பழைய ஜோக்! குப்பா சாஸ்திரியும், சுப்பா தீக்ஷிதரும் ஏகாதசி விரதம் (Post No. 2429)

er uzavan 3

Written by London swaminathan

Date: 26 December 2015

 

Post No. 2429

 

Time uploaded in London :– 12-17

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஒருநாள் கும்பபுரம் குப்பாசாஸ்திரிகள், ஏகாதசி அன்று வெற்றிலை பாக்குப் புகையிலை போட்டுக்கொண்டு மிதுனபுரம் சுப்பாதீக்ஷிதர் வீட்டுக்கு வர, அவர் குப்பா சாஸ்திரிகளைப் பார்த்து, “ஏனையா ஏகாதசியன்று வெற்றிலைபாக்கு போட்டு வந்தீர்?” என்றார்.

குப்பா:- ஐயா! நன்றாய்ச் சொன்னீர். பிரம்மபத்ரமாகிய புகயிலை போட்டுக் கொண்டதால் வெற்றிலை போடுவதில் தோஷமில்லை.

சுப்பா:- பிராமணன் புகையிலை போடலாமா?

குப்பா: பழையது சாப்பிட்ட எனக்கு புகையிலையின்றி சரியாய் வராது.

சுப்பா:- அடடா! ஏகாதசியன்று பழையது சாப்பிடலாமா?

குப்பா:- பழையது சப்பிடாவிட்டால் ஏர் பிடித்து உழ முடியாதே!

சுப்பா:- சரி, சரி; பிராமணன் ஏர் பிடித்து உழுவது எந்தவூர் வழக்கம்?

குப்பா: என்னையன்றி வில்வக்கட்டை கலப்பையைக் கொண்டு உழ வேறொருவராலும் சாத்தியமாகாது.

சுப்பா:- இதென்ன அநியாயம்! வில்வ மரத்தை வெட்டக் கூடாதே. அதனால் செய்த கலப்பையைப் பிடித்து பிராமணன் உழலாமா?

குப்பா:- ஓய்! அதன் மகிமை உமக்குத் தெரியாது. வில்வக் கட்டையைக் கலப்பைக்குப் போடாவிடில் காராம்பசு ஏருக்கு வராது.

சுப்பா: கிருஷ்ண, கிருஷ்ண; மகா பாவம். காராம்பசுவைக் கொண்டு உழலாமாங்காணும்?

குப்பா:- நல்ல நீதி சொல்ல வந்தீர். அப்படிச் செய்யாவிடில் துளசி வனம் அழியாதுங்காணும்.

சுப்பா:- ராம, ராம; அட சண்டாளா! மகாவிஷ்ணுவுக்கு அர்ப்பணிக்க எல்லாரும் துளசி வனம் வைக்கிறார்கள் நீரதை அழிக்க வேணும் என்கிறீர்.

 

opium

குப்பா:- போங்காணும் போம்; துளசி வனம் அழியாவிட்டால் கஞ்சாப் பயிராவது எப்படி?

சுப்பா:- ஹரி, ஹரி! ஏன் ஓய் என்ன இது! பிராமணனுக்குக் கஞ்சாப் பயிர் எதற்க்குங்காணும்?

குப்பா:- கஞ்சாப் பயிர் செய்யாவிடில் நான் சாப்பிடுவதற்குக் கடையில் வாங்கிக் கட்டுபடியாகாது இல்லியோ?

சுப்பா:- ஓய், இது என்ன அநியாயம்? பிராமணன் கஞ்சா சாப்பிடலாமாங்காணும்?

குப்பா:- ஓய் கூச்சல் போடாதேயும். வம்ச பரம்பரையாய் நடந்து வருகிற வழக்கத்தை விடக்கூடாதுகாணும். மேலும் அது சாப்பிடாவிட்டால் நான் சாப்பிடுகிற மாம்சம் எப்படி ஜீரணமாகும்?

சுப்பா:- சரி, சரி, உம்மோடு பேசுவதுகூட மகபாவம்! நீர் பிராமணனே இல்லை! (என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டார்)

குப்பா:- ஏன்? நீர் பிராமணன் அல்ல என்றால் ஆகாதோ? (என்று சொல்லி நடையைக் கட்டினார்).

–சுபம்—