
WRITTEN BY S NAGARAJAN
Date: 23 August 2018
Time uploaded in London – 5-39 AM (British Summer Time)
Post No. 5353
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சென்னை வானொலி நிலையம் அலை வரிசை ‘ஏ’யில் 21-7-2108 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் இடம் பெற்ற எட்டாவது உரை.
தன்னார்வத் தொண்டைச் செய்யும் ஆச்சரியப்பட வைக்கும் சில இளம் பெண்கள்!
சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்பதில் இன்றைய உலகில் இளம் பெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான இளம் மங்கையர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் செயல்களைச் செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக சில இளம் பெண்களைப் பற்றிச் சொல்லலாம்.
கனடாவைச் சேர்ந்த பதினெட்டே வயதான ஆன் மகோசின்ஸ்கி (Ann Makosinski) என்ற இளம் பெண் இரண்டு புது விதக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். ஹாலோ ஃப்ளாஷ் லைட் (Hallow Flash light) என்ற இந்த விளக்கு உடலில் உள்ள வெப்பத்தால் எரியக்கூடிய ஒன்று. அவரது இன்னொரு கண்டுபிடிப்பு இ- ட் ரிங்க் (e-drink) என்பதாகும். இது ஐ- போனை சார்ஜ் செய்யும் ஒரு கோப்பையாகும். அதிலிருக்கும் பொருளின் அதிக வெப்பமானது மின்சாரமாக மாறும். இப்படி நாம் அறியாமல் நம்மைச் சுற்றியுள்ள ஆற்றலைப் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதே இவரது பொழுது போக்கு. இவரது கண்டுபிடிப்புகளை கண்டு வியப்போர் இவரை ஆங்காங்கே அழைப்பதால் உலகெங்கும் சுற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் Times 30 Under 30 World Changers- அதாவது 30 வயதுக்குக் கீழேயுள்ள 30 கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பிரபல டைம்ஸ் பத்திரிகை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.
சிகாகோவைச் சேர்ந்த 20 வயதான மாணவி ஜெண்டயி ஜோன்ஸ் (Jendayi Jones) இளமையிலிருந்தே சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவர். மறு சுழற்சி, நல்ல உரங்களை உருவாக்கல், ஆற்றலைச் சேமிக்கும் பல்புகளின் பயன்பாடு, கழிவுகளைக் குறைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட இவர் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கினார். இவரால் ஏராளமானோர் உத்வேகம் பெற்று சுற்றுப்புறச் சூழலைக் காப்பதில் இவருடன் இணைந்து தன்னார்வத் தொண்டைச் செய்து வருகின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்ணான பதினேழே வயதான தீபிகா குருப் (Deepika kurup) தனது கோடைக்கால பயணங்களில் ஆங்காங்கே குழந்தைகள் அழுக்கு நீரைக் குடிப்பதைக் கண்டு மனம் நொந்தார். உடனடியாக சூரிய சக்தியால் நீரை அசுத்தமாக்கும் பாக்டீரியாக்களை அகற்றும் ஒரு புது வழியைக் கண்டு பிடித்தார். இது ஏழைக் குழந்தைகளுக்கு சுத்த நீரைத் தரும் வரபிரசாதமான கண்டுபிடிப்பாக அமைந்து விட்டது.
இருபத்தேழே வயதான இளம் மங்கை ஷானா மஹாஜன் (Shauna Mahajan) சிறுவயதிலிருந்தே உலகம் எப்படி இயங்குகிறது என்று அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆகவே விஞ்ஞானத்தை தனது பாடமாக எடுத்துக் கொண்டு இயற்கையுடன் மனிதர்கள் பழகும் விதத்தை ஆராயலானார். பார்படோஸில் உள்ள பவழப் பாறைகளை ஆராய்ந்தார்.கென்யாவில் உள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்க்கை முறையையும் தெற்கு க்யூபெக்கில் விவசாயம் எப்படி செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார். தனது நீண்ட ஆய்வுகளின் முடிவில் இவர் கண்டுபிடித்தது இயற்கையுடன் மனிதன் நன்கு லயத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதைத் தான். இதன் மூலமாக சுற்றுப்புறச் சூழல் வெகுவாக மேம்படும் என்பதை பிரசாரம் செய்து வருகிறார்.

Shauna Mahajan
இவர்களைப் போல அனைத்துப் பெண்களும் முனைந்து நின்றால் பூலோகம் சொர்க்கமாகி விடும் இல்லையா?!
***




You must be logged in to post a comment.