இயற்கையில் 13 ‘குரு’க்கள்
இந்து சந்யாசிகள் வாழ்நாள் முழுதும் பாடம் கற்கும் மாணவர்கள். அவர்கள் எதிலிருந்தும் பாடம் கற்பார்கள், எப்போழுதும் பாடம் கற்பார்கள். உயர்திணை, அஃறிணை என்று வேறுபாடு பார்க்காமல் மிருகங்கள், பறவைகள், ஜடப் பொருட்கள் ஆகிய எல்லாவற் றிலிருந்தும் போதனை பெறுவார்கள். எதையும் ஆக்கபூர்வமாகவே அணுகுவார்கள். இது இன்று நேற்று தோன்றியதல்ல. வேத காலத்திலேயே துவங்கிய வழக்கம் இது. உபநிஷத்தில் ஒரு அருமையான கதை உள்ளது.
தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் மூவரும் உபதேசம் பெறச் சென்றார்கள். வானத்தில் இடி முழக்கம் கேட்டது. த…த….த… என்ற சப்தத்தோடு இடி உறுமியது. உடனே பிரஜாபதி, “என்ன? புரிந்து கொண்டீர்களா?” என்று தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகிய மூன்று குழுக்களையும் கேட்டார். அவர்கள் “ஆமாம், ஆமாம் நன்றாகப் புரிகிறது” என்றனர். “த என்றால் தம்யத” என்றனர் தேவர்கள். எப்போதும் இன்பம் அனுபவிக்கும் அவர்களுக்குத் தேவையானது தன்னடக்கம் (தம்யத). “த என்றால் தானம்” என்றனர் மனிதர்கள். சுயநலமிக்க மனிதர்களுக்குத் தேவையானது கொடுக்கும் குணம். “த என்றால் தயை” என்றனர் அசுரர்கள். ஈவு இரக்கம் இல்லாத அசுரர்களுக்குத் தேவையானது தயை (கருணை). இந்தக் கதை 3000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் இருக்கிறது.
இதற்குப் பின்வந்த பாகவத புராணத்தில் தத்தாத்ரேய மஹரிஷி, இயற்கையில் காணும் பறவை, மிருகங்கள் ஆகியவற்றிலிருந்து தான் அறிந்த விஷயங்களை எழுதினார். இந்த இரண்டு கதைகளையும் ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதியுள்ளேன். இதே போல, தமிழில் உள்ள விவேக சிந்தாமணி என்ற நூலில் பல பாடல்கள் உள்ளன. பர்த்ருஹரியின் நீதி சதகம் பாணியில் அமைந்த இந்த நூலை எழுதியது யார் என்று தெரியவில்லை. இந்த நூலில் உள்ள பெண்கள் எதிர்ப்புப் பாடல்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். தமிழ்த் திரைப்படம் ஒன்றில் “கோல மாமத யானையை நம்பலாம், சேலை கட்டிய மாதரை நம்பாதே” என்ற சினிமாப் பாடல் இந்த நூலில் உள்ளதுதான்.
மற்றொரு பாடலில் கீழ்கண்ட 13ம் புவியோர் போற்றும் ஈசனுக்கு இணையானது என்று பாடுகிறார். இதற்கு விளக்கம் என்ன என்று ஆசிரியர் கூறாவிட்டாலும், இலக்கிய விமர்சகர்கள் எழுதி வைத்துள்ளனர். இதோ அந்தப் பாடல்:
“மயில் குயில் செங்கால் அன்னம்
வண்டு கண்ணாடி பன்றி
அயில் எயிற்று அரவு திங்கள்
ஆதவன் ஆழி கொக்கோடு
உயரும் விண்கமலம் பன்மூன்று
உறுகுணம் உடையோர் தம்மை
இயலுறு புவியோர் போற்றும்
ஈசன் என்று எண்ணலாமே!
மயில்: நல்லவரை ஏற்று பொல்லாதவர்களை ஒதுக்கும் குணம்
குயில்: எப்போதும் இனிமையாகப் பேசல்
அன்னம்: பாலையும் தண்ணீரையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்தெடுப்பதுபோல நல்லவற்றைப் பகுத்து ஏற்றல் (தமிழ், வடமொழி இலக்கியங்களில் அன்னப் பட்சிக்கு இப்படி ஒரு அபூர்வ குணம் இருப்பதாக எழுதி வைத்துள்ளனர்)
வண்டு (தேனீ): மற்றவர்களுக்காக இடையறாது உழைக்கும் பண்பு
கண்ணாடி: முன்னால் உள்ள அனைத்தையும் கிரகிக்கும் தன்மை
பன்றி: சாக பட்சிணி (வெஜிட்டேரியன்)

பாம்பு: மகுடத்தில் ரத்தினம் உடைய பெருமை உடைத்து
சந்திரன்: எல்லோருக்கும், பலனை எதிர்பார்க்காமல், குளிர்ச்சியான கிரணங்களை வீசும் குணம்
சூரியன்: எல்லோருக்கும் சக்தியும் பாதுகாப்பும் கொடுக்கும் குணம்
கடல்: எங்கும் பரந்து விரிந்தது, பிரம்மாண்டமான தோற்றம்
கொக்கு: காரியத்தை அடையும் வரை பொறுமையுடன் காத்திருத்தல்
ஆகாயம்: எல்லாவற்றையும் தன்கீழ் வத்திருக்கும் பெருமை
தாமரை: பார்க்கத் தெவீட்டாத அழகு
இப்பேற்பட்ட குணங்களை உடையவை என்பதால் இந்த 13-ஐயும் மக்கள் போற்றும் இறைவனுக்கு சமமானவை என்று அழைக்கலாம் என்கிறது விவேக சிந்தாமணி.
எதிலும் நல்லதையே காணும் ‘பாஸிட்டிவ்’ அணுகுமுறையை இப் பாட்டில் காணலாம்.
உபநிஷத்தும், பாகவதமும், விவேக சிந்தாமணியும் கூறும் கருத்தை 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞனும் பாடியிருக்கிறான். “புத்தகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்து இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள். வானம் பாடியின் பாட்டைக் கேளுங்கள். எல்லா முனிவர்களும் போதிக்கும் விஷயங்களைவிட கூடுதலாக ஞானம் பெறுவீர்கள் என்பது அவர் தரும் செய்தியாகும்.
William Wordsworth echoes this in these lines:
“And hark! how blithe the throstle sings!
He, too, is no mean preacher:
Come forth into the light of things,
Let Nature be your teacher”
“One impulse from a vernal wood
May teach you more of man,
Of moral evil and of good,
Than all the sages can”.
சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடத்தையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.
Read my earlier posts :
1.The connection between William Wordsworth and Dattatreya (posted on 10 November 2011).
2.G for Ganga…..Gayatri….Gita….. Govinda…….. (For Upanishad parable about Da..Da…da)
3.சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா? (in Tamil)
700 கட்டுரைகள் பட்டியலுக்குத் தொடர்பு கொள்க: swami_48@yahoo.com





You must be logged in to post a comment.