திருவண்ணாமலை கோவிலில் சில விநோதச் சடங்குகள்

OLYMPUS DIGITAL CAMERA

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண் -1623; தேதி 5 பிரவரி 2015

இந்துக்களின் கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. அவை கலா கேந்திரங்கள்; பல்கலைக் கழகங்கள்; காலாகாலமாக இருந்துவரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் அகியவற்றின் மூல ஆதாரங்கள். உள்ளூரில் வசித்த சாது சந்யாசிகளின், புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகங்கள்.

தமிழ் நாட்டுக் கோவில்கள் வரலாற்றுப் பதிவேடுகள். அங்கிருக்கும் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகள்தான் தமிழக வரலாற்றின் ஆதாரங்கள். இசை, நடனம், தமிழ் பக்தி இலக்கியங்கள், சிற்பகலைக்கு அஸ்திவாரமாக விளங்குபவை. விழாக்கள் மூலம் மக்களை ஒன்று சேர்க்கும் சமுதாயச் சீர்திருத்தக் கூடங்கள். சுற்றுலாப் பயணிகளையும் யாத்ரீகர்களையும் வெளிநாட்டுப் பயணிகளையும்  ஈர்க்கும் காந்தங்கள் —- என்று இப்படி கோவில்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்.

ஒவ்வொரு கோவிலிலும் உள்ள விநோதச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மக்களுக்கு எவ்வளவோ பாடங்களைப் போதிக்கின்றன. திருவண்ணா மலையிலும் இரண்டு பாடங்களைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகள் உண்டு.

வீரவல்லாளன் (1291-1343) என்ற மாமன்னன் இந்து மதத்தின் காவலனாக விளங்கினான். அவன் ஒரு ஹோய்சாள மன்னன். அவனுக்கு மூன்றாம் வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலைக்கு வந்து சென்றவன் பிற்காலத்தில் அருணசமுத்ர வீர வல்லாளன் பட்டணம் என்று அந்த ஊருக்குப் பெயர் சூட்டி அதை ஹோய்சாள ராஜ்யத்துக்கு இரண்டாம் தலைநகரமாகவும் ஆக்கினான். அருணகிரிநாதர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம்சுரத் குமார் போன்ற எத்தனையோ மகான்களைக் காந்தமாக இழுத்தது அண்ணாமலை. ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னதாக அங்கு சென்றவன் ஹோய்சாள மாமன்னன் வீர வல்லாளன்.

Hoysala_emblem

ஹோய்சாளர் சின்னம்: சிங்கத்தை வீழ்த்தும் வீரன்

பஞ்சபூதத் தலங்களில் அக்னியின் அம்சமாக விளங்குவது திரு அண்ணாமலை. சிவன் அடியார்களால் பாடல் பெற்ற தலம். அக்கோவிலுக்கு வீர வல்லாளன் எவ்வளவோ திருபணிகளைச் செய்தான். வீர வல்லாளன் திருவாசல் என்று அழைக்கப்படும் பெரும் கோபுரத்தையும், மதில் சுவரையும் பல மண்டபங்கலையும் அவன் கட்டினான. அவனது 9 கல்வெட் கள் கோவிலில் இருக்கின்றன. அவை அவனது நீண்ட விருதுகளையும் பட்டங்களையும் அவனும் ராணியின் அளித்த தான தருமங்களையும் எடுத்துரைக்கின்றன.

வல்லாளன் கன்னட, ஆந்திர, தமிழகப் பகுதிகளை ஆண்ட காலம் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலம். வடக்கே டில்லியில் இருந்த சுல்தான்களின் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய காலம். கோவில்களை அழித்து அதன் செல்வங்களைச் சூறையாடுவது அவர்கள் வழக்கம்.

அலாவுதீன் கில்ஜியின் அடிமைச் சேவகன் — தளபதி மாலிக்காபூர் திடீரென படை எடுத்து வந்த போது வல்லாளன் அவனது தலைநகரில் இல்லை. அவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் பங்கேற்க வந்திருந்தான். தலைவன் இல்லாத் தலை நகரம் சூறையாடப்பட்டது. பீன்னர் ஒருவாறாக சமாதானத்தின் பேரில் அவனுக்கு நாட்டைத் திரும்பித் தந்தான் அலவுதீன் கில்ஜி. பின்னர் முகமது பின் துக்ளக் படையெடுத்தான். இதற்குப் பின்னர் மதுரையை ஆண்ட உடௌஜி என்பவன் போர்தொடுத்தான். ஆனல் அவன் மர்மமாக வந்த ஒரு அம்பினால் மாய்ந்தான். இனி அமைதியான ஆட்சி எண்ணி இருந்த தருவாயில் மதுரையை ஆண்ட சுல்தான் கியாஸ் உதீன் தம்கானி என்பவன் தாக்கினான். ஆறு மாத முற்றுகையின் போது, சமாதானம் செய்வதாகச் சொல்லி முன்வந்து, எதிர்பாரத தாக்குதல் நடத்தினான் சுல்தான். இது கண்ணனூர் குப்பம் என்ற இடத்தில் நடந்தது. இந்தத் தாக்குதலில் வீர வல்லாளன்  சிறைப் பிடிக்கப்பட்டுச் சிரச் சேதம் செய்யப்பட்டான.

வல்லாளனின் தலையை மதுரைக் கோட்டைச் சுவரில் தொங்கவிட்டான். அப்போது மதுரைக்கு யாத்திரை வந்த இபின் பட்டுடா என்னும் அராபியப் பயணி இந்த தலை தொங்குவதைப் பார்த்து குறிப்பேட்டில் எழுதிவைத்தான்.

