
|
பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 16
|
உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 2
By ச.நாகராஜன்
தமிழ்த் தாத்தா எனக் கொண்டாடப்படும் உ.வே.சாமிநாதையரையும் தமிழ் மக்கள் சரியாகக் கௌரவிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்ட கீழே குறிப்பிடப்படும் இரு செய்திகளே போதும்.
அவர் அரும்பாடுபட்டுச் சேர்த்த கைப்பிரதிகள், சுவடிகள், புத்தகங்களை பேணிக் காப்பாற்ற இயலாத நிலை ஏற்பட்டது. அரசும் இதர “தமிழுக்காகவே வாழ்பவர்களும்” ஒன்றும் செய்யாத நிலை!இந்த நிலையில் கை கொடுத்தவர் ருக்மிணி அருண்டேல்!
மதுரை நீலகண்ட சாஸ்திரியாருக்கு மகளாகப் பிறந்து தியாஸபி இயக்கத்தில் அவர் ஈடுபட்டதால் சென்னையில் வாழத் தொடங்கி அவ்வியக்கத்தில் ஈடுபட்டுப் பின்னால் சதிர் என்ற வார்த்தையை நீக்கி பரத நாட்டியம் என்ற வார்த்தை மூலம் நாட்டியக் கலைக்குத் தனித்தொரு அந்தஸ்தைத் தந்த ருக்மிணி அவர்களே சுவாமிநாதையர் நூலகத்தை தனது கலாக்ஷேத்ராவில் ஏற்படுத்தினார். ஜார்ஜ் அருண்டேலை மணம் செய்து கொண்டதால் ருக்மிணி அருண்டேல் என்று பின்னால் பிரசித்தமான இவர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட போது அதை வேண்டாமென்று மறுத்தவர். அவரால் ஐயர் அவர்களின் அரிய தமிழ்ச் செல்வம் காப்பாற்றப்பட்டது.
இப்போது சமீபத்தில் நாளிதழ்களில் (17-9-2012 அன்று) வந்த செய்தியின் படி ஐயர் அவர்கள் திருவல்லிக்கேணியில் திருவேட்டீஸ்வரன் பேட்டையில் 1903ஆம் ஆண்டு குடியேறி வாழ்ந்த வீடு இடிக்கப்பட இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் வேதனைப் பட்டுக் குரல் கொடுத்துள்ளனர்; அரசு தலையிட்டு இதை வாங்கிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தான் தமிழர்களின் இன்றைய போக்கு!வேதனையுடன் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
என் சரித்திரத்திற்குத் திரும்புவோம்.
திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ஐயர் பால் பெரும் அன்பு பாராட்டியவர். அவரைப் பற்றிய அரிய செய்திகளை என் சரித்திரத்தில் ஐயர் அவர்கள் பதிவு செய்துள்ளார். ஒரு சிறிய சம்பவத்தை உதாரணத்திற்காக இங்கு பார்ப்போம்:
“மகாவைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும் அணிந்திருந்த ருத்திராட்ச கண்டிகளை வாங்கி அவற்றிற்குத் தேசிகர் தங்க வில்லை போடச்செய்து அளித்தனர். எனக்கு திருவிடைமருதூரில் அளித்த கண்டியில் தங்க முலாம் பூசிய வெள்ளி வில்லைகளே இருந்தன. அந்தக் கண்டிக்கும் தங்க வில்லைகளை அமைக்கச் செய்து எனக்கு அளித்தார். அப்போது இராமசாமி ஐயர் சிலேடையாக, “வெள்ளி வில்லை தங்க வில்லை” என்றார். யாவரும் கேட்டு மகிழ்ந்தனர்.
வெள்ளியையும் தங்கத்தையும் வில்லையையும் தேசிகரது அன்பையும் ஒரு சேர இணைத்த “வெள்ளி வில்லை தங்க வில்லை” ஒரு அற்புதமான சிலேடை அல்லவா!
