லாம் கீழே விழுந்த நிலையில் ஹ்யூபோ மட்டும் அனைத்துத் த்டைகளையும் வென்று முன்னேறியது ஹ்யூபோ ஜாக்கிரதையாக காரை ஓட்டுகிறது.எதிரே உள்ள சாலையை நன்கு ஸ்கேன் செய்கிறது.
கதவைத் திறக்கிறது. வால்வைத் திறந்து மூடுகிறது. இடிபாடுகளின் இடையே எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது.
காரிலிருந்து வெளியே வருவது மனிதர்களுக்கு சாதாரணமான ஒரு விஷயம். ஆனால் ஹ்யூபோவிற்கோ? அது இந்த விஷயத்தைப் பல கூறுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு முதலில் தனது கைகளைத் தூக்குகிறது. காரின் பிரேம்களைக் கண்டு பிடிக்கிறது. அதைப் பிடித்துக் கொண்டு சரியான பிரஷருடன் தன் உடலைத் தூக்கிக் கொள்கிறது. பின்னர் வெளியே விழுந்து விடாமல் ஜாக்கிரதையாக வெளி வருகிறது.
எப்படி தென் கொரியா இப்படி செயற்கை அறிவிலும் ரொபாட் இயலிலும் முன்னேறி இருக்கிறது என்று கேட்டால் அதற்கு ஓ தரும் பதில் :’ நாங்கள் விஞ்ஞானத்தை நல்லதற்காகவே பயன்படுத்த நினைக்கிறோம். அதன் விளைவாகவே முன்னேறுகிறோம்” என்பது தான்.
செயற்கை அறிவிலும் அதன் பயன்பாட்டான ரொபாட் போன்றவற்றிலுல் உலகத் தலைநகராகத் திகழும் தென்கொரியா இன்னும் பல ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
இயந்திர அமைப்பில் இருக்கும் ரொபோவே நம்மை இப்படி அசத்துகிறது. இனி எதிர்காலத்தில் பேரழகிகளாகவும், பெரும் அழக்ன்களாகவும் வடிவமைப்பிலும் தோற்றத்திலும் உருவாகப் போகும் ரோபோக்கள் உணர்ச்சியையும் கொண்டிருந்தால் அதை உலகம் எப்படி எதிர் கொள்ளப் போகிறது.
மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் மண உறவு ஏற்படுமா அல்லது மன உறவு மட்டும் இருக்குமா? கேள்வி சுவாரசியாமானது தான்! பதிலைக் காலம் தான் சொல்ல வேண்டும்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் புகழேணியில் உச்சத்தில் இருந்ததால் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமானோர் விரும்பினர். இதனால் அவருக்கு இப்படிப்பட்டோரின் தொந்தரவு மிக அதிகமாக இருந்தது.
அவர் எது சொன்னாலும் அது வேத வாக்காக அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஒரு முறை நடந்து செல்லும் போது பேச்சுவாக்கில் அவர் சொன்ன “God is subtle, but not malicious’ (கடவுள் நுட்பமானவர், தீய நோக்கம் கொண்டவரல்ல) என்ற வாக்கியம் அவரது கணி தப் பிரிவில் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
அவர் தனது அருமையான தரைத் தளத்தில் இருந்த அலுவலகத்தைக் கைவிட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்குச் செல்ல நேர்ந்தது இதனால் தான்!
போவோர் வருவோர் எல்லாம் அவர அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார்கள்.
அகதிகளாக வந்த கலைஞர்களின் நிதி உதவிக்காக அவர் சிலை போல மாடலிங் செய்ய வேண்டியிருந்தது. மணிக்கணக்காக அவர் சிலை போல் இருப்பார்.
ஒரு முறை நியூயார்க்கிலிருந்து பிரின்ஸ்டனுக்கு ரயிலில் அவர் சென்ற போது சக பயணி ஒருவர் அவரிடம் வந்து,”உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. நீங்கள் யார்?”என்று கேட்டார்.
ஐன்ஸ்டீன் உடனே அவரிடம,” நான் ஒரு மாடலிங் ஆர்டிஸ்ட். அதனால் என்னைப் பார்த்திருக்கக் கூடும்” என்றார்.
“அது தானே பார்த்தேன். மாடலிங் ஆர்டிஸ்டா?” என்று கூறிய அவர் மேற்கொண்டு தொந்தரவு செய்யாமல் அவரிடமிருந்து போய் விட்டார்.
ஐன்ஸ்டீனுக்கு ஒரே மகிழ்ச்சி – மாடலிங் ஆர்டிஸ்ட் என்று சொன்னதால் தொந்தரவு இல்லையே என்று!
***