வல்லாளனின் முடிவு பரிதாபமான முடிவு என்றாலும் அவன் புகழ் திருவண்ணாமலை கோபுரம் அளவுக்கு இன்றும் உயர்ந்து நிற்கிறது. 700 ஆண்டு காலமாக புகழ் பரப்பும் அக்கோபுரம் இன்னும் ஆயிரம் ஆண்டுக்கும் அவன் புகழைப் பரப்பும். அவனுடைய சிலைகள் கோவிலில் பல உருவங்களில் பல இடங்களில் உள்ளன. இன்றும் அந்தச் சிலைக்கும் பூமாலை சாற்றி போற்றி வருகின்றனர்.

vallala

இந்து மதக் காவலன் வீர வல்லாளன்

வல்லாளன் புகழை,  14-ஆம் நூற்றாண்டுப் புலவர் எல்லப்ப நாயனார் பாடிய அருணாசல புரானத்தில் காணலாம். வல்லாளனைத் தீர்த்துக் கட்டீய மதுரை சுலதானை விஜய நகரப் பேரரசனின் படைத்தளபதி குமார கம்பண்ணன் வந்து நிர்மூலம் செய்தான். முஸ்லீகளால் சூறையடப்ப்பட்டு 40 ஆண்டுக்காலத்துக்கு மூடிக்கிடந்த மதுரை மீனாட்சி கோவிலையும் திறந்து வைத்தான். இத்தனையயும் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல அவன் மனவி கங்காதேவி மதுரா விஜயம் என்னும் அற்புதமான சம்ஸ்கிருத காவியத்தில் எழுதிவைத்துள்ளாள். உலகின் முதல் நேரடி வருணை செய்த (பத்திரிக்கை நிருபர்) பெண்மணி மகாராணி கங்காதேவி.

தென்னாட்டில் முஸ்லீம் ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்தவன் குமார கம்பண்ணன். அவன், அவர்களை வட நாட்டிற்கு விரட்டினான். அங்கு சுல்தான் ஆட்சி போய், மொகலாய ஆட்சி வந்து அட்டூழியங்களைத் தொடர்ந்தது. சிவாஜி என்னும் மாமன்னன், மலை ஜாதி மக்கள் இடையே தோன்றினான். உலகின் முதல் கெரில்லா யுத்தத்தை நடத்தி மொகலாய ஆட்சிக்கு சாவு மணி அடித்தான்.

வல்லாளனுக்கு குழந்தை இல்லை என்றும் இதுபற்றி அவன் அண்ணாமலையானிடம் முறையிட்டபோது நாமே உமக்குக் குழந்தையாக வருவோம் என்றும் சொன்னதாக ஒரு கதை உண்டு. ஆக ஒரு மாசி மாதத்தில் மன்னன் இப்படிக் கொடூரமாக இறந்த செய்தியை அர்ச்சகர்கள் சிவனிடம் அறிவிக்கவே அவர் நாமே அவனது இறுதிச் சடங்குககளை நடத்துவோம் என்று சிவன் சொன்னதாகவும் உடனே பள்ளிகொண்ட பட்டு என்னும் இடத்தில் அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்ததாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.

hoysala king

ஹோய்சாளமன்னன் சிலை

இதை ஒட்டி ஆண்டுதோறும் இப்போதும் அந்த இறுதிச் சடங்கை சிவ பெருமானே செய்துவருகிறார். இது ஒரு புறமிருக்க திருவண்ணா மலையில் ஆண்டுதோறும் நடக்கும் பத்து நாள் உற்சவத்தில் அர்ச்சகர்களும் ஊழியர்களும் சுவாமியை வல்லாளன் திருவாசல் வழியாகக் கொண்டு செல்ல முயன்றபோது அவ்வாயில் வழியாக போக முடியாமல் தடங்கல்கள் வந்தன. உடனே பத்து நாள் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் வேறு வழியாக சுவாமியையும் அம்மனையும் திரு உலா எடுத்துச் சென்றனர். வல்லாளன் மாபெரும் கோவில் கோபுரத்தைக் கட்டிவிட்டோம் என்று மமதை கொண்டிருந்ததால் இப்படி நடந்தது.

சுவாமியின் பல்லக்கு இப்படி செல்ல மறுப்பதை அறிந்த வல்லாள மாமன்னன் தாமே அங்கே வந்து இறைவனிடம் கண்ணீருடன் மன்றாட பத்தாம் நாளன்று அந்த சப்பரம் வல்லாளன் திருவாசல் வழியாக தடங்கல் இன்றிச் சென்றது. இதை நினைவு கூறும் விதத்தில் இன்றும் பத்தாம் நாளன்று மட்டும் வல்லாளன் திருவாசல் வழியாக சுவாமி ஊர்வலம் புறப்படும்.

இவ்விரு விநோத நிகழ்ச்ழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும் இரு விஷயங்கள்: 1)அம்மா அப்பா இல்லாதோருக்கு, தந்தை-தாய் ஆகிய எல்லாம் இறைவனே. மகன் இல்லார்க்கு தானே மகவாக வருபவனும் அவனே. 2)மமதை, அகந்தை (யான் எனது என்னும் செருக்கு) இருந்த எல்லோருக்கும் பாடம் கற்பித்து நல் வழிப்படுத்தி, உய்ய வைப்பதும் இறைவனே.

அண்ணாமலைக்கு அரோஹரா!!