என் கணவர்: ராஜலக்ஷ்மி சந்தானம் (Post No 2819)

 

Damma i pad pictureate: 17 May 2016

Post No. 2818

Time uploaded in London :–5-36 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Both my parents Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam are no more; my brother S Nagarajan sent this old article, today being my mother’s thithi (death anniversary) day —London swaminathan.

 

 

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்காக

 

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் பத்திரிக்கையாளரும். ஆன்மீகவாதியுமான தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய திரு வெ.சந்தானம் அவர்களின் துணைவியார் தனது கணவரைப் பற்றிய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

வெ.சந்தானம் தோற்றம்:4-9-1911 மறைவு:15-8-1998

 

என் கணவர்

—————–

ராஜலக்ஷ்மி சந்தானம்

 

சுதந்திரப் போர்

சுதந்திரப் போராட்ட காலம் ஒரு தனி சகாப்தம் என்றால் அது மிகையல்ல. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்களும் ஒருங்கிணைந்து காந்திஜியின் தலைமையில் ஓரணியில் இணைந்து தங்களிடம் இருந்தவற்றையெல்லாம் தேசத்திற்காக அர்ப்பணித்த உன்னதமான காலம் அது. அந்தக் காலத்தில் தான் பெருங்கடலில் சிறு துளிகள் போல மணிக்கொடி இலக்கியகர்த்தாக்கள் ஓரணியில் சேர்ந்தனர். திருவாளர்கள் வ.ரா, பி.எஸ்.ராமையா, ஸ்டாலின் சீனிவாசன், ஏ.என்.சிவராமன் போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் குழுவில் என் கணவர் திரு வெ.சந்தானமும் ஒருவர். ஆனால் அவர் தன்னைப் பற்றி எந்தக் காலத்திலும் விளம்பரப்படுத்திக் கொண்டதே இல்லை. அதனால் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அவர் ஆற்றிய இலக்கியப் பணி. தேசப் பணி, ஆன்மீகப் பணி முழுவதுமாகத் தெரியாது.

 

 

திருமணம்

தஞ்சாவூரில் நான் பத்தாவது படித்து முடித்திருந்தேன். 1935ம் வருடம் அது. எனது அண்ணனின் நண்பர் ஒருவர் எனது கணவரிடம் தஞ்சாவூரில் ஒரு படித்த பெண் இருப்பதாகவும் சென்று பார்க்குமாறும் தூண்டினார். என்னைப் பெண் பார்க்க அவர் மட்டுமே தனியாக வந்தார்.

 

 

என் தந்தையார் கல்யாணராமையர் ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர். தஞ்சாவூரைச் சுற்றி உள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்வது அவரது பணியின் ஒரு பகுதி. பட்டுக்கோட்டை. சேண்டாகோட்டை, கீவளூர் என பல இடங்களுக்கும் அவர் சென்றாலும் குடும்பத்தினராகிய நாங்கள் தஞ்சாவூரிலேயே இருந்தோம்.

 

நான் வயலின் லோயர், ஹையர் மற்றும் அதற்கு அடுத்து இருந்த வித்வான் ஆகிய அனைத்திலும் பாஸ் செய்ததைக் கேட்டதும் அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

 

எனது குரு திரு கே.ஸி. தியாகராஜன் மிகுந்த பிரபலமான சங்கீத மேதை. எனது கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு பட்டுக்கோட்டையில் நடந்தது. ரிஸப்ஷன் சென்னையில். ராஜாஜி நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். இப்படி மிகப் பெரிய தேசீயத் தலைவர்களைப் பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருந்தது.

இலக்கியப் பணியும் தேச சேவையும்

தினமும் உற்சாகமாக நண்பர்கள் குழு கூடும்.

 

இலக்கியம் சங்கீதம் பாரதி பாடல்கள் என ஏக அமர்க்களமாக விவாதங்கள் சுவையுடனும் நட்புடனும் நடைபெறும். அனைவரும் ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் வீட்டில் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.

 

 

சென்னையில் நாங்கள் ஜாகை இருந்த இடம் திருவல்லிக்கேணி. கடற்கரையில் தினமும் நண்பர்கள் கூடுவது வழக்கமானது.

பாரதி உலகக் கவிஞர் தான் என்பதை நிலை நாட்ட  அங்கு தான் முடிவு எடுக்கப்பட்டது. ஆளுக்கு ஒரு கோணத்தில் பாரதியை அலசி ஆராய்ந்து கட்டுரைகளை எழுத முடிவும் அங்கே தான் எடுக்கப்பட்டது.

 

 

என் கணவர் முதலில் சுதந்திரச் சங்கு போன்ற சிறிய பத்திரிக்கையிலும் பணி ஆற்றியிருக்கிறார். மணிக்கொடியில் அவரது இலக்கியப் பணி சிறந்து விளங்கியது.பி.எஸ்.ராமையா மிக நெருங்கிய நண்பர். மணிக்கொடியை போஸ்ட் செய்வது ஈறாக அனைத்துப் பணிகளையும் இந்த இலக்கியக் குழாமே செய்தது.

 

 

இடையில் சைமன் கமிஷன் பகிஷ்காரத்தை ஒட்டி நாடெங்கும் கிளர்ச்சி எழுந்தது. அதில் வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டுமாறு கூறும் தீவிரமான ஒரு பிரசுரம் ஆயிரக்கணக்கில் அடிக்கப்பட்டு  எங்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. துண்டுபிரசுரங்களை கடற்கரையில் சென்று அனைவரிடமும் விநியோகம் செய்யும் பணி என் கணவருடையது.

