
Article written by London swaminathan
Date: 10 June 2016
Post No. 2884
Time uploaded in London :– 14-12
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

அறிவியல் முறையில் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் ஈர்ப்புவிசை என்று சொல்லவேண்டும். சூரியனின் ஈர்ப்புவிசையும் பூமி உள்ளிட்ட ஏனைய கிரகங்களின் ஈர்ப்புவிசையும் ஒன்றயொன்று இழுக்க அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.அதில் பூமியும் ஒன்று.
பூமியைத் தாங்கி நிறுத்துவது எது? என்று கேட்டால் இந்துக்கள், கிரேக்கர்கள் சீனர்கள் எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்லுவார்கள்.
கிரேக்கர்கள் அட்லஸ் என்ற அரக்கனே வானத்தையும் பூமியையும் தூக்கி நிறுத்திகிறான் என்று சொல்லுவர். இது பழைய புராணக்கதை. அட்லாண்டிஸ் என்ற தீவின் மன்னனான ப்ரொமேதயஸின் சகோதரனான அட்லஸ், ஒரு போரில் ஏற்பட்ட தோல்விக்காக வானத்தையும் பூமியையும் சுமக்கும் தண்டனை பெற்றான்.
சீனர்கள் ஒரு கடல் ஆமையின் முதுகில் இந்த பூமி நிற்பதாகவும், இன்னும் சில கதைகளில் பூமியின் நான்கு திசைகளில் உள்ள மரங்களின் மீது இந்த ‘சதுர’ பூமி நிற்பதாகவும் எழுதியுள்ளனர்.

இந்து மத புராணங்களில் ஆதி சேஷன் என்ற பாம்புதான் உலகைத் தாங்கி நிற்கிறது என்பர். அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகைத் தாங்கி நிற்பதாகவும் பகர்வர்.
ஆனால் ஒரு அருமையான பாடல் ஏழுவிதமான குணங்களும் குணவான்களும் இந்த பூமியைத் தாங்கி நிற்கின்றனர் என்று போற்றும்:-
கோபிர்விப்ரைஸ்ச வேதைஸ்ச சதிபி: சத்யவாதிபி:
அலுப்தைர்தானசீலைஸ்ச சப்தபிர்தார்யதே மஹீ
பொருள்:–
பசுக்கள், அந்தணர்கள், வேதங்கள், கற்புள்ள பெண்கள்,உண்மை விளம்பிகள், பேராசையற்றோர், கொடையாளிகள் (தான சீலர்கள்) ஆகிய ஏழுமே உலகத்தை (மஹீ) தங்கி நிற்கிறது.
பசும்பால் இல்லாவிடில் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்; அந்தணர்கள் என்ற சொல்லுக்குத் தற்காலத்தில் அறிஞர்கள் என்று பொருள் கொள்ளலாம். வேதங்கள் எப்போதுமே வானத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மற்ற சொற்களுக்கு விளக்கம் தேவையில்லை.
“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”- என்பது யாவரும் அறிந்ததே.

புறநானூற்றுப் பாடல்182
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் இதே கருத்தைச் சொல்கிறான்:–
இந்திரனுக்குரிய அமுதமே கிடைத்தாலும் தாமே சாப்பிடமாட்டார்கள்; கோபமற்றவர்கள்; எல்லோரும் அஞ்சும் தீய செயலுக்குத் தாமும் பயப்படுவார்கள்; புகழுக்குரிய செயல் என்றால் அதைச் செய்ய உயிரையே தருவார்கள்; பழிவரும் தீய செயலானால், உலகத்தையே தந்தாலும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு சோம்பேறித்தனமே கிடையாது. சுயநலமற்றவர். பொதுநலப் பணி செய்யும் உயர்ந்தோர். இவர்களே பெரியோர்கள். இவர்களால்தான் இந்த உலகமே இன்னும் இருக்கிறது.
உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டரும் இலரே; முனிவிலர்;
துஞ்சலுமிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
புகழ் எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்னமாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன் தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே
–புறம் 182
–சுபம்–
You must be logged in to post a comment.