
Written by S NAGARAJAN
Post No.2424
Date : 25th December 2015
Time uploaded in London: 6-45 AM
25-12-2015 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை
உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழுந்த யோகிகள்!
ச.நாகராஜன்
“நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றையும் தர்க்கத்தாலோ அல்லது விஞ்ஞானத்தாலோ விளக்க முடியாது” – லிண்டா வெஸ்ட்பால்
‘LIVING BURIAL’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழும் ச சாமானியர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் கூட ஒரு சுவாரசியமான விஷயம் தான்!
இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய மேலை நாடுகளில் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சி மும்முரமாக நடந்த கால கட்டத்தில் அதையும் மிஞ்சும் விஷயமாக இது நேரடியாகப் பலமுறை செய்து காட்டப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் இதில் ஆர்வம் கொண்டனர்; இதை ஆராய முன் வந்தனர்.
இதில் முதலிடம் பெற்றவர்கள் இந்திய யோகிகள். இது அவர்களுக்கு சர்வ சாதாரண விஷயமாக இருந்தது.
1870ஆம் ஆண்டு அல்ஜீரியாவிலிருந்து லண்டனுக்கு வந்த யோகிகள் குழு செய்த செய்கைகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் உடலில் ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் காண்பித்தனர். அந்தக் காயங்களால் அவர்கள் வ்லியில் துடிக்கவில்லை. இதே போன்ற காட்சிகளை பாரிஸில் நடந்த ஒரு கண்காட்சியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மகமதியர்கள் சிலர் செய்து காட்டினர். இதை நேரில் இருந்து பார்த்து ஆய்வு நடத்திய டாக்டர்கள் நாகல், சாபௌட், பாரட் ஆகியோர் (UEBERSINNLICHE WELT என்ற) ஜெர்மானிய பத்திரிகையில் தாங்கள் பார்த்தவற்றைப் போட்டோக்களுடன் வெளியிட்டனர்.

உடல் மீது தங்களுக்கு முழு ஆதிக்கம் உண்டு என்று இப்படிச் செய்து காட்டியவர்களுள் முக்கியமானவர்கள் தாரா பே, ரஹ்மான் பே மற்றும் ஹமித் பே ஆகியோராவர். ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொண்ட இவர்கள் அத்துடன் நிற்கவில்லை, தங்களை உயிருடன் புதைக்கச் செய்து மீண்டும் உயிருடன் வெளியே வந்து காண்பித்தனர். வெட்டுக் காயங்கள் ஏற்படும் போது சாதாரணமாக குபுகுபுவெனப் பொங்கும் இரத்தத்தை இவர்கள் கட்டுப்ப்டுத்தி இரத்தம் வெளிப்படாமல் இருக்கச் செய்தனர். நாடித்துடிப்பைக் குறைத்துக் கொண்டே வருவது, இடது கையில் ஒரு நாடித் துடிப்பு வலது கையில் இன்னொரு நாடித் துடிப்பு என்று இப்படி இவர்கள் செய்து காட்டிய செயல்கள் அனைவரையும் திகைக்க வைத்தது.
சவம் போல மாறி தங்களை உயிருடன் புதைக்குமாறு செய்து கொண்ட அவர்கள், சவப்பெட்டியில்லாமல் வெறும் மண்ணிலேயே புதையுண்டனர். அனைத்து பத்திரிகையாளர்களும் டாக்டர்களும் இதை நேரில் பார்க்க அழைக்கப்பட்டனர். ஒரு குழுவாக தங்களை அமைத்துக் கொண்ட ஆய்வாளர்கள் புதைபடும் இடத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்தனர்.
புதையுண்டவர்களின் நாடித்துடிப்பு படிப்படியாக குறைந்து நின்றே போனது. இதயத்துடிப்பு இல்லை! சுவாசமும் இல்லை. மூக்கிலும் காதிலும் பஞ்சு வைக்கப்பட்டது.
ஐந்து நிமிடங்கள் கழித்து அவர்கள் உயிருடன் மீண்டனர். அவர்கள் தங்கள் இதயத்துடிப்பை தாமாகவே நிறுத்திக் கொண்டதுடன் தலையிலும் கழுத்திலும் சில ந்ரம்பு மண்டல புள்ளிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டனர்.
“இறக்கும் நிலையில்” அவர்கள் இருக்கும் நேரத்தை அவர்கள் ஆழ்மனம் அபாரமாகக் கையாண்டது. சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.
ரஹமான் பே செய்வது போலத் தன்னாலும் செய்து காண்பிக்க முடியும் என்று சவால் விட்ட பிரபல மாஜிக் நிபுணர் ஹௌடினி ஒரு உலோகத்திலான பெட்டியில் தன்னை அடைத்துக் கொண்டு அந்தப் பெட்டியை நீரில் ஆழ்த்தி சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்து காண்பித்தார். நீரில் இருந்த பெட்டியிலிருந்து கொண்டு டெலிபோன் மூலம் தன் உதவியாளருடன் பேசிக் கொண்டே இருந்த ஹௌடினி தான் மூச்சை மெதுவாக விட்டு இந்தச் சாதனையைச் செய்வதாகக் கூறினார்.
இந்திய யோகிகள் இப்படி சர்வ சாதாரண்மாக உயிருடன் புதையுண்டு இருந்த செய்திகளைத் தொகுத்து தான் நேரில் பார்த்தவற்றையும் சேர்த்து ஜேம்ஸ் ப்ரெய்ட் (JAMES BRAID) என்பவர், அப்ஸர்வேஷன் ஆன் ட்ரான்ஸ்: (OBSERVATION ON TRANCE OR HUMAN HYBERNATION) என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார்.

