
Written by S NAGARAJAN
Date: 22 December 2015
Post No. 2413
Time uploaded in London :– காலை 6-16
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சம்ஸ்கிருதச் செல்வம்
வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!
ச.நாகராஜன்
பெரியோர்களைப் பணிய வேண்டும் என்று சொல்லும் அறநூல்களை போற்றுகிறோம்.
அப்படிப் போற்றும் போதே பெரியோர்கள் தம்மிடம் வந்து வணங்கியோரை வாழ்த்துவதிலும் ஒரு அழகை, முறையைக் கையாண்டனர். ஆசீர்வாதம் செய்தனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதை நமது இதிஹாஸ, புராண, காவியங்களில் காணலாம். வேத மந்திரங்களில் வாழ்த்து கூறும் மந்திரங்களைக் கேட்பதே ஒரு புண்ணியம்; அவ்வளவு அழகு; அவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்துக்கள்; ஆசீர்வாதங்கள்.
கோவையைச் சேர்ந்த என்.வி.நாயுடு (N.V.Nayudu) என்னும் சம்ஸ்கிருத ஆர்வலர் தன் வாழ்நாள் முழுவதும் படித்து வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல பகுதிகளைக் குறிப்பெடுத்து வந்தார். அவற்றை 21 தலைப்புகளில் அழகுறப் பிரித்தார். SUBHASHITA COLLECTION ANTHOLOGY என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.

இலக்கியங்களைப் படிப்பது மட்டும் போதாது; அவற்றை அடுத்த தலைமுறைக்குப் பொருள் பொதிந்த முறையில் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நூல் நல்ல எடுத்துக் காட்டு.
வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள் என்ற முதல் பகுதியில் மட்டும் இந்தப் பொருளையே 17 விதங்களாகப் பிரிக்கிறார்!
- பொதுவான வாழ்த்து முறைகள் 2) குழந்தையை ஆசீர்வாதம் செய்தல் 3) தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தல் 4) ஒரு குடும்பத்தை ஆசீர்வாதம் செய்தல் 5) பெரும் வீரச்செயலைச் செய்தவரை பாராட்டுதல் 6) ஒரு பெண்மணிக்கு ஆசீர்வாதம் செய்தல் 7) அறிவுரையுடன் ஆசீர்வாதம் செய்தல் 8) சொந்த அனுபவத்தைக் கொண்டு அதை வைத்து ஆசீர்வாதம் செய்தல் 9) வழிப்பயணம் செய்யும் போது ஒருவரை வாழ்த்தி அனுப்புதல் 10) போருக்குச் செல்வோரை வாழ்த்தி அனுப்புதல் 11) திருப்தியுடன் வெற்றி பெற்றுத் திரும்ப ஆசீர்வதித்தல் 12) வாழ்த்தும் போதே அதில் நையாண்டி அடிநாதமாக இழைந்தோடல் 13) வாழ்த்துக்களினால் அடுத்து இன்னும் மாபெரும் வெற்றி அடைய ஊக்குவித்து வாழ்த்தல் 14) வாழ்த்துக்களை அங்கீகரிப்போர் அதன் மூலமாகத் தமது அரிய குணநலன்களைக் காண்பித்தல் 15) ஊழிக்காலம் வரைக்குமான நம்பிக்கை வாழ்த்துக்கள் 16) உலகம் நலம் பெற வாழ்த்து 17) ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறவுரை வாழ்த்துக்கள்
இப்படிப் பல விதமாக ஆசீர்வாதங்களை வகை பிரித்து அதற்கான இலக்கிய மேற்கோள்களையும் திரு என்.வி.நாயுடு தந்துள்ளார்.
மிக பிரம்மாண்டமான ஒரு வாழ்க்கை முறையை ஹிந்துத்வம் பாரம்பரிய வழியில் கடந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதற்கு இந்த வாழ்த்துக்களே சான்று.
“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று இப்படி
ஆரியச் செல்வம் அல்லது ஹிந்துச் செல்வம் அல்லது பாரதீயச் செல்வத்தை அவர் பாரதமாதாவாகப் பாவித்துக் கூறுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள சத்தியமாக விளங்குகிறது.
நூலுக்கு வருவோம்.
நம்மைக் குளிர வைக்கும் சில எடுத்துக்காட்டுகள் :-
பத்ரம் தே |
எல்லா நலமும் (புகழ், தூய்மை) உனக்கே!
ஸ்வஸ்தி ப்ராப்னுஹி |
நீ நலமுற இருப்பாயாக
தே பவந்து மங்களம் |
உனக்கு மங்களம் உண்டாகட்டும்
சிரம் ஜீவ |
நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக
ஜயது பர்த்தா |
ஆதரவு அளிப்பவனுக்கு (இறைவன், ஆதரவாளன்) வெற்றி உண்டாகுக
அதிதி துஷ்யந்தனிடம் கூறுவது:
அப்ரதிரதோ பவ | (சாகுந்தலம் 7-17)
ரதம் ஒட்டுவதில் உனக்கு நிகரானவர் யாரும் இல்லாதபடி ஆவாயாக
யசோதை கிருஷ்ணரை ஆசீர்வதிப்பது
ஜீவ, க்ருஷ்ணா, சரதாம் சதம் சதம் | (க்ருஷ்ண கர்ணாமிருதம் 2 – 67)
க்ருஷ்ணா, நீ நூற்றுக்கணக்கான சரத்காலங்கள் வாழ்வாயாக
அருந்ததி ஜனகரை ஆசீர்வதிப்பது :
அக்ஷரம் தே ஜ்யோதி: ப்ரகாஷதாம் | (உத்தர ராம சரிதம் 4 -10)
என்றும் மறையாத ஜோதி (ப்ரகாசிக்கும் நுண்ணறிவு) உன்னிடம் என்றும் ப்ரகாசிக்கட்டும்
ரிஷிகள் துஷ்யந்தனை ஆசீர்வதிப்பது :
இஷ்டேன யுஜ்யஸ்வ | (சாகுந்தலம் 5-13)
(உன்) இஷ்டம் பூர்த்தியாகட்டும்
துஷ்யந்தனிடம் சகுந்தலையின் தோழிகள் கூறுவது :
ஸ்வாகதம் அவிலம்பினோ மனோரதஸ்ய | (சாகுந்தலம் 3 – 16)
வருக, உங்கள் மனோரதம் தாமதமின்றி அதி விரைவில் நிறைவேறட்டும்
( மனோரதம் என்ற அழகிய வார்த்தை மனம் ஒரு ரதம் என்றும் அது தான் விரும்பிய விஷயங்களை நோக்கி அதி வேகமாக ஓடும் என்பதையும் தெரிவிக்கும் பொருள் பொதிந்த சொல்)

******
நாமும் ஒரு குறிப்பேடு தயாரிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் பல நூல்களில் இதுவும் ஒன்று என்பதை மேலே நாம் படித்தவற்றைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்!
–subham–
You must be logged in to post a comment.