
(விக்கிபீடியா படம்; நன்றி)
Written by S Nagarajan
Date: 2 February 2016
Post No. 2499
Time uploaded in London :– 8-2 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact

பாக்யா வார இதழில் 16-1-16 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை.
பாக்யா இதழ் அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.
மன்னர்கள் சந்தித்த உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்!
ச.நாகராஜன்
“ஹோமுடன் நான் பழகிய பல வருடங்களில் அவரைப் பற்றி நான் அறிந்ததில் அவர் சந்தேகத்துக்குரிய எந்த விதமான மோசடி வேலைகளையும் செய்து நான் பார்த்ததே இல்லை” – வில்லியம் க்ரூக்ஸ்.
உலகின் மிக அபூர்வமான மீடியம் என்ற பெயரைப் பெறுபவர் டேனியல் டங்ளஸ் ஹோம் (1833-1886). இவர் செய்யாத ஆவி உலகம் சார்ந்த அபூர்வச் செயல்களே இல்லை எனலாம்.
அதனால் இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மன்னர்கள் அனைவரும் இவரைப் பார்க்க ஆசைப்பட்டனர். இவர் நடத்தும் அதீத உளவியல் அமர்வை தங்கள் முன் நடத்துமாறு வேண்டிக் கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டின் மன்னனான மூன்றாம் நெப்பொளியன் ஹோமை ஆவித் தொடர்பு கொள்வதற்கான அமர்வு ஒன்றை நடத்துமாறு வேண்டினான். அதற்கிணங்க ஹோம் அவர் முன்னால் ஒன்றல்ல, பல அமர்வுகளை நடத்தினார். நெப்போலியன் அதீத ஆர்வத்துடன் ஹோமின் ஒவ்வொரு அசைவையும் கூட மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.
மன்னரும் ராணியும் அருகருகில் அமர்ந்திருக்க அவர்கள் எண்ணுகின்ற ஒவ்வொரு எண்ணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்த ஹோம், அவர்கள் மனதில் எண்ணுகின்ற கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தந்தார். ஒரு சமயத்தில் அங்கு ஆவி ரூபத்தில் தானே உருவான ஒரு கை ராணியைத் தொடவே, அவர் அந்தக் கையில் இருந்த ஒரு சிறு குறையால் அது தன் தந்தையின் கை தான் என்பதைக் கண்டுபிடித்துப் பிரமித்துப் போனார். இன்னொரு அமர்வில் அறையே ஆடியது. அங்கிருந்த மேஜையும் ஆடியது. பின்னர் மேஜை உயரத் தூக்கப்பட்டது. பின்னர் அதிக எடையுள்ளதாக் ஆகி யாருமே நகர்த்தமுடியாதபடி அது தரையுடன் ஒட்டிக் கொண்டது. மூன்றாம் அமர்வில் மாயமான ஒரு ஆவித் தோற்றமுடைய கை தோன்றியது. அது மேஜை மேலிருந்த ஒரு பென்சிலை எடுத்து முதலாம் நெப்போலியனின் கையெழுத்தை அப்படியே போட்டது.
ட்யூக் டி மார்னி என்பவர் மன்னரிடம் வந்தார். இப்படி ஆவிகளை மன்னர் நம்புவது தப்பு என்று கூறி அதை அனைவருக்கும் அறிவிக்கப் போவதாகவும் சொன்னார்.
உடனே மன்னர், ‘ நீங்கள் சொல்ல விரும்புவதை எல்லாம் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் அத்துடன் இதையும் இறுதியில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை நம்புவதிலும் அதை அப்படியே நேரடியாக நிரூபணமாகப் பார்ப்பதிலும் ஒரு பெரும் வித்தியாசம் இருக்கிறது. நான் நேரடியாகப் பார்த்தது எல்லாம் உண்மை. அதை நிச்சயமாக நான் உணர்கிறேன். ஆகவே இதையும் சேர்த்துச் சொல்லுங்கள்” என்றார்.
இந்த அதிசயமான சம்பவங்களால் ஹோமின் புகழ் அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பரவியது.
ஹோம் அமெரிக்கா சென்றவுடன் அவர் மன்னரால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டார் என்று வதந்திகள் கிளம்பின. ஆனால் உண்மை என்னவெனில் ராணி ஹோமின் சகோதரியைத் தானே ஆதரிக்கப் போவதாக உறுதி அளித்ததன் பேரில் அவரை அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்குக் கூட்டி வரவே ஹோம் அமெரிக்கா பயணமானார்.
அமெரிக்காவிலிருந்து வந்த ஹோமை பவேரியா (BAVARIA) நாட்டு மன்னர் உடனே பார்க்க வேண்டுமென்றார். இதைத் தொடர்ந்து இத்தாலியில் நேப்பிள்ஸ் மன்னர் ஹோமைப் பார்க்கத் துடித்தார். இடைவிடாத அமர்வுகளால் இத்தாலியில் ஹோமின் உடல் நலம் சிறிது பாதிக்கப்பட்டது. உடனே ஹோம் மஸாஸ் சிறையில் மன்னரால் அடைக்கப்பட்டார் என்று வதந்தி பரவியது. இப்படி வதந்திகள் பரவுவது அவரைப் பொருத்த மட்டில் சாதாரணமாகிப் போனது!
அலெக்ஸாண்டர் டூமாஸ் பிரான்ஸின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரது நூல்கள் இன்றைய உலகில் நூறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக மக்களால் படித்துப் போற்றப்படுகின்ற்ன. அவர் ஹோமைப் பார்க்கத் துடித்தார். ஆனால் பீட்டர்ஹாஃப் என்ற நகருக்கு வருமாறு மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர் ஹோமுக்கு அழைப்பு விடுத்தார். அதை ஹோமினால் தட்ட முடியவில்லை.
இதனால் சற்று மன வருத்தம் அடைந்த எழுத்தாள்ர் அலெக்ஸாண்டர் டூமாஸ், “ ஏராளமான அலெக்ஸாண்டர்கள் உலகில் இருக்கலாம். ஆனால் டூமாஸ் ஒருவன் தான் இருக்க முடியும்” என்றார்.