ஐயர் அவர்கள் ஜைன காப்பியமான சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார். பின்னர் ஊர் ஊராகச் சென்று பதிற்றுப்பத்து ஓலைச் சுவடிகளைக் கண்டுபிடித்து அதையும் பதிப்பித்தார். பொறாமைக் காரர்கள் அவரை வம்புக்கு இழுத்தனர். அதில் சிக்காமல் தமிழ்ப் பணியே தன் பணி என்று இருந்த ஐயர் அவர்கள் சிலப்பதிகாரச் சுவடிகளைத் தேடலானார். இதற்காக வரதுங்க பாண்டியரின் ஊரான கரிவலம்வந்த நல்லூர் சென்றார். அங்கு பால்வண்ண நாதர் ஆலயம் சென்றார். அங்கு இறைவனை வேண்டினார். அதற்குப் பிறகு நடந்தவற்றை அவர் சொற்களிலேயே பார்ப்போ“உன்னுடைய திருவருளைத் துணையென நம்பித் தமிழ்த் தொண்டை மேற்கொண்டிருக்கிறேன். சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கும்படி செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு சுவடிகள் எங்கே உள்ளனவென்று விசாரிக்கலானேன். தேவஸ்தானத்தின்
தர்மகர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக்
கண்டேன். வரதுங்கராம பாண்டியருக்கு வருஷந்தோறும் ஆலயச் செலவில் சிராத்தம் நடந்து வருவதாகக் கேள்வியுற்றிருந்தேன். அது நடந்து வருகிறதா என்று கேட்டேன்.
நடந்து வருவதாக அவர் சொன்னார்.
நான்:- வரகுண பாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம்
ஆலயத்திலே இருக்கின்றனவாமே?
அவர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற்கூளம்
மாதிரி கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.
நான்: அப்படியா! அவை எங்கே இருக்கின்றன? தயை செய்து அந்த
இடத்திற்கு அழைத்துப் போவீர்களா?
அவர்: அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுணபாண்டியர் இறந்த
பிறகு அவர் சொத்தெல்லாம் கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர்
வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் அப்போது தான் கோவிலுக்கு
வந்தனவாம்.
நான்: அது தெரியும். இப்போது அவை எங்கே இருக்கின்றன?
அவர்: குப்பை கூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன்.
எந்தக் காலத்துக் கணக்குச் சுருணைகளோ!
நான்: வேறே ஏடுகள் இல்லையா?
அவர்: எல்லாம் கலந்துதான் கிடந்தன.
எனக்கு அவர் தாமதப்படுத்துவதனாற் கோபம் வந்தது.
நான்: வாருங்கள் போகலாம்.
அவர்: ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களையெல்லாம் என்ன
செய்வதென்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி
செய்துவிட்டார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன செய்து விட்டார்கள்?” என்று
பதற்றத்துடன் கேட்டேன்.
“பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம்.
அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம்; இங்கே
அப்படித்தான் செய்தார்கள்.”
“ஹா!” என்று என்னையும் மறந்துவிட்டேன்.
“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய
சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று அவர்
வருணித்தார். இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச்
சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய
வேண்டும்!’ என்று கோபம் கோபமாக வந்தது. பழங்காலத்திற் பழைய
சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு
பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால்
பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள்
பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச்
செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால்
எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!
வரகுண பாண்டியர் ஏடுகள் அக்கினி பகவானுக்கு உணவாயிற்றென்ற
செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளத்தில் அமைதி இல்லாமல் போயிற்று.
‘இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!’ என்றெல்லாம் மனம் நொந்தேன்.
நான் இரண்டு நாட்கள் தங்கிப் பார்க்கலாமென்ற விருப்பத்தோடு
வந்தேன். எனக்குச் சிரமம் கொடுக்காத நிலையில் அவர்கள் செய்து
விட்டார்கள். மறுபடியும் ஆலயத்துள் சென்றேன். “இந்த அக்கிரமம்
இனியாகிலும் நடவாதபடி திருவுள்ளம் இரங்க வேண்டும்” என்று இறைவனிடம்
முறையிட்டேன். “
இது போல ஐயர் அவர்கள் மேற்கொண்ட இரண்டு பயணங்களாலும் பலன் ஏதுமில்லை. பின்னர் பல இடங்களிலும் தேடலானார். ஒரு வழியாக மிகுந்த முயற்சியை மேற்கொண்டு அரிய சிலப்பதிகாரத்தைத் தமிழ் மக்கள் முன்னர் சமர்ப்பித்தார்.
தமிழ் உலகம் வியந்து களித்தது. ஐயரைக் கொண்டாடியது.
தொடரும்
You must be logged in to post a comment.