அதில் அவர் குறிப்பிட்ட விஷயம் சுவாரசியமானது! இந்திய யோகிகள் இரு கண்களையும் புருவ மத்தியை நோக்கி வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு மனித உருவம் தெரிகிறது. எப்போது அந்த உருவத்தின் தலையை அவர்களால் காண முடியவில்லையோ அப்போது தங்களின் ஆயுள் முடியும் நிலைக்கு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்கின்றனர். உடனே உயிருடன் தங்களைப் புதைத்துக் கொள்கின்றனர் என்று இவ்வாறு தனது கண்டுபிடிப்பை அவர் எழுதி வைத்தார்.
இப்படிப் புதையுண்ட யோகிகளைத் தோண்டி எடுத்து அவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய மஹாராஜாக்கள் தங்கள் சபைகளில் யோகிகளை வரவழைத்து அவர்கள் காட்டும் உடல் மீதான் ஆதிக்கத்தைக் கண்டு களித்து அவர்களைப் போற்றி வணங்குவது வழக்கம்.
ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது பல மஹாராஜாக்கள் இங்கிலாந்திலிருந்து விஞ்ஞானிகளை தங்கள் சபைக்கு வரவழைத்து அவர்கள் முன்னர் யோகிகளை இப்படிப்பட்ட அபூர்வ செயல்களைச் செய்து காண்பிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதில் கலந்து கொண்ட மேலை நாட்டினர் தங்கள் ஊர்களுக்குச் சென்று இந்த விந்தையைச் சொல்லி மகிழ்ந்ததோடு புத்தகத்திலும் எழுதி வைத்துள்ளன்ர்.
அறிவியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்த யோகிகளின் உயிருடன் புதைக்கும் நிகழ்வு உதவியாக இருந்து வருவது உண்மையே!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஜெர்மானிய-பிரிட்டிஷ் உயிரியல் விஞ்ஞானியான வில்ஹெம் ஃபெல்ட்பெர்க் (Wilhelm Feldberg : பிறப்பு 19-11-1900 இறப்பு 23-10-1993) உயிரியல் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். ஆனால் அவர் தனது சோதனைகளுக்காக மிருகங்களை, குறிப்பாக முயல்களைக் கொடுமைப் படுத்துகிறார் என்று அவப்பெயர் பெற்றார்.
ஒரு நாள் மிருகங்களை நேசிக்கும் தன்னார்வத் தொண்டர்கள் இருவர் அவரது சோதனைச்சாலைக்குச் சென்றனர். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புவதாக அவர்கள் கூறி அந்த சோதனைச்சாலையில் நடப்பதை ஒரு படமாகவும் பிடித்தனர். அங்கு சோதனைக்குள்ளாக்கப்படும் முயல்கள் மயக்கமருந்து இல்லாமலேயே அறுக்கப்படுவதாகவும் கொடுமைப்படுத்தப் படுவதாகவும் அப்படியே புதைக்கப்படுவதாகவும் அவர்கள் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்து தாகங்ள் எடுத்த படத்தைத் திரையிட்டும் காட்டினர். ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.

இதனால் 1990ஆம் ஆண்டு அவரது விஞ்ஞான சோதனைகள் ஒரு முடிவுக்கு வந்தன. படம் பிடித்த இருவரில் ஒருவரான பெண்மணி மெலடி மக்டொனால்ட் ஒரு நூலையே எழுதி வெளியிட்டார். காட் இன் தி ஆக்ட்: தி ஃபெல்ட்பெர்க் இன்வெஸ்டிகேஷன் (Caught in the act: the Feldberg investigation) என்ற அந்த நூல் பெரும் பரபரப்பை ஊட்டியது.
பெரிய விஞ்ஞானி தான் என்றாலும் கூட, மிருகங்களைக் கொடுமைப்படுத்தியதால் அவப் பெயர் பெற்றதோடு தனது 90ஆம் வயதில் சோதனைகள் செய்வதிலிருந்து ஃபெல்ட்பெர்க் ஓய்வும் பெற்றார்.

******
You must be logged in to post a comment.