 

 

இந்த பிரசுரங்களை என் வீட்டில் பார்த்த ஒரு நபர் போலீசிடம் இதைச் சொல்ல அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனால் நல்ல வேளையாக உரிய நேரத்தில் பிரசுரங்கள் அகற்றப்பட்டன.என்றாலும் போலீசார் கடற்கரைக்குச் சென்று பிரசுரங்களைக் கட்டுக் கட்டாக வைத்து விநியோகம் செய்த என் கணவரை கைது செய்தனர். அவர் வேலூர் சிறையில் ஆறு மாத காலம் இருந்தார்.அங்கே காமராஜர் முதலான அனைவருடனும் நல்ல சினேகம் ஏற்பட்டது.

விடுதலையானவுடன் பத்திரிகைப் பணி தொடர்ந்தது.. மணிக்கொடி நின்றவுடன் தினமணியில் சேர்ந்தார்.

அப்போது லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனாவை தமிழில் மொழி பெயர்த்தார்.பல கதை கட்டுரைகளை எழுதினார்.

 

 

மதுரையில் பணி

 

தினமணியின் மதுரைப் பதிப்பு 1950ல் தொடங்கியவுடன் இவரை மதுரைப் பதிப்புக்கு பொறுப்பாக நியமித்தனர். மதுரை வந்தோம். மீனாட்சி பட்டணம் இவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது. காஞ்சி காமகோடி பெரியவாள், சிருங்கேரி பெரியவாள் ஆகியோரிடம் அளவற்ற ஈடுபாட்டினால் அடிக்கடி அவர்களை தரிசனம் செய்வது வழக்கமானது, அவர்களது அருளுரைகளை எல்லாம் தினமணி அப்படியே வெளியிடும். அந்த ஞான பொக்கிஷமே இன்று நமக்கு நூல்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. திருமுருக கிருபானந்தவாரியார், சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தரம தீக்ஷ¢தர்,திரு முத்துராமலிங்க தேவர் என ஆன்மீகவாதிகள் நூற்றுக் கணக்கானோரின் பழக்கம் இந்த கால கட்டத்தில் ஏற்பட்டது. இவர்கள் அனைவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் அனைத்தையும் முழுவதுமாக தினமணி பிரசுரிக்கும்.

அத்தோடு அனைத்து ஆன்மீக இலக்கிய சங்கங்களும் தலைமை வகிக்க இவரை அழைக்கவே இவற்றை ஊக்குவிக்க தனது வேலைப்பளுவிற்கு இடையேயும் செல்வார்.

 

 

தென் தமிழகமெங்கும் இவர் பங்கேற்காத இலக்கிய ஆன்மீக சங்கங்களே இல்லை எனலாம். திரு ஏ.கே.செட்டியார், திரு சா.கணேசன் திரு ஏ.சீனிவாசராகவன் உள்ளிட்டோர் வீட்டிற்கு வருவர்.வானொலியில் பத்திரிக்கையாளர் பணி பற்றி அடிக்கடி உரையாற்றியதும் உண்டு.

 

 

சுவாமிஜி கிருஷ்ணா

 

சுவாமிஜி கிருஷ்ணா அச்சன்கோவிலில் பரசுராமர் ஸ்தாபித்த ஐயப்பன் சிலையை நிறுவிய பெரிய மகான். அவர் கணபதி ஹோமத்தை தனது சிறுவயதிலிருந்தே தினமும் நடத்தி கணபதியை பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவருடன் ஈடுபாடு ஏற்பட்டு அவர் குருவாக மந்த்ரோபதேசம் செய்தார்.கணபதி ஹோமத்தைத் தொடங்கி வைத்தார். எனது இல்லத்திற்கு பிரவசனகர்த்தாக்கள் வந்து தங்கி ராமாயண மஹாபாரத உபந்யாஸத்தை கிருஷ்ணாராயர் கோவில் தெருவிலுள்ள ஹனுமார் கோவிலில் நடத்துவார்கள்.

 

புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளுக்கு அடிக்கடி பி¨க்ஷயிட்ட பாக்கியமும் எனக்கு உண்டு.

 

இந்து முன்னணி தலைவரான கோபால்ஜி உள்ளிட்டோர் அடிக்கடி எங்கள் இல்லத்திற்கு வருவர்.

 

 

இப்படி கடந்த ஐம்பது ஆண்டு கால ஆன்மீக தேசீய இலக்கிய வரலாறை எடுத்துக் கொண்டால் நல்லனவற்றைப் பரப்புவதையே தன் குறிக்கோளாகக் கொண்டு அவர் வாழ்ந்தார்.

 

 

சுதந்திர நாளன்று பேசிய இறுதிப் பேச்சு

1998 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றி ஆயிற்றா என்பதே அவர் பேசிய கடைசி பேச்சு. கொடி ஏற்றி ஆகி விட்டது என்ற பதிலைக் கேட்டு அவர் ஆவி அமைதியாகப் பிரிந்தது.

 

 

ஒரு பெரிய இயக்கம் வளர அடிக்கல்லாக இருப்பவர் பலர். அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதே இல்லை. அதில் புகழ் பணம் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.இந்த வகையில் என் கணவரை முதல் வரிசையில் கூறலாம். எனது ஐந்து புத்திரர்களும் ஒரு பெண்ணும் இன்று நல்ல நிலைமையில் உள்ளனர்.நானும் தேக திடத்துடன் இறைவன் நாமத்தை உச்சரித்து வருகிறேன்.

ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை உற்றுக் கவனித்து இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தேசத்திற்காகவும் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதே என் ஆசை. தேசமும் தெய்வீகமும் செழிக்கட்டும்.

 

**********************