தமிழ் மொழி பற்றி கம்பன் (Post No.2819)

IMG_3212

Written by london swaminathan

 

Date: 17 May 2016

 

Post No. 2819

Time uploaded in London :– 15-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் மொழி பற்றி கம்பன் பாடிய பாடல்கள், அவனுக்கு தமிழ் மீதுள்ள அன்பைக் காட்டுகிறது. ராமன் புகழ் பாட வந்த கம்பன், தமிழின் புகழ் பாட மறக்கவில்லை. எங்கெங் கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தமிழையும், தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியனையும் போற்றிப் புகழ்கிறான்.

agastyanepal-carole-r-bolon

‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

ஆரண்ய காண்டத்தில் ராமன், அகத்தியன் சந்திப்பு பற்றி வருணிக்கும் கம்பன்,

ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்

ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

பொருள்:– சக்கராயுதத்தை உடைய திருமாலைப் போல, பெரிய தமிழ் மொழியால் இவ்வுலகத்தை அளந்தவனாகிய அகத்தியன், ஆண்மை மிகுந்த ராம, லெட்சுமணர் அங்கே வந்ததை அறிந்தார். அதனால் மகிழ்ச்சிக் கடல் 14 உலகங்களையும் அடைந்தது. அந்த மகிழ்ச்சியுடன், மாட்சிமைப்பட்ட வரங்களை வழங்கும் ராமன், தன் திருவடிகளில் விழுந்து வணக்குமாறு, அவன்  எதிரே வந்தான்.

 

உழக்கும் மறை நாலினுமுயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்’’

 

பொருள்:- அந்த அகத்தியன் நால் வேதங்களையும் பயின்று உயர்வு அடைந்தான். தமிழ் உலகம் பேசும் முரை, தமிழ்ப் புலவரின் செய்யுள் ஆகியவற்றை முறைப்ப்ட ஆராய்ந்து, சிவபெருமான் கற்றுத்தந்த தமிழுக்கு இலக்கணம் செய்து தந்தான். சிவன், ஒளிவீசும் மழு ஆயுதம்,நெற்றியில் நெருப்பை உமிழும் சிவந்த கண்ண்ணை உடையவன்.

 shiva at Dwaraka

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

“நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

 

பொருள்:– அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான்.

 

 

தமிழ்த் தலைவன் யார்? (எனது பழைய கட்டுரையிலிருந்து)

 

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயணம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

 

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

சொற்கலை முனிவன்

இன்னொரு செய்யுளில் அகத்தியனை “சொற்கலை முனிவன்” (பால காண்டம்) என்பான் கம்பன். தமிழுக்கு இலக்கணம் வகுத்ததால், அகத்தியனுக்குக் கிடைத்த அடைமொழி இது.

rama look

இராமபிரானுக்கு தமிழ் தெரியும்!

கம்பன் ஒரு அதிசயத் தகவலையும் தருகிறான். ராமனுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியும் என்பான்:–

நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை

தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்

என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்

தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்

பொருள்:- பரத கண்டத்தின் தென்பகுதியில் வழங்கும் தமிழ் மொழி எனும் கடலைத் தாண்டியவனும், வடக்கே வழங்கும் சம்ஸ்கிருத மொழியில் கூறப்பட்டுள்ள எல்லா கலைகளுக்கும் எல்லை கண்டவனுமான ராமபிரான், “இனிய சொற்கலைக் கூறி இந்நாள் வரை என்னைப் பாதுகாத்து வளர்த்த தந்தையின் சொல்லை மீறி அரசாள்வது எனக்குத் தகுந்தது இல்லை. ஆனால் என் சொல்லை நீ மீறி நடந்தாலோ உனக்கு இழிவு அல்லவோ” (நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம்—லெட்சுமணனிடம் ராமன் சொன்னது)

 

 

எனது பழைய கட்டுரைகள்

 

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில் (17 ஜூலை 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 2 (26 டிசம்பர் 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 1 (9 ஜூன் 2014)

 

–சுபம்–