டாக்டர் ஆஷ்பர்னர் என்பவர் ஹோமின் அமர்வுகளினால் ஈர்க்கப்பட்டார். இதைப் பார்த்த பகுத்தறிவுவாதியான அவரது நண்பர் டாக்டர் எல்லியொட்ஸனுக்குத் தாங்க முடியவில்லை. இதெல்லாம் ஃப்ராடு வேலை என்று அவர் மூலைக்கு மூலை முழங்கினார்.
ஆனால் சில வருடங்கள் கழித்து எல்லியொட்ஸனை ஹோம் நேருக்கு நேர் சந்தித்தார். தனது அமர்வுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அங்கு சென்ற எல்லியொட்ஸன் மிகத் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டார்.
லண்டனுக்குத் திரும்பி வந்த அவரது பேச்சில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஹோம் எந்தவித மோசடி வேலையையும் செய்யவில்லை என்று பகிரங்கமாக அவர் சொல்ல ஆரம்பித்தார். இதை டாக்டர் ஆஷ்பர்னருடன் இணைந்து வேறு சொல்லவே ஹோமின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.
ராபர்ட் சேம்பர்ஸ் என்ற இன்னொரு பகுத்தறிவுவாதி ஹோமைத் தீவிரமாகத் தாக்கி வந்தார். ஆனால் அவர் ஹோமின் அமர்வு ஒன்றில் இறந்து போன தனது தந்தையுடனும் மகளுடனும் தொடர்பு கொண்டார். யாருக்கும் தெரியாத அந்தரங்க விஷயங்களை அவர்கள் பேசியதால் சேம்பர்ஸும் ஆவி உலகை நம்ப ஆரம்பித்தார். இருந்தாலும் வெளிப்படையாகச் சொன்னால் பகுத்தறிவுவாதி என்ற தனது பெயர் பாதிக்கப்படும் என்று அவர் அஞ்சினார். ஆகவே ஹோம் 1862ஆம் ஆண்டில் எழுதிய சுயசரிதைக்கு இன்னொரு புனைப் பெயரில் முன்னுரை எழுதினார்.
ஆனால் சில வருடங்கள் கழித்து அவரது போலி வேஷத்தை உதறினார். பகிரங்கமாக மக்களிடையே ஹோமை ஆதரித்துப் பேசலானார்.
வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் 1871ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் ஹோம் மீது பல சோதனைகளை பத்திரிகையாளர்களை வைத்துக் கொண்டு நடத்தினார். தீவிரமான கண்காணிப்பில் நடந்த இந்த சோதனைகளின் முடிவில் க்ரூக்ஸ் ஹோம் செய்வது அனைத்தும் உண்மையில் நடப்பதே; எந்த மோசடியும் இல்லை என்று அறிவித்தார்.
இப்படி ‘பல விஞ்ஞான முறைப்படியான சோதனைகளில் வெற்றி பெற்றவர்; உலகின் பல நாட்டு மன்னர்களைக் கவர்ந்தவர்’ என்ற பெரும் புகழைப் பெற்றார் ஹோம்.
சுயசரிதையில் தனது அனுபவங்களை ஒளிவுமறைவின்றி அவர் எடுத்துரைத்திருக்கிறார். ஆகவே ஆவி உலக உண்மைகளை அறிய விரும்புவோர் நாடும் புத்தககமாக அது அமைந்துள்ளது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி சந்திரனில் கால் பதித்து பெரும் புகழைப் பெற்றார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.
ஆனால் தலைக்கனம் இல்லாத எளிமையானவர் அவர். ஒரு நாள் பிரபல புகைப்பட நிபுணரான யூசூப் கார்ஷ் (Yousuf Karsh) தன் மனைவியுடன் அவரைப் புகைப்படம் எடுக்க வந்தார். மதிய உணவு கொடுத்து அவரை உபசரித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அப்போது யூசூப்பிடம் அவர் சென்ற நாடுகளைப் பற்றி ஆர்வத்துடன் விலாவாரியாக விசாரித்துக் கொண்டிருந்தார். இடையே குறுக்கிட்ட யூசுப்பின் மனைவி, “ ஆனால் நீங்கள் சந்திரனுக்கே சென்றவர் ஆயிற்றே. உங்களது பயண அனுபவங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்றார்.
புன்னகையுடன்,“அந்த ஒரே இடம் தான் நான் பயணித்த இடம்” என்று மெதுவாகச் சொன்னார் ஆர்ம்ஸ்ட்ராங்.
ஒருமுறை அவர் ஜெருசலத்திற்குச் சென்றார். அங்கு டெம்பிள் மவுண்டுக்குச் செல்லும் ஹுல்டா வாயிலில் (Temple Mount, Hulda Gate) நின்றார். இதே படிகளின் வழியாகத் தான் ஏசு கிறிஸ்து நடந்து சென்றாரா என்று ஆவலுடன் கேட்டார். ஆம் என்ற பதில் வந்தது. ஆஹா! இந்தப் படிகளின் மீது காலடிகளைப் பதிக்கும் போது சந்திரனில் காலடி பதித்த போது ஏற்பட்டதை விட அதிக பரவசத்தை நான் அடைகிறேன்” என்றார் அவர்!
**********


You must be logged in to post a comment.