Picture of Susrutha statue in Haridwar.
உலகிலேயே மிகவும் பழைய நூல் வேதங்கள். அவை சம்ஸ்கிருதத்தில் உள்ளன. எப்படி சங்கத் தமிழ் பாடல்கள் பழைய செந்தமிழில் உள்ளதோ அப்படியே வேதங்களும் பழைய வைதீக சம்ஸ்கிருதத்தில் இருக்கின்றன. எப்படி உரைகாரர்களின் உரை இல்லாமல் சங்கத் தமிழ் பாடல்களைப் புரிந்துகொள்ளமுடியாதோ அப்படியே, சாயனர் போன்றோரின் உரை இல்லாமல் வேதங்களையும் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ் இலக்கியத்தை விட 1500 ஆண்டுகள் பழமை உடையவை வேதங்கள் என்பதால் சாயனர் உரை கூட முழு அர்த்தெத்தையும் கொடுப்பதில்லை. ஆனால் வேதத்தை விளக்கவந்த இதிஹாச புராணங்களும், தேவார திருவாசக திவ்விய பிரபந்தங்களும அவைகளின் உள்ளார்ந்த கருத்துக்களை நமக்கு புலப்படுத்துகின்றன.
மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சரகர், சுஸ்ருதர் போன்ற பெரியோர்கள் வடமொழியில் எழுதிய நூல்கள் வேத கால அறிவை அறிய ஓரளவுக்குத் துணை செய்கின்றன. ரிக், யஜூர், சாம ,அதர்வணம் –ஆகிய நான்கு வேதங்களில் மிகவும் பயனுடைய வேதம் அதர்வண வேதம் ஆகும். மனிதன் பிறந்து, வளர்ந்து, மணம் புரிந்து, இறக்கும் வரை உள்ள சடங்குகளுக்கு அதில் பல மந்திரங்கள் உள்ளன.
உலகிலேயே பழைய சமய நூல் ரிக் வேதம். அதில் பத்தாவது மண்டலத்தில் 97ஆவது பாடல் முழுதும் மூலிகைகளின் பெருமையைப் பேசுகிறது. உலகிலேயே மிகப் பழைய மூலிகைப் பாடல் இதுதான். இரசாயன ஆயுதத்தால் தாக்குண்ட லெட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் மூலிகை மலையையே எடுத்து வந்ததை ராமாயணம் மூலம் நாம் அறிவோம். உலகின் முதல் மூலிகை மருத்துவன் அனுமன் தான். இதற்குப் பின்னும் முன்னும் அயுர்வேதம் என்ற மிகப் பழைய மருத்துவ முறை இருந்ததை அறிய ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிஹாசங்கள் உதவுகின்றன.
107 மூலிகைகள்
ரிக் வேதப் பாடல் 107 மூலிகைகள் பற்றிப் பாடுகிறது. துரதிருஷ்டவசமாக நாம் அந்த 107 மூலிகைகள் என்ன என்பதை அறிய முடியவில்லை. ஆயினும் ஆயுர்வேத நூல்கள், வேறு நூற்றுக் கணக்கான மூலிகைகள் பற்றி நமக்கு அறிவுறுத்துகின்றன. பிராமணர்கள் யாக யக்ஞங்கள் செய்ய மிகவும் பயன்படுத்துவது அரச மரமே. இதை ரிக்வேதம் பகழ்கிறது. சிந்து –சரஸ்வதி நாகரீகத்திலும் மிகவும் அதிகமாகக் கானப்படுவது இந்த அரச மரமே.
ரிக் வேதம் விளக்காத விஷயங்களை அதர்வண வேதம் விளக்குகிறது. அபூர்வமான பல தாவர தாயத்துக்கள் பற்றிப் பாடுகிறது. இவை வேத கால மக்களின் நம்பிக்கைகளை விளக்குகிறது. வேதகால மக்கள் மூலிகைகளின் மருத்துவப் பலன்களோடு அவைகளை தெய்வீக குணம் உடையவை என்று நம்பினர். அவைகளின் மாய, தந்திர குணங்களிலும் நம்பிக்கை வைத்தனர். அவைகளுக்கும் சந்திரனுக்கும், சோம பான மூலிகைக்கும் தொடர்பு இருப்பதாக நம்பினர். மூலிகை தாயத்துக்களால் கணவன் மனைவி உறவு பலப்படும் என்றும் நம்பினார்கள்.
வேத காலத்தில் தாவரவியல் அறிவு, புறச்சூழல் அறிவு பரவி இருந்தது. நூற்றுக் கணக்கான மூலிகை, மரம் செடி, கொடிகளின் பெயர்களை சம்ஸ்கிருத இலக்கியத்தில் காணுகிறோம்.
அதர்வ வேத அற்புதங்கள்
நாலாவது வேதமான அதர்வண வேதத்தில் குஸ்ட, ஷிலாச்சி முதலிய தாவரங்கள் பற்றியும், ஜங்கிட மணி, பர்ண மணி முதலிய தாயத்துக்கள் பற்றியும் அபூர்வ விஷயங்கள் காணக்கிடக்கின்றன. பர்ண மணி பலாச மர இலைகளால் செய்யப்பட்டது. இன்று வரை யாகத்தில் பயன்படுத்தப்படும் கரண்டிகள் பலாச மரத்தால்தான் செய்யப்படுகின்றன. இப்போதைய அறிவைக்கொண்டு இவை என்னென்ன என்பதை அறிய இயலாவிட்டாலும் அந்தக் காலத்தில் இருந்த அபூர்வ மூலிகை மணிகளை நாம் அறிய முடிகிறது.
தாயத்து மூலம் கணவனின் அன்பைப் பெற ஒரு மனைவி முயற்சிக்கும் பாடலும், விஷ அம்பிலிருந்து உடலில் பாய்ந்த விஷத்தை வெளியே ஏற்றும் பாடலும்,ஜங்கித மணி—பர்ண மணியின் அபூர்வ குணங்களைக் கூறும் பாடலும், பல மரங்களின் பெயர்களும் படித்து இன்புறத்தக்கவை. நீண்ட முடி வளர உதவும் ரேவதி என்ற மூலிகையும் பாடப்படுகிறது. அருந்ததி, அகத்தி என்று ரிஷிகளின், ரிஷிபத்தினிகளின் பெயர்களும் மூலிகைகளுக்கு இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களுக்கு மட்டுமின்றி இரண்டு கால், நான்கு கால் பிராணிகளுக்கும் நன்மை வேண்டும் பாடல் அதர்வ வேத முனிவர்களின் மனிதாபிமானத்தைக் காட்டும். வேதங்களே மிகப் பழையவை. அவை மூலிகை பாற்றிப் பாடுகையில் “புராதனமான” என்ற சொல்லைப் பயபடுத்துவதைக் காண்கையில் இந்த அறிவு பல்லயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பது தெள்ளிதின் விளங்குகிறது.
(இந்த விஷயம் பற்றிய எனது ஆங்கிலக் கட்டுரையில்– 107 Miracle Herbs in the Hindu Vedas– பாடல் எண்கள், முழு வாசகங்கள் ஆகியனவற்றைக் காணலாம்).
இந்திய கலாசாரம் பற்றி 650 கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கே கிடைக்கும் படித்து மகிழ்க.
Contact swami_48@yahoo.com


You must be logged in to post a comment.