‘இந்திரனும் வேண்டாம், அமிழ்தமும் வேண்டாம்’: தமிழர் நிலைப்பாடு
Post No 744 dated 13th December,2013.
தமிழர்கள் இந்திரனையும் அமிழ்தத்தையும் மிக உயர்வாகக் கருதியதால் அவைகளை அளவு கோலாக வைத்துப் பாடிய பாடல்கள் புறநானூறு முதல் நாயன்மார்கள், ஆழ்வார்கள், பாரதிதாசன் பாடல்கள் வரை பல இடங்களில் காணப்படுகின்றன.. இதிலிருந்து அவர்கள் இந்திரன் மீதும் அமிழ்தம் மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதும் தெளிவாகின்றது. உலகமே அறிந்திருந்த உயர்வான பொருள்களைத்தான் புலவர்கள் உவமையாகப் பயன்படுத்துவார்கள்.
கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி என்னும் பாண்டிய மன்னன் கூறுகிறான்: “இந்திரனின் அமிழ்தமே கிடைத்தாலும் தனியாக உண்ண மாட்டோம். உலகமே கிடைத்தாலும் பழி என்றால் அதன் பக்கமே போக மாட்டோம். ஆனால் புகழ் தரக்கூடிய நற்செயல்கள் என்றால் உயிரையே கொடுக்கவும் தயங்க மாட்டோம். இப்பேற்பட்ட தனக்கென வாழாத, பிறர்க்கு என வாழ்வோர்தான் பெரியோர்கள். அவர்களால்தான் இவ்வுலகம் நிலைபெற்றுள்ளது.”
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியல் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்னமாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன் தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே
–புறம் 182, கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
திருவள்ளுவரும் அமிழ்தத்தை அளவு கோலாக, உவமைப்பொருளாக வைத்து சில குறள்கள் இயற்றினார்:
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ் —-(குறள் 64)
தனது குழந்தை கைகளைப் போட்டு துளாவிய கூழ் அமிழ்தத்தை விட சிறந்தது.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று—- (குறள் 82)
அமிழ்தமே கிடைத்தாலும் வீட்டுக்கு வந்த விருந்தினரை விட்டுவிட்டு தனித்து உண்ணுவது விரும்பத்தக்கதல்ல. (புறநானூற்று செய்யுளின் கருத்தையே வள்ளுவரும் எதிரொலிக்கிறார்).

‘இந்திரலோகம் வேண்டாம்‘
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவரங்கப் பெருமானைப் போற்றும் பணியைத்தவிர இந்திரலோகம் ஆளும் பதவி கிடைத்தாலும் வேண்டாம் என்கிறார்:
பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய், கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர, யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!
–தொண்டரடிப்பொடி ஆழ்வார்
கந்தபுராணத்தில் வீரவாகுத் தேவரும் முருகனுடைய பாத கமலங்களில் சேவித்துப் பெறும் அன்பும் ஆதரவுமே வேண்டும். இந்திரலோகம் ஆளுவதைக் கனவிலும் கூடக் கருத மாட்டேன் என்கிறார்:
“ கோல நீடிய நீதிபதி
வாழ்க்கையும் குறியேன்
மேலை இந்திரன் அரசினைக்
கனவிலும் வெஃகேன்
மாலையன் பெறு பதத்தையும்
பொருளென மதியேன்
சால நின்பதத் தன்பையே
வேண்டுவன் தமியேன்” கந்தபுராணம்:
இவ்வாறு வீரவாகு தேவர் முருகனிடம் வரம் கேட்கிறார்:
இன்னொரு புலவர் தமிழ் ஒன்றே போதும், அமிழ்தமே வேண்டாம் என்கிறார்.
இருந்தமிழே உன்னால் இருந்தேனே வானோர்
விருந்தமிழ்தம் என்னினும் வேண்டேன் (ஒரு புலவர் பாட்டு)
பாரதிதாசனோ தமிழுக்கும் அமுது என்று பெயர் என்கிறார்.
அப்பர் தேவாரம்: குபேரனுடைய செல்வமே வேண்டாம்
செல்வத்துக்கு அதிதேவதையான குபேரனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் சங்க நிதி, பதும நிதி முதலிய ஒன்பது நிதிகளைக் கொடுத்து இந்த உலகையே ஆளும் பதவியைக் கொடுத்தாலும், அத்தகையோர் சிவபக்தர்கள் இல்லை எனில் அந்த செல்வத்தை ஏற்கமாட்டோம். கங்கையைத் தலையில் தாங்கும் சிவபெருமானின் சீடர்கள் மாடு தின்னும் புலையரானாலும், அங்கம் எல்லாம் அழுகித் தொங்கும் குஷ்டரோகிகள் ஆனாலும் அவர்களைக் கடவுளாக வழிபடுவோம் என்கிறார்.
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியோடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்
அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.

சங்க காலத்தில் உலவிய அதே கருத்து, சங்கம் மருவிய கால நூலான திருக்குறளிலும் அதற்குப் பின்னர் மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த அப்பர் காலத்திலும் அதற்குப் பின்னர் ஆழ்வார் பாடலிலும் இருக்கக் காண்கிறோம். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. தமிழர்களின் கொள்கையே அகில பாரதத்திலும் நிலவியது.
அழகான பொன்மயமான இலங்கை பற்றி லெட்சுமணன் புகழ்ந்தபோது இராம பிரானும் இதையேதான் கூறுகிறான்:
“ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காது அபி கரியஸி”–(வால்மீகி ராமாயணம்)
பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே (பாரதியாரின் மொழி பெயர்ப்பு)
இராமனும் கூட இந்திரலோகத்தை (நற்றவ வானினும்=ஸ்வர்கம்) விட தாய்நாடே சிறந்தது, தாயே சிறந்தவள் என்கிறான். என்ன அருமையான சிந்தனை. இப்படி பாரத நாடு முழுவதும் ஒரே உவமையை — ஸ்வர்கத்தை விட, அமிதத்தை விட— பயன்படுத்தியிருப்பது இந்திய கலாசாரத்தின் மையக் கருத்தை எடுத்துகாட்டுகிறது. சங்க கால பாண்டிய மன்னன் முதல் நமது கால பாரதிதாசன் வரை அமிழ்தத்தை உவமையாகப் பயன்படுத்தியதை எண்ணி எண்ணி மகிழலாம்.
தொடர்பு முகவரி: Contact swami_48@yahoo.com

You must be logged in to post a comment.