கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 917 Dated 19th March 2014.
சிவபெருமானின் தோற்றத்தையும் அருளையும் தேவார மூவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் வருணிப்பதை பாடல் தோறும் காணலாம். அத்தோடு சிவனடியார்களின் தோற்றம், குண நலன்களையும் காணலாம். இவை எல்லாம் சமய சம்பந்தம் உடையவை. ஆனால் இது தவிர இயற்கை வருணனை, சில கிராமீயக் காட்சிகள், உவமைகள் ஆகியன சமய சம்பந்தம் இல்லாதவை. அவைகளை ரசிப்பதற்காக தேவாரத்தை தனியாகப் படிக்கவேண்டும். இதோ சம்பந்தர் கண்ட ஒரு காட்சி:–
முடிகையி னாற்றொடு மோட்டுழவர்
முன்கைத் தருக்கைக் கரும்பின் கட்டிக்
கடி கையினால் எறி காட்டுப்பள்ளி
காதல்செய்தான் கரிதாய கண்டன்
பொடிஅணிமேனியினானையுள்கிப்
போதொடு நீர்சுமந்தேத்திமுன்னின்
றடிகையினாற்றொழ வல்லதொண்ட
ரருவினையைத்துரந்தாட் செய்வாரே (1-5-7)
திருக்காட்டுப்பள்ளி உழவர்கள் வலிமையுடையவர்கள்.வெல்லக் கட்டிகளை உடைக்க கத்தி, அரிவாள் என்று போக மாட்டார்கள். கையினால் ஒரே அடி.! வெல்லம் தூள் தூளாகி விடும். அது மட்டுமல்ல. அவர்கள் நாற்று பிடுங்கினால் அழகாக வேருக்குச் சேதம் இன்றி அவைகளை முடித்து வைப்பர். சிவனை வழிபட ஊரூராகச் சென்ற சம்பந்தர் அந்தந்த ஊருக்கே உரிய சிறப்புகளைப் பாராட்டத் தவறவில்லை. இதோ சம்பந்தர் கண்ட இன்னொரு காட்சி:
புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்ட ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட
முழவு அதிர மழை என்று அஞ்சிச்
சில மந்தி அலமந்து மரம் ஏறி
முகில் பார்க்கும் திருவையாறே (முதல் திருமுறை)
திருவையாற்றில் சம்பந்தரை வரவேற்க ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளங்களுடன் கோவிலைச் சுற்றி அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மேளதாளத்துக்கு இசைய நடன மங்கையர் ஆடி வந்தனர். அந்த மேளத்தைக் கேட்டவுடன் வானத்தில் இடி இட்க்கிறது மழைவரப் போகிறது என்று அஞ்சி குரங்குகள் எல்லாம் மரத்தில் ஏறிக்கொண்டு வானத்தை உற்று நோக்கியதாம்!! சம்பந்தர் நமக்கு எத்தனை செய்திகளைத் தருகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன் இன்னிசை விருந்தும் நடன விருந்தும் இருந்தன. சிவனடியாரை வரவேற்க ஊரே அலங்கரிக்கப்பட்டது. குரங்குகள் மிருதங்கம் முதலியவற்றின் ஓஸையை இடி முழக்கம் என்று எண்ணி பயந்தன. நம் முன் ஒரு அழகிய சித்திரத்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்.
இராவணனுடைய இலங்கை ஒரு குன்றின் உச்சியில் இருந்தது போன்ற பல சுவையான செய்திகளையும் தருகிறார். அவைகளைத் தனியே காண்போம்.
contact swami_48@yahoo.com





You must be logged in to post a comment.